Friday, March 29, 2024
Homeஇலக்கியம்அபுனைவுமயிலாப்பூரும் மா. அரங்கநாதனும்...

மயிலாப்பூரும் மா. அரங்கநாதனும்…

ரவிசுப்பிரமணியன்

கலைஞன்

கோவில்களும் திறக்காமல்
உலகியக்கம் ஸ்தம்பித்து
சப்தமொடுங்கிய
நேரத்தில்
சந்நிதித் தெருவின் வீட்டிலிருந்து
நாதஸ்வரக் கலைஞன்
நாத ஆலாபனையில் உருக்குகிறான்

பச்சைக்கிளிகளும்
புறாக்களும்
ராகவழி திரிந்தலைந்து கோபுரங்களுக்கு
பறக்கின்றன

தீர்த்தக்குளத்தின் சொற்ப நீரில்
மீன்கள் சிலிர்த்து
வான் நோக்கி இதழ் குவிக்கின்றன

கோசாலை பசுக்கள்
மேயாது வெறிக்க
நாக மண்டபத்து உயிரினங்கள்
சுருண்டுகிடக்க
கடவுளும் மெல்ல நடந்து
திட்டி வாசலை
நெருங்கிவிட்டார்

வளி மண்டலத்தையே
சுநாதத்தால் நிரப்பிக்கொண்டிருந்த கலைஞன்
வாசிப்பை நிறுத்தினான்
இலவசத்திற்கான வரிசையில் நிற்க.

***

தேர்ந்த படைப்பாளிகள் தீர்க்க தரிசிகள் என்று நீங்கள் நம்பத்தான் வேண்டும். அதற்கு ஏராளமான உதாரணங்கள் உண்டு. உலகம் முழுக்க இப்படி ஒரு உற்பாதம் நடந்துகொண்டிருக்கிறபோது எனக்கு மா. அரங்கநாதனின் “மயிலாப்பூர்” கதை ஞாபகத்துக்கு வந்தது. என்ன ஞானதிருஷ்ட்டி அது என்று வியக்காமல் இருக்க முடியவில்லை.

1987ல் வெளிவந்த அவரது “வீடு பேறு” தொகுப்பில் உள்ள கதை அது. கிட்டத்தட்ட இன்றைக்கு இயக்கமின்றிக் கிடக்கும் இந்த விஷயங்கள் எல்லாம் அக்கதையில் வருகிறது.

திடீரென்று சென்ற வாரம் என் மனைவி நீங்கள் பிறந்த வருஷத்தின் பெயர் என்னவென்று சொல்லுங்கள் என்றாள். கடலங்குடி ஜோசியர் சொன்ன குறிப்பை அப்பா ஜாதமாக எழுதி வைத்திருந்தார். புலம் பெயர் வாழ்வில் அது எங்கோ தொலைந்து இப்போது இருப்பது தேதி நேரம் வருஷம் சொன்னால் கணிக்கும் கணிப்பொறி ஜாதகம். அதில் தமிழாண்டின் பெயர் இல்லை. தமிழ் வருஷங்கள் அறுபதுதானே பார்த்துவிட்டுச் சொல்வோம் என்று நினைத்தேன். அந்த பெயர்களை பார்த்தால் பிறந்த வருஷம் ஞாபகத்துக்கு வருமென்று அந்த பட்டியலைத் தேடி எடுத்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். சோப கிருது என்று தட்டுப்பட்டதும் அவளிடம் சொல்லிவிட்டு பஞ்சாங்கத்தில் அந்த வருஷத்திலிருந்து சும்மா வருஷபலன்களைப் படித்துக்கொண்டிருந்தேன்.

கோவில்களுக்குப் போவேன் வணங்குவேன். ஆனால் பெரும் தெய்வ நம்பிக்கை இல்லை. நடக்கும் நடப்பையெல்லாம் பார்த்து பகடியாக “எல்லாம் அவன் கையில் இருக்கிறது.

நம் கையில் என்னாடா தம்பி இருக்கிறது” என்று கவிஞன் இசைக்குக் கட்செவி அஞ்சலில்எழுதியிருந்தேன். அவன் அடுத்த நிமிஷம் “சானிடைசஸ்ர்கள்ண்ணா” – என்று பதில் அனுப்பியிருந்தான். அப்படிக் கடவுள்கள் மேல் மட்டுமல்ல இந்தச் சாமியார்கள், ஜோசியர்கள், குறி சொல்பவர்கள், ஏடு படிப்பவர்கள், மந்திரவாதிகள், மதவாதிகள் இவர்கள் யார் மீதும் எனக்கு எந்தக் காலத்திலும் நம்பிக்கை இருந்ததில்லை. அதை இந்தக் காலம் மேலும் ஊர்ஜிதம் செய்கிறது. ஆனாலும் இந்தப் பிரகிருதிகள் என்னதான் சொல்கின்றன என்று வேடிக்கைக்காகப் படித்துப் பார்ப்பேன். அந்த வகையில் இந்த சார்வரி வருஷத்தின் பலன் சொன்ன பஞ்சாங்கப் பாடலைப் படித்ததும் விக்கித்துப் போனேன். கவிஞர். இடைக்காடரின் அந்த வெண்பா இது.

“சாருவரி ஆண்டதனிற் சாதிபதினெட்டுமே
தீரமறு நோயால் திரிவார்கள் – மாரியில்லை
பூமி விளை வில்லாமற் புத்திரரும் மற்றவரும்
ஏமமன்றி சாவார் இயம்பு”.

முன்னவர் சிறுகதை எழுத்தாளர். பின்னவர் கவிஞர். முன்னவர் எண்பதுகளில் அப்படி ஒரு கதையைச் சொன்னார் என்றால் பின்னவர் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இந்தக் கவிதையை எழுதியிருக்கிறார். கழிசடைகள் வாக்கை நம்பாமலிருக்கலாம். கலைஞனின் வாக்கை நம்பாமல் இருக்க முடியுமா. ஆனால் அத்தகைய கலைஞனுக்குக் கிடைக்கும் மதிப்பு இங்கு எத்தகையது என்று வெதும்பும் சூழலில் இரண்டு சம்பவங்கள் ஆறுதலாக இருந்தன.

நம் எல்லோரைப் போலவும் வீட்டுக்குள் அடைபட்டு பொருள்கள் கிடைக்காது அவதிப்பட்ட பொன்னீலனுக்கு அரசு அதிகாரிகள் வீடு தேடி பொருள்களைக் கொண்டுபோய் சேர்த்தது. சோ. தருமன் பல் வலியால் அவதிப்பட்டு வெளியே சென்ற போது போலீஸ்காரர்கள் அவரை மறித்து கெடுபிடி செய்து பின் அவர் எழுத்தாளர் என்று தெரிந்ததும் (அவர் என்ன ரைட்டர் என்று கீழ் மட்ட ஆட்கள் புரிந்துகொண்டது வேறு விஷயமாக இருந்தாலும்) அவரை மரியாதையாக நடத்தியது ஆறுதலான விஷயங்கள்.

நம் அரும் பெரும்மொழியின் சாதனைகளைப் பல துறைகளிலான அதன் பங்களிப்பை அதன் தாதுக்களின் மேன்மையை உலகின் முன் வைத்து நிறுவி அதை உயர்த்தாமல், மொழியை வெற்று கோஷங்களாக்கி அரசியல் செய்து கொழுத்தும் விற்றும் பிழைத்து வருபவர்கள் மத்தியில் உண்மையிலேயே கலைக்கும் இலக்கியத்துக்குமாய் வாழ்பவர்களுக்காக சமூகமோ அரசோ ஒரே ஒரு அரிசி மிட்டாயைக் கொடுத்தால் சந்தோஷப்படுகிறது மனசு.

இருக்கட்டும்.

மா. அரங்கநாதன் கதைக்கு வருவோம். திடீரென்று ஒரு நாள் ஊரே காணாமல் போய்விடுகிறது அந்தக் கதையில். ஊர் என்றால் ஊரில் இருக்கும் ஜூவராசிகள். பூங்காக்கள் சாலைகள் எல்லாம் வெறிச்சோடிக் கிடக்கின்றன. கார்கள் ரிக்‌ஷாக்கள் எல்லாம் தூசு படலமாய் அசைவற்று நிற்கின்றன. புழுதிபடிந்த கேட்பாரற்ற கட்டிடங்கள். மனிதர்களே இல்லா கோவில்கள் குளங்கள். அந்தக் கலியுகத்திலும் கரப்பான் பூச்சிகள் மட்டும் நிறைய வாழ்கின்றன. எதோ ஒன்று நடந்து இயக்கமற்ற இடத்தில் முத்துக்கருப்பனுடனும் அவனுடன் உரையாடும் காயத்திரி வழியாகவும் சில சித்தரிப்புகள் விவரணகள் வழியாகவும் கதை நகர்கிறது. கதை நடக்கும் மாசமும் இதே சித்திரை மாசம்.

அந்த இயக்கமற்ற காலத்திலும் மனம் நிம்மதியாய் இருக்க தேவாரத்தைப் பற்றிப் பேசுகிறான் முத்துக்கருப்பன். கடைசியில் அந்த ஊர்மட்டும் அனாந்திரமாக இருக்க முத்துக் கருப்பனும் காயத்ரியும் வெவ்வேறு திசைகளில் பூச்சிகள் போல சென்று மறைகின்றனர் என்று கதை முடிகிறது.

இழான் பவில் சார்த்ர, சைமன் டி பாவெர் மற்றும் (அபத்தவாதி) ஆல்பெர்ட் காம்யூ, ஃபியோடோர் தஸ்தயேவ்ஸ்கி, பிரான்ஸ் காஃப்கா போன்றோரின் இருத்தலியல் எழுத்துக்களை அறிந்தவர்கள் ஓரளவு இதைச் சட்டென புரிந்துகொண்டுவிட முடியும்.

இந்தக் கதையும் அது தரும் குறியீடுகளும் அதன் உப பிரதிகள் தரும் செய்திகளும் இந்த வைரஸ் தாண்டவ காலத்திற்குப் பொருத்திப்பார்க்க இடமளித்து காலத்தைத் தாண்டி அர்த்த பரிமாண விஸ்தீரணம் கொள்கிறது.

மா. அரங்கநாதனை ஜார்ஜ் லூயி போர்ஹோவுக்கு இணையானவர் என்று சொன்ன க. நா.சுவால் ஞானரதத்தில் வெளியிடப்பட்ட கதை இது. திறமையுள்ள படிப்பாளியான ஒரு எழுத்தாள நண்பர் அப்போது அந்தக் கதை புரியவில்லை என்று க. நா.சுவிடம் கேட்டதற்கு இன்னும் ஒரு முறை படியுங்களேன் என்று அவர் சொன்னதாக 16. 2. 88 இல் பாரிமுனை ஒய் எம் சி ஏ அரங்கில் அவரே பேசிய ஒரு ஒலிப்பதிவு சொல்கிறது.

எந்த ஆர்பாட்டமும் சிஷ்யகோடிகளுமில்லாமல் நம் பண்பாட்டு கலாச்சார தளங்களின் கூறுகளை, ஆன்மீக மரபின் தீற்றல்களை, தமிழின் தொன்ம அடியாழ வேர்களின் மகத்துவத்தைத் தன் படைப்புகள் வழி எழுதிக்காட்டிய கலைஞன் மா. அரங்கநாதன்.

அறிவுத்தளத்தில் அவை இயங்கினாலும் சாதாரண ஒரு வாசகனும் அதில் அவனுக்கான ஒரு இழையைப் பிடித்து மேலேக முடியும். தன் வாசகனுக்குத் தோற்றம் காட்டியும் காட்டாமலும் தோற்றங்களுக்குப் பின் உள்ள உண்மையின் வழி அவனை சஹிர்தயனாக்கி மேலேற்றவே அவர் விரும்பினார்.

காலதேச வர்த்தமானங்களைக் கடந்து மொழிக்கும் சிந்தனை தளத்தில் கொடுத்து வாங்கவும் கலைஞன் எவ்வளவு முக்கியமானவன் என்பதை அவனது வீர்யமான படைப்புகள் இன்றும் சொல்லிக்கொண்டேயிருக்கின்றன.

தன் நேரடி அனுபவத்திலிருந்து மட்டுமல்ல அமானுஷ்ய கற்பனைகளிலிருந்தும் கலைஞர்கள் எழுதுவார்கள் அப்போதைக்கு அது மாயத்தோற்றம் காட்டினாலும் காலம் தன் கோலத்தின் மூலம் அதற்கு அர்த்தத்தை ஏற்றிவிடும் போல.

***

ஆசிரியர் குறிப்பு : –

கவிஞர், எழுத்தாளர், ஆவணப்படஇயக்குனர், இசைக்கலைஞர் என பன்முக ஆளுமைத்திறன் கொண்டவர் ரவிசுப்பிரமணியன். ஐந்து கவிதை தொகுப்புகள், ஒரு கட்டுரை நூல், இரு தொகுப்பு நூல் என ஒன்பது நூல்களை இதுவரை இவர் வெளியிட்டுள்ளார்.

தொடர்புக்கு : +91 994 004 555 7
[email protected]

விக்கி பீடியா லிங்க் :
Ravisubramaniyan
https://ta.wikipedia.org/s/436u

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular