Sunday, October 1, 2023
Homesliderபொதுப்பசி

பொதுப்பசி

க.வசந்த்பிரபு

தூக்கத்தின் நேரம் மாறுவதைப் போலொரு கொடுங்கொடுமை எதுவுமிருக்காது. சதாசிவம் போஸ்டர் ஒட்டும் வேலை பார்ப்பதால் இரவில் முழித்து பகலில் தூங்கிப் பழகியவன். மூன்று மாதமாக எந்தப் படமும் ரிலீஸ் ஆகவில்லை. யாரும் பிறந்தநாளோ, கல்யாணமோ கூட போஸ்டர் ஒட்டிக் கொண்டாடும்படியான நிலை இல்லை. முதல் மாசம் மட்டும் தியேட்டர் ஓனரு பையன் சம்பளம் முழுசா தந்துட்டாரு. அப்பயே இனிமே படம் ரிலீஸ் ஆனாதான் சம்பளமுன்னு சொல்லிட்டாரு. பகல் தூக்கத்திற்கு 10 நாளாகத்தான் பழகியிருந்தான். தூங்கிக் கொண்டிருந்தவனை அவனது மனைவி எழுப்பிக் கொண்டிருந்தாள். பதில் குரல் மட்டும் கொடுத்துக் கொண்டு எழாமல் இருந்தவனை பேத்தி ஒரே உலுக்கில் எழுப்பினாள்.

கடைக்குபோய் பத்துரூபா எண்ணெய் பாக்கெட்டும், தக்காளியும் வெங்காயமும் வாங்கிட்டு வரசொல்லி அவனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள் அவனது மனைவி. கூடவே பைக்ல போலீஸ்காரனுங்க வர்றதுக்குள்ள போய்வந்துருங்க. அப்புறம் கடைய சாத்திருவாங்க என்று புலம்பி கொண்டிருந்தாள். பின்தெருவில் இரண்டு வீட்டில் கொரோனா தொற்று இருப்பதால், இங்கு கடைகள் திறக்க அனுமதி இல்லை. சட்டென எழுந்து கடைக்கு கிளம்பினான் சதாசிவம்.

1950, 51-ல் காலராவால தமிழ்நாட்டுல மட்டுமே 25000 பேருக்கு மேல செத்துப்போனப்ப சதாசிவத்தோட அப்பா மெட்ராஸ்ல ஒரு பிரஸ்-ல வேலை பாத்தாரு. அப்ப அவருக்கு கல்யாணம் ஆகல. அந்த காலராவ பாத்து பயப்படாத அவரு, 1964-ல சதாசிவம் பொறந்தப்ப, நாலஞ்சி வருஷமா கொறஞ்சி போயிருந்த காலரா திருப்பி ஆயிரக்கணக்கா அதிகமானதும் இந்த ஊருக்கு வந்துட்டாரு. இந்த ஊர்ல பெரிய பிரஸ் எதுவும் இல்லாததால, அப்பதான் ஊருக்கு நடுவுல புதுசா ஆரம்பிச்ச தியேட்டர்ல மாட்டுவண்டில போய் விளம்பரம் பண்ணிட்டு வர வேலைல சேர்ந்துட்டாரு. மாட்டுவண்டி போய், போஸ்டர் ஒட்டற வேலை, சிலநேரம் டிக்கட் கிழிக்கற வேலைன்னு அங்கேயேதான் சாகற வரைக்கும் இருந்தாரு. சதாசிவத்துக்கு ஒரு தம்பி இருந்தான். ராமன்னு பேரு 15 வயசு இருக்கும்போது சினிமால நடிக்கபோறன்னு சண்ட போட்டுகிட்டு வீட்ட விட்டு ஓடி போயிட்டான். திரும்பி வரவே இல்ல.. சதாசிவம் படிப்புல ஒன்னுத்துக்கும் லாயக்கில்லனு தெரிஞ்சதும் கூடவே கூட்டிட்டுப்போய் ஓனர்ட்ட பேசி தியேட்டர்லயே வச்சிக்கிட்டாரு. இப்ப தியேட்டர்ல சதாசிவம் தான் போஸ்டர் ஒட்டுறது, சிலநேரம் கேண்டீன்ல நிக்கறதுனு வேலை. சதாசிவத்துக்கு ஒரு பொண்ணு மட்டும் தான். அதையும் விழுப்புரம் பக்கத்துல பரிக்கல்-ல கட்டி கொடுத்துட்டான். அவளோட பொண்ணு தான் நேத்ரா. இப்ப இவன எழுப்பி கடைக்கு அனுப்புனதும் நேத்ரா தான்.

கடையிலிருந்து திரும்பும் போது நேத்ரா செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி விளையாடிக் கொண்டிருந்தாள், சதாசிவத்தை பார்த்ததும் அருகில் ஓடி வந்தாள், அவன் அவள் வாயைத் திறக்கச் சொல்லி வாங்கி வந்திருந்த தேன்மிட்டாயைக் கொடுத்தான். ஸ்கூல் லீவுக்கு வந்த நேத்ராவுக்கு கொரானோ லீவு ஜாக்பாட். ஆனால் சதாசிவம் கையில் பணமில்லாமல் என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டிருந்தார். இவ்வளவு வருடத்தில் யாரிடமும் கடன்வாங்கிப் பழக்கமில்லை. எதுவென்றாலும் தியேட்டர் ஓனரிடம் மட்டும் தான். அங்கேயும் படம் ரிலீஸ் ஆனாதான்னு சொல்லிட்டாங்க. இரவு, அட்டைப்பூச்சியாய் வலியோடு நகர்ந்தது. வீட்டில் ரேஷன் அரிசி மட்டும்தான் இருக்கு, பேத்தி சாப்பிடும் அரிசி இன்னும் இரண்டு நாளைக்கு தான் இருக்கிறது என்று சதாசிவத்தின் மனைவி சொல்லிய இரவு, அவன் தூக்கத்தை உண்டுவிட்டுத் தூங்கிக் கொண்டிருந்தது. காலையில் போய் ஓனரைப் பார்த்து பணம் கேட்பது என முடிவெடுத்தான்.

காலையில் மாஸ்கை மாட்டிக்கொண்டு சைக்கிளில் கிளம்பினான். காலை பத்தரை மணி ஆகியும் கூட ரோட்டில் ஒன்றும் கூட்டமில்லை. இரவு போஸ்டர் ஒட்டப்போவதை போல் இருந்தது ஊர். என்ன, சைக்கிளில் ஏணியும் போஸ்டரும் பசை வாளியும் இல்லை. ஊரில் இருள் இல்லை அவ்வளவே. மற்றபடி பின்இரவைப் போலவே தான் இருந்தது ரோடு. ஓனரின் வீடு தியேட்டருக்கு அருகிலிருந்து மூன்றாவது தெருவில் தான் இருக்கிறது. இவன் தியேட்டரைக் கடந்துதான் அங்கு போகவேண்டும். தியேட்டருக்கு அருகில் சைக்கிளை நிறுத்திவிட்டுப் பார்த்தான். தாராள பிரபு பட போஸ்டர் கிழிந்துபோய் இருந்தது. பெரிய பேனரிலும் தாராள பிரபு கலர் மங்கிப்போய் இருந்தது. தியேட்டர் பூட்டியிருந்தது.

வாசலில் இருந்த போலீஸ்காரன், அவனுக்கு தெரிந்தவர் என்பதால், “தியேட்டர் பத்தரமா இருக்கும், பயப்புடாம கிளம்பு சதாசிவம், வெளில சுத்தாத கிளம்பு கிளம்பு” என்றார். காதுக்கருகில் விலகுவது போலிருந்த மாஸ்கை சரிசெய்து கொண்டு சைக்கிளை கிளம்பினான்.

ஓனர்வீட்டுத் தெருவில் வளைந்தவன் சட்டெனச் சைக்கிளை நிறுத்தினான். தெரு முழுவதும் தகடு வைத்து அடைக்கப்பட்டிருப்பதைக் கண்டதும் நடுங்கிப் போனான். பக்கத்தில் கும்பலாக நின்றிருந்தவர்களை போலீஸ்காரன் திட்டி கலைந்து போகச் சொன்னான். அதில் ஒருவன் சதாசிவத்தைக் கடந்தபோது அவனை மடக்கி, தன் பாக்கெட்டில் இருந்த போனை எடுத்து அவனிடம் கொடுத்து, ஓனர் செந்தில்-னு இருக்கும் அந்த நம்பருக்கு கால் பண்ணித் தரச்சொல்லிக் கேட்டான். அவனிடமிருந்து போனை வாங்கிக் காதில் வைத்துக் கொண்டான் சதாசிவம். டிஎம்எஸ்-ன் உள்ளம் உருகுதையா பாடல் ரிங்காக போய்க்கொண்டே இருந்தது. பதட்டமாகவே இருந்தான். எதிர்முனையில் ஹலோ என்ற போது, “தம்பி, நம்ம வீட்டுல யாருக்கும் இல்லல” .. என்றான். ஓனரின் மகன் “அதெல்லாம் இல்லண்ணா, எதிர் வீட்டுலதான் இரண்டு பேருக்கு பாசிட்டிவ்” என்றவனிடம், “தம்பி பத்தரமா இருங்க தம்பி, அப்பாவயும் அம்மாவயும் பார்த்துக்குங்க… வெளிய எதுவும் வராதீங்க… எதுவும் வாங்கனும்னா என்ன கூப்பிடுங்க” என்று முடித்தபோது சதாசிவத்தின் குரல் மாறியிருந்தது. ஓனரின் மகன், சரிண்ணா.. சரிண்ணா நீ பத்தரமா வீட்டுல இரு என்றான். அதற்குள் அங்கிருந்த போலீஸ்காரன் சதாசிவத்தை கிளம்பச் சொன்னான். போனை இரண்டு மூன்று முறை அழுத்தி நிறுத்தி பாக்கெட்டில் போட்டுக்கொண்டு சைக்கிளை வீட்டுக்கு திருப்பினான்.

பணம் கேட்கலாம் எனச் சென்றவனால், அதைக் கேட்கவே முடியாமல் வீட்டிற்கு போய் கொண்டிருந்தான். மகளை கட்டிக் கொடுத்து, 50 வயதுக்கும் மேலாகியும் எப்போதாவது இப்படி ஓடிப்போன தம்பி குறித்த கவலை தொற்றும். 1990-க்கு பிறகு வந்த ரஜினியின் பாண்டியன் படத்தில் ஒரு சண்டைக்கு, அடுத்து வரும் காட்சியில் போலீஸ் ரஜினியைக் கைது செய்யப்போவதாய் சொல்லும்போது, பாண்டியனை கைது செய்யாதே… பாண்டியனை கைது செய்யாதே… எனச் சொல்லும் இருபது பேரில் ஒருவனாக, கோடுபோட்ட சட்டை போட்டு சுருட்டை முடியோடிருந்த ராமனைப் பாரத்துவிட்டு அப்பா, தியேட்டரிலேயே அழ ஆரம்பித்து விட்டார். ஓனரிடம் பேசி, ஓனரு மெட்ராஸ்ல டிரை பண்ணிப் பார்த்தாரு, ஆனா அவன கண்டுபுடிக்க முடியல. மறுநாள் சதாசிவத்தோட அம்மாவ தியேட்டருக்குக் கூட்டி வந்து படத்தில் தம்பியைக் காட்டினார்கள், அவள் தியேட்டருக்குள்ளேயே கத்தி அழுததைப் பார்த்து படம் பார்க்க வந்தவர்கள் சிலர் விவரம் தெரியாமல் சிரித்தனர். அதன் பின் அந்தப்படம் ஓடிய எல்லா நாளும் அவனுடைய அம்மா இரவுக்காட்சிக்கு வந்துவிடுவாள். அந்த இருபது பேரின் குரலிலிருந்து மகனின் குரலைப் பிரித்துக் கேட்கும் முயற்சியில் தினமும் தோற்றுப் போனாள். மகன் வருகிற காட்சி முடிந்ததும், தியேட்டருக்கு அருகிலிருந்த பெரிய கோயில் வாசலில் போய் அமர்ந்து விடுவாள். சதாசிவமும் அவன் அப்பாவும் படம் முடிந்தோ, இல்லை போஸ்டர் ஒட்ட வேண்டிய வேலை இருந்தால் அதை முடித்தோ திரும்பும் போது அவளை கூட்டிக்கொண்டு போய்விடுவார்கள். சதாசிவத்தின் அம்மாவின் மரணத்திற்கான நாட்கள் அந்தத் திரைக்காட்சிகளின் ஒளி, ஒலியிலிருந்தே துவங்கியது. சதாசிவத்தின் அப்பாவும், அவன் வேறு படங்களில் வருகிறானா என சாகும் வரை எதிர்பார்த்து ஏமாந்து போனார்.

வீட்டிற்கு வந்த சதாசிவம், மனைவியிடம் “ஓனர் வீட்டுத்தெருவ மூடிட்டாங்க” என்று சொல்லிக் கொண்டிருந்தான். சாப்பிட்டுவிட்டுப் படுத்துவிட்டான். நாளைக்குப்பின் தேவைப்படுகிற பொருளுக்கும், பணத்திற்கும் என்ன செய்வது என யோசித்துக் கொண்டிருந்தான். தேவைகள், தேவையற்ற வேலைகள் குறித்த எண்ணங்களையே அவனுக்குள் உண்டாக்கி முடித்திருந்தன. எங்காவது திருடுவது என முடிவெடுத்தான். எங்கு போய் எப்படித் திருடுவது என யோசித்தபடியே உறங்கியிருந்தான்.

காலையில் எழுந்தவன் மாஸ்கைப் போட்டுக்கொண்டு சைக்கிளில் கிளம்பி ஓனர் வீட்டுப்பக்கம் போனான். போகிற வழியில் தியேட்டருக்கு முன் வளைவிலுள்ள, தாமிர மணி வீட்டுக்காரர் வீட்ட சுத்தி மருந்து அடிச்சுக்கிட்டு இருந்தாங்க. தாமிர மணி வீட்டின் முன்வாசல் ஒரு தெருவிலும், பின்வாசல் ஒரு தெருவிலும் என நீண்ட வீடு அது. இப்போது இருக்கும் பின்வாசல்தான் முதலில் முன்வாசலாக இருந்தது. உயரமான அந்தச்சுவர் கூம்பாக முடியுமிடத்தில் ஒரு வட்டத்துளையில் பெரிய கோயில்களில் இருக்கும் பித்தளை மணியைப் போல தாமிரத்தால் ஆன பெரிய மணி இருந்தது. 10 வருடத்திற்கு முன் கோயில் கலசத் திருட்டுகள் அதிகமாக இருந்த போது, அவர்களே அதை கழற்றி வீட்டுக்குள் வைத்துக் கொண்டார்கள். பகலெல்லாம் வேலை பார்த்து இறக்கி முடித்தார்கள். அந்தவீட்டுப் பிள்ளைகள் எல்லாம் அமெரிக்காவோ, லண்டனோ போய்விட்டார்கள். அவ்வளவு பெரிய வீட்டில் இப்போது ஒரு பாட்டி மட்டும்தான் இருக்கு. தாத்தா அடிக்கடி பிளைட் ஏறி பிள்ளைங்க கிட்ட போயிடுவாரு. அந்த வாசலை மூடிய பின், மணி இருந்த சுவரின் உச்சிவரை சதாசிவம் பலமுறை ஏறி போஸ்டர் ஒட்டியிருக்கிறான். அந்த பாட்டிக்கு எப்படிக் கொரானா வந்திருக்கும் என்ற யோசனையோடு அந்த வீட்டைக் கடந்தான் சதாசிவம். ஓனர் வீட்டுத் தெருவில் நேற்றைவிட கூடுதலாக ஒரு போலீஸ் இருந்தான்.

ஆம்புலன்ஸ் ஒன்று நின்று கொண்டிருந்தது. அதில் மூன்று பேரை ஏற்றிக் கொண்டிருந்தார்கள். நின்று பார்ப்பவர்களை எல்லாம் போலீஸ் விரட்டிக் கொண்டிருந்தது. சதாசிவம் திரும்பி வீட்டுற்கு போய்விட்டான்.

இரவு ஆனதும் தாமிர மணி இருந்த வட்டத்துளை வழியாக வீட்டுக்குள் இறங்கி ஏதாவது எடுத்து வரலாம் என கிளம்பினான். ஏணியை எடுத்து சைக்கிளில் கட்டிக் கொண்டவனுக்கு, புதிதாய் ஒரு தயக்கம், வீட்டுக்குள்ள போய் நமக்கு கொரோனா வந்தா என்ன பண்றது என யோசித்தவன், மாஸ்க் போட்டிருப்பதால் ஒன்றும் ஆகாது என தேற்றிக்கொண்டு, கொடியில் காய்ந்து கொண்டிருந்த இன்னொரு மாஸ்கை எடுத்து மாஸ்கின் மேலேயே போட்டுக் கொண்டு கிளம்பினான். தாமிர மணி வீட்டின் முன்வாசலைத் தாண்டிப் போனான். முன்வாசலில் ஒரு போலீஸ்காரர் சேரில் உக்காந்தபடியே தூங்கிக் கொண்டிருந்தார். பின்வாசலில் யாருமில்லை. சைக்கிளை நிறுத்திவிட்டு, போஸ்டர் ஒட்டுகிற நினைப்பிலேயே, ஏணியை எடுத்து சுவற்றில் சாய்த்துவிட்டு, சைக்கிளை ஓரமாக நிறுத்திவிட்டு ஏணியில் ஏறினான். வட்டத்துளை வழியாக எட்டிப் பார்த்தவனுக்கு புதிதாய் ஒரு குழப்பம். எப்படி உள்ளே இறங்குவது, அப்படியே இறங்கினாலும் எப்படித் திரும்பி ஏறுவது. ஒருவேளை இறங்கி ஏறி வருவதற்குள் சைக்கிளையும் ஏணியையும் யாராவது எடுத்துக் கொண்டு போய் விட்டால் என்ன செய்வது என யோசித்தவன், மொத்த திட்டத்தையும் கைவிட்டுவிட்டு, இறங்கி ஏணியை சைக்கிளில் கட்டிக்கொண்டு வீட்டிற்குக் கிளம்பினான். வழியில் நின்றிருந்த போலீஸ்காரர்கள் மடக்கி நிறுத்தினர்.

இரவில் எத்தனையோ முறை எத்தனையோ போலீஸ்காரர்களை பார்த்திருந்தாலும், முதல் முறையாக பயந்து போய் நின்றான். எங்க போய் வர.., ஏணி எதுக்கு.. என்று மிரட்டிய அதிகாரிக்காக வீட்டிற்கு போய் டீ போட்டு பிளாஸ்கில் எடுத்து வந்த போலீஸ்காரன், சதாசிவத்துக்கு தெரிந்தவன் என்பதால், அதிகாரியிடம், போஸ்டர் ஒட்டுறவன் தான் சார், என்று சொன்ன பின்னும் அதிகாரி, சதாசிவத்திடம் இப்ப எங்க போய் வர என, தூக்கம் வர மாட்டுது சார், இந்த மாசத்தோட எல்லாம் சரி ஆயிடும், அடுத்த மாசம் படம்லாம் வந்துடும்னு வீட்டாண்ட பேசிக்கிட்டாங்க. பழைய போஸ்டர்லாம் கிழிச்சி செவுத்த கிளீன் பண்ணலாம்னு… என்றவனுக்கு, டீ கொடுக்க சொன்னான் அதிகாரி. மறுப்பேதும் சொல்லாமல் வாங்கி குடித்தான். அதிகாரி போன் நம்பர வாங்கிட்டு அனுப்பிவிடச் சொல்லிவிட்டு வண்டிக்குள் ஏறி உட்கார்ந்து கொண்டார்.

இரவின் இருளை விழுங்கிக் கொண்டிருந்தது நிலவொளி. அதை எதிர்த்து இருளின் பக்கம் நின்று வழியெங்கும் எதிர்ப்புத் தெரிவித்துக் கொண்டிருந்தன சுவர்கோழிப் பூச்சிகள். வீட்டிற்கு திரும்பும் வளைவில் இருக்கும் வீட்டிலிருக்கும் தோட்டத்தில் மாமரம், தென்னை மரம், சப்போட்டா, முருங்கை மரங்களும், அவரை, பாகற்காய் கொடிகளும், தக்காளி, கத்தரி, வெண்டை, மிளகாய் என இன்னும் காய்கறிச் செடிகளுடன் கூடிய தோட்டம் அது. அந்த வீட்டு சுவற்றின் மீது ஏணியை சாய்த்து உள்ளே இறங்கினான் சதாசிவம், தாமிர மணி வீட்டுக்கு எடுத்துப்போனப் பையை எடுத்து மாங்காய், சப்போட்டா, பாகற்காய், தக்காளி, கத்தரி, வெண்டைக்காய்களை மட்டும் பையில் நிரப்பிக் கொண்டான். ஏணியை இழுத்து உள்பக்கமாக வைத்து சுவரில் சாய்த்து விட்டு, ஏணியில் ஏறி கீழே இறங்கிக் கொண்டான். பையை எடுத்து சைக்கிளில் மாட்டிவிட்டு, ஏணியை எடுத்து சைக்கிளில் கட்டிக் கொண்டு திட்டமிடாத இந்த வேலையை முடித்துக் கொண்டு வீட்டிற்கு போனான்.

சதாசிவம் சுவற்றில் ஏணியை சாய்த்து ஏறியதிலிருந்து, இறங்கி செல்வது வரை அனைத்தையும் அந்த வீட்டின் பெண் பார்த்துக் கொண்டே இருந்தாள். அவளுக்கு அவனை நன்றாகத் தெரிந்தது. மாமரத்திலிருந்து காய்களை பறித்துக் கொண்டு சப்போட்டா பறிக்கப் போகும் போது, அந்த வீட்டிலிருந்த ஆண் சிறுநீர் கழிக்க எழுந்து வெளியே வந்தபோது, அந்த பெண் அவனை தடுத்து, இருவருமாக சதாசிவத்தின் அறுவடையை பார்த்துக் கொண்டிருந்தனர். அவர் முருங்கையும், அவரையையும், மிளகாயையும் அறுவடை செய்யாமல் கிளம்பியது உட்பட அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த ஆண் சிறுநீர் கழித்துவிட்டு உள்ளே வந்த போது, அவள் அவனிடம், அவருக்கு ஐம்பது வயசுக்கு மேல இருக்கும், அவர போய் இப்படி திருட வச்சிட்டமே நாம, நாமலே பறிச்சு முன்னாடியே குடுத்து இருந்தா, சாப்பிடறத்துக்காக திருடுற நெலம அவருக்கு இந்த வயசுல வந்திருக்காதுல என்றாள். அவன் அவளிடம், இனிமே எப்ப பறிச்சாலும் நமக்கு எடுத்துகிட்டு மீதிய சுத்தி இருக்க வீட்டுக்கெல்லாம் நீயே போய் குடுத்துட்டு வந்துடு என்று சொல்லிவிட்டு படுத்துவிட்டான்.

காலையில் வாசலில் படுத்திருந்த சதாசிவத்தை தேடி இரண்டு போலீஸ்காரர்கள் வந்து எழுப்பிய போது சதாசிவம் முகம் இயல்பிலில்லை. வந்திருந்தவர்களில் ஒருவன், “போன எடுத்து தொலைக்க வேண்டியது தான” என்ற போது, எழுந்துபோய் காய்களைக் கீழே கொட்டிவிட்டு பையின் அடியிலிருந்த போனை எடுத்தான். அதற்குள் இன்னொருவன் போனில், “இருக்கிறான் சார், செல்-ல உள்ள வச்சிட்டு வெளியில படுத்து இருக்கான் அதான் சார் எடுக்க காணோம். இதோ குடுக்கறன்” என்றபடியே போனை அவனிடம் கொடுத்தான். சதாசிவம் வாங்கி “சொல்லுங்க சார்” என்றான். போனில் பேசியவன் நேற்றிரவு டீ கொடுத்த போலீஸ்காரன் என்றதும் ஆறுதலடைந்தான். கொரோனா தடுப்பு பற்றிய ஐநூறு போஸ்டர்கள் கொடுத்து அனுப்பி இருப்பதாகவும், அவர்களிருவரும் கூடவே வருவார்கள், சொல்லுமிடங்களில் எல்லாம் ஒட்டிவிட்டு காசு வாங்கிக்கோ என்றதும், மனைவியிடம் ஐநூறு போஸ்டருக்கு பசைய காச்ச சொல்லிட்டு, வந்திருந்தவர்களிடம் இருந்த போஸ்டர் கட்டை வாங்கி பிரித்து ஐந்து ஐந்தாக பிரித்து மடித்து அடுக்கிகொண்டே அவர்களிடம், “அரை மணிநேரம் தான்., பசை ரெடியாயிடும் போயிடலாம்” என்றான்.

இரவு பேசியபடி அந்த வீட்டு பெண் கொஞ்சம் காய்கறிகளையும், பழங்களையும் எடுத்துகொண்டு சதாசிவத்தின் வீட்டுக்கு வந்தாள், சதாசிவத்திற்கு அவளை யாரெனத் தெரியாததால் எந்தத் தயக்கமும் இல்லை. வெளி அடுப்பில் பசைக்கு தண்ணீரைக் கொதிவைத்து விட்டு, உள்ளேபோய் காய்களைப் பிரித்து அடுக்கிக் கொண்டிருந்த சதாசிவத்தின் மனைவி வந்து சிரித்தபடி வரவேற்றாள். அவள் கையிலிருந்த பையைப் பார்த்துவிட்டு அவளிடம், நேத்து தான் அவரு எல்லாமே வாங்கிட்டு வந்தாரு என்றதும், அவள், “அவரக்காய் மிளகாய்” என்ற போது, நேத்ரா “தாத்தா, தாத்தா..” என அழைத்து சீக்கிரம் வரச்சொன்னாள். சதாசிவம் போஸ்டரை மடித்தபடியே பார்த்துக் கொண்டிருந்தான். பாட்டியும் அந்தப் பெண்ணும் நேத்ராவிடம் சென்ற போது, அவரைக்கொடிக்கும், மிளகாய் செடிகளுக்கும் அருகில், நேத்ரா புதைத்து வைத்திருந்த மாங்கொட்டை மண்ணைப் பிளந்து பச்சைக்காட்டி துளிர்த்து இருந்தது.

சதாசிவத்தின் மனைவி அந்த பெண்ணிடம், “இப்போ வேற யாருக்குன்னா குடுங்க. அடுத்தமுறை நான் வாங்கிக்கிறன்” என்றாள். அவள் “இனிமே நீங்க எப்போ வேணும்னாலும் வீட்டுக்கே வந்து பறிச்சுக்குங்கமா” என்றாள். சதாசிவத்திடம் “வரன்பா”, என்றாள். மடித்த போஸ்டர் கட்டை எடுத்து சைக்கிளில் வைத்து கட்டிவிட்டு, லுங்கியை மடித்துக் கட்டிக்கொண்டு, மரத்திலிருந்து முருங்கைக்காயைப் பறிக்கப்பறிக்க நேத்ரா ஓடிஓடிப் பொறுக்கி அடுக்கினாள், வீட்டுக்கு நாலு காய் எடுத்து வைத்துவிட்டு மீதியை இரண்டு கட்டாகக் கட்டி போலீஸ்காரர்களிடம் கொடுத்தான், அவர்கள் மறுப்பேதும் சொல்லாமல் வாங்கிக் கொண்டனர். சதாசிவம் சட்டையை மாட்டிக்கொண்டு பசைக்காகக் காத்திருந்தான்.

***

க.வசந்த்பிரபு – [email protected]

RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular