பூ மணக்கும் துயரம்

1

அய்யப்பன் மகாராஜன்

முன்பே குறித்து வைத்திருந்த இரவுக்கு இருவரும் சரியாக வந்து சேர்ந்தது முருகேசனுக்கு வசதியாக இருந்தது. அவர்களைக் கண்ட பரபரப்பில் தனது பாலியஸ்டர் இரட்டை வேட்டியினை இழுத்து புட்டம் தெரிய தூக்கிக் கட்டிக் கொண்டான். ஒருவனின் கக்கத்தில் சுருட்டப்பட்ட சாக்குப்பை இருந்தது.

முருகேசன் அவர்களுக்குக் காட்டிய இடம் முக்கிய சாலையிலிருந்து பிரிந்த ஒரு தெருவின் இடையில் திரும்பும் ஒரு மடக்கு சந்தாக இருந்தது. நேராகப் போய் ஒரு வளைவுப் போட்டுத் திரும்ப வேண்டும். தெரியாதவர்கள் மீண்டும் வந்த வழிக்கே வந்து குழம்புவார்கள்.

அவதானித்துப் பார்த்தால் ஒரு இடுக்குத் தெரியும். அதில் நுழைந்தால் கிடைக்கும் பள்ளத்தில் இறங்கினால் ஓடித் தப்பித்து விடலாம்.

“வார நேரமாச்சி. நா எதுத்தாக்குல இருக்க பலசரக்குக் கட வாசல்ல நிப்பேன். நீ சொவத்துக்குப் பொறத்தாக்குல சாஞ்சி நின்னுக்கோ… அவன் மறுகரையில ஒளிஞ்சி நின்னுக்கிடட்டும். அந்தாளு ரோட்டுலேருந்து தெருவுக்குள்ளத் திரும்பும்போது எப்பயும் ஒரு சீரேட்டுப் பத்த வப்பான்…

படிக்கன் ஆளு அவந்தாமுன்னா நா கடைக்குப் பக்கத்துல இருக்க முடுக்குக்குள்ள போயிருவேன். நீங்க சோலிய முடிச்சிருங்கோ… ”

“ஒருவ்வேள ஆளு ஏதாவது சுதாரிச்சிட்டாம்னா தப்பிக்கதுக்கு உள்ளதான் ஓடணும். அந்தாக்குல, நீ மறுகரையிலேருந்து வந்து நேரயே வச்சுச் சவுட்டு. அவங்கிட்ட பெலம் கெடையாது. சாஞ்சிருவான். என்னா?”

“செரிண்ணே ஒஞ்சொல்லுபடியே முடிச்சீருதோம்..”

சொன்னது போலவே முருகேசன் எதிர்க்கடை உப்பு மூட்டையுடன் சேர்ந்து கொண்டான். பரபரப்பைக் கூட்டிக் கொள்ள பின்புற தொடைகளை இரண்டு கைகளாலும் தட்டிக் கொண்டான் ஒரு ஊச்சாளியைப் போல.

விழித்த வாக்கில் இருளினுள்ளே நகர்ந்து கொண்டிருந்தது நேரம். இந்த சமயத்தில் ஒரு வண்டிச் சத்தம் நேரே சாலையிலிருந்து திரும்பி அவர்களை நோக்கி வந்தது. முருகேசன் எட்டிப் பார்த்தான். வருவது தெரியாமல் இருக்க கைவண்டி வேகத்தில் ஒரு போலீஸ் ஜீப் அவனுக்கு எதிராக வந்தது. வேறு வழியில்லாமல் முருகேசன் முடுக்கினுள் பதுங்கினான்.

அதேசமயம் தெருவினுள் நின்றவன் போலீசைக் கண்டதும் அவர்கள் முன்னால் சிக்கலாகாதிருக்க ஓடாது நடக்க முற்பட்டான்.

ஆனால் முருகேசன் முடுக்கிலிருந்து வெளிப்பட்டபோது கண்ட கட்சி முற்றிலும் எதிர்பாராதது. இரண்டு போலீஸ்காரர்கள் முதல் ஆளை பிடிக்குள் வைத்திருந்தார்கள்.

“இந்த ராத்திரியில இங்க என்னலே செய்யிதே?”

“வேல முடிஞ்சுப் போயிட்டிருக்கேன் சார்.”

“என்ன வேல?”

“பழக்கட வேல சார்”

“ராத்திரில தான் பழம் விப்பியோ?”

“கட முடிஞ்சி படம் பாக்கப் போயிட்டு வாரன் சார்..”

“எந்தத் தேட்டரு?”

“பயோனியர்”

“டிக்கட்டக் காட்டு”

“டிக்கட்டு ஃப்ரண்டுக் கிட்ட மாட்டிருக்கு சார்”

“அவன எங்கே?”

“அவன் அந்த வழியா வீட்டுக்குப் போயிட்டான்”

வாகனத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த அதிகாரி சொன்னார்.

“போதும். அவன வண்டியில ஏத்தும்”.

அவனை அடித்து வண்டியில் ஏற்றினார்கள். ஒரு காவலர் சந்தேகத்தில் தெருவினுள் சென்று வழி கெட்டுத் திரும்ப வந்தார். அதே சமயம் இரண்டாவது ஆள் பல முடுக்குகளுக்குத் தப்பி பஸ் ஸ்டாண்டினுள் நுழைந்து பூக்காரர்கள் அடுக்கிப் போட்டிருக்கும் பூக்கூடைகளோடும் பூத்தட்டுகளோடும்  சேர்ந்து கொண்டான்.

தாக்கப் போட்டத் திட்டம் நொறுங்கிவிட்ட கவலை முருகேசனின் தலைக்குள் அரித்தது. மாட்டிக் கொண்டிருக்கிற ஒருவன் பத்திரக் கள்ளன். அவனுடைய வாயிலிருந்து விளங்கும்படியான எதையும் தோண்டி எடுத்துவிட முடியாதுதான். எனினும் காலம் ஒரு அல்பையாக அமைந்து விட்டால் என்ன செய்வது? தன்போக்கில் செல்லும் எதனையும் அது அனுமதிக்க விரும்பாது  என்று யோசித்தான்.

அதவா அவன் எதையாவது கக்க நேர்ந்துவிட்டால் தன் சோலி இதோடு முடிந்து விடும். நகரம் முழுக்க கொடிக்கட்டி பறத்தி விடுவார்கள். கெடுபெயர்ச் சுமையால் தலையெடுத்து நடக்க முடியாது. சாவாது செத்தது போலாகி விடும்.

சிதம்பரம் சரியான நேரத்திற்குள் வராததே இத்தனை வேதனைக்கும் காரணம். அவரை நினைக்கையில் நெஞ்சுக் கூட்டில் தெவக்கம் முட்டியது.

தன் சீவிதத்திற்கான பங்கத்தினை சிதம்பரம் தானே வலிய உருவாக்கிக் கொண்டதாகவே முருகேசன் கருதிக் கொண்டான்.

ஒரு இரவில் பட்டறையை மூடும் சமயத்தில் சாவிக்காக சிதம்பரம் கையை நீட்டினார். அது பதிவு இல்லையென்பதால் முருகேசன் சஞ்சலம் கொண்டான்.

“அந்த மேலராமன்புதூரு பார்ட்டி நாலு மாச சீட்டுப் பணத்த தரவேயில்லையேடே…”

“ஆமண்ணாச்சீ”

“பாரு, நேத்தக்கி நா அந்தப் பக்கமா போனேன் பாத்துக்கோ… பைசாவ எங்கேனுக் கேட்டா… அதான் துணியெடுக்க வந்தப்போ பயலப் பாத்து மொத்தப் பணத்தையையும் தந்துட்டனேங்கான்…”

ஒரு அடிக்கல் உருவிப் போவதை சமாளிக்கத் தொட்டு முருகேசன் தன் சிரிப்பினூடே சொன்னான்,

“நம்பாதியோ அண்ணாச்சி. ஒங்களக் கண்டதும் சமாளிக்கப் பாத்திருக்கான். நாம்போறேன். அப்பத்தான் சரியாவும்”. முருகேசன் தன் வேட்டி மடியினை இறுக்கிக் கட்டி விட்டு விரலால் நெக்கிப் பார்த்துக் கொண்டான்.

“ஒரு காரியம் செய்யலாமா? கடைய மூடிருவோமா?”

தன் கனவுகளிலிருந்து வழுக்கியடித்த இந்தத் தருணத்தை நேர்கொள்ள இயலாது அவரைப் பார்த்தான்.

“என்ன அண்ணாச்சி இப்படி சொல்லிட்டியோ?”

“ஆமடே!. சீட்டு நடத்துனவன் ஏமாத்திட்டுப் போயிட்டான்னு பேரும் நாணமும் கெட்டு வாழதுக்கு, ஒரேயடியா இருக்க நகையள குடுத்துக் கணக்கத் தீத்துரலாமுன்னு இருக்கேன்…”

கடையை அவரேப் பூட்ட, அதன் பொருள் தந்திபோல் விளங்கியது.

“ஒங்கய்யா இருக்காருல்லா, அவரு நம்மக் கடையில சோலிப் பாத்தவரு தெரியுமில்லா? எங்கடை சொர்ணமும் அவரும் ஒண்ணு. ஒரே தரம். அவரு அலைஞ்சிப் புடிச்சுக் குடுத்த ஆர்டருகளும் ஆளுங்களும் தான் எங்கடைய நிமிர வச்சது.

திடும்னு மனுஷன் மண்டையப் போட்டது, நானே செத்தது மாதிரி ஆச்சு. அவருக்குச் செய்ய வேண்டிய நிவர்த்திக்காவத்தான் ஒன்னையச் சேத்துக்கிட்டு வேலையும் படிச்சுக் குடுத்தேன். ஆனா…”

அவர் ஸ்டாண்டைத் தள்ளினார்.

“நாளைக்குக் கணக்கெடுத்துப் பாக்கணும். என்ன ஆனாலும் செரி, ஆர்டருக் குடுத்த பார்ட்டிக் காரங்களுக்கு நகைய துல்லியமாக் குடுக்க ஏற்பாடு செய்யணும்.”

சைக்கிளோடு கிளம்பும் போது சொன்னார். “நா ஒரு பாவப்பட்ட ஆசாரிடே..”.

அதேசமயம் முருகேசனுக்கு சைக்கிளை எளிதாக மிதிக்க வரவில்லை. கால்கள் பின்னோக்கி இடற, பெடல் எதிர்வாக்கில் சுழன்றது. கணக்குப் பார்த்தால் கதி கெட்டு விடும். செத்த மனிதர்களே தத்தமது அழிந்த பெயர்களால் இன்றும் உலவுவது அவன் கண்டதுதான்.

மடியைத் தடவிப் பார்த்தான். மிஞ்சியது இதுதான். ஒரு உறுத்தலில் ஆள் அரவமற்ற இடத்தில் சைக்கிளை நிறுத்தினான். சுவரின் எச்சரிக்கையைப் புறக்கணித்து ஒதுங்கி விட்டு மடியைத் திறந்து பொதியை எடுத்துப் பிரித்துப் பார்த்தான். சந்தேகத்தின் பலனாக பொதி வெறுமே தெரிந்தது. சிதம்பரம் எல்லாவற்றையும் அறிந்து கொண்டு தான் ஒளித்து வைத்திருந்த நகையையும் எடுத்துக் கொண்டு விட்டார். சிறுகச்சிறுக சேர்த்த பலமாத வைப்பு இனி அவனுக்கு இல்லை. சகவாசிகளோடு இந்தத் தருணத்தில்தான் அவன் காரியத்தில் இறங்கத் துணிந்தான்.

முருகேசனின் முயற்சியால் முதல் ஆள் விடுபட்டு வந்தான். இடவாடு சறுக்கிய ஆத்திரம் மூவரையும் தீ மூட்டியிருந்தது. வெள்ளிக்கிழமை கடையடைப்பு நாள். இனி சிதம்பரம் வசூலுக்குத் தனியாகப் போய் வருவார். அன்று மட்டும் அவருக்கு சிறிது “வெள்ளமடி” இருக்கும். தற்போது இந்த தேதிக்கு நேரம் குறித்தார்கள்.

நினைத்தது சரியாக நடந்தேறியது. சிதம்பரம் தெருவிற்குள் இறங்கியதுமே முதாலமவன் பதுங்கி அவரைப் போக விட்டான். பிறகு பின்புறத்திலிருந்து நெருங்கி உப்புச்சாக்கினால் அவரது தலையை மூடி இறுக்கினான். எதிர்ப்புறம் முளைத்த இரண்டாமவன் எகிறி மடியில் மிதித்தான். பலாமரம் போல நிற்பு கொண்ட மனிதர் பலாக்காயாக சுருங்கினார். தன் பருவ எட்டலை அதன் மதர்ப்பை உணர இயலாத ஒரு மனநோயாளியின் குமைச்சலைப் போல இரவு தன் சீவிதத்தை முடித்துக் கொண்டது அன்று.

இரண்டு கால்களுக்கும் இடையில் தலையை சொருகிக் கொண்டவராக பலத்த முறிவுகளுடன் கிடைத்தார் சிதம்பரம். சாவின் வாசலிலிருந்து ஊசலாக உயிருடன் தப்பியது அதிசயமாகப் பேசப்பட்டது. அவரும் கடையுமாகக் கிடப்பில் வீழ்ந்த போது உயிர் பிழைத்தற்காக வீட்டார் தெய்வத்தைத் தொழ, அதே காரணத்திற்காக தெய்வத்தை நொந்தார் சிதம்பரம். அவரது வாக்கு போலவே கடை மூடப்பட்டது. எனினும் வாடிக்கையாளர்களுக்கு உண்டானதை செய்து கொடுத்தார்.

முருகேசன் எதிர்ப்புறத்திலேயே ஒரு கடையைப் பிடித்தான். இறை நம்பிக்கையும் கூடியது. தனது செலவில் சபரிமலைக்கு நண்பர்களை அழைத்துச் சென்றான். காணமல் போனவர்களுக்கான அறிவிக்குமிடம் சென்று “தன்னுடன் வந்த இன்னார் இன்னார் சாமிகள், நம்பியார் சுவாமி கட்டிடத்தின் முன் வந்து சேர்ந்து கொள்ளவும். இப்படிக்கு “தேவி ஜூவல்லர்ஸ்” என்று தனது தாயார் பெயர் சொல்லும் “கடைப்பெயரை” சன்னதியில் அறிவித்து மகிழ்ந்தான்.

கடை மினுக்கத்துடன் கூடிய ஒரு விழைவான வாழ்க்கையை அவனுக்குப் பெற்றுத் தந்தது. ஒரு நேரம் பார்த்து அவன் அம்மா கேட்டாள்.

“வீட்டுல ஒரு கொமர வச்சிருக்கோம். அவள ஒரு எடம் பாத்துத் தள்ளிவிட வேண்டாமாலே? . தரம் வருது. என்ன செய்வியோன்னு கேக்காவோ. நா இன்னும் மூச்சு குடுக்கல.”

“அதுக்கு நா என் செய்யணும்?”

“ஆளு யாருன்னு கேளேன்?”

“என்னச் செலவாவும்? அதச் சொல்லு மொதல்ல”

“அத நாம பேசிக்கிடலாம். நீ மொதல்ல ஆளு யாருன்னு தெரிஞ்சிக்கிடாண்டாமா?”

“சும்மக் கெட்டுவானா?”

“அதெப்படி?. வெறுங்கையோட எவன் கெட்டுவான்?”

“முடியாதுல்லா?. எவனோ ஒருத்தன் எங்கேயிருந்தோ வருவான். நாமக் கஷ்டப்பட்டு உண்டாக்கி அவன்கிட்டத் தூக்கிக் குடுக்கணும்!. அப்படித்தானே? ஒங்கிட்ட இருக்கதப் போட்டு அனுப்பு”

“யெங்கிட்ட யாதுலே? இருந்ததெல்லாத்தையும் வாங்கித் தானே நீ கடையப் போட்டே?”

அவன் சீறிக் கொண்டு வந்தான்.

“நீ தந்தது எந்த மூலைக்கி?. அந்த நச்சாபிச்சாக் காச வச்சி டெக்கரேசன் கூட செய்யப் பத்தல. லச்சக் கணக்குல கடத்த வாங்கியாக்கும் மொதலுப் போட்டிருக்கேன். அதக்குடுத்தேன் இதக்குடுத்தேன்னு என்கிட்டே வந்திராதீங்கோ.”

முத்து உள்ளறையில் வெளிறி நின்றாள். அவள் தனது நெஞ்சில் கைவைக்க தேவிக்கு வலித்தது.

“நீ இது என்னத்தல பேசுதே? ஒரு அண்ணன்காரன் பேசுத பேச்சா?”

“என்னக் கொண்டு ஆகாது. என்னவாம் செய்யுங்கோ”.

அவளது எண்ணங்கள் உயிரை இழந்தன. அதன் பிறகு வீட்டுச் செலவிற்குக் கூட அவனிடம் நிற்பதற்கு அவளுக்கு மானக் கேடாக இருந்தது. ஊரில் பார்ப்பவர்கள் “ஒனக்கு என்னக்கா? ஒம்பேருல கடை வச்சப் பொறவு ஒனக்குத் தெளிச்சம் தான்” என்றார்கள். அவள் யாரிடமும் மூச்சு விடக் கூட பயந்தாள்.

வீட்டுவேலைப் பத்தாமல் சமரின் போது ஆளெடுத்த சமயம் துப்புரவு பணியாளராக வேலைக்குச் சேர்ந்தாள். சித்திரவிளையைச் சேர்ந்த ராஜி அவளுக்கு இந்த உபகாரத்தினை செய்தாள். ஒரு நட்பின் அடுக்கத்தில் நிகழும் கொட்டுதல் போல இருவரது குடும்பச் சங்கதிகளும் பகிர்ந்து கொள்ளப்பட்டன. 

மாரி பேருந்து நிலையத்தின் மேற்புற படிக்கட்டுகளின் அருகே பூ விற்றுக் கொண்டிருந்தான். ஒருசமயம் படிக்கட்டின் வழியாக இறங்கிப் போன முத்தைக் கண்டதும்  அருகில் இருந்தவனிடம் பூக்கூடையைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு படிக்கட்டுகளைத் தாவிப் போனான்.

“ஒங்கூட கொஞ்சம் வரட்டா?”

“எதுக்கு?”

“பேசதுக்குத் தான்”

“என்னத்தப் பேசணும்?”

முத்து நின்று அவனை நேருக்குநேராகப் பார்த்தாள். அவன் புன்னைகைத்தான்.

“என்னையப் புடிச்சிருக்குன்னு சொன்னியாமே! ஆமாவாமா?”

“யார் சொன்னது?” அவள் அதிர்ந்து போய் கேட்டாள்.

“உங்கம்மாதான்”

“அப்படிலாம் எதுவும் இல்ல. எனக்கு எந்த எழவும் இஷ்டவும் இல்ல. ஓடிப் போயிரு”

பந்தியில் விலக்கப்பட்ட நபரைப் போல அவன் தளர்ந்து போய் நின்று கொண்டான். அவள் பேருந்தில் உட்கார்ந்த போதும் போக மனமில்லாமல் நின்றான்.

“நா கேட்டேன்னு எதையும் மனசில வச்சிக்கிடாத. வீட்டுல பேசுனத என்னமோன்னு நினச்சி அவசரப்பட்டு பேசிட்டேன். நா பேசுனது தப்புதான். போட்டும் மக்கா….”

வண்டியெடுக்க இருந்த அவகாசத்தில் அவன் தாழ்ந்த குரலில் அவளிடம் சொல்லிவிட்டு அகன்றான்.

நேர்ச்சை தவறிய நிலை போல தவித்தாள் தேவி.

“நா ஒத்துக்கிடவா? எங்கண்ணன் கைவிட்டுட்டான். எங்கம்மைக்கு எப்படியாவது என்னைக் கட்டிக் குடுத்துரனும்… இல்லேனா என்னையே நெனச்சு ஏக்கத்துல நோயாளியா மண்டையப் போட்டுருவா… அதனால போக்கத்த என்னை எப்படியாவது கட்டிக்கோ. போயி நிக்கட்டா அவன் கிட்ட…?” தேவியின் சமாதானம் சண்டையில் முடிந்தது.

ஆனால் அன்று ஏனோ அறையிலிருந்து பூவாசனையாகக் கிளர்ந்தது. அம்மா ஊதுவத்திக் கொளுத்தி வைத்திருக்கிறாளா? என்று பார்த்தாள். எதுவும் இல்லை. செடியோடு பூத்த மணம். தூக்கத்தின் இடையில் விழிப்பு வந்த போதெல்லாம் வாசனை இருந்தது. அல்லது வாசனையால் தூக்கம் இடறுகிறதா தெரியவில்லை. அதிகாலையில் எழுந்தபோது தன்னையே கூட வாசனையாக உணர்ந்தாள். பூக்களை நினைக்கையில் எதிர்பாராது தோன்றிய மாரியின் முகமும் தொடர்ச்சியாக நினைவில் வந்தது. கோணல் சிரிப்பு. இதை எப்போது கவனித்தோம் என்ற குழம்பமும் வந்தது.

சித்திரவிளைக்குப் போனவள் அவன் வீட்டைக் கடக்கும் போது எட்டிப் பார்த்தாள். மாரி பைகளாக செவந்திப் பூக்களை அசைத்துக் கொட்டிக் கொண்டிருந்தான். வாடாமல்லி மூலையில் ஒருங்கிக் கிடந்தது. கூடை கூடையாய் மல்லியும் பிச்சியும் மிதக்க, ரோஜா வாசலில் வரவேற்றது. ஒடுக்கத்து வெள்ளியில் அதிகமாக விற்பனையாகும் போலும் என நினைத்துக் கொண்டாள். அவன் பூக்களைக் கிளறி விட்ட போது கலவையாய் நெருங்கிய வாசனை அவளது மனக்கூறினை நெகிழ்வித்து துயரத்தினை அடக்கம் செய்வதை உணர்ந்து அதிசயித்தாள்.

மாலையில் திரும்பி வரும்போது வேண்டுமென்றே பேருந்து நிலைய படிக்கட்டுப் பக்கமாக வந்தாள். கூட்டத்தினிடையே பூ விற்பனைக் காரர்களில் மாரியைத் தேடினாள். அவன் நின்ற இடத்தில் வேறு ஒருவன் பூச்சரத்தினை விற்றுக் கொண்டிருந்தான். சுற்றிலும் தேடியும் வேறு ஆட்கள் விற்றுக் கொண்டிருந்தார்கள்.

“அக்கா….பூக்கா….பிச்சிவெள்ள…  மல்லியப்பூ…செவந்தி…ரோ….ஸ்!”

“மாரி இல்லையா?”

அவன் திடுக்கிட்டு கூடையைத் தூக்கிக் கொண்டான். சுற்றும் முற்றும் பதட்டத்துடன் பார்த்தான்.

“மாரி எங்கே?”

“போலீஸ் புடிச்சிட்டுப் போயிருச்சுக்கா…”. அவள் அதிர்ச்சியோடு அவனைப் பார்த்தாள்.

“எதுக்கு?”

“இங்க யாவாரம் பண்ணக் கூடாதுல்லா… வழக்கமா போலீஸ் வெரட்டும். விட்ரும். இப்பப் புதுசா ஒரு எஸ்ஸை வந்திருக்காரு. வந்ததும் மொதோ வேலையா பூக்கக்காரப் பயலுவள அடிச்சி இழுத்துட்டுப் போயிட்டார்… இங்க மாரிதானே மெயின் ஆளு… அங்கப் பாருங்க…”

அவள் பார்த்த இடத்தில் மாரியின் பூத்தட்டுகளும் கூடைகளும் கிடக்க அவற்றிற்கு சாத்தப்பட்டது போல பூப்பந்துகள் அறுந்துக் கிடந்தன.

அதன்பிறகு அவள் எங்கு சென்ற போதிலும் முடிந்த வரையில் பேருந்து நிலைய படிக்கட்டுகளின் வழியில் செல்ல முயன்றாள்.

மாரி விடுபட்ட செய்தியினை அம்மாவை வைத்து அறிந்த பிறகு ஒருநாள் படிக்கட்டு அருகில் வந்த போது பரபரவென சத்தத்துடன் பூ விற்றுக் கொண்டிருந்த அவனது கோணல் சிரிப்பினைக் கண்டாள்.

“ரெண்டு மொழம்”

அவன் அவளை அதிசயித்துப் பார்த்தான். மல்லியாக சுற்றப்பட்ட பூப்பந்தினை உயரேத் தூக்கிப் போட்டான். ஒரு கையில் பூச்சரத்தின் நுனி இருந்தது. பந்து திரும்பி வருவதற்குள் கையால் ஒருமுழம் பிடித்து அதை வைத்து இரண்டாக்கிக் கொண்டு பந்தினைப் பிடித்துக் கீழே வைத்தான். சிறிய வாழை இலைத் துண்டில் வைத்து மடித்துக் கொடுக்க, பூ அவளது கைக்கு வந்தது. அவள் காசினைக் கொடுத்தாள்.

“பைசா வேண்டாம்”

“பைசாவுக்குன்னா பூ தா…”.

அவன் வாங்கிக் கொண்டான்.

“போலீசுப் புடிச்சிட்டுப் போச்சாமே…?”

அவன் முகம் சற்று வாடியது. அதில் துயரின் வலி இருந்தது.

“எப்படித் திரும்பவும் பூ விக்கே?”

“பொழப்புக்கு?. ஒரு கடை இருக்கா நமக்கு? அதெல்லாம் பாக்க முடியாது?. என்னா… ஒரு ரெண்டு நாளைக்கு தரையில இருக்க முடியாது.”

“ஏன்?”

“எஸ்ஸை குண்டித் தோல உரிச்சிட்டான்”

அவள் நெற்றியில் கைவைத்தாள். அதற்குள் மூன்று பேருக்கு பூ அளந்து கொடுத்தான்.

“திரும்பவும் வர மாட்டாங்களா?”

“வருவான்… தா அங்கப் பாரு…” அவள் பார்த்த திசையில் ஒரு சிறுவன் சாலையில் நின்று கொண்டிருந்தான்.

“வந்தா பூவே….ன்னு கத்திக் கிட்டே ஓடுவான். ஒடனே நாங்களும் கெடச்சதத் தூக்கிக்கிட்டு பிச்சிப் பறந்திருவோம்”

“இதுலாம் சரியாவாதா?”

“ஒரு கடை பிடிக்கது வர…”

அவள் ஒரு நீண்ட மூச்சிலிருந்து மீண்டாள்.

“”நா ஒரு விசயம் சொல்லட்டா?”

“நல்ல விசயமானா சொல்லு”

“அன்னைக்கி நீ என்னக் கேட்டே?”

“அத விடு… எனக்குக் கிறுக்கு…”

“நீ கேட்டது உள்ளது தான்!”

அவளது மலரும் முகத்தை அவன் காணும் போதில் அவனது விரியும் அகத்தை அவள் கண்டு கொண்டிருந்தாள்.

‘ஆனா ஒரு விஷயம்… எங்கக் கையில ஒத்த நயா பைசாக் கூட கெடையாது. இருக்கத வச்சி ஒப்பேத்தனும்… நாளை இதவச்சி எந்த சங்கடமும் வரப்பிடாது. சரின்னா பாக்கலாம்”.

அருகில் நின்றவனிடம் பூக்கூடையைப் பார்த்துக் கொள்ளும்படி சொல்லி விட்டு, அவன் சட்டென அவள் கைப்பிடித்து படிக்கட்டுகளில் இறங்க வைத்தான். அவள் இறங்கிக் கீழே வருவதற்குள் ஓடிப் போனவன் திரும்ப வந்து ஒரு சிறிய ஓலைப் பெட்டியினை அவளுக்குக் கொடுத்தான்.

“என்னது?”

அவன் எதுவும் சொல்லாததால் அவள் பிரித்துப் பார்த்தாள். பெட்டி முழுவதும் இனிப்பசேவும், ஜிலேபியுமாக வெள்ளை நிறத்தில் நிறைந்து இருந்தது. தன் மகிழ்வினை தடுத்துக் கொள்ள அவளுக்கு பெரும்பாடாக இருந்தது. பூக்களின் வாசம்  வருவதாக நினைத்து வரும் வழியெல்லாம் பெட்டியினை அவள் முகர்ந்து கொண்டே வந்தாள்.

மாலை வடிய இருந்த நேரம். தேவி தன் மகனின் கடைக்கு வந்தாள். முருகேசன் பார்ட்டிகளுடன் இருந்ததால் கவனிக்கவில்லை. கடைக்காரப் பையன்தான் கண்டு சொன்னான். தேவிக்கு கால் கடுத்தது. உட்கார்ந்தால் பரவாயில்லை என்று தோன்ற கடைத் திண்ணையில் உட்கார்ந்தாள்.

“இங்க எதுக்கு வந்தே?”

வரும்போதே சீறிக் கொண்டு வந்தான்.

“கோவப்படாதே… ஒங்கிட்டப் பேசவே நேரம் கெடைக்கல. தங்கச்சிக்கு ஒரு நல்ல எடம் வந்திருக்கு… நீ மனசு வச்சா நடத்தி வச்சிரலாம்…”

“நீ எப்படி இங்க வரலாம்?. நா என்ன செத்தாப் போயிட்டேன்?. நாலு பேரு யாவாரம் பேசக் கூடிய எடம். இங்க வந்து கொல்லைக்குப் போற மாதிரி குத்த வச்சிக்கிட்டு இருக்கே….? யாராவது கேட்டா என்னன்னு சொல்லுவேன்? ஒம்மூஞ்சியக் காட்டி இதுதான் எங்கம்மான்னு சொன்னா எனக்குக் கொறச்சலா இருக்காதா? என்னை மதிச்சு எவனாவது கடைக்கு வருவானா? போத் தூற”.

அவள் சேலைத் தலைப்பால் வாய்க்கு அடை கொடுத்துக் கொண்டு வந்தாள். வீட்டிற்கு வந்து பின்புறம் குளிக்கப் போனவள் வராமல் போக, முத்துத் தேடிக் கொண்டு போனாள். அழுகையைத் துடைத்துக் கொண்டிருந்த அவளை சரி செய்ய முயன்று முத்து தோற்றாள்.

“அவன் சொல்லிட்டானாம்… இவ அழுதாளாம்… போம்மா… என் வாழ்க்கைய நா பாத்துக்கிடுதேன்.. இந்தப் பிச்சைக் கேக்கத மொதல்ல நீ நிறுத்து. இந்த ஊருல ஒரு பூக்கட போடதுக்கு எனக்கு ஒரு எடம் கெடச்சா… அது போதும் எனக்கு.”

சிதம்பரத்தின் வீட்டிற்கு முத்துவை அழைத்துக் கொண்டு தேவி போனபோது குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

“மவளுக்குக் கல்யாணம் வச்சிருக்கேன்… ஒரு வார்த்தை கூப்புடலாமுன்னு வந்தேன்…”

சிதம்பரத்தின் மனைவி அவர்களை அவரிடம் அழைத்துக் கொண்டுப் போனாள். எழுந்திருக்க மிகச் சிரமமாக இருப்பது கண்டு தேவிக்கு வேதனையாக இருந்தது. சிதம்பரம் பத்திரிகையை வாங்கித் தொட்டுப் பார்த்து விட்டு  தலையை ஆட்டினார்.

திருமணத்தன்று முருகேசன் தான் எல்லா இடங்களிலும் முளைத்துக் கொண்டிருந்தான். வேலைகளை இழுத்துப் போட்டு செய்தான். சிறிய மண்டபத்தினுள் பலவிதமான பூக்களைக் கொண்டு நிறைத்திருந்தார்கள் பூக்கார பையன்கள். வாசனை கதம்பமாக நிறைந்து நின்றது.

சிதம்பரம் கைத்தாங்கலாக முகூர்த்த நேரத்திற்கு சரியாக வந்தார். முருகேசன் சிரித்தபடி அவரை வரவேற்றான். மணமக்கள் அவர் காலில் விழுந்து வணங்கினார்கள். நடுங்கும் தனது கைகளால் மடியினை அவிழ்த்து ஒரு பொதியினை எடுத்து முத்து வசம் கொடுத்தார். அவள் ஒரு நீண்ட தங்க மாலையை பொதியிலிருந்து எடுத்து அணிந்து கொண்டாள். அவர் கண்ணோரம் பூ பூத்தது. மாரியின் கண்கள் கலங்கின. தாலிக்கட்டு முடிந்ததும் அவரது மனைவி பதனமாக அவரை அழைத்துப் போனாள்.

“எனக்கு ஒரு சந்தேகம்”

காரில் ஏறப்போன சமயம் சிதம்பரத்தின் மனைவி கேட்டாள்.

“அந்த முருகேசன் பயதான் ஒங்கள உப்புச்சாக்க மூடி அடிச்சானோ?”

“நீ பாத்தியா?”

“நா பாக்கல… கேக்கேன்”

“எத்தர தடவ தான் கேப்பே?”

முருகேசன் வழியனுப்ப வரவில்லை. சமையல் புரையில் குமைந்து கொண்டிருந்தான். கற்கள் ஒளிரும் நீள மாலை அவனை வலிக்கச் செய்தது. அதைப் பார்க்க விருப்பமில்லாது முடங்கி இருந்தான். மட்டுமல்லாது பூக்களின் வாசனையை அவன் பிரியப்படுவதேயில்லை. பூக்கள், ஊதுபத்திகள் இத்யாதிகளின் வாசனைகளை விட்டு அவன் எப்போதும் விலகியே இருப்பான். அப்பாவின் மரணம் தொட்டு அவை அவனை சாவு நினைவுகளுக்கே அழைத்து செல்கின்றன. அந்த மண்டைக் கனம் வருவது ஏனென்று அவனுக்குத் தெரியவில்லை.  

“அந்த மனுசனப் பாத்தியா… அவர உப்புச்சாக்குப் போட்டு அடிச்சவன் வீட்டுக் கல்யாணத்துக்கே வந்து செயினையும் போட்டுட்டுப் போறாரு…”

யாரோ சொன்னது போல் இருக்க, அவன் திடுக்கிட்டு வெளியே வந்தான். அங்கு யாரும் இல்லை.

மறுநாள் கடையைத் திறந்த போது கவனித்தான். எதிரில் சிதம்பரத்தின் கடையில் “தேவி பூக்கடை” என்ற பெயர்ப்பலகை புதிதாக கண்ணில் பட்டது. பூக்கள் வந்து இறங்க, காற்று வாசனையைக் கொண்டு வந்து சேர்த்தது.

மனம் வலுவில் இல்லாத நேரம். தொலைபேசி அடித்தது.

“ஹலோ”

“லைட்டு வேலைக்கு ஆளக் கூப்பிட்டிருந்தேளோ?”
“ஆமா…”

“வழி எங்கே?”

“சந்திரா ப்ரஸ் ரோடு தெரியுமில்லா?”

“ஆமா”

“அதுக்குள்ள வந்தா புதுசா தேவி ஜூவல்லர்ஸ்னு ஒரு கடை வரும்…”

“ஓ! அந்த உப்புச்சாக்குக் கடை! அங்க வந்துட்டு…?”

அவன் தொலைபேசியை வைத்தான். 

 ***

அய்யப்பன் மகாராஜன்

1 COMMENT

  1. உப்புச் சாக்குக் கடை…
    தன்னைக் கொல்ல நினைத்தவனின் குடும்பத்துக்கு தன்னால் முடிந்ததைச் செய்து சிதம்பரம் நன்னயம் செய்துவிட்டார்.
    அருமையான கதை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here