Tuesday, July 16, 2024
Homeஇதழ்கள்2021 இதழ்கள்முன்னை இட்ட தீ…

முன்னை இட்ட தீ…

இளங்கோவன் முத்தையா

மெல்லிய குளிர் காற்று உடலைத் தழுவியது. கைகளை இறுகக்கட்டி, கால்களை மடித்து சுருண்டுகொள்ளத் தோன்றினாலும் உடலை அசைக்க முடியவில்லை. எங்கோ தூரத்திலிருந்து மெலிதான பாட்டு சத்தமும், இஞ்சின் சத்தமும் கேட்டது. காட்சி தெளிவானபோது ஓடிக்கொண்டிருக்கும் காரிலிருந்தேன். பின்மதிய நேரம்போல பொன்னிற எதிர்வெயில் காரின் முகப்புக் கண்ணாடி வழியாக நேரடியாக முகத்தில் அறைந்து கண்களைக் கூசச்செய்தது. ஆனாலும் ஒருவகையான காலக் குழப்பமிருந்தது. கார் மிகப்பெரியதாக ஒரு அறை அளவுக்கு இருந்தது. விரல்களை நீட்டி மடக்க முயற்சித்தேன்… அவை அசைவற்றிருந்தன.

காரை ஓட்டிக்கொண்டிருந்தது பாபு. அவனைப் பார்த்ததும் லேசான அதிர்ச்சியும் எரிச்சலுமடைந்தேன். ஆனால் என்னைப் பார்த்துச் சிரித்தான் அவன். எங்கு இருக்கிறோம் என்று சுற்றும் முற்றும் பார்த்தேன். வலதுபுற மலையில் மகேந்திரகிரி இஸ்ரோ சின்னச்சின்ன, அடுக்கடுக்கான கட்டிடங்களாக தெரிந்தது. “பெங்களூர் போகும் வழியில் ஹொசூரில் எங்கே மகேந்திரகிரி வந்தது?” என்று யோசிப்பதற்குள் “இது திருவனந்தபுரம் நோக்கிய பயணமல்லவா?” என்றும் தோன்றியது.

“ஒவ்வொரு முறை நாகர்கோவிலுக்கு வரும்போதும் எவ்வளவுதான் தூங்கினாலும் சரியாகக் காவல் கிணறு தாண்டும் இடத்தில் முழிப்பு வந்துவிடுகிறது?” என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டேன். “கன்யாகுமரி டிஸ்ட்ரிக்குக்குள்ள நுழைஞ்சவுடனே க்ளைமேட்டே மாறுதுல்ல?” என்றான் பாபு. ஆரல்வாய்மொழி நோக்கி வண்டி போய்க்கொண்டிருக்க, இடதுபுறம் தொடுவானம் வரை விண்ட்-மில் காற்றாடிகள் சுழன்று கொண்டிருந்தன. வலது பக்கத்தில் விருதுநகருக்கும் சாத்தூருக்குமிடையில் இருக்கும் ராம்கோ சிமெண்ட்ஸ் கட்டிடம் பல நூறு விளக்குகளோடு ஒளிர்ந்து கொண்டிருந்தது. “பகலில் எதற்கு இவ்வளவு லைட்?” என்று எரிச்சலாகி பாவுவைத் திரும்பிப் பார்த்தேன். ஏதோ சொல்ல வாயெடுத்தவன் பிறகு ஒன்றும் சொல்லாமல் சிரித்தான்.

நான் திரும்பி சாலையைப் பார்த்தபோது கார் நாகர்கோவில் நகருக்குள் சென்றுகொண்டிருந்தது. எனக்குக் கொஞ்சமும் பழக்கமில்லாத புது ஊரைப் போலத் தோற்றம் காட்டிக்கொண்டிருந்தது நாகர்கோயில். மணிமேடைக்கு இடதுபுறம் கட்டிடங்களுக்குப் பதிலாக ஒரு பெரிய குளமொன்று கண்ணுக்கெட்டிய தூரம்வரை நீர்ததும்பி நின்றது. அதைத் தாண்டியவுடன் வேப்பமூடு ஜங்ஷன் வராமல் நேராக கே.பி ரோட்டிலிருக்கும் சப்-ஜெயில் வந்துவிட்டது. நான் முன்பு வேலை பார்த்த அலுவலகத்தை அதற்கருகே காணவில்லை. அதே இடத்தில் வேறு ஏதோ ஒன்று இயங்கிக் கொண்டிருந்தது. அதற்குப் பக்கத்தில் வீடு முழுக்க பிள்ளையார் சிலையாக வைத்திருந்த, பதினைந்து வருடங்களுக்கு முன்னால் நான் ஒரே ஒருதடவை சந்தித்திருந்த வாடிக்கையாளர் ஒருவர் அவரது வீட்டு வாசலில் பைஜாமா ஜிப்பா அணிந்து என்னைப் பார்த்து சிரித்தபடியே கை காட்டினார். ஏனோ அவரைக் கவனிக்காதது போல நான் என் முகத்தைத் திருப்பிக் கொண்டேன். இடது பக்கம் ராமவர்மபுரத்து வீடுகளின் காம்பவுண்ட் சுவர்களில் மழை செம்மண்ணை அப்பியிருந்தது.

“திருவனந்தபுரத்துக்கு இன்னைக்கு நைட்டுக்குள்ள போயிரலாமா?” என்ற பாபுவின் கேள்விக்கு “ஒன்ரை, ரெண்டு மணி நேரத்துக்குள்ள போயிரலாம்” என்றபடி என் கையிலிருந்த வாட்ச்சைப் பார்த்தேன். அங்கே அது இல்லை. விடுமுறை நாட்களில் வீட்டிலிருக்கும்போது அணியும் டீ ஷர்ட்டும், ட்ராக் சூட்டும் அணிந்திருந்தேன். பாபு வெள்ளை நிற முழுக்கை சட்டை, சாம்பல் நிற பேண்ட், கால்களில் பாலீஷ் செய்யப்பட்ட கறுப்பு நிற ஷூக்கள் எனப் பளிச்சென்று இருந்தான். சொல்லப்போனால் அது எனது பிரத்யேகமான உடைத்தேர்வு. பாபுவின் கைகளிலிருந்த வெள்ளிக்காப்பு கூட நான் அணிந்திருப்பது போலவே இருந்தது. இப்போது காரை ஓட்டிக்கொண்டிருப்பதும் பாபு அல்ல நான்தான் என்று ஒரு கணம் நினைத்தேன்… இல்லை பாபுதான். ஆனால் எனது உடைகளில் பாபு. அதெப்படி என்று யோசித்தேன். ஆனால், அதைக் கேட்பதற்குப் பதிலாக “இன்னைக்கே அவுங்களைப் பார்க்கப்போறோமா?” என்றேன். யாரை, எதற்கு என்று எனக்கே ஒன்றும் புரியவில்லை.

“நாளைக்கு… நீதான் பேசி முடிச்சுக் கொடுக்கணும்” என்றான் பாபு. எதை என்றும் தெரியவில்லை.

“சொல்லியிருந்தா நல்ல ட்ரெஸ் போட்டுட்டு வந்திருப்பேன்ல” என்றேன். “இருப்பதிலேயே மட்டமான உடைகளை நான் அணிந்திருக்கும் நேரம் பார்த்து, என்னை ஏதோ ஒரு முக்கியமான இடத்திற்கு பாபு அழைத்துப் போகிறானோ?” என்று திடீரென ஒரு சந்தேகம் எழுந்தது. அவன் அப்படிச் செய்யக்கூடியவன் தான். இதோ, வழக்கமாக நான் அணிவது போன்ற தேர்ந்த உடைகளையல்லவா அவன் இப்போது அணிந்திருக்கிறான்…

கூரைகளில் பழமையான கேரள ஓடுகள் பதிப்பிக்கப்பட்டு, வெறும் காலை வைக்கும்போது சில்லென்றிருந்த கற்கள் பாவப்பட்ட தரையும், திரும்பிய பக்கமெல்லாம் ஆளுயர யானை பொம்மைகளும், பாரம்பரிய கேரள பாணி பெரிய குத்துவிளக்குகளும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு ஹோட்டல் லாபியில் நானும் பாபுவும் வெளிநாட்டு ஆட்கள் இருவரிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தோம். நான் நினைத்த மாதிரியே பாபுவின் உடைத்தேர்வு அந்தமாதிரியான உயர்தர இடத்துக்கு பொருந்திப் போயிருந்தது. நானோ என்னிடமிருந்ததிலேயே பாடாவதியான சிவப்பு, மஞ்சள் பட்டை அடுத்தடுத்து வரும் டீஷர்ட்டும், சாயம்போன கறுப்பு நிற ட்ராக் சூட்டும் அணிந்திருந்தேன்.

கணுக்காலருகே பேண்ட் லேசாக நூல் பிரிந்து கிழிந்து போயிருந்தது. சாதாரணமாக நான் வீட்டுக்குள் போடும் செருப்பு என் காலில் கிடந்தது. நன்றாக உற்றுப் பார்த்தேன். அது என் மனைவி வீட்டுக்குள் போட்டுக்கொள்ளும் செருப்பு. அவசரத்தில் மாற்றிப் போட்டுக்கொண்டு வந்துவிட்டேனா? இந்த மாதிரி இடத்தில் இப்படிப் பஞ்சப் பரதேசி மாதிரி உடையில் நின்று கொண்டிருக்கிறோமே என்று துணுக்குற்றேன். ஆனால் என்னிடம் பேசிய அந்த வெளிநாட்டுக்காரர் ரொம்பவே மரியாதை கொடுத்துப் பேசினார். ஆனால் எனக்குத் தெரியாத வேறு ஏதோ மொழியில் பேசினார். நானும் அவரது மொழியிலேயே பேசிக்கொண்டிருந்தேன்.

“இல்ல நைட் ஹோட்டல்ல ரூமெடுத்து தங்கிட்டு நாளைக்கு அவுங்களைப் பார்ப்போம். நாளைக்குதான அப்பாயின்மெண்ட்” என்று விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தான் பாபு. மீண்டும் ஓடும் காரிலிருந்தேன். கார் மெதுவாகச் சென்று கொண்டிருந்தது. இடதுபுறம் சுத்தமான தண்ணீரோடும் ஒரு சின்ன, அழகான ஆறு. அதற்கு குறுக்கே புதிதாகக் கட்டப்பட்ட பாலம் ஒன்று நேரே மேலேறிச் சென்று வலது பக்கமாக வளைந்தது முடிவற்று போய்க்கொண்டிருந்தது. பாபுவோடு பயணிப்பது எனக்கு எரிச்சலாக இருந்தது. ஓடும் காரிலிருந்து குதித்து இறங்கிவிடலாம் என்று நினைத்து கதவுகளைத் திறக்க முயன்றேன். இப்போதும் என் கைகளை அசைக்க முடிவில்லை.
அப்போதுதான்… அந்தப் பாலம் ஆரம்பிக்கும் இடத்திற்கு நூறடிக்கும் முன்பாக, ஒரு சின்னக் கடையை ஒட்டி நடந்து வந்துகொண்டிருந்த அவனை நான் பார்த்தேன். முதலில் அது என் மனப்பிரமை என்றுதான் நினைத்தேன். ஆனால் என் கண்ணுக்கு முன்னால் அந்தச் சிற்றாற்றை ஒட்டி, தலையைத் தொங்கப்போட்டபடி மெல்ல நடந்து வந்து கொண்டிருந்தான் அவன். கிட்டத்தட்ட எனது கல்லூரிக்கால பழைய ஃபேஷனில் இருந்த ப்ரவுன் நிற கட்டம் போட்ட லூஸான சட்டையை அணிந்திருந்தான். அந்த சட்டை என்னுடையதுதான். கல்லூரியில் படித்த காலத்தில் நான் போட்டிருந்த சட்டை அது. வயிறு உள்ளடங்கி, கழுத்தெலும்புகள் வெளித்தெரிந்து, அங்கொன்றும், இங்கொன்றுமாய் முடி முளைத்த தாடியுடன், அலைந்து, திரிந்த என் இருபது வயதுகளில் நாங்கள் எல்லோரும் எப்படி இருந்தோமோ அப்படி இருந்தான் அவன். மெதுவாக நகர்ந்து கொண்டிருந்த காரிலிருந்து எதிரில் நடந்து வந்து கொண்டிருந்தவனையே பார்த்துக் கொண்டிருந்தேன். பயத்தில் என் உடல் மெல்ல உதற ஆரம்பித்தது.

“என்ன பைத்தியக்காரத்தனம் இது?” கார் அவனைக் கடக்கும் வரை காத்திருந்தேன். மிக அருகில் அவனது முகம் தெரிந்தது. தனக்குள் பேசுபவன் போல, ஏதோ முனகிக்கொண்டே போனான். அவன் என்னைக் கடந்த நொடிப்பொழுதில் எங்களிருவரது கண்களும் சந்தித்து மீண்டன. அவன் காரைக் கடந்த பிறகு தலையைத் திரும்பி அவனையே பார்த்தபடி “பழைய ஆர்கே” என்று பாபுவிடம் சொன்னேன்.

“பழைய ஆர்கேன்னா?”

“பழைய ஆர்கே, அதாவது காலேஜ் படிச்ச காலத்துல இருந்த ஆர்கே மாதிரியே இப்ப ஒருத்தன் போனான் பார்த்தியா? எங்கிட்ட இருந்த மாதிரியே மாதிரி கட்டம் போட்ட சட்டை போட்டுக்கிட்டு, ஆனா அது ஆர்கேதான், நம்ம காலேஜ் டைம்ல இருந்த ஆர்கே” என்று எனக்கே புரியாத, குழப்பமான ஒரு பதிலைச் சொன்னேன். பாபுவின் முகத்தில் உணர்ச்சிகளே இல்லை. லேசாகப் பயந்தது போலிருந்த அவனது முகத்தைப் பார்த்து நான் எதற்கு அப்படிச் சிரித்தேன் என்று எனக்கே புரியவில்லை. ஆனால் லூசுத்தனமாகச் சிரித்தேன். அதற்குள் கார் சிறிது தூரம் நகர்ந்திருந்தது. பாபு காரை ஓரங்கட்டி நிறுத்திவிட்டு, இறங்கி நின்று எங்களைக் கடந்து போனவனையே பார்த்துக் கொண்டிருந்தான். நான் எனது இருக்கைக்கு இடதுபுறம் இருந்த கண்ணாடி வழியாகப் பின்னால் பார்த்தேன். ஆற்றுக்கு நடுவே மரக்கட்டைகளால் தற்காலிகமாக அமைக்கப்பட்ட சின்னப் பாலம் ஒன்றின் மீது ஏறி அந்த ஆள்… இல்லை… அந்த இளைஞன், இல்லை… அப்படி நடக்க வாய்ப்பே இல்லையென்றாலும் சர்வ நிச்சயமாக அவன் ஆர்கேயேதான், ஆனால் இன்றைய ஆர்கே அல்ல, எங்களது கல்லூரிக்கால ஆர்கே… சாவகாசமாக நடந்து ஆற்றைக் கடந்து கொண்டிருந்தான். சரியாக நடுப்பாலத்தில் சட்டென்று நின்றவன் எங்களைப் பார்த்து “வா” என்பதைப் போலச் சைகை செய்தான்… ஆம் உறுதியாக அப்படித்தான் செய்தான், பிறகு திரும்பவும் பாலத்தில் நடந்து ஆற்றைக் கடந்தான். என் உடம்பு முழுக்கப் புல்லரித்துப் போயிருந்தது.

நான் பாபுவைப் பார்த்தேன். அவன் நெற்றியில் முத்து முத்தாக வியர்த்திருந்தது. வேகமாகக் காருக்குள்ளே வந்து அமர்ந்தவன் “அது ஆர்கே வா இருக்க வாய்ப்பே இல்லை” என்றான்.

“ஏன் இல்ல?” என்றேன்.

“உனக்குத் தெரியாதா?”” என்று சொல்லிவிட்டு என் கண்களையே உற்றுப்பார்த்தான் பாபு. எனக்கு அவன் சொன்னதன் அர்த்தம் புரியாமலில்லை. ஆனால் எங்கள் கண்முன்னால், பதினைந்து வருடங்களுக்கு முன்பிருந்த தோற்றத்தில் ஆர்கே இப்போதுதானே கடந்து போனான்? அதை எப்படி மறுப்பது? தலை வலிப்பது போல இருந்தது. மீண்டும் “சரி, நானும்தான் அவனைப் பார்த்தேன். அது ஆர்கேன்னா அவனுக்கு போன் பண்ணு” என்றான் பாபு. இப்போது அவனது குரலில் ஒருவிதப் பதற்றத்தை உணர்ந்தேன். அந்தப் பதற்றம் என்னிடமிருந்தே அவனுக்குத் தொற்றிக் கொண்டிருக்க வேண்டும்.

எனது மொபைல் போனை எடுத்து ஆர்கே என்று தேடினேன். அப்படி எந்தப் பெயரும் இல்லை. ராதாகிருஷ்ணன் என்று தேடினேன். அந்தப் பெயரிலும் எதுவுமில்லை. எனது போனே பழைய காலத்து பட்டன் போனாக இருந்தது. நான் அதிர்ச்சியில் செய்வதறியாது பாபுவின் பக்கம் திரும்பிப் பார்த்தேன். இப்போதைய புது மாடல் ஸ்மார்ட் போன் ஒன்று அவன் சட்டைப் பாக்கெட்டில் இருந்தது. பாபு வண்டிக்குள் வேகமாக வந்தமர்ந்து கதவைப் படாரென அறைந்து சாத்தினான்.

வண்டியை ஸ்டார்ட் செய்தவுடன் கண்ணாடியை இறக்கி விட்டு “இது எந்த ஊர்?” என்று யாரிடமோ விசாரித்தான் பாபு. “சுசீந்திரம்” என்று அந்த நபர் சொன்னது என் காதில் விழுந்தது. நான் “சுசீந்திரம்தான் எங்க சொந்த ஊரு பாபு” என்றேன்.

“தெரியும்” என்றபடி ஸ்டியரிங் வீலில் கைகளால் அடித்தான் பாபு.
நான் கீழே குனிந்து கிழிந்திருந்த என் ட்ராக் சூட்டை பார்த்தேன். ஆனால் இப்போது போன வாரம் புதிதாக எடுத்த கருநீல பேண்ட் அணிந்திருந்தேன். கால்களில் கறுப்பு நிற ஷூ பளபளவென மின்னியது. இளநீலவண்ண முழுக்கை சட்டை அணிந்து கைகளில் பட்டன் மாட்டியிருந்தேன். நேரம் பார்த்தேன். ஸ்வரோவ்ஸ்கி கற்கள் பதிக்கப்பட்ட கறுப்பு நிற ஸ்வாட்ச் வாட்ச்சில் நேரம் மூன்று மணியைக் காட்டியது.

“வா, அவன் யாருன்னு பார்த்திருவோம்” என்று பாபுவிடம் சொன்னேன்.

“பாபுவுடன் அங்கே போவது வேணிக்குப் பிடிக்காது” என்று யாரோ என் தலைக்குள் சத்தமாகத் திரும்பத் திரும்பச் சொன்னார்கள். இரு கைகளாலும் காதுகளை இறுக மூடிக்கொண்டேன். “வீட்டுக்குப் போ” என்றொரு குரல் மீண்டும் கேட்டது. அது ஆர்கேவின் குரல் என்பதைப் புரிந்து கொண்ட நொடியில் இனி இதைத் தவிர்க்க முடியாது என்பதை என் ஆழ்மனம் உணர்ந்து கொண்டது.

“ஊருக்குள்ள போ பாபு” என்றேன். என் குரலில் ஒருவித கட்டளைத் தொனி ஏறியிருந்தது.

பாபு என் முகத்தை உற்று நோக்கிவிட்டு “எதுக்கு?” என்றான்.

“இப்ப போனான்ல ஆர்கே… அவன் வரச்சொன்னான்” என்று அழுத்தமாகச் சொன்னேன்.

“இம்பாஸிபில், லூஸா நீ?” என்றான் பாபு. அவன் பயந்துவிட்டான் என்று நானாக நினைத்துக்கொண்டேன். அப்போது அவனது முகபாவனை அப்படித்தான் இருந்தது. உண்மையில் நானே பயந்துதான் போயிருந்தேன். மீண்டும் எதனாலோ எனக்குச் சிரிப்பு வந்தது.

“இம்பாஸிபில்னா அப்புறம் எதுக்கு அவனுக்கு போன் பண்ணச் சொன்ன, போ… நான் அவனப் பார்க்கணும்” என்றேன். வண்டி கொஞ்ச தூரம் முன்னால் ஓடி, பின் வலதுபுறம் திருப்பி சுசீந்திரத்துக்குள் நுழைந்தது.

“இப்ப என்ன செய்யப்போற?” என்றான் பாபு.

“தெரியல… பார்ப்போம்” என்றேன்.

சுசீந்திரம் கோயில் வாசலில் நான் இறங்கி நின்று கொண்டேன். வாசலுக்கு அருகில் ஒரு யானை சாவகாசமாக அதற்கு முன்னால் குவித்து கிடந்த பச்சைப் புற்களை தன் பெருத்த உடலை அசைத்தசைத்து வாயில் அதக்கிக் கொண்டிருந்தது. பாபு காரை யானைக் கொட்டடி மாதிரி இருந்த ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு சாவியைக் கைகளில் சுழற்றியபடி நடந்து வந்தான். அவன் நடையில் சோர்வு இருந்தது. யானைக்கு அருகில் செக்யூரிட்டி யூனிஃபார்மில் நின்றுகொண்டிருந்த ஆறுமுகம் என்னைப்பார்த்ததும் வேகமாக ஓடிவந்து ஒரு சல்யூட் அடித்து “பார்த்தே ரொம்ப நாளாச்சே சார், வாறதேயில்லியோ, சோமாருக்கீயலா?” என்று சிரித்தான். “ம்ம்” என்று தலையாட்டிவிட்டு “சௌந்தரிய கெட்டிக் கொடுத்தாச்சா ஆறுமுகம்?” என்று கேட்டேன். “ஆச்சு சார், அன்னா வர்றாள்ல” என்றான்.

பச்சைநிற ஜாக்கெட்டும், சந்தன நிற கேரள சேலையும் அணிந்து ஆறுமுகத்தின் தங்கை சௌந்தரி நடந்து வந்துகொண்டிருந்தாள். நெற்றியில் சந்தனம் துலக்கமாக இருந்தது. என்னைக் கவனிக்காமலேயே கடந்து சென்றாள். “இரிங்க சார்” என்று என்னிடம் சொல்லிவிட்டு “ஏட்டி” என்றழைத்தபடி ஆறுமுகம் சௌந்தரியின் பின்னாலேயே போனபோது நான் பாபுவின் பக்கம் திரும்பி “போலாம்” என்றேன். சௌந்தரி ஆறுமுகத்தின் மனைவியல்லவா? என்னும் எண்ணம் ஆறுமுகம் என்னைக் கடந்து சென்ற நொடி நினைவுக்கு வந்துவுடன் திரும்பிப் பார்த்தேன். ஆறுமுகத்தையோ சௌந்தரியையோ காணவில்லை.

கோயிலைச் சுற்றியிருந்த அக்ரஹாரத்தில் நானும் பாபுவும் மெதுவாக நடந்து கொண்டிருந்தோம். பாபு நீண்ட நேரமாக ஏதோ யோசித்துக் கொண்டே வந்தான். நான் வழியிலிருந்த தஷிணாமூர்த்தி அண்ணனின் பெட்டிக்கடை வாசலில் நின்றேன். அவருக்குத் திருமணமான புதிதில் எப்படி இருந்தாரோ, அப்படி இருந்தார் அவர்.

“என்னலே இங்க?” என்றார்.

“இங்க ஆர்கே சாரி… ராதாகிருஷ்ணனின் வீடு எங்கயிருக்கு?” என்று விசாரித்தேன். தஷிணாமூர்த்தி அண்ணன் என்னை உற்றுப்பார்த்துச் சிரிக்க முயன்றார். ஆனால் என்னிடமிருந்து எந்த எதிர்வினையுமில்லாததால், என் முகத்தைக் குழப்பமாகப் பார்த்துக் கொண்டே அக்ரஹாரத்திலிருந்து பிரிந்து வயல்களுக்கு ஊடாகச் செல்லும் ஒற்றையடிப் பாதையைக் கை காட்டினார். நாங்கள் அந்தப் பாதை ஆரம்பிக்கும் இடத்திற்குப் போய் நின்றோம். ஆர்கே எங்களைத் திரும்பிப் பார்த்துக் கொண்டே அந்தப் பாதையில் எங்களுக்கு முன்பாகச் சென்று ஒரு வளைவில் மறைவதை நான் பார்த்தேன். பாபு அதைக் கவனிக்கவில்லை என்பதைப் புரிந்து கொண்டேன். அந்தப் பாதை நேரே சென்று வளைவருகே முடியும் இடத்திற்குச் சற்று தூரத்தில் பழையகால ஓவியங்களில் வரையப்படுவது போலவே, வாசலின் இரு புறமும் திண்ணை வைத்த இரண்டடுக்கு ஓட்டு வீடொன்று, அதனைச் சுற்றிலுமிருந்த மரங்களின் நிழலில் தனியாக இருந்தது. நான் அந்த வீட்டை எங்கள் சின்ன வயதில் ஆச்சியின் ஊரான சின்னமனூருக்குப் போகும்போது பார்த்திருக்கிறேன். அந்த வீட்டிலிருந்து, சற்றே பெரிய இரண்டு பாதைகள் இடவலமாகப் பிரிந்து சென்றன. நானும் பாபுவும் மெல்ல அந்த மண் சாலையில் நடந்து சென்றோம்.

அந்த வீட்டு வாசலின் வலதுபுறமிருந்த திண்ணையில் ஒரு முதியவர் அமர்ந்திருந்தார். எனக்கு நன்றாக அறிமுகமான முகம், கிட்டத்தட்ட என் தந்தையில் சாயல். அவரது வாயில் பற்களே இல்லாமல் பொக்கையாக இருந்தார். எங்களிடம் “என்ன?” என்பது போல பார்வையாலேவே விசாரித்தார். “ஆளைத் தெரியலையா?” என்று பாபு சத்தமாகக் கேட்டான். அவர் என் முகத்தையே கொஞ்ச நேரம் உற்றுப்பார்த்தார் அவர். பின்பு பதிலேதும் சொல்லாமல் தலையில் அடித்துக்கொண்டு, கைகளை வான்னோக்கி உயர்த்தி வணங்கிய பின் தன் கைகளைத் தலைக்கு அண்டக்கொடுத்து திண்ணையில் படுத்துக் கொண்டார். மெலிதாக எதையோ அவர் ஏதோ முனகுவது மட்டும் எனக்குக் கேட்டது.

நானும் பாபுவும் இன்னொரு திண்ணையில் அமர்ந்திருந்தோம். எங்களுக்குள் எந்தப் பேச்சும் இல்லாமல் அமைதி நிலவியது. எங்கிருந்தோ கறுப்பு நிறத்திலிருந்த நாய் ஒன்று என் காலருகே வந்து முகர்ந்து பார்த்தது, பின்பு வாலாட்டியபடியே என் கால்களை நக்கப் பார்த்தது. நான் அதன் பெயரை நினைவுகூர முயன்றேன். வேணி எத்தனையோ முறை அதன் பெயரைச் சொல்லியிருக்கிறாள். ஆனால் சட்டென்று நினைவுக்கு வரவில்லை. நான் அதைப் பார்த்து “ஏய், சும்மாயிரு” என்றேன். பாபுவுன் காலருகே அது போனவுடன் அவன் கால்களை உதறி “சீ போ” என்றான். அது “ர்ர்ர்ர்” என்று உறுமி, பற்களைக் காட்டி அவனை முறைத்தது.

“அது ஒன்னும் செய்யாதுடா, பயப்படாத” என்றேன் நான்.

கால்களை மடித்துக்கொண்ட பாபு “ப்ளீஸ் இங்கேயிருந்து கெளம்புவோம்” என்றான். நான் கைகளால் “கொஞ்சம் பொறு” என்பதாகப் பாவனை செய்தேன்.

சற்று நேரத்தில் நாங்கள் வந்த வழியிலேயே அக்ரஹாரத்திலிருந்து ஒரு இளம் வயது பெண் ஒருத்தி, கையில் பனையோலையால் பின்னப்பட்ட ஒரு சின்னக் கூடையை வைத்துக்கொண்டு நடந்து வந்தாள். நான் அவளது முகத்தை நிமிர்ந்து பார்க்கவே இல்லை. பாபு என் பக்கம் திரும்பி “மலையாளி” என்று சொல்லிவிட்டு கண்ணடித்துச் சிரித்தான். தலைக்குக் குளித்து ஈரம் சொட்ட, நுனியில் மட்டும் சின்னமுடி போட்டிருந்த கருமையான, மிக நீளமான தலைமுடி அவளுக்கு. நெற்றியில் செஞ்சந்தனமும், குங்குமமும் இருந்தது, காதுக்கருகில் இணுக்கினாற்போல நாலைந்து வெண்ணிறப் பூக்கள் மட்டும். வாசலிலிருந்த முதியவரைப் பார்த்தபடியே எங்களிடம் ஒன்றும் பேசாமல் வீட்டுக்குள் போனாள். எங்களைக் கடந்து போகும்போது, பாபு அவன் நெஞ்சின் அடியாழம் வரை மூச்சை இழுத்தான். “த்தா… என்னா வாசம்டா இது? கிறுக்குப் பிடிக்க வைக்கற மாதிரி” என்றான். எனக்கு அவனைப் பார்க்க எரிச்சலாக இருந்தது. அதே நேரம் என்னாலும்கூட ஒருவிதமான வாசனையை உணர முடிந்தது. எரிந்தடங்கிய தீபத்தின் கரிந்த திரியின் நுனியில் கிளர்ந்தெழும் ஒருவித வாசனை.

என் பக்கம் திரும்பி, “இது யாருன்னு தெரியும்ல?” என்றான்.

“வேணி” என்று எரிச்சலுடன் சொன்னேன். பிறகு அதே எரிச்சலோடு “ஆர்கேயோட தங்கை” என்றேன்.

திண்ணையிலிருந்து குதித்திறங்கிய பாபு என்னருகே வந்து “அப்ப நீ யாரு?” என்றான். அவனது கைகள் மிக லேசாக நடுங்கிக் கொண்டிருப்பதை என்னால் உணர முடிந்தது.

நான் பதிலேதும் பேசவில்லை. உண்மையில் நான் பயங்கரக் குழப்பத்திலிருந்தேன்.

சில நிமிடங்கள் கழித்து வேணி வெளியே வந்தாள். அவளது கையில் ஒரு இலையில் சந்தனப் பிரசாதம் இருந்தது. என்னருகே வந்து “இந்தா பிரசாதம்” என்று சொல்லி என் நெற்றியில் சந்தனத்தை வைத்தாள். சந்தனம் சூட்டில் இளகிய மெழுகைப் பூசியது போல என் நெற்றியைச் சுட்டது. பாபு எங்களிடமிருந்து விலகி சற்றுத்தள்ளி இருந்த ஒரு மரத்தடியில் போய் நின்று கொண்டான். அவ்வளவு நேரத்தில் அப்போதுதான் அந்த மரத்தைக் கவனித்தேன். அதன் ஒரு பாதி முழுக்க கருநீலப் பூக்கள் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தது, இன்னொரு பாதி தீயில் வெந்ததுபோல கரிந்து, காய்ந்து போயிருந்தது. அவன் போனபிறகு தனிந்த குரலில் பாபுவைச் சுட்டிக்காட்டி “இவனா வந்தானா, நீ கூட்டீட்டு வந்தியா?” என்றாள் வேணி. அப்போது அவளது கண்கள் நெருப்புத்துண்டுகள் போல மினுங்குவதைப் பார்த்தேன். பாபுவைத் திரும்பிப் பார்த்தேன். எங்களிருவரையும் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான். அதிலொரு நக்கல் இருந்தது.

“நடிக்காத” என்று அடித்தொண்டையிலிருந்து சீறும் குரலில் நான் வேணியிடம் சொன்னேன், கிட்டத்தட்ட உறுமினேன்.

ஆனால் அதைப் பொருட்படுத்தாதது போல “ஏன் இங்க வர்றதே இல்ல?” என்றாள் வேணி. அதைச் சொல்லும்போது அவள் கண்கள் குளிர்ந்து கண்ணீர் தளும்பியிருந்தது. அந்த முதியவர் தலையைத் தூக்கிப் பார்த்து ஏதோ சொல்ல வாயெடுத்து, முடியாமல் தொடர்ச்சியாக இருமினார். “சும்மா இருங்க அப்பா” என்றாள் வேணி. அவர் முகத்தைத் திருப்பிக்கொண்டார்.

“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் நாங்க ரெண்டுபேரும் ஆர்கேவ அந்த மரப்பாலத்துக்கிட்ட பார்த்தோம்” என்றேன். வேணி சட்டென்று என்னிடமிருந்து ஓரடி விலகி நின்றாள். பிறகு பதில் பேசாமல் என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். பிறகு “சுத்தி சுத்தி வரலாம். ஆனா வீட்டுக்குள்ள வர மனசில்ல, இல்லையா?” என்றாள். நான் அமைதியாக இருந்தேன். “இன்னும் எத்தனை நாள் இந்த விளையாட்டு?” என்றாள்.

நான் இன்னொரு பக்கம் முகத்தைத் திருப்பிக் கொண்டேன். அதிலொரு வெறுப்பு இருந்ததை என்னால் உணர முடிந்தது.

“அது வேணி இல்ல, கெளம்பலாம் வாடா” என்ற பாபுவின் குரல் எங்கோ வெகு தூரத்திலிருந்து கேட்டது. பிறகு என் கைகளைப் பிடித்து கிட்டத்தட்ட தரதரவென இழுத்தபடி அங்கிருந்து வெளியேற ஆரம்பித்தான். அவன் என் அருகில் வந்ததையே நான் கவனித்திருக்கவில்லை. நான் பாபுவோடு சேர்ந்து கிட்டத்தட்ட ஓடினேன். ஆனால் ஒற்றை அடியெடுத்து வைக்கும் அளவுக்குக் கூட என் கால்களில் வலு இல்லை. மிக மெதுவாக, மிகமிக மெதுவாக சிரமப்பட்டு நடந்தேன். ஒவ்வொரு அடியெடுத்து வைக்கும்போதும் அந்த நிலத்திலிருந்து என் கால்களைப் பிய்த்து எடுப்பது போல இருந்தது.

வேணியிடம் விடைபெறாமலேயே அங்கிருந்து கிளம்பியது சற்று தூரம் கடந்தபின்தான் எனக்கு உறைத்தது. எங்கள் முதுகுக்குப் பின்னாலிருந்து “ஒரே ஒருதடவை மட்டும் நான் முகத்தைப் பார்க்கணும், ஒருதடவை மட்டும்… நான் உங்கிட்ட ஒன்னு சொல்லணும்” என்கிற வேணியின் சத்தம் ஈனஸ்வரத்தில் என் காதுகளுக்கருகில் கேட்டதும் நான் சட்டென்று நின்றுவிட்டேன்.

என் கைகளை இறுக்கிப் பிடித்தபடியே வேகமாக நடந்து கொண்டிருந்த பாபு “திரும்பிப் பார்க்காம நடந்து வா, சீக்கிரம்” என்றான். அவன் அப்படிச் சொன்னவுடன் நான் என்னைப் பிடித்திருந்த அவனது கைகளை உதறி, சத்தமாகச் சிரித்தபடி, நின்று நிதானமாகத் திரும்பிப் பார்த்தேன். வேணி என்னையே பரிதாபமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். “பாபு… வா, திரும்பிப் போய் அவகிட்ட சொல்லிட்டு வந்திருவோம்” என்று சொல்லிவிட்டு மீண்டும் எதற்கோ சிரித்தேன். “டேய் லூசு, அவதான் ஏற்கனவே செத்துப் போயிட்டாள்ல…” என்றான். நான் அதிர்ச்சியாகித் திரும்பிப் பார்த்தேன்.

வீட்டு வாசலில் யாருமே இல்லை. ஆனால், கிளை முழுக்கப் பூக்களாகப் பூத்திருந்த இன்னொரு மரத்தில் சாய்ந்தபடி நின்று ஆர்கே என்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். பாபுவிடம் அவனைச் சுட்டிக்காட்டி “அந்தா ஆர்கே நிக்கறாம் பாரு” என்றேன்.

பாதி எரிந்திருந்த அந்த மரம், இப்போது முழுதாக வானளவுக்குச் சுடர்விட்டு எரிந்து கொண்டிருந்தது. பிறகு அந்த வீடும் கொழுந்துவிட்டு எரிந்தது. கரிந்துபோன உடலிலிருந்து எழும் அழுகல் வாடை என் மூக்கைத் துளைத்தது. நான் பாபுவைத் திரும்பிப் பார்த்தேன். அவன் வேகமாக கைக்குட்டையைத் தேடி எடுத்து அவனது மூக்கை மூடிக்கொண்டான். திடீரென என் நாக்கிலேறிய கசப்புச் சுவை, பின்பு வாய் முழுக்க, உடல் முழுக்க, அந்த இடம் முழுக்க அடர்ந்து படர்ந்து எல்லாவற்றையும் விழுங்க ஆரம்பித்தது. என் உடல் முழுக்கத் தீயின் நாவுகள் தீண்டியது போலச் சுட்டது.

*

“காஃபி போட்டுட்டேன்… எழுந்திரிங்க” என்ற சந்திராவின் குரல் கேட்டு உடலை உலுப்பியபடி எழுந்தேன். ஏசி ஓடிக்கொண்டிருந்த அறையில் என் உடல் முழுக்க நனையுமளவுக்கு வியர்த்திருந்தது. படபடப்பு குறைந்து நிதானம் வந்தபின்னும் மனம் முழுக்க கசப்பின் காய்ச்சல் இருந்தது. என் சுவாசத்திலும் கசப்பாக உள்ளே போனது. நானிருந்த அறை முழுவதிலும் அந்தக் கசப்பை உணர்ந்தேன். எழுந்து போய் முகம் கழுவிவிட்டு வந்து, தரையில் கால்நீட்டி, கட்டிலில் சாய்ந்தமர்ந்து காஃபியை ஒவ்வொரு மடக்காகக் குடித்தேன். நான் கண்ட காட்சிகள் எனக்கு உணர்த்துவது என்ன என்கிற கேள்வியோடு, அவற்றை அப்படியே மனதுக்குள் மீளுருவாக்கம் செய்து, அதை நிஜ வாழ்வோடு ஒப்பிட்டுக் கொண்டிருந்தேன். இந்தக் கோணத்தில் எப்படி இத்தனை நாட்கள் யோசிக்காமலிருந்தேன் என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன். நீண்ட யோசனையின் முடிவிலும் மீண்டும் கசப்பே எஞ்சியிருந்தது.

பாபுவுடன் பேச்சு வார்த்தை குறைந்து போய் சில வருடங்களாகி விட்டது. கடைசியாக எங்களுடைய அப்பா இறந்து போனதற்கு அழைத்து துக்கம் விசாரித்தான். அதுவும் ஒருவாரம் கழித்து… “என்ன பெருசு போயிருச்சு போல” என்கிற அவனது வழக்கமான நக்கல் பேச்சை நான் ரசிக்கவில்லை என்பதைப் பேசி முடிக்கும் வரை அவன் உணரவேயில்லை. அப்பாவின் மரணத்திற்குச் சில மாதங்களுக்கு பிறகு வேணி அகாலமாக தன் வாழ்வை முடித்துக் கொண்டிருந்தாள்.

அவளது மரணம் அறிவிக்கப்படும்வரை வெறிபிடித்தது போல மருத்துவமனையிலேயே கிடந்தாலும், யார் யாரோ வற்புறுத்தியும், முழுதாக இரண்டு நாள் கழித்து அவள் மூச்சு நின்று போகும்வரை முழுக்க கரிந்து போய்விட்டது என்று சொல்லப்பட்ட அவள் முகத்தை நான் போய்ப் பார்க்கவேயில்லை.

யோசித்து, யோசித்து ’வேறுவழியே இல்லை’ என்று தீர்மானமாகத் தோன்றிய பிறகு பாபுவை அழைத்தேன். அழைப்பு நின்று போவதற்கு முன் கடைசி நொடியில் இணைப்பு கிடைத்தது.
எப்படி ஆரம்பித்து என்ன கேட்பது என்று எனக்கும் ஒரு நொடி புரியவில்லை. பிறகு மெதுவாக “வேணி” என்ற ஒற்றைச் சொல்லை மட்டும் உதிர்த்தேன்.

பாபு கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தான். பிறகு தொண்டையைச் செருமிக்கொண்டு, மெதுவாக “இப்படி ஒருநாள் வரும்னு எனக்குத் தெரியும், நானே ரொம்ப நாளா உங்கிட்ட எப்படியாவது இதப் பேசிடணும்னு நினைச்சேன், உண்மையச் சொல்லணும்னா ஒரு வகைல உங்கிட்ட மன்னிப்பு கேட்றணும்னு கூட… ஆனா ஒன்னு, இந்த தடவையாவது… நான் என்ன சொல்ல வர்றேங்கறதையாவது… நீ கோபப்படாம கொஞ்சம் பொறுமையா கேட்கணும் ஆர்கே” என்று ஆரம்பித்தான்.


இளங்கோவன் முத்தையா, மதுரையைச் சேர்ந்தவர். சரவணன் சந்திரன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாசிரியராக அறிமுகமானவர். தொடர்ந்து கவனிக்கத்தகுந்த நல்ல கதைகளை எழுதி வருகிறார்.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular