முதலாவது சார்பு நீதிமன்றத்தில் சோழன் பூர்வ பட்டயம்

0

இரா.முருகவேள்

          “ என்கிற ஊரில் இருக்கும் அங்காள பரமேஸ்வரி கோவில் செங்குந்த முதலியார்களுக்குச் சொந்தமானது சார். அதாவது எங்க மூதாதையர்.” என்றார் பேராசிரியர்.

    அவர் முதலியாராக இருக்கலாம் என்ற சந்தேகம் முன்பே இருந்தது. அவரது வாட்டசாட்டமான அத்லெட் தோற்றம் எனக்கு பேராசிரியர் சத்தியமூர்த்தியை நினைவுபடுத்தியது. அவரும் இவரைப் போலவே மாநிறமாக உயரமாக தொந்தியே இல்லாமலிருப்பார்.  ஜூரிஸ்புரூடன்ஸ் சொல்லிக் கொடுத்து சித்தரவதை செய்வார். போர்டில் எழுதி எழுதி தள்ளுவார். அப்போது அவரது கரத்தில் இருக்கும் தசைகள் கோடுகோடாக அசைவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்போம். “இந்த ஆள் இன்ஸ்பெக்டர் மாதிரி ஏதாவது வேலைக்குப் போயிருந்தால் அட்டகாசமா இருந்திருக்கும். வக்கீலாகி, அந்த யுனிபார்மும் போடாம வாத்தியாராகி நம்ம உயிரை எடுக்கறான்” என்பார்கள் நண்பர்கள்.

   சத்தியமூர்த்தி பற்றிய உரையாடலை அப்புறம் பார்ப்போம். இப்போது அங்காள பரமேஸ்வரிக்குத் திரும்புவோம்.

    “சோழன் பூர்வ பட்டயத்துல இருளன் பதிவனத்தை வெட்டி, கோட்டையும் பேட்டையும் கட்டி, அங்காளபரமேஸ்வரிக்கு கோவில் கட்டி பலி கொடுத்து  நிர்வாகத்துக்குக் கட்டி முதலியையும், பூசைக்கு பண்டாரத்தையும் வைத்து நிகுதி செய்து வெற்றிலை பாக்கு வைத்துக் கொடுத்ததா இருக்கு”

   பேராசிரியர் தோள்பையில் நீந்தி ஒரு பேப்பரை எடுத்துக் கொடுத்தார். அதில் மேற்கண்டவாறு எழுதியிருந்தது.

   “சரிங்க”

   “இப்ப கோவில் ஒரு பண்டாரத்து கைல இருக்கு. அதை மீட்கணும். கோவில் எங்களோடதுங்கறதுக்கு பட்டய ஆதாரம் இருக்கு. பட்டயத்துல பூசை செய்யத்தான் பண்டாரத்தை நியமிச்சிருக்கு. இந்தப் பட்டயத்துல எல்லாம் பழக்கம் இருக்கற வக்கீலைத் தேடினப்போ உங்க பேரைச் சொன்னாங்க”

   எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால் சோழன் பூர்வ பட்டயத்தில் எல்லா ஊர்களோடும் இந்தக் கட்டியப்ப முதலி பெயர் இணைந்து வரும். இதை வைத்துக் கொண்டு . . . அதுவும் அந்த முதலியும் இந்த முதலியும் இந்தப் பண்டாரமும் அந்தப் பண்டாரமும் ஒன்றுதானா? சோழன் பூர்வ பட்டயத்தை வைத்துக் கொண்டு சிவில் கேஸ் எப்படி . . .

      “கொஞ்சம் விளக்கிச் சொல்லுங்க. கோவிலுக்கு டிரஸ்டி, விழாக்குழு எல்லாம் இல்லையா? கோவில் நிலம், பட்டா, அறநிலையத் துறை ரெகார்ட்ஸ் . . . . இன்னும் கொஞ்சம் டீடெல்ஸ் கொடுங்க புரபஸர்”

     “அதாவது 1964லில் பண்டாரம் தாம்தான் டிரஸ்டி என்று பதிவு செஞ்சுட்டார். கோவில் நிலங்களையும் தன் பெயரில் பட்டா பண்ணிட்டார்”

   “மைகாட். 1964. அப்ப நீங்க என்ன பண்ணிட்டிருந்தீங்க. அதாவது உங்க மூதாதையர்”

    ‘ஊர்ல முதலியார்களெல்லாம் திமுக சார். அதனால் இந்தக் கோவில் குளத்திலெல்லாம் அக்கறை காட்டல. எல்லோரும் படிச்சும், பிஸினெஸ் பாக்கவும் சிட்டிக்கு வந்துட்டாங்க. கோவில் பாழடைஞ்சு போயிடுச்சு. அந்த நேரத்துல பண்டாரம் தன்னை டிரஸ்டியாப் போட்டுட்டார்.”

    “மத்த டிரஸ்டிங்க?”

    “அந்தக் காலத்துல கோவிலுக்கு ஒரு டிரஸ்டி போதும்.”

    “ஊர்ல உங்காளுக ஒரு ஆளும்கூட இல்லையா?’

    “பெரிசுக இருந்தது. மணீயம், கர்ணம் எல்லாம் நம்மாளுகதான். அவங்க கண்டுக்காம விட்டுட்டாங்களோ அல்லது இவனே இருக்கட்டும்னு முன் மொழிஞ்சாங்களோ தெரியல.”

    “அதுக்கப்புறம் இன்னி வரைக்கும் எதுவும் செய்யலையா?”

    “இல்லை சார். நிறைய கேஸெல்லாம் நடந்தது. 1977ல் எங்க தாத்தா ஒரு கேஸ் போட்டார். அதில் சூப்பரா ஒரு டாக்குமெண்ட் வெச்சிருந்தார். டிரஸ்டியா இருந்த பண்டாரம் பூசை செய்ய சம்பளம் வாங்கிட்டிருக்கறதுக்கு ரசீது இருந்தது. டிரஸ்டி எப்படி சம்பளம் வாங்க முடியும்? டிரஸ்டி கோவில் நிலங்களைத் தன்னோட பெயரில் பட்டா வங்கினது சரியான்னு வாதாடினோம். ஜெயிச்சுருச்சு”

    “அருமையான விஷ்யம். அப்புறமென்ன?”

    “என்ன ஆச்சுன்னா கோவில் நிலங்களை மீட்டுட்டோம். ஆனால் இந்தாள் டிரஸ்டி என்பது தப்புன்னு டிக்ளேர் பண்ணனும்னு உத்தரவு வாங்காம விட்டுட்டோம்.”

    “மைகாட்.  ஏன் அப்படிப் பண்ணுனீங்க?”

   “அதான் சார். திமுக. கோவில் நிலமே நம்ம கிட்ட வந்த பின்னாடி கோவில் எவன் கைல இருந்தா என்னங்கற தெனாவட்டுதான். தெய்வ பக்தி வேணும் இல்லையா சார்”

    “ஆமாங்க புரபஸர். கட்டாயம் வேண்டும்”. என்றேன் நான்.

    ”கம்யூனிஸ்டுகாரங்க நீங்க ஒத்துக்கறீங்க. திக திமுக காரங்க ஒத்துக்க மாட்டேங்கறாங்களே”

    எனக்குக் கருக்கென்றது. தொழிலையும் கொள்கையையும் நான் குழப்பிக் கொள்வதில்லை. இருந்த போதிலும் இது எனக்குப் பிடிக்கவில்லை.

    “கடவுளை நம்பாத கம்யூனிஸ்டுகளும் இருக்காங்க புரபஸார்”

    “அப்படீங்களா? டூ பேட்”

    இதென்னெ ஏடாகூடம் . . .  கொள்கையின் மீதான செண்டிமெண்ட்டுக்கு இது இடம் அல்ல. பேச்சை திரும்பவும் வழக்கை நோக்கித் திருப்ப முடிவு செய்தேன்.

   “ஓக்கே புரபஸர். பண்டாரம்தான் டிரஸ்டி என்பதை ரத்து செய்யாம விட்டுட்டீங்க. இப்ப என்ன பிரச்சினை?”

   “இப்ப நாங்க எல்லாம் பெரிய பெரிய பதவில இருக்கோம். எல்லோருக்கும் இப்ப சாதி மேலையும், சமுதாய பழக்க வழக்கங்கள் மேலயும் ஆர்வம் வந்திருக்கு இல்லையா? எல்லாரும் வேர்களுக்குத் திரு(ம்)பறாங்க. சொந்த ஊருக்கு வர்றது, சமுதாயக் கூட்டம் நடத்தறதுன்னு எல்லாரும் திரும்பவும் ஒன்னாயிட்டிருக்கோம். ஆனால் எங்க கோவில் பாழடைஞ்சு செடி மொளச்சு கிடக்கு. அதனால எல்லாரும் சேர்ந்து . . .”

   “சேர்ந்து?”\

   “ரெண்டு கோடி ரூபா வசூல் செஞ்சு . . ..”

   “ரெண்டு கோடி!!!!”

   “அதுக்கு மேல முடியல சார்.”

   “!!!!!!!!!!!!!!”

   “ரெண்டு கோடி ரூபாய் வசூல் செஞ்சு ஒரு பெரிய ஸ்தபதியைக் கூட்டிட்டு வந்து கோவிலை பழமை மாறாம புதுப்பிச்சு, பிரம்மாண்டமான கல் மண்டபம் கட்டினோம். இப்ப பாக்க அவ்வளவு அழகா இருக்கு சார்”

   “சரிங்க . . .”

  “கும்பாபிஷேகம் நடத்தறப்ப பண்டாரம் வந்து டிரஸ்டி நான் இருக்கும் போது நீங்க எப்படி நடத்தலாம்னு கேக்கறார்”

  “ஓ … இப்ப அதான் பிரச்சினை”

   “யெஸ் சார். கரெக்டா புடிச்சுட்டீங்க”

   ‘நீங்க இவ்வளவு பேர் இருகீங்க. ஒரு பண்டாரத்தை வெளியேத்த முடியலையா?”

  ‘இப்ப பண்டாரம் பிள்ளைல சேர்ந்துட்டாங்க சார். பண்டாரம், துளுவ வேளாளர் எல்லாம் பிள்ளைன்னு சொல்லிக்கறாங்க. நாகர்கோவில் பிள்ளைமார் தொடர்பால பிஜெபி சப்போர்ட் அவங்களுக்கு இருக்கும்”

     ‘நீங்க?”

   “நாங்க எப்பவும் திமுக தான். ஆனால் இந்தக் காலத்துல பரம்பரைப் பெருமையை நிலைநாட்டணும் இல்லையா சார். பாரம்பரியத்தை மறந்துடக் கூடாது இல்லையா? நம்ம முன்னோர்கள் சோழனோட காண்டாக்ட் வெச்சு பட்டயம் வாங்கியிருக்கோம். விட்டுட முடியுமா? ஆண்ட பரம்பரை இல்லையா? பக்தி வேற கொள்கை வேற”

                  ————————————————————————

        இந்த சப்-ஜட்ஜ் வழக்கமாகச் சிரிப்பதில்லை. அதிகம் பேசுவதுமில்லை. வாய்தா கேட்டால் ரொம்ப சிக்கல் செய்யாமல் கொடுத்து விடும் டைப் என்று ஜூனியர்கள் பேசிக்கொள்வார்கள். சிவில் வழக்குகளில் அதிக ஆர்வம் கொண்டவர். உயர் நீதிமன்ற உச்ச நீதிமன்ற வழக்குகளை மேற்கோள் காட்டி பேசக் கூடியவர். ஆனால் கிரிமினல் வழக்குகளை விசாரிக்க அவருக்கு அவ்வளவாகப் பிடிக்காது. அந்த நேரங்களில் சிடுசிடுவென்றிருப்பார். லா நோவிங் ஜட்ஜ்தான். பேசலாம் என்றார் ஒரு சீனியர்.

    அன்று மேகமூட்டமாக இருந்ததால் நீதிமன்றம் இருளோடியிருந்தது. இந்த சூழல் எனக்குப் பிடிக்கும். நீதிமன்றத்தில் கரண்ட் கட்டாலோ, மழையாலோ இருள் சூழ்ந்திருந்தால் அதன் அன்னியத்தன்மையும், நாடகத்தன்மையும் குறைவாக இருப்பது போல எனக்குத் தோன்றும். நீதிமன்றத்தின் உயர்ந்த கூரைகளுக்கும், கருமையேறிய ஈட்டி, தேக்குமரச் சட்டங்களுக்கும், மேசை, நாற்காலிகளுக்கும், நீண்ட வராண்டாக்களுக்கு அரையிருளே பொருத்தமானதாகத் தோன்றும்.

    “இப்ப என்ன எழுதிட்டிருக்கீங்க” என்று கேட்டார் எதிர்த்தரப்பு வழக்குரைஞர் முத்தமிழ் ராசு. முக்கியமான இந்து முன்னணி வழக்குரைஞர். நாங்கள் எதிர்பார்த்தபடியே சுந்தர பண்டாரத்துக்காக வாதாட இவர் வந்திருந்தார். அந்த மதிய நேரத்திலும் பளிச்சென்று குங்குமம் வைத்து பக்திமயமாக இருந்தார். இந்து அமைப்பினர் அணியும் காவி நிறத்திலான பட்டை கங்கணத்தை அணிந்திருந்தார்.

     “சோழன் பூர்வ பட்டயத்தைப் பத்தி ஒரு கதை எழுதிட்டிருக்கேன்”

    முத்தமிழ் கடுப்பானார். “பிரதர், பட்டயத்தை எல்லாம் கொண்டுட்டு வந்து பொஸஸன், டிகளரஷன் கேக்கறது கொஞ்சம் கூட சரியில்ல.”  

  வழக்கு அழைக்கப்பட்டதும் முத்தமிழ் எழுந்தார். “யுவர் ஆனர், பட்டயம் ஆயிரம் வருஷங்களுக்கு முந்தையது. இந்த கால இடைவெளியில் என்னென்னமோ நடந்து விட்டது. தஞ்சைப் பிரகதீஸ்வரர் கோவில் இதே போலத்தான். ராஜராஜன் கட்டியது. ஆனால் மராத்திக்காரர்கள் எல்லாம் டிரஸ்டியாக இருக்கிறார்கள். எனவே காலமாற்றத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். பட்டயத்தை மட்டும் வைத்துக்கொண்டு எதையும் தீர்மானிக்க முடியாது. 1964 ரெவின்யூ ரெகார்ட்ஸ் எங்கள் கட்சிக்காரரின் முன்னோர் தான் டிரஸ்டி என்கிறது.  எனது கட்சிக்காரர் கோவிலில் பண்டாரமாக இருக்கிறார். எனவே கோவிலுக்குத் தொடர்பு இல்லாதவர் இல்லை. இப்போது சொந்தம் கொண்டாடும் இந்த நபர்கள் ஒரு பழைய பட்டயத்தைத் தவிர எந்த ஆவணத்தையும் கோர்ட் முன்னால் கொண்டு வரவில்லை. முதலியார் என்றால் எனக்குத் தெரிந்தே மூன்று பிரிவு முதலியார்கள் உண்டு. செங்குந்த முதலியார், சென்னிமலை முதலியார் . . .  பட்டயத்தில் உள்ள கட்டியப்ப முதலி என்பது யாரைக் குறிக்கிறது . . . .? இந்த முதலிதான் அந்த முதலி என்பதற்கு என்ன ஆதாரம்? எனது கற்றறிந்த எதிர்த்தரப்பு வழக்குரைஞரான நண்பர் இலக்கியத்தையும் சட்டத்தையும் மிக்ஸ் செய்கிறார். ஆனால் மிக்ஸிங் சரியில்லை” கோர்ட்டில் சிரிப்பலை எழுந்தது. ஜட்ஜ் கூட சிரித்தது போலத்தான் தெரிந்தது. நல்ல விஷயம்தான். இறுக்கம் தளர்வது பேச ஏதுவாக இருக்கும்.

     நண்பரின் வாதம் சரியாக இருந்தது. அவர்  வலிமையான இடத்திலிருக்கிறார்.

ஓக்கே. கோர்ட்டைப் பார்த்தும், எதிர் வழக்குரைஞரைப் பார்த்தும் பயப்படும் வயதை நான் தாண்டி விட்டேன். சட்டம் எதிரிக்குச் சாதகமாக இருந்தால், அதோடு முட்டி மோதாமல் லாஜிக் பேசி வேறு பக்கம் இழுத்துப் போக வேண்டும் என்பது வழக்குரைஞர் தொழிலின் எழுதப்படாத விதி.

     “லா ஈஸ் நத்திங் பட் காமன்சென்ஸ் இன் ஏன் அன்காமன் லாங்குவேஜ்” என்று தொடங்கினேன். இது கார்ல் மார்க்ஸ் சொன்னது. ஆனால் அந்தப் பெயரை இங்கே பயன்படுத்த முடியாது. நானே சொன்னது போல்தான் இருக்கட்டுமே.

    “பட்டயம் இருக்கிறது. பட்டயத்தில் முதலி நிர்வாகம் செய்ய வேண்டும் என்று இருக்கிறது. இப்போதும் அந்த ஊரில் எமது கட்சிக்காரர்களான முதலியார்கள் இருக்கிறார்கள். பட்டயம் பண்டாரம் பூசை செய்ய வேண்டும் என்கிறது. நண்பரின் கட்சிக்காரரான சுந்தர பண்டாரம் அங்கே பூசை செய்து கொண்டு இருக்கிறார். எனவே ஆயிரம் ஆண்டுகளில் ஊரில் எதுவும் மாறவில்லை. பட்டயம் நடைமுறையில் இருக்கிறது. செயல்படுகிறது. கற்றறிந்த நண்பர் பட்டயத்தை மறுத்தாலும் அதை அடிப்படையாக வைத்தே பேசுகிறார். இல்லையென்றால் சுந்தர பண்டாரம் எப்படி இந்தக் கோவிலுக்கு பூசை செய்ய முடியும்? சென்னிமலை முதலியாருக்கோ, விருதாச்சலம் ரெட்டியாருக்கோ, சிவகங்கை மறவருக்கோ, கீழக்கரை பாய்க்கோ, நாகர்கோவில் நாடாருக்கோ இங்கே இடமில்லை. இந்த ஊரைச் சேர்ந்த இருவருக்கு இடையிலான உரிமைப் பிரச்சினை இது. பட்டையத்தின் உதவி கொண்டே தீர்க்கப்பட வேண்டும். இது கோவில் நியதிகளும், நியமங்களும் தொடர்புடையது. அதை மாற்ற யாருக்கும் உரிமை கிடையாது. பண்டாரம் பூசை செய்து சம்பளம் வாங்கியிருக்கிறார். ரசீது இருக்கிறது. எனவே கோவில் பூசாரிக்குக் சம்பளம் கொடுப்பவர்கள் யாராக இருக்க முடியும்? கோவில் நிலங்கள் எமது கட்சிக்காரர்களின் அனுபோகத்தில் இருக்கின்றன. பண்டாரத்தின் வேலை கோவிலுக்குப் பூசை செய்வது, அதைச் செய்ய நாங்கள் தடை சொல்லவில்லை. கோவில் நிர்வாகத்தை சோழன் எங்களிடம் ஒப்படைத்து இருக்கிறார். அதை விட்டுத்தர முடியாது. இது பாரம்பரியம். முன்னோரின் விருப்பம். அவர்கள் செய்து வைத்த நியதி. மாற்ற முடியாதது. மாற்றலாம் என்றால் எப்போது யார் மாற்றலாம் அதற்கு என்ன நியதி என்பதை நிரூபிக்க வேண்டியது கற்றறிந்த வழக்குரைஞரின்  கடமை”

   ஜட்ஜ் ஆழ்ந்து சிந்தித்துக்கொண்டிருந்தார். முத்தமிழிடம் மேலும் ஆவணங்கள் கேட்டு அடுத்த வாரம் வழக்கைத் தள்ளிப் போட்டார்.

    நாங்கள் கிளம்பும் நேரம் ஜட்ஜ் இருவரையும் அழைத்தார். சற்றே யோசனையுடன் பூர்வ பட்டயத்தைப் பார்த்தவர் என்னிடம் கேட்டார்,

“எல்லாம் சரி. இந்த ஆவணத்தில் இந்த ஊரை யாரோ இருளருக்குக் தானமாகக் கொடுத்ததாக இருக்கிறதே?  ஊரின் பெயரே இருளன் பதிவனம் என்று குறிப்பிடப்படுகிறதே? அப்படி ஒரு ஆதிவாசிகள் ஆனைக்கட்டி பக்கத்துல இருக்காங்க இல்ல?, அவர்களுக்கு இந்த வழக்கில் ஆர்வம் இல்லையா?  அந்தக் காலத்துல ஊரே அவங்களுக்குச் சொந்தம்ங்கற போது  கோவிலும், நிர்வாகமும் அவங்களுக்குத்தானே போகும்?”

     நாங்கள் இரண்டு வக்கீல்களும் சிரித்தோம். “இந்த ஊரில் மட்டுமல்ல. இங்கிருந்து நூறு கிலோமீட்டர் சுற்றளவுக்கு எங்கேயுமே இருளர் கிடையாது. எனவே அவர்களைப் பொறுத்தவரை பட்டயம் செல்லாது. தவிர மேற்குத் தொடர்சி மலைகளில் நூற்றுக்கணக்கான இருளர் கிராமங்கள் உள்ளன. யாருக்கு என்னவென்று சம்மன் அனுப்புவது?” என்றேன் நான்.

    ஜட்ஜ் முத்தமிழைப் பார்த்தார்.

    “சமவெளிகளில் இந்த மாதிரி ஒரு பட்டிக்காட்டில் ஒரு கோவிலை வைத்துக் கொண்டு இருளர்கள் என்ன செய்வார்கள்? அவர்களுக்கு இது என்னவென்றே தெரியாது. அவர்கள் பண்பாடு வேறு, வழிபாட்டு முறைகள் வேறு. இந்தக் கோவிலின் ஆகம விதிகள் வேறு. இது மிகப்பெரிய வில்லங்கங்களைக் கொண்டுவந்து விடும்.”

     ஜட்ஜ் பயந்து போனது தெரிந்தது. இதைச் சொல்ல முத்தமிழுக்கு எல்லாத் தகுதியும் உண்டு. முத்தமிழ் மேலும் தொடர்ந்தார், “இருளரே ஊரில் இல்லாதபோது இருளருக்குத் தானம் கொடுத்தது எப்படி செல்லும்? ஒன்று முதலியார் அல்லது பண்டாரம். இந்த இருவருக்கு இடையேதான் வழக்குத் தீர்க்கப்பட வேண்டும். இருளருக்கு இங்கே இடமே இல்லை. அவர்கள் எங்கோ மலைமேல் இருக்கிறார்கள்.”

   ஜட்ஜ் தலையசைத்துக் கொண்டார். பின்பு என்னைப் பார்த்தார்.

    “யெஸ் யுவர் ஆனர். ஒன்று முதலியார் அல்லது பண்டாரம். இருளருக்கு இங்கே இடமே இல்லை” என்றேன்.

    “இல்லவே இல்லை. இருளரைப் பொறுத்தவரை பட்டயம் செல்லாது” என்றார் முத்தமிழ்.

    நானும் முத்தமிழும் வெளியே வந்து சிகரெட் பற்ற வைத்தோம். முத்தமிழ் கடகடவென்று சிரித்தார். “இதென்ன இந்த ஜட்ஜ் ஐயா புது பிரச்சினையைக் கிளப்பறார். வேடிக்கையா இருக்கு”

   நானும் புகையை இழுத்து விட்டுவிட்டு சிரித்தேன். நமது கட்சிக்காரரின் நலனுக்கு விரோதமானவற்றைப் பற்றிச் சிந்திப்பது புரொபஷனல் எதிக்ஸுக்கு எதிரானது.

   “ஜட்ஜ் இருளரைப் பத்தி இன்னொருதடவை பேசினால் கேஸை நமக்குள்ள செட்டில் பண்ணிக்கலாம்” என்றார் முத்தமிழ்.

    “கண்டிப்பா” என்று ஆமோதித்தேன் நான்.

                    ***

இரா.முருகவேள் – திருப்பூரில் வசித்து வரும் இவர். மொழிபெயர்ப்பு (ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம், எரியும் பனிக்காடு, கட்டுரைகள் – இன்பமயமான தமிழக வரலாறு, கார்ப்பரேட் என்.ஜி.ஓ-க்களும் புலிகள் காப்பகங்களும், நாவல் – மிளிர்கல், முகிலினி, செம்புலம்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here