சம்பு
எளிமையை தனது அருங்குணங்களிலொன்றாகப் பாதுகாத்து வரும் ந.பெரியசாமி, தன் கவிதைகளின் சொற்களிலும் அந்த எளிமையைச் சற்றும் குலையாது படர விடுபவர்.
இது அவரது முதல் கட்டுரைத் தொகுப்பு.
தம் வாசிப்பறிவின் எல்லைக்குட்பட்ட- ஒர் எளிய வாசகனின் படைப்பூக்கம் தரும் விமர்சனங்களாக- வாசிப்பின் போதத்தில் எக்கணமும் பகிர்ந்துகொள்ளும் அன்பு கெழுமிய இன்சொற்களாக- இந்த இலக்கியமெனும் பெருந்தடத்தில் நடந்து செல்பவர்களிடமெல்லாம் தன் வாசிப்பு அனுபவத்தைச் சொல்லிப்பார்ப்பதாக அமைந்திருக்கும் இந்த ”மொழியின் நிழல்” கட்டுரைத் தொகுப்பு, பல்வேறு புத்தகங்களைப்பற்றிப் பேசுவதாகக் காட்டிக் கொண்டாலும்கூட அதன் ஊடுபாவாக ந.பெரியசாமியின் இலக்கியத்தைத் தேடும் தனிப்பட்ட பயண வாழ்வையும் உள்ளடக்கியே இருக்கிறது.
இந்த ஒசூர் மலைப்பிரதேசத்திலிருந்து தமிழகமெங்கும் சுற்றியலைந்து அவர் தேடிக் கண்டடைந்த- தம்முள் சில பாய்ச்சல்களை உண்டாக்கிய –தன் மனதிற்கு மிக நெருக்கமாகப்பட்ட புத்தகங்களைப் பற்றியே இந்த “மொழியின் நிழல்” தொகுப்பின் கட்டுரைகளில் அவர் நம்முடன் உரையாடுகிறார்.
நிராகரிப்பின், ஓர் சிறு கடுஞ்சொல்லைக்கூட ந.பெரியசாமியின் எழுத்துகளில் நாம் காணமுடியாது. கத்தி,கபடாவெல்லாம் மிகவும் அதிகப்படிதான், ஓர் குண்டூசியே போதும் அது மிகப்பெரிய ஆயுதம். அதுவே மனிதச் சமநிலையைக் குலைத்து விடுமென நம்பக்கூடியவர் அவர்.
அவருடைய அந்தச் சுபாவத்தினால்தான், இந்த “மொழியின் நிழல்” பிரதியின் பெரும்பாலான கட்டுரைகள் – (சில கவிஞர்களின் முதல் கவிதைத்தொகுப்பு குறித்ததாகவும்,அந்தத் தொகுப்புகளின் கவிஞர்கள் மேலும் நம்பிக்கையோடு இலக்கியத் தளத்தில் காலூன்றிச் செயல்பட ஓர் உந்துதலாகவும் இருப்பதையும் சேர்த்து)
வாஞ்சையான சொற்களால் சக படைப்பாளிகளை வரவேற்பதாக இயல்பாகவே அமைந்திருக்கிறது.
நமது எழுத்தின் செயல்பாட்டு எல்லைகள்- இலக்கியம் என்ற தளத்தை அரசியல் பூர்வமாகவும், ,தீப்பிடித்து எரியும் சொற்களை நட்டநடு வீதியில் வீசுவதாகவும், பன்முகப்பட்ட ரசனைக்குரியதாகவும், கொண்டாட்ட மனநிலையிலேயே அணுகுவதற்குரியதாகவும்,மென்னொளிர் கிரணங்களே எப்போதும் படர்கிற அன்பின் முத்தங்களைச் சுமந்திருப்பதாகவுமான- வேறுவேறு கிரமங்களில் நாளது தேதியில் தொழிற்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இதில், எந்த ஒரு படைப்பின் மீதும் பிரியத்தின் ரேகைகளை அழுந்தப்பதியச் செய்யும் சுபாவம் இயல்பிலேயே கைக்கொண்ட ந.பெரியசாமி, சுமார் 40 புத்தகங்கள் மற்றும் நாடகங்கள் உள்ளிட்ட நிகழ்வுகள் பற்றிய தமது மனப்பதிவுகளை தம் வாழ்வினூடான அனுபவங்களுடன் கோர்த்தும்,ஒப்புநோக்கியும்,வியப்பின் புள்ளிகளில் கூச்சமின்றி தம்மை வெளிப்படுத்தியுமே இந்நூல்களை உள்வாங்கியிருப்பதை அவரது அவதானிப்பு நமக்குணர்த்துகிறது.
பேரறிவின் மிதப்பு இலக்கியத்தின்புறம் அண்டிக்கிடக்கும் தீராப் பெருநோய்.அதற்கு ஒருபோதும் முதுகெலும்பு கிடையாது.அது எதையும் சமதளத்திலோ அல்லது நிமிர்ந்தோ பார்க்கின்ற திராணியற்றது.அது ஆகாயத்தின் மேலிருந்து கீழ்நோக்கும் வல்லூறுப் பார்வையினை அடிப்படையாகக் கொண்டு இயங்குவதாகும்.அவ்வளவு உயரமெல்லாம் எளிய மானுட வாழ்வுக்கு ஒருபோதும் ஏற்றதல்ல என்பதை தீர்க்கமாக உணர்ந்திருக்கிறார் ந.பெரியசாமி. அதனால்தான்,இந்த ‘மொழியின் நிழல்’ நூலில் தரையில் கால்பாவி நடக்கும் எளிய நடையில் அன்பின் ஆற்றொழுக்கு குறையாமல் சிறு முட்களை வலியின்றிக் களைந்தெறியும் விமர்சனத்தின் நுண்கூறுகளை ந.பெரியசாமியிடம் நாம் காணமுடிகிறது.
எழுதப்பட்டுவிட்ட ஒரு புத்தகத்தை அதன்போக்கில் சென்று தாம் சிடுக்கென கருதுகிற ஒன்றை மெல்லக் களைகிற தொனியில் சொல்லிச்செல்கிற நுட்பம்
ந.பெரியசாமியிடம் இயல்பாகவே உண்டு.
தவிர, ந.பெரியசாமி இக் கட்டுரைத் தொகுப்பிற்கென தம் தேர்விலெடுத்துக்கொண்ட புத்தகங்களின் வரிசை உண்மையில் எந்த வரையறைக்குள்ளும் கூறுகளுக்குள்ளும் அடங்காதது.ஒரு பொதுமையான பண்பினை இந்த நூல்களின் விமர்சனத் தேர்வுக்கு நாம் வழங்கிவிட முடியாது.
வாசகனாக ஒருவரை எந்தெந்த நூல்கள் வாசிப்பின் ஈர்ப்பினுள் பிடித்து நிறுத்துமென்பதை எவருமறிந்திலர்.அதுபோலவே, ந.பெரியசாமியின் இந்த நூல்களின் தேர்வு நம்மை வியப்புக்கு உள்ளாக்குகிறது.
லிபிஆரண்யா,வெய்யில்,இளங்கோகிருஷ்ணன்,
இசை,வேல்கண்ணன்,ச.துரை என கவிதைகளின்புறமாக அது விரிந்து செல்கிறது.பால் சக்காரியா,கோணங்கி,தமிழவன் என முற்றிலும் வேறொரு திசையிலும் பயணிக்கிறது.
ஒரு பல் மருத்துவரான தன் மகனுக்கு, -இந்தியச் சாதியப் படிநிலையின் கழுவித் தீராத அழுக்குகள் அதிகாரத்தின் உச்சியிலிருந்து நுனிவரை எல்லாப்புறத்திலும் காய்ப்புத்தட்டி கிடக்கின்ற அவலத்தினையும், அதைக் களைய அம்பேத்கரின் நூல்கள் எப்படிப்பட்ட முன்னுவமையில்லாத ஒரு பெருந்திறப்பு என்பதையும் -ஓர் தந்தையெழுதிய ‘மகனுக்கு மடல்’ நூலும்,
சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட தம் வாழ்வின் கொடூர தருணங்கள் வெளியில் எவருக்கும் தெரியாமலே களத்திலேயே சிதறுண்டுபோன எண்ணற்ற போராளிகளின் (கிழிந்து நைந்துபோன டைரிக் குறிப்புகளைக்கொண்டு நண்பர் வசந்தசந்திரனுக்காக, ந.பெரியசாமியால் இந்நூல் தட்டச்சு செய்யப்பட்டதாகும்) வாழ்வுக்குக் கட்டியம் கூறும் வகையில் தொகுக்கப்பட்ட ‘ஜி.ராமச்சந்திரனின் சுயசரிதை’ நூலுக்குமான விமர்சனம்,ந.பெரியசாமியின் இலக்கிய ஆர்வத்திற்கும் சேர்த்தே சான்றுரைக்கின்றன.
ந.பெரியசாமியின் வாசிப்புத்தளம் என்பது இலக்கியத்தின் புறமாகக் கால்பாவ நினைக்கும் எளிய வாசகனுக்கு நிச்சயம் வியப்பளிக்கும் ஒன்றாகும்.
அந்த வியப்பு ”மொழியின் நிழல்” கட்டுரைத் தொகுப்பெங்கும் நீக்கமற நிறைந்து விரவிக் கிடக்கிறது.
–சம்பு
”மொழியின் நிழல்”-கட்டுரைத் தொகுப்பு
வெளியீடு:
தேநீர் பதிப்பகம்,
24/1, மசூதி பின் தெரு,
சந்தைக் கோடியூர்,
ஜோலார்பேட்டை-635851.
#விலை: ரூபாய் 180
தொடர்புக்கு: +91 9080909600