மனித மூளை மிருதுவானது, ஆனால் சுவையற்றது

1

அருண்.மோ

து ஒரு பேரிடர் காலம் என்றார்கள். சிலர் பெருந்தொற்று காலம் என்றார்கள், எந்த காலமாக இருந்தால் என்ன, ஏழைகளுக்கு எல்லா காலமும் ஒன்றுதான். பெரிய மலை ஒன்றின் நிழல் போல் நீண்டிருந்த அந்த வரிசையில் காலையில் இருந்து நின்று கொண்டிருக்கிறேன். இடுப்பில் இளையவன், வலதுபுறம் மூத்தவள், இடதுபுறம் இரண்டாமவன், மூன்று பேருக்கும் எந்த ஒரு பெயருமில்லை. தம்பி, அக்கா, சின்னவன் என்று அவர்களாகவே ஒருவரையொருவர் பெயரிட்டு அழைத்துக்கொண்டார்கள். அவர்களைப் போலவே எனக்கும் பெயர் இல்லை. முகவரியும் இல்லை. பிள்ளைகளை இழுத்துக்கொண்டு மூன்று நாட்களாக கொடுவெய்யில் காலம் ஒன்றில் நீண்டதூரம் நடந்து வந்திருக்கிறேன். காய்ந்த சருகுகள் வழியே நடக்கும் சப்தம் போல, பிள்ளைகளின் அழுகுரல் சப்தம் கேட்டுக்கொண்டே இருக்கிறது. என் பருத்த மார்புகளில் சதை கொஞ்சம் ஒட்டியிருக்கிறது, ஆனால் பால் சுரக்காத கிண்ணம் போல் கவிழ்த்துவைக்கப்பட்டிருந்த அந்த மார்பகங்களால் எந்தவொரு பயனும் இல்லை. இளையவன் பிறந்து எட்டு மாதங்களே ஆகிறது. அவனை இடுப்பில் வைத்துதான் நடக்க வேண்டும், பல நேரங்களில் தூக்கி எறிந்துவிடலாம் போல இருக்கும், அவன் எலும்புகள் சதா என் இடுப்பெலும்பை குத்திக்கொண்டே இருந்தது, மார்புகளில் சுரக்காத பாலை அவன் விரல்களில் தேடி அலைந்து, விரல்களை சப்பி இப்போது அதுவும் கரைந்து போனது போல் சுருங்கிற்று. இளையவள் பாதி உடல் இளைத்து, மஞ்சள் நிறமாகி, கன்னங்கள் சுருங்கி, கண்கள் ஏதோ குழிக்குள் இருப்பது போன்று இருக்கிறது. தலையில் போர்த்திக்கொள்ளும் சால்வையை கொண்டு உடலை மறைத்திருக்கிறாள். இரண்டாமவனுக்கு இன்னொரு பெயர் குச்சி. எலும்புகளின் நீட்சியாய் அவனுக்கு சதைகள் மட்டும் கொஞ்சம் ஒட்டிக்கொண்டிருந்தது. அந்த நீண்ட வரிசையில் நிற்பதால், ஒரு நாளைக்கு ஒருவேளை மட்டும், மஞ்சள் நிறம் அப்பிய சோற்றுப்பருக்கைகளை ஒரு பொட்டலத்தில் கொடுப்பார்கள். எத்தனை பிள்ளைகள் இருந்தாலும் பொட்டலம் ஒன்றுதான். ஆனால் இதை வாங்கவே காலையில் இருந்து சூரியன் மண்டையில் படும் மதியம் வரை வரிசையில் நிற்க வேண்டும். இந்த வரிசையை கடக்குமுன்னே பலர் மயக்கம் போட்டு விழலாம், சிலர் இறந்தும் போகலாம், யாராவது மயக்கம் போட்டு விழுந்தாலோ, இறந்தாலோ வரிசையில் அடுத்து இருப்பவர்களுக்கு கொண்டாட்டம்தான். அவர்கள் வரிசையில் முன்னோக்கி வந்து விடுவார்கள். அதிகாரிக்கு என்றாவது மனமிருந்தால் ஒரு பொட்டலம் கூடுதலாக கிடைக்கும். அங்கே தலையில் விளிம்புடன் கூடிய தொப்பி ஒன்றை அணிந்திருக்கும் நபர்தான் அதிகாரி. விளிம்பில்லாத வட்ட வடிவ தொப்பியுடையவர்கள் அவர் சொல்வதை அப்படியே கேட்பார்கள். இறப்பவர்களை, மயக்கம் போட்டு விழுபவர்களை தரதரவென இழுத்துச் செல்வார்கள். பசியால் யாரேனும் வரிசையில் இருந்து விலகி முன்னோக்கி வந்தால் லத்தி கொண்டு அடிப்பார்கள். அதிகாரியிடம் இருந்து உத்தரவு வரும், செய்வார்கள். அவர்கள் சாப்பிடுவதற்கு கூட அதிகாரிதான் அனுமதி கொடுப்பார். 

இந்த உணவு வழங்கும் கூடாரத்திற்கு அருகே அதிகாரியின் வீடு இருக்கிறது. அவர் அங்கேதான் பத்திருபது பேர் சூழ, சுழல் நாற்காலியில் உட்கார்ந்துக்கொண்டு முன்மேசையில் வகைவகையான உணவுகளை சாப்பிட்டுக்கொண்டிருப்பார். அவ்வகையான உணவுகளை தொலைவில் இருந்து கூட நாங்கள் பார்க்க முடியாது. இந்த மஞ்சள் அப்பிய சோற்றில் பல நேரங்களில் எந்த சுவையும் இருக்காது. இப்படி ஒரு உணவை எப்படி சமைக்க முடியும் என்று வரிசையில் பலரும் வியந்து பேசியதை கேட்டிருக்கிறேன். இப்போது என்னுடைய முறை. வட்டதொப்பிக்காரர் எனக்கு உணவை கொடுக்க கைகளை நீட்டியிருக்கிறார். அதிகாரி அவரை நிறுத்த சொல்லி, பொறுமையாக நடந்து வருகிறார். சில நேரங்களில் அதிகாரி கைகளால் உணவு கொடுப்பது வழக்கம். கொடுத்துவிட்டு அதனை புகைப்படம் எடுத்துக்கொள்வார். பின்னர் மீண்டும் தன் வீட்டுக்குள் சென்றுவிடுவார். கையில் புதிய சிகரெட் ஒன்றினை பற்றவைத்து உதட்டின் விளிம்பில் வைத்து மேல்நோக்கி புகையை விட்டுக்கொண்டே என்னை பார்த்து மெதுவாக சிரித்தார். எனக்குப் பெருமைதான். மானங்கெட்ட பெருமை, இப்போதாவது இரண்டு பொட்டலம் உணவு கிடைத்துவிடாதா என்கிற ஏக்கம் கொடுத்த பெருமை, அதிகாரி தன்கையால் ஒரு பொட்டலம் உணவை எடுத்தார், அவர் கண்கள் என் கண்களைப் பார்க்கவில்லை. அந்தக் கண்கள் பால் சுரக்காத என் மார்பகங்களை உற்று நோக்கியது, பின்னர் என்னிடம் ஒரு பொட்டலத்தை கொடுத்து நகர சொன்னார். நான் இன்னொரு பொட்டலத்திற்காக காத்திருந்தேன். வட்டதொப்பிக்காரர் ஓடிவந்து விரட்டினார். அதிகாரி தூரத்தில் இருந்து பார்த்து சிரித்துக்கொண்டே இருந்தார். அது விஷ சிரிப்பு. 

ஆற்றங்கரையின் எதிரே அமைந்த பெரிய மேற்கூரையிடப்பட்ட அந்த இடத்தில், ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இருக்கிறது. அங்கே யாருக்கும் பெயரில்லை, பெயர் வைக்கும் அளவுக்கு அங்கே யாரும் வசதியாக இல்லை. அதிகாரிக்கு மட்டும் அதிகாரி என்று பெயர் வைத்திருந்தார்கள். நீண்ட அந்த மேற்கூரையில் இருந்து பக்கவாட்டில் நான்கு தகரங்கள் கயிறுகளால் பிணைக்கப்பட்டிருக்கும். இரண்டு பேர் நெருங்கி படுத்துக்கொள்ள கூடிய அளவில் இருந்த அதுதான் அங்கே எல்லாருக்கும் வீடு. அதில் ஒரு வீடுதான் எங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. வீடுகள் எங்கும் பசியின் சப்தம் ஓலங்களாக இருந்து கொண்டே இருக்கும். குழந்தைகளின் சப்தம், வண்டுகளின் ரீங்காரம் போல ஓயாமல் காதுகளில் கேட்டுக்கொண்டே இருக்கும். சோற்றுப்பொட்டலங்கள் கொடுக்கும் இடங்களில் ஊர்ந்து செல்லும் எறும்புகளைப் பிடித்து தின்ன குழந்தைகளுக்கு அனுமதி இல்லை. ஆனால் அவரவர் வீடுகளில் ஊர்ந்து செல்லும் எறும்புகளைப் பிடித்து தின்ன கட்டுப்பாடுகள் இல்லை. எல்லா வீடுகளிலும் இரண்டு உருண்டைகளை ஒட்ட வைத்தது போன்று இருந்த கட்டெறும்புகளைப் பிடித்து அவற்றை நெருப்பில் சுட்டுத் தின்பதை மாலை நேர வழக்கமாக வைத்திருந்தார்கள். உயிருக்குப் பயந்து எறும்புகளும் கூட அங்கே வருவதை குறைத்துக் கொண்டன. எதிரில் இருக்கும் ஆற்றங்கரையில் பள்ளங்களும் மேடுகளும், கற்களும் மட்டுமே எஞ்சி இருந்தன. மழை வரும் காலத்தில் அங்கே நீர் வழிந்தோடும், அதில்தான் இறப்பவர்களை தூக்கி எறிவோம் என்று வட்டதொப்பிக்காரர்கள் கூட்டமாக உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பதை கேட்டிருக்கிறோம். 

அன்று ஏனோ இரவு அவ்வளவு நீண்டிருந்தது. காலையில் அந்த நீண்ட வரிசையில் நின்றும் பலருக்கு உணவு கிடைக்காமல் போனது. பிள்ளைகள் பசியில் தாய்மார்களின் மார்பகங்களை கடித்து வைத்தது. சில வளர்ந்த பிள்ளைகள் வெறி கொண்டு பெரியவர்களைத் தாக்கியது. வட்டதொப்பிக்காரர்கள் துப்பாக்கியால் சுட்டதில் வளர்ந்த பிள்ளைகள் ஆற்றங்கரையோரத்தை நோக்கி ஓடினர். ரத்தம் வழிய வீடுகளில் படுத்துக்கிடந்தவர்களின் அலறல், மங்கிய இரவின் குரல் போல கேட்டுக்கொண்டே இருந்தது. இரண்டாமவன் ‘ம்மா, அந்த பாப்பா சும்மாதானே இருக்கு, எப்ப பாத்தாலும் அழுதுகிட்டு, கட்டெறும்பு மாதிரி பாப்பாவோட தலையை திருகி ரெண்டா பிரிச்சி நெருப்புல வாட்டி சாப்ட்டா என்ன’ என்பது போலப் பேசத்தொடங்கி இருந்தான். மூத்தவள் அவனை ஆமோதிப்பது போல் பார்த்துக் கொண்டிருந்தாள். பிள்ளையை இடுப்பில் தூக்கிக்கொண்டு வெளியில் ஓடிவந்து இரவைக் கடத்தினேன். மறுநாளும் விடிந்தது, அதிகாரியின் வீட்டில் காலை உணவு நடந்து கொண்டிருந்தது. நீண்ட குவளை ஒன்றில் சிவப்பு நிறத்தில் எதையோ பருகிக் கொண்டிருந்தார். அதன் சுவை அவருக்கு மிக பிடித்திருக்கும் போல, அருகில் இருந்தவர்களிடம் ஏதோ பேசிக்கொண்டே அந்த பானத்தை சிறுகச்சிறுக பருகினார். நேற்று பிள்ளைகள் தாக்கிய பெரியவர்களின் ரத்தத்தை பிடித்துத்தான் இப்படி பருகிக்கொண்டிருக்கிறார் என்றுகூட எண்ணத்தோன்றியது. ஆனால் ரத்தத்தைப் பருக வேண்டிய அளவுக்கு அவர் பசியில் இருப்பவர் அல்ல என்று நினைத்துக்கொண்டேன். இன்றும் உணவு வரவில்லை, நாளை வந்தால் வரலாம், என்று வட்டதொப்பிக்காரர் வீடுகளில் வந்து அறிவித்து சென்றார். 

நிலவு இல்லாத அந்த நாளில் வானம் எது, பூமி எது என்று பெரிதாக உணரமுடியாமல் இருந்தது. எப்போதாவது நட்சத்திரங்கள் கண்சிமிட்டினால் அதை வைத்து வானத்தை உணர முடிந்தது. கண்களை மூடினாலும், திறந்தாலும் ஒரே மாதிரியான உணர்வுதான் இருந்தது. அவ்வளவும் இருட்டு. அன்று இரண்டாமவனும், மூத்தவளும் சின்னவனைப் பார்த்துக்கொண்டே இருந்தார்கள். நாளை எப்படியும் உணவு வந்துவிடும், எனக்கு ஒரு பருக்கை கூட வேண்டாம், உங்கள் இருவருக்கு மட்டுமே பிரித்துக்கொடுக்கிறேன் என்று சொல்லி அவர்களை சமாதானப்படுத்தி இருந்தேன். இரண்டாமவன் வீட்டுக்குள் குழி தோண்டி கட்டெறும்போ வண்டுகளோ கிடைக்கிறதா என்று தேடிக்கொண்டிருந்தான். திடீரென அந்த இடம் முழுக்க பெரும் சப்தம் வெடித்தெழுந்தது. அவரவர் கையில் கிடைத்த தீக்குச்சியை ஏந்தி வெளியே எதையோ விரட்டிக்கொண்டிருந்தார்கள். காட்டுப்பன்றி ஒன்று வேகமாக துள்ளி ஓடிக்கொண்டிருப்பதாக அதனை முதலில் பார்த்த மூன்றாவது வீட்டின் இரண்டாமவன் சொல்லிக்கொண்டே ஓடினான். கற்களை உடைத்து எறியும் சப்தங்களும், கால்கள் ஒன்றையொன்று உரசிக்கொள்ளும் சப்தங்களும், பிள்ளைகளின் அழுகுரல் சப்தங்களும் மாறி மாறிக் கேட்டுக்கொண்டிருந்தது. நான் இளையவனை உள்ளே விட்டுவிட்டு இரண்டாமவனையும், மூத்தவளையும் கையில் பிடித்துக்கொண்டேன். இரண்டாமவன் காட்டுப்பன்றியைப் பிடித்து நானொரு பங்கு எடுத்து வருகிறேன் என்று சொல்லி கைகளை மீறித் திமிறினான். திமு திமு வென கூட்டம் எல்லாப் பக்கங்களிலும் ஓடிக்கொண்டே இருந்தது. யார் பன்றியை பார்த்தார்கள், யார் அதை முதலில் விரட்டியது என்பது ஒருவருக்கும் தெரியவில்லை. மூன்று மணி நேரமாகியும் கால்கள் பூமியைப் பிளந்து ஓடும் சப்தங்கள் நின்றபாடில்லை. அதிகாரி வீட்டின் விளக்குகள் சட்டென ஒளிர்ந்தன. வட்டதொப்பிக்காரர்கள் சுடும் சப்தம் கேட்டது. கால்கள் ஓடும் சப்தங்கள் மெல்ல குறைந்தன. வெளியே ஆவென கூக்குரல் கேட்டது. எல்லா வீடுகளிலும் இருந்து பேச்சுக்குரல் கேட்க ஆரம்பித்தது. வட்டதொப்பிக்காரர்கள் கைகளில் பெரிய ஒளியுருளைகளை வைத்துக்கொண்டு எங்களை நோக்கி வந்துகொண்டிருந்தனர். 

அன்றைய விடியல் பலருக்கும் பேரிடியாக இருந்தது. காட்டுப்பன்றி, அதை விரட்டி சென்ற பலரையும் தாக்கி காயங்கள் ஏற்படுத்தி இருந்தது. வீடுகளில் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் ஒருவர் அடிபட்டுக்கிடந்தார். சிலர் இறந்து கிடந்தார்கள். 

இனியும் பசியால் பிள்ளைகளை இழக்க வேண்டாமென்று என் பிள்ளைகளை யாருக்காவது விற்றுவிடலாம் என்றும் அதற்கு உரிய அனுமதி வேண்டும் என்றும், அதிகாரியிடம் மனு அளித்திருந்தேன். அரசுக்கு மனுவை அனுப்பியிருப்பதாகவும் அரசிடம் இருந்து உத்தரவு வந்ததும் சொல்கிறேன் என்று சொல்லிச்சென்றார் அதிகாரி. அன்று என் வீட்டின் வாசலில் நான்கு வட்டதொப்பிக்காரர்கள் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களின் பின்னால் இருந்து அதிகாரி நடந்து வந்தார். ‘உன் பிள்ளைகளை விற்க அனுமதி அளிக்கச் சொல்லி அரசிடம் இருந்து ஆணை வந்திருக்கிறது, ஆனால் அதனை மாற்றவும், ஏற்கவும் எனக்கு உரிமை இருக்கிறது, நான் உன் பிள்ளைகளை விற்க அனுமதி அளித்தால் எனக்கு என்ன செய்வாய்’ என்று கேட்டு என்னையே பார்த்துக்கொண்டிருந்தார். வெளியே இருந்த நான்கு வட்டதொப்பிக்காரர்களும் எதிர்பக்கமாக திரும்பி நின்றார்கள். சிறிது நேரத்தில் நான் மயங்கிக்கிடந்தேன். சின்னவன் உள்ளே மீண்டும் அழும் குரல் கேட்டு முழிப்பு வந்தது, கால் இடுக்குகளில் வலி அதிகமாக இருந்தது. உடலில் பசபசப்பு இன்னும் நீங்கவில்லை. கையில் அதிகாரி ஒரு கடிதத்தை திணித்திருந்தார். 

ஊரின் மற்ற பகுதிகளில் இருந்து மனிதர்கள் வந்து என் குழந்தைகளைப் பார்த்தார்கள். சிவப்பு நிறத்தில் நீண்ட அங்கி அணிந்திருந்த ஒருவர் சின்னவனைப் பார்த்து, ‘இவன் ஏன் எலும்பு போல் இருக்கிறான், எடுத்துச் செல்லும் வழியிலேயே செத்துவிடுவான் போல் இருக்கிறதே’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார். இது போன்று அரசின் அனுமதி பெற்று பிள்ளைகளை விற்க தனியாகக் கூடாரம் ஒன்று அமைத்திருந்தார்கள். அங்கே சென்று அனுமதிக்கடிதத்தைக் காட்டிவிட்டு என் பிள்ளைகளை வரிசையாக நிற்க வைத்திருந்தேன். அங்கே வந்திருந்த எல்லாரும் நல்ல உடை அணிந்திருந்தார்கள். இந்தப் பிள்ளைகளை அவரவர் வீட்டில் வேலைக்கு அமர்த்துவதற்காகப் பணம் கொடுத்து வாங்கிச் செல்வார்கள், ஆனால் இரண்டு வேளையாவது உணவு கிடைக்கும் என்று உத்திரவாதம் அளித்தார்கள். என் பிள்ளைகள் எங்களை எப்போது வாங்குவார்கள் என்று என்னிடம் ஓயாமல் கேட்டுக்கொண்டே இருந்தார்கள். சின்னவன் அழுவதை நிறுத்திவிட்டு என்னைப் பார்க்கும்போது, என்னை முதலில் விற்றுவிடு என்று என்னிடம் சொல்வதைப் போல் இருந்தது. நான்கு நாட்கள் ஆகியும் பிள்ளைகளை ஒருவரும் வாங்கவில்லை. அன்று மீண்டும் எங்கள் வீட்டுக்குள் நுழைந்தோம். வட்டதொப்பிக்கார்கள் நாளை இரவு எல்லாரும் அவரவர் வீடுகளில் விளக்கேற்றி வையுங்கள் என்று அறிவிப்பு செய்தபடி சென்று கொண்டிருந்தனர். எங்கள் வீட்டில் தீக்குச்சி மட்டுமே இருக்கிறது, நாங்கள் எப்படி விளக்கேத்த முடியும் என்று கேட்டதற்கு அது குறித்து எனக்கு எதுவும் தெரியாது, விளக்கேத்த வேண்டும் என்பது உத்தரவு, கைகளால் அடிக்கடி தொப்பியை சரி செய்து கொண்டே, சொன்னதைச் செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு அவர் நடந்து சென்றார். அவர் சொல்லிச் சென்றது போலவே அன்று இரவு அவரவர் வீட்டில் இருந்து தீக்குச்சி ஒன்றை ஏற்றிக் காட்டிக்கொண்டிருந்தோம். ஆனால் அதன் ஒளி போதவில்லை என்று துப்பாக்கியால் சுட்டார்கள். அதன் அர்த்தம், ஒளி இன்னும் அதிகமாகவேண்டும் என்பது. அக்கம்பக்கத்து வீட்டில் இருந்த பெரியவர்கள், அருகே கிடைத்த பிளாஸ்டிக் பைகள், சோற்றுப்பொட்டலம் வாங்கிவந்த பேப்பர்களை சேர்த்து வைத்துக் கொளுத்தினார்கள். தீ கொழுந்துவிட்டு எரிந்தது. அந்த நேரத்தில் நான் கண்களை மூடிக்கொண்டு என் பிள்ளையை கைகளில் இறுகப் பற்றிக் கொண்டேன். கண்கள் திறந்து பார்த்தால் எல்லா அம்மாக்களும் அப்படியே அவரவர் பிள்ளைகளை கைகளில் இறுகப்பற்றி இருந்தார்கள். இல்லையேல் அந்தத் தீயில் பிள்ளைகளை வாட்டிச் சாப்பிடும் அளவுக்கு எல்லாருக்கும் பசியிருந்தது. 

பிள்ளைகளை விற்பது சாத்தியமற்ற ஒன்றாக இருந்தது. கொஞ்சமாவது வலுவுள்ள பிள்ளைகளை மட்டுமே வந்தவர்கள் வாங்கிச் சென்றார்கள். வலுவற்ற பிள்ளைகளைக் கொன்று விடலாம் என்றும் அதற்கும் அரசின் அனுமதி கிடைக்கும் என்றும் கூடாரத்தில் இருந்த வட்டதொப்பிக்காரர் எல்லா வலுவற்ற பிள்ளைகளைப் பெற்றவர்களிடமும் சொல்லிக் கொண்டிருந்தார். நானும் பிள்ளைகளைக் கொன்றுவிட மனு அளித்தேன். அதிகாரி வீடு வரை வந்து சென்றார். வட்டதொப்பிக்காரர்கள் நான்கு பேர் எதிர்பக்கமாக திரும்பி நின்றார்கள். அதிகாரி என் கைகளில் பிள்ளைகளைக் கொல்வதற்கான அனுமதி கடிதத்தை கொடுத்துவிட்டுச் சென்றார். 

ஆற்றங்கரையில் தண்ணீர் இருந்தால் பிள்ளைகளை அதில் தூக்கி எறிந்து விடலாம், ஆனால் ஆற்றங்கரையில் மணல்கூட இல்லாமல் வெறும் திட்டுக்களாக மட்டுமே இருந்தன. மொத்தப் பிள்ளைகளையும் ஒரு பெரிய நீண்ட துணியில் சுருட்டி அவர்களை மூன்று நாட்கள் ஆற்றங்கரையோரம் வைத்துவிட்டால் மூச்சடைத்து அவர்கள் இறந்துவிடுவார்கள் என்றும் வட்டதொப்பிக்காரர்கள் ஆலோசனை சொன்னார்கள். மனிதர்களை மனிதர்கள் கொன்று தின்னக்கூடாது என்கிற சட்டம் இருப்பதால், பசித்தவர்களுக்கு இவர்களைக் கொன்று உணவாகவும் கொடுக்க முடியாது என்று அதிகாரி முன்னமே சொல்லியிருக்கிறார். இறந்தவர்களை அப்படியே ஆற்றங்கரையோரம் தூக்கி எறிந்துவிடுவார்கள். மொத்தமாக நூற்று சொச்சம் குடும்பத்தில் இருந்து அவரவர் பிள்ளைகளைக் கொல்ல அனுமதிக் கடிதம் வைத்திருந்தார்கள். 

அன்று வானம் முழுக்க மேகங்கள் கருத்திருந்தன. உணவைப் பெற வரிசையில் நிற்கும்போதே இருட்டிவிட்டது போன்று இருந்தது. எங்கிருந்தோ காகங்கள் கத்திக்கொண்டே எங்கள் வானில் பறக்கத்தொடங்கியது. நாங்கள் காகங்களை அங்கே பார்ப்பது அதுவே முதல்முறை. வானில் நீண்ட பஞ்சுபோன்ற மேகங்கள் மெதுவாக நகர்ந்து கொண்டே இருந்தன. கொஞ்சமாக துருத்திக்கொண்டிருந்த சூரியனையும் அந்த மேகங்கள் மறைத்து நின்றன. ஒரு சொட்டு நீர் என் கைகளில் விழுந்தது. சின்னவன் அதனை அவன் மொட்டு பற்களால் உறிஞ்சி எடுத்தான். மழை ஓவென பெய்யத் தொடங்கியது. ஊரெங்கும் மழை மட்டுமே நிறைந்திருந்தது. குழந்தைகள் ஆட்டம்போட்டனர். பெரியவர்கள் வானை நோக்கி வாயைவைத்து மழைநீரைப் பருகினார்கள். கொண்டாட்ட சப்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. வட்டதொப்பிக்காரர்கள் வானை நோக்கி சுட்டனர். எல்லாரும் அமைதியாக இருக்கும்படி உத்தரவிட்டனர். அதிகாரி கையில் பெரிய சுத்தியலுடன் எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தார். மண்டை வெடிக்கும் அளவுக்கு அவருக்கு தலைவலிக்கிறது என்றும், இன்னொரு நொடி இங்கே யாராவது கூச்சல் எழுப்பினால் சுத்தியலால் மண்டையை உடைத்துவிடுவேன் என்றும் மிரட்டிக்கொண்டிருந்தார். இரண்டாமவன் அந்த சுத்தியலை பார்த்துக்கொண்டிருந்தான். பின்னர் என்னை திரும்பிப்பார்த்தான். பசி வெறியில் பாய்ந்து அந்த சுத்தியலைப் பிடித்தான். சுத்தியல் கீழே விழுந்தது. வட்டதொப்பிக்காரர்கள் துப்பாக்கியால் இரண்டாமவனை சுட்டார்கள். மழைநீரோடு அவன் ரத்தத் துளியும் சேர்ந்து என் மீது தெறித்தது. எப்படி நடந்தது என்று தெரியுமுன்னரே சுத்தியலை எடுத்து அதிகாரியின் மண்டையை உடைத்தேன். வழிந்தோடிய ரத்தத்தை மூச்சுமுட்டப் பருகினேன். அதிகாரியின் மண்டை உடைந்து வெளியே தொங்கிக்கொண்டிருந்த மூளையை எடுத்துப் பிள்ளைகளுக்கு கொடுத்தேன். மூத்தவள் சொன்னாள் எவ்வளவு மிருதுவாக இருக்கிறது இந்த உணவு. ஆனால் கொஞ்சம்  கூட சுவையாக இல்லை என்றாள். ஆம் மனித மூளை உண்பதற்கு அத்துணை மிருதுவானதுதான். துப்பாக்கி சுடும் சப்தம் கேட்டது. என் கண்கள் வழியே எந்த காட்சியும் மூளைக்குள் முழுவதுமாக பதிவாகவில்லை. தூரத்தில் தெளிவற்று தெரிந்த அந்தக் காட்சியில் வட்டதொப்பிக்காரர்களைப் பெருங்கூட்டம் சூழ்ந்திருந்தது. 


***

நன்றி: டெடுயூஸ் பரோவ்ஸ்கி (பொலிஷ் எழுத்தாளர்

அருண் மோ – மாற்று திரைப்படங்கள் மட்டும் திரைத்துறை சார்ந்த முன்னெடுப்புகளை தமிழ் ஸ்டூடியோ என்கிற பெயரிலும், பேசாமொழி என்கிற துறை சார்ந்த இதழையும் நடத்தும் அருண். தற்போது சிறுகதைகளும் எழுதி வருகிறார். தொடர்புக்கு – thamizhstudio@gmail.com

1 COMMENT

  1. கதைக்குள் இருந்த பஞ்சம்,கதையில் இல்லை..
    ஆதலால்
    இது
    காலம் கடந்தும் மனிதர்களுக்கு மிஞ்சும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here