Tuesday, July 16, 2024

மௌன கூடாரம்

ஐ. கிருத்திகா

ஞ்சி துருவேறிய ஜன்னல் கம்பிகளைப் பற்றியபடி எக்கி நின்று வெளியே  பார்த்தாள். தெருவில் ஜன நடமாட்டம் மிகுதியாயிருந்தது. இரைச்சலுக்குப் பெயர்போன தெரு அது. இரவு பத்து, பன்னிரண்டு மணி வரைகூட ஆட்கள் வருவதும் போவதுமாயிருப்பர்.

குறுகிய தெருவாயிருந்தாலும் பிரதானசாலை இரண்டை இணைப்பதால் மக்கள் அந்தக் குறுக்கு சந்தில் முண்டியடித்து விரைவர். ஆட்டோக்கள் சாகச வித்தை காட்டி பறக்கும். அவ்வளவு சத்தத்துக்கு மத்தியில் ரஞ்சி மௌன கூடாரத்துக்குள் இருப்பது போல நின்றிருப்பாள்.

பின் மதியப்பொழுதுகளில் தெரு சற்று அமைதியாயிருக்கும். ஆனால் அவளுக்குள்ளிருக்கும் அமைதியின் அசாத்தியத்துடன் ஒப்பிடுகையில் அதுவும் இரைச்சல்தான். அழகு குலையாத கன்னிப்பருவம் எப்போதாவது அவளுக்கு நினைவு வரும்.

தாழம் மடல்கள் கொண்டு நெய்தது போலிருக்கும் அவள் மேனியில் அழகுகளின் கூடுதல் அலங்காரம் கொட்டி வழிந்து விடாமல் உறைந்து போனதில் அவளுக்குப் பெருமை ஒன்றுமில்லை. அவ்வழகுகளில் ஊர்ந்த முரட்டு விரல்களின் ஸ்பரிசம் அவளை அருவருக்கச் செய்தன. அவள் அசூயையோடு நினைவுகளைப் புறந்தள்ளுவாள். 

ரஞ்சி மறுமுறை ஜன்னல் வழியே வெளியேப் பார்த்தாள். மனிதர்கள் நடப்பதும், ஆட்டோக்கள் செல்வதுமாக தெரு ஜேஜேவென்றிருந்தது. அவளுக்கு நேரம் தவறாமல் வேளாவேளைக்கு ஆகாரம் வழங்கப்பட்டது. ஒரு பெண்மணி தினமும் வந்து அவளைக் குளிக்க வைப்பாள்.

நெஞ்சுக்கு மேலே பாவாடையை உயர்த்திக் கட்டி கல்லில் அமரவைத்து தண்ணீரை ஊற்றுவாள். பாவாடையைத் தளர்த்த சொல்லி சோப்பை அழுந்த தேய்ப்பாள். மார்பு, வயிறு, அதற்குக் கீழே என்று எங்கும் அவள் கை அழுந்தும். அப்போது அவள் வாய் முணுமுணுக்கும்.

சத்தமா பேசினாதான் என்ன என்று ரஞ்சி நினைத்துக் கொள்வாள். சிலசமயம் பாவாடை தளர்ந்து கிடக்கும். நீர்பட்டு மினுங்கும் உடலை அவள் பார்த்தபடியே நின்றிருப்பாள். பெரிய மூச்சொன்றை விடுத்து வளையல்களை இறுக்கியபடி சோப்பைக் குழைப்பாள். 

நான்கு பேர் வசிக்கக்கூடிய அளவு பெரிய வீடு அது. முன்பொரு காலத்தில் ரஞ்சி அம்மா, அப்பாவுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்த வீடு. அப்பாவின் கதைகள் அவளுக்குத் துள்ளலைத் தந்திருக்கின்றன. அப்பாவிற்கு அவளொரு குட்டி மகாராணி. நைட்டிங்கேல் பறவையென்று அப்பா அவளை வர்ணிப்பார்.

கதைகள் நிறைந்த இரவுகள் அவளுடையவை. விக்கிரமாதித்தனுடைய வேதாளத்தை அவள் தோளில் அப்பா ஏற்றிவிடுவார்.

நட்சத்திரங்கள் மினுங்கும் இரவுகளில் கதைகளின் வர்ணஜாலங்கள் அவளைக் கிறங்கடிக்கும். அப்பா அவளை எப்போதாவது பாட்டுப்பாடச் சொல்வார். ரஞ்சி சின்னக்குரலில் ராகமாகப் பாடுவாள். அப்போதுதான் ஒருமுறை சொன்னார், நீ ஒரு நைட்டிங்கேல் பறவையென்று.

விசித்திரமான குரலெழுப்பும் அப்பறவையை அவள் பார்த்ததேயில்லை. அதுபற்றி அவள் ஒருநாள் அப்பாவிடம் கேட்டாள். அவரும் அதைப் பார்த்ததில்லையென்று கூறினார். பின், ஒருவேளைப் பார்த்திருந்தாலும் அதுதான் நைட்டிங்கேல் பறவையென்று தெரியாமலே பார்த்திருப்பேன் என்றார். 

“அப்ப ஏன் அந்தப் பேரை எனக்கு வச்சீங்க…?” 

ரஞ்சி விடவில்லை. அப்பா சிரித்துவிட்டு அவள் தலைகோதினார். எப்போதுமே மயிலிறகால் வருடுவது போன்ற அவரின் ஸ்பரிசம் ரஞ்சிக்குத் தேவையாயிருந்தது. 

“நீ பாடின உடனே எனக்கு அந்தப்பேர் தோணுச்சு. வச்சிட்டேன்” என்றவர் அதன்பிறகு அவள் எப்போது பாடினாலும் நைட்டிங்கேல் என்றே அவளை அழைக்கத் தொடங்கினார்.

அம்மாவுக்கும் ரஞ்சி என்றால் உயிர். ஆனால் அப்பாவைப்போல அவள் செல்லம் கொஞ்சவில்லை. தன் கைப்பட்டமாகவே மகளை வைத்திருந்தாள். அது சிலசமயம் ரஞ்சியை சலிப்படைய செய்தது. 

“ரொம்ப கண்டிப்பும்மா நீ….”

தேன்நிற விழிப்பாவைகளை உருட்டி அவள் முகம் சுருக்குவாள். காதோர பூனை மயிர்களில் சூரிய ஒளி பட்டு தங்க இழைகளாக மின்னும். மேலுதட்டு வியர்வை அரும்புகளை அம்மா பார்த்தபடியிருப்பாள். அப்போது வயிற்றுக்குள் சிலீரென்று திகிலெழும். 

“சித்ரா வீட்டுல விளையாடிட்டு வர்றேன்.” 

ஒருநாள் ரஞ்சி அடம்பிடித்தாள். அம்மா விடவில்லை. 

“நீ மட்டுந்தான் அதிசயமா பெத்து வச்சிருக்க…”

அப்பா சலித்துக்கொண்டார். மகள் போராடுவது அவருக்குப் பிடிக்கவில்லை. இருந்தும் அம்மாதான் ஜெயித்தாள். பெண்மை, உடைத்த சோடா போல் பொங்கி வழிந்தது ரஞ்சிக்கு. இருந்தும் அப்பாவுக்கு அவளொரு குழந்தைதான். மகளின் வளர்ச்சி அம்மாவின் கண்களுக்கு விளக்கெண்ணெய் வார்த்துவிட்டது. பன்னிரண்டில் ரஞ்சி தளிர்க்கொடியாய் சந்தனக் குழைவுகளின் சுமை தாங்காது பூரித்துக்கிடந்தாள். 

ரஞ்சி வெற்றுத்தரையில் கன்னம் பதித்துப் படுத்துக்கொண்டாள். அம்மாவுக்குத் தெரியாமல் சித்ரா வீட்டுக்குப் போனது ஞாபகத்துக்கு வந்தது. அரவமற்ற வீட்டில் சித்ராவின் அண்ணன் பலவந்தப்படுத்தி அணைத்தது, உதடு கவ்வியது, முலைகளைக் கசக்கியது, அவனிடமிருந்து திமிறி ஓடிவந்தது காட்சிகளாய் கண்ணுக்குள் ஓடியது.

இன்னொருமுறை ஊரிலிருந்து வந்திருந்த அப்பாவின் நண்பரொருவர் தனிமையில்  இயல்பாக  பேசுவதுபோல் அவளை மடியிலமர்த்தி சட்டைக்குள் கையைவிட்டு சில்மிஷம் செய்ய ரஞ்சி விசும்பினாள். இப்படி ஏழெட்டு நிகழ்வுகள்….. மூச்சுத்திணறல் உண்டாக்குவது போலிருந்த அந்த நினைவுகளிலிருந்து மீண்டுவிட ரஞ்சி சட்டென எழுந்தமர்ந்தாள்.

ஜன்னலின் மூடிய கதவுகளின் வழியாக உட்புகுந்த வெயில் ஒரு நூல் போல தரையில் நீண்டு கிடந்தது. அந்த வெளிச்சத்தைப் பார்த்தபடியே சுவரில் சாய்ந்து கொண்டாள். எதிர் சுவரில் தொங்கிய குடும்ப போட்டோவில் அவள் இரட்டை ஜடை போட்டு குண்டு கன்னம் குழிவிழ சிரித்தபடி நின்றிருந்தாள். அம்மாவும், அப்பாவும் தோளுரச நாற்காலியில் அமர்ந்திருந்தனர். மழை கொட்டிய ஒருபொழுதில் ஸ்டூடியோவுக்குப் போய் எடுத்த போட்டோ அது.

அம்மா அவளுக்குக் கிளிப்பச்சையில் ரோஸ் பார்டர் வைத்த பட்டுப்பாவாடை கட்டி விட்டிருந்தாள். அவள் பெரிது, பெரிதாய் பூப்போட்ட கார்டன் புடவையும், அப்பா டெர்லின் சட்டையும் அணிந்திருந்தார்கள். 

“கண்ண சிமிட்டாம பாரும்மா…”

ஸ்டுடியோக்காரர் சொன்னதும் பிளாஷ் மின்னும் வரை விழித்துப் பார்த்துக் கொண்டிருந்தவளின் உதடுகள் பிளவுபடாது மெல்லிய கோடுகளாய் விரிந்தன. 

இரட்டை ஜடைகள் மார்பில் தொங்கிற்று. அந்தப் புகைப்படத்தை எடுக்கும்போது அவளுக்குப் பத்து வயது. அப்போதே மெல்லரும்புகள் அவிழ்ந்து விட்டன. ஜடைகளை முன்பக்கம் போட்டுக்கொள்ளும் பழக்கம் அம்மாவால் ஏற்பட்டது.

“ஒத்த ஜடை போட்டு விடும்மா… …” என்றால் அம்மா இசையமாட்டாள். பிடிவாதமாய் இரட்டை ஜடை பின்னிவிடுவாள். 

“இப்பவே எதுக்கு ஒத்தை ஜடை…. பெரியவளாயிட்டா கடைசிவரைக்கும் ஒத்தை ஜடைதான் போட்டாகணும். இந்த வயசுல ரெட்டை ஜடை போட்டுக்கிட்டாதான் உண்டு” என்பாள். 

அதோடு இரண்டு ஜடைகளையும் முன்னால் போட்டுக்கொள்ள சொல்லி வற்புறுத்துவாள்.

“முன்னாடி போட்டுக்கிட்டா கூசுதும்மா…”

ரஞ்சியின் கெஞ்சலுக்கு அம்மா காதுகள் பூட்டிக்கொண்டன. ஆரம்பத்தில் ஒவ்வாமையாக இருந்தது பின்பு பழகிப்போனது. வெளியில் செல்லும்போது கை அனிச்சையாக ஜடைகளை முன்னால் போட்டுக்கொண்டது.

சுவரில் ஆணியடித்து போட்டோ தொங்கவிடப்பட்டபோது ரஞ்சிக்குக் குதூகலம் தாங்கவில்லை. ஆங்காங்கே சுண்ணாம்பு பெயர்ந்து போயிருந்த சுவற்றுக்குப் போட்டோ புது வண்ணத்தைப் பூசி விட்டதாக அவள் எண்ணினாள். மிகையில்லாத அழகோவியம் போல தொங்கிய போட்டோவை அவள் போகும்போதும், வரும்போதும் நின்று பார்த்தாள். ஜன்னல் திறந்திருக்கும் சமயங்களில் உள் நுழையும் சூரிய வெளிச்சம் தங்க இழைகளைக் கொண்டு நெய்தது போல போட்டோவை மின்ன செய்தது. ரஞ்சியின் முகம்  முந்திரிப்பழம் போல் ஜொலிப்பதாக அப்பா, அம்மாவிடம் சொல்லி பெருமைப்பட்டுக் கொண்டார்.

ரஞ்சி நிலைகுத்த போட்டோவைப் பார்த்தாள். தூசுகளடர்ந்த போட்டோ சுவருக்குப் பாரம் போல் தொங்கியது. வீடு மயான அமைதியிலிருந்தது.

குழந்தை போல் ஊஞ்சலில் மல்லாந்து கிடக்கும் ரஞ்சியை அவள் பரிதாபமாகப் பார்ப்பாள். பழரசம் கொண்டு பாலீஷ் போட்டது போல் மினுமினுக்கும் ரஞ்சியின் இதழ்களைச் சுவைக்க இரவு வருபவனை சபித்தபடி அவள் வீடு பெருக்குவாள்.

பெரும்பாலும் முந்தானை விலகியிருக்க ரஞ்சி உத்திரத்தை வெறித்தபடி கிடப்பாள். அவள் முந்தானையை இழுத்து சரிசெய்து விடுவாள்.

ஒவ்வொருமுறையும் சரிசெய்யும்போது மலைக்கச் செய்யும் அழகுகளைப் பார்த்துக் கொண்டேயிருக்கலாம் போலிருக்கும். அப்போது ரோமக்கால்கள் குத்திட்டுக் கொள்ளும். ரவிக்கையை மீறிய பிளவு நீள்கோடாய் உள்சரிந்து அடர் திரட்சிகளை பிரித்ததை அவள் ஒருமுறை கண்ணாரக் கண்டாள்.

ஏனோ தொட்டுப் பார்க்க வேணும் போலிருந்தது. விரல்களை ரவிக்கைக்குள் நுழைத்து இதமாய் தடவிப்பார்த்தாள். திரட்சிகள் சில்லிட்டிருந்தன. ரஞ்சி அசையாமல் கிடந்தாள். சிற்பமொன்று வடிவாம்சத்துடன் பள்ளி கொண்டிருந்தது போலிருந்தது அவள் தோரணை. அவளுக்குக் கையெடுத்துக் கொள்ள மனசேயில்லை. குழந்தையை வருடுவது போல ஒவ்வொன்றாய் வருடினாள். 

“என்னாத்த கொட்டி இப்புடி படைச்சான் உன்னைய… இந்தமாரி இருந்தா ஆம்பள ஆசப்படமாட்டானா… இருந்தாலும் அந்தப்பய ஒன்னைய அலங்கோலம் பண்ணியிருக்கக்கூடாது. அவன் வெளங்கவே மாட்டான். ரத்தம் கக்கி சாவான். கைகால் வெளங்காம போயிரும் பாரு…”

அவள் கண்களில் நீர்வழிய படபடத்தாள். ரஞ்சி பார்த்துக் கொண்டேயிருந்தாள். அவள் ரவிக்கைக் கொக்கிகளை மாட்டிவிட்டு கன்னம் வழித்து முத்தம் தந்தாள். ரஞ்சி கண்கள் சுருக்கி சிரித்தாள். ஏனோ அந்த முத்தம் ரொம்பப் பிடித்திருந்தது. அம்மாவினுடையதைப் போல.

அம்மா அடிக்கடி முத்தம் தருவாள். உணர்வின்றி கிடக்கும் மரக்கட்டைக்கும் உயிர் தரும் முத்தம். இரவில் அம்மாவின் மார்பில் பொதிந்து தூங்கும்போது தலைமுடியைக் கோதியபடியே அவள் முத்தம் கொடுப்பாள். நினைவில் உறைந்து கிடக்கும் முத்தம். உடல் முழுவதுக்குமான சூட்டைக் கிளப்பி குளிர்காயச் செய்யும் முத்தம். 

அவன் ஆக்ரோஷமாக முத்தமிடுவான். பற்கள் பதிந்து போகும். ஏனோ உடல் நடுங்கி வெடவெடக்கும். இணங்க மறுக்க அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை. ரஞ்சி சில நேரங்களில் மட்டுமே சுய உணர்வுடனிருந்தாள். அந்நேரங்களில் அம்மா, அப்பாவின் நினைவு வரும். சம்பவங்கள் மனத்திரையில் நிழலாடும்.

பல நேரங்களில் அவள் மாய உலகில் சஞ்சரித்திருந்தாள். இருளுக்கும், வெளிச்சத்துக்கும் இடைப்பட்ட நிலை. ஒருவித மயக்க நிலை. புகைமூட்டத்துக்கு நடுவே மாட்டிக்கொண்டது போல திக்குத் தெரியாது தவிக்கும் நிலை. அப்போது ஏதேதோ ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத எண்ணங்கள் திரள், திரளாக தோன்றி சரடுகளாகத் திரியும். திரிந்த சரடுகள் வட்டச் சுற்றுகளாக சுற்றிக் குழிந்து சுழலில் அமிழ்வது போல நிமிடமாய் மறைந்து போகும். சுய உணர்வுற்றிருக்கும் நேரங்களில் அவள் தன்னைப்பற்றி சிந்திப்பாள். தனிமையின் அந்தகாரத்தை எண்ணி குமைவாள். 

‘தனிமை ஏன் இவ்வளவு அந்தகாரமாக உள்ளது. அது இருளை மட்டுமே தன்னகத்தே வைத்துக் கொண்டுள்ளதே. வெளிச்சத்தின சாத்வீக நிலையான ஒளியை அது எங்கே மறைத்து வைத்துள்ளது. இணுக்கு ஒளிக்கும் துழாவும் வாழ்க்கை இயல்பாக அமைந்து போனதா அல்லது வலிந்து திணிக்கப்பட்டதா ‘ என்றெல்லாம் சுய நினைவுள்ளவள் போல் யோசிப்பாள். கால்களில் சங்கிலியிடப்பட்டது போல நகரமுடியாது தவிப்பதாய் உணர்வாள். 

அவன் அநேகமாய் ஒருநாள் விட்டு ஒருநாள் வருவான். நட்சத்திரங்களைச் சூட்டிக்கொண்ட இரவுகளில் போதை தளும்ப வருபவன் ரஞ்சியை ஆக்ரோஷமாக கொண்டாடித் தீர்ப்பான். ரஞ்சி அசையாது கிடப்பாள். உணர்வு துய்த்தது போல உடல் விறைத்துக் கிடக்கும். உணர்வின் எச்சங்கள் மிச்சங்களாக உதடுகளில் நடுக்கத்தைப் பரப்பும். கால்கட்டை விரல்களைச் சொடக்கிடச் செய்யும். ஆட்டம் முடிந்து அயர்ந்து கிடக்கும் அவனை ரஞ்சி சலனமின்றி நோக்குவாள். 

“ரஞ்சிக்கு எந்த நாட்டு இளவரசன் மாலை சூட்டப் போறானோ…”

என்று அப்பா அடிக்கடி கண்களில் கனவுகளை மிதக்கவிட்டு சிலாகிப்பார்.

காந்தள் மலர்கள் அடர்ந்த வனத்தில் செஞ்சுடராய் ரஞ்சி நின்றிருக்கிறாள். நீள்விரல்களின் நுனிகள் பழுத்த தீக்கொழுந்து போல ஒளிர்விட, ரோஜா மாலையொன்றை கைகளில் ஏந்தியிருக்கிறாள். அவள் உடல் நோகுமென்ற அச்சத்தில் மரங்கள் பூக்களை உதிர்க்காது தூவுகின்றன. பாதங்களின் இளஞ்சிவப்பு நிறத்தில் கீழே கிடந்த பூக்கள் வெட்குகின்றன.

ரஞ்சியின் கண்களில் எதிர்பார்ப்பின் துளிச்சுடர் பிரகாசிக்கிறது. இளஞ்சூரியக் கதிரொன்று அவள் மீது நீள்கோடாய் விழுந்து பெருமிதமடைகிறது. தூரத்தில் குதிரையின் குளம்படி சத்தம் கேட்க, ரஞ்சி உதடுகள் பிளவுற்று, கன்னங்களில் குல்மொகரின் சிவப்பேறிய தோரணையில் வெட்கத்தோடு நின்றிருக்கிறாள்.

அப்பாவுக்குள் இந்தக் காட்சி அடிக்கடி ஓடும். ஒருநாள், கனவில் கண்ட இந்த காட்சிப் படிமத்தை மனப்பேழைக்குள் பூட்டி வைத்திருந்தவர் அவ்வபோது அதைக் கண்களுக்குள் ஓடவிட்டு பரவசப்பட்டுப் போவார்.  

“நைட்டிங்கேலைப் பத்தி கனவு காண ஆரம்பிச்சாச்சா….?” என்று அம்மா கிண்டலடிப்பாள். 

அவன் ரஞ்சியின் கன்னம் தட்டி நெற்றியில் அலைந்த ஒற்றை கற்றையை விரலால் ஒதுக்கிவிட்டான். ரஞ்சி சூன்யத்தை வெறித்தபடி அமர்ந்திருந்தாள். அவனிடமிருந்து வந்த நெடி ஆரம்பத்தில் அவளை முகம் சுளிக்க வைத்தாலும் நாளாக ஆக அவள் அதற்கு பழக்கப்பட்டவளாகிப் போனாள். அவன் ரஞ்சியை முழுவதுமாய் ஆக்கிரமித்திருந்தான்.

முதல் அழுகைக்குப் பின்பு அவளிடம் பொட்டு முனகலில்லை. இணக்கமும், விலகலுமற்ற தன்மையில் அவள் மரக்கட்டை போல கிடந்தாள். அவனுக்கு அதுபற்றிய சிந்தனையில்லை. அவன் வேண்டியது கிடைத்ததும் திருப்தியுற்று அதிலேயே உழன்று கொண்டிருந்தான். அப்போது அவனுக்கு ஏதாவது சொல்லிக் கொண்டிருக்க வேண்டும் போலத் தோன்றும். அவளழகை வர்ணித்துப் பிதற்றுவான்.

முதன்முறையாக அவளை தெருவில் வைத்துப் பார்த்தபோதே கிறங்கிப் போனவன் அவன். வாசலில் அம்மா கோலம் போட்டுக்கொண்டிருக்க, ரஞ்சி படிக்கட்டில் அமர்ந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அன்று சாமி ஊர்வலம். வீடுதோறும் தெருவடைத்து கோலமிட்டிருந்தனர். அம்மாவின் விரல்களில் வழிந்த பிசிரற்ற இழைகள் வெள்ளிக்கீற்றுகளாக வளைந்து, நெளிந்து ஓடியதை ரஞ்சி வியப்போடு பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு சன்ன இழைகள் வசப்படுவதேயில்லை. பட்டை, பட்டையாக தீட்டி வைப்பாள். 

“பழக, பழக தன்னால வரும்” என்பாள் அம்மா.

படிக்கட்டு தெளித்த நீரில் சில்லென்றிருந்தது. அதில் ரஞ்சி அந்திமஞ்சள் வெயிலின் சாயலில் அமர்ந்திருந்தாள். பிரதான சாலையை அடையும் பொருட்டு அவ்வழியாக வந்த அவன் ரஞ்சியைக் கண்டதும் சட்டென்று புல்லட்டை நிறுத்திவிட்டான். அதற்குள் சற்றுதூரம் கடந்து விட்டிருந்தது. மெல்ல ஒரு U வளைவு வளைத்து ரஞ்சி வீட்டின் எதிரேயிருந்த அந்த வீட்டின் முன்புறம் சற்று தள்ளி நிறுத்தினான்.

பைக்குள்ளிருந்த அலைபேசியை எடுத்து யாருக்கோ பேசுவது போல் காதில் வைத்துக் கொண்டு அவளை ரசிக்கத் துவங்கினான். பெண்மை ததும்பிய அவளுடல் அவனுள் போதையேற்றியது. ரஞ்சி கைநீட்டி அம்மாவிடம் வெகுமும்முரமாக பேசிக் கொண்டிருந்தாள். மேலே பரவியிருந்த துப்பட்டா வழுக்கிச் சரிந்தது. அவனுக்குக் கண்கள் நிலைகுத்தி ஸ்தம்பித்தன.

சாமி ஊர்வலம் சென்ற அந்தநாளில் தெரு தெய்வீகத்தன்மையுடன் ஒளிர்ந்தது. வீடுதோறும் விளக்குகள் சுடர்விட்டு ஜொலித்தன. ரஞ்சியின் வாழ்க்கையில் வரப்போகும் நாட்களின் இருள் முழுமைக்குமான ஒளியை அவை அன்று ஒரே நாளில் சுமந்து பிரகாசித்தன. 

சன்னத்தூறல்கள் வலுத்து பெருமழை கொட்டியது. ரஞ்சி தூணைப் பிடித்தபடி மழையை வெறித்துப் பார்த்தாள். காதுமடல்கள் குளிர்ந்தன. மழை இரைச்சலோடு பொழிந்து தள்ளிற்று. துடைத்தழித்தது போல அவளுள் மயான அமைதி. தனிமைக்கு வர்ணம் பூசி அழகூட்டும் விதமான அமைதி. சில நேரங்கள் அமைதி அவளுக்குப் பிடித்திருந்தது.

தெளிவற்ற நினைவுகளின் படிமங்கள் அடுக்கடுக்காய் மனதில் படிந்து மேல் கீழாய், கீழ் மேலாய் குழம்பி ஒருவித மயக்க நிலைக்கு அவளை ஆட்படுத்தியபோது அவள் தனிமையை பெரிதும் விரும்பினாள். எப்போதாவது பழைய சம்பவங்கள் நினைவுக்கு வரும்போது, அம்மா, அப்பாவைத் தேடித் தவிக்கும்போது அந்தத் தனிமையை எண்ணி அவள் நடுங்கினாள். 

மனைவியின் அருகாமையை விட அவனுக்கு ரஞ்சியின் அருகாமையே தேவையாயிருந்தது. கட்டுக்கடங்காத வெறியுடன் அவன் அவளை அணுகினான். அவளின் வலி பற்றி அவனுக்கு எப்போதுமே எண்ணமிருந்ததில்லை. 

“நெஞ்செல்லாம் கீறி வச்சிருக்கான் பாவிப்பய…” 

அந்தப் பெண்மணி வசைபாடியபடியே ரத்தம் கசிந்து காய்ந்திருந்த இடங்களில் மஞ்சளைக் குழைத்துப் பூசுவாள். ரஞ்சிக்கு உதடுகள் இறுகும். எங்கும் ரணம். மாய உலகில் அலைபாய்ந்து கொண்டிருக்கின்ற அவள் கண்ணாடி முன் நின்று தன்னையே பார்த்தாள். ஈரம் உலராத கூந்தலில் நீர்முத்துக்கள் அரும்பி சரங்களாய் கீழே கொட்டின. சேலை உடலோடு ஒட்டிக்கிடந்தது.

முற்றத்திலிறங்கி பாதங்கள் ஊறும்மட்டும் மழையில் நின்றிருந்தவள் கிட்டதட்ட பத்து நிமிடங்களுக்குப் பிறகு நீர் வழித்தடத்தை உண்டு பண்ணியபடியே  வந்து கண்ணாடி முன்பு  நின்றாள். ரஞ்சிக்கு மழையில் நனைவது ரொம்பப் பிடிக்கும். 

அன்றும் அப்படி மழையில் குதியாட்டம் போட்டதில்தான் சளி பிடித்துக்கொண்டு காய்ச்சல் அடிக்கத் தொடங்கியது. அம்மா கோபத்தில் திட்டித் தீர்த்து விட்டாள். 

“சொன்னப்பேச்சு கேக்கறதில்ல. மழையில நனையாத, காய்ச்சல் வந்துடும்னு தலப்பாடா அடிச்சிக்கிட்டேன். அடங்கினியா நீ… இப்பப்பாரு. ஒடம்பு என்னமா கொதிக்குதுன்னு….”

அப்பா பதறி ஆட்டோவை அழைத்துவர ஓடினார். நுனிவிரல் நனைத்து விளையாடியவளை மழைநீர் சுவைக்கக் கற்றுத் தந்தவர் அவர்தான். கூடவே சொட்ட, சொட்ட நனைதலின் சுகம் பற்றியும் நாலு வார்த்தைகள் சொல்லி வைத்தார். அதிலிருந்து ரஞ்சிக்கு மழை மோகம் பிடித்துக் கொண்டது.

வலுமழையில் பாதை தெரியாது ஆட்டோ தடுமாறியது. வைப்பரின் இயக்கம் முடுக்கி விடப்பட்டபோதும் மழை அசராது கண்ணாடியில் வழிந்து நழுவியது. அடித்த மழைக்கு எதிரே வந்த மினி லாரி, டிரைவரின் கண்களுக்குப் புலப்படவில்லை. 

மழைநீரில் ரத்தச் சிதறல்கள் தெறித்து கலந்தன. அம்மா, அப்பாவின் நிர்மலமான முகங்களில் மகளின் எதிர்கால கனவு உறைந்து போயிருந்தது. விழிகளும்  உறைந்திருந்தன. ரஞ்சி தலையில் அடிபட்டு சுய நினைவிழந்திருந்தாள். 

ரஞ்சி ஈரப்புடவையோடு மூலையில் சுருண்டிருந்தாள். 

“வயசு இருபதாவுது. ஆனா இன்னும் குழந்தைமாதிரி விளையாட்டுத்தனம் போகல……”

அம்மா அங்கலாய்த்ததில் கொஞ்சம் பெருமிதம் கலந்திருந்தது. கொய்யாக்காய் பறிக்க மரத்திலேறியபோது சூவை எறும்புகள் அவள் உடம்பை பதம் பார்த்திருந்தன. இடுப்பு, கையெங்கும் சிவப்பு, சிவப்பான தடிப்புகள். அம்மா தேங்காய் எண்ணெயைக் குழைத்து தடவியபடியே அவளைக் கடிந்து கொண்டாள். மஞ்சள் உடம்பில் இளஞ்சிவப்பு நிற தடிப்புகள் மாதுளை முத்துக்கள் போல் மின்னின.

“என்கிட்ட கேட்டாப் பறிச்சு தந்திருப்பேனேம்மா…….”

அப்பா பதறிக் கூறினார். 

ரஞ்சி செருமத் தொடங்கினாள். கண்கள் சிவந்து உடலில் சூடு ஏறிக் கொண்டிருந்தது. கணகணவென்று ஏறிய சூடு தகிக்கத் தொடங்கியது. சேலையின் ஈரம் உடம்புச்சூட்டில் உலரத் தொடங்கியது. ரஞ்சி மெல்ல எழுந்து முழங்காலில் முகம் புதைத்து ஓங்கி அழுதாள். முற்றத்தின் குறட்டில்  நின்று அதட்டும் அம்மாவைக் காணாது, நைட்டிங்கேல் பறவையென்று கூறிச்சிரித்த அப்பாவைக் காணாது  நடுநடுங்கி அழுதாள்.

***

திருவாரூர் மாவட்டம் மணக்கால் அய்யம்பேட்டையில் பிறந்தவர். திருச்சியில் வசிப்பவர். தொடர்ந்து எழுதிவரும் இவரது கதைகள் பல்வேறு இதழ்கள் மற்றும் இணைய இதழ்களில் வெளியாகி வருகின்றன. இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் ‘உப்புச்சுமை’ மற்றும் ‘நாய்சார்’ ஆகியன வெளியாகியுள்ளன.

RELATED ARTICLES

2 COMMENTS

  1. அருமை சகோதரி….எழுத்து நடையும் வார்த்தை ஜாலங்களும் மிகச் சிறப்பு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular