Monday, November 4, 2024
Homesliderபுவியின் நிகழ்காலமும் எதிர்காலமும் - இரு அறிக்கைகள்

புவியின் நிகழ்காலமும் எதிர்காலமும் – இரு அறிக்கைகள்

நாராயணி சுப்ரமணியன்

நமது புவியில் உள்ள ஒட்டுமொத்த பல்லுயிர்ப் பெருக்கத்தின் நிலைமை (Status of Biodiversity) எப்படி இருக்கிறது என்று அலசும் இரு முக்கியமான அறிக்கைகள் இந்த மாதத்தில் வெளியாகியிருக்கின்றன. இரு அறிக்கைகளும் சொல்லும் கருத்தை ஒருவரியில் விவரித்துவிடலாம் : “நாம் உடனடியாகக் குறுக்கிட்டு சில தீர்வுகளை முன்னெடுக்காவிட்டால் மிகப்பெரிய ஆபத்துகளைச் சந்திக்க நேரிடும்”.

வாழும் புவிக்கான அறிக்கை

முதலாவது அறிக்கை லண்டனின் விலங்கியல் கூட்டமைப்பும் (Zoological Society of London) இயற்கைக்கான உலகளாவிய நிதியமும் (World Wildlife Fund) இணைந்து வெளியிட்டிருக்கும் வாழும் புவிக்கான அறிக்கை (Living Planet Report). இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது. ஒட்டுமொத்த உலகின் பல்லுயிரியத்தின் நிலை எப்படி இருக்கிறது என்பதை விளக்கும் அறிக்கை இது. 2020 செப்டம்பர் 10ம் தேதி வெளியிடப்பட்டிருக்கும் இந்த முக்கியமான அறிக்கை, “இயற்கைக்கும் நமக்குமான உறவு முறிந்து போயிருக்கிறது” என்கிறது.

வழக்கமாக ஆராயப்படும் சூழலியல் கூறுகளோடு இந்த முறை புதிதாக மண்ணுக்குள் இருக்கும் பல்லுயிரியம், வண்ணத்துப்பூச்சிகளின் பல்லுயிரியம் என்று சில புதிய தரவுகளையும் சேர்த்திருக்கிறார்கள். பெரிய விலங்குகள் மட்டுமன்றி, எல்லா விலங்குகளையும் கணக்கிலெடுத்துக் கொள்வதற்கான முன்னெடுப்பு இது. மொத்தம் 4392 தாவர, விலங்கினங்களின் எண்ணிக்கை, சூழல் ஆகியவற்றை ஆராய்ந்து பெறப்பட்ட தரவுகளிலிருந்து இந்த அறிக்கை உருவாக்கப்பட்டிருக்கிறது. இதில் முன்வைக்கப்படும் முக்கியமான முடிவுகள் இவை:

• 1970ல் தொடங்கி 2016 வரை, முதுகெலும்புள்ள உயிரினங்களின் மொத்த எண்ணிக்கை 68% குறைந்திருக்கிறது. மீன்கள், நீர்-நில வாழ்விகள், ஊர்வன, பறவைகள், பாலூட்டிகள் என்று எல்லாமே இதில் அடங்கும்.
• 1970ல் தொடங்கி 2016 வரை, 84% நன்னீர் இனங்கள் அழிந்திருக்கின்றன.
• பனியால் சூழப்படாத நிலப்பகுதியை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டால், இப்போதுவரை 75% நிலப்பகுதிகள் சீரழிக்கப்பட்டிருக்கின்றன.
• நன்னீரில் இருக்கும் விலங்குகளில் (Freshwater species) மூன்றில் ஒரு பங்கு விலங்குகள் அழியும் ஆபத்தை எதிர்நோக்கியிருக்கின்றன.
• தற்போது உலகம் முழுவதும் பின்பற்றப்பட்டுவரும் விவசாய முறைகள் பலவும் சூழலை சீர்குலைப்பவையாக இருக்கின்றன. பல்லுயிரியம் இதனால் பெரிதும் பாதிக்கப்படுகிறது.
• மனிதர்களின் நுகர்வு (Consumerism and Consumption) அதிகமாக உள்ளது. ஒவ்வொரு வருடமும் நுகர்வு அதிகரித்துக்கொண்டே போகிறது. 1.56 பூமியில் எந்த அளவுக்கு வளம் இருக்குமோ, அந்த அளவுக்கு வளத்தை மனிதர்கள் ஒவ்வொரு வருடமும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அதாவது, புவியால் மனிதர்களுக்குத் தரக்கூடிய வளத்தின் அளவை விட, ஒன்றரை மடங்கு கூடுதலான வளம் மனிதர்களுக்குத் தேவைப்படுகிறது! இது புவியின் மீது கடுமையான அழுத்தத்தை உருவாக்குகிறது, அதனால் சமநிலை பாதிக்கப்படுகிறது.
• அளவும் உடல் எடையும் அதிகமாக இருக்கும் நன்னீர் இனங்களால் சூழல் சீர்கேட்டுக்கும் அதனால் ஏற்படும் மாற்றங்களுக்கும் எளிதில் ஈடுகொடுக்க முடிவதில்லை. ஒரு நன்னீர் வாழிடம் பாதிக்கப்படும்போது இவைதான் முதலில் அழிகின்றன. குறிப்பாக 30 கிலோவுக்கு மேல் உடல் எடை இருக்கும் நன்னீர் இனங்கள் எல்லாமே ஆபத்தில் இருக்கின்றன.
• இடத்துக்கு இடம் பல்லுயிரிய பாதிப்பு மாறுபடுகிறது. லத்தீன் அமெரிக்கா/கரீபியன் தீவுகளின் வெப்பமண்டல வாழிடங்களில் பாதிப்பு அதிகமாக உள்ளது.
• இந்தியாவைப் பொறுத்தவரை மூன்றில் ஒருபங்கு ஈரநிலங்கள் (Wetlands) பல்வேறு சூழலியல் சீர்கேடுகளால் அழிந்துள்ளன.

பல்லுயிரிய அழிவும் பொருளாதார பாதிப்பும்:

பல்லுயிரியம் அழிவதற்கு முக்கியக் காரணங்கள் எவை என்றும் இந்த அறிக்கை பட்டியலிட்டிருக்கிறது:

  1. நிலத்தையும் கடற்பகுதிகளையும் நாம் பயன்படுத்தும் விதம் பெரிதும் மாறியிருக்கிறது. இதனால் வாழிடங்கள் அழிகின்றன, சீர்குலைக்கப்படுகின்றன.
  2. உயிரினங்கள் அளவுக்கு அதிகமாக சுரண்டப்படுவது (Species over exploitation) – வேட்டையாடுதல் தொடங்கி அளவுக்கு அதிகமான மீன்பிடித்தல் வரை எல்லாமே இதில் அடங்கும்.
  3. அயல் ஊடுருவி இனங்களும் நோய்களும் (Invasive species and disease)
  4. மாசு
  5. காலநிலை மாற்றம்

ஒவ்வொரு வருடமும் உலகப் பொருளாதார மன்றம் (World Economic forum), அந்தந்த வருடத்துக்கான “உலக அச்சுறுத்தல்/ஆபத்து” (Global risks) பற்றிய அறிக்கை ஒன்றை வெளியிடும். அதாவது ஒரு நிகழ்வோ அல்லது ஒரு நிலையோ, உலக அளவில் நாடுகளுக்கும் நிறுவனங்களுக்கும் எதிர்மறையான ஒரு பாதிப்பை ஏற்படுத்தும் என்றால் அது ஒட்டுமொத்த உலகத்துக்கான அச்சுறுத்தல் என்று சொல்லப்படுகிறது. 2020 அறிக்கையில் பட்டியலிடப்பட்டுள்ள உலக அளவிலான அச்சுறுத்தல்களில், முதல் ஐந்து இடங்களைப் பிடித்திருப்பவை சூழலியல் பிரச்சனைகள்தான்! பல்லுயிர்ப் பெருக்கத்துக்கான தங்கள் அறிக்கையில் இதைக் குறிப்பிடும் ஆராய்ச்சியாளர்கள், சூழலியல் பிரச்சனைகளின் உலகளாவிய முக்கியத்துவத்தை விரிவாக அலசுகிறார்கள். “ஒரு நிலையான சூழலும் ஆரோக்கியமான புவியும்தான் மனித நாகரிகத்துக்கும் செழுமைக்கும் வளர்ச்சிக்கும் அடிப்படை. இவை எல்லாமே ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை. பொருளாதாரம் சார்ந்த எல்லா செயல்பாடுகளுமே நேரடியாகவோ மறைமுகமாகவோ இயற்கையை நம்பி இருப்பவைதான்” என்கிறார்கள்.

அழிவுகளின் காலம்” :

உயிரினங்கள் அழிவது இயற்கை சுழற்சியின் ஒரு பகுதி. ஏற்கனவே டைனோசர்கள் உட்பட பல விலங்குகளை முற்றிலுமாகத் துடைத்தெடுத்த பேரழிவு நிகழ்வுகள் (Mass extinction events) புவியின் வரலாற்றில் உண்டு. பொதுவாக இந்த அழிவின் விகிதம் என்பது பத்துலட்சம் இனங்களுக்கு 0.1 என்ற அளவில் இருக்கும். அதாவது, ஒரு கோடி இனங்களுக்கு ஒரு இனம் என்ற விகிதத்தில் சராசரி அழிவு இருக்கும்.

மனிதர்கள் சூழல் சீர்கேடுகளை ஏற்படுத்துவதற்கு முந்தைய கணக்கு இது.

இப்போது அழிவின் விகிதம் 1000 மடங்கு அதிகரித்திருக்கிறது!

அதாவது, ஒவ்வொரு வருடமும், பத்துலட்சம் இனங்களுக்கு 100 இனங்கள் அழிகின்றன! நாம் புதிய இனங்களைக் கண்டுபிடிக்கும் வேகத்தோடு ஒப்பிட்டால் இது மிகவும் அதிகம். ஆக, நாம் கண்டுபிடிக்குமுன்னே பல இனங்கள் அழிந்துவிடுகின்றன – பிரிக்கப்படாமலேயே எரிக்கப்பட்ட ஒரு பரிசுப்பொருளைப் போல!

2014ல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், கடந்த நூற்றாண்டில் மட்டும் 200 உயிரினங்கள் அழிந்துவிட்டன என்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்தத் தரவுகள் எல்லாவற்றையும் கணக்கில் எடுத்துக்கொள்ளும் சூழலியலாளர்கள், நாம் இப்போது ஆறாவது பேரழிவுக் காலத்தில் இருக்கிறோம் என்று எச்சரிக்கிறார்கள் (Sixth Mass Extinction). இது பெரும்பாலும் மனிதர்களால் உருவாக்கப்பட்ட அழிவுதான் என்பதும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

ஹோலோசீன், ப்ளீஸ்டோசீன் என்று புவியின் காலகட்டங்களுக்குப் பெயர் இருப்பதைப் போல, இந்த காலகட்டத்துக்கு Anthropocene என்று பெயரிட்டிருக்கிறார்கள். அதாவது மனிதர்களின் காலகட்டம். இந்த ஆந்த்ரோபோசீனில் கிட்டத்தட்ட 10 லட்சம் விலங்குகள் அழிவின் விளிம்பில் நின்றுகொண்டிருப்பதாக உலகளாவிய ஆய்வுகள் சொல்கின்றன. “புவியின் வரலாற்றில், நிலவியலையே மாற்றியமைக்கும் ஒரு சக்தியாக மாறியிருக்கும் ஒரே இனம் மனித இனம்தான்” என்கிறார் அறிஞர் ஈ.ஓ.வில்சன்.

ஐக்கிய நாடுகள் சபையின் உலகப் பல்லுயிரிய அறிக்கை:

ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் பிரிவு நடத்தும் பல்லுயிரியம் பற்றிய மாநாட்டின் (Convention on Biodiversity) அறிக்கையான Global Biodiversity Outlook 2020 செப்டம்பர் 15-ம் தேதி வெளியிடப்பட்டிருக்கிறது.

2010-ல் ஜப்பானில் ஐச்சி என்ற ஊரில் ஒரு சர்வதேச பல்லுயிரிய மாநாடு நடத்தப்பட்டது. உலக நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற இந்த மாநாட்டில், பல்லுயிரியத்தையும் சுற்றுச்சூழலையும் காப்பதற்காக, 2011-2020 காலகட்டத்துக்குள் எட்டவேண்டிய இலக்குகளாக 20 இலக்குகள் முன்வைக்கப்பட்டன. இவை Aichi targets என்று அழைக்கப்படுகின்றன. பாதுகாக்கப்பட்ட நில/கடல் பரப்புகளின் அளவை அதிகப்படுத்துவது, சூழலியல் சார்ந்த விழிப்புணர்வை அதிகப்படுத்துவது, அரசு மற்றும் சமூகத்தளங்களில் பல்லுயிரியம் சார்ந்த விவாதங்களையும் முன்னெடுப்புகளையும் இணைத்துக்கொள்வது, மாசுபாட்டைக் குறைப்பது, பவளத்திட்டுக்களைப் பாதுகாப்பது, வாழிடங்கள் அழிவதைப் பாதியாகக் குறைப்பது, தற்சார்பு சார்ந்த முன்னெடுப்புகள் என்று சூழல் பாதுகாப்பு மற்றும் பல்லுயிரியம் சார்ந்து பல்வேறு கோணங்களில் இந்த இலக்குகள் அமைக்கப்படிருந்தன.

2020ல் இந்த இலக்குகளுக்கான கால அவகாசம் முடிவடைந்திருக்கிறது என்பதால் ஐ.நா சபையின் தற்போதைய அறிக்கை, இந்த இலக்கை உலக நாடுகள் அடைந்திருக்கின்றனவா என்பதை ஆராய்கிறது.

20 இலக்குகளில் ஒன்றைக்கூட உலக நாடுகள் முழுமையாக எட்டவில்லை என்பதுதான் அறிக்கை தரும் செய்தி! இருபது ஆண்டுகளில் ஆங்காங்கே ஆறு இலக்குகள் அரைகுறையாக செய்து முடிக்கப்பட்டிருக்கின்றன, மற்றபடி பெரும்பாலும் தோல்விதான்!

செயல்பாட்டுக்கான நேரம்:

“பல இரவுகளில்
அழிவுக்கு எதிர்ப்புறத்தில் இருக்கும்
“ஆபத்தில்லை” என்ற பட்டியலிலுள்ள விலங்குகளை
ஒவ்வொன்றாக வரிசைப்படுத்தி
என் பதட்டத்தைத் தணித்துக்கொள்வேன்…..
“ஊழி” என்ற சொல்லை நான் இதுவரை எழுதியதில்லைதான்
ஆனால் வேறு எதுவும் இந்த சூழலுக்குப் பொருந்தவில்லை”

என்ற பெய்ஜ் லூயிஸின் கவிதை வரிகள் நினைவுக்கு வருகின்றன. காலநிலை மாற்றம் ஒரு மிகப்பெரிய அச்சுறுத்தலாக நம் முன்னே நின்று கொண்டிருக்கிறது. பல்லுயிர்ப் பெருக்கம் வேகமாக அழிந்து வருகிறது. நிலமும் கடலும் சீர்குலையும் விகிதத்தை ஆராயும் பலரும், எதிர்காலத்தில் நம் உணவுப் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் என்று எச்சரிக்கிறார்கள். தற்போது இருக்கும் சமூகப் பொருளாதார அரசியல் சிக்கல்களோடு இவை இணையும்போது எந்த மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்பதை நாம் யூகித்துக் கொள்ளலாம்.

“உங்களது நம்பிக்கை எனக்கு வேண்டாம். நீங்கள் பீதியடைய வேண்டும். என்னைப் போலவே நீங்களும் பயப்பட வேண்டும். உடனடியாக செயல்பட வேண்டும். வீடு தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தால் நீங்கள் எப்படி நடந்து கொள்வீர்களோ அப்படி நீங்கள் அவசரத்துடன் செயல்பட வேண்டும். ஏனென்றால் வீடு தீப்பற்றித்தான் எரிந்து கொண்டிருக்கிறது” என்று காலநிலை மாற்றத்துக்கெதிரான செயற்பாட்டாளர் க்ரெட்டா துன்பர்க் பேசியபோது பலரும் விமர்சித்தார்கள். “உணர்ச்சிவசப்பட்ட சொற்கள்” என்று அவற்றை ஒதுக்கித் தள்ளினார்கள். உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்டு, தரவுகளும் வரைபடங்களுமாக இரு உலகளாவிய அறிக்கைகள், நாம் எந்த அளவுக்குத் தோல்வியுற்றிருக்கிறோம் என்பதை நிரூபித்திருக்கின்றன.

செயல்படுவதற்கும் சூழல்பாதுகாப்பு தொடர்பான திட்டங்களை போர்க்கால அவசரத்துடன் முன்னெடுப்பதற்குமான நேரம் இது.


தரவுகள் : WWF (2020) Living Planet Report 2020 – Bending the curve of biodiversity loss. Almond, R.E.A., Grooten M. and Petersen, T. (Eds). WWF, Gland, Switzerland.

World Economic Forum. (2020). The global risks report 2020, 15th edition.
World Economic Forum in partnership with Marsh & McLennan and Zurich
Insurance Group.

Pimm et al (2014) The biodiversity of species and their rates of extinction, distribution and protection. Science 344(6187).

Secretariat of the Convention on Biological Diversity (2020) Global Biodiversity Outlook 5. Montreal.

***

நாராயணி சுப்ரமணியன்

கடல்வாழ் உயிரியலில் முனைவர் பட்டம் பெற்றவர்.”நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே” என்ற உயிரியல் நூலை எழுதியுள்ளார். தமிழில் கடல்சார், அறிவியல் பொருண்மைகளைக் கவிதைகளில் எழுதி வருபவர். விகடன் தடம், வாசகசாலை, அரூ இதழ்களில் இவரது கவிதைகள் வெளியாகியுள்ளன. Email: nans.mythila@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular