Tuesday, July 16, 2024
Homeஇதழ்கள்2021 இதழ்கள்மறை பிம்பங்கள்

மறை பிம்பங்கள்

கா.சிவா

திருமலை பள்ளி மற்றும் கலைக்கல்லூரியின் முதல்வர் அலுவலகத்தின் முன்புறம் போடப்பட்டிருந்த நீலநிற நாற்காலியில் இருப்புக் கொள்ளாமல் அமர்ந்திருந்தான் சங்கர். கல்லூரி மாணவர்களில் ஓரிருவர் மட்டும் அலுவலகத்திற்குள் செல்வதும் வருவதுமாக இருந்தார்கள். முதல்வரைக் காண்பதற்காக இவன் காத்திருந்தான். எதிரேயிருந்த பள்ளியில் பிள்ளைகள் நீர் அருந்தவும் கழிவறைக்கும் இரண்டு மூன்று பேர்களாக புறவுலகைக் கருதாத பறவைகள் போல குதித்தபடியும் ஒருவரையொருவர் சீண்டியபடியும் சிரித்தபடியும் சென்று வந்தார்கள்.

பீட்டர் சாலைக்கு எதிரேயிருந்த தின்பண்டக் கடையில் நின்று உள்ளிருந்தவரிடம் உரையாடிக் கொண்டிருந்தான்.

இன்று முதல்வராக இருக்கும் மாற்றுத்திறனாளிப் பெண்மணி வரவேண்டுமே என்று சங்கரின் மனம் மர உச்சித்தளிர் காற்றிலென தவித்துத் துடித்துக் கொண்டிருந்தது. அவர் கையில்தான் இவன் எதிர்காலமே உள்ளது. ஆனால் அந்தப் பெண்ணிற்கு இது தெரியாது. பத்து நாட்களுக்கு முன்பும் வந்திருந்தான். எண்ணியது நடக்கவில்லை. இன்றுதான் இறுதி நாள். இன்றும் முடியாவிட்டால்… நினைக்கவே பெரும் அச்சம் எழுந்தது. உச்சியில் இருக்கும் கனியைப் பறிக்கப் பெரும்பாடு பட்டு ஏறியவன் கை தொடும் அண்மையில் கால் வைத்த கிளை உடைந்ததென கீழேதான் விழவேண்டும். கனியைக் கைக்கொள்ள வேண்டுமானால் மறுபடி முதல் அடியிலிருந்துதான் தொடங்க வேண்டும். மீண்டும் பழைய அடிமை வாழ்க்கையா… எண்ணமே பெரும் நடுக்கத்தை ஏற்படுத்தியது.

ஒரு மனிதனின் வாழ்வை தீர்மானிப்பதில் எத்தனை புறக்காரணிகள் சீராக இருக்க வேண்டியுள்ளது. “அத்தனை வெற்றிகளும் தோல்விகளும் தன் முயற்சியால் விளைவதுதான்” என்பது எத்தனை தவறான கூற்று என்று புரிந்தது. இங்கு மீண்டும் வரவைத்த அரசு அதிகாரி ராமலிங்கம் மீது கசப்பு ஊறியது. அதிகாரத்தில் இருந்தால் மற்றவர்களை இளப்பமாகக் கருத வேண்டுமாயென்ன… சாதிகள் முன்பு இருந்தது போன்ற வரைமுறையில் இல்லை. இப்போது அதிகாரம் இருப்பவன் உயர்ந்தவன். இல்லாதவன் தாழ்ந்தவன் என்றவாறு ஓடிய மனவோட்டத்தின் முடிவில் இங்கு வரவேண்டிய அவசியம் நேர்ந்ததை நோக்கி அவன் எண்ணம் சென்றது.
*
கல்லூரி படிப்பு முடித்ததுமே பணிக்குச் செல்லவேண்டிய நிலை சங்கருக்கு. தனியார் நிறுவனத்தில் அடிநிலைப் பணியில் சேர்ந்து, பின் சலித்து அதிலிருந்து விலகி வேறொரு நிறுவனத்தில் அடுத்த நிலையில் சேர்ந்தான். ஆனால் அங்குமே ஏவல் பணிதான். அதுவும் எப்போது வேண்டுமானாலும் வெளியேற்றுவார்கள் என்ற பதட்டத்தை அளித்துக் கொண்டேயிருப்பார்கள். இப்படியே வெவ்வேறு நிறுவனங்களில் பத்து வருடங்கள் பணி புரிந்து சலிப்பின் உச்சத்தில் இருந்தபோது தான் கல்லூரியில் உடன் படித்த தாமஸ் பீட்டரை சந்திக்க நேர்ந்தது. அவன் அரசு காப்பீட்டு நிறுவனத்தில் முகவராக பணியாற்றிக் கொண்டிருந்தான். அவனும் தன் பணியில் சலிப்பில் இருந்தான். தான் அதிகமாகவே ஈட்டினாலும் கவுண்டரின் உள்ளே அமர்ந்திருப்பவன் தன்னைக் கீழானவனாகக் கருதி நடத்துவதாக எண்ணி மனம் புண்பட்டிருந்தான்.

“அதிலிருந்து மீள்வதற்கு ஒருவழிதான் உள்ளது. தேர்வு எழுதி அரசு அதிகாரியாக ஆகவேண்டும்” என்று கருதிய அவன் நம்பிக்கையை சங்கரின் மனதிலும் பதிய வைத்தான். படிப்பை முடித்து பல ஆண்டுகள் ஆனபோதும் மனதில் ஏற்பட்டிருந்த கனலின் தாக்கத்தால் ரெயிலின் வேகத்தையும் தாங்கி தண்டவாளத்தின் அருகில் பூத்து ஒளிரும் மலர்போல மனதில் பூத்த ஒருவித நம்பிக்கையில் செய்து கொண்டிருந்த உவக்காத பணிக்கு நடுவிலும் அயராமல் படித்தார்கள்.

வாரம் முழுவதும் பணி செய்வதால் அல்ல, அந்தப் பணியின் மீதான ஒவ்வாமையே மனதை பெருவிசையென அழுத்தியது. எதைச் செய்தாவது இந்த மன அழுத்தத்திலிருந்து விடுபடவேண்டுமென உறுதி தோன்றியது. வார இறுதி நாட்களில் மட்டும் வகுப்புகளுக்குச் சென்றான். பிற நாட்களின் அனைத்துக் கணங்களிலும் வகுப்பில் நடத்தப்பட்ட பாடங்களையே மனதில் ஓட்டிக் கொண்டிருப்பான். கைப்பையில் எப்போதும் குறிப்பேடு இருக்கும். திரையரங்கில் பிலிம் ரோல் சுற்றுவது போல மனதிற்குள் ஓடிக்கொண்டிருக்கும் பாடத்தில் இடையில் சிக்கலெழுந்தால் குறிப்பேட்டை எடுத்துப் பார்த்து சரிசெய்து மீண்டும் ஓட்டுவான். வேறு நினைவேதும் உள் துழையாமல் பயின்ற அந்நாட்களை இப்போது எண்ணும்போதே, மீண்டும் பெற முடியாத தீவிர தியான அனுபவம் போல கருங்கல் மலையின் மேல் அமைந்த தண்சுனையென ஒரு தித்திப்பு மனதினுள் ஊறி சிலிர்க்க வைத்தது.

தேர்வில் சங்கர் தேறினான். பீட்டர் ஐந்து மதிப்பெண்களில் தவறவிட்டான். “விடு மச்சான். ஆபீசுல ஒருத்தன்கிட்ட கை கட்டி பாக்கற வேலையெல்லாம் வேலையா. நான் நெனச்சா வேலை பாப்பேன். இல்லேன்னா தூங்குவேன். நாள் முழுக்க வேல பாக்குறதெல்லாம் என்னால முடியாது” என்று தனக்குள் சொல்லித் தேற்றிக்கொண்டதை சங்கரிடமும் வீம்பாகக் கூறினான்.

ஒரு செய்தியால் இத்தனை மகிழ்ச்சியை அளிக்க முடியுமென்பதை, தேர்ச்சியடைந்த விபரத்தை வீட்டில் தெரிவித்தபோதுதான் சங்கர் அறித்தான். இவன் பெற்றோர் இவன் பிறந்தபோதுகூட இவ்வளவு உவகையை அடைந்திருக்கமாட்டார்கள் எனத் தோன்றியது. தன் மகன் தனியார் நிறுவனங்களில் படும் பாடுகளை, அதைத் தவிர்க்க முடியாத தங்களின் கையறு நிலையை எண்ணியவாறு எத்தனை வேதனையுடன் பார்த்துக் கொண்டு இருந்திருந்தால் இத்தனை மகிழ்வு பொங்கியிருக்கும். பெற்றோரின் மகிழ்வைக் கண்டபிறகுதான் தான் ஏதோ சாதித்திருக்கிறோம் என்ற சிறு பெருமிதம் சங்கருக்கு ஏற்பட்டது.

சான்றிதழ் சரி பார்ப்புக்கென தேர்வாணையம் சென்றபோது பீட்டரும் உடன் வந்தான். தன் வழிகாட்டுதலின்படி ஒருவன் உயர்நிலைக்குச் செல்கிறான் என்பது பீட்டருக்கு பெரும் நிறைவையளித்தது என சங்கருக்குத் தோன்றியது. இருநூறு பேருக்கு அழைப்பு அனுப்பியிருந்தார்கள். தேர்வானவர்களுக்கு துணையாக வந்து வெளியில் நின்றவர்களே ஐநூறு பேர்களுக்கு மேலிருக்கும். பலர் கைகளில் பயணப் பொதிகளை வைத்திருந்தார்கள். சென்னையிலேயே வசித்ததால் அந்த அவதி சங்கருக்கு இல்லை. சான்றிதழ்களின் கோப்பினை மட்டும் எடுத்துக் கொண்டு வந்திருந்தான்.

சரிபார்ப்பிற்கு மூன்று அதிகாரிகள் அமர்த்தப்பட்டிருந்தனர். வந்திருந்தவர்களை ஒருவர்பின் ஒருவராக வரிசையாக மூவரில் ஒருவரிடம் அனுப்பினார்கள். மூன்று பேரில் ஒருவர் நாற்பது வயதைக் கடந்த பெண். ஆண்கள் இருவரில் ஒருவர் துடிப்பான இளையவராகவும் மற்றொருவர் சற்று சாந்தமான ஐம்பதை வயதை நெருங்கியவராகவும் இருந்தார். பெண்மணி அவ்வயதிற்குரிய சலிப்பைக் காட்டினார். இளைய ஆண் இளமைக்குரிய அதீத துடிப்பும் எரிச்சலுமாக இருந்தார். பணிக்கு வருமுன் இவர்களிடமிருந்த பரிதவிப்பை தேர்வானவர்கள் நினைவுபடுத்தியதால் தான் இப்படி நடந்து கொள்கிறார்களோ என சங்கருக்குத் தோன்றியது. மேலேறிய நெற்றியுடன் கண்ணாடி அணிந்திருந்த மற்றொருவர் சாந்தமானவராகத் தோன்றினார். இவனுக்கு தன்முறை அந்தப் பெரியவரிடம் செல்வதாக அமையவேண்டுமே என்றிருந்தது. அப்படியே நிகழ்ந்து அவரிடம் தன் சான்றிதழ்களுடன் சென்றான்.

பதட்டம் குறைந்தவனாக அவருக்கு எதிரிலிருந்த நாற்காலியில் அமர்ந்தான். பத்தாவது, பனிரெண்டாவது, பட்டப்படிப்பு, சாதி என எல்லாச் சான்றிதழ்களையும் ஒவ்வொன்றாக வாங்கிப் பார்த்தார். அவர் புன்னகைக்கிறாரா அல்லது முக அமைப்பு அப்படியா என்ற யோசனை இவன் மனதில் ஓடியது. ஆசிரியர் தன் பிரிய மாணவனை நோக்குவது போன்ற பார்வை அவர் விழிகளில் இருந்தது. அவர் எல்லோரையும் அப்படித்தான் பார்த்தார். ஆனால் தன்னை மட்டுமே அப்படி வாஞ்சையுடன் நோக்குவதாக ஏனோ அவனுக்குத் தோன்றியது. “கான்டாக்ட் சர்டிபிகேட் எங்கே” எனக் கேட்டார். வேறு சிந்தையில் இருந்த இவனுக்கு அவர் கேட்டது செவியில் விழுந்தபோதும் அதன் பொருள் சட்டென அர்த்தமாகவில்லை.

“என்ன சார்”

“நன்னடத்தை சான்றிதழ்”

“அதை எடுத்திட்டு வரல்லியே சார். அது தேவையில்லையினு நெனச்சேன்”

“நீயே ஏன் அப்படி நெனக்கிற. தேவையில்லாமதான் ஒரு சர்டிபிகேட் தர்றாங்களா”

“முக்கியம் இல்லேன்னு நெனச்சிட்டேன் சார்”

“நீ காலேஜ்ல நல்லா படிச்சேன்னு தெரியிது. ஒழுக்கமா இருந்தியான்னு எங்களுக்கு எப்படித் தெரியும். அந்த சர்டிபிகேட் கண்டிப்பா வேணும்”

அவர் குரலில் இருந்த எதிர்த்து பேச விடாத உறுதி சங்கரை திகைக்க வைத்தது. மற்ற இருவரில் ஒருவர் இப்படிப் பேசியிருந்தால் இவன் திகைத்திருக்க மாட்டான். சாந்தமானவர் என்றெண்ணி வந்தவரிடமிருந்த கடுமை இவனை ஒடுங்க வைத்தது.

“அந்தச் சர்டிபிகேட் வந்தாதான் கிளியர் பண்ணுவேன். எப்ப எடுத்திட்டு வருவீங்க” என்றார் இறுக்கமான முகத்துடன்.

“நாளைக்கே எடுத்திட்டு வந்திடறேன் சார்”

“பத்து நாளைக்குள்ள எடுத்துக்கிட்டு முதல் மாடில இருக்கிற என் அறைக்கே வாங்க. தவறினா அடுத்த தேர்வுக்கு படிக்க ஆரம்பிங்க” என்று அவர் கூறியவுடன் சான்றிதழ்களை எல்லாம் எடுத்து கோப்பினுள் வைத்துக் கொண்டு கிளம்பினான். எப்படி அந்தச் சான்றிதழ் மட்டும் தவறியது. எங்கே வைத்தோம். எல்லாச் சான்றிதழ்களும் ஒரே இடத்தில்தானே இருந்தது என்று எண்ணியவாறு தளர்ந்து மெதுவாக நடந்து வந்தவனின் முகத்தைப் பார்த்து பீட்டர் பதறினான்.

“என்னடா ஆச்சு. பிரச்சனைக்கு ஒன்னுமேயில்லையே…” என்று கேட்டான். சங்கர் விவரத்தைக் கூறிதும் “வீட்லதான்டா இருக்கும். இதுக்கா இப்படி ஒடஞ்சு போயிட்ட” என்று தேற்றியவாறு தன் இருசக்கர வாகனத்தில் ஏறி முடுக்கினான்.

பீரோவை ஐந்து முறை முழுதாக கலைத்தும் கோப்புகளை பலமுறை திருப்பிப் பார்த்தும் அந்தச் சான்றிதழை மட்டும் காணவில்லை. அது ஏ4 தாள் அளவில் பாதிதான் இருக்கும். அதனால் கீழே விழுந்திருக்குமோ. சான்றிதழ்களுக்கு நடுவே இந்தியா போட்டோ ஸ்டுடியோவின் காக்கி நிற கவரில் வைக்கப்பட்ட போட்டோ கூட இருந்தது. ஆனால் அந்தச் சான்றிதழைக் காணவில்லை.

ஒவ்வொரு முறை கோப்பில் தேடும்போதும் விழிகளில் ஆர்வம் மின்ன பார்த்துக் கொண்டிருந்த அம்மா “நல்ல காலம் பொறந்திருச்சின்னு நம்புனனே. ரெண்டு நாள் சந்தோசமா இருந்தது இந்தக் கடவுளுக்கு பொறுக்கலையே. எம் புள்ள மொகத்த பாக்க சகிக்கலையே. நான் என்ன பண்ணுவேன். என்னன்னமோ பேப்பரெல்லாம் இருக்குது. தேவையானத மட்டும் காணலை….” என்று புலம்ப ஆரம்பித்தார்.

“அம்மா… கவலப்படாதீங்கம்மா. காலேஜ்ல போயி வாங்கிக்கிடலாம். கேட்டா புதுசா ஒன்னு எழுதித் தருவாங்க. நாம படிச்சதுக்கு அத்தாட்சியா மார்க் சீட்டெல்லாம் இருக்குதில்ல” என்று பீட்டர் கூறியதைக் கேட்டபோது சங்கர் முகத்திலும் அம்மா முகத்திலும் மெலிதாக நம்பிக்கை பூத்தது.
*
படிப்பு முடிந்து சான்றிதழ்களை வாங்கி வந்த பிறகு இப்போதுதான் அவர்கள் படித்த கல்லூரி இருந்த மதுரவாயல் பகுதிக்கே சென்றார்கள். கல்லூரி முன்பு ஏரிக்கரைக்கு அருகில் இருந்தது. இப்போது தூர்க்கப்பட்ட ஏரியின் மத்தியில் இருந்தது. இருவருமே ஒருவரையொருவர் ஆச்சர்யமும் திகைப்புமாய் பார்த்துக் கொண்டார்கள். பெயர்ப் பலகையைக் கண்டுதான் இது தாங்கள் படித்த கல்லூரிதானென உறுதி கொண்டார்கள்.

விசாரித்துக் கொண்டு முதல்வர் அறையை அடைந்தார்கள். ஒரு பெண்ணின் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. மூடியிருந்த அறைக்கு வெளியே வேகமாக நடந்து கொண்டிருந்தவரிடம் முதல்வர் எப்போது வருவார் என பீட்டர் கேட்டான். பாமரனைப் பார்க்கும் பேரறிஞரின் பார்வையில் இவர்களைப் பார்த்தவர் “ஒங்களுக்கு என்ன வேண்டும்” எனக் கேட்டார்.

“சார், நாங்க இங்கதான் பத்து வருசத்துக்கு முன்ன படிச்சோம். கன்டக்ட் சர்டிபிகேட் வேணும் சார்” என்றான் குழைவுடன். அவர் முகத்தில் ஏளனம் வழிந்தோடியது.

“பத்து வருசத்துக்கு முன்ன படிச்சதுக்கு கன்டக்ட் சர்டிபிகேட் இப்ப வேணுமா. ஏன் இப்பதான் ஞாபகம் வந்துச்சா”

“இல்ல சார், அப்பவே வாங்கிட்டோம். தொலைஞ்சு போச்சு. இவன் கவர்ண்மென்ட் எக்சாம்ல பாஸ் பண்ணிட்டான். கன்டக்ட் சர்டிபிகேட் இருந்தாத்தான் வேலை கெடைக்கும்….” என்று குரலில் வேண்டுதல் தொனிக்கக் கூறினான்.

“அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்ல. நீங்க படிச்சப்ப இருந்தவங்க யாரும் இப்ப இல்ல. கரஸ்பாண்டன்ட் இறந்துட்டாரு. அவரு பொண்ணுதான் நிர்வாகம் பாக்குறாங்க. அவங்களால நடக்க முடியாது. அதனாலயோ என்னவோ உலகமே தன்னை ஏமாத்தத் துடிக்கறதாவும் தன்னோட ஊன்றுகோலால அத எதிர்த்துப் போராடுறதாவும் அவங்களுக்கு நெனப்பு. பிரின்ஸ்பால் மேல நம்பிக்க இல்லாததால அந்தம்மாவேதான் அந்தப் பொறுப்புலயும் இருக்குறாங்க”

“பரவாயில்ல சார். யாரா இருந்தா என்ன. நாங்க இங்க படிச்சதுக்கான ஆதாரமா மார்க் சீட் வச்சிருக்கோம்”

“நீங்க வச்சிருக்கீங்க. ஆனா அவங்க இங்க வந்தாத்தானே”

“ஏன் வர்றதில்லையா”

“அப்பப்ப ஒடம்புக்கு முடியாம ஆயிடும். இங்க மாசத்துக்கு ரெண்டு தடவதான் வருவாங்க. முக்கியமானத மட்டுந்தான் வீட்டுக்கு கொண்டுபோயி கையெழுத்து வாங்கிட்டு வருவோம்”

“சார்… சார், அதே மாதிரி எங்களுக்கும் ஒரு கையெழுத்து வாங்கித் தந்துருங்க சார்”

“அந்தம்மா எதையுமே நம்பாதுன்னு சொல்றேன்ல. வாங்குனத தொலச்சா அதுக்கு நாம பொறுப்பாக முடியுமான்னு கத்துவாங்கப்பா. சொன்னா புரிஞ்சிக்கிடுங்க. போயி நல்லாத் தேடிப் பாருங்க” என்று கூறியபோது சலிப்பும் வெறுப்பும் தொனித்தது.
*
“இப்படி கொஞ்சம் கூட பொறுப்பிலாமயா ஒருத்தன் இருப்பான். ஊருக்குள்ள இருக்கறவனெல்லாம் எத்தனை சாமர்த்தியமா ஒவ்வொரு காரியத்தப் பண்றான். எங்களுக்குன்னு வந்து வாச்சிருக்குதே எந்தப் பிரயோசனமுமில்லாம. ஓரடி மேல வச்சா மூனடி சறுக்குதே. கைக்கு வந்தது வாய்க்கு எட்டாமப் போயிடும் போல இருக்கே” என இருந்த சிறிய நம்பிக்கையும் கரைந்தவுடன் அதீத எதிர்பார்ப்புடன் மிதந்த அம்மா தரையில் தள்ளப்பட்ட வேதனையில் புலம்பினார். இதைக் கேட்டதும் இத்தனை நாள் தாய் தன்மேல் கொண்டிருந்த அபிப்ராயத்தை உணர்ந்த சங்கர் முற்றிலும் உள்சுருங்கி உண்மையிலேயே தான் ஒன்றுக்கும் பயனில்லாதவன் தான் என நம்ப ஆரம்பித்தான். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பீட்டர் “டேய் மச்சான், எனக்கு வேறொரு யோசனை தோனுச்சு, எங்கூட வா” என அழைத்துக் கொண்டு ஓட்டேரி பகுதிக்குச் சென்றான். பெரிய கழிவுநீர் ஆற்றை ஒட்டி சிமெண்ட்டால் பூசப்படாத செங்கல் கட்டிடங்கள் நெருக்கமாகக் காணப்பட்டன. தெருவும் ஒரு ஆட்டோ மட்டுமே செல்லுமளவிற்கு குறுகலாகவே இருந்தது. டவுசர் மட்டும் அணிந்த மூன்று சிறுவர்களும் பழைய உடையை அணிந்திருந்த சிறுமியும் ஆளுக்கொன்றாக வைத்திருந்த பம்பரத்தை கூச்சலிட்டபடி தரையில் கிடந்த ஒரு பம்பரத்தின் மீது ஓங்கிக் குத்தினார்கள். ஒரு சிறுவன் தனியாக வருத்தத்துடன் நின்று கொண்டிருந்தான். “என்னடா பண்றாங்க” என்றான் சங்கர்.

“அந்தப் பையன் தோத்திருப்பான். இவங்க நாலு பேரும் அவன் பம்பரத்த ஆக்கர் அடிக்கிறாங்க”

“அது ஒடஞ்சிடாதா”

“நல்ல மரத்துக் கட்டைனா ஒடையாது. லகுவான கட்டைனா மூனு தடவைக்கு மேல அடி வாங்கினா ஒடையும்”

“அந்தப் பையனப் பாத்தா பாவமா இருக்குடா”

“அவன் ஜெயிச்சிருந்தா இன்னொருத்தரோடத ஆக்கர் அடிக்க தயாரா இருந்திருப்பான்ல” கூறியபடியே மஞ்சள் வண்ணம் அடிக்கப்பட்ட வீட்டின் முன் நின்றான். வாசற்படி தெருவிலேயே இருந்தது. படியில் ஏறியவுடனேயே வீடுதான். படியில் நின்று இரும்பு கிரில்லைத் தட்டினான் பீட்டர். நாற்பது வயது மதிக்கக்கூடிய பருத்த, கருத்த பெண் கலைந்து கிடந்த முடியை கொண்டையிட்டபடி “யாருப்பா…” என்று கேட்டு கதவைத் திறந்தார்.
“அக்கா, மோகன் அண்ணனைப் பாக்கணும். பீட்டர்னு சொன்னாத் தெரியும்”

“இரு கூப்பிடறேன்…” என்று அவர் உள்ளே சென்றார். சட்டையை மாட்டியபடியே “வா பீட்டர்.. பாத்து நாளாயிடுச்சே” என்றபடி வெளியே வந்த மோகன் மனைவியைவிட இளமையாகத் தெரிந்ததற்கு அவரின் மெலிதான உடலும் நல்ல கருமையில் மிளிர்ந்த தலைமுடியும்தான் காரணம் என சங்கருக்குத் தோன்றியது. இவரைப் பார்க்க எதற்கு அழைத்து வந்தான் என்பது இவனுக்கு இதுவரை புரியவில்லை. பீட்டர் காரணம் இல்லாமல் எதையும் செய்யமாட்டான் என்ற நம்பிக்கையுடன் அவர்களுடனேயே அருகிலிருந்த டீ கடைக்கு சென்றான். மலையாளத்துக்காரர் நடத்தும் கடையது.

“சேட்டா மூனு பஜ்ஜி கொடு… அப்பறம் மூனு டீ” என்று கூறிவிட்டு அங்கிருந்த இருக்கையில் மோகன் அமரவும் இவர்களும் அமர்ந்தார்கள்.
“சொல்லுப்பா பீட்டர். இப்பவும் பர்த் சர்டிபிகேட்தானா. எத்தனை வேணும்”

“இல்லண்ணா. இவன் என் ப்ரண்டு சங்கர். கவர்மென்ட் வேலைக்கு எக்ஸாம் எழுதி பாசாயிட்டான். அதுல ஒரு சிக்கல்…”

தனித்தனி பிளாஸ்டிக் தட்டுகளில் காய்ந்த மந்தார இலைமேல் காரச்சட்னியுடன் வாழைக்காய் பஜ்ஜியை கொண்டுவந்து வைத்தார் சேட்டன்.

“டிகிரி சர்ட்டிபிகேட்டெல்லாம் ரொம்பக் காஸ்ட்டாவும்பா” என்று மோகன் கூறியபோது விபரம் புரிந்து சங்கர் திடுக்கிட்டான்.

“டிகிரியெல்லாம் இருக்குதுண்ணே. இந்த கன்டக்ட் சர்டிபிகேட்தானே காணாம்”

“இந்தச் சர்டிபிகேட் கேட்டு எவனுமே வந்ததில்ல. நீதான் பர்ஸ்ட். அது எப்படியிருக்கும்னு சாம்பிள் வச்சிருக்கிறியா” பஜ்ஜியை மென்றபடியே அவர் கேட்க, தேவைப்படாதென நகல் கூட எடுத்து வைக்காதலால் சங்கர் யோசித்தான். ஆனால், “இதோ இருக்குண்ணே…” என ஒரு கணமும் தயங்காமல் பையிலிருந்து எடுத்து சான்றிதழ் ஒன்றைக் காட்டினான். எட்டிப் பார்த்த சங்கர் அது பீட்டருடையது எனக் கண்டான்.

அதை வாங்கிப் பார்த்த மோகன் “இது பழசாயிருக்கே” என்றார்.

“ஆமாண்ணா இதுக்கு வயசு பனிரெண்டு ஆச்சு” மென்று கொண்டிருந்ததை விழுங்கிவிட்டு கூறினான் பீட்டர்.

“புதுசுன்னா ஈசியா பண்ணிடலாம். பழசுன்னா கொஞ்சம் சிரமம். இந்தப் பேப்பரப் பாரு… கொஞ்சம் பழுப்பா மாறியிருக்குல்ல. அது மாதிரி பேப்பரத் தேடி எடுத்து ரெடி பண்ணணும். ரேட்ட கேட்டு சொல்றேன். இப்ப கொஞ்சம் அட்வான்ஸ் கொடுத்திட்டுப் போ. எவ்ளோ ஆகும்னு நாளைக்கு சொல்றேன்” முடித்தார். டீ வரவும் குடித்து விட்டு எழுந்தார்கள். பீட்டர் சட்டைப்பையிலிருந்து எடுத்த பணத்துடன் சங்கரின் பெயரை முதலெழுத்துடன் எழுதி அவரிடம் கொடுத்துவிட்டு “இன்னும் மூனு நாளுக்குள்ள அங்க கொடுக்கணும்” என்று கூறியபடி இருவரும் விடைபெற்றார்கள். அப்போது சங்கரின் மனச்சாட்சி பல அறக்கேள்விகளை தனக்குள்ளேயே ஆவேசமாகக் கேட்டது. கேட்டுக் கேட்டு நாவறண்ட போதும் பதிலேதும் வரவில்லை. முடிவில் எல்லாவற்றிற்குமான பதில்களையும் ஒவ்வொன்றாக தர்க்கத்துடன் அதுவே உருவாக்கிக் கொண்டது. மாட்டிக்கொள்ளக் கூடாதே என்ற அச்சம் மட்டும் கடைசியாக மனதில் நீடித்தது. அம்மாவிடம் இந்த முயற்சி பற்றி எதுவும் தெரிவிக்கவேண்டாம், திரும்பவும் தவறு நேர்ந்தால் அவர்களால் தாங்கமுடியாது. எல்லாம் எண்ணியபடி நிகழ்ந்தபின் கூறலாம் என முடிவு செய்தார்கள்.

மூன்று நாட்களுக்குப் பிறகு மோகன் கொடுத்த சான்றிதழுடன் பீட்டரும் சங்கரும் அரசு அலுவலகத்திற்கு சென்றார்கள். முதல் மாடிக்குச் சென்று அவரின் அடையாளங்களைக் கூறி விசாரித்தார்கள். “அவர்தான் ராமலிங்கம் சார். அந்தக் கடைசி ரூம்ல இருக்கிறார். போய் பாருங்க. ஒருத்தர் மட்டும் உள்ள போங்க” என்று அழுத்திக் கூறினார்.

அந்தச் சான்றிதழை வாங்கி வந்து, வீட்டிற்கு வெளியே அழைத்து பீட்டர் காட்டியபோதே சங்கரின் முகம் சுருங்கியது. “என்ன பீட்டர் இது. ஒன் சர்டிபிகேட் எப்படி இருக்கு, இது ரொம்ப பழுப்பா பிரிண்டிங்கெல்லாம் லைட்டா இருக்குதே” என குரல் கமறக் கேட்டான்.

“அத நானும் கேட்டேன்டா. பழசு மாதிரி தெரியணும்லன்னு சொன்னதோட என் சர்டிபிகேட்ட பாக்கிறதாலதான் வித்தியாசம் தெரியிது. ஆபீசுல இருக்கிறவர்கிட்ட புதுச மட்டும்தானே காட்டப் போறிங்கன்னு சொன்னார். அதுவும் சரிதானேன்னு தோனுச்சுடா” என்று தேற்றினான்.

பாதி திறந்திருந்த கதவு வழியாக அறையின் மூலையில் போடப்பட்டிருந்த டேபிளுக்குப் பின் அமர்ந்து அருகில் அமர்த்திருந்தவரிடம் ராமலிங்கம் பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது. தயக்கத்துடன் கதவை நன்றாகத் திறந்தான் சங்கர். நிமிர்ந்து நோக்கிய இராமலிங்கம் தலையசைவால் அழைத்தார். கால்கள் பின்ன மனம் பின்னுக்கிழுக்க முன்னே நடந்தான். இப்போது கூட வாய்ப்பு இருக்கிறது, ஏதாவது காரணம் கூறிவிட்டு அப்படியே திரும்பிவிடலாம். ஆனால் போலியைக் கொடுத்து மாட்டிக் கொண்டால் புதைகுழியில் சிக்கியது போலத்தான்… மனதினுள் எச்சரிக்கைக் குரல் ஓங்கி ஒலித்தது. அக்கூக்குரலை சட்டை செய்யாத வேறொன்று உடலை இழுத்துக் கொண்டு அவரிடம் சென்றது.
“சொல்லுங்க” என்று எதிர்பார்ப்புடன் நோக்கினார். சங்கரின் முகம் அவருக்கு நினைவில்லை என்பதை அவர் முகம் காட்டியது.
“சார், நான் சங்கர். போன வாரம் சர்டிபிகேட் வெரிப்பிகேஷனுக்கு வந்திருந்தேன்…”

“சங்கரா… கன்டக்ட் சர்டிபிகேட் தரணுமில்ல… கொண்டு வந்திருக்கீங்களா”

“ஆமா சார்” என்றபடி சான்றிதழை நீட்டினான்.

கையில் வாங்கிப் பார்த்தவரின் முகம் கூர்மை கொண்டது. தாளை லேசாக வருடிய பின் முகத்திற்கு அருகில் வைத்துப் பார்த்தார். சங்கரின் மனம் சிந்தையின்றி ஒடுங்கி நடுங்கிக் கொண்டிருந்தது. அவர் எதையோ உணர்ந்ததைப் போலத் தோன்றியது. நிமிர்ந்து இவன் நடுக்கத்தைக் கண்டவுடன் “இது சரியாயில்ல. புதுசா ஒன்னு வாங்கிட்டு வந்திடுங்க. நாளைக்குதான் கடைசி நாள்” என்று எந்த உணர்வுமில்லாமல் கூறியபடி இவன் கையில் கொடுத்துவிட்டு அருகில் இருந்தவரின் பக்கம் திரும்பினார்.

சங்கரின் மனம் கொந்தளித்தது. எத்தனை ஆணவம். சான்றிதழின் உண்மையை அறிந்தாரா இல்லையா என்பதை பார்வையிலோ வார்த்தையிலோ உணர்த்தாமல் புதிதாக வாங்கிவரக் கூறுகிறாரே. வாங்கி வரவேண்டியது மோகனிடமா அல்லது கல்லூரியிலா… சரியாகயில்லையெனக் கூறியது பழையதாக இருப்பதையா… போலியாக உள்ளதையா… முகத்தை எப்படி எவ்வுணர்வையும் காட்டாதவாறு பழக்கமுடியும். அல்லது அவரது இயல்பே இப்படித்தானா… கேள்விகள் ஈசல்கள் போல பெருகி எழுந்து, இறகுதிர்த்து மனமெங்கும் ஊர்ந்து விதிர்க்க வைத்தது. இந்த அறிவுகெட்ட பீட்டர் ஏன் இவ்வளவு தூரத்தில் நிற்கிறான். அருகில் வந்து நடுங்கும் கைகளைப் பிடிக்கக் கூடாதா.. ஒன்றும் தவறாக ஆகவில்லையென அரவணைக்கக் கூடாதா… பத்தடி தூரத்தை பெரும்பாலையை கடப்பது போன்ற தடுமாற்றத்துடன் கடந்து வெளியே வந்தான்.

பீட்டரின் தோளைப் பற்றியபடி நடந்து கீழே வந்ததும் நடந்ததைக் கூறினான். கேட்டு பதட்டமடையாமல் இருந்தவனைப் பார்த்து சங்கருக்கு சினம் எழுந்தது. கல் நெஞ்சக்காரன்… எல்லாக் கதவுகளும் அடைத்துக் கொண்ட பின்பும் எதுவுமே நிகழாததைப் போல இயல்பாக இருக்கிறானே. நிகழ்ந்தது அவனுக்கில்லையே, எதற்கும் பயனில்லாத இந்தச் சங்கருக்குதானே என்று எண்ணங்கள் ஓடின. கொதிக்கும் எண்ணெயில் நீரைத் தெளிப்பதுபோல சிறிய புன்னகை தவழ பீட்டர் சங்கரை நோக்கினான். சங்கர் முகம் சிடுசிடுக்க ஏதோ சொல்ல வாய்திறந்தபோது அதை வேண்டாமென்று கைகளால் தடுத்து “ரொம்பப் பொங்காத மச்சான். பிரச்சனை பெருசா வர்றப்பதான் நாம நிதானமா இருக்கணும். ஒடனே ரியாக்ட் பண்ணினா இன்னும் சிக்கலாதான் ஆகும். புதைகுழிக்குள்ள விழுந்தவன் பொறுமையா இருந்து யோசிச்சாதான் வெளிய வர்றதுக்கு வாய்ப்பிருக்கும். அவசரமா துடிச்சா அவ்ளோதான்…”

சங்கரின் மனம் சற்று நிதானத்திற்கு வந்தது.

“பிரச்சனைக்குள்ள இருக்கிறவனுக்குதானே அதோட வலி தெரியும். வெளிய இருக்குறவனுக்கு என்ன தெரியும்னு நெனக்கிற… சரியா”

சங்கர் விழிகளைத் தாழ்த்திக் கொண்டான்.

“வெளிய இருக்கிற எனக்கு ஒன் வலி தெரியாததுதான். ஆனா வழி தெரியும். எப்படி இந்த இக்கட்ட கடந்து போறதுன்னு. எதுக்கும் தீர்வு காண கொஞ்சம் தள்ளி நின்னு பார்க்கணும்னு சொல்வாங்கல்ல. அது இப்பதான் புரியிது”

சங்கர் எதுவுமே கூறாமல் வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தான். மனதில் எந்த எண்ணமும் இல்லாமல் வெறுமையாக இருந்தது.

“காலேஜுக்கே மறுபடி போய் பாக்கலாமேன்னு எனக்கு தோனுது” என்று கூறியவனை சங்கர் நிமிர்ந்து பார்த்தான். ஆமாம் அதைத் தவிர செய்வதற்கு வேறென்ன உள்ளது என்று தனக்குள் கேட்டுக் கொண்டான். பணியாற்றுபவர் சொல்வதை ஏன் நம்பவேண்டும்… நேரடியாக சாமியிடமே வரம் கேட்பதுபோல அந்தம்மாவிடமே கேட்டு விடலாமே என்று கூறியபடி கல்லூரிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட பீட்டர் தாளாளரும் முதல்வருமான அந்தப் பெண்மணி எப்போது வருவார்கள் என்று கேட்டான். மறுநாள் வருவார் எனத் தெரிவித்தார்கள். நாளைதான் கடைசி நாள் என்று எண்ணம் தோன்றிட உடலுக்குள் ஓர் அதிர்வு ஓடியது.
*
இடைவேளை நேரம் முடிந்து பள்ளிப் பிள்ளைகளெல்லாம் வகுப்புகளுக்குள் சென்றுவிட்டதால் வெயில் சற்று உக்கிரமாக அடித்தது போல் சங்கருக்குத் தோன்றியது. பீட்டர் கல்லூரியின் நுழைவாயிலில் நின்று அங்கிருந்த பாதுகாவலரிடம் பேசிக் கொண்டிருந்தான். அவனால் எப்படி எவரிடமும் பார்த்தவுடனேயே பேசி அவர்களுள் ஒன்றென ஆகிவிட முடிகிறதென்று சங்கருக்கு புரியாத ஆச்சர்யமாகவே இருக்கும். அப்படிப் பேசுவதன் மூலம் அவனுக்கு தேவையான தகவல்களையும் திரட்டி விடுவான். அந்த இயல்பினால்தான் காப்பீட்டு முகவர் பணியை தேர்ந்தெடுத்தான் என்பது நினைவுக்கு வந்தது. பீட்டர் சங்கரை நோக்கி வந்தான். அப்போது பெரிய காரொன்று வாயிலின் வழியே உள் நுழைந்தது. கார் வருவதை கவனித்த பின்தான் பீட்டர் உள்ளே வரத்தொடங்கினான் எனத் தோன்றியது. சங்கரிடம் இவங்கதான் என்பதுபோல விழிகளாலும் உதட்டசைவாலும் சைகை செய்தான்.

முதல்வர் அறைக்கு முன்பாக கார் வந்து நின்றதும் ஓட்டுநர் இறங்கி பின்கதவைத் திறந்து அலுமினிய ஊன்றுகோல்களை எடுத்து வந்தபின் முன்கதவைத் திறந்தான். ஒரு கூர்மையான உறுமலுடன் அதை வாங்கிக் கொண்டு உடலை பிரயத்தனத்துடன் உந்தி கோல்களை பிடித்தபடி எழுந்து நின்ற பெண்ணுக்கு வயது நாற்பதிற்கும் குறைவாகவே இருக்குமென சங்கர் எண்ணினான். கண்ணைப் பறிக்கும் சிவப்பு மற்றும் பச்சை நிறத்தில் சுடிதார் போன்ற வடிவத்தில் அவரது உடை இருந்தது. யாரையும் நிமிர்ந்து பாராமல் இரண்டடிக்கு ஒருமுறை உறுமலோசை எழுப்பியபடி கெந்திக் கெந்தி நடந்தார். நிற்கும் போது அழகாகத் தெரியும் அவர் முகம் நடக்கும் போது துயருடன் தெய்வத்தை பழிக்கும்போது தோன்றுவது போன்ற ஒரு விகாரத் தன்மையை அடைந்தது.

இவர்களுக்கு முன்னால் நான்குபேர் பணம் தொடர்பான விசாரிப்புகளுக்காகவும் ஒப்புதல்களுக்காகவும் கையில் கோப்புகளோடு காத்திருந்தார்கள். அவர்களில் முதலில் இருந்தவர் உள்ளே சென்றபோது முதல்வர் கடிந்து பேசும் ஒலி வெளியே கேட்டது. அவர் திரும்பி வந்தபோது பெரும் பாரத்தைச் சுமந்திருப்பது போன்ற களைப்புடன் தோற்றமளித்தார். பீட்டர்தான் விசாரித்தான்.

“என்ன சார்… மேடம் மூட் சரியில்லையா”

“ஆமா சார். பல வருசமா இவங்கிட்ட பிஸினஸ் பண்றேன். எப்பவுமே சந்தேகத்தோடயே பாக்கறாங்க. சின்னச் சின்ன விசயத்தையும் விசாரிக்கிறாங்க. அவங்கள நம்ப வைக்கிறதுக்குள்ள…” என்று பெருமூச்சு விட்டபடி நகர்ந்தார்.

அதைக் கண்டபோது சங்கரின் உள்ளத்தில் நடுக்கம் அதிகரித்தது. பீட்டர் ஏதோ உற்சாகமான பாடலை உதடுகளுக்குள் பாடிக் கொண்டிருந்தான். அவனுக்கென்ன பிரச்சனை… எதற்கு கவலைப்பட வேண்டும் என்று கறுவியபடி பல்லைக் கடித்தான். அதன் பிறகு சென்று வந்தவர்களின் முகங்களும் வெளிறியே இருந்தன.

அடுத்து இவர்கள் செல்லவேண்டிய முறை. உள்ளே சென்றவர் துவண்ட முகத்துடன் வெளியே வரவும் சங்கர் எழுந்தான். அப்போது வேகமாக வந்த ஒருவர் “தம்பி.. மேடத்தை அவசரமா பாக்கணும். கொஞ்சம் பொறுத்துக்கப்பா…” என்று கேட்டார். சங்கர் மறுப்பாக சொல்ல முயற்சித்தபோது தடுத்த பீட்டர் “சரி பரவாயில்ல சார் நீங்க போங்க…” என்று அனுமதித்தான். சங்கர் முறைப்பதைக் கண்டு பரவாயில்லடா என்ற பாவனையுடன் தோளில் தட்டினான். அப்போது பள்ளியின் மணியடித்து பிள்ளைகளெல்லாம் இறகு கசங்கிய வண்ணத்துப்பூச்சிகளாய் வெளியே வந்தார்கள். வெளிக்காற்று முகத்தில் பட்டவுடனேயே அவர்கள் முகம் மலர்ந்து ஒருவரையொருவர் பார்த்தும் தொட்டும் சிணுங்கியபடி கசங்கல் நீங்கிய சிறகு விரித்து பறக்கும் பறவைகள் போல உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார்கள்.

உள்ளே சென்றவர் வந்த வேலை இவருக்கு சாதகமாக முடிந்த திகைப்பு முகத்தில் நிலைக்க வெளியே வந்து “நன்றிப்பா.. ஒரு அவசரம் அதனாலதான்..” என்றபடி நகர சங்கர் எழுந்தான். “இப்போது போகவா” என்று பீட்டரைப் பார்த்தவனை “போடா…” என்று தோளில் கை வைத்து விளையாட்டாக தள்ளினான்.

கல்லூரிப் படிப்பை முடித்து பலகாலம் ஆன பின்பும், படித்தபோது இருந்த அதே தயக்கமும் பதட்டமுமாகவே முதல்வர் அறைக்குள் நுழைந்தான். நிமிர்ந்து முதல்வரைப் பார்த்தபோது அவர்களின் முகத்தில் தவழ்ந்த பிள்ளைகளைக் காணும் அன்னையின் பரிவைக் கண்டு ஒரு கணம் திகைத்தான். பருந்தை விரட்டும் தாய்க்கோழியின் முகத்தை எதிர்பார்த்து உள்ளே வந்தவனுக்கு கோழி தன் குஞ்சுகளிடம் காட்டும் முகத்துடன் அவர் இருந்தது யோசிக்க வைத்தது. ஒருமுறை சுற்றிலும் பார்த்தான். எதையும் இவனால் கூர்ந்து கவனிக்க முடியவில்லை. முன்பு இருந்த தோற்றத்திலேயே வடிவமைப்பு இருந்ததாகத் தோன்றியது. ஒரு சாளரம் பள்ளியை பார்க்கும் வண்ணம் அமைந்திருந்தைக் கண்டதும் சற்று தெளிவு கிடைத்தது.

“சொல்லுப்பா, என்ன விசயம்”

சங்கர் விபரத்தைக் கூறியதும் ஆச்சர்யத்தில் விரிந்த விழிகளுடன் புன்னகையுடன் “வாழ்த்துகள்பா… வேல கெடச்சதுக்கு. இத்தனை வருசத்துக்கு அப்பறமும் படிச்சு வேல வாங்கறது பெரிய விசயம். எப்படி முடிஞ்சது” என்று கேட்டபோது சங்கரின் முகமும் மலர்ந்தது.
“உயிர் தப்ப வேற வழியே இல்லாத முனையில நிக்கிறப்ப விலங்குகள்ட்ட ஒரு ஆக்ரோஷம் வரும்ல மேடம்… அந்த மாதிரி மனநிலைல படிச்சசேன். தன்மானம் கூட உயிர் போலத்தானே மேடம்” என்று தெளிவாகப் பேசியது அவனுக்கும் ஆச்சர்யமாக இருந்தது.

“எனக்கே கூடத் தோனும்.. இந்த கன்டக்ட் சர்டிபிகேட் ஏன் கொடுக்குறோம்னு. அதோட யூஸ் இப்பதான் தெரியுது. கொஞ்சம் வெயிட் பண்ணு தரச்சொல்றேன்” என்று கூறிய முதல்வரை நன்றியுடன் தலைகுனிந்து வணங்கிவிட்டு வெளியே வரும்போது கதவுக்கு மேலே ஆதிபராசக்தியின் பெரிய ஓவியம் இருந்ததை கவனித்தான்.

“வெற்றி தான மச்சான்” என்று கேட்ட பீட்டரை அருகில் சென்று அணைத்துக் கொண்ட போது “எப்படிடா டைமிங் தெரிஞ்சது” என்று கேட்டான்.

“செக்யூரிட்டிக்கு தெரியாதது எதுவும் இருக்குமா” என்று அவன் இவன் தோளைத் தட்டியபோது ஒருதுளி விழிநீர் பீட்டரின் சட்டையில் விழுந்தது.

  • நேராக அரசு அலுவலகம் சென்று ராமலிங்கம் சார் அறைக்குச் சென்றார்கள். சங்கர் மட்டும் அறைக்குள் சென்றபோது அவர் இருக்கை காலியாக இருந்தது. அன்று சங்கர் வந்தபோது அருகில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். சங்கர் அவரை அழைத்து “சார் இன்னைக்கு லீவா சார்…” என்று இராமலிங்கம் இருக்கையைச் சுட்டி பயமும் குழப்பமுமாக வினவினான். நிமிர்ந்து பார்த்த அவர் “சார் இப்பதான் ஒரு அவசர வேலை இருக்குதுன்னு கிளம்பினார். என்ன கன்டக்ட் சர்டிபிகேட் கொண்டு வந்திருக்கிறீங்களா” என்று கேட்டார்.

“ஆமா சார், காலேஜ்ல போயி கெஞ்சி கூத்தாடி வாங்கிட்டு வந்தோம். இன்னைக்குதான் கடைசி நாள்னு சார் சொன்னாரு. இப்ப என்ன சார் பண்றது” என்று சான்றிதழைக் காட்டியபடி திணறலாகக் கூறினான்.

வாங்கிப் பார்த்தவர் “சரியா இருக்கே. இப்படி கொடுக்கிறத விட்டுட்டு அன்னைக்கு அத கொண்டு வந்து கொடுத்தியே.. அதுனால வர்ற பிரச்சனைய பத்தி தெரியுமா”

சங்கர் முகத்தில் உணர்வேதும் தெரியாமலிருக்கப் பிரயத்தனம் செய்தான். “போலியான சர்டிபிகேட் கொண்டுவந்து தந்தியே, வேற யார்கிட்டயாவது நீ இப்படி கொடுத்திருந்தா தப்பிச்சிருக்கவே முடியாது. அது எவ்வளவு பெரிய குற்றம் தெரியுமா. வேலையும் கெடச்சிருக்காது. இதுக்கப்பறம் எக்ஸாமும் எழுத முடியாதவாறு பண்ணியிருப்பாங்க”

இதைப் பற்றி எதையுமே அறியாத பாவனையுடன் முகத்தை வைத்துக் கொண்டு கேட்டுக் கொண்டிருந்தான்.

“சின்னப் பையன் பின்விளைவப் பத்தி தெரியாமச் செய்றான்னு நீ போனப்பறம் சொன்னாரு. இதெல்லாம் ஏன் சொல்றேன்னா… அன்னைக்கு ராமலிங்கம் சார சாபம் விடுற மாதிரி முறைச்சுக்கிட்டே போனியே.. சார் நல்ல மனுசன்னு ஒனக்குப் புரியணும்னுதான்”

சங்கர் எதுவும் சொல்லாமல் தலையை குனிந்தபடி நின்றான். “சரி புறப்படு. ராமலிங்கம் சாருக்கு லேசா காய்ச்சல். இருந்தாலும் உன் ஃபைல சப்மிட் பண்ணனுமேன்னு இன்னைக்கு வந்து இவ்ளோ நேரம் இருந்தாரு. அவரால ஒக்கார முடியல. நான்தான் சர்டிபிகேட்ட வாங்கி பைல்ல சப்மிட் பண்ணிடுறேன் சார்னு சொல்லி வீட்டுக்கு அனுப்பி வச்சேன். தயக்கத்தோட தான் போனாரு. சரி நான் பாத்துக்கிறேன். நீங்க கிளம்புங்க” என்று அவர் கூறியவுடன் நன்றி சொல்லியபோது இவன் குரல் தழுதழுத்தது. திரும்பியவனை அழைத்தவர் “கூடிய சீக்கிரம் அப்பாயின்மென்ட் ஆர்டர் வீட்டுக்கு வரும். தபால்காரர்கிட்ட சொல்லி வைங்க. அவரு முகவரியில ஆள் இல்லேன்னு திருப்பி விட்ற போறாரு” என்றவருக்கு மீண்டும் நன்றி சொல்லி வணங்கிவிட்டு வெளியே வந்தான்.

வண்டியில் பின்னால் அமர்ந்து வந்தபோதே உவகையோடு விபரங்களைக் கூறிக்கொண்டே வந்தான் சங்கர். ராமலிங்கம் அந்தச் சான்றிதழை இவனிடம் திருப்பிக் கொடுக்காமல் வேறு நடவடிக்கை எடுத்திருந்தால் என்னவாயிருக்கும் என்பதை பற்றியே கூறிக்கொண்டே வந்தவன் விரைவிலேயே பணி ஆணை வீட்டுக்கு வருமென்பதையும் கூறினான். எப்போதும் உற்சாகமாக பேசிக்கொண்டே வரும் பீட்டர் எதுவுமே கூறாமல் வந்தான். விரைவாகச் செல்ல வேண்டிய நேரத்திலும் நிதானமாக வண்டியை ஓட்டும் பீட்டர் இப்போது மிகவேகமாக ஓட்டினான். சாலையில் மெதுவாகக் குறுக்கிட்ட இருவரின் குடும்பத்தினரை வைதான். பீட்டரின் தோளைப் பிடித்திருந்த கரங்களில் வண்டி அதிர்வது போல அவன் உடல் அதிர்வதை சங்கர் உணர்ந்தாலும் அதை உள்ளத்திற்கு கொண்டு செல்லவில்லை. வீட்டின் முன் வண்டி நின்றவுடன் இறங்கி வீட்டிற்குள் நுழைய ஆரம்பித்த சங்கர் வண்டி நகரும் ஓசையை கேட்டவுடன் தான் எப்போதும் வீட்டிற்குள் வரும் பீட்டர் இன்று உள்ளே வராமல் கிளம்புவதைக் கண்டான். பக்கவாட்டில் தெரிந்த அவன் முகத்தை ஒரு கணம்தான் கண்டான். அம்முகம் இதுவரை இவன் கண்டிராத வகையில் பெருகி நிறைந்து பீறிட முயலும் நீரைத்தடுத்துக் கொண்டிருக்கும் மதகைப் போல கொந்தளிக்கும் உணர்வுகளை அடக்கிக் கொண்டு மிக இறுக்கமானதாக இருந்தது. அவன் உள்ளத்தைப் பற்றி தனக்கு எதுவுமே தெரியாது என்பதும் அறிந்து கொள்ள இதுவரை தான் முயன்றதில்லை என்பதும் இப்போதுதான் உறைத்தது. போலிச் சான்றிதழ் கொடுக்க முயற்சித்ததில் சிக்கியிருந்தால் நடந்திருக்கக் கூடிய பின்விளைவுகளைப் பற்றி எண்ணி கலங்கியிருப்பானோ.. பணி தொடர்பாக ஏதேனும் நெருக்கடியாக இருக்குமோ.. இவன் அதற்கெல்லாம் கலங்குகிற ஆளாகத் தெரியவில்லையே… என்ற எண்ணங்களுடன் உள்ளே நுழையும் போது வளையின் துளையில் கரும்புள்ளியெனத் தெரியும் பெருச்சாளியின் மூக்கு நுனி போன்ற எதையோ உணர்ந்து ஆழுள்ளம் திடுக்கிட்டது.

வண்டியின் ஓசை கேட்டு வெளியே வந்து “ஏன் பீட்டர் உள்ளே வராமல் போகிறான்” என்று கேட்ட அப்பாவின் கைகளில் “இந்தியா போட்டோ ஸ்டூடியோ” கவரும் நன்னடத்தை சான்றிதழும் இருந்ததை கவனித்தபடியே “உள்ளே அனல் அதிகமாயிருக்கு.. அது தணிஞ்சாதான் அவன் இந்தப் பக்கம் வருவான்” என்று கூறிவிட்டு சங்கர் உள்ளே சென்றான். சூரியன் சாய்ந்திறங்கிக் கொண்டிருக்கும் வானத்தை புரியாமல் சில கணங்கள் நோக்கியபின் வீட்டை நோக்கித் திரும்பினார் அப்பா.

***

கா. சிவா – தொடர்ந்து பல்வேறு இதழ்களில் எழுதி வரும் இவரது “விரிசல்” எனும் சிறுகதைத் தொகுப்பு அண்மையில் வெளியாகியுள்ளது. மின்னஞ்சல்: sivaangammal1983@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular