Monday, December 9, 2024

மாமா

ஷான்

ன் பாட்டியோட பிறந்தநாள் இன்னிக்கு. இருந்திருந்தா இப்ப அவளுக்கு நூத்தி எட்டு வயசு” என்றார் பாண்டியன். அவருக்கு வயது நூற்றுப் பன்னிரண்டுதான். அவருடன் பேசிக்கொண்டு சென்னையில் நின்றிருந்த புனீத்தின் திரையில் அவருடைய சுருக்கங்கள் நிறைந்த முகம் தெரிந்தது. ஆனால் அந்தக் கண்களில் குறும்பு மின்னியது. பின்புறத்தில் அவர் தற்போது வாழும் மாளிகை. அது சிம்லாவில் இருக்கிறது. அதிநவீன ரோபாடிக் வசதியுடன் கட்டப்பட்ட வீடு. அவர் தனியாகத்தான் அங்கே வாழ்ந்து வந்தார். அவருக்கு வெளி மனிதர்கள் உதவியோ தொடர்போ தேவையில்லை. நாட்டின் பெரும்பாலான முதியவர்கள் அப்படி ஒரு வாழ்க்கையைத்தான் வாழ்ந்து வந்தார்கள். அவரவருக்கு அவரவர் வேலை.

புனீத் தனது முன்புறம் காற்றில் விரிந்திருந்த அவருடைய வீடியோவுடன் பேசிக் கொண்டிருந்தான். ஏர் டிஸ்ப்ளே என்று காற்றில் படம் காட்டும் வித்தை. பாண்டியன் ஒரு தானியங்கி சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தார். அவர் நினைக்கும் இடத்துக்கு அது போகும். வேண்டுமென்றால் குரல் கட்டளையிலும் இயக்கலாம். புனீத் அவருடைய பேரன்.

“அழகி வந்துட்டாளா?”

பாண்டியனின் குரலில் இன்னும் அப்படி ஒரு கூர்மை.

“இல்லை.. பத்து நிமிஷம் ஆகும்” என்றான் புனீத்.

அவனுடைய திரையின் ஒரு ஓரத்தில் சென்னை மாநகரத்தின் வரைபடம் ஒன்று தெரிந்தது. அழகி இப்போது வந்து கொண்டிருக்கும் இடமும் நேரமும் அதில் தெரிந்தது. அவனைக் கடந்து பலர் வேகு வேகென்று நடந்து கொண்டிருந்தார்கள். இப்போதெல்லாம் குறைந்த தொலைவுக்கு சைக்கிளும் நடையும் விருப்பத்துக்குரிய தேர்வாக மாறிவிட்டன. எந்த வகையில் போக்குவரத்தை மீறினாலும் அதை ஜிபாட் என்ற அரசாங்க செயற்கை நுண்ணறிவு கண்டறிந்து அபராதம் விதித்து விடும். சாலை விபத்துகளில் இறப்பு என்பது நிகழ்ந்து இருபத்தைந்து ஆண்டுகளாகின்றன. வாகனங்களை இயக்குவது அனைத்தும் ஏஐ ஓட்டுநர்கள் என்பதால் அப்படி ஒரு துல்லியம். மணிக்கு 250 கிமீ வரை போனாலும் அடுத்தடுத்த வாகனங்கள், டிராஃபிக் சிக்னல் ஆகியவற்றோடு தொடர்ந்து வலைப்பின்னல் தொடர்பில் இருப்பதால் மோதல் என்பதே சாத்தியமில்லாத ஒன்றாகியிருந்தது. மனிதர்கள் வாகனங்கள் ஓட்டுவது சட்டப்படி குற்றம் என்று வந்துவிட்டது. ஆசைப்பட்டால் விஆர் உலகத்தில் ஒரு கேம் விளையாடுவது போல ஓட்டிக் கொள்ளலாம்.

“கோவிந்தன் என்ன சொல்றான்?”

கோவிந்தன் பாண்டியனின் மகன். புனீத்தின் அப்பா.

“அவருக்கு நான் மாமா சொன்ன பெண்ணைக் கட்டிக்கொள்ள வேண்டும் என்பது தான் விருப்பம்”

“ரொம்ப அடம் பிடிக்கறானா?”

“உன்னோட மகனாச்சே தாத்தா…”

“நான்சென்ஸ். என்னுடைய விந்தணுவிலிருந்து வந்தான் என்பதற்காக அவனுடைய எல்லா பைத்தியக்காரத்தனத்துக்கும் நான் பொறுப்பாக முடியாது”

“நீ ஒரு சைக்கோ ஓல்டு மேன்… இரு அவ வந்துட்டா. நான் அப்புறம் பேசறேன்”

அழகி கண்ணில் தெரியத் தொடங்கினாள். புனீத் எழுந்து நின்றதும் அவன் முன்பிருந்த திரை காற்றோடு கரைந்து போனது.

எளிமையான அதே நேரம் கச்சிதமாகப் பொருந்திய அவளுடைய வெள்ளை சட்டை, நீல ஜீன்ஸ் உடையைப் பார்த்ததும் புனீத் அணிந்திருந்த ஸ்மார்ட் ஆடை சட்டென்று அவளுக்கேற்ப நிறம் மாறிக் கொண்டது. காற்றில் மிதக்கும் இறகு போல ஒரு மின்னணு மிதிவண்டியில் அவன் அருகே வந்து இறங்கினாள் அழகி. காரணப் பெயரல்ல. அவள் பெயரே அழகிதான். அவள் இறங்கியதும் அந்த சைக்கிள் தானாகவே விலகிச் சென்று ஆறு போல் ஓடிக்கொண்டிருந்த போக்குவரத்தில் கலந்து மறைந்தது. வேறு ஒரு பயணி அதைத் தனது செயலி மூலம் அழைத்திருப்பார். அவளிடம் மனதைக் கவரும் ஏதோ ஒரு மலரின் வாசம் வீசியது. கூந்தல் காற்றில் அலைபாய்ந்தது. மேலே இரண்டு பட்டன்களைப் போடாமல் விட்டிருந்தாள். சற்றுப் படபடப்பாக இருந்தாள்.

“ஹாய் புனீத்.. சோ சாரி.. கொஞ்சம் தாமதம்”

மெய்நிகர் முப்பரிமாண உலகத்திலும் ஏற்கனவே சந்தித்ததை விட நேரில் சற்று சிறிதாகத் தெரிந்தாள். ஆனால் அது அவள் அழகை இன்னும் கச்சிதமாக்கிக் காட்டியது.

“பரவால்ல அழகி.. ஜஸ்ட் மூனு நிமிஷம்தான் நீ லேட்…”

சற்றே அசட்டுத்தனமாக. அழகி தலையை மறுப்பாக ஆட்டினாள்.

“மூனு நிமிஷம்.. நேத்து நியூஸ்ல பாத்திருப்பியே… அது எங்க கம்பெனிக்கு ஒரு வீடு கட்டி முடிக்கற நேரம்” என்றாள். நேற்றுதான் ரோபாட்டிக் அசுரர்கள் என்ற நிறுவனம் மூன்று நிமிடங்களில் ஒரு வீட்டைக் கட்டி முடித்து உலக சாதனை புரிந்திருந்தார்கள். அங்கேதான் அழகி வேலை செய்கிறாள்.

இருவரும் மெல்ல நடந்தார்கள். இப்போது சென்னை மாநகரின் பெரும்பாலான இடங்கள் ஏரிகளாகவும் அதைச் சுற்றிய பகுதிகள் நடைபாதைகளாகவும் உடற்பயிற்சி செய்யும் இடங்களாகவும் மாறியிருந்தன. அதைவிட்டால் உணவகங்களும் எக்ஸ்ஆர் கேளிக்கை அரங்கங்களும் நிறைந்திருந்தன. அவற்றினுள் சென்றால் ஒரு கதைக்குள் நுழைந்து நீங்களும் பாத்திரமாகி சிலமணி நேரங்கள் உலவிவிட்டு வரலாம். நிஜத்துக்கு அருகில் இருக்கும் நிழல் அது. ஒரு சிலர் கதையில் நடப்பதை உண்மையாக நம்பி மரணம் அடைந்ததை அடுத்து எக்ஸ்ஆர் சிமுலேஷன்கள் மனிதர்களைப் போலவே நூறு சதவீதம் உருவாக்கப்படுவது சட்டத்தால் தடை செய்யப்பட்டிருந்தது. திரையின் ஒரு ஓரத்தில் நீங்கள் காண்பது உண்மையான உலகம் அல்ல என்பது மின்னிக் கொண்டே இருக்கும். மது அருந்துதல் உடல் நலத்துக்குத் தீங்கு விளைவிக்கும் என்ற அறிவிப்பு வருவது போல.

வீடுகளும் அலுவலகங்களும் தொழிற்சாலைகளும் நகருக்கு வெளியே அதற்கென ஒதுக்கப்பட்ட சாட்டிலைட் நகரங்களுக்கு முழுதாக நகர்ந்திருந்தன. கட்டிடங்களை இடிப்பதும் கட்டுவதும் மாதங்கள் பிடிக்கும் வேலையிலிருந்து நாட்கள் பிடிக்கும் வேலையாக மாறிவிட்டன. சாட்டிலைட் நகரங்கள் அனைத்தும் ஹைபர் லூப் மூலம் இணைக்கப்பட்டிருந்தன. ஒரு குமிழியினுள் ஏறி அமர்ந்தால் நிமிடங்களில் சில நூறு கிலோமீட்டர்களைக் கடந்துவிடலாம் என்பதால் யார் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். இதனால் நகரங்களில் நெரிசல் குறைந்திருந்தது.

அடையாறு நதியின் நீர் பளிங்கு போல் சுத்தமாக இருந்தது. அன்னங்கள் நீந்திக் கொண்டிருந்தன. அவை அனைத்தும் அன்னங்கள் அல்ல. நதியின் நீரை சுத்தம் செய்ய காற்றிலிருந்து ஆக்சிஜனைப் பிரித்து நீரில் கரைக்கும் ரோபாட்கள். கரையோரத்தில் அமர்ந்து பேச நிறைய இடம் இருந்தது. மறுசுழற்சி குப்பைகளால் செய்யப்பட்ட நாற்காலிகளும் மேசைகளும் முன்னிரவு மழையால் சற்று நனைந்திருந்தன. அவசரமாக அதைத் துடைத்து அழகியை அமர வைத்தான் புனீத்.

புனீத் அழகியை விட வசதியான வீட்டுப் பையன். பறக்கும் சோலார் கார்களை மாதம் ஒன்று என வாங்கி ஓட்டிக் கொண்டிருந்தான். அவன் தந்தை கோவிந்தன் பெரிய தொழிலதிபர். ஆனால் அவை அனைத்தும் அவன் தாத்தா பாண்டியன் காலத்தில் தொடங்கப்பட்டவைதான். அவர்தான் ஆயிரக்கணக்கான அடுக்குகளில் ரப்பர், ஏலக்காய், காபி தோட்டங்களை இந்தியாவெங்கும் வாங்கிப் போட்டிருந்தார். ஆம் அடுக்குகள்தான். இப்போதெல்லாம் அவை மாபெரும் கட்டிடங்களில் விளைந்து கொண்டிருந்தன. பல பெரிய சுரங்க நிறுவனங்கள். என்னதான் தொழில்நுட்பம் அசுர வேகத்தில் வளர்ந்திருந்தாலும் அது வேலை செய்ய இயற்கையிலிருந்து கிடைக்கும் மூலப்பொருட்கள் தேவை. இதை பாண்டியன் எப்போதோ புரிந்து வைத்திருந்தார். அந்தப் புரிதலின் அடிப்படையில் அவர் உருவாக்கிய சாம்ராஜ்யத்தைத்தான் கோவிந்தன் இப்போது ஆள்கிறார். அந்த இடத்துக்கு புனீத் இப்போது தயாராகிக் கொண்டிருந்தான். ஆனால் அவன் திருமணம் செய்து கொண்டால் மட்டுமே அவனுக்கு அதற்கான பொறுப்பு வரும் என்று கோவிந்தன் சொல்லிவிட்டார்.

“நீ யாரை வேணா தேடிக்கோ. எனக்கு கவலை இல்லை. ஆனா மாமா ஓகே சொல்லணும். மத்தபடி நான் இதுக்குள்ளே வர மாட்டேன்” என்று தனது கருகரு மீசையை நீவியபடியே சொல்லிவிட்டார்.

இப்போதெல்லாம் காதல் திருமணங்களும் பெற்றோர் பார்த்து நிச்சயிக்கும் திருமணங்களும் வழக்கொழிந்து போயிருந்தன. தோல்விகளுக்கான சாத்தியங்களின் புள்ளிவிவரம் அச்சமூட்டுவதாக இருந்ததே காரணம். திருமண முறிவில் இரண்டு பக்கமும் ஏற்படும் சட்டரீதியான சேதங்களுக்கும் அதைத் தொடர்ந்து தரவேண்டியிருக்கும் இழப்பீட்டுக்கும் பயந்து திருமணம் செய்வதையே தவிர்க்கத் தொடங்கியிருந்தார்கள் மக்கள். இதை சரிசெய்ய உருவாக்கப்பட்ட உலகளாவிய ஏஐ செயலிதான் மேட்ச்மேக்கர். சுருக்கமாக மாமா.

மாமா ஓர் அதி நவீன திருமண ப்ரோக்கர். ஓர் ஆளைக் குறிப்பிட்டால் நீங்கள் அவருடன் இணைந்து வாழ எத்தனை பொருத்தம் என்று புட்டுப்புட்டு வைத்து விடும். அப்படி ஆராயும்போது உங்களுக்கு விருப்பமான நிறம், மணம், ஆடை, டிஎன்ஏ ப்ரோஃபைல், உணவுத் தேர்வு, குறட்டை விடும் பழக்கம் என்று ஒன்று விடாமல் பல லட்சம் தரவுகளை ஒப்பிட்டு அலசி ஆராயும். ஏற்கனவே தன்னிடமுள்ள பல கோடிக்கணக்கான தம்பதிகளின் ஓரிரு நூற்றாண்டு வாழ்க்கைத் தரவுகளோடும் ஒப்பிட்டுப் பார்க்கும். உங்கள் கட்டணத்தைப் பொறுத்து விரிவாகவோ அல்லது சுருக்கமாகவோ ஒரு அறிக்கையைத் தரும். இன்னார் நம் வாழ்வில் இணைய விரும்புகிறார்கள் என்று சொன்னால் விளங்குமா இல்லையா என்று சொல்வதோடு மட்டுமல்லாமல் தானே பொருத்தமான வேறு ஆட்களையும் கண்டறிந்து ஒன்று அல்லது இரண்டு பெயர்களை மட்டுமே பரிந்துரைக்கும். அவர்கள் பொருத்தமானவர்களாக இருக்க 98% வாய்ப்பு உண்டு. அதன் அல்கரிதம் அவ்வளவு துல்லியமாக தன்னைத்தானே செப்பனிட்டுக் கொண்டிருந்தது.

பல்வேறு விஷயங்களில் ஒரே மாதிரியான விருப்பமுடையவர்களாக இருப்பதால் மகிழ்ச்சியாக இணைந்து வாழ்வார்கள் என்று குத்து மதிப்பாகவெல்லாம் அது பரிந்துரைத்து விடாது. இருவருக்கும் ஒரே மாதிரியான விருப்பங்கள் இருப்பதே கூட நீண்டகால அடிப்படையில் சலிப்பை உருவாக்கும் என்று அதற்குத் தெரியும். அதன் அல்காரிதம் இரவு பகலாக வேறு வேறு அன்றாடச் சூழல்களை உருவாக்கி அதில் இருவரையும் பொருத்திப் பார்த்து அவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்று கணிக்கும். சில நொடிகளில் பல கோடி சிமுலேஷன்கள். ஆண் குழந்தை பிறந்தால் என்ன ஆகும், பெண் குழந்தை பிறந்தால் என்ன ஆகும், வீட்டுக்கு கணவன் குடித்துவிட்டு வந்தால் என்ன நடக்கும் என்று அலசி ஆராயும். எனவே மேட்ச்மேக்கர் பரிந்துரைகளை வெறும் கணிதம் என்று எளிதில் ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. புனீத்தின் நண்பன் ஒருவனுக்கு அது யாரைக் கொடுத்தாலும் நிராகரித்துக் கொண்டே இருந்தது. மாமாவிடமே பரிந்துரைக்கும்படி கேட்டபோது ஆண்களைப் பரிந்துரைத்தது. முதலில் மறுத்த அவன் நண்பன் அதன் பிறகு தான் ஒரு தன்பாலின ஆர்வமுடையவன் என்று ஒப்புக் கொண்டான்.

மாமா முதலில் இரண்டு பெண்களை புனீத்துக்குப் பரிந்துரைத்தது. அந்த இருவரையும் புனீத் மெட்டாவில் சந்திக்கலாம். அது ஒரு மெய்நிகர் உலகம். நேரில் சந்திப்பது போலவே இருக்கும். ஹேப்டிக்ஸ் முறையில் தொடக்கூட முடியும். இன்னபிற சல்லாபங்களும் நிகழ்த்த வழிகள், சாதனங்கள் உண்டு. அவர்கள் அனைவரும் அவனுக்கு எல்லா வகையிலும் மிகப் பொருத்தமாக இருந்தார்கள். எந்தக் குறைபாடும் இல்லை. அவன் எதிர்பார்த்த அனைத்தும் சொல்லி வைத்தது போல் இருந்தன.

ஆனால் புனீத் அவர்கள் இருவரையும் வேண்டாம் என்று மறுத்தான். மாமாவுக்கு அதிர்ச்சி.

“வாட்… நான் ஒரு வீடியோ போடறேன் பாரு”

புனீத்துக்கு தன் திரையில் என்ன வருகிறதென்று தெரியும். அடுத்து ஸ்ட்ரீம் வழியாக வந்த வீடியோவில் ஒரு பெண் தோன்றி கடந்த ஐம்பது வருடங்களில் மேட்ச்மேக்கர் இணைத்து வைத்த தம்பதிகளில் இரண்டு சதவீதம் மட்டுமே விவாகரத்து செய்தவர்கள் என்றும் அவர்களுக்கிடையே காதல் குறைவதே இல்லை என்பதையும் புள்ளிவிவரம் மூலம் விளக்கினாள். புனீத்துக்கு இவையெல்லாம் ஏற்கனவே பல முறை மாமா படம் காட்டியிருக்கிறது. போரடிக்கும். ஆனால் இந்த வீடியோ மட்டும் அவனுக்குப் பிடித்திருந்தது. வீடியோ முடியும் வரை காத்திருந்தான்.

“அவ யாரு” என்றான்.

“எவ?”

“அந்த வீடியோவுல பேசறாளே அந்தப் பொண்ணு”

“அவ ஒரு பார்ட் டைம் மாடல். ஒரு ரோபாடிக் எஞ்சினியர் கூட. ஆனா மனசுல எதையும் வளத்துக்காதே. அவளுக்கும் உனக்கும் பொருத்தத்துக்கான ஸ்கோர் பாயிண்ட் ஃபைவ். கிட்டத்தட்ட ஜீரோ. எந்த வகையிலும் பொருந்தாத குணநலன்கள், விருப்பங்கள் உடையவர்கள் நீங்க ரெண்டு பேரும்”

அவள்தான் அழகி.

புனீத் மாமா சொன்னதைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. அவளுடைய தனித்தகவல்களை தேடிப் படிக்கத் தொடங்கினான். அவளுக்கு பூனை பிடிக்கும். இவன் நாய் வளர்ப்பதில் விருப்பம் உடையவன். அவள் ஐஸ்க்ரீம் காதலி. இவன் சமோசா பிரியன். அவள் உடற்பயிற்சி செய்பவள் அல்ல. புனீத் கட்டுக்கட்டாக உடலைச் செதுக்கியிருந்தான். இப்படித் தொடங்கி நிறைய வேறுபாடுகள். ஆனால் அந்தக் கண்களும் லேசாக விரிந்த இதழ்களும் புன்னகையின்போது பளீரென்று விரியும் தவறாத பல் வரிசையும் அவனைச் சுண்டி இழுத்தன. அந்த வீடியோவை இருநூறு முறை பார்த்திருப்பான். பிறகு அவளைச் சந்திப்பதென்று முடிவு செய்தான். அவளை அவன் தனிச்செய்தியில் தொடர்பு கொண்டதுமே மாமா பதறியபடி வீடியோ அழைப்பில் வந்தது.

“நீ நேரத்தை விரயம் செய்கிறாய். அவள் என் பரிந்துரையை மீறி உன்னை விரும்ப மாட்டாள்” என்றது மாமா.

“ஒரு முயற்சிதான்” என்றான் புனீத்.

என்னவோ செய்து தொலை என்பது போல ஒரு சலிப்படைந்த ஸ்மைலியை அனுப்பிவிட்டு அமைதியானது மாமா. அதைத் தொடர்ந்து தான் இந்த சந்திப்பு.


“சொல்லு புனீத்” என்றாள் அழகி அமைதியைக் கலைத்து. அவன் ஏதோ தீவிரமான சிந்தனையில் இருந்தான்.

“ஏதாவது சாப்பிடலாமா?”

“அதெல்லாம் வேணாம். நமக்குள்ள எந்த வகையிலும் செட்டே ஆகாதுன்னு மாமா சொல்லிதான் அனுப்பியது. நான் சும்மாதான் வந்தேன். இப்படி மீட் பண்ணுனா எனக்கு மாமாகிட்ட குட்வில் பாயிண்ட்ஸ் கிடைக்கும். எக்ஸ்ஆர் டிக்கெட், கேமிங் எங்கேயாவது யூஸ் ஆகும். அதுவும் இல்லாம உன் தாத்தா ஒரு பெரிய லெஜண்ட். விஷனரி. அவருக்காகவும் வந்தேன்”

புனீத் அமைதியாக இருந்தான். அவள் தனக்காக வரவில்லை என்பது அவனுக்கு ஏமாற்றமாக இருந்தது. அழகி சற்று நேரம் தெளிந்த அடையாறு ஆற்றில் குதித்து நீந்திக் கொண்டிருந்த சிறுவர்களைப் பார்த்தபடி இருந்தாள்.

“அழகி.. மாமா சொல்ற பொண்ணைக் கட்டிக்கிட்டா என் வாழ்க்கைல பிரச்னை இருக்காதுன்னு எனக்கும் தெரியும். ஆனா அதுலதான் ஒரு சிக்கல்”

“அதுல என்ன சிக்கல்? உலகத்துல எல்லோரும் அதைத்தானே செய்யறாங்க”

“மேட்ச் மேக்கர்னு ஒன்னு இருக்கறதை ரெண்டு பேருமே மறந்துடுவோம். என்னைப் பத்தி உனக்கு எதுவுமே தெரியாதுன்னு வெச்சுக்குவோம். இப்ப சொல்லு. என்னைப் பாத்தா இவனை ரிஜெக்ட் பண்ணனும்னு தோனுதா?”

அழகி ஒரு வினாடி அவனைக் கண்களால் அளந்தாள். அந்த நொடியில் அவன் முகம் சிவந்ததை கவனித்தாள். அது அவளுக்குப் பிடித்திருந்தது. அருகில் விரிந்த அந்தக் கண்களில் புனீத் மொத்தமாக விழுந்து கொண்டிருந்தான்.

“இல்லை.. ம்ம்… யூ ஆர் ஓகே… ரிஜெக்ட் பண்ற அளவுக்கு எதுவும் தெரியலை”

புனீத் நிம்மதிப் பெருமூச்சு விட்டான். ட்ரோன் ஒன்று மிதந்து வந்தது. ஒரு அட்டைப் பெட்டியை அவர்கள் மேசையில் இறக்கிவிட்டுப் போனது. பெட்டியைத் திறந்தான் புனீத். சாக்லேட் மில்க் ஷேக், காபி மற்றும் பிரவுனி இருந்தது.

“உட்காரும்போதே ஆர்டர் பண்ணிட்டேன். உனக்குப் பிடிச்ச கடையில்”

அழகி புருவம் உயர்த்தி ஆச்சரியத்தை வெளிப்படுத்தினாள். ஆனால் அவளுக்குப் பிடித்த கடை எதுவென்பதை ஏதோ ஒரு டேட்டா நிஞ்சா கள்ள மார்க்கெட்டில் விற்றுக் கொண்டிருப்பான். காபியை எடுத்துக் கொண்டாள்.

“இப்போ என்ன செய்யலாம்னு சொல்றே?”

“நாம பழகிப் பாக்கலாம். மாமாவை மறந்துட்டு… காதல் கல்யாணம் எல்லாம் யோசிக்க வேண்டாம். சும்மா தினமும் ஒரு ரெண்டு மணி நேரம். உனக்கு இது ஓகேவா?”

அழகி சற்று சந்தேகத்தோடு தான் ஒத்துக் கொண்டாள்.


ழகினார்கள். முப்பரிமாண வீடியோக்களை பரிமாறிக் கொண்டார்கள். அழகி ஆச்சரியப்பட்டாள். புனீத் அத்தனை இனிமையானவனாக இருந்தான். ஒரு பணக்காரன், செல்வாக்கான குடும்பப் பின்னணி. ஆனால் அது எதுவுமே மண்டைக்குள் ஏறாதவனாக இருந்தான். ஒவ்வொரு நாளும் அவளுக்காக ஏதாவது பரிசு கொண்டு வந்தான். புனீத்துக்கு அவளை அவ்வளவு பிடித்திருந்தது. ஏன் மாமாவின் அல்காரிதம் அவளை அவனுக்கு எந்த வகையிலும் பொருத்தமில்லாதவள் என்று சொல்கிறது என்று புரியவில்லை. ஆனால் அவனுக்கு மனதின் ஒரு மூலையில் பயமாகவும் தயக்கமாகவும் இருந்தது.

அன்று பத்தாவது நாள். புனீத் இன்று ப்ரபோஸ் செய்ய வாய்ப்பிருக்கிறது என்பதை அவன் உடலில் சுரக்கும் ஹார்மோன்களின் அளவை வைத்துக் கணித்து அழகியிடம் பேசியது மாமா.

“நீ தவறு செய்கிறாய் அழகி”

“எனக்குத் தெரியலை. எனக்கு அவனைப் புடிச்சிருக்கு. அவனுக்கும் என்னைப் புடிச்சிருக்கு. இதுல என்ன தப்பாகிட முடியும்?”

“உணர்வு ஒரு பனிமூட்டம். அதைத் தாண்டி உங்களால பார்க்க முடியாது. எனக்கு உணர்ச்சி இல்லை. எல்லாம் தரவுகளும் கணக்குகளும் தான். அதனால் நான் பார்க்கும் தொலைவும் ஆழமும் அதிகம்”

மாமா அவளுக்கும் வீடியோக்கள் காட்டியது. புள்ளிவிவரங்கள் சொல்லி பயமுறுத்திப் பார்த்தது. அழகி உறுதியாக இருந்தாள்.

“நான் இல்லைன்னா புனீத் செத்துடுவேன்னு நேத்து சொன்னான். உன் லாஜிக்படி புள்ளிவிவரமா பாத்தா அப்படியெல்லாம் யாரும் சாக மாட்டாங்கன்னு எனக்கும் தெரியும். அவன் சொன்னது பொய்தான்… ஆனா அதை சொல்றான்ல. அதுதான் எனக்குப் பிடிச்சிருக்கு”

ஏதோ மறுத்து சொல்ல முயன்ற மாமாவின் உருவத்தை இடது கையால் திரையிலிருந்து கலைத்தாள்.

“அழகி…”

புனீத் அழைத்த குரலுக்கு மீண்டும் நிகழ்காலத்துக்கு வந்தாள் அழகி.
நேரம் கடந்த பிறகும் வீட்டுக்குச் செல்ல மனமில்லாமல் அமர்ந்திருந்தாள். புனீத் அவளிடம் காதலைச் சொல்வதா வேண்டாமா என்று தடுமாறிக் கொண்டிருந்தான்.

“நாளைக்கும் சந்திக்கலாமா?” என்றான் நெற்றி வியர்வையைத் துடைத்தவாறே.

அழகி அவன் கையைப் பற்றிக் கொண்டாள்.

“ஏன் ஜவ்வா இழுக்கறே? நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?”.

புனீத் அவளிடமிருந்து இதை எதிர்பார்த்திருக்கவில்லை. அவன் மகிழ்ச்சியில் குதிப்பான் என்று நினைத்திருந்தாள் அழகி. ஆனால் அவன் உறைந்து போய் அமர்ந்திருந்தான். சில நொடிகள் சங்கடமான மௌனத்தில். அழகி மெல்ல அவன் கைகளை விடுவித்தாள்.

“உனக்கு என்னைப் பிடிக்கலையா புனீத்?”

“நோ.. நோ.. நோ.. அப்படி இல்லை. திடீர்னு நீ இதை சொன்னதும் எனக்கு கொஞ்சம் ஷாக் ஆகிடுச்சு”

“சோ?”

புனீத் ஏன் அப்படிச் சொன்னான் என்று அவனுக்கே தெரியவில்லை. ஆனால் வார்த்தைகள் அவனையும் மீறி வந்து விழுந்தன.

“எனக்கு கொஞ்சம் டைம் வேணும் அழகி. ஒரே குழப்பமா இருக்கு”

அழகியின் முகம் சிவந்தது. ஏமாற்றப்பட்டது போல் உணர்ந்தாள். கைப்பையை எடுத்துக்கொண்டு வேகமாக நடந்தாள்.

புனீத் தன்னைத் தானே சபித்தபடி கண்களை இறுக மூடிக்கொண்டான். என்ன ஆயிற்று அவனுக்கு. அவன் அழகி அதோ போகிறாள். அவள் காதலுக்காக அவன் அத்தனை ஏங்கியிருந்தான். ஆனால் இப்போது ஏதோ ஒரு பயம். உலகத்தை எதிர்த்து ஒன்றைச் செய்துவிட்டு அந்த டென்ஷனிலேயே வாழ்க்கையை வாழ்வதா என்ற குழப்பத்திலேயே மெல்ல நடந்து வீடு வந்து சேர்ந்திருந்தான்.

திடீரென்று அவன் தாத்தா அழைத்திருந்தார்.

“உன்கிட்டே முக்கியமான விஷயம் பேசணும். கிளம்பி வா”.

அவர் எதற்கு அழைக்கிறார் என்று அவனுக்குத் தெரியும். அவர்களுக்குள் வழக்கமாக நடக்கும் வாக்குவாதம் அது.

ஹைப்பர் லூப்பில் ஏறி இரண்டு மணி நேரத்தில் சிம்லா போய்ச் சேர்ந்தான். அவன் முகத்தைப் பார்த்ததுமே என்ன நடந்திருக்கும் என்று அவர் புரிந்து கொண்டுவிட்டார்.

“நான் ஒரு விஷயம் சொல்லணும்னும் கூப்பிட்டிருந்தேன். ஆனா உன்னைப் பாத்தா நீதான் நிறைய பேசப்போற மாதிரி தோனுது”

“சொதப்பிட்டேன் தாத்தா… நீங்க லவ் மேரேஜ்தானே? நீங்களும் பாட்டியும் எப்படி அத்தனை அன்டர்ஸ்டாண்டிங்கா இருந்தீங்க! பேசாம உங்க காலத்துல பொறந்திருக்கலாம்”

அவர் சிரித்தார். சிரிப்பினூடே இருமினார்.

“காலம்தான் வேற.. மனுசங்க அதேதான்… நானும் உன் பாட்டியும் உருகி உருகி காதலிச்சோம். ஆனால் சாதிப் பொருத்தமில்லைன்னு பிரச்னை வந்துச்சு. ஒரு வழியா பேசி சமாளிச்சு வீட்டில் எல்லோரும் சம்மதிச்சப்போ என் மாமனார் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். அவரோட மாமா ஒருத்தர் பெரிய ஜோசியகாரர். அவர் ஜாதகம் பாத்து ஓகே சொன்னாதான் ஒத்துக்குவேன்னு”

“எல்லாக் காலத்திலும் ஒரு விதமான மாமா தொல்லை இருந்திருக்கு”

“ஆமா… எங்க ஜாதகம் சுத்தமா பொருந்தலை. பத்துக்கு ரெண்டு கூட பொருத்தம் இல்லைன்னுட்டார் அந்த மாமா”

“அப்புறம்?”

“உன் பாட்டி அன்னிக்கு நைட்டே பெரிய பொட்டியோட கிளம்பி வந்துட்டா. அடுத்த நாள் ரெண்டு பேரும் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டோம்”

“ஆனா ஜாதகத்தை எல்லாம் தாண்டி நீங்க சந்தோஷமாதானே இருந்தீங்க?”

மறுபடி சிரித்தார் பாண்டியன்.

“நீ வேற… பல நேரங்கள்ல வெட்டு குத்து நடக்காத குறைதான். பிரச்னை இல்லாத புருஷன் பொண்டாட்டி இருக்க முடியுமா? ஆனா எங்களை எது ஒன்னா வெச்சிருந்தது தெரியுமா?”

புனீத் காத்திருந்தான்.

“நாங்க எப்படியும் வாழ்க்கைல தோத்து போயிடுவோம்னு எதிர்பார்த்து காத்துட்டு இருந்தவங்க தான். சண்டை உச்சத்துக்குப் போறப்போ அந்த மூஞ்சிங்க நினைவுக்கு வரும். குறிப்பா நாங்க ஒன்னா வாழ்ந்துட்டா ஜோசியத்தை விட்டுடறேன்னு சொன்ன அந்த மாமாவோட மூஞ்சி. நாம அழியணும்னு நினைக்கறவங்களை மட்டும் நாம சந்தோஷப்பட விட்டுடவே கூடாது”

சொல்லிவிட்டு அமைதியில் ஆழ்ந்தார் பாண்டியன். அதன் பிறகு அவர் சில நிமிடங்கள் பேசவில்லை.

“தோத்துடக் கூடாதுங்கற வைராக்கியம்தான் கடைசி வரைக்கும் பல காதலர்களை ஒன்னா வெச்சிருக்கு. அது எந்தக் காலமானாலும் மாறாது”

புனீத் அவரையே பார்த்தபடி அமர்ந்திருந்தான்.

“நீங்க ஏதோ சொல்லணும்னு சொன்னீங்க?”

“ஓ அதுவா.. இப்படி தனியா எந்திரங்களோட வாழறது போரடிக்குது. என்னை சாக விடேன்டா” என்றார் பாண்டியன் புன்னகைத்தவாறே.

நூறு வயதைத் தாண்டியவர்களுக்கு அவர்கள் விருப்பப்படி இறக்க அடிப்படை உரிமை தரப்பட்டிருந்தது. பாட்டி போனதிலிருந்தே பாண்டியன் அடிக்கடி இதைப் பற்றி பேசுவார். புனீத் பிடிவாதமாக அவரைப் பேச விடாமல் தடுத்துவிடுவான்.

“தாத்தா.. விளையாடாதீங்க”

“இல்லடா.. எனக்கு நூத்திப் பன்னிரண்டு வயசு. ஏதும் ஸ்பேர் பார்ட் போயிட்டா உடனே வந்து மாத்திடறாங்க. ரெண்டு தடவை கிட்னி மாத்திட்டேன். இதயமே பேட்டரில ஓடுது. சாகவே விடாத அளவுக்கு டெக்னாலஜி வளர்ந்துடுச்சு. என் பையன் என்னை வந்து பாத்து ஆறு ஏழு வருசமாச்சு. அப்பப்போ வீடியோ கால் பேசறதோட சரி. நீ மட்டும் தான் என்னை ஞாபகம் வெச்சிருந்தே… உனக்கும் இப்ப ஒரு அழகி கிடைச்சுட்டா… ஆனா உன் பாட்டி இது எதுக்குமே ஒத்துக்கலை. நூறு வயசை தொடறதுக்கு முன்னாடி போயிடணும்னு உறுதியா இருந்தா. அவ எப்பவுமே என்னை விட புத்திசாலியா தான் இருந்திருக்கா. எனக்கு இப்பதான் உறைக்குது”

“தாத்தா… அப்படியெல்லாம் உங்களை விட முடியாது… என் கல்யாணத்துக்கு உங்க கையால நீங்க தாலி எடுத்துக் கொடுக்கறீங்க.. அவ்வளவுதான்”

பாண்டியன் புன்னகைத்தார்.

“அவ்வளவு தானே உன்னோட ஆசை. இத்தனை நாள் ஸ்பேர்ல ஓடின வண்டி இன்னும் கொஞ்ச நாள் ஓடாதா என்ன? ஆனா அதுக்கப்புறம் அடம் பிடிக்காம என்னைப் போக விட்டுடணும்”

பாண்டியன் தனது சக்கர நாற்காலியைத் திருப்பி நகர்த்தினார். அந்த அழகிய சிட் அவுட்டிலிருந்து மலைச் சிகரங்களும் வேகமாகக் கவிந்து கொண்டிருந்த மாலையும் ஓர் அழகிய ஓவியம் போலத் தெரிந்தன.

“போ.. போய் அழகியைக் கெஞ்சிக் கூட்டிட்டு வா. மாமா சொன்னதெல்லாம் உன் வாழ்க்கைல கண்டிப்பா நடக்கும். உங்களுக்குள்ள சண்டை வரும். ஆனா அதெல்லாம் இல்லாத ஒரு வாழ்க்கைல என்ன இருக்கு நீயே சொல்லு?”

புனீத் அவர் அருகே சென்று நின்றான். பின்னாலிருந்து அவர் இரண்டு தோள்களிலும் கை வைத்தான். அவர் தனது எலும்பும் தோலுமான கையை அவன் கை மீது ஆதரவாக வைத்துக் கொண்டார்.

***

ஷான் கருப்பசாமி
தனியார் இணையவழிக் கற்றல் நிறுவனத்தின் தலைமை நிர்வாகத்தில் இருக்கிறார். “வெட்டாட்டம்”, “பொன்னி” பொன்னி-2 என மூன்றுநாவல்களும் சின்ராசு (உரையாடல்கள்), தங்கம் சிறுகதைத் தொகுப்பும் ‘ஆண்ட்ராய்டின் கதை’, ‘எதிரொலிக்கும் அறைகள்’ என்ற இரு கட்டுரைத் தொகுப்புகளும் ‘விரல் முனையில் கடவுள்’, ‘ள்’என இரு கவிதைத் தொகுப்புகளும் வெளிவந்திருக்கிறது. திரைத்துறையில் திரைக்கதை ஆசிரியராகவும் இயங்குகிறார். மின்னஞ்சல்: shan.mugavari@gmail.com


RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular