Tuesday, November 5, 2024

பெருங்கசிவு

பாரதிராஜா

(முதல்கதை)

***

காலை 6:06

லாஸ் ஆல்டோஸ் ஹில்ஸ், கலிஃபோர்னியா.

கதிரவன் இருட்டை விழுங்கி ஏப்பம் விடும் நேரம்.

உலகின் தலைசிறந்த தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவர் – இன்னும் தன் இரவு உடையில்தான் இருக்கிறார் – உலகெங்கிலும் இருந்து வந்து குவிந்து கொண்டிருக்கும் தற்கொலைப் புள்ளிவிவரங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறார். சென்ற ஆண்டு கொரோனா சாவுகளின் எண்ணிக்கையைப் பார்த்த போதைவிடப் பயங்கரமானதோர் அனுபவம் இது. ஒவ்வொரு நொடியும் எண்கள் எகிறிக்கொண்டிருக்கின்றன.

ஒவ்வோர் ஆண்டும் எட்டு லட்சம் பேர் தற்கொலை செய்துகொண்டு சாவதாக ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. அதன்படி பார்த்தால் ஒரு நாளைக்கு இரண்டாயிரம் பேர். நேற்றிரவு வரை ஆறு லட்சத்தைக்கூடத் தாண்டவில்லை இந்த ஆண்டுக்கான எண். கடந்த மூன்று மணிநேரத்தில் மட்டும் 33,000 பேர் இறந்திருக்கிறார்கள். பல் துலக்கக்கூடப் போகப்பிடிக்கவில்லை. அதற்குள் எண்ணிக்கை எவ்வளவு ஆகிவிடுமோ.

இந்த எண்கள் எப்படிச் சேகரிக்கப்படுகின்றன? இவற்றின் உண்மைமையை எப்படி நம்புவது? இது போன்ற சாவுகளை அடியோடு மறைக்கும் – குறைத்துக்காட்டும் நாடுகளும் இருக்கின்றன. நான் பிறந்த புனித பூமியே அப்படியான ஒன்றுதானே! இதுபோன்ற சாவுகளைக் கணக்கிடவே முடியாத நாடுகளும் கூட இதே உலகத்தில்தான் இருக்கின்றன. இதையெல்லாம் கணக்கிடும் வழிமுறையை (அல்கரிதம்) எப்படி அமைத்தார்கள்!

ஐயோ, அநியாயமே! சமூக ஊடகங்களில் அறிவிக்கத் தொடங்கிவிட்டார்களே! சனியன்கள்! ஆஆஆ! நேரலையில் இப்படி தன் சாவை – தற்கொலையைப் பதிவிடுகிறார்களே! என்னதான் ஆகிவிட்டது இந்த மனிதக் கூட்டத்துக்கு! இதெல்லாம் எப்படி வெளிவர அனுமதிக்கிறார்கள்! சமூக ஊடகங்களில் இவற்றைக் கட்டுப்படுத்தும் பணியைச் செய்யும் குழுவினரெல்லாம் என்ன ஆனார்கள்! அவர்களும் எத்தனை பதிவுகளை – காணொளிகளைக் கண்டு கட்டுப்படுத்த முடியும்! ஐயோ.. இதென்ன? ஃபீனிக்சில், இந்தக் காணொளிகளைக் கண்டு கட்டுப்படுத்தும் குழுவில் உள்ள ஒருவனே இவற்றையெல்லாம் காணச் சகியாமல் அலுவலகத்திலேயே தன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளான்! இந்தப் பணி இப்போது பெருமளவில் இந்தியாவுக்கும் மாற்றப்பட்டுள்ளது. அங்கு மாலை நேரம். அங்கு என்ன நடந்துகொண்டிருக்கிறதோ தெரியவில்லையே.

“இன்றில்லையென்றால் என்றோ ஒருநாள் இந்த முடிவை எடுத்திருப்பேன் தான். இன்றைய நிகழ்வுகள் என் முடிவைத் துரிதப்படுத்தியிருக்கின்றன. அவ்வளவுதான். இந்த உலகத்தின் மீதான என் அவநம்பிக்கைகளை உறுதிப்படுத்தியிருக்கின்றன. நான் புறப்படுறேன்!”

இதுதான் அவன் உலகுக்குச் சொல்லும் கருத்து. அவன் பதிவுக்குக் கீழே உள்ள ஒவ்வொரு கருத்தையும் படித்தால் குலை நடுங்குகிறது. அடுத்த சிலமணி நேரத்தில் எத்தனை கோடிப்பேர் செத்துப்போகப் போகிறார்களோ தெரியவில்லையே! எவராலும் சரியாகச் சொல்ல முடியவில்லை. எப்படி முடியும்! என்னது, இதையும் அறிவியல்பூர்வமாகக் கணக்குப் போட்டுச் சொல்ல முடியுமா! அடப்போங்கப்பா! அறிவியல் என்ன அம்புட்டா முன்னேறிவிட்டது!

தற்கொலைகள் மட்டுமல்ல, உலகெங்கும் கொலைகளும் பெரிதளவில் நடந்து கொண்டிருக்கின்றன. மனிதர்கள் மனநிலை பேதலித்துவிட்டார்கள். பெரும்பாலான கொலைகள் கணவன்-மனைவிகளால் அல்லது காதலன்-காதலிகளால் செய்யப்படுபவையாகத்தான் இருக்கின்றன. தற்கொலைகளும் அவர்களுக்குப் பயந்துதான். அமெரிக்காவில் நடைபெறும் பெரும்பாலான தற்கொலைகளும் கொலைகளும் துப்பாக்கிச் சூட்டில் நிகழ்கின்றன. பொது இடங்களில் மொத்தமொத்தமாகச் சுட்டுக்கொல்லும் கொடுமையும் நாடெங்கும் தீயாகப் பரவுகிறது.

“மாட்டிக்கொள்வோம் என்று பயமாக இருந்தால்.. உங்களை நீங்களே மாய்த்துக் கொள்ளுங்கள் மிருகங்களே. உங்களால் துரோகமிழைக்கப் பட்டவர்களை ஏன் கொல்கிறீர்கள்? #துரோகக்கொலை”

துரோகக்கொலை ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகிறது.

“கிறுக்குப் பிறவிகள். உன்னைக் கொன்று கொள். அல்லது உன்னைக் கொல்லப் போகிறவரைக் கொல். எதற்காகத் தெருவில் போவோர் வருவோரையெல்லாம் கொன்று குவிக்கிறீர்கள்? #துப்பாக்கிச்சூடுகள்”

திடீரென்று கொரோனா சாவுகள் ஒரு பிரச்சனையே இல்லை என்றாகிவிட்டது. நேற்றுவரை கொரோனா சாவுகளைக் காட்டிக்கொண்டிருந்த வலைப்பக்கங்களில் அதே அட்டவணையில் இப்போது இந்தச் சாவுகளைக் காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

சென்ற ஆண்டில் ஒருநாள் இந்த உலகத்தின் முன்னோடிக் குடிமகன்களின் ஒருவர் என்ற முறையில் இந்தப் பெருந்தொற்றைச் சமாளிக்க – அதிலிருந்து இந்த மனித குலத்தை மீட்க என்ன செய்ய வேண்டும் என்று அவரே மண்டையைப் போட்டுக் குடைந்து தன் பணித்தோழர்கள் எல்லோருடனும் பேசி தொற்றுக்குள்ளானவர்களைக் கண்டுபிடிக்கும் செயலி ஒன்றை உருவாக்க இறங்கினார். இந்தப் பணியில் தொழில்நுட்பத் துறையில் நாயும் பூனையுமாக – அல்லது ஆப்பிளும் ஆரஞ்சுமாக என்று வைத்துக்கொள்வோமே – இருக்கும் தன் போட்டி நிறுவனத்தோடு இணைந்து பணி புரியவும் இறங்கி வந்தார். எவனோ ஒரு முகம் தெரியாதவன் தெரிந்தோ தெரியாமலோ செய்த பெருந்தவறால் இந்த உலகமே அழிந்துகொண்டிருக்கும் வேளையில் தொழில்நுட்ப உலகம் எப்படித் தன் லாபநட்டங்களைப் பற்றிக் கவலைப்படாமல் மனிதகுலத்துக்குத் தன்னால் முடிந்த நன்மைகளை எல்லாம் செய்ய முன்வந்திருக்கிறது என்று பல இடங்களில் திரும்பத் திரும்பப் பேசினார். இப்போது என்ன செய்யப் போகிறார்? அவருடைய துறையிலேயே நிகழ்ந்துள்ள பெரும் குளறுபடி உலகத்தையே இதுவரை கண்டிராத ஒரு பெரும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.

இதற்கெல்லாம் காரணமானவன் யார் என்று தெரியவில்லை. அதை அப்புறம் பார்க்கலாம். இப்போதைக்குப் பற்றியெரியும் இந்த உலகத்தை எப்படிக் காப்பாற்றுவது! அதற்கான தீர்வு தன்னிடம் இல்லை. குறைந்தபட்சம் இதனால் உண்டாகும் பாதிப்புகளை எப்படிக் கட்டுப்படுத்துவது என்று கூடப் புரிபடவில்லை. ஒரு போரில் நிகழ்வதை விடக் கொடுமையாக – ஒரு பெருந்தொற்று கண்டு மீண்டிருப்பதைவிடக் கொடுமையாக உயிர்கள் விழுந்துகொண்டே இருக்கின்றன. சிலமணி நேரத்தில் எத்தனை லட்சம் அனாதைகள்… எத்தனை லட்சம் விதவைகள்… இன்று இரவுக்குள் என்னதான் நடக்கப் போகிறதோ தெரியவில்லையே!

இதற்கு மேலும் தாமதிக்கக் கூடாது. தான் பேசியே ஆகவேண்டிய வேளை இது.

“மக்களே, இத்தோடு உலகம் முடிந்து போய்விடப் போவதில்லை. வரலாற்றில் இதைவிடக் கொடுமையான பேரழிவுகளைப் பார்த்திருக்கிறோம். அவற்றிலிருந்து மீண்டு வந்திருக்கிறோம். இதற்காக உயிரை மாய்த்துக்கொள்ளாதீர்கள். நாம் எல்லோரும் இதில் ஒன்றாக இருக்கிறோம். ஒன்றாக வென்று வெளிவருவோம். தயவுசெய்து என் பேச்சைக் கேளுங்கள். இதற்காகப் பின்னர் நிச்சயம் எனக்கு நன்றி சொல்வீர்கள்.”

சமூக ஊடக வரலாற்றில் முதன்முறையாக தொன்னூறு லட்சம் பேர் இதை மறுபகிர்வு செய்தார்கள். மூன்று கோடி பேர் விருப்பமிட்டார்கள். அடுத்த சிலநாட்களில் இதைவிடப் பெரிதளவில் பகிரப்படும் கருத்துகள் உதிர்க்கப்படலாம். இப்போதைக்கு இதுதான்.

வேறு எந்தச் சமூக ஊடகத்திலும் அவர் இல்லை. அவரைப் பொறுத்தமட்டில் அவை குப்பை. அது மட்டுமில்லை, தனிமனிதர்களின் தரவுகள், தனியுரிமை விஷயத்தில் அவர்கள் எவ்வளவு பெரிய மோசடிக்காரர்கள் என்பதை அவரைவிட நன்றாகத் தெரிந்தவர்கள் இந்த உலகத்தில் இருக்கவா போகிறார்கள்! குறிப்பாக சமூக ஊடகங்களையே புரட்சிக்குள்ளாக்கிய அவன் இருக்கிறானே அவனைக் கண்டால் அவருக்கு ஆகவே ஆகாது. “எந்த அறமும் தரமும் அற்ற அரக்கன் ஒருவன் உருவாக்கிய நிறுவனத்திடம் – வலைதளத்திடம் – செயலியிடம் என்ன தரத்தை எதிர்பார்க்க முடியும்!” என்று அவருக்கு நெருங்கியவர்களிடம் அவர் அடிக்கடிக் குறிப்பிடுவார்.

ஆகா.. அரக்கனைப் பற்றி நினைக்கும் வேளையில் அரக்கனே அழைக்கிறான்: “ஏய்! இப்போது என்ன செய்வது? அடுத்து என்ன செய்வது என்று பிடிபடும் வரை எல்லாவற்றையும் மூடிப்போட்டு விடுவோமா? இது முற்றும் கையை மீறிப் போய்க்கொண்டிருக்கிறது. இப்படியே தொடர்ந்தால் நானே உயிரோடு இருப்பேனா என்று தெரியவில்லை. ஈ-பொதுமுடக்கம் ஒன்றே தீர்வு.”

என்னது, ஈ-பொதுமுடக்கமா… அதற்குள் பெயரும் கண்டுபிடித்து விட்டானா?

“யோவ்! என்ன பேசிக்கொண்டு இருக்கிறாய்? தொழில்நுட்பத்தால் வைக்கப்பட்ட தீதான் இது. ஆனால் அதை அணைக்கும் வேலையையும் தொழில்நுட்பந்தான் செய்துகொண்டிருக்கிறது. இது ஒரு பெருங்குழப்பம். புரிகிறது. அதற்காக அப்படியே இணையத்தை அணைத்துப் போட்டுவிட முடியாது. அது இன்னும் இன்னும் உயிர்களைக் காவு வாங்கத் தொடங்கிவிடும். ஒன்று செய்வோம். உடனடியாக அதிபர் அவர்களோடு பேசுவோம். இது மனித குலத்துக்கெதிரான போர். இது ஒரு வெறும் தொழில்நுட்பப் பிரச்சனை அல்ல.”

இது நடந்தது அதிகாலை 3 மணி பசிபிக் நேரம். இதை யார் செய்திருப்பார்கள் என்பது பற்றிப் பல்வேறு சந்தேகங்கள் வந்துள்ளன. சிலர் சீன அல்லது ரஷ்யக் கொந்தர்கள் (ஹேக்கர்ஸ்) செய்திருக்கக்கூடும் என்கிறார்கள். சிலர் சரியாக ஹவாயி நேரம் பன்னிரண்டு மணிக்கு நடந்ததால் அங்கிருந்துதான் எவரோ செய்திருக்க வேண்டும் என்கிறார்கள். அதுவும் சரியாகத்தான் படுகிறது. இவ்வளவு பெரிய வேலையைச் செய்கிற ஒருவர் அதை நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு அரங்கேற்றுவது இயல்பான ஒன்று. கலிஃபோர்னிய விரிகுடாப் பகுதியில் – சிலிக்கன் பள்ளத்தாக்கில் உள்ளவர்கள் பலர் தம்மில் ஒருவர்தான் இதைச் செய்திருக்க வேண்டும் என்று சந்தேகிக்கிறார்கள். இந்த நிமிடம் வரை எவரும் தாங்கள்தாம் செய்தோம் என்று பொறுப்பேற்கவில்லை.

“அவர்கள் பணத்துக்காகச் செய்திருந்தால் பணக்காரர்களை மட்டும் குறிவைத்து ஏதாவது செய்திருக்கலாம். இதற்குப் பின்னால் இருக்கும் நோக்கம் ஏதோ மிகப்பெரியதாக இருக்க வேண்டும்.” இன்னொரு பெரிய மனிதர் ட்வீட்டினார்.

“நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு ஏதோ மிகக்கேவலமானதாகவும் இருக்கலாம்!” என்றது அதன் கீழ் ஒரு பதிற்கருத்து.

“காலை ஒன்பது மணிக்கு ஒர்லாண்டோவுக்கு விமானம் பிடிக்க வேண்டும். ஆறு மணிக்கு, கழிப்பறையில் அமர்ந்துகொண்டு, ‘ஏய் சிரி, தட்பவெப்பம் இன்று எப்படி இருக்கிறது?’ என்றேன். நேரே தேடல் பக்கத்துக்குச் சென்று காட்டிய முதற் சில முடிவுகள் என்னை ஓர் உலுக்கு உலுக்கிவிட்டன. பத்தாண்டுகளுக்கும் மேல் இருக்கும். என் முன்னாள் காதலிக்கு நான் அனுப்பிய அதிமுக்கியமான அந்த மின்னஞ்சல். 1/2”

“இருவருமே அதைக் கடந்து வெகுதொலைவு வந்துவிட்டோம். அவளுக்கு அனுப்பிய / அவளிடமிருந்து பெற்ற மின்னஞ்சல்கள் எல்லாவற்றையும் எப்போதோ நிரந்தரமாக அழித்துவிட்டேன். இதை மீண்டும் என் வாழ்நாளில் பார்ப்போம் என்று ஒருநாளும் நான் கனவில் கூட நினைக்கவில்லை. அதைவிடக் கொடுமை அந்த மடலில் எந்த இடத்திலும் தட்பவெப்பம் என்ற சொல்லே இல்லை! 2/2”

அட்லாண்டாவிலிருந்து வந்தது இந்த ட்வீட். அந்த மின்னஞ்சல் இன்னும் இருக்கிறது என்பதை அறிந்ததும் ஆடிப்போனவனுக்கு அதை ட்விட்டர் போன்ற ஒரு பொதுத்தளத்தில் பகிர்ந்து கொள்வதைப் பற்றி ஒரு தயக்கமும் இல்லாதது பெரிய விஷயந்தான்.

மாலை மூன்றரை மணிக்குச் சென்னைக்காரக் கவின் ‘தமிழ்’ என்ற ஒற்றைச் சொல்லோடு தேடப்போக, அவனுக்கு வந்து சேர்ந்ததோ, அவன் மறக்க விரும்பும் – மறைக்க விரும்பும் ஒரு பழைய மின்னஞ்சல். படித்து முடித்து முதல் வேலையில் சேர்ந்து இரண்டே மாதங்களில் வேலையைவிட்டு நீக்கப்பட்டான். காரணம்? அவன் இணையத்தில் சென்று பார்த்த தளங்கள். வேலையைவிட்டு நீக்கும் முன்பாக அவன் நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு அவனுக்கு ஒரு நீளமான மின்னஞ்சல் அனுப்பியது. அவன் சென்று கண்ட தளங்களின் பட்டியல்தான் அது. அந்த மின்னஞ்சலை மட்டுமல்ல அந்த மின்னஞ்சல் கணக்கையே மூடிவிட்டான். பெங்களூரில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவன் முழுமையாகத் தன் தவறின் தடயத்தை அழிப்பதற்காகச் சென்னைக்கு மாறிவிட்டான். இரண்டாவது வேலையில் சேரும் முன்பு பெயரைக்கூட மாற்றிவிடலாமா என்று நினைத்தவன் கடைசியில் மின்னஞ்சல் கணக்கில் மட்டும் தன் உண்மைப்பெயர் வராதபடிப் பார்த்துக்கொண்டான்.

எல்லாத்திலும் பயங்கரம் இதுதான். அவளுடைய நேரம் காலை 11 மணிக்கு லண்டன்காரி ஒலிவியா ‘இந்த ஆண்டின் தலைசிறந்த 10 இசைத் தொகுப்புகள்’ என்று தேடப்போக, அவளுக்கு வந்ததோ அவளுடைய காதலன் ஆர்தர் தன் பள்ளிக் காலத்திலிருந்து அவனுடைய காதலிகளுடன் பேசிய அரட்டைகள் அனைத்தும் வந்து விழுந்தன. உடனடியாக அவனை அழைக்கிறாள். அவனோ வேறு யாருடனோ முடிவிலாது பேசிக்கொண்டிருக்கிறான்.

“இது என்னுடைய அரட்டை வரலாறு அல்ல. அவனுடையவை. என் கணினியில் நான் ஏதோ தேட அவன் வரலாறு எதற்கு எனக்கு வருகிறது! இது எப்படி சாத்தியம்? அப்படியானால் என் வரலாற்றை யாரெல்லாம் படிக்கப் போகிறார்கள்!” தனக்கு அருகில் இருக்கும் பணித்தோழியிடம் கத்தினாள்.

இந்த அனுபவத்தைத் தொடர்ந்து இவர்கள் மூவருமே நடந்துகொண்ட விதத்தில் ஓர் ஒற்றுமை இருக்கிறது. முதல் தேடல் முடிவு மூஞ்சியில் அறைந்த அதிர்ச்சியைவிட்டு வெளியேறும் முன்பே அடுத்து உடனடியாக வேறு ஏதேனும் ஒன்றை அடித்துத் தேடினார்கள். அவர்கள் தேடுவது எதுவாக இருந்தாலும், அவர்களுக்குக் கிடைத்தது ஒன்றுதான். அவர்கள் மீண்டும் எதைப் பார்க்கக் கூடாது என்று எண்ணினார்களோ அதுவோ அல்லது தன் வாழ்வில் அப்படி ஒன்று இருக்கிறது என்று எதை நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார்களோ அதுவோ வந்து விழுந்தது. ஏதோவொரு வகையில் அவர்களை உலுக்கிப் போடுவது.

***

தொழில்நுட்பத் துறையில் உள்ளவர்கள் தங்கள் இணையக் குழுக்களில் இதன் சாத்தியக்கூறுகள் பற்றி விவாதிக்கிறார்கள்.

“இதை எப்படிச் செய்தார்கள் என்று அறிந்துகொள்ளவில்லையென்றால் என் தலை வெடித்துவிடும். மின்னஞ்சல்கள் என்று மட்டுமில்லை. அரட்டை வரலாறு, இணையத்தில் மேய்ந்த வரலாறு, தேடல் வரலாறு… எல்லாமே. கையால் எழுதி வைத்தவற்றின் – தொலைத்தவற்றின் ஸ்கேன் பிரதிகள் மட்டுமே இன்னும் வெளிவரவில்லை. இது தவறுதலாகக் கசிந்துவிட்டது போலவும் இல்லை. நன்றாக உட்கார்ந்து திட்டமிட்டுச் செயல்படுத்திய வேலை போலத் தெரிகிறது. அதெப்படி மறக்கவே முடியாத – ஆனால் மறக்க விரும்புகிற வரலாற்றை மட்டும் தேடித்தேடி வெளியிட முடியும்! அதுவும் இவருக்கு அவருக்கு என்று இல்லாமல் ஒட்டுமொத்தமாக இணையத்தைப் பயன்படுத்தும் எல்லோருக்கும். எப்படி?”

“அது மட்டுமில்லை, மற்றவர்கள் நம்மிடம் மறைக்க விரும்புபவையும் நாம் மற்றவர்களிடம் மறைக்க விரும்புபவையும்…”

“இதன் வழிமுறை (அல்கரிதம்) என்ன? இதன் நோக்கம் என்ன? இதை எப்படிச் சாத்தியப்படுத்தினார்கள்?”

“யாருக்குத் தெரியும். அதைச் செய்தவன் இப்போது நம்மோடு உரையாடிக்கொண்டிருப்பவர்களில் ஒருவனாகவும் இருக்கலாம்.”

“ன்? செய்தவன்? அதெப்படி இவ்வளவு தெளிவாக அது ஓர் ஆணாகத்தான் இருக்க முடியும் என்று முடிவு செய்கிறீர்கள்?”

“இது ஒருவனோ ஒருத்தியோ என்று ஏன் முடிவு செய்ய வேண்டும்? இது ஒரு குழுவோ பயங்கரவாத இயக்கமோ இல்லையென்று எப்படி முடிவு செய்தீர்கள்?”

“இந்த உலகத்தில் பயங்கரவாத இயக்கம் என்றெல்லாம் எதுவுமில்லை. அவற்றுக்கு ஒரு பெயர்தான். அரசுகள். உலகின் ஆகப்பெரும் பயங்கரவாத அரசுகள் யாவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவை. இதில் பங்குபெறும் எல்லோருமே பயங்கரவாதிகள்தாம்.”

“நண்பர்காள்! உங்களுக்கு ஒன்று நினைவுபடுத்த விரும்புகிறேன். இது அரசியல் பேசும் இடமல்ல. இங்கு ஒருபோதும் நாம் அரசியல் பேசியதில்லை. இந்த உலகத்தின் மிகப்பெரும் தொழில்நுட்பப் பிரச்சனைகளைத் தீர்ப்பவர்கள் நாம். அதற்காகத்தான் இங்கு ஒன்று கூடியிருக்கிறோம். அதை மட்டும் மறந்துவிட வேண்டாம் என்று வேண்டிக்கொள்கிறேன்.”

“அதன்றி வேறென்ன செய்துகொண்டிருக்கிறோம் இப்போது? சந்தேகத்துக்குரியவர்களைக் கண்டுபிடிக்க முயன்றுகொண்டிருக்கிறோம். இது ஒரு பெரும் அரசியற் பிரச்சனை. அதனால் அரசியலைத் தவிர்க்க முடியாது. அதையும் மறந்துவிட வேண்டாம் என்று வேண்டிக்கொள்கிறேன்.”

“எம்மா என்பது யார்?

“தெரியவில்லை.”

“அவளோடு இதுவரை மூன்று லட்சம் சொற்களுக்கு மேல் உரையாடியிருக்கிறாய்.”

“அதுபற்றி நீ தெரிந்துகொள்ள வேண்டிய தேவையில்லை.”

“முதலில் உனக்குத் தெரியவில்லை. இப்போது எனக்குத் தெரிய வேண்டியதில்லை. எனக்குத் தெரிந்தாக வேண்டும். சொல்.. அவள் எங்கே இருக்கிறாள்?” குரலை உயர்த்திக் கத்துகிறாள்.

“அதுபற்றித் தெரிந்துகொள்ளும் தேவை வராது.”

“நீ சொல்லவில்லை என்றால் நான் என் உயிரை மாய்த்துக்கொள்ளப் போகிறேன்.”

“அந்த வேலையை நீயே செய்துகொள்ள வேண்டியதில்லை. உனக்காக நான் செய்துகொடுக்கிறேன். இந்தா!” டுமீல்.

இது லூயிசியானாவில்.

***

“என்னிடம் எல்லாமே சொல்லிவிட்டதாகச் சொன்னாய்!”

“ஆமாம். சொல்லிவிட்டேன்.”

“சும்மா விடாதே.”

“நீ இப்போது எதுபற்றிப் பேசிக்கொண்டிருக்கிறாய்?”

“பில் என்பது யார்?”

“உனக்குத் தெரிய வேண்டியதில்லை.”

“எனக்குத் தெரிய வேண்டும்.”

“நான் உனக்கு அதைச் சொல்ல வேண்டியதில்லை.”

“சொல்ல வேண்டும். இல்லாவிட்டால்…”

“இல்லாவிட்டால்…” டுமீல்! தன்னைத்தானே கொன்றுகொள்கிறான்.

இது நெவாடாவில்.



***

“இதை ஏன் நீ என்னிடம் முன்பே சொல்லவில்லை?”

“சொல்லத்தான் முடிவு செய்திருந்தோம். அதற்கான நேரம் இன்னும் வரவில்லை.”

“எப்போது சொல்லலாம் என்று எண்ணிக்கொண்டிருந்தீர்கள்? நீங்கள் இருவரும் செத்துப்போன பின்பா?”

“அப்படியெல்லாம் பேசாதேப்பா. எங்கள் உண்மையான மகன் எங்கே இருக்கிறான் என்பது பற்றி எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. கடந்த 18 ஆண்டுகளாக நீதான் எங்களின் மகனாக இருந்திருக்கிறாய். எங்கள் காலம் முழுக்கவும் நீதான் எங்களின் மகனாக இருக்கப் போவதும்.”

“நீங்கள் உங்கள் மகனைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கலாம். எனக்கு என் பெற்றோரைப் பற்றிய கவலை இருக்கிறது. அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? எனக்குத் தெரிந்தாக வேண்டும். அவ்வப்போது எனக்கு இந்த ஐயம் வரத்தான் செய்தது. அப்படியெல்லாம் இராது என்று எனக்கு நானே சொல்லி ஏமாற்றிக்கொண்டேன். நீங்கள் இருவரும் இவ்வளவு இழிவானவர்கள் என்று நான் நினைத்துக்கூடப் பார்த்ததில்லை. இனியும் உங்கள் மூஞ்சியிலேயே முழிக்க விரும்பவில்லை. இத்தோடு என்னை விட்டுவிடுங்கள்,” இப்போதுதான் திருவிழாக் கூட்டத்தில் பெற்றோரை இழந்த குழந்தையைப் போலக் கதறிக் கதறி அழுதான்.

அருளின் பெற்றோர் அவனிடம் கெஞ்சிக் கதறினார்கள். மூன்று பேரும் அழுது தீர்ந்தபாடில்லை. அவர்கள் சொல்லும் எதையுமே அவன் கேட்கத் தயாராக இல்லை. அந்த ஆவணத்தைப் படித்த நிமிடத்திலிருந்து இந்த உலகமே அவனுக்கு இருண்டு போனது.


“விக்கிலீக்ஸ் எல்லாம் ஒரு லீக்ஸே – கசிவே இல்லை. நீங்கள் இப்போது கண்டுகொண்டிருப்பது பெருங்கசிவு. மனிதகுல வரலாற்றிலேயே இதுவே மாபெருங்கசிவு. உலகப்பெருங்கசிவு. #WWWலீக்ஸ் #பெருங்கசிவு”

“1. நாமெல்லாம் அது தன் புதுமையான கண்டுபிடிப்புகளின் மூலமாக மனிதகுலத்தின் வாழ்வை மேலெடுத்துச் செல்லும் உயரிய பணியைச் செய்யும் ஒரு தொழில்நுட்ப நிறுவனம் என்று எண்ணினோம். இப்போது என்ன நடந்திருக்கிறது பாருங்கள். இவர்கள் மக்களை வேவு பார்க்கும் ஒரு வேவு நிறுவனம். கொடுமை என்னவென்றால் அங்கு பணிபுரியும் 99% பணியாளர்களுக்கே இந்த உண்மை தெரியாது. #WWWலீக்ஸ்”

கொரோனா புண்ணியத்தில் நேரில் சந்திக்க முடியாது. இணையவழியில்தான் சந்திக்க முடியும். இவ்வளவும் நடந்த பின்பு இணையவழியில் சந்தித்துப் பேசும் எதுவும் வெளியில் தெரியாமல் இருக்கும் என்று எவர் நம்புவார்! ஆனால் முடிவு எடுத்தாக வேண்டும். பணியாளர்களும் வெளிமக்களும் விளக்கம் வேண்டிக் காத்திருக்கிறார்கள். நிர்வாகக் குழுமம் கூடியாக வேண்டும்.

இவ்வளவுக்கும் பிறகு இன்னும் இழப்பதற்கு என்ன இருக்கிறது? இணையவழியே சந்திக்கலாம் என்று எண்ணித் துணிந்தனர். உலகமே அவர்களின் விளக்கத்தை – முடிவைக் கேட்கக் காத்திருக்கிறது.

“2. போட்டி நிறுவனங்களின் கூட்டுக்களவாணித்தனம் என்ற ஒரு சாத்தியத்தை நாம் நினைத்தே பார்க்கவில்லை. இதோ உங்களுக்காக… உலகின் மிகப்பெரும் வங்கிகள் இரண்டு தம் நலனுக்காக எப்படி இந்த உலகத்தின் நிதி அமைப்பையே கூடிக்கெடுத்தார்கள் என்கிற கதை… #WWWலீக்ஸ்”

தொடர்புடைய கட்டுரை: இவ்வளவு காலமும் நாம் எதிரிகள் என்று எண்ணி ஏமாந்து கொண்டிருந்த இவ்விரு மருந்து நிறுவனங்களும் எப்படிக் கூட்டணி வைத்து மனித இனத்தை முடிவிலா நோய்வாழ்வில் வைத்திருக்கிறார்கள் என்று பாருங்கள். #WWWலீக்ஸ்”

இந்த இரு வங்கிகளும் மருந்து நிறுவங்களும் மட்டும் நிர்வாகக் குழுவைக் கூட்டி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்துப் பேசவில்லை. இந்தப் புதிய உலகத்தில் எப்படி இயங்குவது என்பது பற்றி ஒட்டுமொத்த வணிக உலகமுமே மண்டையைப் பிய்த்துக்கொண்டிருந்தது. பல குழுமங்கள் அவர்களின் தலைவர்களை நீக்கிவிட்டன. சில வணிகத் தலைவர்கள் தம் உயிருக்கு ஆபத்து இருப்பதாக ட்வீட்டுகிறார்கள். அரசு பாதுகாப்பு வேண்டுமாம்.

“3. அணு ஆயுத ரகசியங்கள்தாம் நம் காலத்தின் மிகப்பெரும் சிரிப்பானிக் கூத்து. உலகப் பெரும் ரகசியங்கள் என்று ஒரு சில உண்டு என்றும் அவை இந்த மொத்த உலகத்திலும் ஒரு சிலருக்கு மட்டுந்தான் தெரியும் என்றும் இவ்வளவு காலமாக நமக்குச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். இன்று, இந்த நிமிடம், உலகின் ஒவ்வொரு நாட்டின் அணு ஆயுத ரகசியமும் அவர்களின் எதிரிகளுக்கும் நண்பர்களுக்கும் எல்லோருக்கும் தெரிந்ததாகிறது. #WWWலீக்ஸ்”

“இதுதான் இந்த உலகத்தின் முடிவு. நாம் நம்பிய ஒவ்வொரு விஷயமும் பொய். எல்லோரும் எல்லாத்தையும் ஆனா ஆவன்னாவிலிருந்து தொடங்க வேண்டும். தனிமனிதர்கள், வணிகங்கள், நாடுகள்… எல்லோரும்! #WWWலீக்ஸ்”

“மக்களே! கொந்தர்களும் புரளிக்காரர்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி புதிய பல பொய்களைப் பரப்பிக்கொண்டிருக்கிறார்கள். எதை நம்புவது எதை நம்பாமல் விடுவது என்று எவருக்கும் புரிபடாத வேளையில் இது தொடர்பாகவும் நாம் கவனமாக இருக்க வேண்டியுள்ளது. ஒன்றை மட்டும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் கேள்விப்படுவதெல்லாம் உண்மையில்லை. அவ்வளவுதான். #WWWலீக்ஸ்”

இதை ட்வீட்டியது யார் தெரியுமா? உலகின் ஆகப்பெரும் அதிகாரம் பெற்றவர்.

“ஆகப்பெரும் அதிகாரம் பெற்றவர்? #பெருங்கசிவுக்கு முன்பா பின்பா?” என்கிறீர்களா?

ஒவ்வொரு முக்கிய அறிவிப்பும் கருத்தும் பல லட்சம் முறை மறுபகிர்வு செய்யப்பட்டது. பெரியவரின் இந்தக் கருத்து எத்தனை லட்சங்களைக் கடந்திருக்கும் என்று நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள். இணையம் சுமைதாங்க முடியாமல் முக்கி முனகியது.

பெரியவரின் கருத்துக்குக் கீழே, “அப்படியானால் அவற்றில் சில உண்மை என்பதை ஒத்துக்கொள்கிறீர்களா?” என்றொரு பதிற்கருத்து பல லட்சம் பேரால் விரும்பப்பட்டது.

பெரியவர் இன்னும் அதற்குப் பதில் சொல்லவில்லை. அதற்கு மற்றவர்கள் தினுசு தினுசாகப் பதில் கூறிக்கொண்டிருந்தார்கள்.

“அவர் ஒத்துக்கொண்டால்தான் நம்புவீர்களா, தோழர்? ஹிஹி.”

“அவற்றில் ஒன்று உண்மை என்பது எனக்குத் தெரியும். நீங்களும் ஒன்றைக் கண்டுபிடித்து விட்டால் +1 செய்யுங்கள்.”

“ஐயா, இதுதான் உங்களுக்குத் தெரியாமல் மறைக்கப்பட்ட ரகசியங்களைக் கண்டுகொள்வதற்கான சரியான நேரம். விடாதீர்கள். ஹாஹா.”

“உலகத்துக்கான இன்றைய சீட்டு மரணம் (DEATH). அதுவும் நேராக வந்துள்ளது. இது கெட்ட செய்தி என்று சொல்ல முடியாது. டாரோவில் மரணம் வந்தால், புதிய தொடக்கம் என்று பொருள். இன்று வரைக்குமான வாழ்வு மரணிக்கிறது என்று பொருள். நாளை புதிய நாள். புதிய வாழ்க்கை. #WWWலீக்ஸ்”

அவளுடைய வானியற்பியல் தொடர்பான சில கருத்துக்களுக்காக நாசா நிர்வாகியிடமிருந்து பாராட்டுக் கடிதம் பெற்றபின் உலகெங்கும் புகழ்பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த நிலா என்ற 13 வயதுச் சிறுமி ட்வீட்டினாள்: “இதைப் பாருங்கள். இன்று கசிந்திருக்கும் ரகசியங்கள் யாவும் உலகின் தலைசிறந்த தகவல் பாதுகாப்புச் சட்டங்கள் வைத்திருக்கும் முன்னணி மக்களாட்சி நாடுகளுடையவை. அவசரப்படாமல் துடிக்காமல் ஒவ்வொன்றாகப் பாருங்கள். எல்லா நாட்டு ரகசியங்களும் கசிந்திருக்கின்றனவா? #WWWலீக்ஸ்”

“ஆஆஆ!!! அப்படியானால் நம் அணு ஆயுத ரகசியங்கள் அவர்களுக்குத் தெரியும். அவர்களுடையவை இன்னும் ரகசியங்களாகவே இருக்கின்றனவா?” நிலாவின் கருத்துக்குக் கீழ் நாசா நிர்வாகி அடித்த பதில் உடனடியாக அழிக்கப்பட்டது.

மேற்கே இருட்டும் வேளையில் கிழக்கே விடியத் தொடங்கியிருந்தது.

***

பாரதிராஜா – தூத்துடி மாவட்டம் பூதலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த இவர் இப்போது பணி நிமித்தம் அமெரிக்காவில் வேலை செய்து வருகிறார். அரசியல் கட்டுரைகள், நூல் விமர்சனங்கள், மொழிபெயர்ப்பு உள்ளிட்ட பணிகளில் தொடர்ச்சியாகப் பங்களித்து வருகிறார். மின்னஞ்சல்: bharathee@gmail.com இது இவருடைய முதல் சிறுகதை.


RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular