Monday, October 14, 2024
Homeசினிமாபேன்ஸ்பெர்மியா

பேன்ஸ்பெர்மியா

 

இந்த உலகில் உயிரினம் தோன்றியது எப்படி என்று பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதில் ஒரு தியரிதான் “பேன்ஸ்பெர்மியா”. பேன்ஸ்பெர்மியா (PAN+SPERMIA) என்ற கிரேக்க வார்த்தைக்கு “எங்கும் விதைகள்” என்று அர்த்தம். அதாவது வாழ்வின் விதைகள் பிரபஞ்சம் எங்கும் பரவிக் கிடந்து ஒரு இடத்தில் இருந்து இன்னோர் இடத்திற்கு புலம் பெயர்கிறது என்று இதற்கு விளக்கம் தரலாம். பூமியில் உள்ள உயிரினங்களும் இதே போன்று பிரபஞ்சத்தின் விதையிலிருந்து ( வேறு ஒரு இடத்திலிருந்து ) பூமிக்கு வந்திருக்க வேண்டும் என்று சொல்வதுதான் பேன்ஸ்பெர்மியாவின் கோட்பாடு.

சுமார் 4 பில்லியன் வருடங்களுக்கு முன் பூமியில் எண்ணற்ற விண்கற்கள் தாக்குதல்கள் நடைபெற்றன என்றும், அதில் ஒரு விண்கல்லில் இருந்த பாக்டீரியா வளர்ந்து அதன் தொடர்ச்சியாக உயிரினங்கள் உருவாகத்தொடங்கின என்றும் இது சொல்கிறது. எங்கிருந்து வந்திருக்கும் என்பது உறுதியாக தெரியாவிட்டாலும் ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.  15 மில்லியன் வருடங்களுக்கு முன் செவ்வாயில் இருந்து சிதறிய விண்கல் 1984 யில் அண்டார்டிகாவில் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு Allan Hills 84001 (ALH84001)   என்று பெயர் சூட்டி அதனை ஆராய்ந்ததில் அதில் நுண்ணியிரிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, பின்னர் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் செவ்வாயில் உயிர் வாழும் சூழல் குறித்து ஆராயப்போவதாக ஒரு அறிவிப்பும் வெளியிட்டார்.

செவ்வாயில் முன்பு நீர் இருந்ததற்கான அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டன. வியாழனின் அருகில் உள்ள யூரோப்பா என்ற நிலவில் கீழுலகக் கடல்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. ஆனால் நீர் மட்டுமே ஒரு உயிர் உருவாகக் காரணமில்லை. உலகில் உள்ள உயிரினங்கள் அனைத்தும் கார்பனோடு தொடர்புடையவை. விண்கற்களில் சோதனையிடுபோது அதில் கூட்டுப் பொருட்களில் உள்ள கார்பன் மற்றும் அமினோ அமிலங்கள் ( புரோட்டின் அடுக்குகளை உருவாக்கும் ) இருப்பது தெரியவந்தது.  இந்தப் புரோடீன்களே உயிரின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுபவை .

சில பாக்டீரியாக்கள் + 115 டிகிரி செண்டிகிரேடு வெப்பத்திலும் சில நுண்ணுயிரிகள் – 18 டிகிரி செண்டிகிரேடு வெப்ப நிலையிலும் வளர்வதைப் பார்க்கும்போது, நுண்ணயிரிகள் எந்தச் சூழலிலும் வாழும் திறன் கொண்டவை என்று தெரிய வருகிறது.

எங்கும் பரவி உள்ள பாக்டீரியாக்கள் பூமியில் வாழ்வதைப் போல விண்வெளியில் உயிர் வாழ முடியுமா என்றும் ஆராய்ச்சி செய்தது ஜெர்மனி விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம். களிமண், செம்மணற்பாறை, வடிவமைக்கப்பட்ட விண்கல் ஒன்றில் ஒரு குவியல் போல செய்து பூமிக்கு வெளியே உள்ள ஒரு வெளியில் விண்கோள் மூலம் கொண்டு வந்து வைத்தனர். இரண்டு வாரங்கள் கழித்து சோதனை இடுகையில் செம்மணற்பாறையில் கலந்த பாக்டீரியாக்கள் தொடர்ந்து உயிரோடு இருப்பது தெரிய வந்தது. Extraterrestrial solar UV radiation    பாதுகாப்பு செய்யப்பட்டால் பாக்டீரியாக்கள் ஆறு வருடங்கள் கூட வெளியில்(SPACE ) வாழும் என்றும் ஆராய்ச்சி தெரிவித்தது.

பேன்ஸ்பெர்மியா தியரியில் வெளியில் இருந்து உயிரின் விதை பூமிக்கு வந்தது என்று சொல்லப்படுகிறதே ஒழிய அது எங்கிருந்து வந்தது என்பதை உறுதியாகச் சொல்ல முடியவில்லை. தற்போதைய சூரியமண்டலத்தில் பூமி மட்டுமே உயிர் வாழும் சூழல் கொண்ட இடம் என்று சொன்னாலும் முழுக்க ஆராயாமல் சொல்ல முடியாதல்லவா? உலகெங்கும் எண்ணற்ற ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன. பார்ப்போம் அடுத்த சில நூற்றாண்டுகளில் மனிதன் வேறு கிரகத்தில் வாழும் சூழல் அமைக்கிறானா என்று?

 

சாத்தப்பன் நா

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular