பெருவனத்தில் சுற்றியலையும் புள்ளிமானும் ஒரு பட்டாம்பூச்சியும்

0

ஸ்ரீனிவாசன் பாலகிருஷ்ணன்

கொமோரா ஒரு பெருங்காடு. அத்தனை விதமான வேட்டை மிருகங்களும் பெரும் பசியுடன் சுற்றியலையும் அடர்காடு. அந்தக் காட்டு மிருகங்களின்  மாமிச வேட்டையில் இருந்து தப்பிப்பிழைத்து உயிர்வாழ வேண்டுமானால், காட்டுத்தனமாக ஓடி ஒளியத் தெரியவேண்டும். அல்லது மிருகங்களைப்போல் சண்டையிட வேண்டும். முதலில் ஓடி ஒளியும் அழகரும், கதிரும், பின் யாருக்கும் அடங்கா வேட்டை மிருகங்களாக உருமாறுவது, தொடர்ந்து தங்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைகளால் தான். தன்னை வேட்டை மிருகமாக மாற்றிய சமூகத்தை எதிர்த்து அழகரின் வேட்டையும், அழகர் எனும் கட்டுக்கடங்கா மிருகத்தை எதிர்த்துக் களமாடும் புள்ளிமானாகக் கதிரும், தங்களை இந்தப் பெருங்காட்டில் பொருத்திக் கொள்வது இப்படியாகத்தான்.

கானகனில் பழியின் வெப்பம் கொண்ட வேங்கையின் மூலமாக, வாசி தன் அப்பன் மீதான வேட்டையை நிகழ்த்துகிறான் என்றால், கொமோராவில் கதிரே அந்த வேட்டைக் கருவியைத்  கையில் எடுக்கிறான். ஒருவருக்கொருவர் முட்டி மோதிக்கொள்ளும் பெருங்காட்டில் தப்பிப்பறக்க நினைக்கும் பட்டாம்பூச்சியாக மாற நினைப்பது ஜோதியாகத்தான் இருக்க வேண்டும்.   

கொமோராவில் இருந்து ரூஹ் வேறுபடும் புள்ளியும் இதுதான். கொமோராவைப் போலவே ரூஹ் நிகழ்வதும் ஒரு பெருங்காட்டில்தான். பல்வேறு வேட்டை மிருகங்கள் சுற்றியலையும் அந்தப் பெருங்காட்டினுள் பின்னப்பட்ட சிறிய கூட்டில் வசிக்கும் பறவைகளுக்கு இடையே நிகழும் கதையிது. அந்தக் கூட்டை விட்டுப் பறக்கவும் வேண்டும், உயிரும் முக்கியம் என்ற இரு கோடுகளுக்கு இடையே நிகழும் வாழ்க்கை ‘ரூஹ்’வில் காட்சியாக்கப்பட்டிருக்கும் சித்திரம். பசியின் வேட்கை கொண்ட மிருகங்களின் வன்முறைக்குப் பழகி, பலியாகி, பின் அவற்றில் இருந்து தப்பிப் பிழைத்து தங்களுக்கான வானில் உயரப் பறக்கும் பறவைகளின் கதையிது. இந்தக் கதையின் உன்னதமான சித்திரம் ராபியா – ஓர் அன்னப்பறவை என்றால்,  அவளின் மூலம் மீட்டெடுக்கப்படும் ஜோதி –  பட்டாம்பூச்சி.

வெறிகொண்ட புள்ளிமான், மதங்கொண்ட வேட்டை மிருகத்தைக் கொன்று அழிக்கும் அதே கானகத்தில், ஒரு பட்டாம்பூச்சி தாய்மையைத் தேடியலையும் கதை ரூஹ்.

இந்தப் படைப்புகளின் மைய கதாபாத்திரங்களாக வலம் வரும் அழகர், கதிர், ஜோதி என்ற மூன்று சிறுவர்களின் வாழ்க்கையையும் மூன்று தனித்தனிக் கதைகளாகவோ அல்லது ஒருவரோடு ஒருவர் தொடர்புடைய மூன்று இணை மனிதர்களாகவோப் பார்க்கலாம். இதன்மூலம், பல்வேறு அடுக்குகளாகக் கட்டப்பட்டிருக்கும் கொமோராவின் தொடர்ச்சியாக ரூஹ் இடம்பெறுவதும், இந்த மூன்று கதைகளுமே மூன்று தனித்த வாழ்க்கையை ஒரே புள்ளியை நோக்கி இழுத்துச்  செல்வதையும் புரிந்துகொள்ள முடியும். அது எந்த ஒற்றைப் புள்ளி என்பதுதான் லஷ்மியின் படைப்புகள் நம்மிடம் எழுப்பும் கேள்விகளும் அதன் மூலம் நாம் தேடும் பதில்களுமாக  நிற்கின்றன.    

எளிய மனிதர்கள் தனித்துவிடப்பட்ட போதிலும் சரி, கூட்டமாக வாழும்போதும் சரி, துரத்தப்பட்டும் அலைக்கழிக்கப்படவும்தான் செய்வார்கள் என்ற எளிய உண்மையில் இருந்தே ஆரம்பமாகிறது கொமோராவும் ரூஹ்’வும்.

கம்போடியாவில் இருந்து பெயர்த்தெடுக்கப்படும் பெருமக்கள் கூட்டமாகட்டும், தங்கள் குழந்தைமையில் இருந்து பிடுங்கி எறியப்படும் அழகரும் கதிருமாகட்டும், இதற்கான மிகப்பெரும் உதாரணங்களாகவே இந்த நாவலில் கட்டமைக்கப்பட்டுள்ளார்கள். கொமோராவின் தொடக்கத்தில் வரக்கூடிய,  பாறைச்சாமியின் திருவிழாக் கொண்டாட்டத்தில், வேரில் இருந்து அகற்றப்பட்ட மக்கள், தொலைவில் இருந்துகூட தங்கள் குலச்சாமிக்கான படையலைக் கொடுத்துவிடக் கூடாது என்பதில் தீவிரமாக இருக்கிறார்கள் –  அவர்களை இந்த மண்ணில் இருந்து அகற்றியவர்கள்.

இதே போன்ற காட்சியைத்தான் கம்போடியாவிலும் காண முடிகிறது. கம்போடிய மக்கள், தங்கள் குலதெய்வ வழிபாட்டினைக் கொண்டாடத் தடைசெய்த கெமர்ரோஜ் படையினருக்கும், இவர்களுக்கும் என்ன பெரிய வித்தியாசம் இருக்கிறது? அங்கே துப்பாக்கிக் குண்டுகளின் மூலம் சாத்தியப்படுத்திய ஒரு விஷயத்தை, இங்கே வேரில் நஞ்சைப் பாய்ச்சுவதன் மூலம் பிடுங்கி எறிந்திருப்பார்கள். இரண்டு இடங்களிலும் மக்களின் மனதில் விதைத்த பயம் என்னும் உணர்வே அவர்களை அந்த நிலத்தில் இருந்து விரட்டி இருக்கும். பயத்தை உருவாக்குவாதற்காக எடுக்கப்பட்ட கொலைக்கருவிகள் வேண்டுமானால் வேறுவேறாக இருக்கலாம். ஆனால் நோக்கம் ஒன்றுதான். மராட்டிய நிலத்தில் இருந்து ஆங்ரேவின் தளபதியின் மூலமாக இடம் மாற்றப்படும் தோல்பாவைக் கலைஞர்களும் அவர்களின் தொடர்ச்சியாக அலைகழிக்கப்படும் ஜோதியின் குடும்பமும் வேரில் இருந்து பிடுங்கி வேறு நிலத்தில் நடப்பட்டவர்கள்தாம்.

இதுபோன்ற காட்சிப்படுத்தல்களின் மூலமாக, லஷ்மியின் படைப்புகளில், ‘தொடர்ந்து தூரத்தப்பட்டுக் கொண்டே இருக்கும் மக்களையும், அதன் பின் இருக்கும் அரசியலையும், அந்த அரசியல் ஏற்படுத்தும் சிக்கல்களையும்’ கவனிக்க முடியும். உப்புநாய்களில் ஆதம்மாவின் குரலாக, கானகனில் அடித்து விரட்டப்படும் பூர்வக்குடிகளின் குரலாகவும் ஒலிப்பது, தொடர்ந்து தூரத்தப்பட்டுக் கொண்டே இருக்கும் மக்களின் குரலைத்தான்.

கொமோரா, முழுக்க முழுக்க விலகலுக்கான, வெறுப்பிற்கான, எதுவும் வேண்டாமெனக் கலைந்து ஒடுவதற்கான எழுத்து என்றால், கொமோராவில் பேசப்பட்டுவதைப் போலவே தனிமனித, சமூக ஒழுக்கச் சிக்கல்களைக் கொண்டிருக்கும் ரூஹ், இணைந்து, இணக்கமாக வாழ்வதற்கான, தனிமனித, சமூக ஒழுக்கச் சிக்கல்களையும் கடந்த ஆன்ம ஒளியின் பாதையில் வழி நடத்தும் அன்பு அன்பு அன்பு என்று அன்பை மட்டும் கொடுக்கவும் எதிர்பார்க்கவும் செய்யும் படைப்பு. இந்தப் புள்ளியில் இருந்து விலகிப் பார்த்தால் இந்தப் படைப்பில் பேசப்படும் அன்பு, சற்றே அதிதீமாகவும், திகட்டுவதாகவும் இருக்கக்கூடும். உண்மையென்னவென்றால், எதையும் எதிர்பாராமல் கொடுக்கப்படும் அன்பு, அதீதமாகவும் திகைப்பூட்டச் செய்வதாகவும்தான் இருக்கும்.

அழகர், கதிர், ஜோதி என்ற இந்த மூன்று குழந்தைகளையும் சில விஷயங்கள், சில தருணங்கள் ஒற்றுமைப்படுத்துவதையும், வேற்றுமைப்படுத்துவதையும் கவனிக்க முடியும். இந்த மூவருமே பிறழ்வடைந்த பால்யத்தைக் கொண்டவர்கள். எந்நேரமும் பசியை உணரும் வயிறு அவர்களுடையது. அதிகாரத்தின் கால்கள் எப்போது வேண்டுமானாலும் அவர்களை நசுக்கக்கூடும். பாலியல் கரங்கள் எந்த வேளையிலும் அவர்கள் உறுப்புகளின் மீது படரக்கூடும். அடக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, ஒடுக்கபட்ட பால்யம் அவர்களின் சுதந்திர மனவெளியைச் சிதைத்திருப்பதை நம்மால் உணரக்கூடும்.

இந்த மூவரில் சற்று அதீதமான வதைகளுக்கு ஆளான சிறுவன் அழகர்தான். ஒருமாதிரி மரத்துப் போன இதயத்தைக் கொண்டவன். தங்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறை தாங்காமல் எதிர்வினையாற்றும் கதிருக்கும் ஜோதிக்கும் கிடைத்த வாய்ப்பு கூட அழகருக்குக் கிடைத்திருக்கவில்லை.  தொடர் தாக்குதல்களின் மூலமாகவும், தூரத்தல்களின் மூலமாகவும், சமூகம் அவனை விரட்டிக்கொண்டே இருக்கிறது. அவனும் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டே இருக்கிறான். அதுவே அவனை எல்லைகளற்ற வெளியை நோக்கி துரத்திவிடுகிறது. அத்தனை சமூக ஒழுங்கிற்கும் அப்பாற்பட்டவனாக, அவற்றைப் பொருட்படுத்தாதவனாக மாறிவிடுகிறான். அடுத்தவர்களைப் பற்றி யோசிப்பதற்கு அங்கே இடமில்லை. அடுத்தவர்களின் சுதந்திரத்தைப் பறிப்பதைப் பற்றியும் கவலை கொள்வதில்லை. அழகர்சாமியின் இந்த சித்திரம் இறுதிவரைக்கும் அப்படித்தான் படைக்கப்பட்டிருக்கும். அழகர்சாமியின் உலகத்தை மிக நெருக்கமாகப் பார்த்தவர்கள் யாரும் இல்லை. இதற்கான அர்த்தம் அழகர்சாமி, தன்னை யாரும் நெருங்கிவர அனுமதிக்கவில்லை என்று புரிந்து கொள்ளலாம்.

ஆனால் கதிரைச் சுற்றி மிகப்பெரிய உலகமிருக்கிறது. பல தருணங்களில் அந்த உலகமே அவன் எதிர்கொள்ளும் சிக்கல்களில் இருந்து அவனைக்  காப்பாற்றுகிறது. இதில் காட்சிப்படுத்தப்படும் சிறிய வித்தியாசம் என்னவென்றால், கதிரைக் காப்பாற்றுவது கதிரைச் சுற்றி உருவான உலகமென்றால், கதிரைப் பலியாடாக்குவது, அவன் கட்டமைக்க முயன்ற உலகம். கதிர் வாங்கி வந்த வரமும் இதுதான்.  கொமோராவாகட்டும், ரூஹ் ஆகட்டும், சுய விமர்சனங்களுக்கு இணையான விமர்சனங்கள் சக கதாபாத்திரங்களின் மீது வைக்கப்படுகிறது. கதிர் குறித்தோ ஜோதி குறித்தோ நாம் நினைப்பதை, அவர்களைச் சுற்றி இருக்கும் மனிதர்கள் பேசுகிறார்கள். சில சமயங்களில் நாம் நினைத்துப் பார்க்காத அகவெளி குறித்தும் அவர்கள் உரையாடுகிறார்கள். நாவல் கட்டமைப்பின் மிகமுக்கியப் புள்ளியாகக் கருதுவது இதைத்தான். முருகன், சந்திரன், சக்தி, லதா, ஆண்ட்ரூ சாமி எனப் பலரும் கதிரின் சுயம் மீது வைக்கும் விமர்சனங்கள் கதிர். அவனே மறுக்க முடியாத சுயம்தான் அவர்களின் வார்த்தைகள். எவ்வளவு முறை விலகல் குறித்து யோசித்த போதும் மீண்டும் மீண்டும் அவர்களைச் சுற்றியே தன்னைக் கட்டமைத்துக் கொள்வதும் இதன் காரணமாகத்தான். தனக்கென ஒரு வீடு, ஓர் உலகம் வேண்டுமென அவன் கொள்ளும் ஆசைகளும் முயற்சிகளும் தோற்கும் போதெல்லாம் அவன் அப்பாவின் மீதான கோபம் வெறியாக மாறுகிறது. அப்பாவைக் கொல்ல வேண்டும் என்னும் அதீத வெறுப்பை நோக்கி இழுத்துச் செல்கிறது. ஜோதி வெறுக்கும் மனிதனும் அவனது அப்பாவாகத்தான் இருக்கிறார். குழந்தைகளின் உணர்வுகளை உலகத்தைப் புரிந்து கொள்ளாத அப்பாக்கள் அவர்கள்.          

இந்தத் தனிமனித வெறுப்பிற்குப் பின் ஒரு சமுதாயமும் காரணமாக இருக்கிறது என்பதைத்தான் இந்த இரு படைப்புகளும் பல இடங்களில் வழியுறுத்திச் சொல்கின்றன. குழந்தைகளை  மட்டம் தட்டும் உலகில், அவர்களைச் சுற்றி இருக்கும் சமூகத்தின் செயல்பாடு,  சமூகமான நம் செயல்பாடு என்ன என்ற கேள்வியையும் நம்மீதே வைக்கிறார் ஆசிரியர்.

கதிரின் அப்பா செய்த குற்றத்திற்கு, கொலைகாரனின் பிள்ளை என்று மட்டம் தட்டப்படும் இடமாகட்டும், எச்சித்தட்டுக் கழுவுகிறான் என்று கதிரை அவமானப்படுத்தும் பிள்ளைகளாகட்டும், முறை வைத்து வஞ்சம் தீர்க்கும் கணக்கு வாத்தியார் ஆகட்டும், ஒரு பிள்ளையை நம் சமூகம் எப்படி வார்த்தெடுக்கிறது என்ற கேள்வியை நாம் எதிர்கொண்டே ஆகவேண்டும். ஜோதிக்கு உள் இருக்கும் பெண்மைத் தன்மையைக் கேலிப் பொருளாக்கி, சமூகமும், அதில் உள்ளடக்கிய சக மாணவர்களும் வாத்தியார்களும் கேலி பேசிய தருணமும், அவன் அப்பாவின் மூலமே அது வழிமொழியப்படும் போது ஜோதி அடையும் வலியும் இந்தச் சமூகம் தன் பிரஜைகளின் மீது தொடர்ந்து நிகழ்த்திக் கொண்டே இருக்கும் அவலம். சமூகம் எனும் இந்தப் பூனைக்கு மணிகட்ட வேண்டியது யார் பொறுப்பு? அதில் கொஞ்சத்தை ராபியா பார்த்துக் கொள்கிறாள். கொஞ்சத்தை சந்திரனும், முருகனும், மணியும், சக்தியும் பார்த்துக் கொள்கிறார்கள். ஆனாலும் அந்த வலி? எவன் ஒருவனும் பிறப்பால் குற்றவாளி இல்லை. தன்னுடைய தொடர் தாக்குதலினாலும், அதிகார போதையினாலும் இந்தச் சமூகமே அவர்களைக் குற்றவாலிகளாகப் பிறழச் செய்கிறது. பின் தன்னுடைய நீதிக் கூண்டிலேற்றி, பின் கழுவில் ஏற்றுகிறது. அது சரியா என்ற கேள்வியை முன்வைக்கிறது லஷ்மியின் படைப்புகள்.

கொமோரா ஒரு பெருங்காட்டில் நடக்கும் கதை என்பதால் அதில் பல்வேறு விதமான மனிதர்களின் கதைகளும் அவர்களுக்கான கிளைக்கதைகளும் வந்து போகின்றன. நாவலின் பிரதான பேசுபொருளின் தன்மையை இந்தக் கிளைக்கதைகளும் தீவிரப்படுத்துகின்றன. நான்கு சுவருக்குள் நடக்கும் காட்சிகளை விட, பெரிய வெளியில் நடக்கும் காட்சிகளே அதிகம் என்பதால், இந்த உலகம் நமக்கு அறிமுகப்படுத்தும் மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு குணமும், உலகமும் இருக்கிறது. அவர்களும் நம்மைச் சுற்றித்தான் இருக்கிறார்கள் என்ற உண்மை நம் முகத்தில் அறைகிறது. ரூஹ் சின்னஞ்சிறிய கூட்டுக்குள், வெகுசில மனிதர்களைச் சுற்றி  நிகழும் கதை. இங்கே மனிதர்களின் கதைகளைவிட அவர்களுக்கிடையே ஏற்படும் உணர்வுகள் தீவிரமாகப் பேசப்படுகிறது. அதன் காரணமாகவே இந்த நாவலுக்கு ஒரு கவிதைத் தன்மை இயல்பாகவே கைகூடி இருப்பதை நாம் காணலாம்.

இவ்விரண்டு படைப்புகளுமே பாலியல் அத்துமீறல்களைப் பேசியதைப் போலவே, பாலியல் உணர்வு மீறல்களையும் வெளிப்படையாகப் பேசுகின்றன. மேலோட்டமாகப் பார்த்தால் கதிர் பிற பெண்களுடன் கொள்ளக்கூடிய ஊடல் பிரதானமாகத் தெரியலாம். பாலியல் கிளர்ச்சியையும் தூண்டலாம். இங்கே கேள்வி கேட்க வேண்டியது படைப்பின் மீதோ படைப்பாளியின் மீதோ அல்ல. ஒரு மனிதனுடைய பாலியல் தொகுப்புகளைப் பேசியதைப் போலவே, அவன் எதிர்கொண்ட பல்வேறு உளச்சிக்கல்களை, மிகத்தீவிரமாகவும், வீரியமாகவும் பேசியிருக்கிறார் ஆசிரியர். சொல்லப்போனால் நாவலின் பிரதான பிரச்சனைகளாக வந்துபோவதும் அவைதான். அவை ஏற்படுத்தாத அதிர்வுகளை இந்தப் பாலியல் வரிகள் மட்டும் ஏற்படுத்தும் என்றால், நாம் முதலில் கேள்வி கேட்க வேண்டியது யாருடைய அகத்தை என்பதை நாம் தான் யோசித்துப் பார்க்க வேண்டும்.    

கொமோரா எதைச் சரியெனச் சொல்ல வருகிறது என்ற கேள்விக்கான பதில், எந்தத் தவறை, யார், எங்கே, எப்போது, எப்படித் தடுத்திருக்க வேண்டும் என்ற பதிலாக ‘ரூஹ்’வில் வெளிப்படுகிறது.

இங்கே யாரும் பிறழ்ந்தவர்கள் இல்லை
அமைதி என்றால் எப்படியிருக்கும் என்று
அறியாதவர்களே அவர்கள்…!

ஆன்மாக்களுக்கு உள்ளும்
ஆன்மாக்களுக்கு வெளியேயும் நிகழும்
சண்டைகள் தேடுவது
அமைதியைத்தான்…!
      
ஒழுங்கில்லாத சமூகம்
எழுப்பும் இரைச்சலுக்களுக்கு மத்தியில் அவை இவர்களின் குரல்கள்
அமிழ்ந்து போகின்றன..!

அந்தக் குரல்களின் ஓசைகளை, அவர்களின் தேம்பல்களை, கேள்விகளை மேலெடுத்து வரும் வேலையைச் செய்திருக்கிறது கொமோராவும் ரூஹ்வும்.

(கொமோராவை முதல்முறை வாசித்து அதற்கான விமர்சனம் எழுதிய தருணத்தில், இந்த நாவல் தமிழ் இலக்கியத்தின் தவிர்க்க முடியாத நாவல் என்று எழுதி இருந்தேன். என்னுடைய மறுவாசிப்பும் அதையே உறுதி செய்துள்ளது. காத்திரமான படைப்பை அதற்கே உரிய கனத்துடன் எழுத்தாக்கிய எழுத்தாளர் லஷ்மி சரவணக்குமார் அவர்களுக்கு வாழ்த்தும் நன்றியும்)

***

ஸ்ரீனிவாசன் பாலகிருஷ்ணன், சாபக்குமிழ், தற்செயல்களின் பின் ஒளிந்திருக்கும் கடவுள் ஆகிய நூல்களின் ஆசிரியர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here