Thursday, June 13, 2024
Homesliderபுலன் (சிறுகதை)

புலன் (சிறுகதை)

கு. ஜெயப்பிரகாஷ்

பவித்ரா ஏன் இப்படிச் செய்தாள்? அவள் இப்படி செய்திருக்கக் கூடாது. ஒருவேளை அவளின் வலியை என்னால் முழுவதுமாகப் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கிறேனா!? எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ஒரே குழப்பமாக இருக்கிறது. பயமாகவும் இருக்கிறது. அவள் இல்லாமல் இந்த வீதிகளில் நான் இன்னும் நடக்கப் பழகவில்லை. அவள் இருந்தால் தைரியமாக இருப்பேன். அவள் பயன்படுத்தும் ஜாஸ்மின் செண்ட்டின் வாசனை என் நினைவுகளை அழுத்துகிறது. அவளின் மிருதுவான கைகளும். கீச்கீச் என்று ஒலிக்கும் குரலும் என் மண்டைக்குள் சுற்றிக் கொண்டேயிருக்கிறது. ஏன் அவள் அப்படிச் செய்தாள்? பல நேரங்களில் பவித்ராவைப் போல் எனக்கும் கண்கள் தெரிந்திருந்தால் இந்த உலகை ரசித்திருப்பேன் என்று ஆசை ததும்ப அவள் சொல்லும் விஷயத்தைக் கண்கொண்டு பார்க்க ஆசைப்பட்டிருக்கிறேன். ஆனால் இன்று எனக்கு கண் பார்வையில்லை என்பதை மிகுந்த பாக்கியமாகப் பார்க்கிறேன். இந்த உலகம் ஏன் இப்படி இருக்கிறது? இப்படி வக்கிரம் பிடித்த மனிதர்களின் மத்தியில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா?.

பவித்ரா நீ அப்படிச் செய்திருக்கக் கூடாது. என் பகலும் இரவும் உன் வருகையை வைத்தே அறிந்திருந்த எனக்கு இப்போது எந்த வித்தியாசமும் தெரியவில்லை. நிலைத்த தனிமைக்குள் சிக்கிக்கொண்டவளாய் நான் இருக்கிறேன். வண்ணங்களை எனக்கு நீ அறிமுகப்படுத்த முயற்சித்தாய். பாலின் சுவையும் வாசனையும் தான், வெண்மை என்ற சொல்லுக்குள் எனக்குப் புலப்படுகிறது. ஆனால் அதற்கு முன் ஒருநாளும் அந்த வெண்மையை நான் உணர்ந்ததில்லை. மஞ்சளின் சுவையை மாம்பழத்திலும் சிவப்பின் சுவையை ஸ்ட்ராபெர்ரி பழத்திலும் எனக்கு நீ மட்டும்தான் அறிமுகப்படுத்தினாய். ஒவ்வொரு வண்ணமும் எனக்குள் சுவையாகவும் வாசனையாகவுமே அறிய முடிகிறது. என்னுள் இப்படியான அறிதலை நீதானே நிகழ்த்தினாய். இனி யார் எனக்கு இப்படி எல்லாம் சொல்லித் தருவார்கள். இந்தப் புலப்படாத உலகை இனி யார் எனக்கு புலப்பட வைப்பார்கள். குழம்பியிருக்கிறேன். உன்னுடைய மரணம் இந்த உலகின் மீது எனக்கு மிகுந்த பயத்தை விதைத்திருக்கிறது.

என்னைச் சுற்றிப் புழங்கும் மனிதர்களின் வாசனைகளும், அவர்களின் பேச்சொலிகளும் சின்னச்சின்ன அசைவுகளின் சப்தங்களும் மட்டுமே அறிந்திட்ட என்னால் இப்படி அவர்களின் அகமனதின் குரூரத்தை அனுமானிக்க முடியாமல் போனதே! குரலை வைத்து ஆண் பெண் என்று அறிந்திடும் என்னால் எப்படி அவர்களுடன் சகஜமாகப் பழகி வாழ்ந்திட முடியும்? ஒருமுறை ஒரு ஆண் உன் கண்களைப் பார்த்துப் பேசாமல் உடலைப் பார்த்துப் பேசுகிறான் என்று சொன்னபோது அதனால் என்ன என்று நான் கேட்க நீ என்மீது கோபித்துக் கொண்டது நினைவுக்கு வருகிறது.

இப்போது யார் என்னை எந்தக் கோணத்தில் எங்கு பார்க்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது. கண்கள் எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியாது. ஆனால் அந்தக் கண்களை நான் தொட்டுப் பார்த்திருக்கிறேன். அது எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்கும். கண்ணீர் வடிக்க அது தயாராகவேயிருக்கும். அப்படியான ஒரு உறுப்பு என்னைச் சுற்றி நிறைந்திருக்கிறது. அதன் கோணங்கள் அதன் உள் நோக்கங்கள் எனக்குத் தெரிய வாய்ப்பில்லை. மனிதக் கண்கள் போக செயற்கைக் கண்களைக் கொண்டு எல்லோரையும் படம் பிடிக்கிறார்கள்.

அது இன்னும் ஆபத்தானது. அப்படி என்னையும் படம் பிடித்திருக்கிறார்கள். ஆனால் அதில் எனக்கு பயமில்லை. என் உருவம் எனக்கே தெரியாது. அந்த அருவருக்கத்தக்க உடலை நான் பார்த்ததில்லை. ஆனால் உணர்ந்திருக்கிறேன். பசியின் போதும், மாதவிடாயின் போதும் நான் என் உடலை உணர்ந்திருக்கிறேன். அதன் வலிகள் என்னை இயங்க விடாமல் செய்திருந்தது. ஒருவேளை எனக்கு கண்பார்வை தெரிந்திருந்தால் என் உடல் தோற்றம் பெரும் சுமையாக இருந்திருக்கலாம்.

என் தோலின் வண்ணமும் என் உயரமும் என் மூக்கும் முழியும் தலைமுடியும் இப்படி இதுபோல அதுபோல இருந்திருக்கலாம் என்று ஏக்கப்பட்டிருக்கலாம். தோற்றம் குறித்த தாழ்வு மனப்பான்மையில் சிக்கித் தவித்திருக்கலாம். உடல் ஒரு சுமைதான். அதன் வடிவங்கள் அவளுக்குச் சுமையாக இருந்திருக்கிறதா அல்லது அவள் மனதுக்குள் எதையோ போட்டு குழப்பிக் கொண்டாளா..

1

ஒருமுறை அதே செண்ட்டை இன்னொரு நபர் பூசியிருந்தார். ஆனால் அந்த வாசனை எனக்குப் பிடிக்கவில்லை. மிகவும் தூக்கலாக இருந்தது. ஒருகட்டத்தில் அந்த வாசனையால் எனக்கு மயக்கமே வந்துவிட்டது. பவித்ராவின் உடலோடு சேர்ந்து இழைந்து வீசும் அந்த மல்லிகை மணமே எனக்கு எப்போதும் விருப்பம். மல்லிகைப்பூவில் கூட அப்படியான மணத்தை என்னால் உணர முடியவில்லை.

அவளின் மென்மையான கைகளைத் தொடும்போது மல்லிகைப்பூவை தொடுவதைப் போன்ற ஓர் உணர்வை என்னால் கிரகிக்க முடிகிறது. அவளின் குரல் என் மண்டைக்குள் சுற்றிக் கொண்டேயிருக்கிறது. சொர்ணலதாவின் குரலை ஒத்திருக்கும் அவள் குரல் மயக்கமூட்டும் வஸ்துவைப் போன்றது.

என்னிடம் எல்லாவற்றையும் சொல்லும் அவள் இப்படிச் செய்யப் போகிறேன் என்று ஏன் என்னிடம் சொல்லாமல் இப்படிச் செய்துவிட்டாள். அவள் ஒருபோதும் இப்படியான காரியங்களில் ஈடுபட மாட்டாள். சின்னச்சின்ன விஷயத்தைக்கூட என்னிடம் கொட்டித் தீர்க்கும் அவள் இதை மட்டும் ஏன் சொல்லவில்லை?

கண்ணை மூடிக்கொண்டால் இருள் கவிழும் அதான் கருப்பு என்றாய். ஆனால் எனக்குத் தெரிந்தது தான் கருப்பு வண்ணம் என்று என்னால் எப்படிச் சொல்ல முடியும். என் முன்னே ஒன்றுமே இல்லை. சின்னச் சத்தங்களையும் வாசனைகளையும் என்னைத் தீண்டும் காற்றையும் தாண்டி என்னால் ஒன்றும் சொல்ல முடியாது. என்னால் உணர முடிந்தவற்றை தான் சொல்ல முடியும்.

ஆனால் நீயோ வடிவங்களைப் பற்றியும் வண்ணங்களைப் பற்றியும் அதிகம் பேசுவாய். அவை இரண்டும் என் புலன்களுக்கு அப்பால். ஆம்.. அவை எனக்குப் புலப்படுவதில்லை. ஆனால் உன்னைவிட தீர்க்கமாக வாசனையையும் ஒலியையும் என்னால் நுகரமுடியும். அதில் நீ என்னிடம் தோற்றிடுவாய்.

வடிவங்களைத் தொட்டு அனுமானிக்கவும் கற்றுக் கொண்டேன். அது உன்னால் தான் சாத்தியமானது. என்னுள் இப்படியான அறிதலை நீதானே நிகழ்த்தினாய். இனி யார் எனக்கு இப்படி எல்லாம் சொல்லித் தருவார்கள்.

2

என் அப்பா தன்னுடைய அக்காவின் மகளையே திருமணம் செய்து கொண்டார். நெருங்கிய சொந்தமாக இருந்ததாலும் மலடிப்பட்டம் எளிதில் கிடைத்து விட்டது. இரண்டு முறை கரு தங்கி ஒன்றிரண்டு மாதங்களில் கலைந்து விட்டது. ஐந்து வருடம் கழித்து அடுத்த குழந்தை பிறந்தது. இரண்டு வருடத்தில் அந்தக் குழந்தையும் இறந்து போனது. அதன் பிறகு மூன்று வருடம் கழித்தே நாங்கள் பிறந்தோம். பவித்ரா பிறந்து இருபது நிமிடம் கழித்து நான் பிறந்தேன். இருபது நிமிடம் இடைவெளியில் பிறந்தவளை அக்காவென்று சொல்லிக் கூப்பிட எனக்கு விருப்பம் இல்லை. மீறி அக்கா என்று கூப்பிட்டாலும் அது சங்கோஜமா இருந்தது எங்களுக்கு. பவித்ரா, பார்கவி என்று எங்களுக்குப் பேர் வைத்தார்கள். பவித்ரா ஐந்து வயது வரையில் பேசவேயில்லை. எதற்கெடுத்தாலும் சைகையிலே செய்வாளாம். எனக்கும் பார்வையில்லை. என் பாட்டி அம்மாவை ஏசுவதை காதுபடக் கேட்டிருக்கிறேன்.

“குறை ஒன்றுமில்லை
மறை மூர்த்திக் கண்ணா
குறை ஒன்றுமில்லை கண்ணா” என்ற பாடலை அம்மா எப்போதும் முணுமுணுத்தபடி இருப்பாள்.

அந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் கண்ணனைத் திட்டித் தீர்க்கவேண்டும் போல் இருக்கும். ஆனால் அம்மாவின் குரல் மனதிற்கு களிம்பாகவே இருக்கும். அவளோடு சேர்ந்து பவித்ராவும் பாடக் கற்றுக் கொண்டாள்.

அம்மாவின் குரல் மங்கியபோது பவித்ராவின் குரல் ஓங்கியது. அவளின் குரல் ஒரு மருந்து.

கசப்பைக் கரைக்கும் இனிப்புத்துண்டு. அவளின் வடிகால் பாட்டுப் பாடுவது தான். தினமும் பாடல்களை பாடிக்காட்டுவது அவளது தினசரிகளில் ஒன்றாகியிருந்தது. புத்தகங்களைப் படிப்பதும் அதில் இருக்கும் கவிதைகளைப் பாடலாகப் பாடுவதுமாக இருப்பாள்.

3

சூரியஓளி கண்ணைக் கூசுகிறது. என்னால் சூரியனை நேருக்குநேர் பார்க்க முடியவில்லை. அதன் ஒளிக்கதிர்கள் என் கண்களைத் திறக்கவிடாமல் தடுக்கிறது. அதையும் மீறிப் பார்த்தால் கண்கள் மிசுமிசுவெனத் தெரிகிறது. சிறிதுநேரம் கண்பார்வைக்கு ஒரு தடுமாற்றம் ஏற்பட்டு விடுகிறது. இப்படி எதுவும் எனக்கில்லை. என் கண்களுக்குக் சூரியனே தெரியவில்லை. என் கண்களுக்குப் புலப்படும் ஆற்றல் அந்த சூரியனுக்கும் இல்லை. ஆனால் அவற்றை உணர முடிகிறது.

சூரியன் உமிழும் ஒளியைக் கொண்டு தான் எல்லாம் நிகழ்கிறது என்று பவித்ரா சொல்வாள். பகலைப் பிரசவிக்கும் ஆற்றல் சூரியனுக்கே இருக்கிறது. சூரியன், வெளிச்சம், ஒளி எல்லாம் வெறும் சொற்கள் தான் எனக்கு. அதை என்னால் உணர முடியவில்லை. ஆனால் ஒளியுடன் வெப்பம் இணைந்திருக்குமா? அல்லது ஒளியும் வெளிச்சமும் சூடானதா?

வெயில் என்னைத் தொடும்போது உடல் சுடுகிறது. என்னைப் பிழிந்து வியர்வை சுரக்கிறது. வெளிச்சம் தரும் லைட்டுகள் சூடாக இருக்கிறது. இது உண்மையானால் வெளிச்சத்தை, சூரிய ஒளியை என்னால் உணர முடியும். அந்தச் சூட்டை நான் அனுபவித்திருக்கிறேன்.

பவித்ராவிடம் இந்தப் பதிலை சொல்ல வேண்டும் அதற்கு முன் எனக்கு இன்னொரு கேள்வியும் எழுகிறது. மழைக்காலங்களில் வெளிச்சம் இல்லாமல் போய்விடுமா? ஏன் அப்போது உடல் குளிரில் நடுங்குகிறதே.

வெளிச்சம் இருந்திருந்தால் சூடாக இருந்திருக்குமே. வெளிச்சத்தின் அளவு அதிகமாக இருந்தால் சூடாகவும் அளவு குறைந்திருந்தால் குளிர்ந்தும் இருக்குமா!

பாலில் சர்க்கரையின் அளவு கூடும்போதும் குறையும்போதும் ஏற்படும் சுவையின் அளவைப்போல இதுவும் இருக்குமோ! அல்லது வெளிச்சம் கோபமாக இருக்கும்போது சூடாகவும் சந்தோஷமாக இருக்கும்போது குளிர்ந்தும் இருக்குமா?

என்னால் முழுவதுமாக இந்த வெளிச்சத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை. புரிந்துகொள்ளாமல் எப்படி அதை நான் அனுபவிப்பது?

இப்படிக் குழப்பமானக் கேள்விகளை எல்லாம் பலமுறை அவளிடம் கேட்டிருக்கிறேன். இருவரும் ஒன்றாகவே வளர்ந்தோம். ஒவ்வொரு படிநிலையிலும் எனக்குத் தோன்றும் கேள்விகளை நான் அவளிடமே கேட்பேன். அவளும் சளைக்காமல் எனக்கு பதில் சொல்வாள்.

அவளா இப்படிச் செய்தாள்? என்னால் நம்ப முடியவில்லை.

4

நானும் அவளும் அன்று ஒன்றாகத்தான் குளித்தோம். எங்களைப் படம் பிடித்தவன் யார்..! அவனால் தானே பவித்ரா இறந்தாள். இல்லை பவித்ராவின் மனப்போராட்டமா!

ஆணைப்போல பெண்ணில்லை. பெண்ணைப் போல ஆணில்லை. ஆனால் இருவரின் உடலும் இரத்தமும் சதையும் தானே. ஒரு பெண்ணின் நிர்வாணத்தை அவன் எப்படி பகிரங்கப்படுத்தலாம்? உடலின் மீது கட்டமைக்கும் கௌரவமும் பெருமையும் ஏன் பெண்ணின் மீது வைக்கப்படுகிறது. பல சம்பவங்களைக் கேட்டிருக்கிறேன். செய்தியாகக் கடந்திருக்கிறேன். ஆனால் பவித்ரா என் உடன்பிறந்தவள். அவளின் இழப்பை என்னால் ஏற்க முடியவில்லை. தொலைதூரத்தில் எங்கோ அலைந்து கொண்டிருக்கிறாள். அவளும் இப்போது புலப்படாமல் சென்றுவிட்டாள். அவளின் நினைப்பும் வாசனையும் குரலும் என் நினைவில் அலையலையாய் எழுந்து ஆக்ரோஷம் கொள்கிறது.

5

பவித்ராவுடன் நானும் தான் குளித்தேன் அவன் என்னையும் தான் படமெடுத்தான்.

அவன் எப்படி இருப்பான் என்று எனக்குத் தெரியாது. அவனது ரத்தம் முழுக்க அழுக்கேறி இருந்திருக்கலாம். மர்மமான அவனுடைய பார்வைக்கு நான் எப்படித் தெரிந்திருப்பேன்?

என் உடலை நானே பார்த்ததில்லை. என் உடல் அருவருப்பாக இருந்திருக்குமோ? கண் குருட்டைப்போல என் உடலும் குருட்டுத்தன்மையில் இருந்திருக்குமோ? அவனை பிடித்துக் கேட்க வேண்டும். அவனைப்போல நானும் அருவருப்பாக இருந்தேனா, குருட்டில் சிக்கிக்கொண்டது நீயா நானா?

***

கு. ஜெயப்பிரகாஷ்

ஆசிரியரின் படைப்புகள் – “சா” குறுநாவல்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular