Wednesday, October 9, 2024
Homesliderமத்தி

மத்தி

திடுக்கிட்டுத் தூக்கத்திலிருந்து எழுந்தமர்ந்தாள் கேசி. அன்று அந்த மத்தியிடம் மாட்டிக் கொண்டதிலிருந்து அடிக்கடி இது மாதிரியான திடுக்கிடல்களும் விழிப்புகளும் வருகின்றன. அந்த மத்தியின் நிணம் வழியும் வாயும் கறுமை படிந்த பற்களும் கண்களில் தெரிந்த கொலைவெறியும் சகிக்க முடியாத துர்நாற்றமும் வெகு நாட்களாய் உணவு கிடைக்காத மிருகத்தைப் போன்ற உறுமலும் மீண்டும் மீண்டும் கனவுகளில் தோன்றிப் பீதியூட்டுவது வழக்கமாகியிருந்தது.

அதன் பிறகு இரவு முழுவதும் தூக்கம் வராமல் விடிவிளக்கின் ஒளியில் கலைந்துறங்கும் ஷீலாவின் முகத்தைப் பார்த்தபடியே அமர்ந்திருப்பாள். உயிர் பிழைத்திருப்பதற்கான சவால்களாய் பசி, வறுமை என்று ஏதேதோ இருக்க, அவற்றையெல்லாம் தாண்டி மத்திகளைப் பற்றிய பயமே மேலோங்கியிருந்தது.

அன்று அந்த சிறப்புக் காவலன் மத்திகளைத் தாக்கும் துப்பாக்கியுடன் வராவிடில் தானும் அதுபோல் எங்கேனும் அலைந்து கொண்டிருந்திருப்போம் என்று எண்ணுவாள். முன்பெல்லாம் இத்தனை ஊடுருவல்கள் இல்லை.

நகரப் பாதுகாப்புச்சுவர் எங்கிலும் கீழ்பகுதிகளில் ஏகப்பட்ட பழுதுகள். அரசாங்கம் அதைப்பற்றிக் கண்டுகொள்கிறாற் போலவே தெரியவில்லை.

உள்ளடங்கிய பகுதிகளில் விஞ்ஞான சாதனங்களின் உதவியுடன் தகுந்த பாதுகாப்புடன் இருக்கும் உயர்குடி மக்களுக்கு இதெல்லாம் வெறும் வடிகட்டப்பட்ட வெகுவாய் நீர்த்துப்போன உண்மைகள். மந்தகதியில் வெளியிடப்படும் அரசாங்கத் தொலைக்காட்சியின் செய்திகள் மட்டுமே.

இவளைப் போல் வறுமையில் மாட்டிக்கொண்டு வெளியேற வழி தெரியாத, ஏதேனும் பிரச்னையென்றால் கேட்பதற்கு யாருமில்லாத மக்களே மதில் சுவரை ஒட்டிக் குடியிருந்தார்கள்.

அவ்வப்போது ஜானுடன் நடந்த உரையாடல்களை நினைத்துக் கொள்வாள் கேசி. ஜான் ஷீலாவின் அப்பா. அரசாங்கத்தின் வரலாறு தொடர்பான ஏதோவொரு துறையில் ஆவணக் காப்பாளன்.

ஜானின் பிரிவிற்குப் பிறகு, ஷீலாவுக்கு விபரம் தெரியும் போது தன் அப்பாவைக் கேட்டால் என்ன சொல்வது என்ற கவலையும் ஏற்கனவே இருக்கும் கவலைகளோடு சேர்ந்து கொண்டது. இப்போதே யாரேனும் குழந்தைகளை அப்பாவுடன் கண்டால் அதைப்பற்றிக் கேள்விகள் கேட்கிறாள்.

அன்று அந்த மத்தியால் தாக்கப்பட்ட போதுகூட ஜானின் இல்லாமையை நினைத்து வெகுவாக வருந்தினாள்.

“ஜான்”
“ம்…”
“இந்த மத்திகள்லாம் யாரு? ஏன் அதுகள்லாம் இப்படி இருக்குதுக?”
“….”
“சொல்லு ஜான்”

விடாத நச்சரிப்புக்குப் பின் பெருமூச்சு விட்டவன் “சரி சொல்றேன். ஆனா இதெல்லாம் அரசாங்க ரகசியம். வெளிய வாய் திறக்கக் கூடாது” என்று கூறி அவள் கண்களை உற்றுப் பார்த்தான்.

“சரி” என்பது போல் மென்மையாகத் தலையாட்டினாள்.

“சுமார் இருநூறு வருஷம் முந்தி உலகம் முழுக்க ஒரு பெரிய வைரஸ் பரவிச்சு. மக்கள்லாம் அதுக்கு பயந்துகிட்டு வீட்டுக்குள்ளேயே இருந்தாங்க. எத்தனையோ நாட்டு அரசாங்கங்கள் எத்தனையோ விதமா போராடியும் அத ஒன்னும் பண்ண முடியல. ஏகப்பட்ட உயிரிழப்புகள். அப்புறம் ஒரு வழியா மூனு வருஷப் போராட்டத்துக்கப்புறம் அதுக்கு ஒரு மருந்து கண்டுபுடிச்சாங்க. அல்லது அப்படி நினைச்சுக்கிட்டாங்க “

ஷீலா திடீரென்று சிணுங்கிக் கொண்டு அழத் துவங்கியதும் நினைவிலிருந்து நிகழ்விற்குத் திரும்பினாள். அவளைத் தூக்கி மடியில் வைத்துக்கொண்டு மெல்லத்தட்டித் தூங்கச் செய்தாள். குழந்தைப் பொருட்கள் எல்லாம் தீர்ந்து விட்டன. இருக்கும் பொருட்கள் எத்தனை நாட்களுக்குத் தாங்குமெனத் தெரியவில்லை.

நாளை நகரின் உட்புறம் சென்று ஏதேனும் வேலை தேட வேண்டும். அப்படியே ஜான் பற்றி ஏதேனும் தகவல்கள் கிடைக்கிறதா என்றும் பார்க்க வேண்டுமென்றும் நினைத்துக் கொண்டாள்.

ஜானின் திடீர் மறைவு அவளைச் சற்றுக் கலைத்து தான் போட்டு விட்டது. எப்போதும் போல் மறுநாள் வருவதாகச் சொல்லி விடைபெற்றுச் சென்றவன் அடுத்த நாள் வரவில்லை. அவனுடைய தொலைபேசி அணைக்கப்பட்டிருந்தது. அவளால் முடிந்த, தெரிந்த இடங்களுக்குச் சென்று தேடினாள். எந்தத் தகவலுமில்லை. இன்னமும் தேடிக் கொண்டிருக்கிறாள்.

“சரி அந்த வைரசுக்கும் மத்திகளுக்கும் என்ன சம்பந்தம் ? “
“மூனு வருஷம் போராடி அந்த வைரசுக்கு மருந்து கண்டுபிடிச்சிட்டதா நினைச்சு உலகமே கொண்டாடிச்சு. வைரசும் கட்டுக்குள்ள வந்துடுச்சு. ஒரு ரெண்டு வருஷம். அதுக்கப்புறம் அந்த வைரஸ் இப்படி ம்யூடேட் ஆகும்னு யாரும் எதிர்பார்க்கல”.

வாசலில் யாரோ நிற்பது போல் நிழலாடியது. இந்நேரத்தில் யார்? பயத்தில் குப்பென வியர்த்தது. தைரியத்தை வலிய வரவழைத்துக் கொண்டு எழுந்து சென்று மிக மெதுவாய்க் கதவைத் திறந்தவள் நிம்மதிப் பெருமூச்சொன்றை வெளியிட்டாள்.

அவளை மத்தியிடமிருந்து காப்பாற்றிய சிறப்புக் காவலன் நின்றிருந்தான். லிடோ. “இந்தப் பக்கம்தான் இன்னிக்கு டூட்டி. ரவுண்ட்ஸ் வந்தேன். அதான் அப்படியே… ஒன்னும் பிரச்னையில்லையே?” என்றபடி அவளைத் தாண்டி வீட்டுக்குள் பார்க்க முயன்று பார்வையைச் சுழற்றினான்”.

இல்லை என்பது போல் தலையாட்டினாள்.

“பாப்பா தூங்குதா?”

ஆமாம் என்ற தலையாட்டல்.

“நம்பர் குடுத்திருக்கேன்ல? எதுனா வேணும்னா கூப்புடு. என்னா?”

சரியென்ற தலையாட்டல்.

தயங்கி நின்றவன் கிளம்பினான். அவன் தெருமுனை சென்று மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்தவள் உள்ளே திரும்பினாள். தூக்கம் காணாமல் போயிருந்தது. லிடோவின் எல்லை மீறாத ஆசை வெளிப்பாடு அவளுக்குள் யோசனைகளையும் அவன் நல்லவனா கெட்டவனா என்பது பற்றிய குழப்பங்களையும் தோற்றுவித்தது.

அதன் தொடர்ச்சியாய் அவனை முதன்முதலில் பார்த்த தினம் நினைவுக்கு வந்தது. மத்தியிடமிருந்து அவளை அவன் காப்பாற்றிய தினம். உடல் தானாக ஒருமுறை சிலிர்த்தடங்கியது.

உடல் மேல் இன்னும் அந்த மத்தியின் பர்ப்யூம் வாடை வீசுவதைப் போலிருந்தது. தன்மேல் விழுந்து கடிக்க முற்பட்ட போது வெகு அருகில் பார்த்த மத்தியின் முகமும் புருவங்களுக்கிடையே இருந்த இடையறாத துடிப்பும் நினைவுக்கு வந்து இம்சித்தது.

“ஜான். இந்த மத்திகள்லாம் மனுசங்க மாதிரியே இருக்குதே? எப்படி வித்தியாசம் கண்டுபுடிக்கறது?”

“இது மத்திகளோட பரிணாம வளர்ச்சி. நாம அவங்க கிட்டருந்து நம்மள பாதுகாத்துக்க மட்டும் போராடிட்டு இருந்த வரைக்கும் அவங்க ஜோம்பிகளாத்தான் சுத்திட்டு இருந்தாங்க. என்னிக்கு நாம அவங்கள வேட்டையாட ஆரம்பிச்சோமோ அன்னிக்கு ஆரம்பிச்சது அவங்களோட பரிணாம வளர்ச்சி.

கொஞ்சம் கொஞ்சமா தங்களோட urge-ஐ அடக்கியாளக் கத்துகிட்டு, மனுஷங்க மாதிரியே பேசக் கத்துகிட்டு, மனுஷங்களோட மனுஷங்களா கலக்க கத்துகிட்டு… இப்ப அவங்க நம்மள வேட்டையாடற நிலைமை வந்திருச்சு”

“மனுஷங்களோட மனுஷங்களா கலந்துட்டா மத்திகள எப்படி கண்டுபிடிக்கறது?”

“சிறப்புக் காவலர்கள்கிட்ட அதுக்கான ஸ்கேனர் இருக்கும். நகரத்தின் உள்ளே வாழற பணக்காரங்க தங்கள் வீடுகள மத்திகள் உள்ள வர முடியாத மாதிரி சேப்டி பண்ணி வச்சுகிட்டாங்க. சாதாரண மக்கள் மத்திய கண்டுபிடிக்க சில அறிகுறிகள் இருக்கு.”

*

“என்னதான் மனிதர்கள் மாதிரியே தங்களை மாத்திக்கிட்டாலும் மத்திகளால தங்கள் உடம்புல இருந்து வர்ற துர்வாடைய மறைக்க முடியல. இப்ப அவங்க பர்ப்யூம்கள் பயன்படுத்த ஆரம்பிச்சுட்டதா கேள்வி. ஆனா அதுவும் ஓரளவுக்கு மேல் கை கொடுக்காது. அதைத் தாண்டி, அவங்க விரல் முனைகள் எப்பவுமே கருப்பா இருக்கும். புருவங்களுக்கு மத்தியில எப்பவும் நாடி துடிச்சிட்டே இருக்கறது வெளிப்படையா தெரியும். அதை அவங்களால் கட்டுப்படுத்த முடியாது”.

யோசனைகளோடே எப்போது எனத் தெரியாமல் தூங்கிப் போனாள். மறுநாள் ஷீலாவையும் அழைத்துக் கொண்டு நகரத்தின் உட்புறத்துக்குச் சென்று வேலைக்காக அலைந்ததில் சில இடங்களில் அழைப்பதாகச் சொல்லியிருந்தனர்.

நம்பிக்கை கொள்வதைத் தவிர வேறு வழியில்லாமல் தளர்ந்த நடையுடன் மாலை வீட்டை நோக்கி நடக்கும் போது வழியில் பணக்காரர்களின் பாதுகாக்கப்பட்ட வீடுகளைப் பார்த்தவாறே வந்த ஷீலா “இதெல்லாம் என்னம்மா?” என்றாள்.

“மத்திகள் கிட்டருந்து பாதுகாத்துக்க வச்சிருக்கற பொறிகள்” என்றாள் ஷீலா.

“மத்திகள்லாம் எங்கருந்தும்மா வராங்க?”

*

“தடுப்பு மருந்து கண்டுபுடிச்சப்புறம் அடங்கியிருந்த வைரஸ் ரெண்டே வருஷத்துல பயங்கரமா ம்யூடேட் ஆகி மக்கள் எல்லாரையும் ஜாம்பிக்களா மாத்த ஆரம்பிச்சிடுச்சு. உலகத்துல பாதி நாடுகள்ல இப்ப மக்களே இல்ல. அந்த நாடுகள்லாம் உலகத்தோடயே சேர்த்தி இல்ல. நம்ம நாடு மாதிரி சில இடங்கள்லதான் தப்பிப் பிழைச்ச சொற்ப மக்கள் இருக்கோம். தினம் தினம் மத்திகளோட போராடிகிட்டு” என்றான் ஜான்.

“இதெல்லாம் நான் ஸ்கூல்ல ஹிஸ்டரி க்ளாஸ்ல படிச்சதே இல்லியே?”

“இதெல்லாம் மறைக்கப்பட்ட வரலாறு. அரசாங்கம் நாமெல்லாம் எதை வரலாறா படிக்கணும்னு நினைச்சதோ அதை மட்டும்தான் நாம படிச்சோம்” என்றான்.

“சொல்லும்மா” என்று உலுக்கிய ஷீலாவின் குரல் கேட்டுத் திரும்பியவள் அவள் தலையைத் தடவி “அவங்கள்லாம் ரொம்ப தூரத்துல இருந்து வராங்கம்மா” என்றாள்.

இரவு திடீரென்று பெருஞ்சப்தம் கேட்கவே எழுந்து ஓடிவந்து வெளியில் பார்த்தாள். இரண்டு வீடுகள் தள்ளி ஒரு மத்தி அகப்பட்டிருந்தது. இவளைத் தாக்க வந்த பெண் மத்தி போல் சுலபத்தில் அடங்கி விடாமல் அந்த ஆண் மத்தி காவலர்களையே கடிக்கப் பார்த்தது. அன்று லிடோ டூட்டியில் இல்லை. வேறு காவலர்கள் இருந்தனர்.

அடிவயிற்றில் திரண்ட கலக்கத்துடன் உள்ளே வந்தமர்ந்தாள். இந்தச் சிறுசுவர் அவளுக்கு என்ன பெரிய பாதுகாப்பை அளித்துவிடப் போகிறதென்று தோன்றியது.

“இந்த மாதிரி இங்கொன்னும் அங்கொன்னுமா மத்திகளோட தாக்குதல் அதிகரிச்சுட்டே போறது ஒரு சமிக்ஞை. ஒரு பெரிய தாக்குதல் நடக்கப் போகுதுங்கறதுக்கான சமிக்ஞை. அப்போ இந்தக் காவலர்களால எல்லாம் ஒன்னும் பண்ண முடியாது. அதுக்குள்ள எப்படியாவது நகரத்துக்கு உள்பக்கம் போயிடுங்க” என்று தன்னை மத்தியிடமிருந்து காப்பாற்றிய அன்று லிடோ சொன்னது நினைவில் வந்து மேலும் பயத்தைக் கூட்டியது. சீக்கிரம் நகரத்துக்குள் எப்படியேனும் ஒரு இடத்தைக் கண்டுபிடித்துக் குடியேறிவிட வேண்டுமென்று எண்ணிக் கொண்டாள்.

அதற்குத் தேவையிருக்கவில்லை.

அடுத்த நாள் இரவு. முதலில் லேசாகக் கேட்கத் துவங்கிய புதர்களின் சலசலப்பு நேரமாக ஆக அதிகரிக்கத் துவங்கியது. வெளியில் வந்து பார்த்தவள் அதிர்ந்தாள். இருளோடு இருளாகப் புதர்களோடு புதர்களாக மதில் சுவரையொட்டிச் சாரை சாரையாய் நகர்ந்து கொண்டிருந்தன ஆண்களும் பெண்களுமாய்க் கலந்திருந்த மத்திகள்.

மெல்லச் சத்தம் கேட்டு அடுத்தடுத்த வீடுகளிலிருந்தும் மக்கள் வெளிவந்து பார்க்கத் துவங்கினர். அசௌகரியமான ஒரு அமைதி பரவத் துவங்கியது. சில நிமிடங்களில் சூழலுக்குத் தம்மைப் பழக்கப்படுத்திக்கொண்டு விட்ட மத்திகள் முதலில் சிறப்புக் காவலர்களைக் குறிவைத்துப் பாய்ந்தன. சொற்ப எண்ணிக்கையில் இருந்த காவலர்களால் பெருமளவில் குவிந்திருந்த மத்திகளை ஒன்றும் செய்ய முடியவில்லை.

சூழ்நிலையின் தீவிரத்தை உணர்ந்த கேசி கதவை இழுத்துச் சார்த்திக்கொண்டு உள்ளே ஓடினாள். அதைப் பார்த்துவிட்ட ஒரு மத்தி தான் கவ்விக் கொண்டிருந்த காவலனின் கழுத்தை விட்டுவிட்டு கேசியின் வீட்டை நோக்கி உறுமியபடி ஓடி வந்தது.

உள்ளே வந்த கேசி ஷீலாவை வாரியணைத்துக் கொண்டு மற்றொரு கதவு வழியே வெளியேறி ஓடிப் பிரதான சாலையின் நால்முனைச் சந்திப்பை அடைந்தாள். மெல்ல மெல்லப் பிரதான சாலையும் மத்திகளால் நிரம்பிக் கொண்டிருந்தது.

சட்டென்று ஓட முற்பட்ட கேசியின் கால்கள் பிடித்திழுக்கப்பட்டு தடாலென்று கீழே விழுந்தாள். அந்த மத்தி அவளைப் பிடித்துத் தன் வாயருகே இழுத்துக் கொண்டிருந்தது. சத்தம் கேட்டு சற்றுத் தொலைவிலிருந்த மேலும் இரு மத்திகள் கேசியை நோக்கி நகரத் துவங்கின.

போராடிக் கொண்டிருந்த கேசியின் கைகளிலிருந்த ஷீலா திடீரென்று இருளினின்றும் முளைத்த மற்றொரு மத்தியால் இழுக்கப்பட்டாள். ஷீலா பயந்து அலறத் துவங்கியிருந்தாள். தன் பலமனைத்தையும் ஒன்று திரட்டித் தன் கால்களைப் பிடித்திருந்த மத்தியை எட்டி உதைத்த கேசி மற்றொரு மத்தியின் கையிலிருந்து ஷீலாவைப் பிடுங்க முயற்சித்தாள். உக்கிரமாய் உறுமிக் கொண்டிருந்த மத்தி சட்டென்று துடிதுடித்துக் கீழே விழுந்தது. மத்தியின் கையிலிருந்து கீழே விழப் போன ஷீலாவைக் கேசி தாங்கிக் கொண்டாள்.

ரத்தம் சொட்டச்சொட்ட லிடோ நின்றிருந்தான். ஏற்கனவே அவன் உடலில் பல கீறல்களும் பற்தடங்களும் இருந்தன. மூச்சு வாங்கியபடியே கீழே விழுந்த லிடோ “சீக்கிரம் போ. பாலத்துக்கடியில போய் ஒளிஞ்சுக்கோ. பாலத்து மேல போலீசோட ஆரஞ்சு விளக்கு தெரியற வரைக்கும் வெளிய வராதே போ.” என்றான்.

நிலைமையை உணர்ந்த கேசி ஷீலாவை அள்ளியணைத்துக் கொண்டு ஓடத்துவங்கினாள். பயத்திலும் பதற்றத்திலும் கேசி மயங்கியிருந்தாள்.

தன் பின்னால் லிடோவின் மேல் மத்திகள் ஒன்றாய்ப் படர்வதும் அவன் குரல் பெரிதாய் மேலெழும்பிப் பின் கொஞ்சம் கொஞ்சமாய் அடங்குவதையும் கேட்டபடியே ஓடியவள் பாலத்தின் முனையை அடைந்தாள்.

சிரமப்பட்டு அவள் உயரமிருந்த பாலத்தின் அடிச்சுவரைத் தாண்டியவள் வெளிச்சமே விழாத பாலத்தூணடியைத் தேடிக் குனிந்தபடியே நடந்தாள். ஆங்காங்கே சிலர் ஏற்கனவே பாலத் தூண்களின் அடியில் ஒளிந்திருந்தனர்.

கடைசியாய் ஆளில்லாத் தூணொன்றைக் கண்டுபிடித்தவள் அதன் அடிப்பகுதியில் சென்று இருளோடு இருளாக அமர்ந்தாள். சாக்கடை நாற்றம் குப்பென்று நாசியை நிரப்பியது. மூச்சு வாங்கும் சப்தம் கூட வெளிவராமல் மூச்சு வாங்கிக் கொண்டவள் ஷீலாவைச் சுற்றியிருந்த போர்வையை லேசாக விலக்கி முகம் பார்த்தாள். ஷீலா இன்னும் மயக்கத்திலிருந்தாள். மெல்லக் ஷீலாவின் கன்னத்தைத் தட்டினாள் கேசி. ஷீலாவால் கண்களைத் திறக்க முடியவில்லை. மெல்ல “ம்மா” என்று முனகினாள்.

ஷீலாவைக் காப்பாற்றி விட்ட நிம்மதியுடன் பெருமூச்சொன்றை வெளியிட்ட கேசி பின்சுவற்றில் சாய்ந்து மெல்லக் கண்களை மூடினாள்.

அவள் கண்களை மூடிய அதே நொடியில் ஷீலாவின் புருவங்களுக்கிடையே நாடி துடிக்கத் துவங்கியிருந்தது.

***

ஹரீஷ்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular