Saturday, February 24, 2024
Homesliderபொருள் மதிப்பு வாழ்வு (கட்டுரை)

பொருள் மதிப்பு வாழ்வு (கட்டுரை)

பாலசுப்ரமணியன் பொன்ராஜ் - 

குகைகளில் துவங்கியவர்களின் தலைமுறையினருக்கு விண்ணோருலக நதிகளையும், சொர்க்கங்களின் கனிகளையும் காணும் வாய்ப்பை அளிக்கும் ஸ்கைஸ்க்ராப்பர் வாழ்க்கை நம்முன்னே முளைக்கத் துவங்கியுள்ளது. உயரக் கோபுரத்தை அரச இலட்சிணையாக வைத்திருக்கும் தமிழ் நிலப்பரப்பில் தனியார் மூதலீட்டில் தனிநபர்களுக்காக எழும் விண்முட்டும் குடியிருப்புகள். பெருநகர வாழ்க்கை, அதன் அடையாள உற்பத்தி, மனக்கட்டமைப்புகள் குறித்து ஆழமாக கண்திறக்கும் சிந்தனைகளின் துவக்கம் நிகழ வேண்டும். நவீன வாழ்க்கையின் அடுத்தடுத்த கூறுகள் தமிழ் சமூகத்தின் உள்நுழைந்து அதன் அடிப்படைகளாகத் திரண்டு நிற்கும் கட்டுமானங்களை மாற்றியமைக்கும் இன்னாட்களில் விமானங்கள் மட்டுமே தலைக்கு மேல் பறக்கும். தெய்வங்களுக்கான செய்தியைக் கடத்தும் கோபுரங்கள், ரேடியோ அலைவரிசை டவர்கள், கிளைபடர்வின்றி உயரும் மரங்களையும் தலைதாழ்த்திப் பார்க்கக் கிடைத்த வாய்ப்பு முன்னெப்போதும் மனிதர்களுக்கு கிட்டாதது. ஸ்கைஸ்க்ராப்பரின் உச்சாணியில் நிற்பவர்கள் காணும் காட்சியில் உலகின் பலவெளிகளின் பரப்பு சுருங்கி எல்லையற்ற பரப்பின் ஒரு புள்ளியில் நிற்பது போன்றவொரு (மன)நிலை உருவாகும்.

தனிமனிதனை அச்சாக்கி உலகைச் சுழற்றிய பத்தொன்பதாம் நூற்றாண்டு நீராவி எந்திரப்புகையில் பிறந்தது. எந்திர ஓசையினால் அந்நியமான வாய் திறந்த நவீன மனிதன் “எட்வர்ட் மன்ச்”-ன் ஓவியத்தில் காதுகளைப் பொத்தினான். தொடுதிரைகள் விரல்களின் மைதானமாகி விட்ட நூற்றாண்டில் நிற்கும் மனிதன் கண்களை மூடுவதற்கு கைகளற்றுப் போய் ஓவியத்தில் காதுகளைப் பொத்தியவற்றை எடுக்க முடியாத நவீனயுகச் சிக்கல்களை உணருமுன்பாகவே உயரமாகி எழுந்து நிற்கிறது பெருநகர வாழ்விற்கான தூர இருந்தே பார்க்கக் கிடைக்கும் அழைப்பான ஸ்கைஸ்ராப்பர்கள்.

ஸ்கைஸ்ராப்பர் = வெற்று வெளியில் முதலீட்டால் உருவான ஒரு வாழ்வெளி.

பெரிய, விரிவான கட்டிட அமைப்புகள், அணைகள், தொழிற்சாலைகள் ஆகியவை நவீனத்துவ காலகட்டத்தின் அடையாளங்கள் என்றால் மால்கள், ஒபேக் கண்ணாடி பதித்த தகவல் தொழில்நுட்ப அலுவலகங்கள், ஸ்கைஸ்க்ராப்பர்கள் பின்-நவீனத்துவ அடையாளங்கள். விரிவை, அகலத்தை பதிலீடு செய்யும் உயரம். அரசின் முதலீடில்லாமல் தனியார் முதலீட்டால் உயர்ந்தெழும் கட்டிடங்கள் மூலதனத்தின் சக்தியைக் காட்டும். அதன் அர்த்தம் என்பது மூலதனத்தின் வளர்ச்சியை ஒரு காட்சிப்பொருளாகக் காட்டுவது. OTIS லிஃப்ட்டுகள் மனிதர்களை ஏற்றி இறக்கும் 2000+ அடி உயர புர்ஜ் கஃலிபா’வின் கூர்முனை விண்ணுலகத்தோரின் புட்டத்தில் குத்தும். உயர எழும் மூலதனம் அதன் கீழேயுள்ள இயற்கையின், முந்தைய காலகட்டத்தின் மனித உயரங்களை சிறியதாக்கிப் பார்க்கும். மூலதனம் தான் உயரமானது அதற்கு அடுத்த உயரத்தில் இருப்பது ஒருவேளை கடவுள்.

மனிதனைக் கடந்து பரவி வாழ்வில் ஊடுருவி நிற்கும் அவனே உருவாக்கிய பொருட்கள், தொழில்நுட்பங்கள், மயக்கமூட்டும், கண்களை குருடாக்கும் மின்னொளி பரவிய நகரங்கள், கட்டிடங்கள், பொருட்களின் டிசைன்கள், உறுத்தும் அடர் வண்ணங்கள், பெருகும் ஒலியினால் மனிதனது புற அடையாளங்களும் அகக் கட்டமைப்புகளும் அடைந்த மாற்றம் இரு நூற்றாண்டுகால வேகம் கண்டத்திட்டுகளாக அதிர்ந்து மின்னலைகள் காற்றில் எழும்பி கணினித் திரைகளில் விரல்நுனிகளால் ஆளப்படும்.

கட்டிடக்கலையில் துவங்கிய பின்-நவீனத்துவச் சிந்தனை நுகர்வுப் பண்டங்கள் அவற்றின் குறிகள், அடையாள உருவாக்கம் குறித்து பேசினால் நவீனத்துவம் பொருட்களின் உற்பத்திப் பெருக்கம், தொழிற்சாலை உற்பத்தி முறையை விரிவாகப் பேசுவது. இயந்திரங்களின் ஒலியிலும், மின்னொளியிலும் நூற்றாண்டைக் கடந்த மனித வாழ்வு அதன் அர்த்தங்களை மறுவரைவு செய்த இச்சிந்தனைகளில் முன்னதான நவீனத்துவத்தின் வழி நகரமயச் சமூகத்தின் கூறுகளைப் பேசியவர் கியார்க் சிம்மெல் (1858-1918).

தனிமனிதன் தன்னுடைய இருப்பின் சுதந்திரத்தை, தனித்துவத்தைப் பேணுவதற்காக சமூகத்தின் மரபார்ந்த அதிகாரங்கள், வரலாற்றுப் பாரம்பரியத்தின் சுமை, புறக்கலாச்சாரம், வாழ்வின் தொழில் நுட்பங்கள் ஆகியவற்றிற்கு எதிராக மேற்கொள்ளும் முயற்சிகளில் இருந்துதான் நவீன வாழ்வின் ஆழமான பிரச்சனைகள் வழிகின்றன. நவீனத்துவ காலகட்டத்து மனிதனது இருப்பின் நிலையை சிம்மெல் செய்த வரையறை.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஜெர்மானிய தத்துவத் துறைக்கு சமூகவியல், பெருநகர வாழ்க்கை, தனிமனிதன்-குழு இரண்டு பிரிவுகளின் உறவு குறித்த அவதானிப்புகள், பணத்தின் தத்துவம் போன்ற பங்களிப்புகள் செய்த சிம்மெல் நவீன பெருநகர் வாழ்க்கையின் கூறுகளை அதன் குழந்தைப் பருவத்திலேயே கணித்தவர்களில் ஒருவர். இயந்திரத்திலிருந்து பிறந்த அந்த நூற்றாண்டு மனித சிந்தனையில், வாழ்முறையில் ஏற்படுத்திய அகப்புறத் தாக்கங்களை விரிவாகப் பேசியவர்.

ஆதிமனிதன் தன்னுடைய மெய்யான இருப்பிற்காக அவன் இயற்கையோடு நிகழ்த்திய போராட்டங்களின் நவீன வடிவத்தை இவ்வெதிர்ப்பு பிரதிநிதித்துவப்படுத்துகிறது. வரலாற்று ரீதியாக அரசியல், மதம், அறம், பொருளாதாரம் இவற்றோடு உருவாகிவிட்ட பிணைப்பிலிருந்து சுதந்திரத்திற்கான, மனிதர்கள் அனைவரிலும் சமமாக இருந்த அசலான, இயல்பான மதிப்பீடுகள் தடையின்றி முன்னேறுவதற்காக 18-ம் நூற்றாண்டு அழைப்பு விடுத்திருக்க; 19-ம் நூற்றாண்டு, மனிதனின் சுதந்திரத்திற்கு கூடுதலாக அவனை தனிச்சிறப்பு (unique) மிக்கவனாக, இன்றியமையாதவனாக ஆக்கும் அவனுடைய தனித்துவம் (வேலைப் பங்கீடோடு தொடர்புடையது) மற்றும் அவனுடைய சாதனைகளோடு ஆனால் அதேசமயம் மற்றவர்களின் பதில் நடவடிக்கைகளோடு மேலும் சார்ந்திருத்தலை வளர்த்தது.

நவீன மனிதனது தனித்துவத்திற்கான போராட்டத்தை ஆதிமனிதனது தப்பிப் பிழைப்பதற்கான போராட்டத்தோடு தொடர்புறுத்தும் சிம்மெல் நவீன காலகட்ட வாழ்வில் சுதந்திரமாகவும், தனித்துவத்தோடு இருப்பதே மனித வாழ்வின் சாரமாக இருக்கிறது எனக் காட்டுகிறார்.

George Simmel

பொருட்களின் மதிப்பில் மார்க்சிய அணுகுமுறையான பயன்பாட்டு மதிப்பு மற்றும் பரிவர்த்தனை மதிப்பு ஆகியவற்றோடு பொருட்களின் மீதான மனிதமனம் உண்டாக்கும் மதிப்பு குறித்து பேசியவர் சிம்மெல். பொருட்களின் மதிப்பு பரிவர்த்தனையால் மட்டுமே உருவாவதில்லை எனும் சிம்மெல் பணத்தின் தத்துவம் புத்தகத்தில் விரிவாக இதைப் பேசியிருக்கிறார்.

மனிதர்கள் பொருட்களை உண்டாக்கி மதிப்பைத் (value) தோற்றுவித்து பிறகு அவற்றிடமிருந்து ஒரு விலகலை உருவாக்கி பின்பு அந்த தூரத்தை கடக்க முயற்சி செய்கின்றனர்.அருகிலிருக்கும் பொருட்களும், அடைவதற்கு மிக தூரத்திலிருக்கும் பொருட்களும் மதிப்பு உடையவையாக கருதப்படுவதில்லை. பற்றாக்குறை, நேரம், தியாகம் மற்றும் பொருட்களை அடைவதற்கான நெருக்கடிகளும் மதிப்பை உருவாக்கும் கூடுதல் காரணங்கள்.

பொருட்கள் மதிப்பு மிக்கவையாக இருப்பதால் அவற்றைக் கையகப்படுத்துவது சிரமம் இல்லை; ஆனால் அந்தப் பொருட்களை மதிப்பு மிக்கவையாக அழைப்பதே அவை நமது கைப்பற்றும் விருப்பத்தை தடுப்பதால்தான்.1 பொருட்களுக்கும் நமக்கும் இடையிலான தூரத்தால்தான் விருப்பம் அதிகரிக்கவோ அல்லது குறையவோ செய்கிறது என்றும் பொருட்களின் மதிப்பில் இந்த தூரம் பங்காற்றுகிறது என்றும் சொல்கிறார்.

நகர வாழ்க்கை வேலைப் பங்கீட்டிற்கும் நிதிமயப்படுத்தலுக்கும் வழி வகுக்கிறது. நிதிசார் பரிவர்த்தனைகள் அதிகமாக ஒரு தனிமனிதன் என்பவன் யார்? என்பதிலிருந்து அவனால் என்ன செய்ய முடியும்? என்பதாக மாற்றம் நிகழ்கிறது. (சிம்மெல்)

அறிவொளிக்கால, ரொமாண்டிசிச, நவீனத்துவ பின்நவீனத்துவ காலம் வரைக்குமான சித்திரங்களை சிம்மெலின் இவ்வாக்கியங்கள் வழங்குகின்றன.

நவீனத்துவ காலம் பொருட்களின் மறு உற்பத்தி வழியாக அடையாளப்படுத்தப்பட்டது என்றால் பின்-நவீனத்துவ காலத்தில் அப்படி மறு உருவாக்கப்பட்டப் பொருட்களின் பெருக்கத்தை அதன் மதிப்பை குறுகிய காலத்தில் துய்த்து ஒன்றுமில்லாமல் ஆக்குவதாக உள்ளது. நவீனத்துவ காலத்தில் உற்பத்தி முக்கியத்துவம் பெற்றால் பின்-நவீனத்துவ காலத்தில் நுகர்வு முக்கியத்துவம் பெறுகிறது.

பொருளாதார நிபுணர்கள் இப்போது தோல்வியடைந்து கொண்டிருக்கும் ”ஜெனரல் மோட்டார்”-ஸை வெற்றிகரமான நவீனக் குழுமமாகப் பார்த்தால் நுகர்வோர் ‘அமேஸானை” ஒரு டிபிகல் பின்-நவீனத்துவமாகப் பார்க்கின்றனர்.2

நவீனத்துவத்தின் என்ன? எது? என்பது அனைத்தும் மற்றும் எத்தனையாக? மாற்றியிருக்கிறது.

பொருட்களின் நீண்ட கால வாழ்வு மதிப்புமிக்கதாக இருந்தது போய் குறுகியகால இருப்பே அதன் மதிப்பைக் கூட்டுவதாக உள்ளது. காலத்தின் வேகத்தை இந்தக் குறுகிய காலமே தாக்குப்பிடிக்கும் பொருட்களின் மதிப்பின் வழியாக அதிகரித்திருக்கிறோம். ஒளியின் அளவு வேகத்தின் மூலம் காலத்தை நீட்டிக்க முடியும் என்கிற ஐன்ஸ்டீனிய விதிக்கு எதிராக, நீண்ட காலத்தை இந்தத் துய்ப்பின் வழியாகக் குறுகிய ஒன்றாக மாற்றும் வாழ்க்கையை வாழ்கிறோம்.

பெருக்கம் நிறைவை அளிப்பதற்கு பதிலாக அனைத்தையும் அன்லிமிடெடாக வழங்கி நிறைவை எடுத்துக் கொள்கிறது. அனைத்துப் பொருட்களின் மீதும் எவ்வித மதிப்புமின்றியே துய்க்கிறோம். அதன் மதிப்பும் நம்முடைய தனித்துவத்தை அலங்கரிப்பதற்காகவே வழங்குகிறோம்.

பொருட்களின் வழியாக மதிப்புமிக்கதாகக உருவாக்கப்பட்ட நவீன வாழ்க்கை அப்பொருட்களின் வழியாகவே மதிப்பற்றதாக மாறிவிட்டது. இந்தியா போன்ற சமூகங்களில் நவீன பொருட்கள் சார் வாழ்க்கையின் மீதான ஏக்கமும் நகரங்களில் பொருட்களின் மீதான நிறைவின்மையையும் ஒருங்கே நிலவுகின்றன. இந்நிலையில் ஒரு கேள்வி முன்னிற்கிறது.

நாம் யாராக இருக்கிறோம்? என்பது போய் நாம் எங்கே இருக்கிறோம்? என்பதே அது.

ஒரு பெருநகரத்தில் வாழும் மனிதனும் கிராமத்தில் வாழும் மனிதனும், மனிதன் என்னும் அளவில் கூட இப்போது சமமாக எண்ணப்படுவானா என்பது சந்தேகம். நகரங்களில் வாழும் கிராமத்தவர்களும் ஒரு பிரிவு. செழிப்பும், செழிப்பு மிக்க இடங்களில் வாழ்தலுமே மதிப்பை உருவாக்கி மனிதன் என்பதற்கான அர்த்தத்தை அளிக்கின்றன.

நவீனத்துவம் உருவாக்கிய தனிச்சிறப்பு மிக்க (unique) அடையாளம் காலாவதியாகி கூட்டுத்தனிச்சிறப்பு (collective uniqueness) உதா அபார்ட்மெண்ட் வாசம், Gated Community living, தொழில் சார்ந்து (profession) உருவாகும் தோழமையுணர்வு போன்றவற்றால், தனிமனிதனின் புற அடையாளங்கள் வழியாக இல்லாமல் கூட்டு அடையாளங்களை தனிமனிதன் எய்துவதால் அவனது தனிச்சிறப்பு கட்டமைக்கப்படுகிறது. அப்படி ஒரு கூட்டு அடையாளம் தான் ஸ்கைஸ்க்ராப்பர்.

குறிப்புதவி :

  1. பணத்தின் தத்துவம் – கியார்க் சிம்மெல்
  2. அப்படியானால் பின்-நவீனத்துவம் என்பது என்ன – சார்லஸ் ஜென்க்ஸ்

***

பாலசுப்ரமணியன் பொன்ராஜ்

“கனவு மிருகம்” , “துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை” ஆகிய நூல்களின் ஆசிரியர்.
[email protected]

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular