Thursday, December 5, 2024
Homesliderபொன்னுலகம்

பொன்னுலகம்

மணி எம் கே மணி

செல்லை எடுத்தேன். தங்கை எதுவும் பேசாமல் விசும்பிக் கொண்டிருந்தாள். எனக்கு விஷயம் புரிந்து விட்டது. ஹாஸ்பிடலில் அட்மிட் பண்ணப்பட்டிருந்த அம்மா இறந்து விட்டாள். அவ்வளவுதான், அது முடிந்து விட்டது. இரண்டு அல்லது மூன்று மணிநேரத்துக்குள் நான் அங்கே வந்துவிடுதாகக் கூறி சென்னையில் இருக்கின்ற முக்கியமான நண்பர்களுக்கு விஷயத்தை அறிவித்தேன். கேரளாவில் அம்மாவிற்கு கணக்கற்ற சொந்தங்கள் உள்ளன. அவர்களுக்கு விஷயம் சொல்லுவதை தம்பி ஏற்றுக்கொண்டான். எனக்கு மலையாளம் சரியாக வராது, சொந்த பந்தங்களுடன் பேசுவதும் வரவே வராது. நான் ECR-இல் ஒரு ரெசார்ட்டில் நடந்து கொண்டிருந்த கதை விவாதத்தை நிறுத்திவிட்டு டாக்சி வந்ததும் புறப்பட்டேன்.

என் அம்மாவின் அம்மாவுடைய சாவிற்கு கேரளா போன நினைவு எதற்கோ முட்டி மோதுகிறது. எண்பத்தி எட்டாக இருக்கலாம். டிசம்பர் மாதம். சீரியஸ் என்று தந்தி வந்ததும் அப்பா இந்த முறை தவறாது, கிளம்புங்கள் என்று என்னையும் அம்மாவையும் அனுப்பி வைத்தார். அதிகாலையில் கிளம்பி இரவு மூடுவதற்குள் அங்கு போய் சேர்ந்து விட்டோம். ஆண்கள் யாரும் இல்லாத வீட்டில் தன்னை ஒரு ஆணாகவே வைத்துக்கொண்டு ஓடியாடி உழைத்து ஐந்து பெண்களை கரையேற்றின வீராங்கனை அது. ஸ்கூல் விடுமுறைக்கு ஒருமுறை ஊருக்கு வந்திருந்தபோது பல இரவுகளிலும் பல கதைகள் கேட்டு அவளது முலைகளில் தூங்கியிருக்கிறேன். அம்மா சில தருணங்களில் சொல்ல வேண்டி வந்த வாழ்வுத் தருணங்களில் எனது அம்மம்மாவைப் பற்றின விவரணை எனக்குள் ஊடுருவியிருந்தது என்றே சொல்ல வேண்டும். ஒருவேளை பசியைக் கடந்து போக அக்குடும்பம் செய்த சாகசங்கள் அவை. மனிதர் தமது உயிர் வளர்ப்பதை கற்று அறிந்ததில் அம்மம்மாவை நான் ஒரு நெகிழ்வாக, குழையாமல் இருக்க முடியாது. இறந்து விட்டிருந்தார்கள். தோட்டத்தில் இறுதி சடங்குகள் நடக்கும்போது அவ்வப்போது பல வாழைமரங்களுக்குப் பின்னால் ஒதுங்கி கண்களைத் துடைத்து விட்டு வந்தேன். மற்ற ஆண்பிள்ளைகளைப் போலவே நடந்து கொண்டேன்.

பதினாறு நாட்களுக்கு அப்புறம்தான் சென்னைக்குக் கிளம்புவதை நினைக்கலாம்.

சாவு வீட்டின் சம்பிரதாயங்கள் மூச்சைத் திணற வைப்பவை.

மூன்றாவது நாள் நானும் உண்ணியும் அவனது வீட்டுக்குப் புறப்பட்டோம். எனது பெரியம்மாவின் மகன் அவன். திருமணமானவன். பக்கத்து வீட்டில் கொடுக்கப்பட்டிருந்த சாவியை வாங்கிக்கொண்டு வந்து பூட்டைத் திறந்தான். எங்கு பார்த்தாலும் அவனது குழந்தையின் விளையாட்டுச் சாமான்கள் இறைந்து கிடந்தன. அவனது மனைவியின் உடைகள் கூடத்தான். செய்தி வந்ததும் எல்லாவற்றையும் அப்படியே போட்டுவிட்டுக் கிளம்பியிருக்க வேண்டும். உண்ணி எல்லாவற்றையும் அடித்துப் பெருக்கி சீராக்குவதற்குள் அவனது நண்பர்கள் ஒவ்வொருவராக வந்து சேர்ந்தார்கள். சமைப்பது பற்றி பேச்சு வந்து அதற்கான வேலைகள் தொடங்கின. அடுத்த வீட்டுக்காரரான அன்வர் மாஷ், நொண்டியவாறே வந்து ஒரு சட்டி நிறைய மீன்களைக் கொடுத்துவிட்டுப் போனார். நான் கொஞ்சம் நடந்தேன். அந்தி கூடிக் கொண்டிருந்தது. ஆனைக்குழி தோட்டில் மீன்கள் துள்ளுவதை பொன் வர்ண வெயிலோடு பார்க்க ஒரு கவிதை மனநிலை கிறங்கியது. சென்னையில் நான் விரும்பக்கூடிய பெண்ணுடன் அக்காட்சியைப் பார்ப்பதாக நினைத்துக் கொள்ளும்போது ஒன்று பிடிபட்ட மாதிரியும் இருந்தது. சற்று உல்லாசமாகவேதான் திரும்பினேன். இரவு எட்டி விட்டது. குப்பிகள் வந்து விட்டிருந்தன.

நிறையப் பையன்களுக்கு நன்றாகப் பாட வந்தது.

பலரும் அப்படிப் பாடி, கடைசியாக பாடத் தெரியாதவர்கள் கத்த ஆரம்பிக்கவே அன்வர் மாஷ் கையெடுத்துக் கும்பிட்டு பாட்டு புரோக்ராமை நிறுத்தினார்.

முந்திரிச் சாராயம். அதை விழுங்கின மறுநிமிடம் அது ஓடுகிற வழியெல்லாம் தெரியும். வயிற்றில் குளம் கட்டிக் கொப்பளித்த பிறகு பூக்கள் மலர்த்துவது தெரியும். அவர்களைப் போல குடிக்க முடியாதென்றாலும் நம்பிக் குடிக்க முடிகிற சரக்கு. மாட்டிறைச்சியை விட அன்று பாலன் வீட்டுக் கிணற்றில் பிடித்த பச்சைத் தவளையைப் பொறித்திருந்தார்கள். அது அவ்வளவு ருசி. அது போலவே இந்த மாதிரி சபைகளுக்குப் பொருத்தமான பச்சை காஜா. நடுநடுவே அணைந்து போகிற பிஸ்னசே கிடையாது. நாலு புகை ஏறினதும் கொஞ்சம் நஞ்சமிருந்த வெட்கத்தை விட்டு நான் பேச ஆரம்பித்தேன். என் மீது பெரிய பெருமிதம் வைத்திருந்த அவர்கள் அதற்கு நிறைய இடம் கொடுப்பார்கள்.

முதலில் புழை ஓர் அழகுள்ள பெண்ணு பாட்டை ஒன்ஸ்மோர் கேட்டேன்.

உண்ணியுமே அற்புதமாக பாடினான்.

ஆலுவா நதி என்கிற பெண் ஒரு பால்காரியாம். வயலிலுள்ள நெல்லுக்கும் கரைகளிலுள்ள மரங்களுக்கும் பாலை எடுத்துக் கொண்டு ஓடுகிறாளாம். அவளுக்கு தனக்குள் அடங்காத பைத்தியமும் இருக்கிறது. அவளை வந்து பார்க்கிறவர்கள் சொல்கிறார்கள். அது கேட்டு நெஞ்சு பிசஞ்சி, கால் கொலுசெல்லாம் ஊறி எறிஞ்சு அத்தனை துயர்களையும் நெஞ்சில் அடக்கிக்கொண்டு ஆலுவா நதி ஆழிக்குப் பாய்ந்த கதை அது ! கேட்கக் கேட்க அழுகை வரும். தொடர்ந்து கேரளாவின் பொருளாதாரம் பற்றின சந்தேகங்களைப் பற்றி கேட்க ஆரம்பித்தேன். நாட்டின் பாதி ஆண்கள் வளைகுடா நாடுகளில் அல்லவா இருக்கிறார்கள்?

இக்காலத்தைய பையன்கள் டைனிங் டேபிளில் உட்கார்ந்து புல்சாய் சாப்பிடுவது பற்றி பேச்சு வந்ததும் நான் கிழங்குகள் சாப்பிட்டு வயிற்றை அடக்கின காலம் பற்றி என் அம்மா சொன்னதைச் சொல்லும்போது அன்வர் மேலும் அதைத் தொடர்ந்தார். அவர் கம்யுனிஸ்டாக மட்டுமல்ல, நக்ஸலைட்டாகவும் இருந்தவர். பலகாலம் பல வழக்குகளுக்காக தூக்கில் தொங்க இருந்தவர். ஒரு பொது மன்னிப்பில் இன்று உயிரோடு இருக்கிறார். குந்தப் பறம்பில் மேனன் குடும்பத்தினர் போலீசில் காசைக் கொடுத்து அவருடைய காலை உடைத்தார்கள். அன்வரும் அவரது இயக்கத்தினரும் தான் மக்களின் ரத்தம் குடித்திருந்த வல்லிய மேனனை குத்திக் கொன்றிருந்தார்கள். எவ்வளவு பயங்கரமான கதைகள்? இறந்து போன மேனனின் தலையை கரகரவென அறுத்து எடுத்துக்கொண்டு ஜங்ஷனில் இருந்த பஸ் ஸ்டாண்ட் சுவரில் வைத்து விட்டுப் போகும்போது அன்வரின் நண்பன் அந்த முண்டத்தின் தலையை வாரி வைத்து விட்டு வந்தானாம். அவன் பிடிபட்ட அன்றே என்கவுண்டரில் தீர்த்துக் கட்டப்பட்டான். என்னையும் கூட பிடிபட்ட அன்று காலை உடைத்ததுடன் பூட்ஸ் காலால் தொடர்ந்து எனது ஆணுறுப்பில் மிதித்து சிதைத்தனர், அதனால்தான் பின்வந்த காலங்களில் யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றார் அன்வர். புரட்சி செய்யப் புறப்படும்போது எவ்வளவு ஆர்வக்கோளாறாக இருந்தேனோ காதல் செய்வதிலும் பெரும் பதட்டம் கொண்டவனாக இருந்தேன் என்றார் அவர்.

அவரது சிரிப்பு, சிரிப்பா அது, அதை சென்னை பாஷையில் மட்டும்தான் கூற முடியும். அது அவ்வளவு பேஜாராக இருந்தது.

“உங்க ஆள் ரொம்ப அழகா மாஷ்?”

“ஹா ஹா ஹா ஹா !”

“செமத்தியான லவ்வோ?”

“அவள நான் என்னன்னு உன்கிட்ட சொல்றது? மரத்தடி கிளாஸ்ல இருந்து தொடங்கறதாச்சே, அத எப்படி சொல்ல முடியும்? அம்மு என்ன பாத்துகிட்டே இருப்பா. அவள பாக்கும் போதும், பாக்காத போதும். அந்த ஊர்ல இருந்தாலும், வேற ஊர்ல இருந்தாலும். ஏழு கிலோமீட்டர் நடந்து யாருக்காகவோ, அவங்க தர்ற பிச்சைக்காசுக்காக அங்காடில பாக்கு மூட்டையை எறக்கி அதை எல்லாம் வித்துட்டு திரும்பி வரும்போது கூட எனக்கு களைப்பே தெரியாது. அவ பார்வை என் கண்ணு முன்னால இருக்கும். இத எல்லாம் லவ்வுன்னு எல்லாம் சொல்ல முடியாதுடா. அதுக்கெல்லாம் மேலே. இங்க பார். ஒரு உயிரு இன்னொரு உயிரு மேல இப்படி ஓட்டிகிட்டு இருந்திச்சு ! அதான். அவ்வளவு தான் !”

“அப்புறம் என்ன மயிருக்கு லவ்வ விட்டுட்டு புரட்சி பண்ண ஓடிப் போனீங்க மாஷ்?”

“பசி !”

விழுந்து விட்ட அமைதியை நாங்கள் குடியை ஊற்றுவதற்கும் விநியோகிப்பதற்கும் பயன்படுத்திக் கொண்டோம். நான் இப்போது குடியின் சுகத்தை மெச்சிக் கொண்டேன்.

“டேய், நீ இளங்காட்டு ராஜா. உன் வயசுக்கு லவ் ஸ்டோரி கேக்குது. நான் நல்லா இருந்தா மட்டும் அந்த பொண்ண கட்டிக்க ஏன் வீட்டில விட்ருப்பான்களா? இல்ல, அவ வீட்டில தான் சம்மதிச்சிருப்பாங்களா? துஷ்டர்களோட ஊருடா இது. வெட்டிகிட்டு குத்திகிட்டு செத்துருக்க மாட்டோம்? வாழ்ந்துருக்க முடியுமா?”

எல்லோரும் ஒரு கட்டத்துக்கு அப்புறம் நிலைகுலைந்த பிறகு அன்வர் ஒரு பாட்டு பாடினார். அம்முவிற்கு சொல்லிக் கொடுத்திருக்கிறேன். ஒருமுறை இருவருமே சேர்ந்து பாடினோம் என்றார், மிகவும் சோர்ந்திருந்தார். முழுவதுமான உச்சரிப்பு வராமல் தழுதழுத்துக்கொண்டு இழுவையாக பாடினார்.

“அநீதி போகும்
அல்லல்கள் போகும்
அன்று நம் தோட்டங்களில்
பூங்குருவி பாட வரும்
அநீதி போகும்
அல்லல்கள் போகும்
அன்று நம் நீர்வயலில்
நமக்கான மீன்கள் துள்ளும்
அநீதி போகும்
அல்லல்கள் போகும்
அன்று நாம் மகிழ்ந்திருக்க
பொன்னுலகம் வந்து விடும் !

எனக்கு தெரிந்த பாட்டுதான் இது. ஏற்கனவே அம்மா சொல்லிக் கேட்டிருக்கிறேன். ஊரில் இருந்து திரும்பிக் கொண்டிருக்கையில், உட்கார்ந்து தூங்கியவாறு வந்த அம்மாவைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஊருக்கு உழைக்கப் போய் ஒன்றுக்கும் பயன்படாமல் மிஞ்சிய அன்வர் மாஷ் விரும்பிய அம்மு இவள்தான் ! அதைக் கண்டுபிடிக்க எனக்குப் பெரிய சிரமங்கள் ஒன்றும் உண்டாகவில்லை. அம்மாவே தனது கதைகளில் பெரும் வீரனாக சித்தரித்த இவரது பெயரை பலமுறை கேட்டிருக்கிறேன். அம்மம்மா உள்ளிட்ட நான்கு மகள்களும் கூலிவேலைக்குப் போகும்போது அம்மாவை பெரியம்மா வீட்டில் தான் இருக்க வைத்திருந்தார்கள். பள்ளி படிக்கப் போவதாக ஐந்து வரை படித்ததும் எனது அம்மா மட்டும்தான்.
இதெல்லாம் எதற்கு? என்னை வருடியவாறே இருந்த மாஷின் கண்களில் இருந்த வாத்சல்யத்தைப் புரிந்து கொள்ள முடியாத முட்டாள் கிடையாது நான்.

இதெல்லாம் முடிந்து கொஞ்ச காலத்துக்கு அப்புறம் அம்மா ஒருமுறை பெரிய உள சோர்வும், அதனால் கொஞ்சம் உடல் பலவீனமும் அடைந்தாள். மருத்துவத்தை மிஞ்சி நோய்கள் பெருகுவது போல தோன்றியது. எனக்கு எனது பிரச்சினைகள் என்று அவளது முகம் பார்க்காத காலமாக இருந்த போதிலும், அன்று நேரத்தைக் கண்டடைந்து கொண்டு அவள் பக்கத்தில் அமர்ந்து பலவும் பேசினேன். வெகு சாதாரணமாக சொல்லுவது போல உனக்கு இந்தப் பாட்டு நினைவில் இருக்கிறதா என்று கேட்டபோது எழுந்து உட்கார்ந்து கொண்டு விட்டாள். சிறு வயதில் பலமுறையும் எனக்குச் சொன்ன கதைகளை முதலில் இருந்து சொல்ல ஆரம்பித்து அப்புறம் அதை அவளுக்கு முடிக்கவே மனசில்லை. ஒரு சந்தேகமுமில்லை. அன்வரின் பெயரைச் சொல்லும்போதெல்லாம் இடுங்கியிருந்த அந்தக் கண்களில் ஒளி எழுந்தவாறிருந்தது. நான் என் புன்னகையை அடக்க படாத பாடுபட்டேன். அந்த படுக்கை காண்டம் அன்றுடன் முடிந்து விட்டது என்பதே வாஸ்தவம்.

வாய் திறந்திருக்கிறது.

சடலமாகக் கிடக்கும்போது கூட எனது அம்மா அழகிதான் என்று நினைக்க வந்தது. சந்தேகமில்லை, ஆளுமையுடன் கூடிய வாழக்கைதான். ஆனால் மறுபக்கத்தில் இந்த சம்சார பந்தம், சூத்துக்கழுவும் புள்ளக்குட்டி வளர்ப்பு போன்றவைகள் எல்லாம் என்ன என்கிற கேள்வியெல்லாம் வந்து போயிற்று. அன்வரைக் கட்டியிருந்தாலும் இதெல்லாம்தானே? நான் வாழ்வை யோசித்துப் பிதுங்கி முடியாமல் வெளிவந்தேன். அவளை எரிக்கும்போது பொன்னுலகத்தை எதிர்பார்த்த அந்தப் பாட்டு மனதில் வந்து போயிற்று என்றாலும் கடலில் சென்று விழுகிற நதியைப் பற்றின பாடல்தான் திரும்பத் திரும்ப எழுந்து கொண்டிருந்தது.

எனக்கும் உண்ணிக்கும் மட்டுமே பிடித்த பாடல் அல்லவே அது, அன்வர் மாஷிற்கும் பிடித்த பாடல்.

***

மணி எம்.கே.மணி திரைத்துறையில் பணியாற்றிவரும் இவரது மீசையில் கறுப்பெழுதும் தினங்களின் காஸ்மிக் நடனம் எனும் சிறுகதைத்தொகுப்பு, வேறுசிலஆட்கள், எழும்சிறுபொறி – திரைப்படங்கள் குறித்த கட்டுரைத்தொகுப்பும் அண்மையில் மதுரவிசாரம் எனும் நாவலும் வெளியாகி நல்ல கவனம் பெற்றது. – தொடர்புக்கு – mkmani1964@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular