Friday, September 22, 2023
No menu items!
No menu items!
Homesliderமுகங்கள்

முகங்கள்

விஜய ராவணன்

“நாம மறைக்க தயங்குற முகத்த தான் இவன் முகமூடியா போட்டு விக்குறான்…”

உலர்ந்த ஆரஞ்சு பழத்தைப் போல் முகத்தில் சுருக்கங்கள் படர்ந்த பெரியவர் பேருந்து ஜன்னலினூடே சாலையின் மறுபுறத்தைக் காட்டி இப்படிச் சொன்ன போதுதான், பிரம்மநாயகம் அவனைக் கவனித்தார். பேருந்தை நோக்கி கையசைத்தபடி இருந்தான், மீசையும் தாடியும் இல்லாத சிரிப்பும் அழுகையும் தெரியாத முகமூடியை அணிந்தபடி… அது மெழுகு நிறத்தில் மொழுக்கென்று இருந்தது. துளை போட்ட கண்களும் கீறிய வாயும் அதற்கு.

தன் முகத்தையே விளம்பரப் பலகையாக்கி முகமூடிகள் விற்றுக் கொண்டிருந்தான். சாலையின் அழுக்கும் புழுதியும் படிந்த அவனது நிறம் மங்கிய சாக்குப்பையில் அணியப்படாத பல முகமூடிகள் மூச்சுமுட்ட அடைந்துக் கிடந்தன. கையில் காவல்காரனைப் போல் ஒரு நீண்ட குச்சி. அதன் கொக்கிகளில் தொங்கும் பலவித முகங்கள் இன்னும் விலைபோகவில்லை…

பேருந்து ஜன்னல்பக்கம் அமர்ந்திருந்த குழந்தைகளின் முகத்தில் திடீர் சிரிப்பு. துருவேறிய பேருந்து ஜன்னல் கம்பிகளில் தாடையை வைத்து அவனை நோக்கிக் கையசைத்தன… அழுகையை மறந்த குழந்தைகளின் வாயிலிருந்து எச்சில் வடிந்தது. முகநூல் சுவரொட்டிகளில் தான் தொலைத்த முகங்களைத் தேடிக்கொண்டிருந்த சிலர், நொடிப்பொழுது அவனைத் திரும்பிப் பார்த்துவிட்டு “பைத்தியக்காரப் பய!” என்றபடி மீண்டும் கைபேசியை வெறிக்கத் தொடங்கினர்.

சாலையின் எதிர் மருங்கில் முகமூடி அணிந்து நிற்பவனுக்கு, பேருந்தின் முகங்கள் எதுவும் தெளிவாகத் தெரிய வாய்ப்பில்லை தான். இருந்தும் பந்துபோல் குதித்தும் இரு கைகளைத் தலைக்கு மேல் மாறிமாறி வீசியும் தலையை இடதும் வலதும் வேகமாய் அசைத்தும் கொண்டிருந்தான். நினைவுகளின் கிறுக்கல்களில் இறுகியிருந்த பிரம்மநாயகத்தின் முகம் லேசாய்த் தளர அது போதுமானதாய் இருந்தது. தன்னையே அறியாமல் பதிலுக்குக் கையசைத்தார். நிலைகொள்ளாத சிந்தனை ஓட்டத்துக்கு நடுவில் அவனைச் சிலநொடிகள் வேடிக்கை பார்ப்பது பிடித்திருந்தது.

வீட்டுக்குப் போனதும் முகமூடி மனிதனைப் பற்றி நிச்சயம் சிவகாமியிடம் சொல்ல வேண்டும்… அவள் என்ன சொல்வாள்? ம்ம்ம்…! என்பாள் இல்லை பெரிதாய் எந்தவொரு பதிலும் இருக்காது. அதற்கான காரணம் நினைவு வரவும் மீண்டும் முகம் இறுகியது.

பேருந்தில் சிவப்பு கவுன் அணிந்திருக்கும் குழந்தை, அம்மாவின் சேலையை இழுத்தபடி தனக்கும் முகமூடி வேண்டும் என்று அடம்பிடித்தது.

“சும்மா சும்மா அடம்பிடிச்சிட்டே இருந்த அந்தப் பூச்சாண்டிட்ட பிடிச்சுக் கொடுத்துருவேன்…”

அதே முகமூடி மனிதனைக் காட்டி கண்களை உருட்டி மிரட்டினாள். மிரண்ட கண்களோடு குழந்தை வெளியே எட்டிப் பார்த்தது. சிலநொடிகள் முன்பு பிடித்திருந்த முகமூடி இப்போது அச்சுறுத்தவும், தலையைத் திருப்பி அம்மாவின் சேலைக்குள் முகத்தைப் புதைத்துக் கொண்டது.

“எல்லாரு முகத்துலையும் முகமூடி இருக்கு. என்ன அவன் போட்டுருக்கறது மட்டும் வெளிய தெரியுது! அவ்வளவு தான்…” என்று சொல்லிவிட்டு தன் சுருங்கிய முகத்தை மேலும் சுருக்கிக்கொண்டு பேருந்து இருக்கைக் கம்பியில் தலைசாய்ந்துக் கொண்ட பெரியவரின் குரல் கேட்டு, பிரம்மநாயகம் இன்னொரு முறை திரும்பிப் பார்த்தார். நகரத் தொடங்கிய பேருந்தின் கரும்புகையில் அவனது முகமூடி மட்டும் தனியொரு நிழலாய் ஆடிக்கொண்டிருந்தது.

பிரம்மநாயகம் மனைவியோடு புதிதாய்க் குடிவந்திருக்கும் ஓரடுக்கு வீடு பேருந்து நிறுத்தத்திலிருந்து பத்து நிமிடங்கள் நடக்கும் தொலைவில் தான் இருக்கிறது. வழியில் தள்ளுவண்டி சாப்பாட்டுக்கடை. தெரு முனையில் இரண்டு ஆட்டோக்கள். அதில் ஒரு ஆட்டோவின் பின்சீட்டில் இரண்டு ஓட்டுனர்களும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர். புதுஊர் என்பதால், இந்த ஆட்டோக்கள் தான், தன் வீட்டிற்குப் போகும் குறுக்குத்தெருவிற்கு பிரம்மநாயகம் வைத்திருக்கும் அடையாளம்.

முக்கியச் சாலையிலிருந்து தன் தெருவுக்குள் நுழையும்போது ஆளரவமற்று இருந்தது. இரண்டு தெரு விளக்குகளில் ஒன்று எரியவில்லை. மற்றொன்று ‘கிர்’ என்ற சத்தத்தோடு எரிந்து கொண்டிருந்தது. சாலையில் பாதிதூரம் இருட்டும் மீதி தூரம் மஞ்சள் வெளிச்சமும் விரவிக்கிடக்க, என்றுமில்லாமல் புதிதாய் இருட்டிலும் வெளிச்சத்திலும் மாறிமாறி நடந்தார். அவரது சிந்தனையோட்டத்தில் முகமூடி மனிதனும் கூடவே வந்தான். தார்ச்சாலையில் ஒளி பின்வாங்கும் இடத்தில் நின்று குனிந்து பார்த்தார். முன்தலை வழுக்கையோ காதுமடலின் அடைசலான நரை முடிக்கற்றையோ இருபுருவங்கள் ஒட்டிய முகமோ இருள்பூசிய சாலையில் தெரியவில்லை.

கோரப்பற்களோடு கூடிய பேய் முகமூடி ஒன்று அணிந்து சத்தமில்லாமல் வீட்டுவாசல் கம்பி-கேட்டைத் திறக்க வேண்டும்! எப்போதும்போல் சிவகாமி தூங்கியிருக்க மாட்டாள். அடுப்படியில் பாத்திரம் கழுவிக்கொண்டோ இல்லை ஏதாவது சமைத்துக் கொண்டோ தான் இருப்பாள். விகார முகத்தோடு அவள் பின்னால் போய் நின்று திடீரென்று அச்சுறுத்த வேண்டும். சுதாகர் இப்படித்தான் செய்திருப்பான். அந்த நினைப்பு வந்ததும், முகம் தானாக தன் உண்மை வடிவத்துக்கு மாறியது.

வீட்டுவாசலில் குண்டு பல்ப் மங்கலாக எரிந்து கொண்டிருந்தது. வலுவற்ற கம்பிக்கதவு திறந்ததும் க்றீச்சிட்டது.

“வந்தாச்சா?” வழமையான சுரத்தற்ற குரல்…

உள்ளறையில் மின்விளக்கை அணைத்துவிட்டு இருட்டுக்குள் உட்கார்ந்திருந்தாள்.

“ம்ம்….” என்றபடியே உள்ளே நுழைந்ததும் படுக்கையறையின் மின்விளக்கைப் போட்டு ஆளுயர நிலைக்கண்ணாடி முன்னால் போய் நின்றார். கண்ணாடி உண்மையைக் காட்டியது. அரைக்கைச் சட்டை அணிந்திருக்கும் அறுபது வயது உணர்வு வறண்ட முகம்.

வழக்கமாய் அணியும் பார்வைக்குப் புலப்படாத முகமூடி ஒன்றை அணிந்து கண்ணாடியில் பார்த்தார், உதட்டோரம் லேசாகச் சிரிப்பு அரும்பியது. வேறொன்றை மாற்றிப் பார்த்தார், காற்றடைத்த பலூனாய் முகம் மலர்ந்தது. அதிலும் திருப்தியில்லை. மனம் அடுத்ததை அணிந்து பார்க்க ஆயத்தமான போது சிவகாமியின் குரல் தடுத்தது, “என்னங்க எவ்வளவு நேரமா கூப்டுட்டு இருக்கேன். சத்தத்தையே காணும்? கண்ணாடி முன்னாடி நின்னுட்டு என்ன பண்றீங்க?”

“ஒன்னுமில்ல சும்மா தான்…”

“என்ன குரல்ல சுரத்தே இல்ல?”

முகத்தை மறைப்பதைப் போல் குரலின் உண்மையை நெறிக்க முடிந்திருந்தால் வசதியாய் இருந்திருக்கும்.

“அதெல்லாம் ஒன்னுமில்ல…”

அவரது பதிலில் மனைவிக்கு நம்பிக்கையில்லை. வலதுகையிலிருந்து தடித்த வெள்ளைத் தூறலாய் தோசைமாவு சொட்டுச்சொட்டாய் தரையில் வடிந்து கொண்டிருப்பதைக் கவனிக்காமல், கணவனின் முகத்தை சந்தேகத்தோடு ஆராய்ந்தாள். அவளது கருவளையம் விழுந்த கண்களை எப்போதும் போல் இன்றும் சிரித்த முகத்திரையோடு பிரம்மநாயகம் எதிர்கொண்டார்.

“சரி கைகால் கழுவிட்டு சாப்பிட வாங்க…” என்று சொல்லிவிட்டு மீண்டும் சமையலறைக்குச் செல்லவும், அவளைப் பின்தொடரும் வெள்ளைமாவுத் தடங்களைப் பார்த்தபடியே நிற்பவரின் உதடுகள் சப்தமின்றி முணுமுணுத்தன, “பைத்தியக்காரி!!”

கடந்த பன்னிரெண்டு வருடங்களாய் இப்படித்தான் ஏமாந்து கொண்டிருக்கிறாள்.

*

பெண்குழந்தை பிறந்தால் ‘வடிவு’ என்ற பெயர்தான் வைக்கவேண்டும் என்று தன் பானை வயிற்றைத் தடவியபடி சிவகாமி சொன்ன அன்று பிரம்மநாயகம் மறுப்பேதும் சொல்லவில்லை. ஆச்சி பெயர்தானே என்றார் சிரித்தபடி. அந்தப் பெயரை விட பெண் குழந்தை… என்று மனைவி சொன்னதில் மனசு நிறைந்தது. திருமணமாகி கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் கடந்திருந்தது. வீட்டில் பெரியவர்களும் அக்கம் பக்கமும் எதுவும் விசேஷம் உண்டா என்று அடிக்கடி விசாரித்தபடி இருந்தனர். ஆச்சி நேரடியாகவே கேட்டுவிட்டாள் “உன் பொஞ்சாதி காய்ப்பாளா மாட்டாளா?”

சுற்றமும் உற்றமும் நரம்பில்லாத நாவால் சுழன்றடித்த சமயத்தில் தான் சிவகாமி கருவுற்றிருந்தாள். பெண்பிள்ளைதான் என்று நம்பினார் பிரம்மநாயகம். மனைவி விருப்பப்படும் ‘வடிவு’ பெயரே வைப்பது என்றும் முடிவாகிவிட்டது. வாயில் விரலை வைத்துச் சிரிக்கும், எச்சில் வடியத் தவழும், முட்டைக் கண்களை அகலத்திறந்து திருதிருவென விழிக்கும் குழந்தைகளின் பலவண்ணப் புகைப்படங்களை சுவரிலும் மனதிலும் இருவரும் ஒட்டினர்.

“பொண்ணு செக்கச்செவேல்னு பொறக்கணும்!” என்றபடி குங்குமப்பூ சேர்த்த பால் தம்ளரை மனைவியிடம் நீட்டுவார். அளவு தெரியாமல் முதல் ஆறு மாதங்களுக்கான உடைகளும் குழந்தையைக் கிடத்த ரோஜா நிறத்திலான மெத்தை ஒன்றும் வாங்கியாகிவிட்டது. பிரம்மநாயகம் எதிர்பார்த்ததைப் போல் பெண்பிள்ளை தான் பிறந்தது, ஆனால் உயிரற்ற பொம்மையாக!

“நான் மலடி இல்லன்னு ஊருக்குச் சொல்லத்தான் வந்துபொறந்தாளா…?” உதைக்காத பிஞ்சு கால்களை தன் மாரில் மோதி அழுதாள்.

துணிக்குள் சுற்றப்பட்ட அசைவற்ற சதைப்பிண்டத்தைப் பார்த்து ‘வடிவு…’ என்று வாய் அனிச்சையாய் முணுமுணுத்த போது பிரம்மநாயகம் கண்ணீர் விட்டு அழவில்லை. வாங்கி வைத்திருந்த ரோஜா நிற மெத்தையில் கிடத்திப் புதைத்தார். அவரது முகம் ஒரு பாறையைப் போல் இறுகியிருந்தது.
. . .

அலுவலகத்திலிருந்து கிளம்பும் போதே பிரம்மநாயகம் யூகித்துவிடுவார், இன்று அவனது அவதாரம் என்னவாய் இருக்கும் என்று. அவருக்கு இந்த அந்தரங்க முகவிளையாட்டு பிடித்திருந்தது.

அவனும் என்றுமே தன்னை ஒரே முகத்திற்குள் அடைத்ததில்லை. ஒருநாள் தலையில் இரண்டு கொம்புகளிருக்கும், நாக்கு வெளியே தொங்கும், பிறகொரு நாள் அரைவழுக்கைத் தலையோடு சிரித்துக் கொண்டிருப்பான் பற்கள் இருக்காது… மற்றொருநாள் மூக்கின் மீது பெரிய பலூன் போல் சிகப்பு வீக்கம்…

சிலசமயம் பிரம்மநாயகத்தின் யூகம் சரியாக அமைந்துவிடும். அப்போதெல்லாம் மனதுக்குள் ஒரு இனம் புரியாத துள்ளல். அவரது இருண்ட வானத்துக்கு இந்தச் சிலநிமிட வெளிச்சம் தேவைப்பட்டது.

கண்களை இறுகமூடி யோசித்தார். தினமும் அவன் கழற்றிமாட்டும் முகங்களில், பிறை நிலவைப் போல் வளைந்த இரண்டு கொம்புகளிருக்கும் நாக்கு வெளியே தொங்கும் பயங்கரமான முகமூடிதான் இன்று அணிந்திருக்க வேண்டும் என்று அழுத்தமாய்ச் சொன்னது உள்ளுணர்வு. வாரயிறுதி நாட்களில் அவன் அப்படிப்பட்ட முகத்தைத்தான் அணிவான்.

தினமும் அமரும் ஜன்னலோர இருக்கை இன்று கிடைக்கவில்லை. சாலையிலும் பேருந்துக்குள்ளும் ஒரே கூட்டம். பக்கவாட்டில் இருக்கும் கம்பியைப் பிடித்து நின்றுகொண்டு சாலையைக் குனிந்து பார்த்தபடியே வந்தார். கூட்ட நெரிசல் அவரது நேர்ப்பார்வையை மறைத்தது. எதிர்நோக்கியிருந்த பேருந்து நிறுத்தம் வந்ததும், கண்களை அகலத்திறந்து சாலையின் முகக்குவியலில் ஒற்றை முகமூடியைத் தேடினார்.

சாலையின் எதிர்புறம் கூட்டம் அதிகம் சேரும் துணிக்கடை வாசலில் நின்றிருந்தான். ஆனால் அவர் எதிர்பார்த்ததைப் போல் பேய் பிசாசு முகமூடி அணிந்திருக்கவில்லை. வாய் உப்பிய மூக்குச் சிறுத்த உருண்டை கண்கள் கொண்ட சாம்பல் நிறத்திலான குரங்கு முகமூடி அணிந்து, பத்து விரல்களையும் பாதி மடக்கி கால்கள் இரண்டும் பின்தொடையில் படும்படி இடைவெளிவிட்டுக் குதித்துக் கொண்டிருந்தான். பிரம்மநாயகத்தின் முகம் பொலிவிழந்து சுருங்கியது.

எட்டு வயதில் சுதாகர் நல்லூர் கொடையில் அடம்பிடித்துக் கேட்டபோது அவனுக்கும் குரங்கு முகமூடிதான் வாங்கித் தந்தார். ஆனால் இதைப்போல் மரத்திலோ நெகிழியிலோ துணியிலோ அது ஆனதல்ல, வெறும் நூலை வைத்துக் கட்டப்பட்ட காகித அட்டையில் வரைந்த குரங்கு முகமூடி! தன் முகத்தைவிடப் பெரிதாக இருக்கும் முகமூடியையே அடம்பிடித்து வாங்கிக்கொண்டான்.

அந்தக் குரங்கு முகமூடியை அணிந்ததிலிருந்து அவன் சேட்டை தாங்கவில்லை… தினமும் பள்ளிக்கூடத்தின் வாசல்வரை அந்த முகமூடியோடு தான் போவான். பள்ளிக்கூடம் முடிந்து வீட்டுக்கு வந்ததும் முகமூடியை மீண்டும் அணிந்து கொண்டு குறுகிய கைப்பிடிச்சுவரில் ஏறி நடப்பான். பின் அங்கேயே உட்கார்ந்து தெருவை வேடிக்கை பார்த்தபடி இருப்பான், முகத்தில் அணிந்திருப்பதைக் கழற்றாமல்.

குரங்கு முகமூடி அவன் முகத்தில் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. சிவகாமி ஊட்டும் சாப்பாட்டு உருண்டைகளையும் குரங்குதான் எதிர்கொள்ளும். கெஞ்சியும் கொஞ்சியும் முகத்திலிருக்கும் குரங்கை கொஞ்ச நேரம் தலைக்குமேல் தூக்கி வைத்துவிட்டு தான் ஊட்டுவாள். தூக்கத்திலும் அதை எடுக்கவிட மாட்டான். வாலில்லாக் குரங்கு தரையில் தூங்குவதைப் போலிருக்கும். அவனறியாமல் அயர்ந்து தூங்கிய பின்தான் கழற்ற முடியும். பின் அவனே ஒருநாள் அந்த முகமூடியை மறந்தும் போனான். காரணமற்ற அதன் காரணம், இன்றுவரை பிரம்மநாயகத்திற்கு விளங்கவில்லை.

இன்று அந்த முகமூடியைத் தேடி எடுக்க வேண்டும் என்று அவருக்குத் தோன்றியது. பரணில் தான் இருக்கும். விறுவிறுவென வீட்டுக்கு நடந்து வந்தவர் படுக்கையறையில் இடுப்பளவு உயரம் கொண்ட மேசையைத் தரையோடு உரசியபடியே இழுத்தார். வெள்ளை மார்பிள் தரையில் மேசையின் மரக்கால்கள் உராயும் சத்தத்தை அவர் பொருட்படுத்தவில்லை.

தன் வலதுகாலை படுக்கையின் மீது வைத்தும் இடதுகாலை மேசையின் மீது வைத்தும் மேலே ஏறினார். பரணிலிருக்கும் எல்லா அட்டைப்பெட்டிகளிலும் தூசி படர்ந்திருந்தது. ஒவ்வொன்றாய் இறக்கி வைத்து துழாவிக் கொண்டிருந்தபோது, “அங்க என்ன உருட்டிட்டு இருக்கீங்க?” அண்ணாந்து பார்த்தபடி மனைவி கேட்டாள். முகத்தை மறைத்தவர் வார்த்தையில் பிடி தவறிவிட்டார்…

“நம்ம சுதாகரு சின்ன வயசுல குரங்கு முகமூடி ஒன்னு எப்போவுமே மாட்டிட்டுத் திரிவானே, அது எங்கன்னு தெரியுமா?”

கட்டுப்பாடின்றி பேசிய வார்த்தைகளைத் தாமதமாகத்தான் உணர்ந்தார். முன்வரிசைப் பற்கள் இரண்டு நாக்கில் அழுத்தமாய்ப் பதிந்தன. தயக்கத்தோடு மனைவியின் முகத்தைப் பார்த்தபோது, அவளது இறுகிய பனிப்பாறை உருகத் தொடங்கியிருந்தது.
. . .
நிலவு தெரியாத கரிய இரவு ஒன்றில் கணவனின் காதில் சிவகாமி மெல்ல முணுமுணுத்தாள் “இந்த மாசம் தள்ளிப் போயிருச்சு. காலையில ஆஸ்பத்திரி போய்ப் பாப்போம்…”

முதல் குழந்தை இறந்து பிறந்து மூன்று வருடங்கள் கழித்து மீண்டும் கருவுற்றிருப்பவளின் முகத்தில் மகிழ்ச்சியை விட இனம் புரியாத பயத்தின் ரேகைகளே அதிகம் நெளிந்தன. மறந்து போயிருந்த இறந்த குழந்தை கனவில் மீண்டும் பிறந்துவந்து கைகால்களை அசைத்து அச்சுறுத்தியது. தனக்கு வாங்கி வைத்த பொருந்தாத ஆடைகளை உடுத்திப் பார்க்க வேண்டும் என்று அடம்பிடித்தது. தாயின் கருவறை இருட்டுக்குள் அது கண்ணாமூச்சி ஆடிய இரவுகளில் பதட்டத்தோடு தூக்கம் கலைந்து விழித்துக்கொள்வாள்.

“என்னங்க இந்தவாட்டி கொழந்த நல்லா பொறக்கும்ல…”

“கண்டத யோசிக்காம தூங்கு…”

உறங்காமல் இரவுவிளக்கு வெளிச்சத்தையே வெறித்துக் கொண்டிருப்பவளின் உச்சந்தலையை மெல்ல வருடிவிட்டார்.

இந்தமுறை பெயர் எதுவும் யோசித்திருக்கவில்லை. துணிமணிகளும் வாங்கவில்லை. சுவரில் எந்தப் புகைப்படமும் ஒட்டவில்லை. எல்லாம் நல்லபடியாக நடந்து முடிந்ததும் திருச்செந்தூருக்கு நடந்து வருவதாக வேண்டியிருந்தார். மருத்துவமனையின் எதிரே இருக்கும் மின்கம்பத்தில் காகங்கள் விடாமல் கரைந்து கொண்டிருந்தன…

“எல்லாம் நல்லபடியா நடக்கும்…” பிரசவ விடுதியில் நடுங்கிய பிரம்மநாயகத்தின் கைகளை இறுகப்பற்றி ஆச்சி சொன்னாள். காகக்கூட்டத்தின் ஓயாத கரைதலைத் தாண்டி சப்தமாய் ஒலித்தது குழந்தையின் அழுகுரல்…

“புள்ள அப்படியே அச்சு அசலா ஒன்ன மாதிரி தான்டே இருக்கான்! பெயரு என்னடே யோசிச்சு வச்சுருக்க…” நெற்றியில் சுருக்கங்கள் படர ஆச்சி கேட்டாள்.

“சுதாகர்…” என்று சொன்னதும் வீலென்று விடாமல் குழந்தை அழுதபோது யார் முகத்திலும் முகமூடி இல்லை.
. . .
வழக்கத்துக்கு மாறாக இன்று ஆண்சிங்கத்தின் முகமூடி அணிந்திருந்தான்… அதன் பழுப்புநிறப் பிடரிமுடிகள் காற்றில் உதிரிஉதிரியாய் பறந்து கொண்டிருந்தன. முகவாய்க்கட்டை மஞ்சள் பற்களின் கூர்மை தெரியும்படி பசித்த சிங்கம் வாய் திறந்து வைத்திருந்தது. சாலையோரத்தில் சப்தமின்றி கர்ஜித்துக் கொண்டிருக்கும் சிங்கத்தை ஒன்றிரண்டு பொடிசுகளைத் தவிர பெரிதாய் யாரும் பொருட்படுத்தவில்லை. தன்னைக் கண்டும் காணாமல் கடக்கும் முகங்களைத் திசை திருப்ப, பிடரியை வேகமாய் இரண்டு மூன்றுமுறை சிலிர்ப்பி அடிவயிற்றை உள்ளிழுத்து மீண்டும் கர்ஜிக்க முயன்றது சிங்கமுகம்.

“என்ன சார் பாக்குறீங்க, இவங்க மோசமானவங்க சார், காலையில இப்படித்தான் மூஞ்சிய மறச்சுட்டு எதயாச்சும் விப்பாங்க… நல்லா வேவு பாத்துட்டு நைட்டு வீட்டுக்குள்ள பூந்துருவாங்க. இதான் இவங்க வேலயே!!”

பேருந்து இருக்கையில் பக்கத்தில் அமர்ந்திருப்பவர் இப்படிச் சொல்லி முடிக்கவும், உறுமிக் கொண்டிருக்கும் பேருந்தைவிட்டு பிரம்மநாயகம் பாதியில் இறங்கவும் சரியாய் இருந்தது.

பள்ளிச்சீருடை அணிந்திருந்த அரும்பு மீசை முகமொன்று “முகமூடி எவ்வளவு?” என்று கேட்கவும் நூறு என்று பத்துவிரல்களை மௌனமாய் விரித்துக் காட்டியது சிங்கமுகம். ஏதும் சொல்லாமல் பள்ளிமாணவன் திரும்பிப் போவதைப் பார்த்தபடியே, தன் வலிமையான சிங்கத்தாடையை அழுத்தி நெஞ்சுவரை நீண்டிருக்கும் பிடரிமுடியை வலதுகையால் நீவிக் கொண்டிருந்தபோது, சிங்கமுகத்தெதிரே அச்சமில்லாமல் போய் நின்றார் பிரம்மநாயகம். சிங்கமுகமூடிக்குப் பின்னால் இருக்கும் சதையால் தைத்த முகம் இளைஞனுடையதாக இருக்கலாம் என்ற யூகத்தில் ஏற இறங்கப் பார்த்தார்… ஆனால் அவனது மெலிந்த உடம்போடு சிங்கத்தலையின் கம்பீரம் ஒத்துப் போகவில்லை. வேட்டையாட வக்கற்ற பலவீனமான வயதேறிய சிங்கத்தைப் போலிருந்தான்.

ஆட்காட்டி விரலை அவன் அணிந்திருக்கும் முகமூடியை நோக்கி உயர்த்திக் கேட்டார் “முகமூடி போட்டுப் பாக்கலாமா?”

சாக்குப்பையிலிருந்து புதிதாய் ஒரு சிங்க முகமூடியை எடுத்து பிரம்மநாயகத்திடம் நீட்டினான். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு முகமூடி என்பது அவன் நிலைப்பாடு. அதில் ஒட்டியிருக்கும் விலையைச் சுட்டிக்காட்டி மீண்டும் பத்துவிரல்களை மடக்கிக் காட்டியது சிங்கமுகம்.

முதல்முறை பிரம்மநாயகத்தின் முகத்தில் மெய்யான முகமூடி. அதுவும் சிங்கமுகம்! அவருள் இருந்த வெறுமையும் சோகமும் பயந்து ஒதுங்க ஆணவமும் கம்பீரமும் அரியணை ஏறியது… திடீரென்று தலையில் கண்ணுக்குத் தெரியாத கிரீடம்! உடம்பில் இனம்புரியாத மிடுக்கு! விரல்களில் கூரிய நகங்கள்! வெளியுலகைப் பார்த்து ‘நான் ஒரு சிங்கம்’ என்று உரக்கக் கர்ஜிக்க வேண்டும் போல் தோன்றியது.

அவரின் புது அவதாரத்தைப் பார்த்து மேகங்களும் அச்சத்தில் மழை பொழியத் தொடங்கின… எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் சாக்குப்பையில் தன் சாலையோரக் கடையை அடைத்து முதுகில் ஏற்றினான். இரண்டு சிங்கங்களும் அருகில் இருக்கும் பலசரக்குக்கடையின் தகரக்கூரையின் கீழ் ஒதுங்கின. தகரத்தின் ஓட்டை வழியே மழை சொட்டுச்சொட்டாய் இருவர் மீதும் வடிந்தது.

காட்டு ராஜாவுக்குப் பட்டாபிஷேகம் என்று பிரம்மநாயகம் மனதில் சிரித்துக் கொண்டார். சிங்கமுகமூடியாகவே இருந்தாலும் அதற்குள் நீண்டநேரம் அடைபட்டிருப்பதும் அதன் சிறிய ஓட்டை வழியே உலகைப் பார்ப்பதும் சிரமம் தான்.

முகமூடியின் கூண்டுக்குள் ரொம்பநேரம் சிறைபட்டிருக்க முடியாமல் முகம் விடுதலை கேட்கவும், பிரம்மநாயகம் சிங்கமுகமூடியை விலக்கினார். மழை நின்ற வானத்தை முகமூடி மனிதன் பார்த்தபடியிருந்தான். அவனது சிங்கப்பிடரி முடிகள் ஈரத்தில் ஒன்றோடொன்று ஒட்டியிருந்தன. முகமற்ற தனக்கு மொழியும் தேவையில்லை என மௌனமாய் நிற்பவனிடம், “இத போட்டுக்குட்டே இருந்தா உள்ள என்னமா வேர்த்து கொட்டுது…” என்று தன் முகமூடியைக் காட்டிச் சொன்னார். சிங்கம் வெறுமனே தலை அசைத்துவிட்டு வெறித்த வானத்தை அண்ணாந்து பார்த்தபடி மீண்டும் வீதிக்குப் போனது.

“பேசறதுக்கும் துட்டு கேட்பான் போலியே….” பக்கத்தில் நிற்கும் அரைக்கைச் சட்டைக்காரரிடம் பிரம்மநாயகம் அலுத்துக் கொண்டார்.

“இவங்களுக்கு எங்க சார் நம்ம பேசுறது எல்லாம் புரியப்போகுது? வடகத்தியப் பயலா இருக்கும். ஏதோ கொஞ்சநஞ்சம் நம்ம பேச்ச புரிஞ்சுகிட்டு எதையோ வித்து பொழப்ப ஓட்டிட்டு இருக்காங்க….” என்று அவர் சொன்னபோது, மீண்டும் சாக்குப்பையைப் பிரித்து ஈரமண்ணில் கடை விரித்திருந்தது சிங்கமுகம்…

ஆட்டோ ஸ்டாண்டைக் கடந்து தன் தெருவுக்குள் நுழையும்வரை பிரம்மநாயகம் காத்திருந்தார். வழக்கத்திற்கு மாறாய் இரண்டு தெருவிளக்குகளும் பிரகாசமாக எரியவும், சிங்கமுகத்துக்கான பிரத்யேக ஏற்பாடுதான் எனத் தோன்றியது. முகத்தின் வியர்வையைத் துடைத்தபடி சுற்றும்முற்றும் பார்த்துவிட்டு மொத்தத் தெருவும் வெறிச்சோடி இருக்கவும், தோள்பையில் அழுந்திக் கிடக்கும் சிங்கமுகமூடியை ஆசையாய் வெளியே எடுத்து வெளிச்சம் வட்டமாய் விழும் தெருவிளக்கின் கீழ்நின்று அணிந்து கொண்டார். எல்லா வீடுகளும் சிங்கத்துக்குப் பயந்து முன்னெச்சரிக்கையாக ஏற்கனவே கதவை சாத்தியிருந்தன.

தன்வீட்டு வாசல்கதவு மேல் கொண்டியை அலட்சியமாய்த் திறந்து வேகமாகத் தள்ளவும் சுவரில் போய் மோதியது. வீட்டுக்குள் போகவில்லை, உள் கதவையும் தட்டவில்லை. இருகைகளையும் பின்னால் கட்டிக்கொண்டு தலையை லேசாய் மேலே உயர்த்தியபடி வாசலிலேயே காத்திருந்தது சிங்கமுகம்.

“என்ன வந்தாச்சா…?”

பதிலேதும் பேசவில்லை. சிங்கம் பதில் சொல்லத் தேவையில்லை.

கலைந்திருக்கும் முடியைக் கொண்டை போட்டபடி வெளியே வந்த மனைவியின் கண்கள் சட்டென விரிந்தன.

“என்னங்க இது கோலம்? டக்குனு ஒரு நிமிஷம் பயந்துட்டேன்!!”

தலையில் அடித்தபடி லேசாய்ச் சிரித்தாள். சிங்கமுகமும் உள்ளே சிரித்துக் கொண்டது. சமீப காலமாய்ச் சிரிக்க மறந்திருந்த உதடுகளின் சில நொடிச்சிரிப்பு.

“சீக்கிரம் அத கழட்டிட்டு வாங்க…”

முகமூடியைக் கழற்றி ஆணியில் மாட்டினார். துருப்பிடித்த ஆணிக்கு சிங்கத்தின் ஆளுமையும் கம்பீரமும் குடிபெயர்ந்ததும் வெறும் பிரம்மநாயகமாய் சாப்பிட உட்கார்ந்தார். தட்டில் சூடாய் நான்கு இட்லிகள்.

“இன்னும் ரெண்டு சாப்புட வேண்டியது தானே..”

மனைவி சொல்வதை வயிறு ஆமோதித்தாலும் மனசு ஏனோ மறுத்தது.

“நீ சாப்பிட்டியா?”

“ம்ம்….” என்று மட்டும் வெறுமனே சொன்னாள்.
. . .
“புள்ளயவா வளக்கீய…” என்று கத்தியவர் காறி உமிழ்ந்தபோது பிரம்மநாயகத்தின் முகம் காரை பெயர்ந்த சுவரைப் போலிருந்தது. பதிலேதும் பேசாமல் கைக்குட்டையால் முகத்தைத் துடைத்துக் கொண்டாரே தவிர எந்த எதிர்வினையும் காட்டவில்லை. கணவனுக்குப் பின்னால் வாசல் நிலைப்படியில் நிற்கும் சிவகாமியின் முகமும் தரையைப் பார்த்தபடி இருந்தது. எதிரே நிற்பவர்களை ஏறிட்டுப் பார்க்கும் தைரியத்தை இருவரும் இழந்திருந்தனர்.

“புள்ளய வளக்கத் தெரியல, நீ கெட்ட கேடுக்கு மீச வேற. உன் மவன் வளந்து இன்னும் எத்தன பேரு குடிய கெடுக்கப் போறானோ… ”

அவரது வார்த்தைகள் வெட்ட வெட்ட கணவனும் மனைவியும் எதிர்ப்பற்ற மரங்களாய் நின்றிருந்தனர்.

சுதாகர் அப்போது பதின்ம வயதை எட்டியிருந்தான். “நம்ம கும்புடுத சாமி தான் உன் வவுத்துல ரெண்டாவதாட்டி பொறந்துருக்கு…” என்று பிரம்மநாயகம் அடிக்கடி மனைவியிடம் சொல்லுவார். அவளும் அப்படியே நினைத்தாள். சுதாகர் பிறந்தபின் நடுஇரவில் தூக்கம் கலைக்கும் பழைய கனவுகள் நின்றிருந்தது. முதல் குழந்தைக்கும் சேர்த்தே அவனை வளர்த்தாள். அந்தக் குழந்தைக்கு வாங்கி வைத்திருந்த உடைகளையும் சுதாகருக்குப் போட்டு அழகு பார்த்தாள்.

“ஊர்ல இல்லாத புள்ளய பெத்துட்டா. பண்ணுத அளப்பறைய பாரு…” யாருடைய கேலிப்பேச்சும் காதில் விழாது.

சுதாகர் வாய்திறந்து கேட்கும் முன் விரும்பிய பொருள் கையிலிருந்தது. ‘ஒரே புள்ள…’ என மகனின் சட்டைப்பையில் அப்பா காசு தாராளமாகப் புரளத் தொடங்கியது. மகன் வளர்ந்த பின்னும் சிவகாமி மாறவில்லை. மடியில் கிடத்தி சோறூட்டினாள். அம்மாவின் சேலை முகப்பே அவன் தன்னை மறைத்துக்கொள்ளும் முகத்திரையானது.

பால்கார கணேசன் பிரம்மநாயகத்திடம் சுதாகரை முச்சந்திக் கடையில் பார்த்ததாகச் சொன்னான். ‘முச்சந்திக்கடை’ வாலிபர்கள் திருட்டுப் புகைக்கும், தடம் புரள்வதற்குமானத் தளம்… சுதாகரிடம் அதட்டிக் கேட்டார். அவனது பார்வை முதல்முறை பம்பரம் போல் நிலையற்றுச் சுற்றியது. கை ஓங்கிய கணவனை குறுக்கே வந்து தடுத்தாள் சிவகாமி.

“பொண்ண பெத்துருந்தா தான்யா தெரியும், என் வவுத்தெரிச்சல்…” எதிரே உரத்த குரலில் பேசிக் கொண்டிருந்தவரின் கண்களில் கோபம் கலந்த கண்ணீர் முட்டியது.

“உங்க பொண்ணும் தான…” பிரம்மநாயகத்தின் உதடு லேசாய் முணுமுணுத்தது.

“அவளுக்கு பதிமூனு வயசுயா! பதினைஞ்சு வயசு பையன் பண்ணுற வேலயாய்யா இது…” மீண்டும் கை ஓங்கியபோதும் பிரம்மநாயகம் அசைவற்று நின்றார்.

“நாசமா தான் போவான் உன் பையன்…” மண்ணை வாரித் தூற்றிவிட்டுப் போனார்கள்.

“இவனும் செத்தே பொறந்துருக்கலாம்…!” காதில் விழுந்த வார்த்தைகளை நம்பாமல் பேசிய மனைவியை உற்றுப் பார்த்தார். அவளின் வார்த்தைகளைப் போல் முகத்திலும் உயிரோட்டமில்லை. பயத்தில் சுதாகர் அன்று இரவு பதினோரு மணிக்குதான் வீட்டுக்கு வந்தான்.

“புளியமரத்துக்குப் பின்னால பொட்ட புள்ளயோட உனக்கு என்ன சோலி?”

பெல்ட்டை கழற்றி கோபம் தீர அடித்தார். வலியில் ‘அம்மா அம்மா’ என்று மகன் கதறும் சப்தம் காதில் விழாததைப் போல் இறுகிய முகமூடியோடு கல்லாய் நின்றாள்…
. . .
பேருந்திலிருந்தபடி எட்டிப் பார்த்தார். இன்றைய மாலைப்பொழுதும் மற்றைய தினங்களைப் போலவே இருந்தது. பேருந்தின் கரும்புகை, பாதையின் இருமருங்கிலும் பளிச்சிடும் மின்விளக்குகள், குறுக்கும் நெடுக்கும் நடமாடும் மனிதர்கள், சாலையின் குண்டு குழிகளில் தேங்கிய மழைநீர், அதில் நொடிப்பொழுது பிடிபடும் கலங்கிய முகங்கள், மழைபெய்து சகதியான கடைத்தெரு, அதைப் பொருட்படுத்தாத கூட்டம், ஆட்டோவின் ஹாரன் சத்தம், இருட்டத் தொடங்கும் வானம் எதுவும் மாறவில்லை, முகமூடி மனிதனைத் தவிர. இரண்டு வாரங்கள் கடந்து விட்டன. கடைசியாய் அவனைச் சிங்கத்தலையோடு பார்த்தது. அவன் இல்லாத கூட்டமான கடைத்தெருவும் வெறிச்சோடித் தெரிந்தது. ‘முகமூடி மனிதன்’ என்ற ஒற்றை அடையாளத்தைத் தவிர எதையும் அவன் விட்டுச்சென்றதாய்த் தெரியவில்லை. முகமும் முகவரியும் இல்லாதவன் எங்கு சென்றிருப்பான்? போட்ட வேஷங்கள் போதும் என்று கிளம்பி விட்டானா?

“இங்க ஒருத்தன் முகமூடி வித்துட்டு இருப்பானே…”

“வேற ஏதாவது ஊருல இந்நேரம் கடைய விரிச்சுருப்பான்… நாடோடி பொழப்பு… அவங்க வாங்கி வந்த வரம் அப்படி!”

கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேலிருக்கும். நாட்களின் ஓட்டத்தில் எதையோ தேடி அலையும் மக்களுக்கு முகமூடி மனிதன் எப்போதோ கடந்த காலமாகியிருந்தான். ஒருவேளை காலம் அவனது முகமூடியையும் பிடுங்கியிருக்கலாம். வாழ்க்கை முழுதும் அவன் முகத்தை மறைத்துதான் அலைய வேண்டுமா என்ன?

*
இருண்டவானில் அந்தரத்தில் பல முகமூடிகள்! இரவின் இருட்டில் அவை நட்சத்திரங்களாய் ஜொலிக்கின்றன. முகத்தை மறைத்தபடி ஒருவன் அந்தரத்தில் மிதந்து கொண்டிருக்கிறான். அவனைச் சுற்றி பலவித முகமூடிகள் இருண்ட வெளியெங்கும் சிதறிக் கிடக்கின்றன. அவனது முகம் காணவேண்டி நெருங்கும் பிரம்மநாயகத்தை முகமூடிகள் சூழ்ந்து சிரிக்கின்றன, அழுகின்றன, அஞ்சுகின்றன, அச்சுறுத்தின, கெஞ்சின… கண்ணுக்குத் தெரியாத நூலில் தொங்கும் முகங்களைப் பிடுங்கி எறிய கைகளை உயரே நீட்டவும் அவை கனவாய்க் கலைந்தன…
காலைக்கனவு இடிபாட்டிலிருந்து பிரம்மநாயகம் தப்பி விழித்தபோது உடல் வியர்த்திருந்தது. காலச்சுனாமியில் சுதாகரின் முகமும் அடித்துச் செல்லப்பட்டு பன்னிரெண்டு வருடங்கள் கடந்துவிட்டன.
அடிவாங்கிய இரவு வீட்டைவிட்டு ஓடிப்போன மகன் இன்னும் திரும்பவில்லை… போலீசிடம் புகார் செய்தும்… காசை வாரியிறைத்தும்… ஊர் ஊராய் வருடக்கணக்கில் தேடியும் பலனில்லை. வேகமாய்ச் சுழலும் வாழ்க்கையில் எங்கோ வீசி எறியப்பட்ட முகங்களில் அவனும் ஒன்றானான். மனைவி சிரிக்க மறந்து போனாள். பிறரது சிரிப்பும் சந்தோஷமும் காரணமற்ற கோபத்தைக் கிளறியது. தன்னைக் கடக்கும் எல்லா முகங்களும் அவளுக்கு மகனுடையதாய்த் தெரியவும் வீட்டைவிட்டு வெளியே போகவும் அஞ்சினாள். அப்படிச் செல்லும் அரிய நாட்களிலும் அவளது கண்கள் எதிர்ப்படும் முகங்களை மேய்ந்தபடி இருக்கும்…

“நானாச்சும் வேல விசயமா அங்க இங்கனு வெளிய போறேன். பாவம் வீட்லயே அடைஞ்சு கிடக்குற பொம்பள என்ன செய்வா? மவன நெனைச்சு அழுதுட்டே இருக்கா…“

“வீட்ட மாத்தி பாருங்க…”

வாடகை வீட்டை மாற்றிப் பார்த்தார். புது இடத்தில் அவர்களுக்கு முன்னால் இருண்மை குடிபெயரவும் வசிக்கும் ஊரை மாற்றினார். இதற்காகவே அடிக்கடி வேலையில் மாற்றல் வாங்குவார்.

சுதாகரின் ஒவ்வொரு பிறந்தநாளுக்கும், அவனில்லாமல் உவப்பின்றி கடக்கும் பண்டிகைகளுக்கும் பிரம்மநாயகம் மகனுக்கு புதுச்சட்டை வாங்கி வைப்பார். “அவனுக்கு இது சரியா இருக்குமா…?” என்று மனைவியிடம் கேட்க நினைக்கும் போதெல்லாம் தொண்டைக்குழியிலேயே முற்றுப்புள்ளி வைத்துவிடுவார்.

விடியல் கனவின் பாரத்தால் இன்று வீட்டைவிட்டுத் தாமதமாய் அலுவலகம் கிளம்பிய பிரம்மநாயகத்தின் குறுக்கே காகம் ஒன்று இடைவிடாது கரைந்தபடியே பறந்து போனது… தெருமுனையில் வழக்கத்துக்கு மாறாய் ஒரே கூட்டம். கூட்டத்திலிருந்த ஆட்டோகாரர் சொன்னார்…

“யாருனு தெரில சார், முகத்த மறைச்சுட்டு கொஞ்ச நேரமா நம்ம தெருல இங்குட்டும் அங்குட்டும் அலைஞ்சுட்டே இருந்துருக்கான். கூப்ட்டு விசாரிச்சா சரியா பதிலும் சொல்லல. முகத்துல உள்ளதையும் கயட்டல… திருட்டுப்பயன்னு புடிச்சு அடிச்சுருக்காங்க. பாவம், அடி தாங்காம செத்துட்டான்!”

சாலையோரம் குப்புறக் கிடந்தான்… சுற்றிலும் வெறித்தபடி முணுமுணுத்தபடி நிற்கும் முகங்களில் முட்டிமோதி கூட்டத்தை ஒதுக்கி எட்டிப் பார்த்தார். தரையில் கிடப்பவனின் காகிதக்குரங்கு முகமூடி கிழிந்து விலகியிருப்பதை உற்றுப் பார்த்ததும் உடல் உதறலெடுத்தது. அலுவலகப்பையை வீசி எறிந்து ரத்தம் தோய்ந்த முகத்தை நடுக்கத்தோடு குனிந்து பார்த்தவர், வீதியே அதிர அலறினார். பல ஆண்டுகளாய் அடங்கிக் கிடந்த ஓலம்…

***

விஜய ராவணன்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular