சித்தி ரெண்டு மாசத்துக்குப் பிறகா வந்தப்ப ரொம்ப சாதாரணமா ஏதோ ரெண்டு மூணு நாள் வெளியூர் போயிட்டு வந்த மாதிரி இருக்கு. அன்னிக்கு தான் இடைக்கால முதலமைச்சரா நெடுஞ்செழியன தேர்ந்தெடுத்தாங்க. சித்தப்பா ஒண்ணுமே பேசல.. ஆனா நக்கலா அப்பாவ பாத்தாரு. அப்பாவும் கோவமா ஒண்ணுஞ் சொல்லல. ஆனா துண்டை சேர் நுனில தட்டி எந்திரிச்சு போனார்.
கொஞ்ச நேரத்துல மாயண்டி மாமா வந்திருந்தார். மாமாவுக்கு பெரிய மீசை உண்டு. பாக்க சிகப்பா தக்காளிப் பழம் மாதிரி இருப்பார். ஒரு வாட்டி மீசைய எடுத்தா எம்ஜிஆர் மாதிரி இருப்பார்னு சொல்லி சொல்லியே மீசய எடுத்தார். அவர் வீட்டு அத்த “ பாக்க சகிக்கலனு சொன்னானு அப்பா சொன்னார். அம்மா நக்கலா அப்பாவ பாத்து”அப்படி ஏதும் நீங்க செஞ்சிப்படாதிக்கன்னு சொன்னா.
இப்ப மாமாக்கு மறுபடி மழைல முளைச்ச மூணாம் நாள் புல் மாதிரி மீசை வளர்ந்திருச்சு. மாமா இப்ப இந்திப்பட ஹீரோ மாதிரி இருந்தார்.
தலீவர் பிரபாகரன் அறிக்க வுட்டத பாத்தீகளா?னு அப்பாட்ட கேட்டார்.
“ஆமா ஆமா. இயக்கத்து மேல தலீவரு கொண்டிருக்கிற ஈடுபாடு பத்திலாம் பேசிருந்தாரு..ஏல…அம்மைய காப்பி கொண்டு வர சொல்லு…”
அம்மா உள்ள முனங்கினாள். நான் சைக்கிள் வண்டி ஓட்டின மாரி ஓடி உள்ள போனப்ப உங்கப்பாக்கு நான் என்ன காப்பி மெஷினானு கேட்டா… நான் சர்ருனு பிரேக் போட்டு போன ஸ்பீடுலயே வந்துட்டேன்.. ஆனா அஞ்சே நிமிஷத்துல காப்பி தம்ளர் மாயாண்டி மாமா கைல இருந்துச்சு.
அப்பா சித்தப்பா நக்கலா பாத்த்த சின்னக் குரல்ல மாயாண்டி மாமாட்ட சொன்னது எனக்குக் காதுல கேட்டுச்சு. மாயாண்டி மாமாக்கு முகம் சுண்டிப் போச்சு
“ம்ம்ம்…புரிது…அன்னிக்கு ஜெயல்லிதா வண்டில ஏறுனப்பவே காதர் கிண்டல் பண்ணான். உங்க தலீவருக்கு மட்டும் ஒரு பொண்டாட்டியானு கேட்டேன்.. இப்ப ஜானகியம்மா தாம்வே வரணும்..”
“தலமைக் கழகத்துக்கு லெட்டர் போடலாமானு இன்னிக்கு நம்ம வட்ட செயலாளர்ட்ட கேட்டுறலாம் …கழகத்துக்கு நாம தொண்டனா இந்த நேரம் இத செய்யணும்…”
“ஆமால..இல்லனா உந்தம்பிலாம் கிண்டல் பண்றாப்ல ஆயிடும்..”
“என்னப் பார்வைல பாத்தான்… ஏதோ நெடுஞ்செழியன நாம தான் ஆக்குணோம்னு… ஆனா தலீவரோட வொய்ஃப் தாம்வே வரணும்”
“ம்ம்..அப்படி தான திமுகல பாப்பாங்க… தலீவரு இல்லாத கட்சி எப்படி தாக்குப் பிடிக்கும்னே பயமாருக்கு”
“காங்கிரஸ் ஆதரவு இருக்குவே.. ராஜீவ் காந்தி உருகித்தேன் அறிக்கை வுட்டிருக்காரு..அதுனால தப்பிச்சிரும்….”
“அட்த்தூ… காங்கிரசால நம்ம கட்சி வருதா.. போவே…நல்லா புத்தி பேதலிச்சிட்டு தான் போவுது..”
“அப்படி சொல்லல…இனிம தேர்தல்னு வந்தா காஙிரஸ் சப்போர்ட் இருந்தா நல்லது தான…நம்ம கட்சில தலீவரு மாரி யாரு இருக்கா?”
மாயாண்டி மாமா தலையை சிலுப்பிக் கொண்டார்….ரொம்ப நேரம் சும்மாருந்து விட்டு “எனக்கு என்னமோ ஒண்ணு தோணுது…சொன்னா திட்டப்படாது…”
“சொல்லும்வே…நமக்குள்ள என்ன?”
“அந்த ஜெயலலிதா கட்சில பெரிய ஆளா ஆயிரும்னு நெனைக்கேம்வே”
அப்பா கோபமா பாத்து “என்னவே பேசுறீரு? நியாயமா பேசும்..”
“அட… சொன்னேம்லா கோவப்படக்கூடாதுனு.. எனக்கென்னமோ அதான் தோணுது…”
“அப்ப கலீஞ்சருக்கு அப்பால ஸ்டாலினா…அன்பழகனா?”
“ஏம் கிண்டல் பண்ணுதீரு..கனிமொழி கூட வரலாம்வே”
“நல்லா தான் ஜோசியம் சொல்லுதீரும்வே.. எனக்கு பிபி ஏறுது. நாஞ்சொல்லுதேன் பாரும்வே…ஜானகியம்மா வரணும்.. ஜெயல்லிதாம்மாவும் கூட கூட இருக்கட்டும்…தலீவரு கூட அத்தனி படம் நடிச்சிருக்காக… அப்பால கட்சி மாநாட்டுல கோல்லாம் கூட கொடுத்திருக்காக… ஆனா பாத்தா தலீவரு தான் இவுகன்னு நம்புற ஒரு ஆளா வேணும்… அது ஜானகியம்மாவாத் தேன் இருக்கும்.”
சித்தி கடந்து போனவ “சொன்னா தப்பா எடுத்துக்க்க் கூடாது பெரியவரே… உங்க அம்மாக்குக் கூட இம்ப்புட்டு வருத்தப்படுவீகளானு தெரில…”
அம்மாக்கு உள்ளிருந்து கேட்டிருக்கும் போல.. “ஒன் வாய் தான் எனக்கு எமன்னு மூஞ்ச சுழிச்சிட்டு சொன்னா…”
“எங்க பாத்தாலும் பொம்பளங்க அட்டூழியம் தான்…”
சித்திக்கு கோபம் வந்து மூக்கு புடைச்சிட்டு போச்சு. கோபமா உள்ளப் போய் அம்மாட்ட, பொம்பளங்க சேர்ந்து இல்லன்னா இந்தப் பிரச்னை தான்… ம்ம்ம்.. நான் என்ன தப்பா சொன்னேன் சொல்லுங்கோனு கேட்டது எனக்கு ரொம்ப்ப் பிடிச்சிருந்துச்சு..
அம்மா பாத்திரத்தை நங்குண்ணு வச்சா. பதில் ஒண்ணும் சொல்லாம “சனியன் புடிச்ச பூனை எல்லா எச்சியயும் தட்டிட்டுப் போவுது…சனியன்ன்னா”
அப்பாவை மாயாண்டி மாமா தர்மசங்கடமா பார்த்தாரு.. சித்தி கண்ணெல்லாம் கலங்கி மாயாண்டி மாமா பக்கம் திரும்பி “போறுமான்னா
“மூணு மாசம்மா அம்மா வூட்டுல புகையே இல்ல..கண்ணும் கலங்கல்ல…”
அப்பா சரி வுடு வுடுன்னார்.
“எப்படி பேசுதாக பாத்திகல்லா..நான் அரசியல்லாம் பேசப்படாதா?”
“சாரிவேன்னு” மாயாண்டி மாமா சொன்னாரு. அவரோட பார்வை எப்படா இந்த வீட்டுலருந்து எப்ப போலாம் மாரி இருந்துச்சு. அதே மாதிரி நான் கெளம்புறேன்னார்.. அப்பாவோட முகம் இறுகலா இருந்துச்சு. சின்ன சண்டைக்கே வீடு இறுகுதே.. அரசியல் கட்சி மாதிரி பெரிய இடத்துல்லாம் எவ்ளோ சண்டை, இறுக்கம்லாம் இருக்கும்னு தோணுச்சு. எல்லாருமே பாவம்னு தோணுச்சு.
அம்மா ரொம்ப உர்னே இருந்தா. என்னை மடில மடில வச்சிக்கிட்டா. அப்பாக்கு சாப்பாடு வைக்கிறப்ப அம்மா எதுவும் பேசல.. அப்பாக்கும் கஷ்டமா இருந்திருக்கும் போல..
“சிரியேன்னார் அப்பா. அம்மா தலையை நிமிரவே இல்ல.. நானும் அம்மாவையே பாத்துட்டு இருந்தேன். அம்மா முதுகு மட்டும் ஏறி இறங்குச்சு”
“என்ன தான குறை சொல்லுவீக?”
“ஐய்ய…வூட்ல இப்ப இது ஒரு பிரச்னையா என்ன?”
“ஆமா சானகி வரணும் ஜெயல்லிதா வரணும்னு சொல்லுதீக…ஆனா சும்மா வாய் விட்ட ஒருத்திக்கு கொழுப்பு அடங்கணுய்ம்னா …பின்ன என்ன? ?”
“போதும்ப்பா…”
சித்தி கதவோரமா நிழலா தெரிஞ்சா. “நாங்க வேணா தனியா போயிடுறோம் பெரியவரேன்னா”
அப்ப தான் சித்தப்பா உள்ள வந்து பைய சுவர்ல தொங்கப் போட்டார். போன வாரம் பாத்தப் படத்துல ஸ்ரீரிப்ரியாக்கு ஆபத்துனோன ரஜினி வந்த மாரி சித்தப்பா வந்தார்.
என்ன? எங்க போறன்னு சித்திட்ட கேட்டார்.
சித்தி அவசரமா நகர அவர் உள்ளே வந்து, என்ன மைனினு கேட்டார். அம்மா அமைதியா இருக்க அப்பா எரிச்சலோட “ வீட்டுல என்ன எழவு நடக்குனு தெரில.. நாம ஒண்ணு பேசினா இவள்க ரெண்டு பேரும் கெடந்து முட்டிக்கிறாள்க”
அப்பா ரொம்ப மனசு உடைஞ்சிப் போய் சொன்னார். அவ வந்தோன்ன வீட்டுல பிரச்னை பாரேன்னு, சித்தப்பா கோவத்துல அறைக்குள்ள போனார். சித்திய அவர் அடிக்கிறார்னு தோணுச்சு. அம்மா பின்னாலயே நாம் விரசா போய் எட்டிப் பாத்தா சித்தி தரைல சாமி மாரி உக்காந்திருக்க அவர் அவள அப்படி அடிக்காரு.
ஆனா அவ அசையல.. ஒரு நிமிஷம் தடுக்கல.
என்னலெ இது..வுடுனு அப்பா சொன்னோன்ன, சித்தி – ஊருக்கு இளச்சவ பிள்ளையார் கோவில் ஆண்டினு சொன்னா ..
சித்தப்பா மறுபடி பாய ஆரம்பிக்க அப்பா தடுத்தார். எனக்கு பயமா இருந்துச்சு. இப்படிலாம் அடி விழுந்தா என்னல்லாம் தாங்கியே இருக்க முடியாது. இப்பவும் சித்தி சாமி மாதிரி தான் இருக்கா. கண்ணுல ஒரு சொட்டு அழுகை கூட இல்லை.
“நான் இப்ப என்ன செய்யணும்னு சித்தப்பாவப் பார்த்து கேட்டா…” போய் சாவுன்னார் சித்தப்பா.
அம்மா குத்தவுணர்ச்சியே இல்லாம நின்னதப் பாக்குறப்ப எனக்கு எரிச்சலா இருந்துச்சு. அம்மாட்ட பின்னால போய் “பாவம்ம்மா சித்தி”னேன். எம்பொறமண்டைலயே ஒரு போடு போட்டா.
“பெரிய மனுஷன் மாரில்ல பேசுறன்னா”
பாவம்மானேன்..
அம்மா அப்படியே கல்லு மாரி நின்னா. சித்தி சாமி மாரி நின்னதுக்கும் அம்மா கல்லு மாரி நிக்கதுக்கும் பெரிய வித்தியாசம் இருக்குனு தோணுச்சு. எனக்கு தூக்கம் வரவே இல்ல.. தூங்குலனு அப்பா சொல்லிட்டே இருந்தார். அம்மா என் தலையக் கோதி விட்டப்பா நான் தலைய உலுக்கிட்டேன். எனக்கு கண்ணு முன்னால இருந்த இருட்டுல தான் சித்தி இருந்தா. அவளக் கட்டிப்[ பிடிச்சிக்கணும்னு தோணுச்சுது.
அண்ணேனு பதட்டத்தோட கதவ தட்டினார் சித்தப்பா. நான் அம்மாவ இறுகப் பிடிச்சிக்கிட்டேன். கதவ அப்பா தான் திறந்தாரு.
அவ தூக்கு மாட்டிக்கிட்டாண்ணேன்னு சித்தப்பா அழுதார்….
தொடரும்…
முந்தைய பகுதிகளை வாசிக்க இங்கே சொடுக்கவும்
.