Sunday, November 10, 2024
Homesliderமண் பாரம்

மண் பாரம்

சித்துராஜ் பொன்ராஜ்

தூரத்துக் குடியிருப்புக்கள் இருந்த திசையிலிருந்து சாவிக்கொத்துகள் குலுங்கி அமைதியாவதைப்போல் நாய்கள் அவ்வப்போது குரைத்தன. அவற்றின் மெலிந்த உடல்களின் சிலிர்த்திருந்த ரோமங்களிலும், கரகரப்பான குரல்களிலும் பொங்கிவரும் ஆக்ரோஷமும், அலைதலும் எங்கும் பரவி வியாபித்து இருப்பதைப்போல் சுற்றிலும் அடர்த்தியான இரவு இறங்கியிருந்தது. அவர்கள் மூவரும் தோட்டத்தின் எல்லையில் போடப்பட்டிருந்த இரும்பு முட்கம்பி வேலிக்குப் பின்னால் பச்சைய வாசனையும் கோழிப்பீ நாற்றமும் கலந்து அடிக்கும் ஈரமான சேற்றின்மீது உடல்களைக் குறுக்கியபடி பதுங்கியிருந்தார்கள்.

முன்னால் தணிகாசலமும், பங்குனி நாயரும் செம்மண் தரையில் முழங்கால்கள் பதிய அமர்ந்திருந்தார்கள். சற்றுப் பின்னால் உயரமான லாலாங் புற்களினிடையே பதுங்கியிருந்த ஆ டெங் கையில் வைத்திருந்த நீண்ட டார்ச் லைட்டின் அடிப்பகுதியை உள்ளங்கையால் பலமாகத் தட்டிக் கொண்டிருந்தான். ஆகஸ்டு மாத இரவின் காற்றில்லாத வெக்கையில் அவனுடைய நெற்றி வியர்வையில் பளபளத்துக் கிடந்தது. ஆ டெங்கின் அடிக்குப் பயந்த மிகுந்த அசதியுள்ள கிழவனைப்போல் டார்ச் திக்கித்திணறி எரிய ஆரம்பித்தது. ஆனால் அது கக்கிய பலவீனமான மஞ்சள் வெளிச்சம் அதன் நுனியைச் சுற்றி அமைந்திருந்த வெள்ளி நிற மூடியை மட்டுமே ஒளியூட்டப் போதுமானதாக இருந்தது.

ஆ டெங் வெறுப்பில் டார்ச் லைட்டை சிலமுறை உதறினான்.

“சனியன்,” என்று மெல்லிய குரலில் சலித்துக் கொண்டான்.

“ப்ச்சு, போதும். பலா மரம் இருக்குற எடம் எல்லாருக்கும் நியாபகமிருக்கில்லையா?”

தணிகாசலம் இரும்பு முள்வேலியை விரல் நுனிகளால் மெல்ல தொட்டபடி அமர்ந்திருந்தான். வேலிக்கு அப்பால் வளர்ந்திருந்த டூரியான மரங்களின் மீது படிந்திருந்த கனமான கும்மிருட்டில் பார்த்திருந்த தனது பார்வையை விலக்காமலேயே பேசினான். அவன் குரல் தனக்குத்தானே பேசுகிறவனின் குரலைப்போல ஒலித்தது.  அவனுடைய விரல்நுனிகளின் அடியில் நீண்டு போன முட்கம்பியில் உணரக்கூடிய மெல்லிய அதிர்வைப் போலவே அவனுடைய குரலிலும் மெல்லிய நடுக்கமிருந்தது.

“வேலியைத் தாண்டுனா டூரியான் மரங்க. மரங்களுக்கு ஊடால போற மண்பாதையில கொஞ்சம் தொலைவு நடந்தா சின்ன பள்ளம். அங்க வலது பக்கமா திரும்பி மறுபடியும் ரம்புத்தான் மரங்களுக்கிடையில நடந்தா பழைய சர்வே கல் தூணும், மருத்துவன் கோவிலும் வரும். கோவில்னா கட்டடம் இல்ல. பூமியில நட்டு வச்சிருக்குற உருண்டையான தூண்மேல சின்ன அலமாரிப் பெட்டிய வச்சது மாதிரி ஒரு அமைப்பு. கதவுகள் வச்சிருக்குற பெட்டிக்குள்ள மருத்துவச் சாமியோட சிலை. மேல செவப்புக்கூரை. சர்வே கல்லுக்கும், மருத்துவன் கோவிலுக்கும் எதுத்தாப்புல மரம்.”

ஆ டெங் கையிலிருந்த டார்ச் லைட்டிலிருந்து தனது கண்களை விலக்காமல் அடிக்குரலில் பேசினான். சில சொற்களுக்கு ஒருமுறை அவனுடைய தொண்டைக்குழி அச்சத்தில் பூரித்து அடங்குவது தெளிவாகத் தெரிந்தது.

பௌஷெங் தா தீ பத்தாம் நூற்றாண்டில் ஊ தௌ அல்லது ஊ பென் என்ற இயற்பெயரோடு சீனாவில் வாழ்ந்த ஒரு பெரும் மருத்துவர். சீன வரலாற்றிலேயே மிகத்திறமை வாய்ந்த மருத்துவராகக் கருதப்படும் பௌஷெங் தா தீ கடல்நாகத்தின் கண்களில் மருந்து சொட்டுக்களை விட்டு அதன் பார்வைக் கோளாற்றினைத் தீர்த்ததாகவும் ஒரு புலியின் தொண்டையில் மாட்டியிருந்த முள்ளை மிகத்திறமையாக அகற்றியதாகவும் சீன மருத்துவ ஏடுகள் சொல்கின்றன. பௌஷெங் தா தீ 1036-ல் காலமான பிறகு அவரை மருத்துவக் கடவுளாக வணங்கும் வழக்கம் சீனாவில் உருவானது. பதினான்காம் நூற்றாண்டில் சீனாவை அரசாண்ட ஹொங் ஸீ பேரரசர் அதிகாரப்பூர்வமாகப் பௌஷெங் தா தீயைத் தா வோ மதக்கடவுளர்களின் பட்டியலில் சேர்த்துக் கொண்டார்.

ஜப்பான்காரன் சண்டைக்கு முன்பு இந்தப் பகுதி முழுவதும் ச்சான் என்ற சீனப் பெரும்பணக்காரனுக்குச் சொந்தமான மிளகுத்தோட்டமாக இருந்தன. தோட்டத்தில் வேலை பார்த்த ஏழைச் சீனத்தொழிலாளிகள் அவர்களுக்கு ஏற்படும் காய்ச்சல் ஜுரம், சுவாசக்கோளாறுகள், வயிற்றுப்போக்கு, பாம்புக்கடி மற்றும் தேள் கடி ஆகியவற்றுக்காக ஆங்கில மருத்துவர்களிடம் போக வசதியில்லாதவர்களாக இருந்தார்கள். இந்தக் காரணத்தால் பதினான்காம் நூற்றாண்டு சீன மருத்துவர்களின் வழக்கப்படிக்  கைகள், மடி, முழங்கால்கள் என்று தாண்டி வழியும் பச்சைப் பட்டாடையும் அட்டைப் பெட்டி வடிவத்தில் இருந்த கறுப்புத்தொப்பியும் அணிந்து அமர்ந்த கோலத்திருலிருந்த பௌஷெங் தா தீயின் உருவச்சிலையை அவர்கள் வேலை பார்த்த கடுமையான பூமிக்கு மத்தியில் ஒரு சிவப்பு அலமாரிப் பெட்டியில் வைத்து வணங்கினார்கள்,

மருத்துவச்சாமியின் கோவில் பீடத்துக்கு எதிர்த்தாற்போல் இருந்த பலா மரத்தில்தான் அவர்கள் மூன்று பேரும் தேடிப்போய்க் கொண்டிருக்கும் பலாப்பழம் இருந்தது. குறைந்தது இரண்டு பேராவது தூக்கிக்கொண்டு போக வேண்டிய அளவுக்கு நீளமும், அகலமும், கனமும் வாய்ந்த கனி. இப்போது ஆ லிம் என்ற கிழவனுக்குச் சொந்தமான பழத்தோட்டமாய் இருக்கும் இடத்திலிருந்து விளைந்த பழங்களையும், காய்கறிகளையும் சந்தைக்கு எடுத்துக்கொண்டு போக இரண்டு நாள்களுக்கு முன்னால் வழக்கம்போல் லாரி எடுத்து வந்திருந்த போதுதான் தணிகாசலமும், ஆ டெங்கும் பழத்தைப் பார்த்தார்கள்.

அன்றைக்கென்று பார்த்து நகரத்தில் இடதுசாரி தொழிற்சங்கங்கள் ஆரம்பித்திருந்த ஏதோ ஒரு கிளர்ச்சியில் கலந்துகொள்ளத் தோட்டத் தொழிலாளிகளில் சிலர் போயிருந்தார்கள். பெரிய வாய் அகன்ற ரோத்தான் கூடைகளின் மீது மறைப்புக்காகச் செய்தித்தாள்களை விரித்துக்கட்டி வைக்கப்பட்டிருந்த பழங்களைத் தோட்டத்தில் அந்தந்த இடத்திலிருந்து தணிகாசலமும், ஆ டெங்கும் தாங்களே எடுத்துக்கொண்டு போகும்படி ஆ லிம் சொல்லிவிட்டான்.

ரம்புத்தான் பழங்கள் நிறைந்திருந்த கூடையைத் தரையில் உருட்டிக் கைக்கு வாகாக்கிக் கொண்டு அதை முதுகின்மீது சுமந்தபடி தணிகாசலம் நிமிர்ந்தபோது பக்கத்தில் மற்றொரு கூடையைச் சுமந்தபடி நின்றிருந்த ஆ டெங் அவன் விலா எலும்பில் தனது முழங்கையால் இடித்தான்.

தணிகாசலத்தைவிட ஆ டெங் நல்ல குள்ளம். உபரிச்சதை ஏதுமின்றித் தசைகளையும், நரம்புகளையும் மாத்திரமே எலும்புக்கூட்டின்மேல் இழுத்துக் கட்டியது போன்ற உருவம். ஆ டெங்கைவிட உயரமாக இருந்த தணிகாசலம் சிரமத்துடன் ஆ டெங்கின் பார்வை போன திசையைத் தேடிப்பிடித்துப் பார்த்தபோது ஐம்பது தப்படித் தூரத்தில் சிறிய ஒரு மேட்டின் மீது செக்கச் செவேல் என்றிருந்த மண் குவியலில் வெளிச்சமிக்க மெலிந்த தண்டும், பல கிளைகளுமுடைய சற்றே உயரமான பலா மரம் தெரிந்தது. அதன் கிளைகளில் இளம்பச்சை நிறத்தில் பெரியதும் சிறியதுமாகப் பழங்கள் தொங்கிக் கொண்டிருந்தன. மற்ற எல்லாப் பழங்களையும் விட இரண்டு மடங்கு பெரிதாக அவர்கள் இருவரும் நின்றிருந்த திசைக்கு நேரெதிராய் நீட்டிக் கொண்டிருந்த கிளையில் ஓர் இளம்பெண்ணின் வசீகரமான வளைவுகளோடும், புதிதாய்ப் பிறந்த குழந்தையின் வடிவத்தில் அந்தப் பலாப்பழம் தொங்கியது. இன்னும் முற்றாகப் பழுக்காத அதன் தோலில் மைனாக்களும் பிற பறவைகளும் கொத்தித் துளைபோட முயன்றதற்கான அறிகுறிகள் தெரிந்தன.

“இன்னும் கொஞ்ச நாளு போனா பறவைங்க அந்தப் பழத்தை முழுசாக் கொத்தித் தின்னுடும்.”

தோள்பட்டையைத் தாண்டி முதுகின்மீது கைகளை முறுக்கி வளைத்து எடைகளைத் தூக்கிய பழக்கம் இல்லாததால் பழக்கூடையின் கனம் தாங்காமல் சற்றே தள்ளாடியபடி நடந்து வந்து கொண்டிருந்த ஆ டெங் மூச்சிரைத்தபடிப் பேசினான்.

“ஆனா டூரியான், ரம்புத்தான், மாம்பழம், மங்கூஸ்தீன் பழம்னு ஒவ்வொரு தடவையும் கூடை கூடையா அனுப்புற கிழவன் இந்தப் பலாமரத்தோட பழங்கள மட்டும் அனுப்புறதே இல்லையே அது ஏன்? இந்தத் தோட்டத்துல வேற எங்கயும் பலா மரத்தைப் பார்த்ததாவும் எனக்கு நினைவில்ல.”

ஆ டெங்கைப் போலவே தணிகாசலத்துக்கும் பலமாக மூச்சிரைக்கத்தான் செய்தது. முதுகில் பதிய கைகளை முறுக்கிப் பழக்கூடைகளைத் தூக்கியிருந்ததில் விரல்களில் பிரம்பம்பட்டைகளின் விளிம்புகள் அழுந்தி மோசமாய் எரிந்தது. அதிகாலை நேரத்தின் பனிகூட இன்னும் காயவில்லை. தனது காலடிகளுக்கு அடியில் தங்கச் சில்லறைகளாய்ப் பரவ ஆரம்பித்திருந்த சூரிய வெளிச்சத்தைத் தாண்டி நடந்து கொண்டிருந்த தணிகாசலம் தலையைக் குனிந்து வளைத்து முன்னங்கையின் மேற்புறத்தால் நெற்றியில் அரும்பியிருந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டான்.

ஆ டெங் அடிக்குரலில் ஏதோ விநோதமான ஒலி எழுப்பிவிட்டுத் தோளைக்கொண்டு தன்னைப் பலமாக இடிப்பதை உணர்ந்த தணிகாசலம் திடுக்கிட்டுத் திரும்பினான். ஆ டெங் தணிகாசலத்தின் முகத்தை ஏறெடுத்துப் பார்த்தபடித் தலையை ‘பேசாதே’ என்று சொல்வதுபோல் பலமாக அசைத்தான். ஆ டெங்கின் முகத்தில் பயம் நிறைந்திருந்தது. அவன் மீண்டும் பேச ஆரம்பித்தபோது பழத்தோட்டங்களின் நடுவே அவ்வப்போது காலடிகளுக்கடியில் தட்டுப்படும் மிகக்குறுகலான நீரோட்டங்களின் ஓடும் தண்ணீரின் சத்தமாய் அவனுடைய குரல் கம்மி ஒலித்தது.  சற்றுமுன் சுட்டிக்காட்டிய பலா மரத்தை மீண்டும் மீண்டும் திரும்பிப் பார்த்தபடியே அவன் பேசினான்.

“தண்ணி, நாசமாப் போற நாயே. சத்தமாப் பேசாத. தேவையில்லாத விஷயத்தைப் பேசினாச் செத்துப் போகணும்.”

ஆ டெங் தனது கூர்மையான சின்னக்கண்களை அகல விரித்து வைத்துக்கொண்டு தலையைத் தோளில் ஒரு பக்கமாய்ச் சாய்த்துக் காட்டினான். அப்படிச் செய்யும்போது வாயைப் பிளந்து தனது வாளிப்பான நாக்கை வாயின் ஓரமாக நீட்டி வைத்துக் கொண்டான். முதுகுக்குப் பின்னால் முறுக்கியிருந்த கரங்களில் ஒன்றைச் சிரமப்பட்டு விடுவித்துக்கொண்டு கட்டை விரலைக் கொண்டு தலையைச் சீவுவதைப்போல் பாவனை செய்தான்.

பத்தாண்டுகளுக்கு முன்னர் ஜப்பானியர்கள் நாட்டை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த நேரத்தில் ஆ டெங்கும், தணிகாசலமும் பதின்ம வயதினராய் இருந்தார்கள். மேதகு ஜப்பானிய அரசாங்கத்தையும் அதன் அதிகாரிகளையும் பற்றி வதந்திகளைப் பரப்புவோருக்கும், விமர்சனம் செய்வோருக்கும் வழங்கப்பட்ட தண்டனையை அவர்கள் பார்த்திருக்கிறார்கள். தீவின் முக்கிய பகுதிகளில் உள்ள சாலைச் சந்திப்புக்களில் நீளமான மேசைகள் போடப்பட்டு அவற்றின்மீது வரிசையாக வைக்கப்பட்டிருக்கும் மனிதத் தலைகள் அவர்களுக்கு நினைவிலிருந்தன. சிலநேரங்களில் காவலுக்கு நின்றிருந்த காக்கி நிறச் சீருடையும், பின்புறத்திலிருந்து வெயிலுக்கெதிராய் சிறிய வால்போல் பட்டைத்துணி தொங்கும் தொப்பியும் அணிந்திருக்கும் ஜப்பானிய படைவீரன் தலைகளுக்கு அருகிலிருந்த மரச்சீப்பை எடுத்து நெடுநேரம் அலுப்புத்தீரத் தலைகளுக்கு விதவிதமாய்ச் சிகையலங்காரம் செய்து விடுவான். அல்லது போவோர் வருவோரிடமிருந்து சிகரெட்டுகளை மிரட்டி வாங்கி வெட்டி வைக்கப்பட்டிருக்கும் தலைகளின் வாயில் செருகி வைத்துத் தனக்குத்தானே வேடிக்கைக் காட்டிக் கொள்வான். ஒரு டின் நேவி கட் சிகரெட்டைக் கொண்டு அரை கட்டி அரிசி வாங்க முடிந்த காலம். ஜப்பான்காரனின் வாழைமர நோட்டின் மதிப்பைவிட அன்றைக்கு சிகரெட்டுகளின் மதிப்பு அதிகம்.

வெயிலிலும், ஈரப்பதம் நிறைந்த காற்றிலும் ஊறிச் சாம்பல் நிறம் பூத்திருந்த அந்தத் தலைகள் ஏற்படுத்திய அச்சம் இன்னமும் தீவில் வசித்த எளிய மக்களின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் கலந்திருக்கத்தான் செய்தது. ஆனால் ரகசியங்களை வற்புறுத்திக் கேட்காமல் இருக்கும் வயதோ, அதைச் சொல்லாமலிருக்கும் வயதோ இருவருக்கும் இன்னமும் வராததால் வழிநெடுகத் தணிகாசலத்தின் முணுமுணுப்பைக் கேட்டுப் பொறுமையிழந்த ஆ டெங் கத்திகளைப்போல் கூரிய கரும்பச்சை இலைகளை வீசிக்கொண்டு நின்றிருந்த சில அன்னாசிச் செடிகளின் அருகில் தனது முதுகிலிருந்த கூடையை இறக்கி வைத்துவிட்டு தணிகாசலத்துக்கு அவர்கள் சற்று முன்னர் பார்த்த பலா மரத்தின் கதையைச் சொல்ல ஆரம்பித்தான்.

***

     ஆ டெங் சொன்ன கதை: இப்போது மனைவி, குழந்தைகள் என்று யாருமே இல்லாமல் ஒரு டஜன் வேலையாட்களை மட்டுமே வைத்துக்கொண்டு தோட்டத்தில் வாழ்ந்து வரும் ஆ லிம் கிழவனுக்கு ஒரு காலத்தில் மனைவியும் பெண் குழந்தையும் இருந்தார்களாம். ஜப்பான்கார யுத்தம் தொடங்கும் நேரத்தில் பதினேழு வயதாக இருந்த ஹூங் தங்கம் போன்ற உடல் நிறத்தோடும் அச்சடித்து வைத்தது போன்ற முக லட்சணத்தோடும் மிகப்பெரிய பேரழகியாக இருந்தாளாம். தீவை ஆக்கிரமித்த ஜப்பானியப் படைகளால் ஆயிரக்கணக்கான சீனப்பெண்கள் வன்புணர்வுக்கு உள்ளாகியிருந்த நேரத்தில் ஹூங் மாத்திரம் பாதுகாப்பாக இருந்தாள். இதற்கு ஆ லிம் கிழவன் மலேசியாவிலிருந்து போருக்கு முன்னால் வந்து கொண்டிருந்த தனது ரப்பர் தோட்ட வருமானத்திலிருந்து சேமித்து வைத்திருந்த தொகையில் ஒரு பெரும் பகுதியை ஜப்பானிய உயரதிகாரிகளுக்கு லஞ்சமாய்த் தந்தது தான் காரணம் என்று தோட்டப்புறங்களில் இருந்த சீனர்கள் பேசிக் கொண்டார்கள்.

ஆனால் வேறொரு கதையும் அதே தோட்டத்துச் சீனர்களிடம் இதுவரை உலவி வரத்தான் செய்கிறது. ஜப்பான்காரனிடம் இல்லாத பணமா என்று கேட்கும் சில சீனர்கள் ஜப்பானிய உச்ச அதிகாரி ஒருவனுக்கு ஹூங் ஆசைநாயகியாகப் போனாள் என்றும், அதனால்தான் மற்ற ஜப்பான் படைவீரர்கள் அவளைத் தொடத் துணியவில்லை என்றும் சொல்கிறார்கள்.

மூன்றரை ஆண்டுகளுக்குப் பின்னர் ஜப்பான் நேசப்படைகளிடம் தோற்று ஹூங்கின் காதலன் அவளிடம் சொல்லாமல் ஊர் திரும்பியதற்குப் பிறகு ஹூங் காதலனின் பிரிவைத் தாங்க முடியாமல் செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியை நாடிப் பல்வேறு வழிகளில் காதலனைப் பற்றிய தகவல்களைத் தேடிப் போனாளாம். அவள் காதலன் ஜப்பானின் ஷிகானோ மாகாணத்தில் உள்ள நாகாஹாமா என்ற தனது சொந்த ஊருக்குத் திரும்பிவிட்டதாகவும் அங்கு ஏற்கனவே மனைவியும் வளர்ந்த குழந்தைகளும் இருப்பதாகவும், அவளை அவன் மறுபடியும் பார்க்கவே விரும்பவில்லை என்றும் அவளுக்குச் செஞ்சிலுவை சங்கத்தின் வழியாகச் செய்தி வந்தததாகவும் இவர்கள் சொல்கிறார்கள். இதுகேட்டு மனமுடைந்த ஹூங் ஒரு பௌர்ணமி நாளில் காதலன் எப்போதோ தனக்குப் பரிசளித்திருந்த ஜப்பானிய பட்டுக் கிமோனோ ஆடையை எடுத்து மாட்டியபடி ஜப்பானிய முறையில் சிகையலங்காரம் செய்துகொண்டு தனது தந்தையின் தோட்டத்தில் வளர்ந்திருந்த ஒற்றைப் பலா மரத்தில் தூக்கு மாட்டிக்கொண்டு செத்துப் போனாளாம்.

இன்றுவரைக்கும் ஆ லிம்மின் பழத்தோட்டத்துக்குள் பௌர்ணமி இரவுகளில் கிமோனோ ஆடையணிந்த இளம்பெண் ஒருத்தி பலா மரத்தைச் சுற்றி உலவுவதாகவும், அவள் அவ்வப்போது பாடும் ஜப்பானிய பாடலின் வார்த்தைகள் வெள்ளைச் சம்பங்கி மலர்களின் கனமான வாசனையோடு இரவின் அமைதியில் மிதந்து வருவதாகவும் அவர்கள் சொல்கிறார்கள்.

மற்றவர்களோ காதல் கத்தரிக்காய் எதுவும் இல்லை என்றும் ஜப்பானியர்களோடு வேசைத்தனம் செய்த பெண்களுக்குப் பொதுமக்கள் தரப்போகும் கொடூரமான தண்டனைக்கும், அவமானத்துக்கும் அஞ்சியே ஹூங் தூக்கு மாட்டிக்கொண்டு செத்துப் போனாள் என்கிறார்கள்.

ஆ லிம்மே தனது சுயலாபத்துக்காக மகளை ஜப்பானியர்களுக்குக் கூட்டிக் கொடுத்ததாகவும், அவனே முன்னாளில் பிரிட்டிஷாருக்கு ஆதரவாக இருந்த மற்ற சீனர்களை ஜப்பானியரிடம் காட்டிக் கொடுக்கும் கைக்கூலியாகவும் இருந்தான் என்பதும் இவர்கள் வாதம்.

ஜப்பானியர்கள் தோற்றுப் போனார்கள் என்ற அறிந்தவுடன் தனது துரோகங்கள் யாருக்கும் தெரியாமலிருக்க அவற்றுக்கு ஒரே சாட்சியாக இருந்த தனது மகளையும் ஆ லிம் கொன்று பலா மரத்திற்கு அடியில் புதைத்து விட்டானாம். ஆ லிம் கிழவன் தனது சொந்த இன மக்களுக்கு எதிராகத் துரோகம் செய்தான் என்ற அவர்களுடைய கூற்றுக்குப் போர்க்காலத்திலும் அவன் பாதுகாப்பாக இருந்ததையும் நல்ல வசதியோடு இருந்ததை அவர்கள் சான்றாகக் காட்டுகிறார்கள்.

எது எப்படி இருந்தாலும் போர் முடியும் தறுவாயில் ஹூங் மர்மமாகக் காணாமல் போனாள் என்பதும் அவள் காணாமல் போன சிறிது காலத்திற்கெல்லாம் ஆ லிம்மின் தோட்டத்தில் இருக்கும் அந்த ஒற்றைப் பலா மரத்தில் மிக அதிகமாய்ப் பழங்கள் காய்க்க ஆரம்பித்தது என்பதும் மறுக்க முடியாத உண்மைகளாகவே இருக்கின்றன. தனது தோட்டத்தில் இருந்த மற்ற எல்லாப் பழங்களையும் பாரபட்சமில்லாமல் சந்தைக்கு விற்கும் ஆ லிம் பலா மரத்தில் இத்தனை அருமையான பழங்கள் காய்த்தும்கூட அவற்றைத் தொடாமல் பறவைகளுக்குத் தின்னத்தருவது விந்தையாகக் கருதப்பட்டது. போர் முடிந்த சில நாட்களிலேயே ஆ லிம்மின் மனைவி ரத்தம் கக்கிச் செத்துப்போனாள். செம்மண் நிலத்தில் ராட்சசப் பழங்களோடு நின்று கொண்டிருந்த மரத்தை தோட்டப்புறத்தில் வாழ்ந்து வந்த சீனர்கள் ‘பேய்ப்பலா’ என்று அழைக்க ஆரம்பித்தார்கள்.

அந்த மரத்தின் பழங்களைத் தின்பது மனித மாமிசத்தைத் தின்பதற்கு ஒப்பாகும் என்றும், அப்படித் தின்பவர்களை ஹூங்கின் ஆவி பழிவாங்கிவிடும் என்றும் ஒரு நம்பிக்கை அந்தப் பகுதியில் இருக்கிறது. பத்து வருடங்களுக்கு முன்னால் ஒரு பௌர்ணமி இரவில் செத்துப்போன அந்த அதிர்ஷ்டமில்லாத இளம்பெண் அந்த மரத்தின் அடியில் புதைக்கப்பட்டிருப்பதாகவும் அவள் உடம்பின் சாறே பலாப்பழங்களாக மரத்திலிருந்து பூரித்து நிற்பதாகவும் அவர்கள் ஒருவருக்கு ஒருவர் கோப்பிக்கடை உரையாடலில் பகிரப்படும் சின்னஞ்சிறு செய்திகளாய், அந்தி நேரத்தின் பெரும் நிழல்களுக்கிடையே மண்ணெண்ணெய் விளக்குகளின் மங்கிய வெளிச்சத்தில் அமர்ந்தபடி இரவின் பெரும் கதைகளாய்ச் சொல்லிக் கொள்கிறார்கள்,

ஆ டெங் சொன்ன கதை தணிகாசலத்தின் முதுகுத்தண்டில் கூரிய முனையுடைய ஜில்லென்ற இரும்புக்கத்தியாய் மெல்ல இறங்கியது, அவன் அடிவயிறு உருகி வெதுவெதுப்பான நீராய் தொடைகளின் வழியாக வழிவதைப்போல் அவன் உணர்ந்தான்.

நின்ற இடத்திலிருந்தே தணிகாசலம் தூரத்தில் சலனமில்லாமல் நின்று கொண்டிருந்த பலா மரத்தைத் திரும்பிப் பார்த்தான். அதிகாலை நேரத்தில் காற்று முற்றிலும் விழுந்துபோய் சலசலக்கும் பழ மரங்களின் இலைகளினூடே விழும் வெயில் திடீரென்று படிகத்தாலான கண்ணாடிக் குழி வில்லைபோல் மாறியதாலோ என்னவோ தூரத்தில் நின்ற பலா மரம் இப்போது அவனுக்கு வெகு அருகில் நிற்பது போல் தோன்றியது. சிவப்பு நிற அலமாரி போன்ற பெட்டியில் அமர்ந்திருக்கும் பௌஷெங் தா தீயின் சாயம் போன சிலையின் கண்களில் பூசப்பட்டிருந்த கறுப்பு வட்டங்கள் மட்டும் தனித்து வெளியேறி பளபளக்கும் ஈய குண்டுகளாய்த் துளைப்பதுபோல் தணிகாசலத்துக்குத் தோன்றியது.

அதிகாலை நேரத்துத் தூக்கமின்மையும் பசியும் தன்னை வாட்டுவதாகத் தணிகாசலம் தனது கைகளை உதறிக்கொண்டு பிரம்பங்கூடைகளை மீண்டும் தூக்கிக் கொண்டான். பின்பு, ஆ டெங்கும் தணிகாசலமும் வேறெதுவும் பேசாமல் லாரி இருந்த இடத்திற்கு நடந்து போனார்கள். அங்கு அவர்களுக்காகக் கையில் பெரிய நோட்டுப் புத்தகம் ஒன்றை வைத்துக் கொண்டு ஆ லிம் கிழவன் காத்திருந்தான்.

***   

“அட, இன்னைக்குப் பௌர்ணமியா?”

கனமான கருநீல மேகங்கள் விலக நிலவு தெரிவதைப் பார்த்த பங்குனி நாயர் முணுமுணுத்தான். தணிகாசலம் ஆ டெங்கைத் திரும்பிப் பார்த்தான். ஆ டெங் தலையை மெல்ல அசைத்துக் காட்டவே இரும்பு முள்வேலிக்கு நடுவில் பத்து பதினைந்து அடிக்கு ஒருமுறை வேலியைத் தூக்கிப் பிடிக்கும் விதமாக நடப்பட்டிருந்த உயரமான கல் தண்டின்மீது இரண்டு கைகளையும் வைத்து ஊன்றித் தோட்டத்திற்குள் தாவினான். மற்ற இருவரும் அவன் செய்ததைப் போலவே செய்து தோட்டத்திற்குள் தாண்டிக் குதித்தார்கள்.

மூவரும் அரைக்கால் சட்டை மாட்டியிருந்தார்கள். ஆ டெங்கும் தணிகாசலமும்  சணல் கயிற்றின் நிறத்திலிருந்த முரட்டுத் துணியால் தைத்த சட்டையை அணிந்திருந்தார்கள். பங்குனி மாத்திரம் சந்தன நிறத்தில் கொஞ்சம் விலையுயர்ந்த பருத்திச் சட்டையை அணிந்திருந்தான். அவர்கள் கால்களில் அணிந்திருந்த ரப்பர் செருப்புகளுக்கடியில் சிவப்பு நிலம் மனித மாமிசத்தின் கதகதப்போடு இருந்தது. அவர்கள் எடுத்து வைத்த ஒவ்வொரு காலடிக்கும் நெகிழ்ந்து மனிதச் சதையைப் போலவே வழிவிட்டு விலகுவதுபோல் மூவருக்கும் தோன்றியது.

நடைபாதையில் ஏற்பட்டிருந்த திடீர் சரிவில் தடுமாறி டூரியான் மரங்களுக்கு இடையில் விழப்போன ஆ டெங்கைத் தணிகாசலம் கை நீட்டிப் பிடித்துக் கொண்டான்.

பழங்களைக் கொண்டுவரப் போனபோது பார்த்த பலாப்பழத்தைத் திருட வேண்டும் என்ற எண்ணம் அவர்கள் இருவருக்கும் எப்போது தோன்றியது என்று அதன் பிறகு அவர்களால் எப்போதும் துல்லியமாய்ச் சொல்ல முடிந்ததே இல்லை. அன்று அதிகாலை தோட்ட வாசலில் கடகடவென்று அதிர்ந்து கொண்டிருந்த பழைய வாக்ஸ்ஹால் லாரியில் ஆ லிம்மின் மேற்பார்வையில் பழங்கள் நிறைந்த பிரம்பங்கூடைகளை ஏற்றிக் கொண்டிருந்த போதோ, லிம் ச்சூ காங்கிலிருந்து நகரத்தின் மையத்திலிருக்கும் அமோய் ஸ்தீரிட்டிலிருந்த சந்தைக்கு இருபது கல் தொலைவை வளைந்து வளைந்து போகும் ஒற்றைப் பாதையில் லாரியை ஓட்டிக்கொண்டு போகும்போதோ அந்த எண்ணம் தோன்றியிருக்கலாம்.

ஏன், அவர்கள் இருவரையும் சதா சோம்பேறி என்று கரித்துக் கொட்டிக்கொண்டபடியே இருக்கும் ஹாக் ச்சையின் கடையில் சுட்டெரிக்கும் ஆகஸ்டு வெயிலில் பழக்கூடைகளை இறக்கும் நேரத்திலும் அந்த யோசனை இருவருக்கும் தோன்றியிருக்கவும் கூடும்.

ஆனால் அந்த எண்ணம் தோன்றிய பிறகு அது உடனே செய்து முடிக்க வேண்டிய, மிகச்சரியான யோசனையாகவே அவர்கள் இருவருக்கும் பட்டது. பழத்தின் நீளத்தையும் கனத்தையும் பார்க்கும்போது முழுசாக விற்றால் பன்னிரண்டு வெள்ளியிலிருந்து பதினைந்து வெள்ளிவரை கிடைக்கும் என்று தோன்றியது. ஹாக் ச்சைகூட அதை வாங்கினாலும் வாங்குவான். கூறு போட்டு சைனா டவுனில் விற்றால் இருபதோ இருபத்திரண்டோ கிடைக்க வாய்ப்புண்டு. போர் முடிந்து பொருளாதாரம் இன்னும் தலைதூக்காத நிலையில் வாரத்தின் ஏழு நாளும் லாரி ஓட்டிச் சரக்குகளை ஏற்றியும், இறக்கியும் மாதம் எழுபத்தைந்து வெள்ளிக்கு மாரடிக்கும் பசி மிகுந்த இளையர்களுக்கு இது பெரிய காசு.

பணத்தை எடுத்துக் கொண்டு காலாங்கில் இருக்கும் ஹேப்பி வர்ல்ட்டுக்குப் போனால் வயிறு முட்டச் சீனர்களின் பாணியில் சமைத்த கடலுணவுகளைச் சாப்பிட்டுவிட்டுப் ஆளுக்கு இரண்டு பாட்டில் பீரும் குடிக்கலாம். அங்கேயே காபரே நடனங்களும் இருக்கும். காபரேயில் சீனாக்காரிகள், தாய்லாந்துகாரிகள், பிலிப்பினோகாரிகள் என்று விதவிதமாய்ப் பெண்கள் இருப்பார்கள்.

ஒரு வெள்ளி கொடுத்து ஒரு கூப்பன் வாங்கினால் அவர்களைத் தழுவியபடி மூன்று பாடல்களுக்கு நடனமாடலாம். வாடகைக்கு வருவதால் அந்தப் பெண்களுக்கு ‘டாக்ஸி நாட்டியக்காரிகள்’ என்று பெயர் இருந்தது.

மிஞ்சூட் முதலாளியின் கடையில் வெள்ளிக்கிழமை சாயந்திரம் லாரிச்சாவியைத் திருப்பித் தருவதைப்போல் திருப்பித் தந்துவிட்டுத் தணிகாசலம் எதையாவது நீளமாகப் பேசி அவர் கவனத்தைத் திருப்பும் நேரத்தில் மேசை இழுப்பறையிலிருந்து ஆ டெங் மீண்டும் லாரிச்சாவியைத் திருப்பித் தருவது என்று முடிவானது.

லாரிகளுக்குச் சொந்தக்காரரான மிஞ்சூட் டச்சுத் தந்தைக்கும் ஜாவா தாய்க்கும் பிறந்த சட்டைக்காரர் வெள்ளிக்கிழமை மாலை கடையைப் பூட்டிவிட்டுச் செலேத்தாரிலிருக்கும் அவருடைய பங்களாவுக்குப் போனார் என்றால் திங்கட்கிழமைதான் மீண்டும் நகரத்துக்குள் வருவார். திங்கள்கிழமை காலை கடை திறக்கும்போது அந்த வாரத்துக்கான வேலைகளைச் சரிபார்க்கும் மும்முரத்தில் மிஞ்சூட்டை மீண்டும் திசை திருப்பிச் சாவியை இழுப்பறைக்குள் வைத்துவிடுவது சுலபம்.

யாரும் சாப்பிடாமல் பறவைகளுக்கும், குரங்குகளுக்கும் இரையாகப் போகும் பழத்தைத் திருடுவதில் தவறே இல்லை என்று அவர்கள் ஒருவருக்கு ஒருவர் சொல்லிக் கொண்டார்கள். அதற்கும் மேலாக ஆ டெங் வேறொரு காரணத்தையும் சொன்னான்.

“ஆ லிம் மாதிரியான கைக்காட்டித் தேவடியா மகனுங்க கொடுத்த தகவலை வச்சுத்தான் என் அப்பா, அண்ணன்கள், மாமான்னு எல்லாரையும் ஜப்பான்காரனுங்க நாற்பத்திரண்டுல சாங்கிக் கடற்கரைக்குக் கொண்டு போய் இயந்திரத் துப்பாக்கியை வச்சுக் கொத்துக் கொத்தா சுட்டுக் கொன்னானுங்க. அப்படிச் செத்து விழுந்த பல பேரோட பொணத்தையும் அப்படியே கடலுக்குள்ள தள்ளி விட்டுட்டானுங்க. சம்பவம் முடிஞ்சு ரொம்ப நாளைக்கப்புறமும் அந்தக் கடல்ல பிடிக்குற மீன்கள்ல மனுஷ விரலும் எலும்பும் இருக்குறத பார்த்து என் தோட்டத்துல வாழுற பல பேரு கடல் உணவைச் சாப்புடுறதையே விட்டுட்டாங்க. ஆ லிம் மாதிரி துரோகிங்க கிட்டயிருந்து திருடுறதுல தப்பே இல்ல.” 

தங்கள் திட்டத்தில் ஆ டெங்கும் தணிகாசலமும் பங்குனியையும் சேர்த்துக் கொண்டார்கள். அவனும் அவர்கள் இருவரையும் போலவே சிங்கப்பூரின் கிழக்குக் கடற்கரை கிராமம் ஒன்றில் பிறந்து வளர்ந்தவன்தான். ஆனால் போர் தொடங்குவதற்கு ஒரு வருடத்துக்கு முன்பே சாங்கியிலுள்ள பிரிட்டிஷ் கடற்படை முகாமில் ஸ்டோர் கீப்பராக வேலை பார்த்துவந்த அவனுடைய தந்தை பங்குனியைப் படிக்க இந்தியாவுக்கு அனுப்பி விட்டார். போரின் வலியைப் பற்றியும் வன்முறையைப் பற்றியும் ஓர் எழவும் தெரியாதவனாய் பங்குனி படிப்பு முடிந்து சிங்கப்பூர் திரும்பியபோது அவனுக்கு சூலியா தெருவிலிருந்த ஏதோ ஒரு ஆங்கிலேய வர்த்தக நிறுவனத்தில் மாதம் இருநூறு வெள்ளிச் சம்பளத்தில் கிராணியாக வேலை கிடைத்தது. அந்த நிறுவனத்தில் ஆ டெங்கும், தணிகாசலமும் சரக்கு இறக்க அடிக்கடிப் போவார்கள். அப்போது ஏற்பட்ட பழக்கம்.

பங்குனிக்குப் படித்த திமிரும், வாயும் கொஞ்சம் ஜாஸ்திதான் என்றாலும் பலாப்பழம் திருடித் திரும்பும் நேரத்தில் பிடிபட்டால் பங்குனியின் படிப்பும் பணமும் காப்பாற்றும் என்ற நம்பிக்கையில் அவனையும் சேர்த்துக் கொண்டார்கள்.

***

பொதுவாக மரத்திலிருந்து பலாப்பழங்களைப் பறிப்பதற்குச் சில நாட்களுக்கு முன்னமேயே அதிலிருக்கும் பிசுபிசுப்பான பால் வடிவதற்காக கத்தியால் அதன் தோல் மீது மூன்று கீறல்களைப் போட்டு வைத்துவிடுவார்கள். ஆனால் மைனாக்கள் பழத்தை ஏற்கனவே கொத்தியிருந்ததால் அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை என்று ஆ டெங் சொல்லியிருந்தான். அவர்கள் மூவரும் பலா மரத்தின் அடியில் நின்றிருந்தார்கள். பழம் தொங்கிக்கொண்டிருந்த கிளை கொஞ்சம் உயரத்தில் இருந்ததால் ஆ டெங் தணிகாசலத்தின் தோளில் ஏறி அமர்ந்து கொண்டு பழத்தைப் பறிக்கலாம் என்று பேசி வைத்திருந்தார்கள்.

ஆனால் தணிகாசலம் தரையில் கை விரல்கள் பதிய முன்னால் குனிந்தபோது ஆ டெங்கிற்குப் பதிலாக பங்குனி தாவி ஏறிக் கொண்டான்.

ஆ டெங்கும் தணிகாசலமும் மெல்லிய குரலில் அவனைத் தடுத்துப் பார்த்தார்கள்.

“உனக்கு ஏன் இந்த வேலை, பங்குனி? விடு, ஆ டெங் ஏறட்டும்.”

“எனக்கு எல்லாம் தெரியும். முதல்ல அந்தக் கத்திய என்கிட்ட கொடுக்கச் சொல்லு. நாட்டுல ஞான் பார்க்காத பழமர, ஞான் பறிக்காத பழமா? நாட்டுல இதுக்கு என்ன பேரு தெரியுமா? சக்க, சக்க… நீங்களே பழத்தையும் பறிச்சு, அதை வித்துட்டா எனக்குச் சேர வேண்டிய சரி பங்கைக் கொடுக்காம நீங்களே எடுத்துக்கலாம்னு பார்க்குறிங்களா?”

பங்குனி தணிகாசலத்தின் கழுத்தைச் சுற்றித் தொடைகளை இறுக்கமாக வைத்து அமர்ந்திருந்தான். அவன் கைவிரல்கள் தணிகாசலத்தின் தலைமயிரைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருந்தன.

பங்குனியின் குரல் மெல்லிய ஓலமாக இரவின் நிசப்தத்தில் எழுவதைக் கவனித்த ஆ டெங் கவலையுடன் சுற்றும் முற்றும் பார்த்தான். பின்னர் ஒரு முடிவுக்கு வந்தவனாகத் தனது கையிலிருந்த கத்தியைப் பங்குனியிடம் கொடுத்தான்.

“சரி, நீயே ஏறு.”

பழுக்காத பலாப்பழத்தை விரல்களால் தட்டினால் அதற்குள் துணி வைத்து அடைத்திருப்பதுபோல் ‘சொத் சொத்’ என்ற ஒலியெழும்பும். தணிகாசலத்தின் தோளில் அமர்ந்திருந்த பங்குனி பழத்தை எட்டியபோது அதை விரல்களால் தட்டக் கணீர் என்ற மணிநாதமாய் ஓசை எழுந்தது.

“பழம் நல்லா பழுத்திருக்கு” என்று தணிகாசலத்தின் அருகில் நின்றிருந்த ஆ டெங் அடிக்குரலில் சொன்னான். அவனிடமிருந்த பேரார்வம் அவன் உடம்பிலிருந்து எழுந்த மெல்லிய வியர்வை நாற்றமாய் வீசிக் கொண்டிருந்தது.

பங்குனி மார்பின்மீது பழத்தைச் சாய்த்தபடி கத்தியைக் கொண்டு அதன் காம்பைச் சரசரவென்று அறுப்பது இருவருக்கும் தெரிந்தது. பழம் கிளையிலிருந்து விடுபட்டதும் பங்குனி அதைக் கைக்குழந்தைபோல் மார்போடு ஏந்திப் பின்னர் அதை மூக்கிற்கு அருகே கொண்டு சென்று அதன் வாசனையை ஆழ முகர்ந்தான்.

தணிகாசலம் பங்குனியின் உடல் எடை தாங்காமல் கால் மாற்றி நின்றான்.

“ரசிச்சது போதும். சீக்கிரம் இறங்கிவாடா பன்னி” என்று தனக்குத்தானே தணிகாசலம் சொல்லிக் கொண்டான்.

பழத்தைப் பறித்த பிறகு அதைக் கீழே இருக்கும் ஆ டெங்கிடம் கொடுத்துவிட்டுப் பங்குனி இறங்கிக்கொள்ள வேண்டும் என்பதுதான் திட்டம். ஆனால் பழத்தை அணைத்தபடி அமர்ந்திருந்த பங்குனி சிறிது நேரமாய் எந்தவித அசைவுமில்லாமல் கையிலிருந்த பழத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். பின்பு என்ன நினைத்தானோ ‘எண்ட பகவதி’ என்று குரல் கொடுத்தவன் கைகளைப் பலமாக உதறிக் கொண்டு அசாதாரணமான சிலிர்ப்போடு பழத்தை வெகு தூரத்தில் வீசி எறிந்தான். பழம் தரையில் மோதும் ஓசை பெருஞ்சத்தமாக இரவின் அமைதியில் பிளந்து வந்தது. தணிகாசலத்தின் தோளிலிருந்து பங்குனி குதித்து இறங்க முயன்றதில் தணிகாசலம் நிலை தடுமாறி ஆ டெங் இருந்த திசையில் சாய மூவரும் தரையில் விழுந்தார்கள்.

கீழே விழுந்த பங்குனி கைகளை உடம்பில் படாதவாறு உயர்த்திப் பிடித்தபடியே ‘ரத்தம், கையெல்லாம் ரத்தம்’ என்று கத்திக்கொண்டு பித்துப் பிடித்தவனைப்போல் எழுந்து ஓடினான்.

சத்தம் கேட்டுச் சுற்று வட்டாரத்தில் இருந்த நாய்கள் அனைத்தும் மீண்டும் பெருங்குரலெடுத்துக் குரைக்க ஆரம்பித்தன.

“ரத்தம் இல்லடா. அது பலா மரத்தோட பாலுதாண்டா. காம்பை அறுக்கும்போது பால் வடியும்டா” என்று சொல்லிக்கொண்டே ஆ டெங்கும் தணிகாசலமும் பங்குனிக்குப் பின்னால் ஓடினார்கள். எப்படியோ வேலியை மீண்டும் தாண்டி தூரத்தில் நிறுத்தி வைத்திருந்த லாரியை வந்து சேர்ந்த போதுதான் பழத்தை மரத்திற்கு அருகிலேயே விட்டுவிட்டு வந்திருப்பது அவர்கள் இருவருக்கும் உறைத்தது.

ஆனால் அதற்குள் நாய்களின் ஓயாத குரைப்பு இருட்டில் மூழ்கிக்கிடந்த பழத்தோட்டத்தின் எல்லாத் திசைகளிலும் எதிரொலிக்க ஆரம்பித்திருந்தது. தோட்டமே ஆத்திரம் நிறைந்த கறுப்பு நாயாய் மாறி அவர்களைப் பார்த்துக் குரைப்பதாக அவர்களுக்குத் தோன்றியது. எங்கிருந்தோ எழுந்த வெப்பக்காற்றின் சுழற்சியில் சளசளக்க ஆரம்பித்திருந்த பழ மரங்களின் இலைகள் பௌர்ணமி நிலவின் வெளிச்சத்தில் மூடித் திறக்கும் கண்களாக மாறி அவர்களைப் பார்த்து முறைத்தன.

பங்குனி வரவே இல்லை. கொஞ்ச நேரம் காத்திருந்துவிட்டு ஆ டெங்கும், தணிகாசலமும் லாரியைக் கிளப்பி அந்த இடத்தைவிட்டு அகன்றார்கள்.

***

     இது நடந்து சில நாள்களுக்குப் பிறகுதான் பங்குனி அவர்கள் கண்ணில் அகப்பட்டான். சந்தையில் காய்கறிகளை இறக்கிவிட்டுத் தணிகாசலமும் ஆ டெங்கும் அமோய் தெருவின் முக்கில் இருந்த சீனன் கோப்பிக் கடையில் வறுத்த ரொட்டியும் முட்டையும் தின்று கொண்டிருந்தார்கள். தூரத்தில் பங்குனி நடந்து வருவது தெரிந்தது. தலை மயிர் கலைந்திருந்தது. கண்களுக்கடியில் ஆழமான கறுப்பு வளையங்கள் தோன்றி கண்கள் சிவப்பேறிப் பழுத்திருந்தன. கன்னம் ஒடுங்கியிருந்தது. வெள்ளை நிறச்சட்டை அழுக்கேறி அதன்மீது செம்மண் தீற்றல்களும் கறுப்புக் கோடுகளும் ஏற்பட்டிருந்தன.

பங்குனி தன் இரண்டு கைகளையும் தனது உடலுக்கு முன்னால் வெகுதூரத்தில் வைத்து விநோதமான முறையில் நடந்து போய்க்கொண்டிருந்தான். அவன் அலுவலகத்துக்குப் போனதாகத் தெரியவில்லை. தணிகாசலம் அவனை உரத்த குரலில் கூப்பிட அவர்கள் அமர்ந்திருந்த இடத்துக்கு மந்திரத்தில் கட்டுண்டவன்போல் பங்குனி நடந்து வந்தான். அவன் கண்கள் ஜீவக்களையற்று வெறும் தட்டைகளாக இருந்தன. அவன் மீதிருந்து பலமான துர்நாற்றம் வீசியது.

“என்ன பங்குனி. மூனு நாளா உன்னைத் தேடிகிட்டு இருக்கோம். உன்னைத்தேடி உன் கிராமத்துக்குக் கூடப் போய்ப் பார்த்தோம். நீ வீட்டுக்கே வரலையாமே. என்ன ஆச்சு. உடம்புக்கு ஏதாவது கோளாறா?”

எதிரில் வந்து அமர்ந்தவனைத் தணிகாசலம் கேட்டான். ஆ டெங் எதுவும் சொல்லாமல் சீக்கிரம் ஆறுவதற்காகக் கோப்பையிலிருந்து பீங்கான் தட்டில் கவிழ்த்து ஊற்றியிருந்த சூடான காபியை உறிஞ்சிக் குடித்தபடியே பங்குனியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

“பழத்துலர்ந்து ஊறுன ரத்தத்தைக் கழுவ முடியலடா. எவ்வளவுதான் தேச்சுக் கழுவுனாலும் ரத்தத்தோட பிசுபிசுப்பும், கவுச்சி நாத்தமும் போகாம இருக்கு. எல்லா எடத்துலயும் முயற்சி பண்ணிப் பார்த்துட்டேன். இந்தப் பக்கமா போனா ஆத்துல இறங்கி கழுவலாம்னு தோனுச்சு.”

கிழக்குத் திசையில் சிங்கப்பூர் ஆறு இருந்த பக்கமாய்ப் பங்குனி விரலை நீட்டிக் காட்டினான்.

“ப்ச்சு. அதெல்லாம் சும்மாடா. பலா மரத்துல காய் பறிக்குறப்ப இப்படி பிசுபிசுப்பா பால் வடியும். அதைப் பார்த்து என்னமோ ஏதோனு பயந்திருக்க. இங்க டேங் ரோடு தண்டாயுதபாணி கோவிலுக்குப் பக்கத்துல மந்திரிக்குறவரு ஒருத்தரு இருக்காரு. நம்மாளுதான். அவருகிட்டப் போயி விபூதி வாங்குனா எல்லாம் சரியாகிடும்.”

பங்குனி எந்தவிதமான பதிலும் சொல்லாமல் அமர்ந்திருந்தான். அவன் கண்களில் தெரிந்த வெறுமை தணிகாசலத்தை உலுக்கியது.

“தூங்கலையா?” என்று பங்குனியைத் தணிகாசலம் கேட்டான்.

“எங்கத் தூங்குறது? கண்ணை மூடுனாத்தான் அந்தப் பொண்ணு வந்து நிக்குறாளே.”

“பொண்ணா? யாரு?”

பங்குனி உதடுகளைப் பிதுக்கிக் கைகளை விரித்தும் ஆட்டியும் சைகை செய்தான்.

“யாருக்குத் தெரியும்? யாரோ சீனாக்காரி. இருபது வயசோ இருபத்தியொண்ணோதான் இருக்கும். ஆனா ஜப்பான்காரன் உடுப்புப் போட்டிருக்கா. ஜப்பான் பொம்பளைங்க மாதிரியே தலைய வாரிக் கொண்டை போட்டிருக்கா. அந்த ஊர்ப் பொம்பளைங்க மாதிரியே மூஞ்சியெல்லாம் பவுடர் அப்பியிருக்கா. கண் அசரும்போது மண்டைக்குள்ள தோணி ‘என் கதைய எளுது, என் கதைய எளுது’னு ஓயாமச் சிரிக்குறா. ஏந்திரிச்சு எழுத ஆரம்பிச்சா பைப்ப தொறந்த மாதிரி கதை கதையா வந்துகிட்டே இருக்கு. இந்த மூனு நாளாப் பக்கம் பக்கமா எளுதிகிட்டே இருக்கேன். ஒரு துளி தூக்கமில்ல. இதோ பாரு.”

பங்குனி தனது கால்சட்டைப் பைக்குள்ளிருந்து மடித்து வைக்கப்பட்டிருந்த தாள்களை எடுத்துக் கோப்பிக்கடை மேசை மீது போட்டான். தணிகாசலம் காகிதங்களை எடுத்துப் பிரித்துப் பார்த்தான். உள்ளே நுணுக்கி நுணுக்கிப் பச்சை மையில் பங்குனியின் கிறுக்கலான கையெழுத்து. சின்னச்சின்னச் சம்பவங்கள், ஒரு பெண் எழுதியதைப் போன்ற காதல் கவிதைகள், சின்னச்சின்னப் பூக்களைத் தொடுத்ததுபோல் சுய விளக்கங்கள். எல்லாவற்றிலும் தன்னையே வெளிப்படுத்திக் கொள்ளத் துடிக்கும் ஆழமான விம்மலோசை.

“சரி, இப்படியே எத்தனை நாள்தான் இருக்கப் போற?” என்று கேட்டான் தணிகாசலம்.

“தெரியல. என் கையில இருக்குற ரத்தக்கறை போகுற வரைக்கும் நான் இப்படி எழுதிகிட்டுத்தான் இருக்கணும்னு தோணுது. அதனாலதான் இந்த ரத்தத்தை எப்படியாவது கழுவிட முடியாதானு ஒவ்வொரு எடமா அலைஞ்சுகிட்டு இருக்கேன்.”

“போடா முட்டாள். அது ரத்தமே இல்லைனுதான நான் படிச்சுப் படிச்சுச் சொல்லிகிட்டு இருக்கேன்.”

ஆனால் தணிகாசலம் சொன்னதைப் பங்குனி கேட்டதாகத் தெரியவில்லை. அவன் எழுந்து கைகளைத் தன் உடம்புக்கு முன்னால் பிடித்தபடியே விநோதமான ஜந்துவைப் போல் உடம்பைச் சற்றே முன் தள்ளியபடி நடக்க ஆரம்பித்திருந்தான். என்ன நினைத்தானோ மீண்டும் ஆ டெங்கும் தணிகாசலமும் அமர்ந்திருந்த மேசைக்கும் மீண்டும் வந்து நின்று கொண்டான்.

“அவளோட கதைகள்லயும் கவிதைகள்லயும் தான் அவளோட சதையும் ரத்தமும் கலந்திருக்குறதா அவ சொல்லிச்சொல்லிச் சிரிக்குறாடா. வன்முறையில செத்துப்போன ஒருத்தரோட கதைகளைத் தொட்டவன் அதை மறுபடிக் கதையாவோ, பாட்டாவோ இறக்கி வைக்குற வரைக்கும் ரத்தக்கறை போகவே போகாதுன்னு என் திருவனந்தபுர சரித்திர வாத்தியார் ஒருநாள் பாடம் நடத்துறப்போ எதுக்காகவோ சொன்னாரு. என் கையில இருக்குற கறை போற வரைக்கும் நானும் இப்படியே அலைஞ்சுகிட்டே இருக்க வேண்டியது தான் இல்ல?”

அமோய் தெருவில் சிதறிக்கிடந்த வெயிலின் பிரகாசத்தில் தலையை உயரத்தூக்கி ஊளையிடுவதைப் போலவும் காற்றில் மிதந்து கொண்டிருக்கும் அரூபமான நதியிலிருந்து குளிர்ந்த தண்ணீரை உறிஞ்சி உறிஞ்சிக் குடிப்பது போலவும் பங்குனி பெருங்குரலெடுத்துச் சிரித்தான். ஆனால் அப்படிச் சிரித்தபோது அவன் முகத்தில் மலர்ச்சி ஏற்படவில்லை. மாறாக அந்தச் சிரிப்புச் சத்தம் அகாலமாய் நிகழ்ந்த பல்லாயிரக்கணக்கான கொடூர மரணங்களுக்காக எழுப்பப்பட்ட பெரும் ஓலமாகத்தான் தணிகாசலத்தின் காதுகளில் கேட்டது.

மீண்டும் இருமுறை அப்படிச் சிரித்துவிட்டு கைகளை உடம்புக்கு முன்னால் நீட்டியபடி சிங்கப்பூர் ஆறு இருந்த திசையில் பங்குனி ஓடினான். முன்னால் வருபவர்கள் யாரையும் சட்டை செய்யாமல் ஓடிக்கொண்டிருந்தவனின் பாதையிலிருந்து விலகியவர்கள் அவனைப் ‘பைத்தியம்’ என்று சொல்லிச் சபித்தார்கள்.

தணிகாசலம் பீங்கான் தட்டில் ஆறிப்போயிருந்த காபியின் மிச்சத்தைப் பார்த்துக் கொண்டிருந்த ஆ டெங்கைப் பார்த்தான்.

“நாம ஹூங் பத்திப் பங்குனிகிட்ட எதையும் சொல்லல, இல்ல?”

ஆ டெங் சிந்தனையில் மூழ்கியிருந்தான். தணிகாசலத்தின் கேள்விக்கு லேசான தலையசைப்பை மட்டுமே பதிலாய்த் தந்தான்.

“பின்ன இது எப்படி?” என்று கேட்டான் தணிகாசலம்.

ஆ டெங் எதுவும் சொல்லவில்லை. தட்டில் ஆறிப்போயிருந்த காபியை உறிஞ்சிக் குடித்தான். காபியைக் குடித்து முடித்தவன் தணிகாசலத்தைத் தீர்க்கமாய் ஏறிட்டுப் பார்த்தான். அவன் கண்களில் நீர் தளும்பியிருந்தது.

“மூன்றரை வருஷக் கதை, தண்ணி. இந்த மூன்றரை வருஷத்துல எத்தனை பேரு ஏன்னு கேட்குறதுக்குக்கூட நாதியில்லாம சாட்சியே இல்லாமச் செத்துப் போயிருப்பாங்க? செத்துப்போன அத்தனை பேருக்கும் அவங்களோட கதைகளைச் சொல்லணும்னு ஆசையிருக்குமா, இருக்காதா? ஆனா, நாம இப்படிச் செத்தவங்களோட கதையில ஒரு கதையையாவது உருப்படியா எழுதி வச்சோமா? சண்டை முடிஞ்சு பத்து வருஷம்கூட ஆகல, நல்லா தின்னுட்டு, உடுத்திகிட்டுச் சுத்திகிட்டு இருக்கோம். ஆனா அதுக்குமேல அநியாயமா சிந்துன ரத்தத்தை மண்ணு மாத்திரம் எப்பவும் மறக்காதாம், தண்ணி. எப்படியாவது அநியாயமாச் செத்துப் போனவங்களோட கதையை அது வெளிப்படுத்தியே தீருமாம். அப்படி அநியாயமாச் செத்துப்போன ஒருத்தியோட கதையத்தான் அந்தத் தோட்டத்தில் வேதனை தாங்காம திரண்டு நின்னு சொல்லிருக்கு, பலா மரமா?”

ஆ டெங்கின் முகத்தில் சொல்லுக்குள் அடங்காத கசப்பு ஒட்டியிருந்தது. சட்டையில் ஒட்டியிருந்த வறுத்த ரொட்டித் துண்டுகளை கைகளால் தட்டிவிட்டபடி அவன் மேசையிலிருந்து எழுந்து போனான்.

ஆ டெங் போவதைத் தணிகாசலம் பார்த்துக் கொண்டிருந்தான். எங்கிருந்தோ இருந்து எழுந்த காற்றில் கோப்பிக்கடை மேசை மீது பங்குனி விட்டுவிட்டுப் போன காகிதங்கள் சிறிய வெள்ளைப் பூக்களாய்ச் சுழன்று அமோய் தெரு முழுவதும் இறைந்து கிடந்தன.

***

-சித்துராஜ் பொன்ராஜ் இவர் சிங்கப்பூரில் வசிக்கிறார். மொழிபெயர்ப்பு பணிகளுடன், படைப்புகள் (கதை, கவிதை, நாவல்), விமர்சனங்கள், இலக்கிய உரைகள் என பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறார். தமிழ், ஆங்கிலம், ஸ்பானிஷ் ஆகிய மொழிகளில் இவரது படைப்புகள் வெளிவந்துள்ளன.

RELATED ARTICLES

1 COMMENT

  1. நம் நாட்டுப்புறத்தில் புழங்கும் ஒரு சொல்லாடலை சிங்கப்பூர் மண்ணில் குழைத்து அருமையான கதையாக வனைந்திருக்கிறார் சித்துராஜ். இது சிங்ப்பூரின் ஜொலிப்புக்குள் உறைந்துசொல்லப்படாத வ லியையயும் சொல்லுகிறது வாழ்த்துகள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular