பொய்களின் இடிமுழக்கம்

1

அகர முதல்வன்

ஷோபாசக்தி

ஈழத்தமிழ் அறிவுலகத்தினருக்குள் நிகழும் இணைய விவாதமாக அண்மைய நாட்களில் ஒரு விவகாரம் பேசப்பட்டு வருகிறது. அதாவது 2003ம் ஆண்டில் நிகழவிருந்த யாழ்ப்பாண நூலகத் திறப்பு விழா பற்றிய உண்மைகளுக்கும் பொய்களுக்கும் – சர்ச்சைகளுக்கும் இடையே நடக்கும் விவாதமாக அது உருப்பெற்று இருக்கிறது. அதன் மையமாக சாதியம் பேசுபொருளாகியிருக்கிறது. யாழ்ப்பாணத்தின் சமூக அடுக்குகளில் ஒடுக்கும் சாதியாகவிருக்கும் “வெள்ளாள” சமூக ஆதிக்கமும் – இந்நிலை தொடர்பாக புலிகள் இயக்கத்தின் நடவடிக்கைகள் குறித்தும் நிறையப் பதிவுகளும் – கட்டுரைகளும் – கட்டுரைகள் என்ற பேரில் எழுதப்படும் சலம்பல்களும் குவிந்த வண்ணமிருக்கின்றன.

ஆவணப்பட இயக்குநர் சோமீதரன்

எழுத்தாளர்களான ஷோபாசக்தி- சயந்தன் மற்றும் ஆவணப்பட இயக்குநரான சோமிதரன் ஆகிய மூவரின் பெயரும் இந்த விவாதங்களில் முக்கிய இடம்பிடித்துள்ளன. ஈழப்பிரச்சனையின் உள்ளக சிடுக்குகளும் – மோதல்களும் – வரலாறுகளும் தெரியாதவொருவரால் இந்த விவாதங்களின் மொத்த பேருருவத்தையும் கண்டுணரமுடியாது என்றே கருதுகிறேன். ஒரு புனைவை படிப்பது போல இந்தப்பிரச்சனை தொடர்பாக எழுதப்படும் பதிவுகளை படித்துவிட்டு “அபாரம் தோழர்”, “அற்புதம்” என்றெல்லாம் கருத்து இடமுடியாது. எழுத்தாளர் ஷோபாசக்தியினதும் சயந்தனினதும் புனைவுலகத்திற்கான வாசகர்களைக் கடந்த – ரசிக சபையினராலும் இதனை விளங்க முடியாது. இப்போது நடந்துவருவது ஒரு இரத்த சாட்சிக்கு முன்னால் கருகிப்போகும் பொய்களின் மூச்சிழுப்பு. அந்தப் பொய்களின் சீவன் சேடம் இழுக்கும் காட்சிகளே இப்போது நடப்பது யாவும்.”இதுதான் நடந்த கதை”.

சயந்தன்

யாழ்ப்பாண பொதுநூலகம் சிங்கள இனவெறிக் காடையர்களால் எரிக்கப்பட்ட வரலாற்றுத் துயரத்தை அறியாதார் எவர்? இருபதாம் நூற்றாண்டில் இவ்வுலகில் நிகழ்த்தப்பட்ட இனவழிப்பின் முக்கிய சாட்சியது. இன்றைக்கு முப்பத்தொன்பது ஆண்டுகள் கடந்தாலும் அன்று எரிக்கப்பட்ட பல இலட்சம் நூல்கள் கொண்ட தமிழ் நூலகத்தின் சாம்பலில் தீ கனன்று கொண்டேயிருக்கிறது. யாழ் பொதுநூலகம் எரிக்கப்பட்டதன் விளைவு ஈழத்தவரின் விடுதலைப் போராட்ட அவசியத்தையும் அடிப்படைத் தேவையையும் தமிழ்மக்களுக்கு உணர்த்திற்று.

அந்தக் கொடுந்துயரைத் தமிழ்த்தரப்பிற்கு செய்தமைக்காக இன்றுவரை சிங்கள அதிகாரத் தரப்பு ஒரு மன்னிப்பைக் கூட உதிர்த்ததில்லை என்பதையும் சுட்டுகிறேன். அதேவேளை நூலக எரிப்பு வடுவை கலை இலக்கியப் படைப்புக்களில் பலர் பதிவு செய்துள்ளனர். கவிஞர் நுஹ்மானின் கவிதை, எழுத்தாளர் சுஜாதாவின் “ஒரு லட்சம் புத்தகங்கள்”, அமெரிக்க அறிஞர் நெவே எழுதிய “நம்பிக்கையென்ன நமக்கு” என்ற கவிதையை சோ.பத்மநாதன் மொழிபெயர்த்திருந்தார். “The Jaffna Public Library rises from its ashes” என்ற ஆவணநூலினை வி.எஸ்.துரைரராஜா அவர்களும், “எரியும் நினைவுகள்” என்ற பேரில் மிகமுக்கியதொரு ஆவணப்படத்தினை சோமிதரன் அவர்களும் உருவாக்கி இருக்கின்றனர். இந்த வடு இனிவரும் இலக்கியப் படைப்புக்களிலும் ஒரு முக்கிய பேசுபொருளாக தொடரும் என்பது எனது துணிபு.

எரியும் நினைவுகள் ஆவணப்படம் –https://www.youtube.com/watch?v=8kY0_Q0XYUM&t=242s

1981ம் ஆண்டில் எரியூட்டப்பட்ட நூலகத்தை “புனரமைக்கப்பட்ட யாழ் பொதுசன நூலகம்” என்ற பெயர் சூட்டலோடு திறப்புவிழா செய்வதற்கு எண்ணியது சந்திரிக்காவின் ஆட்சிக்காலம். “சமாதானத்தின் தேவதை” என்ற போர்வையைப் போர்த்திக்கொண்டு சர்வதேச சமூகத்தையும் தமிழர்களையும் ஒரே நேரத்தில் ஏமாற்றும் வல்லமை பெற்ற ஜனாதிபதியான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆட்சியில் 14.02.2003ம் ஆண்டில் நடக்கவிருந்த நூலகத் திறப்பு விழா தொடர்பாக ஈழத்தமிழ் அரசியலில் நிகழ்ந்த குழப்பங்கள் ஏராளமானவை. அப்போது நிலவிவந்த அமைதிச்சூழலில் அரசுக்கும் – புலிகளுக்கும் இடையே நிகழ்ந்துவந்த புகைமூட்டமான பகைமூர்க்கத்தில் அப்பாவி பொதுசனங்கள் நெருக்கடியினை எதிர்கொண்டனர்.

சமாதான காலமென அறிவிக்கப்பட்டிருந்த நாட்களில் இந்த திறப்புவிழா அறிவிக்கப்பட்டிருந்தது. அப்போது யாழ்ப்பாண நகர பிதாவாக இருந்த பெருமதிப்பிற்குரிய செல்லன் கந்தையன் அவர்களின் அழைப்பின் பேரில் அப்போது இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த தமிழ் அரசியல்வாதியான திரு. வீ.ஆனந்தசங்கரி அவர்கள் புனரமைக்கப்பட்ட யாழ்ப்பாண நூலகத்தை திறந்து வைக்க இருந்தார்.

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தோடு முறுகல் போக்கையும், எப்போதும் இலங்கை ஆட்சியாளர்களோடு நெருக்கத்தையும் பேணிவரும் குறித்த அரசியல்வாதி எரிக்கப்பட்டவர்களாலேயே புனரமைக்கப்பட்ட யாழ்ப்பாண நூலகத்தை திறந்துவைப்பதை புலிகள் இயக்கம் விரும்பவில்லை. மேலும் சிங்கள இனவெறி அரசின் / சிங்கள மக்களின் இனவெறிக்கும் சாட்சியாக இருந்த எரியூட்டப்பட்ட தமிழர் நூலகத்தை சுண்ணாம்பினால் வெள்ளைபூசி தடயம் அழிக்கும் செயற்பாட்டையும் யாரும் விரும்பவில்லை.

யாழ்ப்பாண நூலக எரிப்பு என்பது தமிழர்களின் அறிவுலக மரபின் மீது நிகழ்த்தப்பட்ட ஒரு பண்பாட்டழிப்பு என்பதில் தமிழர்கள் அனைவரும் தீர்மானமாய் இருந்தனர். அந்தப்புள்ளியில் புலிகளும் நின்றனர். ஆக புலிகள், இந்தத்திறப்பு விழாவில் ஆனந்தசங்கரி பங்கெடுப்பதை விரும்பவில்லை என்பதைப் போலவே ஒரு இனஅழிப்பின் சாட்சியாக இருந்த நூலகத்தை புதுப்பிக்கவும் விரும்பவில்லை. வெகுஜன அமைப்புக்கள் பலவும் – அறிவுப்புலத்தினர் பலரும் இந்த நிகழ்வுக்கு எதிராக ஒன்றுதிரண்டு நின்றனர். இப்பின்னணியில் அந்தநிகழ்வு தடுத்து நிறுத்தப்பட்டது.

இதுவொரு பாதிக்கப்பட்ட தரப்பின் குரல் பொதிந்த அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வழிமுறையாக கருதலாம். அதாவது ஒருஅறிவுலகச் சொத்தாக இருந்த யாழ்ப்பாண நூலகத்தை சிங்கள இனவாதம் எரியூட்டியதை தமிழர்கள் அழித்தொழிப்பின் நினைவாகவே அடையாளப்படுத்த விரும்பினர். அதுவே இந்நிகழ்வு தடைப்பட்டு போனதற்கு காரணம்.

2
யாழ் நூலகத்திறப்பு விழாவின் (2003) வரவேற்புக்குழுவின் தலைமையாகவும் யாழ்ப்பாண நகரபிதாவாகவும் இருந்த பெருமதிப்பிற்குரிய செல்லன் கந்தையன் அவர்கள் ஒடுக்கப்படும் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதனாலும், அவர் இந்த நூலகத்தை திறந்து வைத்தால் ஒரு ஒடுக்கப்படும் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரின் பெயர் வரலாற்றில் நிலைத்துவிடுமென எண்ணிய யாழ்ப்பாண வெள்ளாளச்சாதி ஆதிக்கவாதிகள் கூட்டுச்சேர்ந்து புலிகள் இயக்கத்தினருக்கு அழுத்தம் தருவித்ததன் விளைவாக புலிகள் இயக்கம் அந்த நிகழ்வை தடுத்து நிறுத்தியது என புலியெதிர்ப்பு நிலைப்பாடுடைய பலர் எழுதினர்.

மேலும் தமது புலியெதிர்ப்புக் கத்தியை கூர்மைப்படுத்தும் நோக்கில் ஒடுக்கப்படும் சாதியினரின் வாழ்க்கையை சாணைக்கல்லாக பயன்படுத்தினர். அதாவது புலிகள் இயக்கமென்பது ஒடுக்கப்படும் சாதியினருக்கு எதிரானது, ஆகவே தாம் புலிகளை எதிர்க்கிறோமென வாய்நீட்டி முழங்கினர். இங்கே இவர்களின் புலியெதிர்ப்பு அரசியல் என்பது மாபெரும் வலைப்பின்னல் கொண்டது. அது ஈழம் தொடங்கி, தமிழகம் என தொடர்ந்து ஐரோப்பிய நாடுகள் வரை கண்ணுக்குத் தெரியாத பல கண்ணிகளோடு தொடர்பு கொண்டவை. இவர்களின் புலியெதிர்ப்பு பிரச்சாரம், தமிழக அறிவுப்புலத்தில் குருட்டுத்தனமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று அ.மார்க்ஸ் போன்றவர்கள் ஈழமெனும் யானையை இவர்கள் வழியாகவே கண்டனர். புலிகள் ஒரு வெள்ளாள சாதி அமைப்பு என்று தமிழகத்தின் சி.பி.எம் இடதுசாரிகளுக்கு இவர்களே வகுப்புக்கள் வழங்கினர்.

இப்படியான வலைப்பின்னல்களின் பின்னால் ஒளிந்திருக்கும் குற்றங்களின் வரைபடத்தை காலம் என்றோ ஒருநாள் வரலாற்றின் முன்னால் வைத்து தீர விசாரிக்குமென்று நான் சொல்லுவதுண்டு. அந்தக்கூற்றின் அளவு சமுத்திரமெனில் இப்போது நிகழ்ந்திருப்பது அங்கே சிறிய நீர் வளையம் மட்டுமே.

அதாவது திறப்புவிழாவில் நடந்த பல்வேறு குழப்பகரமான சம்பவங்கள் குறித்து இற்றைக்கு பதினேழு வருடங்களாக நிறையக்கட்டுரைகளும், பதிவுகளும் எழுதப்பட்டும் விவாதிக்கப்பட்டும் வருகின்றன. அதில் முக்கியமான/பொருட்படுத்தக்கூடிய கட்டுரை எழுத்தாளர் ஷோபாசக்தியினுடையது. அந்தக் கட்டுரையில் தகவற்பிழைகளும் இட்டுக்கட்டிய கதைகளும் நிறைய இருப்பினும் “வசந்தத்தின் இடிமுழக்கம்” கட்டுரையில் உண்மைகளும் அதிசயமாக உண்டு.

இணைப்பு :http://www.shobasakthi.com/shobasakthi/2007/02/23/81/

இந்தத் திறப்புவிழா விவகாரத்தை முன்வைத்து அப்போதைய யாழ் தினக்குரலில் வெளியான கேலிச்சித்திரம் அவமானத்திற்குரியது. சமூக நீதிக்கு எதிரானது. சாதிவெறியின் கோடுகள். மானுடத்தின் மீது நம்பிக்கை கொண்ட அனைவரும் எக்காலத்திற்கும் வெட்கி தலைகுனியவேண்டிய ஒன்று. அதனை ஷோபாசக்தி திகதியின் சாட்சியோடு குறிப்பிட்டிருப்பார். அந்த வகையில் அவருடைய இந்தத் தகவலில் இப்போதும் மறுப்புச் சொல்வோர் இருப்பின் அவர்களே சாதியவாதிகள் என்பது எனது தரப்பு.

இந்தச் சம்பவத்தை அடியொற்றி “யாழ் நூலகத்திறப்பு விழாவும் சாதி வெறியர்களும்” என எழுதப்பட்ட அதே பகுதியில் எத்தனையோ தகவற்பிழைகளும் பொய்களின் இடிமுழக்கமும். அந்த பிழைகளும் பொய்களுமே இப்போது நிரூபணமாகி இருக்கின்றன. அதாவது ஷோபாசக்தி தனது கட்டுரையில் குறிப்பிடுவதைப் போன்று நகரபிதா செல்லன் கந்தையன் புலிகளால் மிரட்டப்பட்டு பூட்டிய அறையில் கடுமையாக எச்சரிக்கப்பட்டாரா? உண்மையில் வெள்ளாள ஆதிக்கவாதிகள் இந்த நிகழ்வை வேண்டாமென மறுத்தார்களா? அவர்கள் மறுத்ததன் பேரில்தான் இந்த திறப்புவிழா தடைப்பட்டு போனதா? என கேள்விகள் எழும். எழுவதே நன்று. கேட்கப்படாத கேள்விகள் மட்டுமே முட்டாள் தனமானவை என்ற மால்கம் எக்சை இங்கே நினைவு கூர்கிறேன்.

அப்படி கேள்வி எழுந்ததன் விளைவாகவே எழுத்தாளர் சயந்தனும் ஆவணப்பட இயக்குநருமான சோமிதரன் ஆகியோர் இந்த அறிவுப்புல அரசியல் வரலாற்றின் பிரதான பேசுபொருளாக இருந்த நகரபிதா செல்லன் கந்தையன் அவர்களை ஆவணப்படம் செய்வதற்காக பதியப்பட்ட காணொலியின் பகுதியிலிருந்து மூன்று நிமிட காணொலியை ஒரு செய்திக் காணொலியாக இணையத்தில் வெளியிட்டு இருக்கின்றனர்.

அந்தக் காணொலியில் “யாழ் நூலகத்திறப்பு விழா” பற்றிய சர்ச்சைகள் தொடர்பாக எழுத்தாளர் ஷோபாசக்தி உள்ளிட்ட புலியெதிர்ப்புவாதிகள் முன்வைத்த சம்பவங்கள் கேள்வியாக தொடுக்கப்படுகின்றன.

பெருமதிப்பிற்குரிய செல்லன் கந்தையன் அதனை அடியோடு மறுத்து அப்படியான எந்தச்சம்பவங்களும் மிரட்டல்களும் புலிகளால் தனக்கு வழங்கப்படவில்லை என கூறுகிறார். மேலும் புலிகளுக்கும் அவர்களுடைய நடவடிக்கைகளுக்கும் எதிராக முறுகல் போக்கோடு இருந்த ஆனந்தசங்கரி நூலகத்தை திறந்து வைப்பதையே புலிகள் விரும்பவில்லை, அதனை தன்னிடமே கூறினார்கள் எனவும் மிக விளக்கமாக கூறுகிறார்.

அப்படியாயின் ஷோபாசக்தி எழுதிய சம்பவங்கள் பொய்யானவை மட்டுமல்ல அதன்பின்னால் ஒரு சதிவலையும் – புலியெதிர்ப்பு அணியின் தந்திரங்களும் நிறைந்திருக்கிறது.

நகரபிதா செல்லன் கந்தையன் அவர்களை சாதிய ரீதியாக தமிழீழ விடுதலைப் புலிகள் கையாண்டனர். புலிகள் ஒடுக்கப்படும் சாதியினருக்கு எதிரானவர்கள் என்ற பொய்யான கருத்தியலை உருவாக்கும் ஒரு செயற்திட்டம் மறைந்திருந்திருக்கிறது. சாதிய ரீதியாக ஒடுக்கப்படும் சனங்களின் மீட்சிக்குரல்களுக்கு ஆதரவாளர்களாக தம்மைக்காட்டி நிற்கும் இவர்களின் போலி முற்போக்குத்தனங்கள் புலியெதிர்ப்புவாத சந்தையில் பண்டமாகி நாட்கள் ஆகிவிட்டன. இவர்களின் போலிச் சாதி எதிர்ப்புக் கோஷங்களுக்கு பின்னால் எத்தனை எத்தனை சூதுகள் – எத்தனை எத்தனை லாபங்கள். இன்னும் எத்தனை எத்தனையோ. யான் அறியேன் பராபரமே.

இனிவரும் பகுதிகளை செவியுள்ளோர் கேட்கக்கடவர்.

3
யாழ்ப்பாண நூலகத்தினை 2003 ஆம் ஆண்டில் திறந்து வைக்கவிருந்தவர் அன்றைய நகரபிதாவான பெருமதிப்பிற்குரிய செல்லன் கந்தையன் இல்லை. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வீ.ஆனந்தசங்கரி அவர்களே. அவரொரு ஈழத்தமிழ் மிதவாத அரசியல்வாதி. அவர் சமூக அடுக்கில் ஒடுக்கும் சாதியான வெள்ளாளர். ஆக யாழ்ப்பாண நூலகத்தினை 2003ல் திறந்துவைக்க இருந்தது வெள்ளாள சமூகத்தைச் சேர்ந்த ஒரு அரசியல்வாதியே தவிர, ஒடுக்குமுறைக்குள்ளான சமூகத்தைச் சேர்ந்த யாழ்ப்பாண நகரபிதாவாக இருந்த திரு.செல்லன் கந்தையன் அவர்கள் இல்லை என்பதே பேருண்மை. அதற்கு சான்றாக அந்த நிகழ்வின் அழைப்பிதழை இணைக்கிறேன். அதே நேரத்தில் நகரபிதா செல்லன் கந்தையன் அவர்கள் இருந்த அரசியல் கட்சியின் தலைவராகவும் இருந்தவர் வீ.ஆனந்தசங்கரி. அவரை அழைத்து வந்து இந்த நூலகத்தை திறந்து வைக்க நகரபிதா செல்லன் கந்தையன் விரும்பியிருக்கலாம். அல்லது அப்போது ஆனந்தசங்கரியின் நெருக்குதலின் பேரில் கூட அவரை அழைத்திருக்கலாமல்லவா?

உண்மையில் இந்த நூலகத்தை இதற்கு முன்னைய காலங்களில் ஒரு அரசியல்வாதி திறந்து வைத்தது கிடையாது. பதவியில் இருந்த நகரபிதாக்களே திறந்தனர். அப்படியெனில் இந்த மரபு மீறப்பட்டதன் பின்னால் எந்த நெருக்கடிகளும் இருந்திருக்காதா? இந்தப் பிரச்சினையில் குரலுயர்த்தும் இந்தப் போலிச்சாதிய ஒழிப்பாளர்கள் ஒரு சொல் வீசி ஆனந்தசங்கரியை கேள்வி எழுப்ப விரும்பார். ஏனெனில் புலியெதிர்ப்பும் – அவர்களின் சுயசாதியக் கூட்டும் அவர்களிடம் இருக்கிறது. ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக தம்மை அடையாளப்படுத்தும் இந்தப் போலிக் கருத்தியல்வாதிகள் தமக்குள்ளும் தமது குருதிக்குள்ளும் ஒடுக்கும் – ஆதிக்கம் செலுத்தும் மரபையே கொண்டிருக்கின்றனர்.

இந்தப் பிரச்சினை தொடர்பாக சமூக வலைத்தளங்களில் இற்றைக்கு பத்து ஆண்டுகளுக்கு மேலாக விவாதித்து வருவதோடு இந்தப் பொய்களை இன்று இரத்தச் சாட்சியோடு அடையாளப்படுத்திய எழுத்தாளர் சயந்தனும் – சோமிதரனும் புலியெதிர்ப்புவாத – போலிச் சாதியொழிப்புவாதிகளால் சீண்டப்படுகின்றனர். அத்தோடு அவர்கள் எழுத்தாளர் சயந்தனையும் – ஆவணப்பட இயக்குநர் சோமிதரனையும் நோக்கி எழுப்பும் கேள்விகள் பரிதாபகரமானவை.

ஏன் இந்தத் தள்ளாத வயதில் இருக்கும் முன்னாள் நகரபிதாவை போய் நேர்காணல் கண்டீர்கள்? ஏன் நேர்காணல் செய்பவரின் முகத்தைக் காட்டவில்லை? நேர்காணல் செய்தவருக்கு சம்பளம் கொடுத்தீர்களா? ஆவணப்படம் எப்படி எடுப்பதென சோமிதரனுக்கு தெரியாதா? ஏய் யாழ்ப்பாணத்து சாதி வெறியர்களே,இன்னும் எத்தனை எத்தனை வீடியோக்களை எடுப்பீர்கள் என கேட்கும் பலரும் அந்த மூன்று நிமிட காணொலிச் சாட்சியைப் பற்றியே பேசுகிறார்கள்.

அதில் செல்லன் கந்தையன் இன்று சொல்லுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அன்று சொன்னது தான் உண்மை என மல்லுக்கு நிற்கும் கல்விமான்களும் – எழுத்தாளர்களும் – எதிர்புரட்சியாளர்களும் – ஒத்தோடிகளும் மாறிமாறி எழுதும் பதிவுகளைக் கண்டால் உண்மைக்கு எத்தனை வீரியம், அது அநீதியாளர்களையும் இட்டுக்கட்டுபவர்களையும் குலைநடுக்குவிக்கிறது என்றே நினைக்கத் தோன்றுகிறது. அப்படியென்ன? செல்லன் கந்தையன் கடந்த காலத்தில் சொன்னார்.

“யாழ் மாநகர சபையின் முன்னாள் முதல்வர் செல்லன் கந்தையன் 01.03.2003ல் ‘டெய்லி மிரர்’ பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியிலிருந்து ஒரு பகுதி: “இந்த நூலகம் திறக்கப்படுவதால் புலிகளுக்கு எதுவித பிரச்சினையுமில்லை. அவர்கள் நூலகம் திறப்பதைத் தடுத்ததிற்குப் பின்னால் வேறோரு காரணமுள்ளது என்றே நான் கருதுகிறேன். நான் இந்த நாட்டின் சிறுபான்மைச் சமூகத்துள் ஒரு சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவன். யாழ் பொதுநூலகத் திறப்புவிழாக் கல்வெட்டில் ஒரு தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவனின் பெயர் பொறிக்கப்படுவதை அவர்கள் விரும்பவில்லை. ஆம் புலிகள் முற்று முழுதாகச் சாதிய அடிப்படையிலேயே இப் பிரச்சினைகளை அணுகினார்கள் என்றே நான் நினைக்கிறேன்”.

நகரபிதா அவர்களின் இந்தக்கூற்று ஆனந்தசங்கரியின் அழுத்தத்தின் பேரில் புலிகளுக்கு எதிராக உருவாக்கப்பட்டிருக்கலாம். பழுத்த மிதவாத அரசியலாளரின் திட்டமிட்ட புலியெதிர்ப்பு சூழ்ச்சி அரசியலுக்கு நகரபிதா செல்லன் கந்தையன் அழுத்தங்களை எதிர்கொண்டு இப்படியாக கூறியிருக்கலாம்.

ஒடுக்கப்படும் சமூகத்திற்கு புலிகள் அநீதி இழைத்துவிட்டதாக ஒரு சித்திரத்தை உருவாக்க யாழ்ப்பாண வெள்ளாள மிதவாத அரசியல் வெட்டிய அகழியாகவும் கருதலாம்.இவற்றைக்கடந்து கடந்தகாலங்களைப்போல எந்த அரசியல் நெருக்கடியும் இல்லாதவொரு காலத்தில் அரசியல்களத்தில் சம்பந்தப்பட்ட புலிகளுமில்லை – ஆனந்தசங்கரி இப்போதுவரை அதிகாரத்திலுமில்லாத இன்றைய நாட்களில் முன்னாள் நகரபிதா இதுகுறித்து கூறியிருக்கும் கருத்தினை நாம் பொருட்படுத்த வேண்டும்.

அவர் அப்போது பேசியதை மட்டுமே தமது பொய்பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய சாராருக்கு இந்தக் கூற்றின் மூலம் நகரபிதா செல்லன் கந்தையன் கொஞ்சம் கசப்புமிக்க ஒருவராக ஆகியிருக்கிறார். ஆனால் எழுத்தாளர் சயந்தனும் – ஆவணப்பட இயக்குநர் சோமிதரனும் இந்தக் காணொலியின் மூலம் ஏற்படுத்திய அதிர்வுகள் கொஞ்சமல்ல.

எழுத்தாளர் ஷோபாசக்தி அவர்கள் இந்தச் சர்ச்சைக்குரிய கட்டுரையில் ஏற்பட்டிருக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட தகவற்பிழைகளை ஒப்புக்கொண்டு அதனை இப்போது தனது இணையத்தளத்தில் மாற்றம் செய்துமிருக்கிறார். ஆனால் ஒருவர் யாரென்று தெரியாமல், அவர் ஒருவரா இருவரா என்று தெரியாமல் கூட ஒரு திரில்லர் வகையான புனைவாக ஷோபா இவ்வாறு எழுதியிருப்பார்.

“12.02.2003 வன்னியில் இருந்து வந்திருந்த விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் சொலமன், இன்னொரு புலி உறுப்பினர் சிறில், மற்றும் இன்றைய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் புலிகளின் முன்னணி அமைப்பான சர்வதேச மாணவர் பேரவையின் அன்றைய தலைவருமான கஜேந்திரன் ஆகியோர் மாநகரசபை அலுவலகத்திற்குள் நுழைந்து நூலகத்தை திறக்கக்கூடாது என செல்லன் கந்தையனை எச்சரித்தனர்.அன்றிரவு பதினொரு மணியளவில் புலிகள் யாழ் பொதுநூலக வளாக காவலாளியை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி அவரிடமிருந்து பிரதான வாயிற்சாவி,நூலக மற்றும் அலுவலக சாவிகளை அபகரித்துச் சென்றனர்.”

இப்போது இதில் இருக்கும் பிழைகளும் – கருத்தியல் மோசடிகளும் எவ்வளவு பாரதூரமானவை என்று பார்த்தால் விடயம் விளங்கிவிடும். வன்னியில் இருந்து வந்தவர்களாக சொல்லப்படும் “சொலமன், சிறில்” முதலில் புலிகள் இயக்க உறுப்பினர் அல்லர். அவர்கள் இரண்டுபேர் அல்ல. சொலமன் சிறில் என்ற பேர்கொண்ட ஒருவரை இருவராக்கி அவரை புலியாக்கி எழுதப்பட்டிருக்கும் இந்த விநோதமான தகவற்பிழையை ஷோபா ஒப்புக்கொண்டு இப்போது மாற்றம் செய்திருக்கிறார். அதாவது ஈரைப் பேனாக்கி பேனைப் பெருமாளாக்குவது போல எழுதப்பட்ட இந்தக் கட்டுக்கதையில் இப்படி எத்தனையோ தகவற்பிழைகளும் – கண்மூடித்தனமான புலியெதிர்ப்பு பிரச்சாரங்களும் தான் எஞ்சி நின்றன. நகரபிதா செல்லன் கந்தையன் அவர்களை விடுத்து – இந்த விவாதத்தின் பிரதான இடம்வகிப்பவருமான ஊடகவியலாளர், ஆவணப்பட இயக்குநர் சோமிதரன் யாழ் நூலக திறப்புச் சர்ச்சையில் நேரடிச்சாட்சியாக இருப்பவர். அந்தக் காலகட்டத்தில் அவர் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையொன்று இதற்கு இன்னுமொரு ஆவண சாட்சி.

அதுமட்டுமல்லாது கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக புலிகள் செல்லன் கந்தையன் அவர்களை மிரட்டவில்லை என்பதை தொடர்ச்சியாக முகநூல் – மற்றும் இதர சமூக வலைத்தள விவாதங்களில் ஸ்தல சாட்சியாக நின்ற சோமிதரன் கூறிவந்த போதிலும் புலியெதிர்ப்புவாத – போலிச்சாதி ஒழிப்பாளர்கள் இல்லையில்லை புலிகள் மிரட்டினர் – அடித்தனர் என மல்லுக்கு நின்றதன் நீட்சியாக இப்போது அந்த மூன்று நிமிடச் சாட்சிக் காணொலி வெளியாகி இருக்கிறது.
இப்போது என்ன தான் பிரச்சினை?

பிரச்சனையானது எழுத்தாளர் ஷோபாசக்தியின் கட்டுரையில் நிகழ்ந்திருக்கும் தகவற்பிழையை அடிப்படையாக கொண்டது. புலிகள் இயக்கத்தின் மீது கொண்டிருக்கும் காழ்ப்பையும் அவர்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கும் ஒடுக்கப்படுவோரின் அரசியலை ஊறுகாய் போல தொட்டுக்கொள்வது. இவ்விடயத்தில் சம்பந்தப்பட்ட நகரபிதா செல்லன் கந்தையன் அவர்களே அப்படி எதுவும் நடக்கவில்லை என்று சொன்னதற்கு பிறகு – இவர்கள் கொள்ளும் பதைபதைப்பும் இவர்கள் எழுதும் பதிவுகளும் எத்தனை எத்தனை வேஷங்களை தோலுரித்து விட்டது காணீர்!.

4

நீங்கள் என்ன சொல்ல வருகிறியள்?
ஓம் சொல்லுகிறேன்,கேளுங்கோ.


1.
https://www.facebook.com/plugins/video.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fsomeetharan%2Fvideos%2F10157871625743113%2F&show_text=0&width=560

இந்த மூன்றுநிமிட காணொலிச்சாட்சியம் இப்போது புலியெதிர்ப்புவாத அரச ஆதரவு தமிழ் பாசிஸ்டுகளுக்கும் ஒத்தோடிகளுக்கும் கடுமையான கொதிப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது. ஷோபாசக்தியின் இப்படியான தகவல் பிழைகளும் திட்டமிடப்பட்ட நோக்கங்களும் – பொய்களும் இப்போது விழிபிதுங்கி நிற்கின்றன. சாதியொழிப்புச் செயற்பாட்டாளர்கள் என்று தம்மை சொல்லிக்கொண்டு அதனை தமது புலியெதிர்ப்பு வாத சந்தர்ப்பவாத அரசியல்களுக்கு மட்டுமே பயன்படுத்தும் அனைத்து யாழ்ப்பாண மேட்டுக்குடி வெள்ளாள சாதிய நோய்மை கொண்ட அறிவு ஜீவிகளும் இப்போது அடைந்திருக்கும் பதற்றத்தை பார்க்கையில் உண்மைக்கு எத்தனை வல்லபம் என்று மகிழ முடிகிறது. இவர்களில் பெரும்பாலானோருக்குள் “நிலவிலே பேசுவோம்”மனநிலை இருப்பதை நம்மால் உணரமுடியும். ஒடுக்கப்படும் சமூகத்திற்கான குரல்களாக தம்மை வெளிப்படுத்தும் இவர்களுக்குள் சுருண்டுகிடக்கும் சாதி வெறி அரவத்தின் கோரப் பற்களை யாம் அறிவோம்.

2

இந்த விவாதமொரு எடுத்துக்காட்டு – தனிமனித தாக்குதல்கள் – வசைகள் ஏதுமற்று நிகழ்த்தப்படும் ஒரு அரசியல் – சமூக – விமர்சன விவாதமாக உருக்கொண்டு நிற்கிறது. ஆகையால் இந்த விவாதம் எல்லோருக்கும் ஒரு எடுத்துக்காட்டு. இங்கே யாரும் யாரையும் காழ்ப்போடும் வசவுகளோடும் சீண்டவில்லை. அப்படி அவதூறுகளால் எழுதப்படும் வசைச்சொற்களை இந்த விவாதம் தூக்கி வீசுகிறது. இங்கே இனியொரு அந்தப் வசைப்பண்பாட்டிற்கு இடமில்லை. அவரவர் தரப்பில் நின்றுகொண்டு மிகப்பிடிவாதமாக கதைத்துக் கொண்டிருக்கின்றனர். இங்கே நிகழ்வது விவாதம். காழ்ப்பின் வேட்டை அல்ல. இந்தச் சம்பவத்தை முன்வைத்து எழுத்தாளர் ஷோபாசக்தி மீது தொடுக்கப்படும் காழ்ப்பையும் – வசவுகளையும் அடியோடு மறுக்கிறேன். அப்படியான போக்குகள் நமது உரையாடல் பண்பாட்டின் மீது கறைபடியும் செயல். இப்படியான வசவுகளை எந்தத் தரப்பிலிருந்து யார் நிகழ்த்தினாலும் அதனை கண்டிக்கவேண்டிய பொறுப்பு நாகரீக சக்திகளுக்கு இருக்கிறது. இந்தக் கட்டுரைக்கு எதிர்வினையாக என் மீதும் வசவுகளும் – காழ்ப்புகளும் எழுதிக்குவிக்கப்படும் என்பதை அறிந்தும் நான் இதனைச் சுட்டுகிறேன்.

இந்த விவாதத்தில் எங்கும்போல இங்கும் இரண்டு தரப்புதான். உண்மை – பொய். நான் திரு.செல்லன் கந்தையன் தரப்பு. அதாவது உண்மையின் தரப்பு.. புலிகள் சாதியவாதத்திற்கு ஆதரவாக எப்போதும் நின்றதில்லை. புலிகள் இயக்கத்தின் ஆரம்பகால அபிமானிகள் பலர் அமைப்பிலிருந்து பிளவுண்டு போனதற்கான காரணங்களில் புலிகளின் சாதிக்கு எதிரான நிலைப்பாடே காரணம். வெள்ளாளத் தலைமையற்ற ஒரு விடுதலை இயக்கமாக புலிகளே இருந்தனர். அந்தத் தலைமையின் கீழ் ஓரினமாய் அணிதிரண்டனர் ஈழச்சனங்கள் என்பதே விடுதலைப் போராட்ட வரலாறு.

3
மேற்கொண்டு இந்தக்கட்டுரையை நீட்டாமல் இறுவாய் ஒரு கருத்து. எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் “இடக்கை” நாவலில் ஒரு காட்சியுண்டு. தனது மரணத்தைப் பற்றி தெரிந்து கொள்ள மன்னர் ஒளரங்கசீப் பாலைவனத்தில் உள்ள ஞானி முகைதீன் அவர்களைச் சந்திப்பார். மன்னரின் பல வேண்டுதல்களுக்கும் இறைஞ்சுதல்களுக்கும் பிறகு அதுவரை அதனைச் சொல்ல மறுத்துவந்த ஞானி முகைதீன் சம்மதம் தெரிவிக்கிறார். ஆனால் அதற்கொரு கைமாற்றாக பாலைவனத்தில் இருக்கும் கிணற்றில் இருந்து உள்ளங்கையில் நீர் எடுத்துவரவேண்டுமென ஞானி முகைதீன் கூறுவார். மாபெரும் பேரரசின் மன்னன் அதனை மிக சாதாரணமாக எடுத்துக்கொண்டு நான் அதனை செய்வதாக உத்தரவாதம் தருகிறார். அதன்பிறகு நாவலில் நிகழும் காட்சி.

“திடீரென கிணற்றில் சரசரவென ஊர்ந்துவரும் சப்தம் கேட்டது. ஆச்சரியமாக இருந்தது. தண்ணீர் கிணற்றின் உச்சிவரை உயர்ந்திருந்தது. அவர் அல்லாவின் கருணைக்கு நன்றி தெரிவித்தபடியே தண்ணீரில் உள்ளங்கை அளவு அள்ளிக்கொண்டு ஞானி முகைதீனை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.
நடக்க நடக்க கையிலிருந்த தண்ணீர் வடிய ஆரம்பித்தது. இரண்டு கைகளையும் ஒன்றாக இறுக்கிய போதும் தண்ணீர் கசிவதை நிறுத்த முடியவில்லை. ஞானி முகைதீன் முன்னால் அவர் கைகளை விரித்தபோது அதில் ஒரு சொட்டுத் தண்ணீர் இல்லை.”

முகைதீன் சிரித்தபடியே சொன்னார்.

“வெறும்கையாக உள்ளது. ஒருதுளித் தண்ணீரைக் கூடவா பாதுகாப்பாக கொண்டு வர முடியவில்லை?”

ஆத்திரமான ஒளரங்கசீப் மறுபடியும் அதே கிணற்றடிக்கு ஓடினார். தண்ணீரை மன்றாடி அழைத்தார். கைகள் நிறைய அள்ளிக்கொண்டார். ஆனால் ஞானி முகைதீன் முன்னால் சென்றபோது கையில் ஒரு சொட்டுத்தங்கவில்லை. விடியும் வரை ஓடியோடி தண்ணீர் அள்ளிவந்து களைத்துப் போய் அவர் முன்னால் விழுந்த ஒளரங்கசீப் சொன்னார்.

“ஒரு துளித் தண்ணீரைக் கூட என்னால் காப்பாற்ற முடியவில்லை.”

ஒரு புரிதலுக்காக, இந்த உரையாடலில் வருகிற கிணற்று நீர் – புலி எதிர்ப்புவாதிகளின் பொய்யூற்றாகவும் – இதில் வருகிற மன்னரை புலியெதிர்ப்புவாதிகளாகவும் பொருள் கொண்டால் ஞானி முகைதீனாக உண்மை உருவகம் கொள்கிறது. உண்மைக்கு முன்னால் இவர்களின் பொய்களைக்கூட இவர்களால் காப்பாற்றமுடியவில்லை. ஏனெனில் இவர்களின் கைகளில் கறைகள் ஏராளம்.

பொய்கள் ஒழிக ! புரட்டுக்கள் ஒழிக ! போலிகள் ஒழிக! சாதிகள் ஒழிக!
என்றபடிக்கு இந்தக் கட்டுரை தன்னை நிறைவு செய்து கொள்கிறது.

-அகரமுதல்வன்
20.06.2020
https://nedunilam.blogspot.com/

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here