Wednesday, October 9, 2024
Homesliderநேர்காணல் – அ.முத்துலிங்கம்

நேர்காணல் – அ.முத்துலிங்கம்

-

போர் எங்களிடம் நிரந்தரமான காயத்தை உண்டுபண்ணி விட்டது – அ. முத்துலிங்கம்
கேள்விகள் – அகர முதல்வன்

அ.முத்துலிங்கம் ஈழ எழுத்தாளர்களில் மிகவும் தனித்துவமானவர்.கனடாவில் புலம்பெயர்ந்து வாழ்கிறார். தமிழ் இலக்கியவுலகில் அவருடைய எழுத்துக்களுக்கு இருக்கும் வாசகப்பரப்பு பெரிது. வினோதமான விவரிப்புக்களும்,நுண்மையான உவமைகளும் கொண்டது அவரின் சிறுகதைகள். “அக்கா” என்ற தனது முதல் கதைத்தொகுதியின் மூலமே வெகுவான கவனத்தை ஈர்த்தவர்.ஆனந்த விகடன் இதழில் “கடவுள் தொடங்கிய இடம்” என்ற நாவலை தொடர்கதையாக எழுதி பெரும் வாசக விவாதங்களையும் உரையாடல்களையும் உண்டுபண்ணியவர்.இவருடைய புகழ்பெற்ற கதைகள் ஏராளம்.

உங்கள் சிறுகதைகளின் வாசகன் நான். பெரும்பாலான உங்கள் கதைகளை வாசித்துமிருக்கிறேன். உங்கள் முதல் தொகுப்பான “அக்கா” சிறுகதைத் தொகுப்பிற்கு கைலாசபதி அவர்கள் எழுதிய அணிந்துரையில் “முத்துலிங்கத்தின் கதைகளிலே பாத்திரங்களின் புறத்தோற்றத்தை விட அக உணர்வே கூர்மை தீட்டப்பட்டுள்ளது” என்கிறார். இன்று வரைக்கும் அதனையே தான் உங்கள் கதைகளில் தொடர்கிறீர்களா?

அறுபது வருடங்களுக்கு முன்னர் ஒருவர் சொன்ன வாசகத்தின் பிரகாரமா நான் இன்றைக்கும் எழுதிக் கொண்டிருக்கிறேன். வளர்ச்சி இல்லையா? சுயசிந்தனை இல்லையா? எத்தனையோ ஆறுகள் வற்றி விட்டன. புது ஆறுகள் உண்டாகி விட்டன.

எந்தப் புனைவிலும் புறத்தோற்றம் முக்கியம். அதேஅளவு உள் உணர்வும் அவசியம். எந்த இடத்தில் எந்த அளவு என்று தீர்மானிப்பது படைப்பாளியின் வேலை. அந்தந்த இடத்தில் அதை உட்கார வைப்பதுதான் எழுத்தாளரின் திறமை.  இதற்கெல்லாம் விதிகள் கிடையாது.

நான் அடிக்கடி காட்டும் உதாரணத்தை இங்கே குறிப்பிடலாம் என நினைக்கிறேன். இதைப்பற்றி ஏற்கனவே நான் பேசியும் எழுதியும் இருப்பதால் ஞாபகத்திலிருந்து இங்கே சொல்கிறேன். ரோல்ஸ்ரோய் எழுதிய The Prisoner of Caucasus என்ற சிறுகதையில் கதாநாயகனை எதிரிகள் பிடித்து நிலவறையில் அடைத்து விடுவார்கள். சுவரிலே ஒரு சின்ன ஓட்டை. அதன் வழியாக அவன் வெளியுலகை பார்க்கிறான். ஒரு டாட்டார் பெண் தொள தொளவென்று கண்ணைப் பறிக்கும் வண்ணநிற மேலாடை அணிந்து நடக்கிறாள். அவள் அணிந்த மேலுடைக்கு கீழே கால்சட்டையும், உள்ளே நீண்ட பூட்சும் அணிந்திருப்பது தெரிகிறது. தலையில் ஒரு மேல்கோட்டை விரித்து அதற்கு மேல் பெரிய உலோகத்தாலான பானையை சுமக்கிறாள். அதற்குள் தண்ணீர் இருக்கிறது. பக்கத்திலே மொட்டையடித்த மேல்சட்டை மட்டுமே அணிந்த சிறுவன் ஒருவன். அவன் கையைப் பிடித்தபடி நடக்கிறாள்.

ஓட்டையில் ஒரு கணமே கிடைக்கும் இந்தக்காட்சியில் இந்தளவு விவரங்கள் சாத்தியமா? பாவாடைக்குள் நீண்ட பூட்ஸ் இருப்பது கண்ணுக்கு படுமா? பானைக்குள் தண்ணீர் இருப்பது எப்படித் தெரியும்? இத்தனை நீண்ட வர்ணனை தேவையா? கதையின் பெறுமதியை இது கூட்டுகிறதா? ஒரு வரியில் சொல்ல வேண்டிய காட்சிக்கு இந்த நீண்ட வர்ணனை பொருந்துமா என்பதுதான் கேள்வி.

ஒரு சிறுமி நோய்வாய்ப்பட்டு படுக்கையில் படுத்தபடி கிடக்கிறாள். அவள் உடல் படுக்கையோடு ஒட்டிப்போய் இருக்கிறது. கண்கள் பஞ்சடைந்து போய் காணப்படுகின்றன. ஓர் அரைப்பக்கத்துக்கு அந்தச் சிறுமியின் நிலையை வர்ணிக்கலாம். ஜகதலப்ரதாபன் என்ற கதையில் நான் இப்படி ஒருவரி எழுதியிருப்பேன். ‘அந்தச் சிறுமியின் உடம்பில் எங்கே தொட்டாலும் அங்கே ஓர் எலும்பு இருக்கும்.’ இந்த ஒருவரியில் வாசகருக்கு நான் சொல்ல வந்தது புரிந்து போயிருக்கும். கவிதை போல சொற்சிக்கனம் சிறுகதைக்கும் முக்கியம். மகாத்மா காந்தியின் உருவத்தை மூன்று வாரமாக வரையும் ஓவியர்கள் இருக்கிறார்கள். ஆதிமூலம் போன்ற தலைசிறந்த ஓவியர் நாலுகோடுகளில் காந்தியின் உருவத்தை கொண்டு வந்து விடுகிறார். 

எளிமையான சொல்லாடல்கள், அங்கதமான விவரிப்புகள் என உங்கள் கதைகள் தனித்தன்மை மிக்கவை. உத்திகளில் பெரிய மாற்றமில்லை. ஆனால் உலகத்தின் பல்வேறு நிலங்களை தமிழ்மொழி உங்கள் கதைகளில் தான் காண்கிறது என்பேன். வாழ்க்கைக்கும் கலைக்குமான உங்களுடைய பந்தம் எவ்வாறு பொருத்தப்பட்டிருக்கிறது?

ஏ.கே.செட்டியாரின் பயணநூல்களைப் படித்திருப்பீர்கள். 70 வருடங்களுக்கு முன்னர் அவர் கனடாவுக்கு வந்திருந்தார். அந்த அனுபவங்களை இப்போது படிக்கும்போது மிகவும் சுவையாக இருக்கும். ஓர் இடத்தில் இப்படி எழுதுகிறார். கனடாவில் குளிர்காலத்தில் பனி உறைந்து கண்ணாடி போல ரோடுகள் பளபளப்பாக இருக்கும். வழுக்கிக்கொண்டே போவதால் கார் ஓட்ட முடியாது. கார் டயர்களுக்கு சங்கிலி உறையை மாட்டி ஓட்டுவார்கள். அப்படிச் செய்தால் கார் டயரின் ஆயுள் குறையும், ஆனால் மனிதரின் ஆயுள் கூடும். இப்படி நகைச்சுவையாகச் சொல்வார். இன்னொரு இடத்தில் அவர் ரயில் பயணத்துக்கு டிக்கட் வாங்குவார். டிக்கட்டையும் மீதிப்பணத்தையும் கொடுத்த ரயில் ஊழியர் எழுந்து நின்று மிக்க வந்தனம் என்கிறார். செட்டியார் இப்படி எழுதுகிறார். ரயில் டிக்கட் வாங்கியதற்காக எனக்கு ஒருவரும் வந்தனம் சொன்னது கிடையாது.

எனக்குத் தெரிந்த ஒருவர் வெளிநாட்டில் சிறை அதிகாரியாக வேலை பார்க்கிறார். அவருடைய அனுபவங்களைக் கேட்கக்கேட்க எனக்கு ஆச்சரியம் தாள முடியாமல் போகும். சிலசமயம் சிரிப்பேன். சிலசமயம் அவருடைய அனுபவங்கள் கண்ணிலே நீரை வரவழைக்கும். அவரிடம் நல்ல சொல்வளம் உண்டு. ஞாபகசக்தியும் பிரம்மிக்க வைக்கும். ஆனால் அவருக்கு தான் ஒரு புதையல் மேலே உட்கார்ந்திருப்பது தெரியாது. என்ன என்னவெல்லாமோ எழுதிக் கொண்டிருந்தார். உங்களுடைய சிறை அனுபவம் தான் உங்களுடைய பலம், மற்ற ஒருத்தருக்கும் கனவிலும் கிடைக்காதது உங்களுக்கு வாய்த்திருக்கிறது. அதுபற்றி எழுதுங்கள் என்றேன். அவர் இப்பொழுது தொடர்ந்து எழுதுகிறார். ஒரு தேர்ந்த எழுத்தாளரின் எழுத்து. விரைவில் அவருடைய சுயசரிதை நாவல் வெளிவந்து விடும்.

ஒரு படைப்பாளி தன்பலத்தை தெரிந்து வைத்துக்கொண்டு எழுத வேண்டும். ஆரம்பத்திலேயே நான் இந்த விடயத்தில் தெளிவாக இருந்தேன். பலநாடுகளுக்கு பயணம் செய்வதும், அங்கேயே வாழ்ந்து அனுபவங்களைத் திரட்டிக் கொள்வதுமான வாய்ப்பு இந்த உலகத்தில் எத்தனை பேருக்கு கிடைக்கிறது. இந்த அனுபவங்களை எழுத வேண்டும் என்ற தீர்மானம் இருந்தது. அது மாத்திரமல்ல ஆப்பிரிக்கா என்னை நல்ல பண்பாளராக மாற்றியது. என்னை உலகக்குடிமகனாக உணர வைத்தது அந்த நாடுதான். உலகம் முழுவதும் மனித உணர்வு ஒன்றுதான் என்பது புரிந்தது. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது சிறுவயதிலேயே படித்ததுதான். ஆனால் அதை நேரில் அனுபவித்தேன். இதுதான் என்னுடைய பலம். வேறு ஒருவருக்கும் கிடைக்காத ஒன்று எனக்கு கிடைத்திருக்கிறது. அப்படியே அந்தச்சூழலை வைத்து என்னால் எழுத முடிந்தது.

ஏற்கனவே வேறு இடத்தில் சொன்னதைத்தான் சொல்ல வேண்டும். ஒரு நல்ல சிறுகதை வாசிக்கவாசிக்க புதிய பொருள் கொடுக்க வேண்டும். மனதிலே வாழ்க்கை பற்றிய விசாரணையை அது எழுப்புகிறது. ஆவிபடிந்த கண்ணாடியை துடைப்பது போல மனம் துலக்கமடைய வேண்டும். அண்டன் செக்கோவ் எழுதிய கூஸ்பெர்ரி சிறுகதை இன்றும் பல அறிவுஜீவிகளின் கருத்தரங்குகளிலும் மேலாண்மை வல்லுநர்கள் மத்தியிலும் ஆழமாக விவாதிக்கப்படுகிறது. ஒவ்வொரு முறையும் அவர்களுக்கு புதிதாக ஒரு வாசல் திறக்கிறது.

எளிமையாக எழுத வேண்டும் என்பதும் ஆரம்பத்திலேயே தீர்மானித்தது தான். எழுத்தாளர் எழுதுவது வாசகருக்கு புரியாவிட்டால் எழுதுவதால் என்ன பயன். சார்ள்ஸ் டிக்கன்ஸ் என்ற ஆங்கில எழுத்தாளர் தான் எழுதிய வரிகளை வேலைக்காரிக்கு படித்துக் காட்டுவார். அவருக்கு புரியாவிட்டால் அந்த வசனங்களை வெட்டி விடுவாராம்.

உங்களுடைய அரிதிலும் அரிதான  கதைகளில் நேரடியாக தமிழர்களின் போராட்ட அரசியல் பாத்திரங்கள் இடம்பெற்றிருக்கின்றன. உதாரணமாக “பொற்கொடியும் பார்ப்பாள்” கதையை கூறலாம். ஆனால் அந்தக் கதைகள் உங்களுடைய ஏனைய கதைகள் தருகிற வாசிப்பு நிறைவைத் தருவதில்லையே ஏன்?

அப்படியா? எனக்கு மனநிறைவு தராத ஒன்றையும் நான் எழுதியது கிடையாது. ஏனென்றால் நான் பணத்துக்காக எழுதும் முழுநேர எழுத்தாளன் கிடையாது. ஒருகதை எழுத வேண்டும் என்ற நிர்ப்பந்தம் எனக்கு கிடையாது. என்னுடைய மகிழ்ச்சிக்காக, படைக்கும் போது கிடைக்கும் அபூர்வமான நிறைவுக்காக நான் எழுத வந்தவன். பெரிய பெரிய படைப்பாளிகள் கூட பணத்துக்காக எழுதும்போது சறுக்கியிருக்கிறார்கள். நோபல் பரிசு பெற்ற சோல் பெல்லோ என்ற எழுத்தாளர் எழுதிய கதையை நியூயோர்க்கர் பத்திரிகை திருப்பி அனுப்பி விட்டது. ஏனென்றால் கலையம்சம் இல்லாமல் ஏனோதானோ என்று உருவாகிய படைப்பு. எனக்கு அந்தப்பிரச்சினை கிடையாது ஏனெனில் நான் எழுதுவது என் மனத் திருப்திக்காகத் தானே.

கனடாவில் ஒரு திருமண வீட்டுக்கு போயிருந்த போது ஒரு மூதாட்டியை சந்தித்தேன். அவருடைய மகள் ஈழத்து போரில் மடிந்து போன பெண் போராளி. அவர் தன் மகளின் கதையை சொன்னார். நீண்ட நேரம் கேட்டு சில விவரங்களை உறுதி செய்த பின்னர் எழுதியது அந்தக்கதை. அதைப் பாராட்டி நிறைய மின்னஞ்சல்களும் தொலைபேசிகளும் வந்தன. நேரிலும் பாராட்டினார்கள். இந்தக்கதையை சொன்னபோது அந்தத் தாயார் பல இடங்களில் அழுதார். கதையை கேட்க ஆரம்பித்த சமயம் அதை எழுத வேண்டும் என நான் நினைக்கவே இல்லை. ஓர் இடத்தில் அம்மையார் இப்படிச் சொன்னார். ஒருநாள் காலையில் மகளைக் காணவில்லை. பரபரப்பாகத் தேடியபோது காணாமல் போனவளின் தங்கச்சி இப்படிச் சொல்வார். ‘அம்மா, இண்டைக்கு அக்கா ஏன் இரண்டு பிராவும், இரண்டு சட்டையும் போட்டுக்கொண்டு போறா.’ உடனேயே தாயார் தலையிலே கைவைத்து குளறுவார். அந்தக்காட்சி என் மனதில் முள்போல குத்தி நின்றது. அப்பொழுதுதான் கதையை எழுதுவதாகத் தீர்மானித்தேன். அதுதான் தொடக்கப்பொறி.

ஈழத்துப்போரில் நேர் அனுபவம் இல்லாததால் பேப்பர் செய்திகளையும், தொலைக்காட்சி தகவல்களையும் வைத்து நான் எழுதியது கிடையாது. நேர் அனுபம் உள்ள ஒருவர் சொல்லியதை வைத்தே புனைந்திருக்கிறேன். ‘எல்லாம் வெல்லும்’ சிறுகதை பெண்போராளி ஒருவர் என்னிடம் நேரடியாகச் சொன்னது. அவர் பல வருடங்கள் இயக்கத்தில் இருந்தவர். அதேபோல கேர்ணல் கிட்டுவின் குரங்கு கதை என் சொந்த அக்கா சொன்னது. நான் பிறந்து வளர்ந்த கொக்குவில் வீட்டில் சிலகாலம் பிரபாகரன் தங்கியிருக்கிறார். நான் தண்ணீர் அள்ளிக் குளித்த அதே கிணற்றில் அவரும் குளித்திருக்கிறார். அங்கே சிலகாலம் கேர்ணல் கிட்டு தன் குரங்குடன் நாட்களைக் கழித்திருக்கிறார். இன்று வரை இந்தக் கதையை குறித்து பாராட்டுகள் வந்தபடியே இருக்கின்றன. உலகம் சுற்றும் பிரபல பேச்சாளர் ஒருத்தர் நேற்று அவுஸ்திரேலியாவில் இருந்து மின்னஞ்சல் போட்டிருக்கிறார். அவர் எழுதினார் தன்னால் இந்தக் கதையை மறக்க முடியவில்லை என்று. கடிதத்தின் நகலை உங்களுக்கு அனுப்பி வைக்கவும் நான் தயார்.

அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக புனைவு இலக்கியத்தில் சிறுகதைகளை மட்டுமே எழுதி வருகிறீர்கள். நாவல் எழுதவேண்டுமென்ற எண்ணமில்லையா? நாவல் இலக்கியம் குறித்த உங்கள் கருதுகோள் என்ன?

இந்தச் செய்தி புதிதாக இருக்கிறது. நான் இரண்டு நாவல்கள் எழுதியிருக்கிறேன். முதலாவது நாவலின் பெயர் ‘உண்மை கலந்த நாட்குறிப்புகள்.’ இதில் புதுமை என்னவென்றால் ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு சிறுகதை போல இருக்கும். அதே சமயம் எல்லாச் சிறுகதைகளையும் சேர்த்தால் நாவல் உருவம்கி டைக்கும். நூலை எங்கே இருந்தும் படிக்க ஆரம்பிக்கலாம். ஆங்கிலத்தில் பல எழுத்தாளர்கள் இப்படிச் செய்திருக்கிறார்கள். தமிழுக்கு இந்த யுத்தி புதிது என்று நினைக்கிறேன். Tim O’ Brien    எழுதிய The Things They Carried இந்த வகை நாவல்தான். வியட்நாம்  போரை பற்றிய நாவல். ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு சிறுகதை. இன்னுமொரு ஆங்கில நாவல் Sandera Cisneros   எழுதிய   The House on Mango Street. பன்னிரெண்டு வயதுச் சிறுமியின் கண்களால் இந்த நாவல் சொல்லப்படுகிறது. தமிழில் இந்த உத்தியை அசோகமித்திரன் ‘ஒற்றன்’ நாவலில் பயன்படுத்தியிருக்கிறார் என்று நினைக்கிறேன்.

இரண்டாவது நாவல் ’கடவுள் தொடங்கிய இடம்.’ இது பரவலாக வாசிக்கப்பட்டு பேசப்பட்ட நாவல். ஆனந்த விகடனில் தொடராக வந்தது. ஈழத்துப்போர் பற்றி பல நூல்கள் வந்து விட்டன. புலம்பெயர்ந்த இடத்தில் படும் இன்னல்களைச் சொல்லும் நூல்கள் ஏராளம்.

ஆனால் ஓர் அகதியின் அலைச்சலை சொல்லும் நூல்கள் வந்ததாகத் தெரியவில்லை. ஈழத்திலிருந்து தப்பி புறப்படும் ஓர் இளைஞன் 8 வருடங்களுக்கு பிறகு பல நாடுகளில் அலைந்து திரிந்து கடைசியாக கனடாவுக்கு வந்து சேர்கிறான். அவனுடைய கதையை இந்த நாவல் பேசுகிறது.

இப்பொழுது பல நாவல்கள் தலையணை சைசில் வருகின்றன. படுத்துக்கொண்டு நெஞ்சிலே வைத்து படித்தால் விலா எலும்பு முறிந்து விடும். இதிலே நான் அசோகமித்திரன் கட்சி. அவர் சொல்வார் நல்ல நாவல் எழுதுவதற்கு ஆயிரம் பக்கங்கள் தேவையில்லை என்று. அசோகமித்திரனுடைய நாவல்கள் எல்லாம் 200 – 300 பக்கங்களுக்குள் முடிந்து விடும். நோபல் பரிசு பெற்ற ஹெமிங்வேயுடைய The Old Man and the Sea  நாவல் 127 பக்கங்கள் தான். இன்னொரு நோபல் பரிசு எழுத்தாளர் யசுநாறி காவபட்டா எழுதிய The House of Sleeping Beauties  வெறும் 148 பக்கங்கள் தான்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு பிந்தைய, இன்றைய ஈழ இலக்கியப்பரப்பில் நிறைய படைப்பிலக்கியங்கள் வெளியாகியிருக்கின்றன. அவற்றில் உங்களுக்கு நிறைவை அளித்த படைப்புக்கள் எவை? பொதுவாக ஈழ இலக்கியத்தின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்.?

ஈழத்துப்போர் எங்களிடம் நிரந்தரமான காயத்தை உண்டு பண்னி விட்டது. அதைப் பதிவுசெய்து பல நூல்கள் வந்து விட்டன. அகலாத ஆர்வத்துடனும் பிரமிப்புடனும் அவற்றையெல்லாம் படித்திருக்கிறேன். தமிழில் மாத்திரமல்ல ஆங்கிலத்திலும் நூல்கள் வெளியாகி உள்ளன. இவற்றின் தரத்துக்கு சாட்சி அவற்றிலே பல நூல்களுக்கு கனடாவில் இயங்கும் தமிழ் இலக்கியத்தோட்டம் விருதுகள் வழங்கியிருக்கிறது என்பதுதான். சயந்தனின் ஆதிரை, தீபச்செல்வனின் நடுகல், உமாஜியின் காக்கா கொத்திய காயம், ஷோபாசக்தியின் கண்டி வீரன், அனுக் அருட்பிரகாதத்தின் The Story of a brief Marriage, குணா கவியழகனின் நஞ்சுண்டகாடு, தேவகாந்தனின் கனவுச்சிறை, மு.நித்தியானந்தனின் கூலித்தமிழ் ஆகியவை எல்லாம் பரிசுகள் பெற்றவை. இன்னும் பல படைப்புகள் சர்வதேச பரிசுகள் பெறும் தகுதியில் உள்ளன.    

இவையெல்லாம் உலக அரங்கில் போற்றப்பட வேண்டிய நூல்கள். ஆனால் துயரம் என்னவென்றால் அவை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படுவதில்லை. அப்படியே மொழிபெயர்த்தாலும் மொழிபெயர்ப்பு தமிழ் வாசிப்பு கொடுத்த அனுபவத்தை ஆங்கிலத்தில் கொடுப்பதில்லை. நல்ல மொழிபெயர்ப்பு கிடைக்குமாயின் பல நூல்கள் என்னுடைய அபிப்பிராயத்தில் சர்வதேச விருதுகளைப் பெறும் தகுதியுள்ளவை.

ஈழத்து இலக்கியம் என்று இப்போது ஒருவரும் சொல்வதாகத் தெரியவில்லை. எல்லாமே தமிழ் இலக்கியம் தான். சிலர் தமிழ்நாட்டில் இருந்து எழுதுகிறார்கள். சிலர் ஈழத்திலிருந்து எழுதுகிறார்கள்; இன்னும் சிலர் புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து எழுதுகிறார்கள். எல்லோரும் தமிழ் இலக்கியத்தைத்தான் படைக்கிறார்கள். முன்னாட்களில் நான் கதிரை என்று எழுதினால் தமிழ்நாட்டு பத்திரிகைகள் நாற்காலி என்று மாற்றி விடும். கதைத்தான் என்பதை பேசினான் என்று திருத்தி விடுவார்கள். போத்தல் என்றால் அது பாட்டில். சமீபத்தில் ஒரு தமிழ்நாட்டு எழுத்தாளர் கதைத்தான் என்று எழுதியிருந்தார். பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. தமிழ்நாட்டு எழுத்தாளர் ஈழ எழுத்தாளர் என்ற பிரிவு மறைந்து தமிழ் எழுத்தாளர் என்று அழைக்கும் காலத்தில் நாம் இருப்பது மகிழ்ச்சியை கொடுக்கிறது. . .

சமீபத்தில் நான் வாசித்த இரண்டு நூல்கள் பற்றி சொல்ல வேண்டும். ஒன்று The Sadness of Geography என்ற புத்தகம். அகதியின் அலைச்சலை அழகாகச் சொன்ன நூல். இரண்டாவது சிங்கள கடற்படை கொமோடராக இருந்த அஜித் போயகொட எழுதிய ’நீண்ட காத்திருப்பு’ என்ற நூல். ஒரு கப்பலின் தலைவரான இவரை புலிகள் கைப்பற்றி எட்டு வருடங்கள் சிறையில் வைக்கிறார்கள். அந்தக் கதையை எழுதியிருக்கிறார். ஒரு போரைப்பற்றி தெரிவதற்கு தோற்றவர்கள் எழுதியதையும் படிக்க வேண்டும், வென்றவர் எழுதியதையும் படிக்க வேண்டும். தமிழில் போர் இலக்கியம் குறைவு. அந்தக்குறையை ஈழத்து தமிழ் எழுத்தாளர்கள் ஓரளவுக்கு போக்கி விட்டார்கள்.

எழுத்தாளர் நாஞ்சிநாடன் அவர்கள் ஈழ இலக்கியம் தமிழ்மொழிக்கு நிறைய புதிய சொற்களை வழங்கி வருவதை சுட்டிக்காட்டுகிறார்.மேலும் ஈழச்சொல்லகராதி ஒன்றை தொகுக்கச் சொல்லி என்னிடம் அடிக்கடி கதைப்பார் .உங்களுடைய நிறையக் கதைகளில் இதுபோன்ற புதிய சொற்கள் இருப்பதாக நான் உணர்வதுண்டு. ”ஈழச்சொல்லகராதி” ஒன்றை உருவாக்கும் விருப்பம் உங்களிடம் எப்போதாவது தோன்றியிருக்கிறதா?

நான் சிறுவனாயிருந்தபோது குழந்தையை கொஞ்சும்போது என் அம்மா ‘பொன்னுப்பெட்டி’ என்று அழைப்பார். அதன் பொருள் தெரியாது. என்னுடைய ஐயா தன்னுடைய வியாபாரக் கணக்குளைச் சொல்லும்போது ’ஐந்தொகை’ என்பார். பொன்னுப்பெட்டி என்பது திருமண சமயம் கூரைத்தாலி  வைத்துப் போகும் ஓலைப்பெட்டி என்று பல வருடங்கள் கழித்து அறிந்து கொண்டேன். ’ஐந்தொகை’ என்றால் வரவு, செலவு, கொள்முதல், லாபம், இருப்பு ஆகிய ஐந்து வகை கணக்குளையும் சொல்வது எனவும் புலப்பட்டது. ஈழத்துச் சொற்கள் பல அழிந்து கொண்டு வருகின்றன. நாஞ்சில் நாடன் சில வருடங்களாக ஈழத்துச் சொல்லகராதி ஒன்றை உருவாக்கவேண்டும் எனச் சொல்லி வருகிறார். அவருடைய கணக்கில் 50,000 வார்த்தைகள் வரும் என்று சொல்கிறார். இன்னும் கூடச் சேர்ந்தாலும் ஆச்சரியப்பட முடியாது.

முன்பெல்லாம் அகராதி என்பது தமிழ் இலக்கியத்தில் கிடையாது. தமிழ் படிக்க வேண்டும் என்றால் முதலில் நிகண்டு படிக்கவேண்டும். எங்கள் கிராமத்தில் நான் வசித்த ஒழுங்கையிலேயே ஒருத்தர் இருந்தார். அவருக்கு பெரிய மரியாதை, நிகண்டு படித்தவர் என்று சொல்வார்கள். நிகண்டு என்றால் ஒரு பொருள் தரும் சொற்களின் தொகுப்பு. ஆங்கிலத்தில் Synonym என்று சொல்வார்கள். 1842 லேயே யாழ்ப்பாணத்தில் ஒரு சொல்லகராதி வந்திருக்கிறது. அதில் 50,000 வார்த்தைகளுக்கு மேலிருக்கும் என நம்புகிறேன். என் சின்ன வயதில் புழக்கத்தில் இருந்த பல வார்த்தைகளைச் சொல்ல முடியும். சொக்கட்டான், கெந்தி அடித்தல், டாப்பு, அளாப்பு, சகடை, சுழியோடி, தாய்ச்சி கிளித்தட்டு, போர்த்தேங்காய், அலவாங்கு  போன்ற வார்த்தைகள் நினைவுக்கு வருகின்றன. இவை அகராதிகளில் உள்ளனவோ எனத் தெரியவில்லை. 

வட்டார வழக்கு அகராதியில் என்ன பிரச்சினை என்றால் எங்கள் வீட்டில் பயன்படுத்தும் ஒரு சொல்லை பக்கத்து வீட்டில் பயன்படுத்துவார்கள் என்று சொல்ல முடியாது. எங்கள் ஊரில் பரிச்சயமான ஒரு சொல் பக்கத்து ஊரில் பயன்படுத்தாத ஒன்றாக இருக்கும். உதாரணமாக எங்கள் வீட்டில் அம்மா உரோங்கல் என்றுதான் சொல்வார். வேறு ஒன்றுமில்லை, பக்கத்து வீட்டில் அதை உலக்கை என்று அழைப்பார்கள்.

அகராதியில் இன்னொரு பிரச்சினை அடிக்கடி சொற்கள் வழக்கழிந்து புதுச்சொற்கள் உண்டாகியபடியே இருப்பது. ஒவ்வொரு 20 வருடமும் ஒரு புதுப் பதிப்பு கொண்டுவர வேண்டும். நிறைய பொருள் செலவாகும். இலகுவான வழி வட்டார வழக்கு சொற்களை இணையத்தில் ஏற்றுவதுதான். இந்த முறையில் தொடர்ந்து அகராதியை புதுப்பித்துக் கொண்டே வந்தால் சொற்கள் புழக்கத்தில் நிற்கும். பத்து வருடங்களுக்கு முன்னர் ’முகநூல் நேரலை’ என்று கூறினால் யாருக்காவது புரிந்திருக்குமா?

சைவ இலக்கியங்கள் மீது உங்களுக்கு நெருக்கம் இருப்பதாக எனக்கொரு உணர்வு. உங்களுடைய சிற்சில கதைகளில் வார்த்தைப் பிரயோகங்கள் அதற்கு சான்று. சைவ இலக்கியங்களின் தமிழ்ச்செழுமை குறித்து சொல்லுங்களேன்?

நான் சிலகாலம் பெஷாவார் நகரில் வேலை பார்த்தேன். அப்பொழுது ரஸ்யாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையில் போர் நடந்து கொண்டிருந்தது. இரவும் பகலும் ரோட்டிலே தலிபான்கள் துப்பாக்கிகளுடன் நடமாடுவதைக் காணலாம். வெளியிலே தலைகாட்டுவது ஆபத்தானது. ஒருநாள் முடிந்த பின்னரும் பயணி ஒருவர் உயிரோடு இருந்தால் அது பெஷாவாராக இருக்க முடியாது என்று சொல்வார்கள்.  கொரோனா காலம் போல பல நாட்கள் வீட்டுக்குள் அடைபட்டுக் கிடந்தேன். அந்தச் சமயம்தான் எங்கள் பக்தி இலக்கியங்களை படிக்கத் தொடங்கினேன். அவற்றின் ஆழமும் சொல்லழகும் என்னைக் கவர்ந்தன. என் அறிவு அரைகுறையானதுதான். தமிழில் இருப்பதுபோல வேறு எந்த மொழியிலும் பக்தி இலக்கியங்கள் இல்லை என்று சொல்வார்கள். ’சலம்பூவொடு தீபம் மறந்தறியேன், தமிழோடு இசைபாடல் மறந்தறியேன்’ என்கிறார் நாவுக்கரசர். தமிழையும் இசையையும் பக்தியின் ஒரு பகுதியாகவே பார்த்தார்கள். இன்னோர் இடத்தில் ’நெஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன்’ என்று சொல்கிறர். எத்தனை அழகான பக்தி வெளிப்பாடு.

பிரபந்தத்தில் பெரியாழ்வார் நல்லதொரு உவமை கூறுகிறார். நெய்க்குடத்தில் எறும்பு ஒன்றன்பின் ஒன்றாக ஏறுவதுபோல முதுமையில் நோய்கள் என்னைப் பீடிக்கின்றன. முதலில் ஒரு நோய் வரும். பின் இன்னொன்று. பின்னர் வேறொன்று. இதனை ’நெய்க்குடத்தைப் பற்றி ஏறும் எறும்புகள் போல் நிரந்து எங்கும் கைக்கொண்டு  நிற்கின்ற நோய்காள்’ என்கிறார்.

ஆண்டாள் பாவை நோன்பு சமயம் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது என்று பட்டியலிடுகிறார். ’நெய் உண்ணோம், பால் உண்ணோம், நாட்காலே நீராடி, மையிட்டு எழுதோம், மலர் இட்டு நாம் முடியோம், செய்யாதன செய்யோம்.’

மாணிக்கவாசகர் இறைவனிடம் ’நான் உன்னை வென்றுவிட்டேன்’ என்று குதூகலிக்கிறார். ’தந்தது உன் தன்னை, கொண்டது என் தன்னை, சங்கரா யார் கொலோ சதுரர்’ என்கிறார். நான் என்னை உன்னிடம் தந்தேன், நீ என்னிடம் உன்னை தந்தாய். இந்தக் கொடுக்கல் வாங்கலில் ஆருக்கு லாபம்.

ஒருமுறை பேராசிரியர் பர்வீன் சுல்தானா கனடா வந்திருந்தபோது கேட்டேன்.   இறைவனிடம் என்ன யாசிப்பது என்பதில் ஏதாவது வரையறை உண்டா? ஏன் என்று கேட்டார். சுந்தரமூர்த்தி நாயனார் இறைவனிடம் இப்படிக் கேட்கிறார். ’என்னிடம் கொஞ்சம் நெல் உள்ளது. இதை என் மனைவிக்கு அனுப்ப வேண்டும். நெல்லைக் கொண்டுபோய்க்  கொடுப்பதற்கு ஓர் ஆள் தேவை.’ இப்படி இறைவனிடம் வேண்டலாமா?’

நீள நினைந்தடியேன் உனை
நித்தலுங் கைதொழுவேன்
வாளன கண்மடவாளவள்
வாடி வருந்தாமே
கோளிலி எம்பெருமான் குண்டை
யூர்ச்சில நெல்லுப் பெற்றேன்
ஆளிலை எம்பெருமான் அவை
அட்டித் தரப்பணியே

’ஏன் கூடாது? இறைவனிடம் என்னவும் கேட்கலாம். அவரிடம் யாசிக்காமல் வேறு யாரிடம் யாசிப்பது? உன்னுடைய செருப்பு வார் அறுந்தால் கூட நீ அல்லாவிடம் முறைப்பாடு செய்யலாம். ஒரு தப்பும் இல்லை’ என்றார் பர்வீன்.

பக்தி இலக்கியம் எங்களுக்கு கிடைத்த சொத்து. தனிச்சுவை கொண்டவை. அவை கவனிக்கப்படாமல் இருப்பது தமிழுக்கு பெரும் இழப்பு.  

***

(யாவரும் மே இதழுக்காக – பொறுப்பாசிரியர் அகர முதல்வன் மின்னஞ்சல் மூலம் பெறப்பட்ட கேள்வியும் பதிலும்)

11 COMMENTS

  1. கேள்விகள் இன்னும் தொடரலாம்.

    நிலாச் சோற்றில் முதல் கவளத்தை ஊட்டிய பின்
    சட்டென்று நிறுத்திய தாயின் செயல்போல …

    தொடர் நேர்காணல்…?

    அல்லிராஜ்.

  2. அனுபவசாலியுடனான ஒரு நல்ல நேர்காணல்; அகரமுதல்வனுக்கு என் நன்றி!

  3. அருமை அருமை. இன்னும் சில கேள்விகளோடும் தொடர்ந்திருக்கலாம்.

  4. முக்கியமான ஒரு நேர்காணல். முத்துலிங்கம் நாவலின் அளவு தொடர்பாக “இப்பொழுது பல நாவல்கள் தலையணை சைசில் வருகின்றன. படுத்துக்கொண்டு நெஞ்சிலே வைத்து படித்தால் விலா எலும்பு முறிந்து விடும். இதிலே நான் அசோகமித்திரன் கட்சி. அவர் சொல்வார் நல்ல நாவல் எழுதுவதற்கு ஆயிரம் பக்கங்கள் தேவையில்லை என்று. அசோகமித்திரனுடைய நாவல்கள் எல்லாம் 200 – 300 பக்கங்களுக்குள் முடிந்து விடும். நோபல் பரிசு பெற்ற ஹெமிங்வேயுடைய The Old Man and the Sea நாவல் 127 பக்கங்கள் தான். இன்னொரு நோபல் பரிசு எழுத்தாளர் யசுநாறி காவபட்டா எழுதிய The House of Sleeping Beauties வெறும் 148 பக்கங்கள் தான்.” என்று சொல்வது என்னைப்போன்ற சோம்பேறிகளின் மனசில் நிறைந்துள்ள நாவல் எழுதும் ஆசையை உயிர்பிக்குது. நன்றி முத்துலிங்கம். “மண்ணில் நல்ல வண்ணம் வாழிய வைகலும்.

  5. திரு அ.முத்துலிங்கம் அவர்களைப் ‘பேட்டியின் மன்னர்’ எனலாம். ஒவ்வொரு பதிலும் ஒரு புதிய பரிமாணத்தைக் கொண்டிருக்கும். அவருடைய நேர்காணல்களே ஒரு புத்தகமாக வந்திருக்கிறது. அவரைப் போல சர்வதேசீய அனுபவமும் மனப்பக்குவமும் கொண்ட எழுத்தாளர் தமிழுக்குக் கிடைத்திருப்பது நமது நல்வினைப்பயனே என்பேன்.

  6. இவரைப் போன்ற புலம் பெயர்ந்த அதிலும் ஈழத் தமிழ் எழுத்தளார்கள் மூலம் தமிழின் பரப்பளவை நன்கு உணர முடிகிறது. அவர் கூறியதைப் போல் நம் பக்தி இலக்கியத்தை அவ்வளவாக அறியவே இல்லை. உண்மையிலேயே பெரிய இழப்பு நம் தமிழ் உலகுக்குத்தான், அவர் குறிப்பிட்டதைப் போல!
    கேள்விகள் அருமை.

  7. திரு அ.முத்துலிங்கம் எங்களுக்கு கிடைத்த சொத்து.
    நேர்காணல், தனிச்சுவை!!
    நன்றி

  8. திரு .முத்துலிங்கம் அவர்களின் நேர்காணலின் ஒவ்வொரு சொல்லிலும் அவரது எழுத்தாளுமையும் ,சீலம்மிகுந்த குணநலனும் , இளைய படைப்பாளிகளுக்கு வழிகாட்டும் நெறியும் புதைந்துள்ளது. இந்த நேர்காணல் இன்னும் தொடராதா ஏக்கத்தை ஏற்படுத்தும் உணர்வே இது சிறப்பான நேர்காணல் என்பதை மெய்ப்பிக்கும். இந்நேர்காணலை கண்டவருக்கும் ,விண்டவருக்கும் ,வலைய வாகனத்தில் ஏற்றி தமிழ்கூறு நல்லுலகெங்கும் உலவச்செய்த ஜீவகரிகாலனுக்கும் நன்றியும் ,பாராட்டுகளும்.

  9. I do not even know how I stopped up here,
    however I thought this submit was once good.
    I don’t realize who you might be however definitely
    you are going to a well-known blogger if you happen to aren’t already.

    Cheers!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

சிகண்டி கவிதைகள்: பொருளும் படிமமும் பிரதிபலிப்பும்

0
ரூபன் சிவராஜாகவிதாவின் மிகச் சிறந்த கவிதைகள் என்று மதிப்பிடக்கூடிய கவிதைகளிற் சிலவற்றைப் புரிந்துகொள்வதற்குரிய நிபந்தனையாக அவை வாசகரிடத்தில் முன்கூட்டிய அறிதலையும் தேடலையும் பார்வையையும் கோருபவை. குறிப்பாக கவிதையிற் கொண்டுவரப்படும் படிமங்கள், மேற்கோள் காட்டப்படும்...

தலையங்கம்