Tuesday, April 23, 2024
Homesliderபூவிதழ் உமேஷ் கவிதைகள்

பூவிதழ் உமேஷ் கவிதைகள்

நினைவில் உள்ள குழந்தையின் புகைப்படத்தை கைது செய்தல்

யாருக்காவது
பற்களின் மீது கட்டி இருந்தால்
சொல்லுங்கள்
அதற்கான மருத்துவம் எனக்கு தெரியும்
அது மட்டுமல்ல
ஓசைகளில் கூட சுவையறிவேன்
எலுமிச்சம்பழம் தரையில் நசுங்கும் ஓசை
புளிப்பு சுவை
என் எடை
நிறைய பிங்க் நிறம்~வெள்ளை நிறம்~ கொஞ்சம் கருப்பு நிறம்
இவ்வளவுதான்.

என் அம்மா
என்னை இளமையாக பெற்றெடுத்தாள்
குழந்தையான என்னிடம்
ஒட்டகத்தின் திமில் போல
முகத்தை சுருக்கிக் காட்ட சொன்னார்கள்
யோசனை செய்வதில்
எந்த பிரச்சனையும் இல்லாதவர்கள்.

நான் வளர வளர
செம்மறி ஆட்டின் கண்ணீரின் நிறம் போல
என் பெயர் மாறிவிட்டது
யாராவது அழைத்தால்
பெயரின் இரண்டாவது எழுத்தை மட்டுமே
கூப்பிடுவதாகத் தோன்றுவது பிரம்மை இல்லை.

உயரமான விலங்கின் எலும்புகளால் செய்யப்பட்ட
நாற்காலியில் விரும்பி அமரும் நான்
எல்லோரையும் நம்பிவிடுவேன்
எறும்புகளை நம்பி கூட பொறுப்புகளை
ஒப்படைப்பேன்
சிதறிய சர்க்கரையை அப்புறப்படுத்த சொன்னாலும்
என் ரகசிய அறையில்
நுழையக்கூடாது என்று
சில நாளில் தண்ணீரில் வேலியை
அமைப்பதும் உண்டு

தூங்குவதற்குப் படுக்கை எதுவும் தேவையில்லை
முகத்தை / தலையைக் கொஞ்சம்
சாய்த்தாலே தூங்கிவிடுவேன்
நெடுநேரமாய் என்னைக் காத்திருக்க வைத்தவர்
பழிவாங்குவதாய் நினைத்திருக்கலாம்
என் தலை / முகம் சற்று சாய்ந்து
இருப்பது பற்றி தெரியாமல்.

“அடுக்கப்பட்ட புத்தங்கள்
எரியும்போது
கவிதைப்புத்தகம் நன்றாக எரியும்” என்று
கனவில் வந்த புத்தகத்தில் படித்தேன்
காயங்களில் இருந்து
ஒளிரத்தொடங்கும் பெண்
என்னையே வேகவைத்து
எடுத்து வரச்சொன்னாள்
பற்களின் மூலம் நடந்து சென்று
அவள் முன் நின்றேன்
அப்புத்தகம் அவள் கையில் இருந்தது
அதில்
இரத்தம் தோய்ந்த குறுவாள்
Book Marker ஆக இருந்தது.

2

வயிற்றுக்கு நேராக இரண்டாக வெட்டப்பட்ட
மனிதனை
இரண்டு சவப்பெட்டிகளில் புதைக்க வேண்டும்
அதற்கு முன்பாக ,
வாழும் போதே
அவன் அடைந்த சிறிய மரணங்களுக்கு உரிய
நீர் சடங்குகளையும் செய்ய வேண்டும்.
வாரம் முழுவதும் இறந்தவர்களுக்காக
ஞாயிற்று கிழமைகளில் அழுவது என் வழக்கம்
அப்போது பார்ப்பேன்
உதிர்காலத்தை துளிர்காலத்தில்
மறந்திடும் சில மரங்களின்
பழுத்த இலைகளில் வாசனை உட்பட
பழங்களின் சாயல் இருக்கிறது என்று.

ஒரு கோட்பாட்டை விட
கருதுகோளில் இருக்கும் சுதந்திரம் அழகானது
என்றதும்
எனக்கு கால் சுளுக்கியது
நீங்களும் இதுபோல ஏதாவது முயன்று பாருங்கள்.
ஒரு காலில் இருந்து
இன்னொரு காலுக்கு வலியை மாற்றுவதற்கு
கால் தரையில் படாமல்
ஒரு புளியங்கொட்டை மீது நின்றேன்
அதற்குள்ளாக உலகம்
தன் ஒரு சுற்றை முடித்தது
நான் வயதில் தொங்க வேண்டியதாயிற்று

எறும்புகளை 11 – 1 நேர்ப்புள்ளியாக நிறுத்தி
கோலம் போட்டு
சுவரில் கிறுக்கிய கோட்டை கயிறாக இழுத்து
துணி காயப்போடும் அவளைப் பற்றிய
கேள்விகள் உட்பட
பழைய கேள்விகள் ஏதேனும் இருந்தால்
தாகமாக இருக்கும் போது
கேளுங்கள்
நீங்கள் போகும் வழியில் தண்ணீர்
பதிலளிக்கும்

கடைசியாக
என்னை நேசிக்கும் பெண்களின்
பட்டியலைத் தருகிறேன்
வெள்ளைத்தாளைப் பார்த்துக் கோபப்படக்கூடாது
சரி சரி
உங்கள் அவசரம் புரிகிறது
“எல்லா பெண்களும்” என்பதற்கு பட்டியல் தேவையா ?
நான் 3101982 பூக்களுள்ள சிறு மரம்
இலையால் நிழல் தரவேண்டிய அவசியமில்லை
பூக்களின் நறுமணத்திற்கும் நிழலுண்டு

***

பூவிதழ் உமேஷ்

RELATED ARTICLES

9 COMMENTS

 1. அடுக்கப்பட்ட புத்தங்கள்
  எரியும்போது
  கவிதைப்புத்தகம் நன்றாக எரியும்” என்று
  கனவில் வந்த புத்தகத்தில் படித்தேன்/.

  சிறப்பு. வாழ்த்துக்கள்!

 2. // எறும்புகளை 11 – 1 நேர்ப்புள்ளியாக நிறுத்தி
  கோலம் போட்டு
  சுவரில் கிறுக்கிய கோட்டை கயிறாக இழுத்து
  துணி காயப்போடும் அவளை//

 3. கடைசியாக என்னை நேசிக்கும் பெண்கள்…. சிறப்பு….

 4. //வாரம் முழுவதும் இறந்தவர்களுக்காக
  ஞாயிற்று கிழமைகளில் அழுவது என் வழக்கம்//

  கொஞ்சம் ஓவர்
  ஆனாலும் நல்லா இருக்கு

  – பவி

 5. சிந்திக்க தெரியாத சிந்தைக்கு சிந்திக்க வைக்கும் சாரல். இச்சாரல் பல விதைகளைத் தளிர்களாக வேர்விட்டு துளிர்க்கச் செய்கிறது. சிறப்பு என்று சொல்லிமுடிக்க
  முடியாத வார்ப்பு உங்கள் வரிகள். அண்ணா 👍. நன்று.

 6. உதிர்காலத்தை துளிர்காலத்தில் மறந்திடும்
  சில மரங்களின் பழுத்த இலைகளில் வாசனைகள் உட்பட பழங்களின் சாயல்
  இருக்கிறது.தாய்யைப்போல் பிள்ளை,
  சமுகத்தின் பிரதிபலிப்பு அடுத்த தலைமுறைகளிடம் காண்பதை எடுத்து காட்டும் படைப்பு. பல வண்ணங்களில் சிந்திக்க, மீண்டும் மீண்டும் படிக்கத்தூண்டும் படைப்பு.அண்ணா நன்று.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular