Sunday, October 1, 2023
Homeபொதுப்ச்...!

ப்ச்…!

12

 

 

 

 

 

 

 

 

 

 

“அவளுக்கு முன்னெத்தியில, சைடுல கொஞ்சம் முடி விழும். அதப் புடிச்சி விரலுக்குள்ள சுத்திக்கிட்டே இருப்பா!!”.

யாருமில்ல.. நான் மட்டும் தான் பக்கத்துல இருக்கேன்னா, கம்மல் போடுற இடமிருக்குல காதுல, அத மெதுவா வருடிட்டே இருப்பா.

சும்மா இரும்மான்னு சொல்லிட்டா, உடனே மூஞ்சத் தூக்கி வச்சிட்டு கீழக் குனிஞ்சி கண்ண மூடிக்குவா.

இடது கையக் கோத்துக்கிட்டு நடக்கறது தான் அவளுக்கு ரொம்பப் பிடிக்கும்.

ராத்திரினா கைய முன்னாடியும் பின்னாடியும் வீசி நடக்கனும்.

பகல்ல வலது கை விரல, என் விரலுக்குள்ள கோத்துக்கிட்டு…
இடது கையால மொழங்கை பக்கமா இறுக்கிப் புடிச்சிப்பா.

“சில நேரம் என் வேகத்துக்கு நடப்பா, சில நேரம் மெதுவா நடப்பா.
அவளுக்கு சிரிக்க மட்டும் தான் தெரியும்.”

“சந்தைக்குப் போயிட்டு திரும்பும்போது, அவ கைல எப்பையும் ஒரு முட்டைகோஸ் இருக்கும் / இருக்கணும்.  ஒவ்வொரு லேயரா எடுத்து எடுத்து சாப்டுட்டே இருப்பா. அப்ப மட்டும் கையப் புடிச்சி நடக்கிறத விடுவா.
ஆட்டுக்குட்டி எதும் பின்னாடி வந்துச்சினா, அதுக்கு ஒரு லேயர் குடுத்துட்டு அதுக்கு ஒரு பேரும் வச்சிட்டு வருவா”.

ஆடு கழுத்துல மணி கிடந்து, அது தலையாட்டும் போது வரச் சத்தம் ரொம்பப் புடிக்கும்.

‘ குல்பி ஐஸ் வண்டிக்காரன் நிப்பான்ல…அது வரைக்கும் நடந்துட்டு வருவுமா? ‘ னு கொஞ்சினா..“முரண்டுப் புடிச்சு, அப்றம் தலைய மட்டும் அசைப்பா.”

ஐஸ்-ல பறக்கும் ஆவியை சைக்கிள்ல கட்டியிருக்கும் சின்ன டியூப் வெளிச்சத்துல அவளுக்குப் பாக்க பிடிக்கும்.

அந்த நேரம் பாத்து எப் எம்ல, அவ மனசுல பதிஞ்ச பாட்டு எதும் ஓடினா, அது முடியிற வரைக்கும் அங்கயே நிக்கச் சொல்லிட்டு குல்பி ஐஸ்காரனையும் போகவிடமாட்டா.

அதுக்கு அப்றம் அவனுக்கு பத்தோ இருவதோ குடுக்கணும்.

ஒருவாட்டி..

‘எனக்கு ஒன்ன மாதிரி இப்டி இப்டி கட்ட முடில, நீள ஸ்கர்ட் வாங்கிக்குடு’ னா..

வாங்கிக் குடுத்தா, படிக்கட்டுல நடக்க முடியாம கால் தெத்திக்கும்.
படியப் பாத்துக்கிட்டு அங்கயே நிப்பா.

அதுக்குள்ள நகம் புல்லா சுண்ணாம்பு ஆயிடும். எதையாவது நகத்தால சுவத்துல எழுத ட்ரை பண்ணுவா.
ஆனா, பேனா குடுத்தா புடிக்கக்கூட வராது அவளுக்கு.

அப்றம் ஸ்கர்ட்ட மடிச்சிக் கட்டிவிட்டா, நொண்டி விளையாடுற மாதிரி ஒவ்வொரு காலா தூக்கி வச்சி வீடு வந்து சேருவா.

அவளும் அவ அம்மாவும் மாடில நொண்டியடிச்சி, ஓடிப் புடிச்சி எப்பயோ விளையாடுனது. அது மட்டுந்தேன் அவளுக்குள்ள ஞாவம் இருக்கு.

”எப்பவுமே, படில நடக்கும்போது அப்டிதான் எதயோ சொல்லிக்கிட்டே இருப்பா.!!”

மொட்டமாடில போயி துணிக் காயப் போடுறதுனா அவ்ளோ இஷ்டம்.
சட்டைய மூஞ்சிக்கு முன்னாடிதான் உதறணும்னு அடம் பிடிப்பா. அந்தச் சாரல் முகத்துல பட்டா குதிச்சிக்கிட்டே கைத் தட்டுவா.

‘இங்க பாரு உன் முடியும் பறக்குது’ -னு… என் தலமுடி புல்லா க்ளிப் மாட்டி விட்டுடுவா.

இப்பல்லாம் என்ன அப்பானு கூப்டுறதே இல்ல.
நீ,வா,போ…. தான்!

வானம், மரம்,
மேகம், கிளை,
நிலா, பழம்,
அணில் கொறிக்கிறது.

அம்மாவாசை அன்னைக்கு மட்டும், இப்டி எதாவது கதை சொன்னாத்தான் சாப்ட வைக்கவே முடியும்.

கூடப் படிச்ச எட்டாங்கிளாஸ் புள்ளைங்கள ரோட்ல பாத்தா மட்டும்..
அந்தப் புள்ளைங்களப் பாத்துட்டு அப்டியே கொஞ்ச நேரம் நின்னுட்டு..

”அம்மா எங்க..?” -னு கேட்டு.. அழ ஆரம்பிச்சிடுவா.

ரெண்டு வருசம் மூச்சப் புடிச்சிட்டு இருந்தாலும்…
அம்மா எங்கன்னு கேக்குறது.. மூச்சப் புடிச்சி நிறுத்துறது மாதிரியே இருக்கும்.

இதுக்காகவே போன மாசம் வீடு மாறுனேன்.

புது எடம் எல்லாம் பாத்துட்டு என்னத்தையோ பறிக்கொடுத்த மாதிரியே இருக்றது உயிர் போற அளவுக்கு வலிச்சாலும்..

அம்மா எங்கனு கேக்காம இருக்காளேனு கொஞ்சம் ஆறுதலா இருந்தேன்.

ஆனா –

மொத தடவையா கொஞ்சம் சுய நெனவோட பேசினா…

‘ போ.. உனக்கு அம்மா மாதிரி சரியாவே வச்சிவிட தெரில, தொடையெல்லாம் வடியுது..’

ப்ச்…!

 

– ரமேஷ் ரக்‌ஷன்

 

 

RELATED ARTICLES

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular