Tuesday, July 16, 2024
Homesliderமாற்றத்தைக் கொண்டுவரும் நம்பிக்கைத் தாரகை – அமண்டா கோர்மன்

மாற்றத்தைக் கொண்டுவரும் நம்பிக்கைத் தாரகை – அமண்டா கோர்மன்

கார்குழலி

ஜனவரி 20-ஆம் நாளன்று வாஷிங்டன் டி.சி.-இல் இருக்கும் அமெரிக்கச் சட்டமன்றக் கட்டிடமான கேபிடல் ஹில்லின் மேற்கு வாயிலில் நடைபெற்ற விழாவில் அமெரிக்க அதிபராகப் பதவியேற்றார் மக்களாட்சிக் கட்சியின் ஜோ பைடன். பெரும்பாலும் மெய்நிகர் வழியில் நடைபெற்ற விழாவில் நேரடியாகக் கலந்துகொள்ள வெகு சிலருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டது. அப்படி அழைக்கப்பட்டவர்களில் அந்த 22-வயது இளம்பெண்ணும் ஒருவர். அவர் பார்வையாளர் அல்ல, விழாவைச் சிறப்பிக்க வந்த கலைஞர்களில் ஒருவர். அந்தப் பனிக்காலக் காலையில் உறைய வைக்கும் குளிர்காற்று வீசியதோடு மெலிதான பனிப்பொழிவும் ஏற்பட்டபோது வந்திருந்த விருந்தினர்கள் தாங்கள் அணிந்திருந்த கம்பளி ஆடைகளோடு விழா ஏற்பாட்டாளர்கள் வழங்கிய சால்வைகளையும் அணிந்துகொண்டு உடலுக்குக் கதகதப்பூட்டிக்கொள்ள முயன்றனர்.

சிறிது நேரத்தில், கண்ணைப்பறிக்கும் மஞ்சள் வண்ண அங்கியும் சிவப்பு வண்ணத் தலைப்பாகையும் அணிந்திருந்த அந்தக் கறுப்புப் பெண் மேடையேறியதும் அந்த இடமே சூரியனின் வெங்கதிரால் ஒளியும் வெப்பமும் ஊட்டப்பட்டதுபோல மிளிர்ந்தது. மிடுக்கான தோற்றமும் தன்னம்பிக்கை தெறிக்கும் உடல்மொழியும் கொண்ட அந்தப் பெண் பைடனின் வரலாற்றுச் சிறப்புமிக்க பதவியேற்பு விழாவிற்காகத் தான் எழுதிய கவிதையை வலிமையான குரலில் முழங்க ஆரம்பித்தார். கவிதையின் சொற்களுக்கேற்ப அவருடைய கையும் விரல்களும் கடலலைபோலக் காற்றில் அசைந்தன. உலகை இரட்சிக்க வந்த ஒரு பெண் கடவுளைப்போல மேடையின் நாலாபுறமும் பார்வையைச் சுழற்றியபடி அவர் வாசித்த கவிதையை உலகமே வியந்து கேட்டது. அந்த மேடையில் வேறு பல பெண் சாதனையாளர்களும் இருந்தார்கள். அவர்கள் எல்லோரும் ஒரு வகையில் அந்தப் பெண்ணுக்கு வழிகாட்டியைப் போலவும் அவருக்காகக் களத்தைத் தயார்செய்து வைத்தவர்கள் போலவும் அவரின் வருகைக்காகக் காத்திருந்த மூத்த பெண் கடவுளர்கள் போலவும் அவரின் வலிமையிலும் ஆற்றலிலும் மாட்சியிலும் மெய்சிலிர்த்தனர். அவரை மனதாரக் கட்டித் தழுவினர்.

அந்த மாபெரும் சபையில் கவிதை வாசித்த அந்த இளம்பெண்ணின் பெயர் அமண்டா கோர்மன் (Amanda Gorman). அமெரிக்காவின் முதல் தேசிய இளைய அரசு கவி என்ற பெருமையைப் பெற்றவர். அவருடைய முதல் கவிதைத் தொகுதியான ‘உணவு போதாமல் இருக்கும் ஒருவரை’ (The One for Whom Food Is Not Enough) பதினேழாவது வயதில் வெளிவந்தது.

சமூக அக்கறைகொண்ட கவிதைகளை எழுதுவதோடு அந்த அக்கறைக்கும் பொறுப்புக்கும் செயல்வடிவம் கொடுப்பவராகவும் இருக்கிறார் அமண்டா கோர்மன். வளரிளம் பருவத்தினரின் எழுத்துத் திறமையை வளர்ப்பதற்காக இலாபநோக்கமில்லா நிறுவனமொன்றைத் தொடங்கி அதன்மூலம் எழுத்துப் பணிமனைகளை நடத்துகிறார். அதுதவிர பல்வேறு புகழ்பெற்ற நிறுவனங்களுடன் இணைந்து சமூக மாற்றம், வளர்ச்சி, பெண்களின் முன்னேற்றம், கறுப்பின மக்களுக்குச் சமத்துவம் இவற்றுக்காகக் குரல்கொடுக்கிறார்.

இத்தனையோடு கூடவே இளைஞர்களுக்குப் பொதுவாக இருக்கும் ஆசைகளையும் இரசனைகளையும் கொண்டவராகவும் இருக்கிறார். கேபிடல் ஹில்லில் பிரபலங்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களைத் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுக் குதூகலிக்கிறார். சில வருடங்களுக்கு முன்னர் மிச்சல் ஒபாமாவை முதலில் சந்தித்தபோது அவரின் தனிப்பட்ட பாதுகாவலரிடம் தன் கவிதை ஒன்றைக் கொடுத்து மிச்செலிடம் சேர்த்துவிடுமாறு கேட்டுக்கொண்டதைச் சொல்லிச் சிரிக்கிறார். இரட்டையர்களான தானும் தன் சகோதரி கேப்ரியேலும் (இவர் ஒரு திரைக்கதை எழுத்தாளர், சமூகச் செயற்பாட்டாளர்) புகழ்பெற்ற இடங்களில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களைப் பதிவிடுகிறார்.

அமண்டா கோர்மன் எல்லாப் பெண்களையும் போலவே புதுப்பாணி ஆடை அணிகலன்களில் ஆசைகொண்டவர். பதவியேற்பு விழாவில் ஓப்ரா வின்ஃபிரே (Oprah Winfrey) பரிசளித்த கூண்டுப் பறவை மோதிரத்தையும் தங்கக் காதணியையும் அணிந்திருந்தார். கவிஞர் மாயா ஏஞ்சலோவின் ‘கூண்டுப் பறவை பாடுவது ஏன்’ (Why the Caged Bird Sings) என்ற கவிதையை நினைவூட்டும் வகையில் அந்த மோதிரம் வடிவமைக்கப்பட்டு இருந்தது சிறப்பு. மிலன் நகரில் நடைபெற்ற ஃபேஷன் நிகழ்ச்சியில் புகழ்வாய்ந்த புதுப்பாணி ஆடை உற்பத்தி நிறுவனமான பிராடாவின் (Prada) ஆடை அணிவகுப்பில் கலந்துகொண்டார். ஹெல்முட் லாங் (Helmut Lang) என்ற வடிவமைப்பாளர் வடிவமைத்த ஆடைகளை அணிந்துகொண்டு விளம்பரங்களில் நடித்திருக்கிறார்.

கவிதைக்கும் புதுப்பாணி உடைகளுக்கும் உள்ளார்ந்த உறவு இருப்பதாகக் கூறுகிறார் அமண்டா கோர்மன். தான் எழுதும் கவிதைகளின் உணர்வை வெளிப்படுத்தத் தான் அணிந்துகொள்ளும் ஆடை உதவுகிறது என்கிறார். “என் கவிதை மொழிக்குக் காட்சி சார்ந்த அழகுணர்ச்சியைத் தருகின்றன புதுப்பாணி உடைகள். நான் மேடையில் கவிதை வாசிக்கும்போது என் உடையைப்பற்றி மட்டும் நினைப்பதில்லை. நான் அணிந்திருக்கும் வகாண்டா ஃபோரேவேர் (Wakanda Forever) டீ-ஷர்ட்டும் மஞ்சள் வண்ணப் பாவாடையும் ஒரு கவிஞராக என்னை எப்படி அடையாளபடுத்துகிறது என்பதைப் பற்றியும் சிந்திக்கிறேன்.”

ஆழ்ந்த சிந்தனையும் வலிமையான குரலும் பரந்த வாழ்வியல் கோட்பாடுகளும் கொண்டவராக இருப்பதோடு இளைஞர்களுக்கு வழிகாட்டியாகவும் வருங்காலத்தின் நம்பிக்கைத் தாரகையாகவும் இருக்கும் அமண்டா கோர்மனைக் கொண்டாடும் மனநிலையில் நான் எழுதிய கவிதையை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.


கொற்றவையின் மாட்சியைக் கொண்டாடுவோம்

நீ ஒரு கறுப்புச் சூரியன்;
ஒளிரும் உன் முகம்
மன இடுக்குகளில் ஒளிந்திருக்கும்
பயத்தையும் பொய்ம்மை இருளையும்
விரட்டி அடிக்கிறது.

மலர்க் கிரீடத்தை மொய்க்கும்
கருவண்டுக் கூட்டத்தை ஒத்த
உன் அடர்கூந்தலோ
உன் முகச் சூரியனின்
ஒளி சிதறிவிடாமல் இருக்கக்
கரை கட்டுகிறது.

இளவேனில் சூரியனின் கதகதப்பும்
அதில் உயிர்த்தெழுந்த
பசுந்தளிர்களும் வண்ணமலர்களும்
உன் மேனியை
ஆடையாக அலங்கரிக்கின்றன.

வீரியமிகுந்த
விடுதலை விதைகளின் சரம்
உன் காதுகளில் இருந்து
வழிந்தோடி
நிலந்தொட்டு முளைக்கிறது.

உன் சின்னஞ்சிறிய
கூர்ந்த கருவிழிகளின்
நேர்கொண்ட பார்வையும்
தொலைநோக்கும்
புதிய பாதைகளைச் சுட்டுகின்றன.

பொருள்பொதிந்த புன்னகையைச் சிந்தும்
உன் மெல்லிய உதடுகள்
கனல்வீசும் சொற்களைக்
கவிதையாகக் கோர்த்து
மானுடத்தின் எதிரிகளின்மீது கக்குகிறது.

குளிரொளி சிந்தும் நிலவைச்
செதுக்கிச் செய்த
உன் வெண்பற்கள்
தோள்கொடுக்கும் தோழர்களின் பக்கம்
பால் புன்னகையைப் பொழிகிறது.

உன் கவிதையின் சந்தத்தோடு இசைந்து
தென்றலில் அசையும் பூங்கொடியாக
வளைந்தாடும் உன் விரல்களின் நளினம்
பிரிவினையைத் தூண்டும் வீணர்களுக்கு
விஷம் கக்கும் பாம்பின் நடனமாகக்
காட்சியளிக்கிறது.

உன் சுடர்மிகும் அறிவும்
சிந்தனைத் திறனும்
நீ பாடும் கவியும்
சமத்துவ ஒளியைப்
புவியெங்கும் பாய்ச்சுகின்றன.

மூன்றாம்தரக் குடிமக்களாக
விதிக்கப்பட்டவர்களின் மீட்பரை
ஆணாகவே வரித்துக்கொள்ளும் கண்களுக்குக்
கொற்றவையின் மாட்சி
புலப்படுவதில்லை.

மெல்ல நகைத்துக்கொள்ளும்
உனக்குத் தெரியும்,
பொங்கிச் சுழித்தோடும்
காட்டாற்றுக்குக்
கடவுச் சீட்டு தேவையில்லை.
வீறுகொண்டு எழும் சிங்கம்
கட்டியக்காரனின் பாடலுக்குக்
காத்திருப்பதில்லை.


இதோ அமண்டா கோர்மன் எழுதிய கவிதையொன்றின் தமிழ் மொழியாக்கம்.

கவிதை: ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஒரு எழுத்தாளர் இருக்கிறார்
ஆங்கிலத்தில்: அமண்டா கோர்மன்
தமிழில்: கார்குழலி

ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும்
ஒரு எழுத்தாளர் இருப்பதாக நம்புகிறேன்:
தன் ஒளிவீசும் எதிர்காலத்தைத்
தானே தீர்க்கமாக இயற்றும் ஒரு கவிஞர்,
விடியலைத் தள்ளிவைத்து
இரவு முழுதும் பணியாற்றுகிறார்,
தன் பக்கத்தில் இருந்து ஊக்கமூட்டும்
பெண்களின் வெற்றிக்காக,
தனக்குள்ளே உயிர்வாழும்
பெண்களின் வரலாற்றுக்காகவும்.
ஒரு ஏஞ்சலோ, ஒரு சிஸ்நெரோஸ், ஒரு ச்சிம்மமண்டா,
ஆணின் உயரத்துக்குச் சமமாக நிற்கிறாள்,
அவளுடைய எழுத்து எவருக்கும் கீழ்ப்படிவதில்லை,
அவளுடைய பாலினத்தைக் கடந்த காரணத்தால் அல்ல,
மாறாக, அவளுடைய பாலினத்தினால்தான்.
ஏனெனில், அவள் எழுதுகிறாள்,
அதன் வழியாகப் போர்த்தொடுக்கிறாள்.
அவள் ஆண்களின் முன்னிலையில்
மௌனத்தை அணிந்துகொள்வதால்
புதிய காலங்கள் எழுதப்படுவதில்லை,
விரட்டிச் செல்லும் பேனாவின் மூலம்
தன் எதிர்ப்பைக் காட்டுவதால்தான்.

***

கார்குழலி – மொழிபெயர்ப்பு மற்றும் கவிதைகளில் தொடர்ந்து இயங்கி வரும் கார்குழலி. வெவ்வேறு இதழ்களின் கட்டுரைகளும் எழுதிவருகிறார். விரைவில் அவரது கவிதைகள் தொகுப்பாக இருக்கின்றன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular