Saturday, February 24, 2024
Homeஇதழ்கள்2021 இதழ்கள்பெண் எனும் தொழிற்சாலை

பெண் எனும் தொழிற்சாலை

(உடல் பால் பொருள் எனும் கவிஞர் பெருந்தேவியின் கட்டுரை மீதான வாசிப்புரை)

யவனிகா ஸ்ரீராம்

ருபது வருடங்களுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்ட தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் “தமிழ்ச்சூழலில் பெண்கள்” என்ற எனது கட்டுரையை வாசிக்க ஒரு வாய்ப்பளிக்கப்பட்டது.

பின்நவீன உரையாடல்கள் துவங்கிருந்த காலகட்டம், அதிகம் பெண்கள் இலக்கியத்தில் இடம்பெற்றுக் கொண்டிருந்தார்கள். நிறுவனமயமான ஏதொன்றும் பெண்களுக்கு நியாயம் செய்யவில்லை. மாறாக, அவர்களின் கல்வி, மருத்துவம், பொருளாதாரம் போன்றவற்றில் முன்கை எடுத்த இடதுசாரிகள் கூட கலாச்சாரத் தளத்தில் பாலியல்புகளின் தேர்வுகளில் பெண்களது வெளிப்பாட்டை ஏற்க மறுத்து, பின்நவீனத்துவம் ஒரு பிளவுவாதம் அது வலதுசாரி கலாச்சாரக் கேளிக்கையை, ஒருவகையில் ஏகபோக முதலாளித்துவத்திற்கு தோதாகப் பால்தன்மையோடு மாற்றித்தரும் சுரண்டல் வடிவம் என்பதாக விமர்சித்து வந்தார்கள்.

மதம், சாதியம், சமயம், அரசு, குடும்பம், சித்தாந்தம், இலக்கியம், தத்துவம், மெய்யியல், புதிய பொருளாதாரக் கொள்கைகள், தொழிற்புரட்சி, தகவல் தொழில்நுட்பம், மொழியியல் யாவும் பெண்களின் மீது சமூக நிர்பந்தங்கள் பலவற்றை இன்னும் பாரதூரமாகச் சுமத்துபவையாகவே உள்ளன. இனம், மொழி, சாதி, மதம் போன்றவை பெண்களைத் தங்களின் இரகசியக் கிடங்கில் வைத்துப் பராமரிக்கவே முயல்கின்றன. தனியுடமை, அகமனம், இனங்களின் பேரெழுச்சி, தேசியம், புதிய பொருளாதாரக் கொள்கைகள், தொழிற்புரட்சி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் சனநாயக மாண்புகள் அனைத்தும் ஒரு பொதுவான சமூக மனதைப் பேணுவதில் நிறுவனமயமான உளவியலைக் கொண்டுள்ளன என்பதே பால்தன்மையின் மீதான வரலாற்றுக் கருத்தியலாகத் தொடர்கிறது.

2003-ல் நடந்த அந்தத் திண்டுக்கல் கூட்டத்தில் பெரும் அமளி துமளி ஏற்பட்டது. குடும்பச் சிதைவையும், அதன் சமகாலப் பெண்ணியக் குடும்ப மாற்றங்களையும் ஏற்க இயலாது என வாதங்கள் எழுந்தன. ஸ்தாபன ரீதியான அனுமதியை இவ்வாறு பயன்படுத்துவது சரியாகாது என அறிவுறுத்தப்பட்டேன். உழைக்கும் மகளிருக்கும் இன்னுமான நகர்மயமாக்கலில் உண்டாகும் விளைவுகளுக்கும் மற்றும் தேசியப்பார்வைகளின் கீழ் பெண்ணின் பொருத்தப்பாடுகளுக்கும் அவர்களின் விடுதலை மற்றும் உண்மைக்கான போராட்டங்களுக்குமே நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இரட்டை உழைப்பு முகாம்களில் இருந்து கசக்கப்படும் அவர்களது உடல், மனம் போன்றவற்றை விஞ்ஞானப்பூர்வமாக அணுக வேண்டும் என்பதெல்லாம் அதனுள் வெள்ளிடை மலையாக இருந்தது. அவற்றில் ஒரு தொழிற்சங்க அணுகுமுறையும் தொடர்ந்த மகளிருக்கான போராட்டங்களும் இருந்ததை மறுக்க முடியாது. பெண்களைப் பொறுத்தவரையில் இடதுசாரிகளின் பங்கு வரலாற்றுப்பூர்வமானது.

ஆயிற்று 20 வருடங்கள் என்றாலும் இன்னும் பெண்களைச் செயலற்றவர்களாக ஆக்குவதில் அல்லது அவர்களை ஓரப்படுத்துவதில் உலகலாவிய சமூகச் செயல்பாடுகள் அனைத்தும் தமக்குள் நிலவும் ஆதிக்க உளவியலை வன்முறையாகக் கொண்டு குறிப்பிடத்தக்க அதிகார மையத்தைப் பெறுவதில் பெரும் சிரத்தை கொண்டவையாகவே விளங்குகின்றன.

அதன் அடிப்படையைக் கேள்வி கேட்கும் வண்ணம் 2019-ல் “உடல், பால், பொருள்” என்ற தலைப்பில் கவிஞர் பெருந்தேவி அவர்கள் பல கட்டுரைகள் அடங்கிய ஒரு நூலை காலச்சுவடு வெளியீடாகக் கொண்டு வந்திருக்கிறார்.

90-களின் பிற்பகுதியில் இருந்து கவிதைகளை இன்றுவரை தொடர்ந்து எழுதிவரும் பெருந்தேவி சிறு இலக்கிய வட்டத்திற்குள் பிரபலமானவர். பேசும்போது எழுத்தாகவும் எழுதும்போது பேச்சாகவும் தன் கவிதைகளை உரையாடல் தன்மைக்கு நகர்த்திவிடும் வல்லமையுடைவை அவரது கவிதைகள். அமெரிக்கப் பல்கலைக்கழகம் ஒன்றில் பேராசிரியராக இயங்கி வரும் பெருந்தேவி கவிதைகள், பெண்ணியச் செயல்பாடுகள், கட்டுரைகள், குறுங்கதைகள் என பல தளங்களில் இயங்கி வருகிறவர். மாற்றமடைந்து வரும் சமூகப் போக்குகள் மற்றும் கலாச்சார வித்தியாசங்கள் போன்றவற்றை பின்நவீனப் பார்வைகளில் அலசும் பின்னமைப்பியல் கோட்பாட்டாளர் என அவரைச் சொன்னாலும் பொருந்தும்,

ME TOO இயக்கத்தின் தொடர் பாடலாய் இந்நூல் உலகெங்கும் பெண்கள் தாங்களாகவே முன்வந்து தங்களுக்கு நிகழ்ந்த வல்லுறவு மற்றும் பாலியல் சீண்டல்களை சமூகப் பொதுத்தளத்தில் வெளிப்படையாக முன்வைத்து ஆதிக்க மையத்தைத் தாக்குவது என்கிற முறையில் ஒரு பாய்ச்சலாக உலகக் கவனத்தை ஈர்த்த போது அவை பெரும் அதிர்ச்சி அலைகளை உண்டாக்கியதை நூலாசிரியர் தொகுத்து அதையே பால் அரசியல் விடுதலைக் குரலாகவும் தமிழ் இலக்கியத்தில் வந்திருக்கும் பல நாவல், பனுவல்கள் மீதான ஒரு குறுக்கு விசாரணையாகவும் மாற்றி நல்லதொரு இலக்கியத் திறனாய்வாகவும் இந்நூலை நம்மிடம் தந்துள்ளார்.

சமூகவெளியில் பொதுவாக நிறுவன நிரல்களை ஆண்களுக்கும், நிறுவனப் பணிவு நிலைகளைப் பெண்களுக்கும் எவ்வளவு வெளி X காலம் X கருத்தியல் மூலம் அவை கட்டமைக்கிறது மேலும் எப்படி பால் அழுத்தமாக அவர்களை ஏற்க வைப்பதில் வரலாறு செயல்பட்டு வந்திருக்கிறது என்பதையே இந்நூல் முதன்மைக் கேள்விக்குள்ளாக்குகிறது.

அதற்கான பின்னணிகள் எதுவாயினும் இன்றைய ஒரு நூற்றாண்டுப் பெண்களின் அரசியல் விழிப்புணர்வு மற்றும் தேர்வுகள் விருப்புறுதிகளின் முன்பு அவை கட்டவிழ்க்கப்பட்டு சமூகப் பொதுமனம் என்பதே பெண்களின் மீது ஒரு வல்லுறவு ஏகபோகமாய் வளர்ந்து நிற்பதை அம்பலப்படுத்தி இருப்பதை நூலாசிரியர் பல எடுத்துக்காட்டுகளடன் பின் இணைப்புகளுடன் தெளிவுபட எடுத்துரைக்கிறார்.

அதற்கு பிரதானமாக தமிழ் இலக்கியப் பனுவல்களில் இயங்கும் சமூக ஆண்மனம் X பெண் மனச் சிக்கல்களை எழுதி வந்திருக்கும் நாவலாசிரியர்கள் ஜெயகாந்தன், தி.ஜானகிராமன் மற்றும் பலரின் கருத்தியல் உரையாடல்கள், படைப்புகள் பிரதிகள், விவாதங்கள் போன்றவற்றை தொகுத்தளிக்கிறார்.

ஜெயகாந்தனின் அக்னிப்பிரவேசம் கதையும் அதுவே நீண்ட நாவலாக உருப்பெற்ற சில நேரங்களில் சில மனிதர்கள், ‘புதுமைப்பித்தனின் பொன்னகரம்’ பிரதிகளிலும் தென்படும் பெண்கள் சமூக மனம் X சுயமான அவஸ்தைகளுக்கிடையே எவ்வாறு தன்னிலையை பெறமுடியாமல் அவர்கள் தவிக்கிறார்கள் என்பதை விவாதித்திடும் விதம் மிக ஏற்புடையதாக இருக்கிறது. ஆண்களின் அருகாமையும் X தூரமும், காலம், இடம், வெளி என்பதாக பெண்ணைச் சுழற்றி ஒரு அச்சாணிக்குள் அல்லது ஒரு வளையத்திற்குள் நிறுத்திவிட்டுப் போகும் சூசகங்கள், ஆண் மொழியின் நைச்சியங்கள் அல்லது அவர்களது பெண்ணியப் போலி இரங்கல் யாவும் நுட்பமாக இப்பிரதிகளுக்குள் அடையாளம் காட்டப்படுகின்றன.

பெண்ணில் இரகசியம் தேடுவது, தீர்ந்து போவது, மீண்டும் வேறுவேறு இரகசியங்களோடு அவளில் அதை சாமர்த்தியமாக நிறைவேற்றிக் கொள்வது என்பது அவள் உடல் உறுப்புகள் மீதான இச்சை மற்றும் அதற்கான அவளது பணிவு, பாலுறவில் அவுட்சோர்சிங் மற்றும் அவளுக்கான அடித்தளமே அழகியல் இலக்கணமாய் அவளது சஞ்சலமே அனைத்திற்கும் காரணம் எனப் பொருள் கூறுவது எனப் பலவற்றையும் மேற்சொன்ன விதிகளில் எடுத்துக் காட்டுகிறார்.

ஜெயகாந்தனின் அக்கினிசாட்சியில் கச்சிதமாக எழுப்பபட்ட சிறு கதையாடல் சிலநேரங்களில் சிலமனிதர்களில் கன்வின்ஸிங்காகி பெருங்கதையாடலாய்ச் சறுக்கிவிடுகிறது அங்கே ஜெயகாந்தனின் சமூக ஆண்மனம் மறைபொருளாகிறது என்கிறார். மாறாக புதுமைப்பித்தனின் விபரீத ஆசை எனும் சிறுகதை திஜா-விற்கு முன்பாக பெண் நிலைப்பாட்டை மிக அருமையாக முன்வைத்த ஒன்று என சரியாகவே நிறுவுகிறார். விலைமகளிரைத் தழுவுவது பிணம் புணர்வதற்கு ஒப்பானது என்று சொன்ன வள்ளுவரின் பார்வையைவிட
சம்மதமற்ற பெண்ணைப் புணர முயல்வதுதான் பிணம் புணர்தலுக்கு ஒப்பான செயல் எனப் புதுமைப்பித்தன் எழுதுவதுதான் எவ்வளவு நவீனப்பார்வையாகிறது எனும் பெருந்தேவி இத்தகைய நிலைப்பாட்டில் புதுமைப்பித்தனையும் ஜெயகாந்தனையும் முதன்மை பெண் உளவியல் பார்வையாளர்களாக நமக்கு அறிமுகம் செய்கிறார்.

நூலில் ‘இன்செஸ்ட்’ பற்றிய ஆய்வுகளை பிராய்ட்-ல் துவங்கி லெவி ஸ்ட்ராஸ், ஜுடித் பட்லர் வரை விரிவாகக் கொண்டு சென்றிருக்கிறார். சில ஆண்கள் எவ்வாறு சகோதர இச்சையை இழந்து சமூகப்பொருள் கோடலாக சாம்ராஜ்ய வலிமை கொள்கிறார்கள் எனுமிடத்தில் பெண்களை தூரப்படுத்துதல் மட்டுமல்லாமல் ஆதிக்கத்தின் கீழ் இன அடிமையாக அவர்களை நுகர்வுப்பண்டமாக வகைமைப்படுத்தி வைத்தார்கள் என்பதையும் மிக நுட்பமாக இணைத்திருக்கிறார்.
வரலாற்றில் பெண்தலைமைத்துவம் எவ்வாறு நினைவழிக்கப்பட்டது என்பது நீட்சியாகிறது

இதுபோக திருக்குறள், மனுதர்மம், புதுமைப்பித்தனின் சிறுகதையான பொன்னகரம், சுந்தரராமசாமியின் திரைகள் ஆயிரம் குறுநாவல் போன்றவற்றில் எழுதப்பட்டு வந்திருக்கும் பெண்களுக்கான குண வார்ப்புகள் யாவும் சமூக மனதின் யதார்த்தங்களாகி வருவதை சரியாகவே அளவிடுகிறார்.

நூல் பெரும்பாலும் ME TOO விவகாரத்தின் இந்தியத் தன்மைகள் குறிப்பாக நீதிபதி கோகாய் விவகாரங்கள் தொட்டு சின்மயி வைரமுத்து வரை இப்பார்வைகள் நீட்சி பெறுகிறது. பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட பெண் என்பதை அவள் பொதுவெளியில் ஏற்க வேண்டும். அதற்கான பரிதாபத்துடன் அவள் நிற்க வேண்டும். மாறாக ஆண்கள் இவ்வாறு நடந்து கொள்வதைச் சுட்டிக் காட்டினால் பகிரங்கப்படுத்தினால் நீதி கிடைப்பது சிரமமாகி விடும் என்பதாக நீளும் பொதுமனப்போக்கை சட்ட, அதிகார ஆண்மையத் தீர்ப்புகள், கடைப்பிடிக்கும் போது பெண்ணை மறுபடியும் கூசிப் போகச் செய்யும் மன வல்லுறவு நிலையிலேயே வைத்துத்தான் அவ்விசாரணையிலும் நடக்கிறது என்பதாக முடிக்கும் இடங்கள் ஊடிழைப்பிரதியாகவும் கவனத்திற்குரியதோடு சமகாலப் பேசுப்பொருளாகவும் இருக்கிறது.

பெண்ணால் ஆணுக்கு நேரும் வல்லுறவுகள் பற்றிய கேலிப்பேச்சை நகைச்சுவையாகவும், விவரமாகவும், அபத்தமாகவும் கொண்டு போகும் போக்குகள் பற்றிய ஆண்மைய அதிகார மறைபொருள் சாகச பாவனைகள் மிகக்கேவலமானது என விவரிக்கும் நூலாசிரியர் பெண்களின் குற்றங்கள், தண்டனைகள் இன்னுமான தீவிரமான சமூகப் போக்குகளின் இடையே அவர்கள் மேற்கொள்ளும் தீங்குகள், கொலைகள், பாலுறவு வன்மங்கள் போன்றவற்றை மேற்சொன்ன பொதுச் சமூகமனமே அவள் மீது கவிழ்ந்து அவளது தேர்வை அரசியல் நீக்கம் செய்யும் போது பெண்களின் உளவியல் பாரிய சிக்கலாகவே தக்க வைக்கப்படுவதை நூல் சரியாகவே முன்வைக்கிறது.

ஜூலியா கிறிஸ்த்துவாவை முன்வைத்து தன்னிலை உருவாக்கம் எவ்வாறு உருவாகிறது. காயடிப்புச் சிக்கல், கழிவு, உடல், அசுத்தம், காம்ளக்ஸ் போன்றவை எவ்வாறு பெண்ணின் தன்னிலைக்கு தடைகளாக நீடிக்கின்றன. அவை குழந்தை முதலாக இறுதி வரையிலான உளவியல் அச்சங்களாக எவ்வாறு நீடிக்கின்றன என்பதையும் கோடிட்டுக் காட்டுகிறார்.

இக்கட்டுரைகள் பிரபலங்களின் ஆதிக்கங்கள் எவ்வாறு பணியிடங்களில் பாலியல் பேரமாக செயல்படுகின்றன என்பதை மட்டுமல்லாமல் இன்றைய பொள்ளாச்சிச் சம்பவங்கள் செல்லும் திசை என்ன, இளம் பெண்களை தகவல் தொழில் நுட்பச் சலுகைகள் எவ்வாறு கையாள்கின்றன, அவர்களுக்கான புதிய உலகங்களைத் திறக்கும் போது குறுக்கிடும் உளவியல் அழுத்தங்கள் எவ்வாறு உள்ளுறையாக தலைதூக்குகின்றன என்பது வரை இந்நூல் சிறந்த அலசல்களைக் கொண்டிருப்பதாகச் சொல்லலாம்.

கோட்பாட்டுப் பின்புலங்கள் இன்றைய நவதாராளவாதப் போக்குகளுக்கு இடையே பன்னாட்டுத் தொழிற்சாலைகள் பெருகி அதற்குள் வாழவேண்டிய நிர்பந்தத்தில் இருபாலரும் தகவமைத்து கொள்ள முரண்படும் போது பால், உடல், அதன் பொருள்வயமான கடந்தகாலத் துன்பங்கள், யாவற்றிலும் இருந்து குறிப்பாகப் பெண்கள் இந்த வல்லுறவு ஏகபோக ஒற்றைத்தளப் பொதுப்புத்திக்கு மாறாக எவ்வாறு தங்கள் தன்னிலைகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பதை மிக நுட்பமாகப் பரிந்துரைக்கிறார்.

ஏன் எனில் இங்கு பெண்களின் தன்னிலை உருவாகும் பருவங்களின் போதே ஏற்கனவே சொல்லப்பட்டு வந்திருக்கும் மெய்மைகள் அவளை ஆதிக்கத்திற்கு கீழிருக்கும்படி வைத்து அதையே எதார்த்தம் என நம்ப வைக்கப்பட்டிருக்கும் பாரிய சமூகமன நிலைக்குள் எப்படியும் தள்ளிவிடுகின்றன.

ஆகவே அம்மெய்மைகளைக் கட்டவிழ்த்து பெண்தன்னிலைகள் உருவாக வேண்டிய அவசியமே அரசியல் செயல்பாடாகிறது என விளக்கும் ஆசிரியர் அதற்கு இந்த மீ டூ இயக்கம் ஒரு மிகச்சிறந்த முன்மாதிரியாக ஒரு முகாந்திரமாக தன்நிலைப்பாடை வழங்கி இருப்பதாக நிறைவும் செய்கிறார்.

புதிய தலைமுறை ஆண், பெண்கள், வாசித்துக் கடத்த வேண்டிய மிக முக்கியமான இந்த நூல் நமது வாழ்வியல் இடையே மிகுந்த மன உயரங்களையே இன்றைய நவீன நாகரீகம் மேற்கொள்ள வேண்டும் என்கிறது. மானுடப் பண்புகளை அதன் நோக்குநிலைகளை நீட்சே, ஃபூக்கோ போன்றோர் மற்றமை மீதான அறம் என வகுக்கிறார்கள். பெண்ணுடல் மீதான இந்த வல்லுறவுப் பார்வை அல்லது எதிர் உயிர் பண்பு எனும் அறிதல் போன்றவை நிகழும் போது இந்நூல் அரசியலாகவும் தமிழ் இலக்கியத் திறனாய்விலும் தன் இடத்தை வலுவாக நெடுநாள் தக்கவைத்துக் கொள்ளும் என்றே தோன்றுகிறது.

***

யவனிகா ஸ்ரீராம் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர். மத்தியத்தர போலி கவித்துவத்திற்கு எதிரான அறம் சார்ந்த செயல்பாட்டைக் கொண்டுள்ள தமிழின் முக்கியமான கவிஞர். மின்னஞ்சல்: [email protected]

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular