ரமேஷ் ரக்சன் கதைகள் – 07 – பேச்சி
(ஓவியம் : ஞானப்பிரகாசம் ஸ்தபதி)
*
“எழவு சனியன் ஒருநாளு வீட்ல இருக்கலாம்னா கூட மனசு வரமாட்டேங்குது”
“அந்த வெங்கபய வேற சும்மா இருக்க மாட்டேங்கான்…”
தென்னை ஓலையில் தட்டி செய்து கட்டியதில் அமைந்திருக்கும் பேச்சியின் வீடு. மழைக் காலங்களில் ஒழுகாமலிருக்க, சூளையில் செங்கல் நனையாமல் போர்த்தப்பட்டு கந்தலான தார்பாய்கள் கூரையின் மேல் போட்டு கொடுத்திருந்தார்கள். நழுவி விழுந்து விடாமல் இருபக்கங்களிலும் கயிறு போட்டு, அதில் செங்கற்கள் கட்டி தொங்க விடப்பட்டிருக்கும்.
தெற்கு நோக்கியிருக்கும் பேச்சியம்மாளின் வாசலையொட்டி, கிழக்கு பக்கம் ஒரு திண்ணை, மேற்கு பக்கம் ஒரு திண்ணை அமைந்திருக்கும். வானவில் வளைவு போல மாட்டுச்சாணம் கொண்டு திண்ணையில் மொழுகி விட்டிருப்பாள் பேச்சி. தரைநோக்கி திண்ணை மடங்குமிடத்தில் சாரைப்பாம்பு ஓடுவதுபோல, மூன்றுவிரல் கொண்டு நெளிவுகள் இருபக்கமும் நீட்டிவிட்டிருப்பாள்.
இப்படித்தான் வீட்டிற்குள்ளும், ஐந்து அடுக்கு வளைவும் ஒவ்வொரு வளைவுக்கு இடையே இருவிரல் நெளிவு, என ஒரு ஓவியம் போல இருக்கும் பேச்சியின் வீடு.
மேல் பக்கம் இருக்கும் திண்ணையில் அடுப்பும், கீழ் பக்கமிருக்கும் திண்ணையில் விறகும் அடுக்கி வைத்திருப்பாள். விறகின் நடுவில் சரியான ஒரு வெட்டு விழுந்ததும், இடது கையால் அரிவாளை பிடித்துக் கொண்டு வலது கையால் கட்டைகொண்டு அடித்து. அன்றைய சமையலுக்கான விறகினை கீறி முற்றத்தில் போட்டுவிட்டு, வடு மாங்காய் பொறுக்கக் கிளம்பினாள் பேச்சி.
“ஏ புள்ளோ என் மொவா ரெண்டு மாங்கா கேட்டா வரும் போது தந்துட்டு போறியா துட்டு வேணாலும் தாரமக்கா”
“புள்ள உண்டானவள கண்ணுல காட்டி காட்டி தெனமும் வாங்கிடுங்க…துட்டுலாம் ஒன்னும் வேணாம் ஒங்கமொவளுக்கு குடுத்ததா நெனச்சிகிடுதேன்”
ஆற்றின் அந்தப்பக்கம் கேட்பாரற்று நிற்கும் இரண்டு மா மரங்களிலிருந்து காற்றில் விழும் வடுக்களை எடுத்து வந்து, அருகிலிருக்கும் பள்ளிக்கூடத்தில் மிட்டாய் விற்கும் பாட்டியிடம் கொடுத்து விட்டால் சாய்ங்காலம் விற்ற காசு எவ்வளவு என கணக்கு கொடுத்துவிடும்.
“பாட்டிக்கு ஊறுகாய் போட மாங்காய் கமிஷன்”
ஒரு வாரத்திற்குள்ளாகவே பாட்டியின் கணக்கில் சுரண்டல் இருப்பதாய் பொறி தட்டவும், மாங்காயை தானே நீளமாக சின்ன சின்ன துண்டுகளாய் வெட்டி வத்தல்பொடி உப்பும் கலந்து ஒரு பாத்திரத்தில் போட்டு கொடுத்து விடுவாள் பேச்சி. அதற்காகத்தான் பொழுது விடியும் முன்னமே ஆற்றை நோக்கி விரைந்து கொண்டிருந்தாள்.
“ஏட்டே… ஒங்க அம்மகாரி பாக்க வந்தாளா?”
“அவா ஏன் என்ன பாக்கவரா? அந்தால போக்கெடுத்து போனவ தான்…”
“மொவ நெனப்பு இல்லாமலா இருக்கும் வந்துடுவா”
“புது புருசன் கெடச்ச பவுசு இப்போதைக்கு போவாது” வாங்கி வச்ச கடனுக்கு நாந்தாஞ் சாவணும்”
பேச்சியின் அம்மா களத்தில் வேகமாய் கல் அறுப்பாள். ஒரு நாளைக்கு 2000 செங்கல் வீதம் ஒரு சூளையில் அடுக்கும் கல்லில் பாதிக்கு மேல் பேச்சியின் அம்மாவினுடையதாகத் தான் இருக்கும். முத்தம்மாள் வேலையின் வேகத்தை அறிந்து இரண்டு வருடங்களுக்கு முன்னர் 30000/- முன் பணமாய் கொடுத்து, இப்போது இருக்குமிடத்திற்கு அழைத்து வந்தார் சூளையின் முதலாளி.
“இங்கன நல்லா தான சம்பளம் தாராறு? பொறவு எதுக்கு போற?” முத்தம்மாளோடு தங்கி வேலை பார்க்கும் பெண்மணி ஒருத்தி கேட்ட கேள்வி இது.
“அந்த மால்ல(செங்கல்சூளை) 30000/- வட்டியில்லாம தாரேங்குறான். இவளுக்கு இப்பவே நக சேத்தா தானா நாலஞ்சி வருசம் கழிச்சினாலும் கெட்டிகுடுக்க முடியும்?”
“நகரேட்டு வேற ஏறிட்டே போவுது… சீட்டுகீட்டு போட்டாலும் அது வுழுறதுக்குள்ள கூட ஆயிரம் ரூவா சொல்லுவான்”
“எதும் காண்ட்ராட் ஆளு மாட்டாமலா போயிடுவான்? ஓம்மொவா இப்பவே எடுப்பா தான இருக்கா? புடிச்சிகுடு…”
“ஒன்னியமாதிரி கூட்டி அடைக்க சொல்லுதியாக்கும்”
“வேச“
எட்டாம் வகுப்பு பாதியில் பேச்சி பெரியமனுசி ஆனதும் பள்ளியிலிருந்து நிறுத்தியிருந்தாள் முத்தம்மாள். களத்தில் அறுத்த கல்லில் பிசிறு சீவி ஒரு பக்கமாய் நிறுத்தி வைப்பது தான் அப்போதைக்கு பேச்சியின் வேலை. எதிர் வீட்டிலிருப்பவளின் பேச்சு எதுவும் சரியாக இல்லாததால் முன்பணத்தை வாங்கிய கையோடு மகளுக்கு கம்மலும் வளையலும் வாங்கிவிட்டு ஊர் மாறியிருந்தாள்.
பேச்சிக்கு கல் அறுக்கத்தெரியாது என்பதாலும், தினமும் சூளையில் கல் ஏற்றும் வேலை இருக்காது என்பதாலும், போன வாரம் தான் காண்ட்ராக்ட் எடுத்து அதன் மூலமாக ஊர் ஊராக சென்று சூளையில் கல் அடுக்கி கொடுக்கும் மாரியிடம் வேலைக்கு சேர்ந்திருந்தாள்.
முந்தினநாள் மாலை வேலை முடியும் நேரத்தில் எல்லோருக்கும் நாளை எங்கு வேலை என்பதை சொல்லி அனுப்பிவிடுவார் கான்ட்ரக்டர். பஸ் ஏறி போகக்கூடிய தூரம் எனில் அரசமூட்டில் கூடி பின்னர் அனைவரும் ஒன்றாய் செல்வது வழக்கம்.
ஒரே ஊர்காரர்களாக இருந்தாலும் இதுவரையிலும் பேசிப்பழகிடாத மூக்கன், இரண்டு நாளைக்கு முன்னதாக புதிதாய் கல் அடுக்கச்சென்ற சூளையில் பேச்சிக்கு அறிமுகமாகியிருந்தான்.
“பொழுதுக்கும் சாப்பாடு கெழங்கு தானா?”
“ஏதுக்கு இப்டி கேக்கிய”?
“செம்மண்ல பொரட்டி எடுத்த கெழங்கு மாதிரி சிக்குனு இருக்கியே அதான் கேட்டுகிட்டேன்”
“கண்ட்ராக்குகிட்ட சொல்லிகுடுத்தா தெரியும்”
“ஓ! பொரட்டுனது அவுரு தானா?”
“செருப்பு பிஞ்சிடும்”
“கழத்தி போட்டுட்டு வாட்டி”
ஓலைபிறையிலிருந்து ஈரம் காய்வதற்கு என முன்னமே அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பச்சை செங்கல்லை சூளைக்கு அனுப்ப, ஒரு தோளுக்கு நான்கு கல் வீதம் தூக்கிவிடும் ஆண்களில் மூக்கனும், சுமப்பதில் பேச்சியும் ஒருத்தியாய் நின்றதில் தான் இந்த விவாதம் நடந்து முடிந்திருந்தது.
இரட்டை அர்த்த வசனங்கள் எல்லாம் பக்கம் பக்கமாய் கேட்டிருந்ததால் பெரிதாய் பொருட்படுத்தாமல் மறு நாளும் வேலை சென்றதில் தான் அந்த விபரீதம் நடந்தேறியது. மூக்கனிடம் தோளில் கல் வாங்கும் போதெல்லாம், பேச்சியின் மார்பை உரசிக்கொண்டே இருந்தான்.
மூக்கனிடம் செல்லாமல் வேறு ஆட்களிடம் கல் வாங்கிச்சென்றாலும், பத்து நடைக்கு ஒரு தடவையாவது அவன் கைக்குச்செல்ல வேண்டிய நிலைவர, சரியாய்ப் பயன்படுத்திக்கொண்டிருந்தான். இப்படி பயமின்றி துணிச்சலுடன் பேச்சியின் மேல் கை வைப்பதற்கும் ஒரு காரணம் இருந்தது.
மலைபோல் குவிந்து கிடக்கும் களிமண்ணையும் செம்மண்ணையும் பதமாய்க் குழைத்து கல் அறுக்கும் களத்தில் இடைவெளி விட்டு, கொஞ்சம் கொஞ்சமாய் ஒரு கைவண்டியில் வைத்து குவித்து வைத்துவிட்டுப்போகும் செம்பட்டையனுடன் தான் மூன்று வாரங்களுக்கு முன்னதாக ஓடிப்போயிருந்தாள் பேச்சியின் அம்மா.
இன்னைக்கு எப்படியாவது வேலைக்கு செல்லாமல் இருந்துவிட வேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் மனதிற்குள் சொல்லியவாறே காரணம் கிடைக்காமல் மாங்காய் பொறுக்கி விட்டு சீமஉடைகள் நிறைந்த ஆற்றின் ஓரம் ஒதுக்குப் புறமாய் காலைக் கடனை ஆற்றோரமாய் முடித்துவிட்டு கால் நனைக்க அமருகையில் மூக்கனின் குரல் கேட்டது பேச்சிக்கு.
“ஓ பேச்சி…ஆம்பளயாள் சட்டய போடாம இன்னைக்கு தாவணில வா என்ன”
கடவாய் பற்களில் வேப்பங்குச்சியை ஒதுக்கிச் சவித்து பிழிந்த சாற்றினை ஆற்றிற்குள் துப்பியவாறு பேச்சியிடம் சொன்னான் மூக்கன்.
“இருட்டு நேரம் தான” என்று தன்னைத்தானே சமாதானம் சொல்லிப் பார்த்தும் அடங்காத மனதின் சுமை தாங்காமல் கீழ்தாடை வலிக்கும் அளவிற்கு அழுது கொண்டே வீடு வந்து சேர்ந்தவள், சூளையில் முதல் தரமற்ற செங்கல், லோடு ஏற்றும் போது உடைந்த செங்கற்கள் என தன் கைக்குள் அடங்கும் வரை கையிலெடுத்து வெளியே போடத் துவங்கினாள் பேச்சி.
ஒவ்வொரு முறையும் சூளையிலிருந்து கற்களை வெளியே எடுத்துக் கொண்டு போடும் போதும் அந்தக்குரல் கேட்டுக் கொண்டேயிருந்தது.
“ஓ பேச்சி…ஆம்பளயாள் சட்டய போடாம இன்னைக்கு தாவணில வா என்ன”
- ஓவியம்: ஞானப்பிரகாசம் ஸ்தபதி
நான்கு கற்கள் மட்டுமே அடங்கும் கைகளில், ஐந்தானது, ஆறானது… மூக்கன் சொன்ன வார்த்தையின் சுமை ரணமாகிக் கொண்டிருந்தது. விறகுகள் எரிந்து தணிந்து பரவிக் கிடக்கும் சாம்பலைப் பார்க்கப்பார்க்க சிதை மூட்டியது போலிருந்தது பேச்சிக்கு.
கைகள் ஏந்தி நின்ற செங்கற்களை நழுவ விட்டாள். இடது கால் பெருவிரல் நகம் பெயர்ந்து இரத்தம் பீறிடத் துவங்கியது…
– ரமேஷ் ரக்சன்
rameshrackson@yahoo.com