Tuesday, October 15, 2024
Homesliderமூங்கில் – 2

மூங்கில் – 2

சுஷில் குமார்

மூங்கில் – 1

க்கவாதத்தால் இழுத்துக் கோணிய அப்பாவின் முகமும் அவரது கலையம்சம் நிறைந்த தூரிகைகளைப் போன்ற விரல்களும் என் கண்ணில் மீண்டும் மீண்டும் வந்துகொண்டிருக்க, மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு ஓடினேன். நான் நினைப்பது மட்டும் நடந்திருந்தால் எப்படியிருக்கும்? எவ்வளவு பெரிய சாதனை இது! தன் வலியை மீறி, இப்படி ஒன்றை ஓர் உன்னத கலைஞனைத் தவிர வேறு யாரால் செய்துவிட முடியும்? படபடப்போடு கதவைத் திறந்து அப்பாவின் அறைக்குள் சென்றேன். வெயில் பழகிய கண்கள் இருட்டிக்கொண்டு வந்தன, கண்களைக் கசக்கி நிமிர்ந்து பார்க்க, நேர் எதிரே உயிரோட்டமான ஓர் ஓவியம்!

அந்த நொடி நான் நுழைந்தது திருவிதாங்கூர் அரண்மனைக்குள். ஐந்தடி உயர மூங்கில் தட்டியில் என் கண் முன்னால் தத்ரூபமாக நின்றார் ராஜா ரவி வர்மா. வாயடைத்துப் போய் நின்ற என்னைப் பார்த்து அவர் புன்னகைத்தார். அவர் அருகில் சென்று மெல்ல தொட்டுப் பார்த்தேன். என் அப்பாவின் உடல் சூடு என் கைகளின் வழி ஊடுருவி என் உடல் முழுதும் பரவியது. உடல் சிலிர்த்துக்கொள்ள, சட்டென்று பின்னால் சென்று அந்த ஓவியத்தைக் கூர்ந்து கவனித்தேன். அது அப்பாவின் முகமேதான்.

அப்பா ராஜ உடையுடன் இடது கையில் ஒரு கைத்தடி வைத்திருந்தார். நான் நினைத்தபடியே இடது கையில் தான்! அவரது முழுக்கை மேற்சட்டையின் வலது மார்பில் ராஜாங்கப் பதக்கம் மின்னியது. ஆமாம், இடது கையில் கைத்தடி என்றால் பதக்கம் வலது மார்பில்தான் இருக்க வேண்டும். ஓவியத்தின் இடது கீழ்ப்புறத்தில் அப்பாவின் பெயர் எழுதப்பட்டிருந்தது. அதுவும் வலமிருந்து இடமாக. என் கண்களிலிருந்து கண்ணீர் நிற்காமல் பொங்கிப் பெருகி என்னைக் கரைத்ததைப் போலிருந்தது. தனக்கு வரவிருப்பதை உறுதியாகத் தெரிந்துகொண்டு தன்னிடமிருந்த அதி அற்புதக் கலைக்கு ஈடாக இன்னொன்றை உருவாக்க நினைத்திருக்கும் அப்பா. என்ன ஒரு கலைஞன்! அத்தனை வருடம் வரைந்து பழகிய வலதுகை செயலிழக்க ஆரம்பித்த நொடி முதலே தன் இடது கையைத் தயார் செய்திருக்கிறார். தன் அறையைப் பூட்டிக்கொண்டு யாரிடமும் முகம் கொடுத்து கூட பேசாமல் ஒரு தவ வாழ்வு வாழ்ந்தது இதற்காகத்தானா?

அப்பா அடிக்கடிச் சொல்வது ஞாபகம் வந்தது. “கலைஞனுக்கு ஒடம்புன்னு ஒன்னு கெடயாது மக்ளே. ஒன்னு கெடக்க ஒன்னு ஆனா என்ன, அவன் சும்மா கெடந்தாலே போறும் பாத்துக்கோ, அவன் நெனைக்கதும், சொல்லுகதுமே போறும்.”

அந்த நொடி எனக்குள் மிகப்பெரிய பாரமொன்று வந்து இறங்கியது. இக்கலைஞனையும் அவனது உன்னத கலையையும் எப்படிக் காப்பாற்றி தக்க வைப்பது? சாப்பாட்டிற்கே வழியற்ற நிலை முன்னிருக்கும் போது இவனது கைதொட்டு இக்கலையினை நான் எப்படிப் பெற்றுக்கொள்வது? அம்மாவும் அக்காவும் முற்றிலும் நிலைகுலைந்து போயிருக்கிறார்கள். தம்புரான் கம்பெனிக்கு அவர்கள் பின்னிக்கொடுத்த ஆயிரமாயிரம் ஒயர் கூடைகளினால் என்ன பெரிதாக சம்பாதித்து விட்டார்கள். எல்லாமே அப்பாவின் இந்த சிலநாள் மருத்துவச் செலவுக்கே போதுமானதாக இல்லையே. அம்மா வங்கியில் ஏதும் சேர்த்து வைத்திருப்பாளோ?

சரி, வருவதைப் பார்த்துக் கொள்ளலாம். அப்பாவிற்குப் பதிலாக நான் வரைவேன். அவர் அளவிற்கு முடியாவிட்டாலும் என்னாலும் விலைபோகும் ஓவியங்களை வரைந்துவிட முடியும். அடுத்த மாதம் சபரிமலை கூட்டம் வந்துவிடும். அதற்குள் எவ்வளவு மூங்கில் தட்டி ஓவியங்களை வரைகிறேனோ, வரைந்துவிட வேண்டும்.

வீட்டைப் பூட்டிவிட்டு எதிர்காலத்தைப் பற்றி ஏதேதோ யோசித்தவாறு மருத்துவமனை நோக்கி நடந்து கொண்டிருந்தேன். எல்லாவற்றையும் புறந்தள்ளி அப்பாவின் இடக்கை ஓவியம் மீண்டும் மீண்டும் என்முன் வந்து என்னைப் பரவசப்படுத்தியது. அடடா! என்ன ஒரு மனிதன்! அப்போது சட்டென ஒரு யோசனை. அப்பாவை வீட்டிற்கு அழைத்துச் செல்லும்போது அவருக்கு ஒரு பரிசு கொடுக்க வேண்டும். அந்த அதிசய ஓவியத்தைப் பெரியதாக சட்டமிட்டு வீட்டுச் சுவற்றில் மாட்ட வேண்டும். அப்பா வீட்டில் காலெடுத்து வைக்கும்போது தனது கம்பீர ரவிவர்மா முகத்தில் முழித்து என்ன செய்கிறார் பார்ப்போம்.

“ஏ புள்ளோ, நில்லும்மோ.” மருத்துவமனைக்கு எதிரே இருந்து யாரோ அழைத்தார்கள். திரும்பிப் பார்த்தேன். தம்புரான் முதலாளி. அப்பாவைப் பார்க்க வந்திருப்பார். அவரே என்னை நோக்கி வந்தார்.

“அப்பாவ இப்பத்தான் பாத்தேம்மோ. மனசே கேக்கல பாத்துக்க. டாக்டருவ ஒரு வாரத்துல கூட்டிட்டு போக சொன்னாவளோ?”

“ஆமா சார்.” என்னை எதற்காக நிறுத்தியிருப்பார்?

“சாரா? மாமான்னு சொல்லும்மோ. ஒங்கம்மையும் நானும் அண்ணன் தங்கச்சி மாறில்லா? செரி, புள்ள ஒன்னயும் நெனச்சி கவலபடப்புடாது பாத்துக்க, மாமா இருக்கேன். என்ன வேணும்னாலும் கம்பெனிக்கி வா, என்ன புள்ளோ?” என்று சொல்லியவாறு ஒரு நூறு ரூபாய் நோட்டை எடுத்து என் கையில் திணித்தார். வேண்டாமென தலையாட்டி அவரிடம் திருப்பிக் கொடுக்க கை நீட்டினேன். அவர் என் கையை விலக்கி விட்டவாறு, “அப்பாக்கு பழம் கிளம் வாங்கு புள்ளோ.” என்று சொல்லிவிட்டு திரும்பி நடந்தார். நான் அவரையே பார்த்துக்கொண்டு நிற்க, ஒரு நொடி நின்று திரும்பியவர், “ஒங்கப்பனுக்க ஆர்ட்ட மாறி ஒரு பய செய்ய முடியாது, பாத்துக்க.” என்றார்.

*

அங்குமிங்கும் கடன் வாங்கி பணம் கட்டிவிட்டு, பதினான்கு நாள் மருந்து வீச்சத்திலிருந்து விடைபெற்று, மருத்துவமனையிலிருந்து அப்பாவை அழைத்துக்கொண்டு ஆட்டோவில் கிளம்பினேன். அம்மாவின் மௌனமும் கண்ணீரும் அவளை விட்டுப் பிரிவதாயில்லை. அப்பா என் கையை இறுக்கிப் பிடித்தவாறு வெளியே பார்த்துக் கொண்டிருந்தார். நான் அவரது முகத்தைப் பார்ப்பதை வேண்டுமென்றே தவிர்த்தேன். அந்த ஓவியத்தில் இருக்கும் கம்பீரமான முகமே எனக்குப் போதும்.

“எப்பா, ஒங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் வச்சிருக்கனே!” அப்பா கவனித்த மாதிரி தெரியவில்லை.

“எப்பா, எப்பா. உங்கள்ட்ட தா சொன்னேன்..”

கஷ்டப்பட்டு முகத்தை என் பக்கமாகத் திருப்பி கண்களால் என்ன என்று கேட்டார். நான் அவரது கண்களைத் தவிர்த்தவாறு, “ஒங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் வச்சிருக்கேன்னு சொன்னேன்.” என்றேன்.

அப்பா தலையை ஆட்டிவிட்டு மீண்டும் திரும்பினார்.

ஆட்டோவிலிருந்து இறங்கி அவர்களுக்கு முன்பாக நான் ஓடினேன். கதவைத் திறந்து உள்ளே ஓடி எதிர் சுவரில் மாட்டியிருந்த திரைச்சீலையைப் பிடித்துக்கொண்டு நின்றேன். அக்கா அப்பாவை கைத்தாங்கலாகப் பிடித்திருக்க, அம்மா வீட்டிற்குள் வந்தவாறு, “கிறிக்கி, அப்பாக்கு ஆரத்தி எடுக்காண்டாமா? ஓம்பாட்டுக்கு ஓடுக, அங்கன என்னத்தப் புடிச்சிட்டு நிக்கட்டி எரும?” என்று கத்தினாள்.

ஆரத்தி எடுத்து அப்பாவிற்குப் பொட்டு வைத்து இருவரும் பிடித்துக்கொள்ள அப்பா மெல்ல காலடி எடுத்து வைத்தார்.

“எப்பா, நில்லுங்க. கண்ண மூடிட்டு உள்ள வாங்க. ப்ளீஸ்ப்பா, ப்ளீஸ்ப்பா.” என்று அப்பாவைப் பார்த்து கத்தினேன் நான். அவரது முகத்தில் எந்த உணர்ச்சியும் தெரியவில்லை. வாசல்படி தாண்டி அப்பா உள்ளே காலடி எடுத்து வைத்தபோது திரைச்சீலையை இழுத்தேன். அதி கம்பீரமாக அப்பாவாகிய ராஜா ரவிவர்மனின் உருவம் எழுந்து நிற்க, அக்கா ஆச்சரியமாகப் பார்க்க, அம்மா விசித்திரமாக என்னையும் அந்த ஓவியத்தையும் பார்த்து முழிக்க, ஒருநொடி தன் ஓவியத்தைப் பார்த்த அப்பா முகத்தைத் திருப்பிக் கொண்டு முனகியவாறு அடுத்த அடியை எடுத்து வைத்தார்.

“ஒனக்கு வேற சோலி இல்லயாட்டி? வந்து அப்பாக்கு ஒரு தலவாணி எடுத்து வையி.” என்று முறைத்தாள் அம்மா. அப்பா ஒரு நாற்காலியில் முனகிக்கொண்டே உட்கார்ந்தார். என்னவென்று புரியாத ஒரு மொழி, இனி இதுதான் அவரது மொழியாகிப் போகுமோ? அவரது தலை தொங்கிக் கொண்டிருந்தது. அக்காவும் அம்மாவும் கேட்கும் எதற்கும் பதில் சொல்லாமல் தரையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். அம்மா சத்துமாவுக் கஞ்சி வைத்து எடுத்து வந்து அப்பாவிற்கு ஒரு கரண்டியில் ஊட்டினாள். பாதி உள்செல்ல பாதி வெளியே வழிய, அப்பா அங்கே இல்லாததைப் போல வேறு எங்கோ இருந்தார். கை, கால், உடல், தரையெங்கும் கஞ்சி சிந்தி வழிய எனக்குள் இருந்த சிறு நம்பிக்கையும் கொஞ்சம் கொஞ்சமாக வழிந்து சென்றது. நான் அவரது அருகே சென்று என்னவெல்லாமோ பேசிப்பார்த்தேன். சிறு அசைவு கூட இல்லை.

  • அப்பாவின் ஓவிய அறையில் இருந்த எல்லா பொருட்களையும் ஓர் ஓரமாக ஒதுக்கி வைத்துவிட்டு அவருக்காக கட்டிலைப் போட்டு சன்னலைத் திறந்து திரைச்சீலையை இழுத்து விட்டேன். அப்பாவை கைத்தாங்கலாக அழைத்து வந்து கட்டிலில் உட்கார வைத்தேன். அப்பா என் கையைத் தட்டிவிட்டுக் கொண்டேயிருந்ததைப் போல தோன்றியது.

“சமுக்காளம் வேணுமாப்பா? குளுருகா?”

“கொஞ்சம் கடுங்காப்பி போடவாப்பா?”

“கைகால் வலிக்காப்பா? அமுக்கி விடட்டா?”

கேட்ட எதற்கும் பதில் சொல்லாமல் எடுத்துவிட்ட என் கைகளை இன்னும் தட்டிவிட்டுக் கொண்டிருந்தார் அப்பா.

பழைய விசயம் எதையாவது ஞாபகப்படுத்தலாமென, “எப்பா? எப்பிடிப்பா எடது கைலயே வரஞ்சியோ? என்னால நம்பவே முடில.” என்றேன்.

அப்பாவின் கை நடுக்கம் ஒரு நொடி நின்றது. மெல்லத் திரும்பி என்னைப் பார்த்தவர் அறையைச் சுற்றிலும் எதையோ தேடுவதைப் போல பார்த்தார். அப்பாவின் நடுங்கும் முகத்திலிருந்து ஒரு சொல்லாவது வந்து விடாதா என காத்து நின்றேன். மீண்டும் சிலமுறை சுற்றிலும் பார்த்தவர் மூலையில் ஒதுக்கி வைத்திருந்த அவரது ஓவியப் பொருட்களை கூர்ந்து பார்த்தார். சில கணங்கள் அதை வெறித்துப் பார்த்தவர் முகம் சிறுத்துப் போக, நடுங்கியவாறு எழுந்து கொள்ள முயற்சித்தார். நான் ஓடிப்போய் அவரது கையைப் பிடித்து தூக்க, வெடுக்கென என்னைத் தள்ளிவிட்டு, கட்டிலில் விழுந்தார்.
பதறிப்போய், “எப்பா, எப்பா, ஏம்ப்பா எம்மேல கோவப்படுகியோ? நா என்னப்பா செஞ்சேன்?” என்று கேட்டேன்.

அப்பா தெளிவில்லாமல் ஏதோ சொன்னார்.

“எப்பா, என்னப்பா? மனசிலாகலப்பா.” என்று அவரது முகத்தின் அருகே சென்றேன். அப்படியொரு வெறுப்பு! கண் சிவக்கும் அளவு கோபம். ஒரு நொடி பயந்தே விட்டேன்.
உறுமும் குரலில் தெளிவற்று துண்டுத்துண்டாய், “கைகாலு தான வெளங்காமப் போச்சு. சொரண கெட்டுப் போச்சுன்னு நெனச்சியோ? ஒங்கப்பன் இன்னும் பொணமா ஆகல்ல கேட்டியா?” என்றார் அப்பா.
“எப்பா, ஏம்ப்பா இப்பிடிப் பேசுகியோ?” என்றவாறு அழுது நின்றேன் நான்.

“வெளிய போட்டி, பிச்சக்காரக்கூ……”

அப்பா அதுவரை என்னை ஒரு வார்த்தை கூட திட்டியதில்லை. வெப்ராளம் தாங்காமல் நான் திரும்பி வெளியே செல்ல, அப்பா எழுந்து கெட்ட வார்த்தைகளாகக் கத்திக்கொண்டு சுவரைப் பிடித்து நடந்து விழுந்து எழுந்து மெல்ல வெளியே வந்தார். ஏதோ முனகியவாறு ரவிவர்மன் ஓவியத்தின் அருகே வந்து சில நொடிகள் நின்றார். அந்த முகத்தைப் பார்க்க விரும்பாதது போல தலையைத் தொங்கப் போட்டு நின்றவர், அதன் கீழே மேசையின் மீதிருந்த நடராஜர் சிலையை எடுத்து தன் உடலோடு ஒட்டிப் பிடித்துக்கொண்டு தன் அறைக்குள் சென்றார். திருவிதாங்கூர் இராஜா என் தாத்தாவின் கலைக்குப் பரிசாகக் கொடுத்த அரச மரியாதைச் சின்னம் அது.
அம்மாவும் அக்காவும் சிலையாக நின்றனர். என்னைப் பார்த்து என்னவென்று சைகையில் கேட்டனர். நான் ஒன்றும் பேசாமல் அப்பாவின் அறைக்கதவருகே சென்று நின்றேன். உள்ளே, பொருட்கள் ஒவ்வொன்றாக கீழே விழும் சத்தம் கேட்டது. அப்பா கத்துவதும் மூச்சிரைப்பதும் என் காதுகளுக்குள் விழுந்து என்னை பயமுறுத்தியது.
*
அப்பா அந்த அறையை விட்டு வெளியே வருவதேயில்லை. அடிக்கடி உள்ளிருந்து கெட்ட கெட்ட வார்த்தைகள் கேட்கும். பொருட்கள் விழும் சத்தமும், அப்பா வலியில் முனகும் சத்தமும் சேர்ந்து எங்களை எப்போதும் ஒரு பதைபதைப்பிலேயே இருக்கச் செய்தது. சாப்பாடு கொண்டு போகும்போது அம்மாவும் அக்காவும் பயந்து பயந்துதான் சென்றார்கள். சாப்பாட்டின் அளவும் குறைந்து கொண்டே போனது. தனது அறையை சுத்தம் செய்யவோ, பொருட்களை தொடவோ கூட அவர் அனுமதிக்கவில்லை. உறுமிக் கத்தி வெளியே தள்ளிவிடுவார். நான் சென்று மருந்து கொடுக்கும்போது மட்டும் அமைதியாக உட்கார்ந்திருப்பார்.
அப்பா உறங்கும் சமயத்தில் நான் உள்ளே சென்று அவரது ஓவியப் பலகையைப் பொருத்தி மூங்கில் தட்டி ஓவியங்களை வரைய ஆரம்பித்தேன். எவ்வளவு முயன்றாலும் என்னால் அந்த அறையில் இருந்து கவனம் குவித்து வரைய முடியவேயில்லை. நான் ஒரு திசையில் கோடிழுத்தால் அது இன்னொரு புறம் இழுத்துக்கொண்டு சென்றது. வண்ணங்கள் நான் நினைப்பதைப் போலன்றி எப்படியெப்படியோ வந்து தாமாகவே நிறைந்தன. கடைசியில், நான் நினைத்ததன்றி வேறேதோ ஒன்று அந்த தட்டியில் உருவாகி நின்று என்னைப் பார்த்து வேடிக்கையாய்ச் சிரிப்பதைப் போலத் தோன்றும். முதலில் நான் இதை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து முயற்சி செய்தேன். போகப்போக, எனக்குள் ஒருவித பயம் தொற்றிக்கொண்டது.
ஒருநாள், நான் மும்முரமாக வரைந்து கொண்டிருந்த போது திடீரென யாரோ என்னைப் பிடித்துத் தள்ளிவிட அலறிக்கொண்டு கீழே விழுந்துவிட்டேன். அந்த மூங்கில் தட்டியும் ஓவியப் பலகையும் என்னைத் தொடர்ந்து முன்சரிந்து என்மீது விழ பயத்தில் நான் மயங்கி விட்டேன்.
கண்விழித்த போது, அம்மா என் கை காலில் எண்ணெய் போட்டு நீவிவிட்டுக் கொண்டிருந்தாள்.

“இனி நீ அங்க போவாத மக்ளே. என்னத்தச் சொல்ல? இந்த மனுசனுக்கு இப்பிடி ஆகும்னு யாரு நெனச்சா? யாராம் செய்வின வச்சிட்டாளோ என்னமோ? ஒம் மூஞ்சியயாது பாக்கா, அக்கா மூஞ்சியயும் எம் மூஞ்சியயும் திரும்பிக்கூட பாக்கதில்ல. எங்க மேல அப்பிடி என்ன கோவமோ? இன்னும் எத்தன நாளைக்கி இந்த ஒயர்கூட பின்னி சாப்பிட முடியும் மக்ளே? தம்புராண்ணன் ஒன்ன வந்து பாக்கச் சொன்னாரு, நீ ஒன்னு போயி அவர பாரு மக்ளே. எதாம் நல்ல காலம் பொறக்கான்னு பாப்பம்.” என்று முடித்தாள் அம்மா.

*

“இது யாரு வந்துருக்கா? ஆர்டிஸ்ட்டுல்லா? வா புள்ளோ, வா, வந்து இரி.” கம்பெனிக்குள் நுழைந்தபோது எழுந்து வந்து வரவேற்றார் தம்புரான் மொதலாளி.

சுற்றிலும் பல பெண்களும் சிறுமிகளும் பலவிதமான கைவினைப் பொருட்களை செய்து கொண்டிருந்தனர். பனை நாரில் பொம்மைகள், பர்சுகள், பைகள், தேங்காய் சிரட்டையில் ஓவியங்கள், சிறுசிறு பொம்மைகள், கடவுள் வடிவங்கள் இன்னும் பல. தூரத்தில் மூங்கில் தட்டி தைக்கும் பணியும் நடந்தது. ஒருவர் அந்த தட்டியை குறிப்பிட்ட அளவுகளில் வெட்டிப்போட, இன்னொருவர் அதை எடுத்து ஒரு இயந்திரத்தின் உள்ளே ஒவ்வொன்றாக அனுப்பினார். இயந்திரத்தின் மறுபக்கம் நின்றவர் தட்டியை எடுத்து பரிசோதித்து சுற்றி வரும் ஒரு ரப்பர் பட்டையில் தொங்கும் கொக்கிகளில் மாட்டினார். அது சுற்றி இன்னொரு அறைக்குள் சென்றது. எல்லா தட்டிகளிலும் மகாலட்சுமி கையிலிருந்து தங்க நாணயங்களாக கொட்டிக் கொண்டிருந்தன.
“என்ன புள்ளோ பாக்கா? ஓ, அப்பாக்க தொழில்லா? இப்ப எல்லாம் அச்சுல தாம் புள்ளோ, என்னல்லாமோ வந்துட்டு பாத்துக்க, கொஞ்சம் மகாலட்சுமி போடுவோம், பொறவு கைல வெளக்க புடிச்ச ஒரு பொண்ணு உண்டும்லா, கண்டிருக்கியா? அத போடுவோம், பின்ன, கொஞ்சம் யான படமும் போவும் பாத்துக்க. ஆனா, எல்லாம் இப்போ எக்ஸ்போர்ட்டுதான் பாத்துக்க, நம்மூர்ல எவன் வந்து வாங்குகான்? முன்னாடி மாதி வரையதுக்கும் ஆளுவ கெடயாது, என்னத்தச் சொல்ல? மூங்கில்ல பிரியாணில்லா செய்யானுவ இப்ப? ஒங்கப்பன் மாக்கு மாக்குன்னு வரஞ்சும் என்னத்துக்கு? நூறு ருவாய்க்கு தரியான்னு கேப்பானுவ. பாப்பம், எத்தன நாளக்கின்னு. பின்ன, நமக்கும் வேற வழி இல்லல்லா? வயித்துப் பொழப்ப பாக்கணும்லா புள்ளோ?”
எல்லாம் கேட்டு நான் அமைதியாக நின்றேன்.

“நா ஒருத்தன், என்னல்லாமோ சொல்லிட்டுக் கெடக்கேன். நீ இரி, ஒரு மேட்டரு பேசணும் ஒனட்ட.” என்றார்.

“பரவால்ல சார், சொல்லுங்க.”

“எப்பிடி வளத்து வச்சிருக்கான் பாத்தீரா ஓய்? மரியாதயான புள்ளயோ ரெண்டும், என்னா?” என்று பக்கத்தில் நின்ற இன்னொருவரிடம் சொன்னார் முதலாளி.

“அப்பா நெலம ரொம்ப மோசமாருக்குன்னு சொன்னாவ, இப்ப எப்பிடிம்மா இருக்காவ?”

“அப்பா அவ்வோ ரூம வுட்டு வரவே மாட்டுக்கா சார். சாப்பாடு, மருந்து கொண்டு கொடுப்போம். யார்ட்டயும் பேச்சும் கெடயாது.”

“அவனுக்குள்ள என்ன ஓடுகோ என்னமோ? கடவுளுக்குத் தான் வெளிச்சம். சரி, விடு.. சித்தப்பா, பெரியப்பா எவனாம் வந்து எதாம் செஞ்சானுவளா?”

நான் தலையாட்ட, “எல்லாவனையும் கொண்டு வெறும் வாய்ச்சவடாலுக்கு தான் கொள்ளும். மாமா ஒரு யோசன சொல்லுகேன், ஒனக்கு புடிச்சா செய்யி, என்ன புள்ளோ?” என்றவாறு தன் மேசை இழுப்பறையைத் திறந்து எதையோ வெளியே எடுத்தார்.
ஒரு நீலநிறத் துணிப்பை, நகைகள் வைக்கும் பை போன்றிருந்தது. அதன் சுருக்கை இழுத்து உள்ளிருந்ததை தன் மேசையின் மீது கொட்டினார். சிறுசிறு கண்ணாடி உருளைகள். அதில் ஒன்றை எடுத்து என்முன் நீட்டினார்.

“இத எடுத்துப் பாரு புள்ளோ. அந்தா, அங்கன போயி வெளிச்சத்துல பாரு.”

நான் அதை வாங்கி வெளிச்சத்தில் வைத்துப் பார்த்தேன். அந்த சின்னஞ்சிறு கண்ணாடி உருளைக்குள் ஒரு சிறு நகத்துண்டு அளவிற்கு ஓர் உருவம். கூர்ந்து பார்த்த போது பிரமித்துப் போனேன். அவ்வளவு அழகான ஒரு விநாயகர் சிலை. முகம் மலர அதைச் சுற்றிச்சுற்றி பார்த்தேன். எப்படி இதை செய்திருப்பார்கள்?
“கொள்ளாம்லா? இதாக்கும் இப்ப லேட்டஸ்ட்டு. ஒரு பீஸ் நூத்தம்பது ரூவா, சபரிமல சாமிமாரு, ஆந்த்ராகாரனுவன்னா ஒரு முன்னூறு ரூவா தருவானுவ.”

“இது என்ன மெட்டீரியல் சார்? இத.. இத எப்பிடி செய்வாங்க?”

“நீயே சொல்லு பாப்பம்..”

நான் மீண்டும் அதை சுற்றிச் சுற்றி பார்த்தேன். என்னவென்று புரியவில்லை.

“இதுக்க பேரு ரைஸ் ஆர்ட்டும்மோ. வெறும் அரிசி தான் பாத்துக்க. என்னெல்லாம் கண்டுபுடிக்கானுவோ!”

எனக்கு பயங்கர ஆச்சரியமாக இருந்தது. மறுபடியும் அதை ஒருமுறை பார்க்கும்போது தான் அந்த விநாயகர் ஒரு அரிசியாகத் தெரிந்தார்.

“செரி, மேட்டர சொல்லுகேன். நமக்குத் தெரிஞ்ச ஒரு ஆளு இந்தத் தொழில படிச்சிருக்காரு. நீ வந்தேன்னா, ஒனக்கு சொல்லிக் குடுக்க ஏற்பாடு செய்யேன். நீ படிச்சுட்டு இங்கன உள்ளவமாருக்கு சொல்லிக் குடு. நமக்கு வியாவாரமும் நடக்கும், ஒனக்கும் ஒங்குடும்பத்துக்கு ஏதாஞ் செஞ்ச மாறியும் இருக்கும். மாச சம்பளமா போட்டுத் தருவேன், என்ன புள்ளோ?”
அந்த விநாயகர் உருவம் என் கண்ணை விட்டு அகலாமல் நின்றது. சட்டென, அப்பா மூங்கில் தட்டியில் வரையும் பகவதியம்மனும் அவளது மூக்குத்தியும் அந்த கணம் நினைவிற்கு வந்தது. முதலாளியின் யோசனையும் சரியாகப்பட்டது.
“நா அம்மைட்ட பேசிட்டு வந்து சொல்லுகேன் சார். பாக்க ரொம்ப அழகாருக்கு.”

“செரிம்மோ, போய்ட்டு வா.” என்றவரிடம் அந்த கண்ணாடி உருளையை நீட்டினேன்.

“அது ஒனக்கு. வச்சிக்க புள்ளோ.”

*

வீட்டில் நுழைந்தபோது அம்மாவும் அக்காவும் ஏதோ இரகசியமாக பேசிக் கொண்டிருந்தார்கள். என்னைப் பார்த்ததும் பேச்சை மாற்றியதைப் போலிருந்தது.

“என்னாச்சி மக்ளே, தம்புராண்ணன் என்ன சொன்னாரு?”

நான் பதில் பேசாமல் நேராக அப்பாவின் அறைக்குள் சென்றேன். சற்று நேரத்திற்குப் பின் வெளியே வந்து அப்பாவின் ராஜா ரவிவர்மா ஓவியத்தை பார்த்தபடி அம்மாவிடம் சென்றேன்.

“ஓ, ஒங்கப்பாட்ட தான் மொதல்ல சொல்லுவியோ? பெரிய இவ? என்ன வெசயம்னு சொல்லுட்டி ஊமக்குசும்பி.” என்று கேட்டாள் அம்மா.

“மொதல்ல நீங்க ரெண்டுவேரும் என்ன ரகசியம் பேசிட்ருந்தீங்கோன்னு சொல்லுங்கோ, பொறவு நாஞ் சொல்லுகேன்.” என்றேன்.

இருவரும் மாறிமாறிப் பார்த்தவாறு கண்ணைக் காட்டி என்னை அடுக்களைக்குள் அழைத்துச் சென்றார்கள்.

“எம்மா, என்ன, சொல்லு?”

“எட்டி, இப்பிடியே எத்தன நாளக்கி ஓடும்னு தெரில பாத்துக்கோ, எதாம் கொஞ்சம் பைசா கெடச்சா பேங்க்குலயாது போட்டு வைக்கலாம். சாப்பாட்டுக்கு நானும் ஒங்கக்காவும் எதாம் பாத்துருவம். பின்ன, இன்னும் காரியங்கோ உண்டுல்லா, மக்ளே.”

“என்ன காரியம்? சுத்தி வளைக்காம சொல்லும்மா.”

“அது, ஒங்கக்காவுக்கு எதாம் எடம் பாக்காண்டாமா மக்ளே? அப்பா இப்பிடி ஆயிட்டாளேன்னு எத்தன நாளக்கி அழுத்துட்டே இருக்கச் சொல்லுக? பின்ன, அவ்வொளுக்கு நம்ம மூஞ்சியப் பாக்கக் கூட புடிக்கல்ல..” என்றவாறு அழ ஆரம்பித்தாள் அம்மா.

“எம்மா, எம்மா, அழாத.. அப்பாக்குக் கேட்டுறாம. அழாதம்மா.”

“மக்ளே, நம்ம தம்புரான் கம்பெனில லோடு ஆட்டோ ஒட்டுகாம்லா சொயம்பு? செல சமயம் நம்ம வீட்ல வந்து கூடையெல்லாம் எடுத்துட்டுப் போவாம்லா?”

“ஆமா, அவனுக்கு என்ன இப்போ?”

“அவனுக்கு ஒங்கக்கா மேல இஷ்டமாம். கெட்டி வைங்கன்னு தம்புராண்ணன்ட்ட சொன்னானாம். அவரும் நல்லது தானன்னு எனட்ட சொன்னாரு.”

நான் அக்காவைப் பார்க்க, அவள் முகத்தைக் கீழே கொண்டு போனாள். வெட்கமாக இருக்கும்.

“எம்மா, என்ன பேசுக நீ? அவன் நல்ல ஆளுதான், செரி. ஆனா, அப்பாட்ட ஏதும் கேக்காம என்ட்ட சொல்லுக, நா என்ன செய்ய?”

“எட்டி, சொல்லதக் கேளு மொதல்ல, இப்ப கொஞ்சம் பைசாக்கு வழி பண்ணணும் பாத்துக்கோ. அக்காக்கு கல்யாணம் பண்ணி வைப்போம், கடவுள் புண்ணியத்துல அவ நல்லாருக்கட்டும் மக்ளே. பொறவு நமக்கு தான, எதாஞ் செய்யலாம்.”

“செரி, அப்பாட்ட நாம் பேசுகேன். ஆமா, பைசாக்கு என்ன செய்யப்போற?”

“நக நட்டுன்னு இப்ப ஒன்னும் போடாண்டாம் மக்ளே. ஒரு பத்தாயிரம் ரூவாயாது அவங் கைல கொடுக்காண்டாமா சொல்லு..”

நான் தலையாட்டி நின்றேன். அம்மா என் அருகே நெருக்கமாக வந்து, “மக்ளே, அப்பா நெறைய படம் வரஞ்சி விக்காம வச்சிருக்கால்லா? அதெல்லாம் வித்தா கொஞ்சம் பைசாவாது கெடைக்கும்லாட்டி?” என்று கேட்டாள்.
எனக்கு எல்லாம் புரிந்தது. அப்பாவின் ஓவியங்கள் எல்லாம் விற்பனைக்கு அல்ல, குருவாயூர் கேசவனையும் மூக்குத்தியுடன் சிங்கத்தின் மேலிருக்கும் பகவதியம்மையையும் வரைந்தால் அப்படியே தனது அலமாரியில் அடுக்கி வைத்து விடுவார். அந்த நாட்களில் அப்பா சந்தோசத்தில் மிதப்பார். எங்களை கடற்கரைக்கு அழைத்துச் சென்று கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுப்பார். அந்த ஓவியங்களை என்னை மட்டுமே தொட அனுமதிப்பார்.

“மக்ளே, செல வெசயங்க நம்ம கைல இல்ல பாத்துக்கோ, அது தானா நடக்கும். அத அப்படியே விட்டுறணும். அது அப்படி இருந்தாதான் அழகு, அப்படிதான் நெலைக்கும் பாத்துக்கோ. இந்த கேசவன பாரு, அவன் கண்ணுல தெரிய கருணைய நா வரஞ்சிற முடியுமா? இல்ல, எவனாம் வரஞ்சிற முடியுமா சொல்லு. அவன் போய்ட்டாலும் நம்ம மேட்டுல ஒவ்வொரு தடவயும் உயிரோட எந்திச்சி வாராம்லா? அது நம்ம கைல இல்ல பாத்துக்கோ. பின்ன, நம்ம பௌதியம்மய வரையதெல்லாம் ஒரு கனவாக்கும். எப்படி தொடங்கும், எங்க போயி முடியும்ன்னு சொல்லிற முடியாதுல்லா? அது, கோயில்ல பிரதிஷ்டை செய்ய மாதிதான் பாத்துக்கோ.” இதைச் சொல்வது அவரே இல்லையோ எனக்கூட சிலசமயம் எனக்குத் தோன்றும்.
அம்மா என் கையைப் பிடித்து, “மக்ளே, நீதான் அப்பாட்ட போயி கேக்கணும். என்னால முடியாது, கொன்னே போடுவா பாத்துக்கோ.” என்றாள். என்னால் ஒருபோதும் அதைச் செய்ய முடியாது. முடிந்தாலும் நிச்சயமாக நான் செய்ய மாட்டேன்.

*

அன்றிரவு குருவாயூர் கேசவனும் பகவதி அம்மனும் என்னை உறங்க விடாமல் அலைகழிக்க, பித்து பிடித்ததைப் போல எழுந்து மெல்ல அப்பாவின் அறைக்கதவின் பக்கம் சென்று சத்தமின்றி நின்றேன். எதற்கு சென்றேன், என்ன நினைத்தேன் என எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. சற்று நேரம் நின்றுவிட்டு திரும்பிய போது உள்ளே ஏதோ சத்தம் கேட்டது. மீண்டும் அருகே சென்று கூர்ந்து கேட்டேன். அப்பா ஏதேதோ முனகிக் கொண்டிருந்தார். தொடர்ந்து ஏதேதோ சத்தங்கள்.
நான் பயத்தில், “எப்பா, எப்பா? எதாம் வேணுமாப்பா?” என்று கத்தினேன்.

எந்த பதிலும் எனக்கானதாக இல்லை. தொடர்ந்த சத்தங்கள், முனகலோடு ஏதோ கரியும் வாடையும் சேர்ந்து வந்தது.

“எம்மா, எம்மா, எந்திரிம்மா, அப்பா ரூம்ல ஏதோ கரிஞ்ச வாட அடிக்கிம்மா.” அம்மா பதறியவாறு எழுந்து வந்தாள். அக்கா உறக்கக் கலக்கத்தில் சலித்துக் கொண்டு நின்றாள்.

வாடையைத் தொடர்ந்து கதவிடுக்கின் வழியாக புகை கசிவதைப் பார்த்ததும் நான் அலறிவிட்டேன். ஓடிச்சென்று புழக்களையில் கிடந்த மூங்கில் வெட்டும் அரத்தை எடுத்து வந்தேன். புகை மேலும் அதிகமாகியிருந்தது.

“எம்மா, இதப்புடி.” அரத்தை கதவிடுக்கில் வைத்து கொண்டியின் மீது முன்னும் பின்னுமாக இழுத்தேன். அம்மா தொடர்ந்து கத்திக்கொண்டே கதவைத் தட்டினாள். கதவின் நான்கு பக்க இடுக்குகளிலுமிருந்து புகை பெருகி வந்தது. மண்ணெண்ணெய் வீச்சம். திடீரென ஏதோ ஒன்று படாரென கீழே விழுந்த சத்தம் கேட்டது.
“எப்பா, எப்பா, கதவத் தொறங்கப்பா.” என்று கத்தியவாறு மேலும் வேகமாக அறுத்தேன். சத்தம் கேட்டு பக்கத்து வீட்டிலிருந்து சிலர் ஓடி வந்தனர்.

“தள்ளும்மோ, பிள்ள தள்ளு.” என்று சொல்லிய ஓர் அண்ணன் கதவை ஓங்கி உதைத்தார். இரண்டு மூன்று முறை உதைத்ததும் கதவு பிளந்துகொண்டு ஒரு புறமாகத் திறந்தது.

அறை முழுதும் கரிய புகை. அப்பாவின் அலமாரி கீழே சரிந்து கிடந்து எரிந்து கொண்டிருந்தது.

“எப்பா, எப்பா..” என்று அப்பாவைத் தேடினேன். புகை மூட்டத்திற்கிடையே கட்டிலின் அருகே தன் நாற்காலியில் உட்கார்ந்து சன்னலை நோக்கி மெல்ல ஆடிக்கொண்டு இடது கையிலிருந்த தனது ஓவிய தூரிகையால் காற்றில் வரைந்து கொண்டிருந்தார். அவரது காலடியில் நான் வைத்துவிட்டு வந்திருந்த அந்த கண்ணாடி உருளை அப்போதும் அவரது காலடியிலேயே கிடந்தது.

***

சுஷில் குமார்

30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் வெளியாகியுள்ள நிலையில், இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு மூங்கில் யாவரும் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வெளி வந்திருக்கிறது. sushilkumarbharathi2020@gmail.com

ஓவியம் – Katsushika Hokusai

RELATED ARTICLES

1 COMMENT

  1. சுசில்குமார் மிக அழகாக எழுதியிருக்கிறார். நிச்சயம் படிக்க வேண்டிய ஒரு கதை. அந்த ராஜா ரவிவர்மனின் ஓவியத்தை அப்பா காணும்போதே ஒரு முடிவை எதிர் நோக்கினேன். ஆனால் நம்முடைய எதிர்பார்ப்பை கடந்து சுசில் வேறு ஒரு முடிவை அமைத்து திகைக்க வைத்து இருக்கிறார்.

    நண்பர்கள் நிச்சயம் படிக்க வேண்டிய கதை.

    சுஷில் குமாருக்கு எனது நல்வாழ்த்துக்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular