Friday, September 22, 2023
No menu items!
No menu items!
Homeசினிமாபேட்மேன்-ம் NEW WORLD ORDER-ம்

பேட்மேன்-ம் NEW WORLD ORDER-ம்

– என்றதும் என்னடா இது சினிமா விமர்சனமா என்று சொல்லிட வேண்டாம்.

கனவுகளின் தேசம் என்று உலகில் எல்லோருக்கும் சென்று விட வேண்டும், பார்த்து விட வேண்டும் என்று தோன்றும் இடம் என்றால் அது அமெரிக்கா தான். உலகின் எந்த மூலையில் தோன்றும் சித்தாந்தங்களும் ஒன்று – இங்கு தான் போய் முடியும்/அல்லது இங்கிருந்து தான் தொடங்கும். ஒரே கூரையின் கீழ் உலகின் அத்தனை தேசங்களையும் சேர்க்க கனவு காண ஆரம்பித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. நம்மில் எத்தனை பேருக்கு  New World Order எனும் புதிய உலகைப் பற்றிய சிந்தனைகள் பற்றி தெரியும்?? என்னடா இது பேட்மேனுக்கும் New World Orderக்கும் என்ன சம்பந்தம் என்று பார்க்கிறீர்களா?

சமீபத்தில் வெளியான பேட்மேனின் வரிசைப் படமான “The Dark Knight Rising” எனும் திரைப்படத்தில் வரும் சில காட்சிகளின் பாதிப்பை நம் சமகாலப் பிரச்சனைகளோடு ஒப்பிட்டு பார்க்கிறேன். சரி, அது என்ன New World Order? இது பாரதியின் “புதியதோர் உலகம் செய்வோம்” என்பது போலவா? இல்லை. ஒவ்வொரு சமூகமும், அது சந்திக்கும் பிரச்சனைகளை முன் வைத்து தான் அதற்கு தேவைப்படும் மாற்றங்கள் குறித்து சிந்தித்து, விவாதித்து தேவையானவற்றைக்(தீர்வினை) கட்டுவித்துக் கொள்ளும், இப்படித் தான் சமூகத்தின் ஒவ்வொரு மாற்றங்களும் நடைபெறும். New World Order – மேலை நாடுகள் முதல் வல்லரசு கனவில் இருக்கும் எல்லா நாடுகளும் தத்தமது பாணியில் சிந்தித்து வருகிறது, அவை உலகின் உள்ள அனைத்து நாடுகளை விட தன்னை மிகப்பெரிய ஆதிக்க சக்தியாக தன்னை நிலைநாட்ட முயன்று வருகின்றன.

 

இந்த இடம் தான் மாற்றத்தின் விளைவுகளை தீர்மானிக்கும் இடம். சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான் தீர்வாகக் கிடைக்கும் மாற்றம், அதன் அடிவேரிலிருந்து மாறாமல் மேலோட்டமாக இருந்தாலோ அல்லது அந்த சமூகம் பிற பிராந்திய மாற்றங்களை கடன் வாங்கிக் கொண்டாலோ அதனால் எந்தத் தீர்வும் கிட்டாமல், அதுவே ஒரு புதிய பிரச்சினைக்கு அடிவகுக்கும். சரி பேட்மேன் போன்ற கற்பனைக் கதைகள் இந்த இடத்திற்கு எப்படி வருகிறது என்று பார்ப்போம்.

******************************************************************

பொதுவாக இந்த மாதிரியான அதிசய மனிதர்களின் உருவாக்கம் குறித்து அலசிப் பார்ப்பது இக் கட்டுரைக்கு மிக அவசியமாகிறது. குழுவாய் வாழத் தொடங்கிய மனித இனத்திற்கு வாழ்தல் மீதான அவநம்பிக்கை தோன்றும் போதெல்லாம் அவர்கள் கடவுளையோ, தேவதைகளையோ வழிபடும் வழக்கம் இருந்து வருகிறது. அதைப் போலே நேரே அணுகமுடியாத தேவதைகளுக்கு பதிலாக மதத் தலைவர்களோ அல்லது மந்திரவாதிகளோ, அற்புத சக்தி படைத்தவர்களோ மக்களுக்கு நம்பிக்கையூட்டுபவர்களாக இருந்தனர். அவர்கள் சக்தி மீது இருந்த பயமும், நம்பிக்கையும் அவர்கள் வாழ்க்கையின் ஒரு அங்கமாக இருந்து வந்தது, அதற்கு பின் அந்த மனிதர்கள் அவர்கள் வாழ்க்கையில் மிக அத்தியாவசியமானவர்கள் ஆயினர்.

 

புராணக் காலங்களில் இந்த மனிதர்கள் கொஞ்சம் மெருகூட்டப்பட்டு, அவர்களுடைய வடிவங்களில் கொஞ்சம் கற்பனையும் சேர்த்து அதிசய மனிதர்களாக உருவெடுத்தனர், இது தான் சூப்பர் மேன்கள் உருவான உண்மையான காலம். இதற்கு முதன்மையான உதாரணம் என்று எளிதாக ஹனுமானைச் சுட்டிவிடலாம், கருடன், பீமன் எனத் தொடங்கும் வரிசையில் கிராமப் புறத் தெய்வங்களான அய்யனார்,முனீஸ்வரர் போன்றோரையும் பட்டியலுக்குள் சேர்க்கலாம். சீனத்தில் கூட புத்தனையும், போதி தர்மனையும் மாயங்கள் செய்யும் ஒரு மஹாபுருசராகவே வணங்குகின்றனர். இயேசுவின் போதனைகள் கூட அவர் செய்த அற்புதங்களைப் பற்றிக் கொண்டு தான் மக்களிடம் வருகின்றன நிற்க, இப்படிப் பட்ட வரிசையில் தான் கற்பனைக் கதாப்பாத்திரங்களாக காமிக்ஸ் புத்தகங்களிலும், திரைப் படங்களிலும் வரும், ஸ்பைடர் மேன், சூப்பர் மேன், கேப்டன் ப்ளானட், எக்ஸ் மேன், இக்கட்டுரையின் நாயகன்.

*****************************************************************

பதினாறாம் நூற்றாண்டுக்கு பின் அதிவேக மாற்றங்களுக்கு காரணமாக தொழிற்புரட்சியும், கம்யுனிச சித்தாந்தங்களும், அதற்கு பின் ஐரோப்பிய நாடுகள் உருவாக்கிய காலனிகளும் வந்து முற்றிலுமாக மாறிய உலகம் கண்ட இரண்டு உலகப் போர்களின் வடுக்களும் மனித வரலாற்றை சிதைவு படுத்தின. மூன்றாம் உலகப் போர் ஒன்று வந்து விட்டால் மனித இனத்தின் வரலாறும் டைனோசருடன் சேர்ந்து பாறைகளின் படிமங்களாகிவிடும் என்கிற அபாயத்தை உணர்ந்ததால், ஒன்றை ஒன்றுத் தீண்ட முடியாத இரண்டு ராஜநாகங்களின் சீற்றங்களாக இருக்கின்றன, ஆன போதும் உலகையே ஒரு சந்தைக் கடையாக்கிவிட்டு ஒன்றை ஒன்று விழுங்கிடவும் உலகின் வல்லரசுகள் முயற்சித்துக் கொண்டிருக்கின்றன. கிருத்தவம், இசுலாமியம், கம்யுனிசம், காலனியாக்கல், உலகமயமாக்கல் போன்ற தத்துவங்கள் எல்லாமுமே இப்படி உலகம் முழுவதும் ஒரே அரசை நிறுவுவதை தமது இலட்சியமாக கொண்டுள்ளதை பிரதிபலிக்கின்றன.

இப்படி ஓரளவு உலகை கைப்பற்றும் சித்தாந்தங்களை எல்லாம் இன்று நடைமுறைப் படுத்துவதிலும், அவற்றின் சில நவீன கோட்பாடுகளின் வரையறுத்ததில் (உலகமயமாக்கல், அணு ஆயுதம்) மிக அதிகப் பங்கு உடைய, அமெரிக்கா தான் New World Order எனும் கோட்பாடின் தந்தை.

இதன்படி உலகின் ஒரே நாட்டாமையாக தன்னை நிலைப் படுத்த வேண்டும் என்பது இதன் எளிமையான விளக்கம், அமெரிக்க டாலரை உலகின் பொது செலவானியாக பல வர்த்தகத்தில் வைத்திருப்பது போல (உ.ம். கச்சா எண்ணை), வேளாண்மை, வின்வெளி ஆராய்ச்சி, தகவல் தொழில்நுட்பம், விளையாட்டு(ரக்பி,சாஃப்ட் பால்,WWE,ஐஸ் ஹாக்கி), உடை நாகரிகம், சினிமா, வர்த்தகம் என எல்லாவற்றிலும் உலகின் செயல்பாடுகள் அமெரிக்காவில் இருந்து தான் துவங்க வேண்டும் என்பது அதன் விரிவான விளக்கம். இவற்றோடு சில நாடுகளுடனும், உள்நாட்டிலும் நடைபெற்று வரும்/வந்த போர்களுக்கும் அமெரிக்கா தான் மூலம். ஆனால் நானூறு ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு இல்லாத ஒரு அமைப்பு, இப்போது உலகையே ஆளும் ஆசையை சுரக்க வைக்க என்ன காரணம் என்பது தான் ஆச்சரியம்.

***************************************************************************

கதை

இந்த படம் பேட் மேன் -3, மிக முக்கியமாக மற்ற வகை அதிசய மனிதர்களோடு சற்று வித்தியாசமானவன். ஆம் இவன் ஒரு சராசரி மனிதன் தான், அதே சமயம் உலகத்தைக் காப்பாற்றும் ஜேம்ஸ் பாண்ட் போன்ற அரசாங்க ஏஜன்சி உளவாளியும் கிடையாது. பேட் மேன் அமெரிக்காவின் ஒரு பிரபல தொழிலதிபர், அதே சமயம் மக்களுக்கு ஆபத்தாண்டவனாகவும் விளங்க தனக்கென ஒரு அறிவியல் கூடத்தை நிர்மானித்து, அதில் அதிநவீன கேட்ஜட்கள், மோட்டர்கள், ஆயுதங்கள், கணிணி போன்றவற்றை உற்பத்தி செய்து, தன்னையும் சூப்பர்மேனாக நிர்மானித்துக் கொண்ட ஒரு கோடீஸ்வர மனிதன். பொதுவாக இவர் அவ்வளவு எளிதாக வெற்றி பெறுவது எல்லாம் கிடையாது. எப்போதும் மெல்லிய வயலின் கீச்சலுடன் சோக இழை அவர் கதையில் மையம் கொண்டிருக்கும் (அது பேட்மேனின் குடும்பத்து சோகப் பிண்ணனி).

தற்பொழுது வந்து வெற்றிகரமாக ஓடிமுடித்த தி டார்க் நைட் ரைஸஸ் சமகாலப் பிரச்சினைகளை நாம் அணுகிட எவ்வாறு உதவுகிறது. படம் ஆரம்பிக்கும் பொழுது எட்டு வருடப் பகைக்காக “பேன்” எனும் ராட்சத உருவ நிழற்படைத் தலைவன் கோதம் நகருக்கு வருகிறான்.

கோதம் நகரில் பொருளாதார மந்த நிலையில், குற்றங்கள் பெருகிவிட்ட நிலையில், அரசாங்கமும் அதைக் கட்டுப்படுத்த இயலாமல் தவிக்க, மக்களும் அவநம்பிக்கையுடன் திடீரென்று மறைந்து போன தங்கள் ஹீரோ பேட்மேனின் வருகைக்கு காத்திருக்கிறார்கள். அந்த நகருக்குள் இருள் பரவுகிறது, ஓய்விலிருக்கும் பிரபல தொழிலதிபரான ப்ரூசின்(பேட்மேனின்) நிறுவனமோ மிகப்பெரிய வீழ்ச்சியில் இருக்கிறது, இருந்த போதும் மிராண்டவின் மேல் கொண்ட ஈர்ப்பில், அவளுடைய நிறுவனத்தில் உள்ள ஒரு மின்னாற்றல் திட்டத்தில் முதலீடு செய்ய முனைகிறார், அந்த திட்டத்திற்கு தேவைப்படும் ஒரு ஆற்றல் மிகு இயந்திரத்தை ஏற்கனவே உருவாக்கி வைத்திருக்கும் ப்ரூஸ் அது அணுஆயுதாமாகவும் உபயோக்கும் அபாயம் இருப்பதால் அதைச் செயல்படுத்தாமல் ஒரு நதிக்கு அடியே மறைத்து வைத்திருக்கிறார்.

நகருக்குள் புகுந்த சதிகாரக் கும்பல் முதலில் அங்கிருக்கும் பங்குச் சந்தைக்கு சென்று சில நிமிடங்களில் பெரிய அளவில் ப்ரூஸின் நிறுவனப் பங்குகளை விற்று அவரை அந்நிறுவனத்திலுருந்து அப்புறப்படுத்திவிட்டு, அவ்வாயுதத்தையும் கைப்பற்றுகிறான், அத்துடன் அந்த தீவு நகரத்தையும் நாட்டுடன் இருக்கும் எல்லா இணைப்புகளையும் துண்டித்து தன் படையின் உதவியால் கட்டுக்குள் கொண்டுகிறான்.ப்ரூஸ் எனும் பேட்மேனைப் பிடித்து மீள முடியாத மரணச் சிறைக்குள் தள்ளுகிறான்.

நகரத்தை தன் கட்டுக்குள் கொண்டு வரும் “பேண்”  அந்நகரத்தைப் பழி வாங்கிட அதை அழிக்கும் முன் வேறு ஒரு காரியம் செய்கிறான், அது தான் அங்கு வாழ்ந்து வரும் மக்களின் நம்பிக்கையைக் குழைப்பது. இதுவரை அரசாங்கம் மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை என்றும், மக்கள் அதிகம் நம்பிய அரசாங்க அதிகாரிகள் கயவர்கள் என்றும் பிரச்சாரம் செய்கிறான்.

மேலும் “பொது மக்கள் யாவரும் சுரண்டப் படுகிறார்கள்” என்றும், சிலர் வசதியுடன் வாழ்ந்திடவே பெரும்பாலோர் கஷ்டப் படுகிறீர்கள் என்றும் கூறுகிறான். அந்நகரத்திலிருக்கும் சிறைக் கைதிகளையும் விடுவிக்கிறான், அந்தக் கைதிகளையும், ஏழைகளையும் சுரண்டியவர்கள் பணக்காரர்கள், அரசாங்க அதிகாரிகள் தான் என்று அடையாளம் காட்டி அவர்களை தண்டிக்க சொல்லிவிட்டு, ஊருக்குள் கலவரத்தை உண்டு பண்ணுகிறான். அதுதான்

மக்களுக்கான ஆட்சி என்று சமத்துவம் சொல்வதாக காட்சிகள் வருகிறது. அவன் அவ்வூரையே அழிக்கத் துணிந்தவன் என்றுத் தெரிந்தும் பெரும்பான்மையான மக்களும் அவனை நம்புகின்றனர், அமெரிக்கர்கள் தான் அதிகமாக தங்களை புதுப்பித்து வரும் மனித இனம் என்பதால் இந்த மாற்றம் சாத்தியம் ஆகிறது இத்திரைப்படத்தில்.

CHANGE”  எனும் வார்த்தையை அமெரிக்காவின் தாரக மந்திரமாகி ஒரு குடியரசுத் தலைவரை(2008) உருவாக்கியதும் பின்னர் அவரால் அப்படி எந்த ஒரு மாற்றம் இது நாள் வரை நம் கண்ணுக்குள் புலப்படாமல் அமெரிக்காவின் பொருளாதார நிலை தொங்கிக் கொண்டிருப்பதும், இப்பொழுது அவர் பதவிக் காலமே சிறிது நாளில் முடிந்து அடுத்த தேர்தலில் என்ன வார்த்தையை அமெரிக்கர்களுக்கு (CHANGE) மாற்றப்போகிறார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறது உலகம். படத்திலும் பெரிய புரட்சி ஒன்று நிகழ்ந்து வெற்றி பெற்ற வேளையில்(மக்களின் மனமாற்றம்), அதனை அழித்து  நீதியைக் காப்பாற்ற மீண்டும் பேட்மேன் அச்சிறையிலிருந்து தப்பித்து, மீண்டும் தர்மத்தை நிலைநாட்டிய வழக்கமான கதை தான் என்றாலும், இது மிக முக்கியமாய் கவனிக்கப் பட வேண்டிய திரைப்படம்.

இதனால் இந்தப் படம் முக்கியமாகிறது

  • கம்யுனிசம் போன்ற சித்தாந்தங்கள் எப்போதுமே அடித்தட்டு மக்களுக்கு மட்டும் ஒரு புரட்சியாகவும் அதுவே மேல் நிலையில் உள்ளவர்களுக்கு கட்டற்ற அதிகாரம் கொடுத்தும் விடுகிறது என்று காட்சியமைகப் பட்டுள்ளது.
  • மக்களைப் பொருத்தமட்டில் அரசங்கம் மீதான நம்பிக்கை என்பது எல்லா தேசங்களிலும் ஒன்று தான் அது காணாம்ல் போய்விட்டது, இதற்குத் தீர்வாக ஒன்று அவர்கள் புரட்சியை நம்ப வேண்டும் அல்லது பேட்மேன் போன்ற ஆபத்தாண்டவனை(அல்லது கடவுளரை) நம்ப வேண்டும்.
  • பேட்மேன் மட்டுமல்லாது அனேகமாக எல்லா அதிசய ஹீரோக்களும், உலகைக் காப்பாற்றுவதாக இருக்கும் பிண்ணனியில், உலகத்தை ஒரே ஒரு இயக்கத்தில் கட்டுப்படுத்த பல தேசங்களிலிருந்தும் விதை தூவப் படுகின்றன.
  • இந்த படத்தில் வருவதுபோல “ஒரு நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்கப் பங்குச் சந்தையில் கை வைப்பது (இரட்டை கோபுரத் தகர்ப்பான 09/11ல் இருந்து பேட்மேன் திரைப்படம் வரை) இது போன்ற தீவிரவாத கும்பல்களுக்கு மிக அவசியமானது” என்று விடுக்கும் ஒரு செய்தி நம்மைப் போன்ற நாடுகளுக்கும் பங்கு சந்தை போன்ற மாயவலையில் மொத்தமாக நம் சேமிப்பு தொலையாமல் இருக்க வேண்டும், அமெரிக்காவில் எழுபத்தைந்து சதவீத மக்கள் பங்குச் சந்தயில் முதலீடு செய்கின்றனர். ஆனால், ஜெர்மனி போன்ற நாடுகளில் ஏழு சதவீதத்திற்கும் குறைவே.
  • New world order குறித்த அறிவு நமக்கு இல்லையென்றாலும், இது போன்ற ஹாலிவுட் படங்களில் சில சமயம், நம் உலகம் எதிர் நோக்கும் ஆபத்துகளை எதிர் கொள்ள பெரும்பாலும் உலகின் பிரதிநிதியாய் வருவது அமெரிக்க அதிபரே. இது போன்ற திரைப் படங்கள் உங்களுக்கும் இது போன்ற செய்தியை கொண்டு சேர்த்திருக்கும் தானே.
  • அவதார் எனும் திரைப்படம் நம் புராணக் கதைகளில் இருந்து கதாப்பாத்திரங்களின் வடிவம், பெயர் போன்றவற்றை எடுத்துக் கொண்டதாய் தோன்றியிருக்கும், ஆனால் அதன் கதை கூட நம் தேசத்தின் கிழக்குப் பகுதிகளில் மலை, காடுகளில் இருக்கும் வளங்களைச் சுரண்டிப் பெரும் லாபம் ஈட்டிட பெரு முதலாளிகளும், பன்னாட்டு நிறுவனங்களும் பெரிய அளவில் மலைவாழ் மக்கள், பழங்குடியினரை அப்புறப் படுத்தும் கதையோடு பொருந்திப் போகும்.
  • Change –மாற்றம் என்பது இரு பக்கம் கூர்மையான கத்தி போல மிக மிக ஆபத்தானது என்று உணர்வு தருகிறது.
  • எல்லாம் இருந்துவிட்டுப் போகட்டும், இது போன்ற அதிசய மனிதர்களைத் தொட்டுக் கொண்டு முக்கியமான விசயம் எதை வேண்டுமானாலும் கட்டுரை, கதை வழியே எளிதில் மக்களுக்கு கடத்தி விடலாம் தானே??

பேட்மேன் மூன்றாம் பாகத்துடன் இந்த சூப்பர் ஹீரோ வரிசை முடிந்துவிட்டது என்று சொல்லிவிட்டார்கள். ஆனால் பல்லாயிரம் ஆண்டுகளாக அச்சத்துடனே வாழும் நம் இனத்திற்கு, கற்பனையிலாவது மக்களுக்கு இது போன்ற அசகாய சூரர்கள் என்றுமே தேவைப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

ஆக புதிய ஹீரோக்கள் இனி வலம் வருவர்.

 

 

ஜீவ.கரிகாலன்

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular