Sunday, July 21, 2024

மெல்லடகு

வேதநாயக்

னது தந்தைக்கு வெற்றிலை மெல்லும் பழக்கம் இருக்கிறது. ஒரு ஏலம், ஒரு சிட்டிகை சருக்கரை, இன்னும் இரண்டு நாட்டு மருந்து கடைச்சரக்குகள் சேர்த்து என நரம்பெடுத்து கிள்ளி இலேசாக பின்புறம் தடவி (முன்புறம் தடவுவதில்லை) மடித்து முதலில் வால் மிளகுடன் கொட்டைப் பாக்கிட்டு மென்று பின் வெற்றிலையைச் சுவைக்கத் தொடங்குவதைக் காண்பதற்கே அலாதியாக இருக்கும்.

வெற்றிலைக்கு வேறு பெயர்களாகத் தாம்பூலம், நாகவல்லி, நாகினி, தாம்பூலவல்லி, சப்த ஷீரா, புஜங்கலதா என்று வடமொழியிலும் வெற்றிலை, வெள்ளிலை, மெல்லிலை, மெல்லடகு, திரையல், வேந்தன், இகனி எனத் தமிழிலும் உண்டு.

சங்க காலத்தில் இரண்டு ஆடு மேய்கும் சிறுவர்கள் தங்களின் ஆடுகளைக் காட்டில் எங்கு கொண்டு போய் விட்டாலும் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு அந்த ஆடுகள் மீண்டும் மீண்டும் சென்று மேய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தன. ஒருமுறை இரண்டு சிறுவர்களுக்கும் ஆடுகள் வழக்கமாக நிற்கும் இடத்திற்கு யார் முதலில் செல்வது என்று போட்டி நடந்தது. ஒரு சிறுவன் ஆடு நிற்கும் இடத்திற்கு வேகமாக ஓடிச்சென்று அங்கு பக்கத்தில் படர்ந்திருக்கும் கொடியிலுள்ள இலையைப் பறித்து நான் தான் வெற்றி பெற்றேன் என்றான். வெற்றி பெற்ற சிறுவன் ஊருக்குள்ளே சென்று வெற்றி பெற்றமைக்கு அடையாளமாகத் தன் கையில் வைத்திருந்த இலையைக் காண்பித்தான். அதைப் பார்த்த பெரியோர்கள் நீ வெற்றி பெற்றதால் வெற்றி+இலை = வெற்றிலை எனக் கூறியுள்ளனர். மேலும் வெற்றிலையைச் சாப்பிட்ட ஆடுகளுக்கு எந்தவொரு நோயும் வராமல் இருப்பதைக் கண்டு அவர்களும் சாப்பிடலாயினர் என்றொரு கதை வழக்கிலுள்ளது. ஒலிம்பிக்கில் வெற்றி பெற்றவர்கள் தரிக்கும் ஆலிவ் இலைகளை இங்கு ஒப்பு நோக்கலாம்.

தம்பலம்

சங்ககாலத்தில் தம்பலம் அளித்து உபசரிப்பது வழக்கம். ‘தம்பலம்’ – ‘தாம்பூலம்’ என்னும் வடமொழிச் சொல்லின் திரிபு. இச்சொல் வெற்றிலையைக் குறிக்கும். தாம்பூலம் என்ற சொல் கி.மு.6-ஆம் நூற்றாண்டிலே இந்தியாவில் வழக்கத்தில் இருந்திருக்கிறது. சங்க இலக்கியங்களில் எட்டுத்தொகை நூலான கலித்தொகை தாம்பலம் தின்பதைப் குறித்திருக்கிறது.

பாரா, குறழா, பணியா, ‘பொழுது அன்றி, யார், இவண் நின்றீர்?’
எனக் கூறி, பையெ,
வை காண் முது பகட்டின், பக்கத்தின் போகாது,
‘தையால்! தம்பலம் தின்றியோ?’ என்று, தன்
பக்கு அழித்து, ‘கொண்டீ’ எனத் தரலும் யாது ஒன்றும்
(கலித்தொகை-65)

அத்துடன் மூதாய் என்று சொல்லப்படும் ஒருவகைப் பூச்சி வெற்றிலை மென்று துப்பப்படும் போது காணப்படும் நிறத்தை ஒத்தது என்பதை ஒப்பு நோக்கலாம். அப்பூச்சி இந்திர கோபம் என்றும் தம்பலப் பூச்சி என்றும் குறிப்பிடப்படுகிறது.

கம்பநாடார் ‘வெள்ளிலை தம்பல் கண்டார்‘ (இராமாயணம் பாலகாண்டம் காட்சிப் படலம்) எனக் குறித்துச் சொல்கிறார். கி.பி 9-ஆம் நூற்றாண்டு இலக்கியமான திருக்கோவையார் ‘தில்லை நல்லார் பொது தம்பலங் கொணர்ந்தோ‘ எனக் குறிக்கிறது. தம்பலம் என்ற சொல் தமிழில் வழக்குச் சொல்லிலும் பரவியது. நிச்சய தாம்பூலம், தாம்பூல பத்தியம், தாம்பூல நிவேதனம், தாம்பூலத் தட்டு. தாம்பூலம் பரிமாறல், தாம்பூலம் தரித்தல், தாம்பூல எச்சில், என்ற சொற்கள் வழக்கத்தில் உள்ளதைக் காணலாம். தெலுங்கிலும் ‘தம்பலப் பாக்கு‘ என வெற்றிலை பாக்கைக் குறிப்பதுண்டு.

சங்க இலக்கியங்களில் இவ்விலை ‘தம்பலம்’ திரையல்’, ‘அடை’, ‘நீடுகொடி இலை‘ எனக் குறிக்கப்படுகிறதே தவிர வெற்றிலை எனக் குறிக்கப்படவில்லை என்கின்றனர். ஆனால் உரையாசிரியர்கள் இடம் கருதி வெற்றிலை என்றே பொருள் கொள்கின்றனர். வெற்றிலை என அழைக்கப்படும் இவ்விலையைச் (வெறுமை இலை) சமைப்பதற்குப் பயன்படாத இலை என்றும் பொருள் கொள்கின்றனர். வெள்ளிலை என்ற சொல்லை விட வெற்றிலை, வெத்திலை என்ற சொல்லே பெரும்பாலும் வழக்கில் இருகிறது. ஆறாம் நூற்றாண்டுக்கு முன்னர் வெற்றிலை என்ற பெயர் இலக்கிய வழக்கிலே காணப்படவில்லை என்போர் உளர். சங்க இலக்கியங்களில் எடுத்தாண்டுள்ள சில காட்சிகள் இக்கூற்றினைப் பொய்யாக்குகின்றன.

சங்க காலத்தில் மதுரை, புகார், வஞ்சி போன்ற நகரங்களின் வீதிகளில் இருந்த நாளங்காடி, அல்லங்காடி போன்ற இடங்களில் இவ்விலை விற்பனை ஆகியிருந்திருக்கிறது. பழைய மதுரை மாநகர் வீதியினைக் குறிப்பிடும் மாங்குடி மருதனார் அவ்வீதிகளில் வெற்றிலை பாக்கு விற்போர் இருந்ததையும் சுட்டுகிறார்.

நீடு கொடி இலையினர் கோடு சுடு நூற்றினர்’ (மதுரைக்காஞ்சி 400-401)

பழைய மதுரையில் வெற்றிலையைப் பயிரிட்டு விற்பனைக்குக் கொண்டு வந்தனர். வெற்றிலை போடும் பழக்கத்தையுடைய மக்களும் வாங்கிப் பயன்படுத்தினர். வெற்றிலை போடும் வழக்கத்தை மேற்கொள்ளும் மக்கள் சங்க காலத்திலேயே தமிழகத்தில் இருந்து வந்துள்ளனர் என்பது புலப்பாடு.

வெற்றிலையின் பொதுத்தன்மையைக் கருதியே மாங்குடி மருதனார் ‘நீடு கொடி இலை‘ என்றார்.

கி.பி. 6-ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் எழுதப்பட்ட திவ்யப் பிரபந்தத்திலும் ‘வெற்றிலை’ குறிக்கப்படுகிறது.

உண்ணுஞ்சோறும், பருகும் நீரும் தின்னும் வெற்றிலையும்
(நாலாயிர திவ்ய பிரபந்தம் – திருவாய் மொழி 6.7)

சிலப்பதிகாரம் – இந்திரவிழா ஊரெடுத்த காதை
சந்த பூக்கச் சாடை பாக்கிலை
கஞ்சுக நெய் ஆய்ந்த விவரெண் மராயத்தார்
”(157) என்கிறது.

வெள்ளை வெற்றிலை என்கிற கற்பூர வெற்றிலை (சித்த வைத்திய அகராதியில் வெள் வெற்றிலை) – இளம் பச்சை நிறத்தில் இருக்கும். கருப்பு வெற்றிலை – கரும்பச்சை நிறத்தில் இருக்கும். காப்பி வெற்றிலை – பளிச்சென்று மின்னுவது போல் இருக்கும். (தங்க நிறத்தில்) பேகருப்பு வெற்றிலை – கருப்பு அதிகமுள்ள பச்சையாக இருக்கும். கொழுந்து வெற்றிலை என்பது தளிராக இருக்கும்போதே பறித்துக் கொள்வது. முத்தின வெற்றிலை நன்றாக உருவான பிறகு பறித்துக் கொள்வது. இளம்பருவ வெற்றிலை கொடியைச் ‘செம்பக்கால்’ என்பார். முதல் ஆறுமாதம் கழித்து வலதுபுறமாகக் கொடி இறக்குவார்கள். அப்போது இவ்வெற்றிலைக் கொடியானது ‘முத்தினக்கால்’ எனப்படுகிறது.

கருகருவென கரும்பச்சை நிறத்தில் இருக்கும் வெற்றிலைகள் ஆண் வெற்றிலைகள் என்றும், இளம்பச்சை வெற்றிலைகள் பெண் வெற்றிலைகள் என்றும் சொல்லப்படுகிறது

கொடியில் தனியாகக் கிளை வைத்து இருப்பது பாலை வெற்றிலை. அதாவது நல்ல வெற்றிலை. கொடியிலே வெற்றிலை வருவது சக்கை வெற்றிலை. கோணலாகவும் காய்ந்ததும் வேண்டாமென்று ஒதுக்குவதும் ‘கழுவன’ வெற்றிலைகள்.

105 வெற்றிலை (100 – 105 வரை தோரயமாக) – 1 கவுளி, 2 கவுளி சேர்ந்தது – 1 கட்டு; 30 கட்டு (அதாவது 60 கவுளி) – 1 வத்து; 1 முழம் என்பது – 4 கொடி; 200 கொடி சேர்ந்தது – 1 கட்டு; 50 முழம் சேர்ந்தது – 1 கட்டு.

வெற்றிலையில் பலவகை உண்டு. அவற்றுள் வெள்ளை வெற்றிலை ஒன்றாகும். வெள்ளை வெற்றிலை வெளிறிய சிறிது பசு நிறமாகவும் மென்மையாகவும் அழகாகவும் சுவைப்பதற்கு இன்பமாகவும் இருக்கும். கரும் பச்சையாகவும் முரடாகவும் காரமாகவும் இருக்கும் வெற்றிலை உலக வழக்கில் ‘பச்சை வெற்றிலை’ எனப்படுகிறது. சிலர் வெள்ளை வெற்றிலையையே விரும்புவர். புகையிலை போடுவோரும் ஏழை மக்களும் பெரும்பாலும் பச்சை வெற்றிலையே உட்கொள்வர். பச்சை வெற்றிலையினும் வெள்ளை வெற்றிலை விலை கூடுதல் என்பதும் இதற்குக் காரணமாகும். வெற்றிலைக்கு வெள்ளிலை என்னும் பெயரும் பாக்குக்கு அடைக்காய் என்னும் பெயரும் உள்ளமை தெளிவு. பாக்குக் காய்க்கு அடைக்காய் என்னும் பெயர் வந்ததன் காரணம் அடையுடன் வெற்றிலையுடன் போடப்படும் காய் பாக்குக் காய்.

கி.பி 7-ஆம் நூற்றாண்டில் சமணர்களின் அன்றாட வாழ்விலும் இவ்வெற்றிலை பங்கு வகுத்திருக்கிறது. கைகளில் ‘மருதோன்றி’ (அழவணம், மருதாணி) கொண்டு சாயம் பூசிக்கொள்ளுதலும் வெற்றிலை பாக்கும் சுக்கும் தின்னுதலும் சமணத் துறவியரின் வழக்கம் என்பதைத் தேவாரம் கூறுகிறது.

இந்நகரில் வாழும் மக்கள் மட்டுமின்றி இந்திய நாட்டில் வாழும் மக்கள் அனைவருமே ‘தெம்புல்‘ என்னும் ஒருவகை இலையை எப்போதும் வாயில் வைத்துக்கொண்டே இருக்கிறார்கள். அது அவர்களுக்கு ஏற்படும் ஏதோ ஒரு வேட்கையைத் தணிப்பதற்கு உதவுகிறது. ஆனால் அந்தப் பழக்கம் அவர்களிடம் நிலைத்து நின்று விட்டது. அந்த இலையை அவர்கள் இடையறாது மென்று கொண்டும், அதனால் ஊறுகின்ற எச்சிலை உமிழ்ந்து கொண்டும் இருக்கிறார்கள்.

அரசரும் பிரபுக்களும் ஏனைய மனிதர்களும் அந்த இலையோடு கருப்பூரம் முதலிய நறுமணப் பொருட்களையும் சுண்ணாம்பையும் கலந்து வாயிற் போட்டுக் கொள்கிறார்கள். இந்த பழக்கம் உடம்புக்கு மிகவும் நல்லதென்று அவர்கள் சொல்கிறார்கள்.

ஒருவனை மிகவும் இழிவாக நடத்த வேண்டுமென்று இன்னொருவன் விரும்பினால் அவன் முகத்தில் தன் வாயில் இருக்கும் இலையையோ அதனுடைய சாற்றையோ துப்பி விடுவான். அவ்வாறு அவமானப்படுத்தப்பட்டவன் நேராக அரசனிடம் ஓடி, தனக்கு நேர்ந்த மானக்கேட்டை எடுத்துச் சொல்லி, அவ்வாறு அவமானப்படுத்தியவனோடு சண்டையிடுவதற்கு அரசனுடைய இசைவைக் கேட்பான். தன் இசைவைத் தருவதோடு அவனுக்குத் தேவையான அரசன் போர்க்கருவிகளையும் தருகிறான். அதாவது ஆளுக்கொரு வாளையும் கேடயத்தையும் தருகிறான். சண்டையைக் காண்பதற்கு மக்கள் திரண்டு விடுகிறார்கள். சண்டை செய்யும் இருவரும் ஒருவருள் ஒருவன் இறக்கும் வரையில் சண்டையிடுகின்றனர். சண்டையிடும்போது அவர்கள் வாளின் முனையைப் பயன்படுத்தக் கூடாது’ – என்று தனது பயணக் கட்டுரையில் மார்க்கோ போலோ குறிப்பிடுகிறார்.

அசோக வனத்தில் தனிமையில் வாடிக்கொண்டிருக்கும் சீதையின் மனநிலையைச் சுட்டும் கம்பர், “ராமனுக்கு யார் வெற்றிலை, பாக்கு மடித்துக் கொடுப்பார்கள்’ என்று தனது இயலாமையை எண்ணி சீதை நொந்துபோவதாகவும் இராமனுடனிருந்து இன்பம் நுகர முடியாமல் போவதாகவும் சீதையின் எண்ண ஓட்டங்களைப் பதிவு செய்கிறார்.

அருந்தும் மெல் அடகு ஆர் இட
அருந்தும் என்று அழுங்கும்

(இராமாயணம் காட்சிப்படலம்-15)

பூவணை பலவுங் கண்டார்;
பொன்னரி மாலை கண்டார்;
மேவருங் கோபம் அன்ன
வெள்ளிலைத் தம்பல் கண்டார்
(49)

என்னும் பாடலில் மலைக்காட்சி காண்பவர் பூ அணையும் பொன்னரி மாலையுங் கண்டனர்; அத்துடன் சிவந்த இந்திர கோபப் பூச்சி போன்ற உமிழ்ந்த வெற்றிலைக் கொத்தைகளையும் கண்டனர் என்கிறது. (தம்பல் என்பது மென்று உமிழ்ந்த சிவப்பான வெற்றிலைச் சக்கை (கொத்தை). தம்பல் என்பதற்கு முன்னால் உள்ள ‘வெள்ளிலை’ என்பது வெள்ளை வெற்றிலை.

அருணாசல புராணத்தில்
விஞ்சிய அடைக்காய் உண்டி வழியிடை
வெறுப்ப தாக்கி

(திருமலைச் சருக்கம்-26) என்ற சொற்றொடரிலும் குறிப்பிடப்படுகிறது.

கொந்தவிழ் மலர்ச்சோலை நன்னீழல் வைகினுங்
குளிர்தீம் புனற்கையள்ளிக்
கொள்ளுகினு மக்நீரிடைத்திளைத் தாடினுங்
குளிர்சந்த வாடைமடவார்
வந்துலவு கின்றதென முன்றிலிடை யுலவவே
வசதிபெறு போதும் வெள்ளை

வட்டமதி பட்டப் பகற்போல நிலவுதர
மகிழ்போதும் வேலையமுதம்
விந்தைபெற வறுசுவையில் வந்ததென வமுதுண்ணும்
வேளையிலு மாலைகந்தம்
வெள்ளிலை யடைக்காய் விரும்பிவேண் டியவண்ணம்
விளையாடி விழிதுயிலினும்
சந்ததமு நின்னருளை மறவா வரந்தந்து
தமியேனை ரக்ஷைபுரிவாய்
சர்வபரி பூரண வகண்டதத் துவமான
சச்சிதா னந்தசிவமே.

(சச்சிதானந்த சிவம்-11 தாயுமானவர் பாடல்கள்)

பூங்கொத்துகள் விரிகின்ற பூஞ்சோலைகளில் நல்ல நிழலிறங்கியிருந்தாலும் குளிர்த்த மதுரமாகிய நீரைக் கையினாலள்ளி உட்கொண்டாலும் அந்நீரினிடத்தில் மூழ்கி விளையாடினாலும் குளிர்ந்த சந்தன மணமுள்ள காற்று மாதர்கள் வந்துலாவுகிறது போல முற்றத்தின்கண் உலாவும் படி, (விசாலமான) வீடுகளையுடையனவாய் ஆகுங்காலத்திலும் வெண்மையாகிய வட்டவடிவுள்ள சந்திரன் பட்டப்பகலைப் போல சந்த்ரிகையை வீசுதலால் மகிழுங்காலத்தும் கடலமுதமானது ஆச்சரியமடைய அறுசுவைப் பண்டங்களில் வந்ததென்னும்படி உணவை உண்ணும் காலத்திலும் பூமாலை, சந்தனம், வெற்றிலைப் பாக்கு, இவைகளை விரும்பி வேண்டிய வண்ணம் வேண்டியபடி விளையாடி கண்ணுறங்கினாலும் சதாகாலமும், உன்னருளை மறவாத வரத்தைக் கொடுத்து தனியேனைக் காத்தருள்வாய் சர்வ பரிபூரணமே எனத் தாயுமானவர் கூறுகிறார்.

கலிங்கத்துப்பரணி போர்க்களக் காட்சியில் மிகுதியாக உண்டதால் உணவு செரிமானத்திற்காகப் பேய்கள் தாம்பூலம் போட்டுக்கொண்டன என்கிறார் செயங்கொண்டார்.

பண்ணு மிவுளிச் செவிச்சுருளும் பரட்டிற் பிளவும் படுகலிங்கர்
கண்ணின் மணியிற் சுண்ணாம்புங் கலந்து மடித்துத் தின்னீரே.
பெருக்கத் தின்றீர் தாம்பூலம் பிழைக்கச் செய்தீர் பிழைப்பீரே!
583

குதிரைக்காது–வெற்றிலை; குதிரைக்குளம்பு–பாக்கு; கலிங்கர் கண்-சுண்ணாம்பு – மடித்து வெற்றிலை போட்டுக்கொள்ளுங்கள் என்கிறது உரை.

சீவக சிந்தாமணியில் காவியத் தலைவன் சீவகன் விமலையாரிடம் புணர்ச்சி வேண்டுவதைக் குறிப்பால் உணர்த்தும் விதமாக வெற்றிலை மடித்துக் கொடுப்பதற்காக அவளைத் தொடுகிறான் என்று

பாசிலை சுருட்டி
மைந்தன் கொடுகிய
” என்று சொல்கிறது.

இதற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர், “வெற்றிலை மடித்துக் கொடுத்தற்கென்றது இடக்கர்” என்று கூறுகிறார். (நேரடியாகச் சொல்ல வேண்டிய செய்தி அநாகரிமாக இருக்கும் சமயங்களில் அதை மறைமுகமாகச் சொல்லும் முறைமையை தமிழ் இலக்கண நூல்கள் ’இடக்கர்’ என்கிறது)

கணவன் போரில் இறந்த பின்பு மனைவியர் பச்சையிலை முதலியவற்றைத் தின்னாது கைம்மை நோன்பு காத்தல் பண்டைய வழக்கம். இவ்வழக்கைப் புறநானூற்றுப் பாடல் ஒன்று சித்தரிக்கிறது. சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதனும் சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற் கிள்ளியும் போர்ப்புறத்திலே தமக்குள் போரிட்டு வீழ்கின்றனர். அவர்களது குடைகள் தாழ்ந்தன. முரசுகள் வீழ்ந்தன. பாசறைகள் ஒருவரும் எஞ்சி இல்லாதவாறு அழிந்தன. அவர் மனைவியர் பச்சிலையும் தின்னாது நீரும் மூழ்காது இறந்து கிடக்கும் தத்தம் கணவரின் மார்பைக் கட்டியவாறே களத்தில் கிடந்த காட்சியைக் கழாத்தலையார் சித்தரிக்கின்றார்.

பாசடகு மிசையார் பனிநீர் மூழ்கார்‘ – (புறநானூறு)
என்ற வரியில் பாசடகு என்பதற்குப் ‘பச்சையிலை (வேளைக்கீரை) முதலாமென்பது’ உரையாசிரியர் கூற்று. பாசடகு என்றால் வெற்றிலை என்றும் பொருள் கொள்கிறார் வரலாற்றுப் பேராசிரியர் திரு கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியார். இவ்வழக்கத்தைக் கூறும்போது கணவன் போரில் இறந்த பின்பு மனைவியர் வெற்றிலை தின்னார் குளிர்ந்த நீரில் மூழ்கார் எனப் பொருள் கொண்டுள்ளார். வெற்றிலை உணர்ச்சிகளை எழுப்ப வல்லது என்ற மருத்துவ இலக்கியங்களின் கூற்றுகளும் இங்கு ஒப்புநோக்கத் தக்கது.

சுமார் கி.பி.910-ஆம் நூற்றாண்டில் எழுந்த சீவக சிந்தாமணி தாம்பூல வழக்கைப் பற்றி விரித்துக் கூறுகிறது. இவ்விலை ‘பாசிலை‘ என்றும் (1987), ‘பசுந்திரை‘ என்றும் (197), ‘மெல்லிலை‘ என்றும் (815) பல்வேறு பெயர்களில் குறிக்கப்படுகிறது. மேலும் இவ்வெற்றிலை பயிரிடும் தோட்டம் ‘மெல்லிலைக்காவு” (826) என்று குறிக்கப்படுகிறது.

வெற்றிலை வைக்கும் பெட்டி வெற்றிலைப் படலிகை என்று கூறப்படுகிறது. வெற்றிலைத்தட்டு, வெற்றிலைச் செப்பு எனவும் குறிக்கப்படுகிறது. இச்செப்புத்தட்டு ‘மணிச்செப்பு‘ என்று சிறப்பிக்கப்படுகிறது. இதனை ‘சீந்தா நின்ற தீமுக வேலான் மணிச்செப்பின் ஈந்தான்’ (1055:1-2) ‘கப்புரம் பசுந்தீரை கதிர்செய் செப்பொடு சிலதிய ரேந்த’ (197: 1-2) எனச் சீவக சிந்தாமணி கூறும். அத்துடன் விருந்தினருக்கு வெற்றிலையைச் செப்பிலே வைத்துக் கொடுத்தலையும் பச்சைக் கற்பூரம், வெற்றிலை ஆகியவற்றைச் சுருட்டிப் பெண்கள் ஏந்தி வருதலும் பாக்கையும் வெற்றிலையையும் பறித்துக் கொண்டு வந்து கொடுத்து சண்பக மாலையைப் பெறுதல் போன்ற பண்டைய வழக்கங்களை விளக்குகிறது.

பண்டைத் தமிழகத்தில் அரசருடன் இருந்த “எண்பேராயம்‘ ஒரு குழு என்று குறிப்பிடப்படுகிறது. இந்தக் குழுவில் பாக்கு வைத்திருக்கும் ஒருவரும் அடங்குவர். “எண்பேராயம்’ என்பதற்கு விளக்கம் எழுதிய சிலப்பதிகார அரும்பத உரையாசிரியருள் ஒருவர்,

சந்துபூக்கச்
சாடை பாக்கிலை கஞ்சுக நெய்
ஆய்ந்த
விவரெண் மராயத்தார்

(இந்திர விழாவூரெடுத்த காதை-157)

என்று எண்வகை நபர்களைக் குறிப்பிடுகிறார். இதில் “பாக்கிலை’ வைத்திருப்போரும் ஒருவர். இவரை “அடைப்பைக்காரன்’ என்று குறிப்பிடுகிறார்கள்.

தமிழகத்தில் வழங்கும் பழமொழிகளிலும் வெற்றிலையின் பங்கைக் காணமுடிகிறது. ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சீவக சிந்தாமணியில் வெற்றிலையைப் பற்றிய பழமொழி ஒன்று குறிக்கப்படுகிறது.

வெற்றிலை விடினும் வேலாம்‘ (சீவக-815)

விருந்து உபசரித்தலில் தாம்பூலத்திற்குச் சிறப்பான பங்குண்டு. தமிழகத்தில் வீடு தேடி வந்த விருந்தினருக்கு உண்டி கொடுத்து உபசரிப்பதும் வெற்றிலை பாக்கு அளித்து உபசரிப்பதும் வழக்கம். இவ்வாறு வெற்றிலையில்லா விருந்து விருந்தாகாது எனக் குறிக்கிறது வெற்றிலையில்லா விருந்தில்லை பழமொழி. ‘வெற்றிலையில்லா விருந்தும் சீரகமில்லா ரசமும் சீரில்லா பொம்பளையும்’, ‘தம்புடி வெற்றிலை நிச்சய தாம்பூலம் ஒரு துட்டு வெற்றிலைக் கல்யாணம்’ என தமிழில் வெற்றிலை குறித்த பழமொழிகளுக்கு குறைவேயில்லை.

இலை வாணிகன் கதையொன்று

தில்லையில் விழாக் காலங்களில் வழக்கம் போல் ஓடும் தேர் ஒரு சமயம் ஓடவில்லை. தேர் ஓட வேண்டுமானால் நரபலியிட வேண்டுமென்றும் நரபலிக்கிரையாகுபவன் ஒருத்திக்கு ஒரே மகனாகவும் குற்றம் குறை அற்றவனாகவும் இருக்க வேண்டுமென்று அரசனிடம் ஊர் பெரியோர்கள் முறையிட்டனர். மேற்குறித்த தகுதிகள் அனைத்தும் நிறைந்தவனாக வெற்றிலை வணிகன் ஒருவன் தேர்ந்தெடுக்கப்படுகிறான்.

தேர்ந்தெடுக்கப்பட்ட வெற்றிலை வணிகன் தானே தன் தலையை வெட்டிக்கொள்ள ஒப்புக்கொண்டு அதற்கு முன்பு ஒரு வேண்டுகோளும் விடுத்தான்.

அதாவது தான் இறந்துபட்ட பின்பு தன் இனத்தவரே தில்லைக் கோயில் இடது சிறகில் குடியேற வேண்டுமென்றும் அப்படிக் குடியிருக்கும்போது இறப்பு ஏற்பட்டால் அக்கோயிலைச் சார்ந்தவர்களே அவனுக்கு இறுதி மரியாதையாக வாய்க்கரிசி, கோடித்துணி, வெற்றிலை, பாக்கு முதலியன கொடுத்து மரியாதை செய்ய வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்து கீழ்க்கண்டவாறு தம்மைப் பலியிட்டுக் கொள்ளத் தயாரானான். தன்காலின் பெருவிரலில் ஒரு வட்டமான வளையத்தை மாட்டிக் கொண்டு, அதிலிருந்து கழுத்து வரை நீண்ட இரும்பு சங்கிலியை இணைத்து, சங்கிலி முனையில் துரட்டி என்ற கத்தியைக் கட்டி கழுத்தில் மாட்டிக்கொண்டு தானாகத் தன் காலை உதைத்து தன் கழுத்தை அறுத்துக் கொண்டு தன் உயிரை அர்ப்பணித்துக் கொண்டான். பின்னர் தேர் ஓடியது.

இங்கே அரிகண்டம் என்ற சொல்லை ஒப்புநோக்கலாம்.

‘அரிகண்டம்’ என்பது ஒரு வீரன் தம்மைத்தாமே வாளால் கழுத்தை அறுத்துக்கொண்டு உயிர் தியாகம் செய்வது. தலையை ஒரு கையால் பிடித்துக் கொண்டோ, தலையை ஓரிடத்தில் இழுத்துக் கட்டியோ மறுகையால் வாள் கொண்டு கழுத்தினை அறுத்து தன்னைத் தானே பலி கொடுப்பது.

பழங்காலத்தில் மன்னர்கள் போரில் வெற்றி பெறவும் அவர்கள் நலம் பெறவும் தாங்கள் எடுத்துக்கொண்ட முக்கிய நலப்பணித் திட்டங்கள் எவ்விதத் தடங்கலுமின்றி நடந்தேறவும் போர்வீரர்கள் கொற்றவை தெய்வத்தின் முன் தங்களைத் பலியிட்டுக்கொள்ளும் வழக்கம் இருந்துள்ளதை சிற்பங்கள், நடுகற்கள், கல்வெட்டுகள் போன்ற ஆவணங்கள் தெரியப்படுத்துகின்றன.

இந்திர விழாவூரெடுத்த காதை(85-88)யில் வரும் வரிகளில் வரும் இடத்தில் கண்ணகியும் கோவலனும் மதுரைக்கு வந்து தங்கி இரவு உணவுக்கு பிறகு வெற்றிலைப் பாக்கு மடித்து கொடுக்கிறாள். அவர்கள் இருவருக்குமான கடைசி உணவும் இறுதி இரவுமான முக்கியமான இக்காட்சியில் வெற்றிலை வருகிறது.

உண்டு இனி திருந்த உயர்பே ராளற்
அம்மென்
திரைலோடு
அடைக்காயீத்த
மையீரோதியை
வருகெனப் பொருந்தி
” (கொலைக்களக் காதை-54-56)
என்று குறிப்பிடப்படுகிறது.

பத்துப்பாட்டில் ஒன்றான மதுரைக் காஞ்சியில் வெற்றிலை சுண்ணாம்பு விற்பவர்கள் மதுரை நகரில் இருந்தனர் என்பதை,

நீடு கொடி
இலையினர் கோடு சுடு
நூற்றினர்
” (401)

என்று குறிப்பிடுகிறது. நச்சினார்க்கினியர் இதற்கு ”வளர்ந்த கொடியீன்ற வெற்றிலையினை உடையாரும், சங்கு சுடுதலால் உண்டான சுண்ணாம்பை உடையாரும்” என்று விளக்கமளித்துள்ளார்.

உண்ணும் சோறு பருகுநீர்
தின்னும் வெற்றிலையுமெல்லாம் கண்ணன்

என்கிறார் திருவாழ்மொழியில் நம்மாழ்வார்.

அடைக்காய் தின்பதில் ஊறுமுதல் நீர் நஞ்சாம்
அதி பித்தம் இரண்டாவதூறு நீரே
கடையமிர்தம் மூன்றாவதூறு நீர் தான்
கனமதுர நான்காவதூறு மந்நீர்
மடையெனவே ஐந்தாறிற் சுரந்துள் ஊறி
வருநீர் களைச் சுகித்து
தடையுருப் பித்தமொடு மந்த நோயும் தளர்பாண்டு நோயும்
உண்டாம் தரம் சொன்னோம்
.”

என்று தாம்பூலம் தரிக்கையில் வெற்றிலை மென்று வரும் உமிழ்நீரில் முதல், இரண்டாம், மூன்றாம், நான்காம், ஐந்தாம் நிலை சுரப்பு நீர்களின் குணத்தினை ஒரு சித்தர் பாடல் கூறுகிறது.

இரண்டு வெற்றிலையோடு ஐந்து மிளகு வைத்து வெறும் வயிற்றில் மென்று சாப்பிட்டு சாற்றினை மட்டும் இரண்டு மாதங்கள் வரை விழுங்கினால் உடல் எடை குறையும். வாயுத்தொல்லை, அஜீரணக் கோளாறு போன்றவைகட்கு வெற்றிலை தீர்வு தருகிறது. பசியைத் தூண்டிவிட இரண்டு வெற்றிலையை பாக்கு, சுண்ணாம்புடன் கலந்து மென்றால் போதும் என்றும் தமிழ் மருத்துவம் வெற்றிலையின் பயனைப் பட்டியலிடும் போது எண்ணிக்கையற்ற வரிசையை தன்னகத்தே வைத்துள்ளது.

மஹாபாரதக் கதையில் தேவலோகத்திற்கு செல்லும் அர்ஜுனன் மேல் ஆசைப்படும் ஊர்வசியிடம் அர்ஜுனன் ‘இந்திரன் எனக்கு தந்தை. நீங்கள் அவருக்கு உகந்தவர். ஆதலின் நீர் எனக்கு தாய்க்கு சமம்’ என்கிறான். “ஒரு பெண்ணின் ஆசையை உணராத நீ பெண்ணாகவும் இல்லாமல் ஆணாகவும் இல்லாமல் இரண்டு தன்மைக்கும் இடைப்பட்ட நிலையை அடைவதாக” என்று மோஹித்த ஊர்வசி சாபமிட, இதற்கு பல்காலம் சென்று அஞ்ஞாத வாசத்தில் இச்சாபத்தை வரமாக்கிக் கொள்கிறான் அவன். இச்சம்பவத்தை கேள்வியுற்று ஊர்வசியை பூவுலகு சென்று வாழ் என இந்திரன் மேலிருந்து விரட்டி விடுகிறான்.

என் செய்வாள் பாவம்..? தாம்பூலம் தரிக்கா வாய் என்ன வாயென்றுணர்ந்து அந்தரங்க மறைவுப் பிரதேசத்தில் பதுக்கி ஓரிலை கொண்டு வந்து பூமியில் பயிரிட்டு சுவைக்கத் துவங்குகிறாள்.

பின் நரம்பு கிள்ளி அழுந்தத் தேய்த்து பின் முகர்ந்து பார்த்தால் பெண்களின் அந்தரங்கத்தின் வாசனை உங்களை மயக்கமுறச் செய்யும் என மறைவாய் சொன்ன கதை-யில் கி.ரா-வும் ஒரு கட்டுரையில் நாஞ்சில் நாடனும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.


எடுத்தாளப்பட்டுள்ள நூல்கள்: கலித்தொகை, இராமாயணம், மதுரைக்காஞ்சி, நாலாயிர திவ்ய பிரபந்தம், சிலப்பதிகாரம், தேவாரம், மார்க்கே போலோ பயணக் குறிப்பு, கலிங்கத்து பரணி, தாயுமானவர் பாடல்கள், அருணாச்சல புராணம், புற நானூறு, சீவக சிந்தாமணி, சித்த மருத்துவ அகராதி, பத்துப் பாட்டு, சித்தர் பாடல்கள், மறைவாய் சொன்ன கதைகள்

***

வேதநாயக்
தேவதா உன் கோப்பை வழிகிறது என்கிற ஒரு கவிதைத் தொகுப்பு வெளிவந்துள்ளது. அவ்வப்போது இணைய இதழ்களிலும் இலக்கியம் சார் சஞ்சிகைகளிலும் இவரது கவிதைகளும் கட்டுரைகளும் வெளியாகிறது. மின்னஞ்சல் முகவரி: editorialmagazines@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular