Tuesday, July 16, 2024
Homeslider“பேய்ச்சி” தடை (எதிர்வினை)

“பேய்ச்சி” தடை (எதிர்வினை)

சு.வேணுகோபால்

ம.நவீனின்பேய்ச்சி‘ நாவல் மலேசிய உள்துறை அமைச்சால் தடை செய்யப்பட்டுள்ளதாக இன்று அறிந்தேன். அது ஒரு ஆபாச படைப்பு எனும் அடிப்படையில் தடை செய்யப்பட்டுள்ளது. மலேசிய தமிழ் பேரறிஞர்கள், தமிழ்க்காவலர்கள், இலக்கியத்திற்கு எறுவூட்டிய கட்சிக்காரர்கள், இன்னபிற தமிழை வாழவைக்கும் தங்கமணிகளின் அழுத்தத்தால் நேர்ந்திருக்கும் என்று நினைக்கிறேன். பேய்ச்சி நாவல் வெளிவந்த நாளிலிருந்து அந்நாவலுக்கு எதிர்மறையான சூழலை, இலக்கியம் என்றால் என்னவென்று தெரியாத சில அன்பர்கள் கூக்குரல் இட்டு வந்ததைப் பார்க்கும்போது தடைக்கான பின்னணியில் இருப்பவர்கள், மௌனமாக மறைந்து காயை மாற்றியவர்கள் எல்லாம் பின்னால் தெரியத்தான் போகிறார்கள்.

முதலில் ஒன்று, ம.நவீன் தீவிரமான ஒரு இலக்கியவாதி. மலேசிய தமிழ் இலக்கிய வரலாற்றில் கூடுதலான உண்மைகளை வெளிப்படுத்த முனையும் ஒரு கலைஞன். இந்த ‘கூடுதலான உண்மை’ என்பது பலருக்குக் கசப்பைத் தருவதாக இருக்கிறது. புதுமைப்பித்தன் இந்த அம்சத்தாலேயே கொண்டாடவும்பட்டான். தூற்றவும்பட்டான். தூற்றியவர்கள் இன்று மண்ணோடு மக்கி யாரென்று தெரியாமல் போய்விட்டார்கள். உலக இலக்கியத்தின் உச்சங்களில் ஒன்று என்று சொல்லப்படும் அன்னா கரினாவில் காதலனையும் கணவனையும் ஒருபுறம் அணைத்துக் கொண்டு கிடப்பதாக ஒரு காட்சி வரும். ரஷ்ய மக்கள் அன்றும் கொண்டாடினார்கள். இன்றும் கொண்டாடுகிறார்கள் தான். மனிதனின் அகத்தை நிறைக்க முயன்ற கலைஞன் என்றார்கள்.

தமிழ்ச்சமூகம் ஒரு நாகரீகமான சமூகம் என்று பொதுமேடைகளில் முழங்கிக்கொள்வது; அதைப் புனிதப்படுத்துவது; கெட்ட வார்த்தைகளையே பேசாத சமூகம் என்பது போல எழுதுவது; தமிழர்கள் கலவி கொள்ளாமலே கன்னத்தில் அல்லது நெற்றியில் முத்தமிட்டாலே கரு உண்டாகி குழந்தைப் பேற்றை அடைபவர்கள் என்ற ரேஞ்சுக்கு பேசுவது எல்லாம் உண்டுதான். இதெல்லாம் இலக்கியத்தின் பகுதியல்ல. சண்டை சச்சரவுகளில் தமிழர்கள் கெட்ட வார்த்தையையே பேசாதது போல நடிக்கிறார்கள். எங்கள் ஊர்களில் குழாய்ச்சண்டை வராத ஊர்களே கிடையாது. எத்தனை தூமய குடிக்கிகள், எத்தனை சாண்ட குடிக்கிகள் பொங்கிப் பிரவாகமாக வருவதைக் கேட்காத மனித ஜீவன் இருக்குமா?

என் நாவலில் கோபத்தின் வெளிப்பாடாக இரண்டு இடங்களில் கெட்ட வார்த்தைகளைப் பாத்திரங்கள் பேசும். சுந்தர ராமசாமி தனிப்பட்ட முறையில் அதைப் பயன்படுத்தியிருக்க வேண்டாம் என்றார். அவர் என் மூத்த தலைமுறை எழுத்தாளர். கொஞ்சம் நாசூக்கான சமூகப் பின்னணியில் இருந்து வந்தவர். அவரது மனம் அதை ஏற்க மறுக்கிறது என்ற அளவில் புரிந்து கொண்டேன். நான் நாசூக்கான பின்னணியில் இருந்து வரவில்லை. முரட்டுத்தனமான கிராமியச் சூழலில் வளர்ந்தவன்; வளர்க்கப்பட்டவன். என் எழுத்தும் என் உலகும் வேறு என்பதால் சு.ரா.விடம் இரு இளிப்பு மட்டுமே இளித்தேன். சுந்திர ராமசாமியின் மகன் கண்ணன் காலச்சுவடில் சல்மாவின் ‘மூன்றாம் ஜாமங்களின் கதை’ நாவலைக் கொண்டு வந்தார். நாவலில் யோனி பற்றிய வசைச்சொல்லைப் பலர் எண்ணி இத்தனை காலங்கள் இலக்கியக் கிசுகிசுவாக பேசியவர்களெல்லாம் உண்டு. நான் அதன் இலக்கியத்தரம் குறித்து மட்டுமே பேசினேன்.

ஒரு எழுத்தாளன் கெட்ட வார்த்தைகளை வேண்டுமென்றே பயன்படுத்துகிறானா? மாந்தர்களின் செறிவுநிலையில் கோபத்தின் வெளிப்பாடாக அல்லது வேறு தன்மைகளின் அடிப்படையில் வெளிப்படுகிறதா? என்று தான் பார்ப்பேன். கெட்ட வார்த்தைகளை வேண்டுமென்றே பயன்படுத்தும் போலி இலக்கியப் பம்மாத்துப் பேர்வழிகளின் படைப்புகளை நான் புறந்தள்ளியே வந்திருக்கிறேன். பேய்ச்சி நாவல் மூன்றாம் தரமான வெளிப்பாடு என்பது எங்கும் இல்லை. சமூக வாழ்க்கையிலிருந்தே வந்திருக்கின்ற சொற்களாக இருக்கின்றன.

புதுமைப்பித்தன் தனது காலத்திலேயே ஹோமோசெக்ஸ் உறவு பற்றி கதை எழுதியிருக்கிறார். ஆ.மாதவன் ‘கோமதி’ என்ற சிறுகதையில் கோமதி என்ற ஒரு பசுவுடன் கலவியில் ஈடுபடும் இரு பாட்டாளிகள் பற்றி எழுதியிருக்கிறார். கரிச்சான் குஞ்சு அறுபது ஆண்டுகளுக்கு முன் ‘பசித்த மானுடம்’ நாவலில் முழுக்க முழுக்க ஹோமோ செக்ஸுவல் பிரச்சினையை மையமாக வைத்து எழுதி வெளியிட்டபோது யாரும் அதைத் தடைசெய்ய வேண்டும் என்று கூறியதில்லை. இந்த நாவலை எழுதிய கரிச்சான் குஞ்சு ஒரு ஆச்சார சீலர். இதற்கும் 40 ஆண்டுகளுக்கு முன் இஸ்மத் சுக்காய் என்ற இஸ்லாமிய பெண் எழுத்தாளர் லெஸ்பியன் உறவை ‘போர்வை’ என்ற கதையாக எழுதினார். நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தவரை வேறு வேலையைப்பாரு என்று தள்ளுபடி செய்ததெல்லாம் உண்டு. மண்டோ இந்த வழக்கில் சுக்காய் பக்கம் நின்றார். அதே சாதத் ஹாசன் மண்டோ பெண்களை ஆபாசமாக எழுதிவிட்டார் என்று ஆறுமுறை (இந்தியாவில் மூன்றுமுறை) அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டதை பாகிஸ்தான் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததெல்லாம் வரலாறு.

பேய்ச்சி நாவல் ஹோமோசெக்ஸ் பற்றியோ லெஸ்பியன் பற்றியோ வலிந்து காட்டும் நாவல் அல்ல. தமிழ்க்குடியின் நூற்றாண்டுகளை, புலம்பெயர் வாழ்க்கையைப் பற்றி பேசும் நாவல். அவர்களின் நம்பிக்கைகள் மலேசிய மண்ணில் வேரோடிப் போயிருக்கும் தடங்களைச் சொல்லும் நாவல். அதில் தோட்டத் தொழிலாளர்கள் விசச்சாராயம் அருந்தி 24 பேர் அளவில் இறந்துபோன ஒரு மோசமான சூழலையும், செம்பனையின் வரவை ஒட்டி தோட்டத்தமிழர்கள் வெளியேற்றப்பட்ட அடுத்த காலக்கட்டத்தைப் பற்றியும் மையமாகப் பேசும் நாவல். இதன் ஊடே மனிதர்களின் ஆசாபாசங்களையும் பேசுகிறது. தமிழன் வாழ்ந்த தோட்டக்காடு எல்லாம் தமிழர்கள் ஆன்ம உணர்ச்சி தனிமையில் தத்தளித்து ததும்பும் அபூர்வ கணத்தைச் சொல்லும் நாவல். இடத்தின் மீதும், மானுடத்தின் மீதும் தீவிரப்பற்றுக் கொண்ட ஆவேசம் மிக்க மாந்தர்களே இதில் எழுந்து வருகிறார்கள். தமிழ்ப் பண்பாட்டுக் காவலர்கள், கொஞ்சம் மனது வைத்து முதலில் பேய்ச்சியைப் படித்தார்களேயானால் மிகமிக எளிய உண்மை புரியும். அவர்களுக்கு பிடித்தமான விசயம் கூட இருக்கிறது. தப்பு செய்தவன் தண்டனையடைகிற மாதிரி மணியம் பாத்திரம் அமைவதை அவர்களுக்கு எடுத்துச் சொல்கிறேன். இதைவிட இனி யார் விளக்க முடியும்? இனி என்னம்மா உங்களுக்குப் பிரச்சனை?

சார்த்தர், ஒரு நடுத்தர மனிதன் 18 வயது பையன் மீது மோகம் கொண்ட கதை ஒன்றை எழுதியிருக்கிறார். கதை ‘கடற்கரையில்’ என்பதாக ஒரு ஞாபகம். நம்ம ஊர் நீலபத்மநாபன் ‘ஜின்னின் மனம்’ என்ற கதையில் எழுதியிருக்கிறார். இப்படி எத்தனையோ உதாரணங்கள் உண்டு. ஆனால், நான் சொன்ன இந்தக் கதைகள் எல்லாம் கலாபூர்வமாக எழுதப்பட்டவை. ஆபாசம் ஒரு துளி இல்லாதவை. நான் இதுவரை இம்மாதிரியான கதைகள் எழுதியதில்லை என்றாலும், வாழ்வின் வேறுவிதமான பக்கங்களை இவர்கள் எழுதியிருக்கிறார்கள் என்றே பார்க்கிறேன். அதே சமயம் மொண்ணையாக வித்தியாசம் கருதி வக்கிரமாக எழுதப்பட்ட எந்த படைப்பையும் நான் பொருட்படுத்தியதே இல்லை. எனக்கு எது கலை எது வக்கிரம் என்பது நன்றாகவே தெரியும்.

பிரச்சனை ‘பேய்ச்சி’ நாவல் என்பதைவிட ம.நவீன் என்ற தனிமனிதன் மீது கொண்ட காழ்ப்புணர்வே காரணமாக எனக்குப்படுகிறது. அவன் மூத்த எழுத்தாளர்களின் படைப்புகள் மீது இலக்கியம் சார்ந்து விமர்சனத்தை முன்வைப்பது பிரச்சனை. அந்த எழுத்தில் உள்ள பலவீனங்களை உலக படைப்புகள் முன்வைத்து விவாதிப்பது பிரச்சனை. இலக்கியத்தரம் பற்றி பேசுவது பிரச்சனை. எழுதுவதெல்லாம் இலக்கியம் இல்லை என்று விமர்சிப்பது பிரச்சனை. கவிதை ஒரு உச்சத்தை நோக்கிப் பறந்து கொண்டிருக்கும் போது இன்னும் மலேசியாவில் பாமர ரசனையில் வெற்றுப் புகழ்ச்சியில் மூழ்கிக் கிடக்கிறதே என்று சொல்வது பிரச்சனை. பெரும் தமிழ் அமைப்புகளுக்குப் பிரச்சனை. தங்கள் இலக்கிய நம்பிக்கை ஆட்டங் காண்கிறதே என்பது பிரச்சனை.

உண்மையில் இலக்கிய உணர்வு உள்ளவர்கள் பேய்ச்சியின் இலக்கியத் தன்மையைப் பற்றி பேசியிருக்க வேண்டும். மலேசிய தமிழ் நாவல் உலகில் முதன்முதலாக வாழ்வின் வெம்மையை, மனித அவஸ்தைகளை, கையறு நிலையின் பரிதவிப்பை, ஆவேசத்தை உக்கிரமாக வெளிப்படுத்துகிறது பேய்ச்சி நாவல். பேய்ச்சிக்குத் தடை என்பதை நான் இலக்கியத்திற்குத் தடை என்பதாகவே குறிப்பாக்குகிறேன். மலேசியத் தமிழ் எழுத்தாளர்களிடமிருந்து ஒரு உலகத்தரமான நாவல் வரப்போகிறது என்ற நம்பிக்கையில் இருந்தேன். அதற்கான புதிய இலக்கியச்சூழல் உருவாகிவிட்டதை உணர்ந்து மகிழ்ந்தேன். குறிப்பாக பெண்கள் நல்ல தீவிரத்தோடு எழுதுவதைக் கண்டு மகிழ்ந்தேன். இலக்கியக் கலைப்படைப்பை பேய்ச்சி மூலம் நடத்திப் பார்த்திருக்கிறார்களோ என்று எனக்கு கேள்வி எழுகிறது. இலக்கியம் தெரியாத அதிகார சக்திகள் முன்னின்று நகர்த்திருக்கலாம். நாளை இன்று எழுதி வந்திருக்கும் இளம் பெண் எழுத்தாளர்களை அவர்களின் இயல்பான எழுத்துமுறையைத் தண்டிக்க குண்டாந்தடியைத் தூக்கி வரலாம். ஆனால் உயர்ந்த இலக்கியமா? மொக்கையான புகழ்ச்சி இலக்கியமா? என்பது குறித்து மலேசிய இளம் எழுத்தாளர்கள் இனி எதிர்கொள்வதில்தான் இருக்கிறது.

இது ஒரு சந்தர்ப்பம். உலகின் மேலான படைப்புகளை இவர்கள் முன் இன்னும் தீவிரமாக பேசுவதும் எழுதுவதும் தான் சரியாக இருக்கும். நம்மில் ஒரு தி.ஜானகிராமனை, கு.அழகிரிசாமியை, புதுமைப்பித்தனை கண்டடைந்து உருவாக்கப் போகிறோமா? அல்லது மூன்றாம்தர இலக்கியத்தை முதல் தரம் என்று போலியாக காட்டி சொரிந்துக் கொள்ளப் போகிறோமா? ஒன்றே ஒன்று, உலகம் முழுக்க உன்னதமான படைப்பாளி இந்த சமூகத்தால் காயங்கள்பட்டே தனது மகத்தானப் பங்களிப்பை செய்துவிட்டுப் போயிருக்கிறான்.

***

சு.வேணுகோபால்

தமிழ் நவீன இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளிகளில் ஒருவர். கூந்தப்பனை, வெண்ணிலை, நுண்வெளி கிரகணங்கள் உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular