Thursday, June 13, 2024
Homesliderமனதுள் படரும் மரணம்

மனதுள் படரும் மரணம்

க.வசந்த் பிரபு

பரிக்கு மார்ச் மாத இறுதிவரை எந்த பிரச்சனையும் இல்லைதான். அதற்குப்பிறகு தான் முன்புபோல ஆஸ்பத்திரியின் உள்ளே எளிதாய்ப் போய்வர முடியவில்லை. இவனைப் போலவே துணி வியாபாரம் செய்கிற எல்லோரும் துணி மூட்டையை தூக்கிக்கொண்டு அதிகாலையிலேயே ஒவ்வொரு ஊர்ப் பக்கம் போகும் போது இவன் மட்டும் லேட்டாகவே கிளம்புவான். குழந்தைகளுக்கான ஆடைகளோடு, பெண்களுக்கான உள்பாவாடைகள், துண்டு, டீ-சர்ட் மாதிரியான சரக்குகள் மட்டும் போட்டுக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு வந்துவிடுவான். ஒரு நாளைக்கு குறைந்தது 10 குழந்தைகளாவது பிறந்துவிடும், எப்படியும் ஒரு 25 செட் துணியாவது வித்துவிடுவான். ஆணோ, பெண்ணோ எல்லாருக்கும் ஏறக்குறைய ஒரே மாதிரியான துணிதான். துண்டு, பாவாடை என மதியத்திற்குள் மகிழ்ச்சியாகிற அளவிற்கு வியாபாரத்தை முடித்துவிடுவான். உள்ளே இருக்கும் சோர்ஸ்களின் உதவியோடு மதியத்திற்கு மேல் பிறப்புவிகிதம் எப்படி இருக்கும் என்பதை பார்த்துக்கொண்டு அதற்கேற்றார் போல வீட்டுக்கு வந்து போவதோ, இல்லை ஆஸ்பத்திரிக்கு எதிரில் எப்போதும் சுடுதண்ணியும், காலையில் இட்லி, கல் தோசை, பொங்கல், சாம்பார், விற்கும் சுடுதண்ணி கவிதா அக்கா கடையில் முட்டையோடு, இரண்டு பொரியல் சாப்பாடு 30 ரூபாய்க்கு ரொம்ப பேமஸ். அங்கேயோ முடித்துக் கொள்வான். சபரி, கடைக்கு மதியம் சாப்பிட வந்துபோனாலே, கவிதா அக்கா சாயந்திரம் எக்ஸ்ட்ரா சுடுதண்ணி போட்டு வச்சிக்கும். சில சமயம் பால்கூட வாங்கிவச்சுக்கும். அன்னைக்கு மறுநாள் காலையில கடையில இருந்து மூணாவதா இருக்கற டீக்கடை ஓனர் நிச்சயம் வந்து சண்டை போட்டுதான் போவான். அதபத்திலாம் கவலயே படாது கவிதா அக்கா.

சபரி வியாபாரத்திற்குப் போய் 20 நாட்களுக்கு மேலாகிறது. கொரானா தொற்று ஆரம்பமானது முதல், வெளியூரோ, இல்லை மக்கள் வந்து போகிற பஜார் பகுதிகளிலோ, இல்லை பெரிய கோவிலை ஒட்டி  இருக்கிற கட்டண கழிப்பிடத்திற்கு வருகிற வெளியூர் பக்தர்களிடமோ என வியாபாரம் பார்த்தவர்களாலேயே வியாபாரத்திற்குப் போகமுடியவில்லை. வீட்டில் ரேசன் அரிசி சோறுதான் என்றாலும் வீட்டில் இருப்பது கடினமான ஒன்றாய் இருந்தது. இரவு திண்ணையின் முனையில் டேபிள்பேனை வைத்துக்கொண்டு அதற்கு கொஞ்சம் தள்ளிப் படுத்திருந்தவனை ஃபேனில் பட்டு இறந்து போன வண்டின் நாற்றம் அவனை எழுப்பி உட்கார வைத்திருந்தது. கீழே சாய்ந்து கிடந்த பாட்டிலை எடுத்துத் தண்ணீரைக் குடித்துவிட்டு உட்கார்ந்திருந்தவனைப் பார்த்தபடியே வந்த உதயன், அவனுக்கிருக்கும் இரண்டுநாள் ஜூரத்தைப் பற்றியும், லேசான சளி பற்றியும் சொல்லி, ஆஸ்பத்திரிக்கு அழைத்தான். முதலில் மாஸ்க்கையும், பிறகு சட்டையையும் மாட்டிக் கொண்டு ஃபேனை எடுத்து உள்ளே வைத்துவிட்டு, வண்டியை வெளியே தள்ளிக்கொண்டு வந்தான்.

போகிற வழியில் கோயிலுக்கு அருகில் வண்டியை நிறுத்தச் சொன்ன உதயன் மூடியிருக்கும் கோயிலைப் பார்த்து கும்பிட்டுவிட்டு வந்து வண்டியில் ஏறிக்கொண்டான். வண்டி ஆஸ்பத்திரிக்குள் நுழையும் போது நான்கு மணியாகி இருந்தது. உள்ளே ஓ.பி.  சீட்டு போடும் இடத்தில் சபரிக்குத் தெரிந்தவன் தான் இருந்தான். பார்த்துவிட்டு ஜுரத்துக்கான மாத்திரையைத் தந்து அனுப்பினான். வெளியில் வந்த போது கவிதா அக்கா கடையில் சுடுதண்ணீரோடு அடுப்பு எரிந்து கொண்டிருந்தது. ஓரிருவர் கடையிலும் இருந்தனர். வண்டியை அங்கே நிறுத்திவிட்டு, உதயனையும் அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு மூணாவது கடையில் போய் டீ வாங்கி வந்தான். பேப்பர் கப்பில் டீ குடித்துக் கொண்டிருந்த சபரியைப் பார்த்து ’கண்ணாடி கிளாஸ்லயே கொஞ்சம்தான் தருவானுங்க, பேப்பர் கப்புல தரச்சொன்னதுல இருந்து ஒரே கும்மாளம்தான் அவனுங்களுக்கு’ என கிண்டல் செய்தபடியே, பக்கத்து அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த பருப்பை எட்டிப்பார்த்தாள். இன்னும் இரு சிறு அடுப்புகளை கருங்கல்லை வைத்து தற்காலிகமாக அமைத்திருந்தாள். ஒன்றில் கபசுரக்குடிநீரும், இன்னொன்றில் பொங்கலுக்கான அரிசியுமாக இருந்தது. இங்கு முன்பைவிட ஆஸ்பத்திரிக்கு வருபவர்களுக்கு அதிகத் தேவை இருப்பதாகவும், அதைச் செய்வதற்கான ஆட்கள் குறைவாக இருப்பதாகவும் புலம்பிக் கொண்டிருந்தாள்.

உதயன் மாத்திரை போட்டுவிட்டுப் படுத்து ஒருமணி நேரமிருக்கும், அவனை எழுப்ப தொட்டபோது ஜூரம் அப்படியே இருந்தது. கொரோனாவாக இருக்குமோ என்ற பயம் வந்துவிட்டது. கவிதா அக்கா ஒரு டம்ளரில் பெரிய பிளாஸ்கில் இருந்து ஊற்றிய சுக்குக்காபியைக் கொடுத்துவிட்டு, ’காலைல 9 மணிக்கெல்லாம் டெஸ்ட் எடுக்க வந்துருவாங்க கொடுத்துட்டு போயிடுங்க, பயப்படற மாதிரிலாம் ஒன்னும் இல்ல’, என்றபடியே பொங்கலை இறக்கிவிட்டு இட்லி குண்டானை அடுப்பில் ஏற்றித் தண்ணீர் ஊற்றினாள். இருவரும் கடையின் பின்புறம் அமர்ந்து பொறுக்கி ஒதுக்க முடியாதபடி மிளகை இடித்துப் போட்டிருந்த பொங்கலை சாப்பிட்டுவிட்டு, மீண்டும் ஆஸ்பத்திரிக்குள் வந்தனர், ஓ.பி சீட்டு போட்டுக்கொண்டு உதயனை டெஸ்டுக்கு வரிசையில் விட்டுவிட்டு, ஆஸ்பத்திரியை ஒரு சுற்று சுற்றிவரப் போனான். பிரசவ வார்டின் அருகில் வந்த போது, நிறைய குழந்தைகளின் அப்பாக்களும், தாத்தாக்களும் வெளியே மாஸ்க்கை மாட்டிக் கொண்டு நின்றிருந்தார்கள். எந்நேரமும் ஏதோவொரு ஏவல் உள்ளிருந்து இவர்களுக்கு வரக்கூடும். அது துணிக்காகவோ, சுடுநீருக்காகவோ, இல்லை பணத்திற்காகவோ இருக்கலாம். அங்கிருந்து திரும்பி கொரானா வார்டு பக்கம் வந்தபோது மாடியின் ஜன்னல்களில் நின்று கொண்டிருந்தவர்கள் எல்லாம் ஏதோ ஒன்றுக்காக காத்திருப்பவர்களைப் போலவே அவனுக்கு தெரிந்தார்கள். அதற்குள் சத்தமிட்டபடியே உள்ளேவந்த ஆம்புலன்சிலிருந்து நேற்றைய டெஸ்டில் தொற்று உறுதியாகி இருந்த இருவரை இறக்கி உள்ளே அழைத்துப்போனார்கள். அதைப் பார்த்துக்கொண்டிருந்த போதே, உதயன் டெஸ்டை முடித்துக் கொண்டு போனில் அழைத்தான். அவனை அழைத்துக் கொண்டு கவிதா அக்கா கடைக்கு வந்தபோது, அங்கு சுடுதண்ணி வாங்க வந்த இருவரை, அங்கிருந்த கபசுர குடிநீரை குடிக்க சொல்லி கட்டாயப்படுத்தியபடியே, யாருக்கோ இட்லி கட்டிக்கொண்டிருந்தாள். ஆஸ்பத்திரியின் உள்ளே வேலை செய்பவர்களைப் போல, மாஸ்க், கிளவுஸ் எல்லாம் போட்டிருந்தாள். அவளிடம் சொல்லிவிட்டு வீட்டிற்கு கிளம்பினார்கள்.

உதயனை வீட்டில் விட்டுவிட்டு வந்து படுத்துவிட்டான் சபரி. மதியம் எழுந்து, ரசஞ்சோறையும், உப்புக்கண்டத்தையும் சாப்பிட்டுவிட்டு, உதயனைப் போய் பார்த்தபோது, ஜூரம் குறைந்திருப்பதாகச் சொன்னதும், கொஞ்சம் நிம்மதி ஆகி வீட்டிற்கு வந்தான். ஆஸ்பத்திரிக்கு வருபவர்களுக்குத் தேவை நிறைய இருப்பதாகவும் ஆனால், ஆள் இல்லை என்றும் கவிதா அக்கா சொன்னது. இவனை உறுத்திக் கொண்டிருந்தது. உள்ளே போய் துணிமூட்டையைப் பிரித்து சரக்குகளை மீண்டும் அடுக்கிக் கட்டி வைத்தான். வெகு நாட்களாக விற்காத சில பனியன் துணிகளை, தெரிந்த டைலர் ஒருவரிடம் தந்து கொஞ்சம் மாஸ்க்குகளை தைத்து வாங்கிக்கொண்டு வந்தான். சோறு எடுத்து வைத்துவிட்டு அவனுடைய அம்மா தூங்கிவிட்டிருந்தாள். சாப்பிட்டுவிட்டு ஃபேனை எடுத்துக்கொண்டு திண்ணையில் வந்து படுத்தவன் தூக்கமில்லாமல் வெகுநேரம் புரண்டுவிட்டு, பின் தூங்கியிருந்தான்.

காலையில் தூங்கிக்கொண்டிருந்தவனை எழுந்து உள்ளே போய் படுக்கச் சொன்ன இருவர், புளு கலர் உடையும், பெரிய மாஸ்க்கும் அணிந்தபடி, ஒருவர் தன் முதுகில் மருந்து அடிக்கும் மிஷினையும், இன்னொருவர், பாதியளவுக்கு பிளிச்சிங் பவுடர் நிரம்பிய கூடையையும் வைத்திருந்ததைப் பார்த்தபோது, கலைந்திருந்த அரைத்தூக்கம், போலீசின் வாக்கி-டாக்கி சத்தம் கேட்டு முழுவதும் கலைந்திருந்தது. சபரி உள்ளே போய் படுக்கையை வைத்துவிட்டு, சட்டையை மாட்டிக்கொண்டு வருவதற்குள், ரோடு முழுக்க வெள்ளை அடித்து முடித்திருந்தனர். ஆம்புலன்ஸ் ஒன்று வந்து சபரியைக் கடந்து மெல்ல நகர்ந்து உதயன் வீட்டு வாசலில் நின்றபோது, ஏறக்குறைய தெருவிலிருந்த பாதிப்பேர் அவரவர் வீட்டுவாசலில் இருந்தனர். உதயனை ஏற்றிக்கொண்டு வண்டி புறப்பட்டபோது சட்டென சாலையெங்கும் தூவப்பட்ட பிளிச்சிங் பவுடரைப் போலவே உதயனின் முகத்தில் பயம் பரவியிருந்தது. உதயனின் வீடு முழுக்க மருந்து அடிக்கப்பட்டு, வீட்டிற்குள் யாரும் போகாதபடிக்கு தடுப்பு அமைக்கத்  தகரம் இறங்கிக் கொண்டிருந்தது. ஆம்புலன்ஸ் பெரிய கோயிலைக் கடந்தபோது, உதயனுக்கு கும்பிடக்கூட தோன்றவில்லை.

அடுத்த முக்கால்மணி நேரத்தில், அப்பகுதியின் ஆரம்ப சுகாதார ஊழியரும், இன்னும் சிலருமாக வந்து, தெருமுழுக்க யாருக்காவது ஜூரமோ,சளியோ இருக்கிறதா என்பதை விசாரித்துக் கொண்டு, உதயனின் வீட்டுக்கருகில் யாருக்கோ காத்திருப்பதைப் போல இருந்தனர். அவர்களின் முகத்திலும் பயம் இருந்தது. ஜீப் ஒன்றில் வந்த அதிகாரி, அவர்களை யாருக்கும் கேட்காதபடிக்கு திட்டிக் கொண்டிருந்தான். அதற்குள் அவரோடு வந்திருந்த பயங்கர உடைகள் அணிந்திருந்த இருவர், உதயனின் அப்பா, அம்மா, தம்பியையும் வண்டியில் ஏற்றியிருந்தனர். அவர்கள் அந்த அதிகாரியிடம் ஏதோ பேப்பரைக் காட்டி கேட்டபோது, அவன் அதை அவர்களிடம் காட்டச்சொன்னான். வாங்கிப் பார்த்த ஆரம்ப சுகாதார ஊழியர், நிமிர்ந்து சபரியின் வீட்டைக் காட்டினார். இதையெல்லாம் பார்த்து கொண்டிருந்த சபரியை வரச்சொல்லி கையை காட்டினர். நேற்று உதயனை அழைத்துக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு போய் வந்ததால், சபரிக்கும் டெஸ்ட் எடுக்கவேண்டுமென சொல்லி அவனையும் ஏற்றிக் கொண்டு வண்டி கிளம்பியது. இவர்கள் லைனில் நின்று டெஸ்டை முடித்துக் கொண்டு வெளியே வந்த போது, ஏற்றிக் கொண்டுவந்த வண்டி இல்லை. அங்கிருந்து வீட்டிற்கு வர ஆட்டோவோ, பஸ்ஸோ கிடையாது. கொஞ்ச நேரத்திற்குப் பின் கவிதா அக்காவின் வண்டியில் மூவராகப் போய், ஒருவரை விட்டுவிட்டுத் திரும்பி வரும் போது ஆளுக்கொரு வண்டியில் வந்து, கவிதா அக்கா வண்டியைத் தந்துவிட்டு, மற்ற மூவரும் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். பயம் மெல்ல மெல்லத் தொற்ற ஆரம்பித்தது. இதற்கிடையில் உதயனும் ஓயாமல் சபரியிடம் போனில் பேசிக்கொண்டே இருந்தான். தூக்கத்தில் கேட்கிற ஃபேன் சத்தம் கூட ஆம்புலன்ஸ் சத்தம் போலவே இருந்தது. ஆனால் காலையில் சத்தமே இல்லாமல் ஆம்புலன்ஸ் வந்து நின்றிருந்தது. உதயனின் தம்பிக்கும், அப்பாவுக்கும் மட்டும் நோய்த் தொற்றை உறுதிசெய்து அழைத்துப்போன போது, உதயனின் அம்மாவின் முகம் பெரும் பதட்டத்திலிருந்தது. உதயன் சபரியை அழைத்து விவரம் கேட்டுக்கொண்டான்.

உதயனோடு, ஒரு நாளெல்லாம் இருந்தும், அவன் தம்பி,அப்பாவோடு இருந்தும் கூட சபரிக்கு நோய் தொற்றவில்லை என்பது அவனுக்கு தைரியத்தை தந்திருந்தது. அதற்குள் உதயன் சபரியை அழைத்து வீட்டிலிருந்து கொஞ்சம் துணி, குளிக்க பக்கெட், பிளாஸ்டிக் மஃகு எல்லாம் வாங்கி வந்து தரச் சொன்னான். அவன் வாங்கிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு வந்து வார்டுக்கு வெளியே நின்ற போது ஒருவன் மாடியிலிருந்து, உதயனிடம் பக்கெட் எவ்ளோ சார், என்றதைக் கவனிக்காதவன் போல, உள்ளே போன வார்டு பாய் ஒருவரிடம் இதையெல்லாம் கொடுத்து யாரிடம் தரவேண்டும் எனச் சொல்லி அனுப்பினான். வண்டியை எடுத்துக்கொண்டு வந்து கவிதா அக்கா கடையில் நிறுத்திவிட்டு உட்கார்ந்த சபரியிடம் ஒரு டம்ளரில் கபசுரக்குடிநீரை கொடுத்துவிட்டு, சுடுதண்ணி அடுப்பின் கட்டையை உள்ளே தள்ளிவிட்டு உட்கார்ந்தாள் கவிதா அக்கா.

சபரியின் வாய்க்கசப்பு அடங்கும்முன் உதயனிடமிருந்து போன் வந்தது. அவன் பொருட்களை வாங்கிக் கொண்டதாகவும், ஒரு தைலம் பாட்டில் வேண்டுமென்றும், இங்க ஒரு அண்ணனுக்கு லுங்கி ஒன்னும், ஹெட் போன் ஒன்னும் கேக்கறாரு, வாங்கிட்டு வந்து தந்தா, எக்ஸ்ட்ரா நூறு ரூபா தரன்னும் சொல்றாரு என்றான். சபரி, அவனிடம் சரியென சொல்லிவிட்டு, கவிதா அக்காவிடம் விவரத்தை சொல்லிய போது, அவள் சிரித்தபடியே, அதான் அன்னைக்கே சொன்னனே என்றாள். அடுத்த அரைமணி நேரத்தில் எல்லாத்தையும் வாங்கிகொண்டு வந்தவன் அதைக் கொடுத்து அனுப்பிவிட்டு, காசுக்காக காத்திருந்தான். புது நம்பரில் இருந்து அழைப்பு வந்தது, எடுத்துப் பேசியபோது, மேல பாருங்க மேல என்ற குரல் கேட்டு மேலே பார்த்தான். அவன் நன்றி சொல்லிவிட்டு, தரவேண்டிய பணத்தோடு நூறு ரூபாயையும் சேர்த்து பேப்பரில் மடித்துக் கீழே போட்டான். எடுத்து பாக்கெட்டில் வைத்துக் கொண்டு, போனையும் பாக்கெட்டில் வைத்தபோது, வேறு ஒரு எண்ணில் இருந்து போன் வந்தது. அழைத்தவருக்கு, தனது வீட்டிலிருந்து பிளாஸ்க், பெட்ஷீட் இரண்டும் எடுத்து வரவேண்டிய தேவை இருந்தது. இவன் சரி என்றதும், அவர் தன் மகனின் போன் நம்பரை அனுப்பி வைத்தார். அந்த நம்பருக்குப் பேசி எங்கு வரவேண்டும் என கேட்டுக்கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.

இவன் அந்த வீட்டிற்குப் போகும் முன்னரே, ஒரு பை தயாராக வீட்டு வாசலில் மாட்டி வைத்திருந்தார்கள், இவன் அதை எடுத்துக்கொண்டு வந்து, ஆஸ்பத்திரிக்கு வந்த போது, மேலிருந்து அழைத்த பை-காரர், பையில் 150 ரூபாய் பணமிருப்பதாகவும், அதை எடுத்துக் கொண்டு பையை கொடுத்தனுப்பும் படியும் சொன்னார். அவனும் எடுத்துக் கொண்டு, பையைக் கொடுத்து அனுப்பினான். கவிதா அக்கா கடைக்குத் திரும்பி தட்டை எடுத்து சோறு போட்டுக் கொண்டு சாம்பார் ஊற்றிக் கொள்ளப் போனவனை தடுத்த கவிதா அக்கா, டிபன் பாக்ஸ் ஒன்றிலிருந்த பிரண்டை குழம்பை ஊற்றிவிட்டு, இரண்டு முட்டை வைத்தாள். கடையின் பின்புறம் போய் அமர்ந்து சாப்பிடும் போதே இரண்டு புது நம்பர்களில் இருந்து அழைப்பு வந்தது. ஒருவருக்கு வைப்ஸ், முந்திரி, திராட்சை, பாதாமும், வேண்டுமென்று சொல்லியிருந்தார். இன்னொருவர், நம்பர் சேவ் பண்ணும்போது தெரியாம போன் வந்துருச்சு சாரி, எனக்கு எதுனா வேனும்னா சொல்றன். என்றும் சொல்லியிருந்தார். இப்படியே பத்துநாட்களுக்கு மேல், கொஞ்சம் பேருக்கு மட்டுமே செய்து கொண்டிருந்த வேலை, இப்போது சாதாரணமாக இருபது பேர் வரை தினமும் பேச ஆரம்பித்தார்கள். அதற்குள் உதயனும், அவனுடைய அப்பாவும், தம்பியும் கூட டெஸ்ட் நெகட்டிவ் ஆகி வீட்டிற்கு திரும்பியிருந்தனர். சபரிக்கு தூங்கும் போது கூட யாராவது மேலிருந்து அழைத்து ஏதாவது வாங்கிவரச் சொல்லி பணம் போடுவதுபோல இருந்தது.

தாயக்கட்டை, செஸ்போர்டு, சீட்டுக்கட்டு, புக்கு, பவர் பேங்க், நெட் மோடம் னு விதவிதமா பொருட்கள உள்ள அனுப்பியிருந்தான் சபரி. ஆட்களுக்கு ஏற்ப பணம் வாங்கிக்கொண்டான். வட்டச்செயலாளர் ஒருவர் அட்மிட் ஆனபோது, மெட்ராஸ் பக்கமெல்லாம் சிக்கன் போடுறாங்க, இங்க என்ன முட்ட மட்டும் போடுறீங்க, அது சரி இல்ல, இது சரி இல்ல என்ற நாளிலிருந்து, கெடுபிடி இன்னும் அதிகமாகி வார்டு பாய்கள் எதையும் வாங்கிக் கொண்டு போகவும் பயந்தார்கள். மறுநாளே துணி காயவைக்கும் கயிறு வாங்கி மேலே ஒருத்தரைக் கூப்பிட்டு அவரிடம் கயிறைக் கொடுத்து வெளிப்பக்க ஜன்னலில் கட்டிவிடச் சொல்லி அதுவழியாக அனுப்ப ஏற்பாடு செய்திருந்தான் சபரி. மறுநாள் இரண்டாவது மாடிக்கு தரச்சொல்லி ஒரு தூக்குவந்தது. அதுதான் வட்டசெயலாளர் இருக்கும் மாடி. அனேகமாக அவருக்காகக் கூட இருக்கலாம். அவர் கேட்டிருந்த கேள்விகளால், அந்த மாடியை ரொம்ப கெடுபிடியாகவே வைத்திருந்தனர். நூறு ரூபாய் வாங்கிக்கொண்டு தூக்கோடு கொண்டி ஒன்றை மாட்டி அனுப்பிவிட்டான். வட்டச்செயலாளர் தான் கயிறை இழுத்தார். தூக்கை உள்ளே எடுக்க முடியாது என்பதால் தான் கொண்டி ஏற்பாடு செய்திருந்தான் சபரி. வட்டச்செயலாளர், கூட ஒருவனை வைத்துக்கொண்டு வார்டு முழுவதும் தூக்கிலிருந்த சிக்கனை வினியோகித்து முடித்துவிட்டு, சபரியைப் பார்த்து சிரித்தார். அன்று மாலை மூன்றாவது மாடியில், இரண்டு நாட்களுக்கு முன் செஸ் போர்டு வாங்கிய ஒருவர் இறந்துவிட்டதாகத் தகவல் வந்தபோது, போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு வீட்டுக்குப் போய்விட்டான்.

மறுநாள் வட்டச்செயலாளரின் ஏற்பாட்டில் பெரிய பாத்திரத்தில் சிக்கன் வந்திருந்தது. மேலிடத்தில் பேசி, நேராகவே உள்ளே எடுத்துச் சென்றார்கள். ஆஸ்பத்திரி ஊழியர்களே அதை வழங்கவும் ஏற்பாடாகி இருந்தது. ஒவ்வொரு நாளும் உள்ளே வருவோரின் எண்ணிக்கை கூடிய போது, பதினைந்து நாள் உள்ளே என்பதும் கூட எட்டு நாளாகவோ, ஒன்பது நாளாகவோ குறைந்திருந்தது. அன்று மதியமும் 30 வயதுக்காரர் ஒருவர் மூச்சுத் திணறலால் இறந்து போயிருந்தார். முன்பும் கூட இங்கேயே 15 க்கும் மேல் மரணத்தை பார்த்திருந்தாலும் கூட அடுத்தடுத்த நாட்களில் மரணத்தைப் பார்த்தபோது சபரிக்கு ஏதோ செய்தது. ஏனோ கவிதா அக்கா கடையும் இரண்டு நாளாக இல்லை போனும் ஆஃப் ஆகியிருந்தது. தொண்டை கரகரப்போடு வீட்டிற்கு வந்து படுத்தவனுக்கு இரவுக்குமேல் ஜூரம் ஆரம்பமானது. காலையில் இன்னும் அதிகமான போது, ஆஸ்பத்திரிக்கு டெஸ்ட் கொடுக்க வந்துவிட்டான். டெஸ்ட் கொடுத்துவிட்டு கவிதா அக்கா கடைக்கு வந்தான். இன்றும் கடை இல்லை. வட்டச்செயலாளர் ஆட்கள் நிறையபேர் ஆஸ்பத்திரிக்குள் போய்கொண்டிருந்தார்கள். ஒருவேளை நெகட்டிவ் ஆகி திரும்பக்கூடும் பார்த்துவிட்டுப்போகலாம் என சபரியும் உள்ளே போனான். வட்டச்செயலாளருக்கு மூச்சுத்திணறலாகி ஆக்சிஜன் வார்டுக்குப் போயிருக்கிறார் என்றும், எம்எல்ஏ கலெக்டரிடம் பேசி, உள்ளூர் விஐபிகள், ஆஸ்பிட்டலுக்குள் இருப்பவர்களோடு பேசித் தொடர்ந்து அவருக்கு ஆக்சிஜனும், தொடர் கண்காணிப்பும் ஏற்பாடாகி இருப்பதாகவும் பேசிக்கொண்டவர்களைக் கடந்து வண்டியை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்து விட்டான்.

மறுநாள் காலை வீட்டிற்கு வந்த ஆம்புலன்ஸில், தேவையான பொருட்களோடு முன்னமே தயாராகி இருந்ததால் சட்டென ஏறிக் கிளம்பிவிட்டான். ஆஸ்பத்திரி உள்ளே போகும்போது கவிதா அக்கா கடையைப் பார்த்தான். இன்றும் மூடிதான் இருந்தது. இரண்டாவது மாடியில் படுக்கை ஒதுக்கியிருந்தார்கள். ஒரு சிலருக்கு மட்டுமே இவனைத் தெரிந்திருந்தது. இரண்டு நாட்களும் ரத்தம் டெஸ்ட்டும், ஈசிஜியும் எடுத்தார்கள். சுண்டல், கபசுரக்குடிநீர், முட்டை, மாத்திரைகள், என நகர்ந்தது. அடிக்கடி அறையை துடைத்துக் கொண்டே இருந்தார்கள். அவர்கள் துடைக்கையில் எழும் மணம் ஏதோ ஒரு ஆறுதலை அந்த அறையெங்கும் பரப்பியது. வீட்டில் அம்மாவுக்கு நெகட்டிவ் வந்ததும் பயம் கொஞ்சம் தெளிந்து அன்று இரவுதான் உறங்கினான். மறுநாள் மாலை சபரிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டபோது எழுந்துவந்து ஜன்னல் பக்கமாக நின்றுகொண்டு வாயையும் திறந்து கொண்டு மூச்சை இழுத்து இழுத்து விட்டுக்கொண்டிருந்தான். ஒரு அரைமணி நேரத்திற்கு பின் தேவலாம் என்றபோது வந்து படுத்துக்கொண்டான். டாக்டரிடம் மூச்சு திணறல் பற்றிச் சொன்னபோது, ஆக்சிஜன் கொடுக்க சொல்வதாக அவனிடம் சொன்னார். இரவு தூங்கவே அவனுக்கு பயமாய் இருந்தது. திணறல் ஏதும் இல்லை என்றாலும் மூச்சை இழுத்து இழுத்து விட்டுக்கொண்டான். காலையில் எழுந்த போது, எதிர்வரிசையில் இருந்த ஒருவர் நெஞ்சுவலியில் இறந்துவிட்டதாக பேசிக்கொண்டார்கள். பத்தரை மணிக்கு மேல்தான் பெட்டிலிருந்து அவரை அப்புறப்படுத்தினார்கள். அதன்பிறகு அறைமுழுவதையும் துடைத்துவிட்டுப்போன பிறகு தான் ஒருசிலர் சாப்பிட்டார்கள். மதியம் சபரிக்கு மூச்சுதிணறுவதைப்போல இருந்ததும் எழுந்து ஜன்னல் பக்கம் நின்றுகொண்டான். ஆனால் திணறல் அதிகமான போது, வார்டுபாயும், நர்ஸ் ஒருவரும் அவனை அவசர அவசரமாக ஆக்சிஜன் கொடுக்க அழைத்துப் போனார்கள். வேறொருவரிடமிருந்து ஆக்சிஜனை மாற்றி கொடுப்பதற்குள் சபரி திணறல் அதிகமாகி இறந்துவிட்டான். வட்டச் செயலாளர் திரும்பிப் படுத்துக்கொண்டார்.    

***

ஆசிரியரி தொடர்புக்கு –  vasanthprabu20@gmail.com

திருவண்ணாமலையில் வசிக்கிறார். தொழில்முறை வடிவமைப்பாளராகவும், நிழற்படக் கலைஞராகவும் இருக்கிறார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular