Thursday, June 13, 2024
Homesliderபுனைவெழுத்து

புனைவெழுத்து

காலத்துகள்

‘காந்தி ரொம்ப மோசமான ஆளுடா, அவருக்கு தான் நெனச்சது மட்டும்தான் நடக்கணும். காங்கிரஸ் தலைவர் எலக்க்ஷன்ல அவர் நிறுத்தின ஆளு தோத்து, நேதாஜி ஜெயிச்சவுடனே கட்சிலேந்து தான் விலகிடறதா சொல்லி பிளாக்மெயில் பண்ணார். உடனே நேதாஜியும் விட்டுக் கொடுத்துட்டார்” என்று சுதந்திரம் அடைந்த பொன் விழா ஆண்டின் ஆகஸ்ட் பதினைந்து காலை என் வீட்டில் ப்ரெடியிடம் கூறிக் கொண்டிருந்தபோது, அறையில் ரஹ்மான் உச்ச ஸ்தாயியில் தாய் மண்ணிற்கு வணக்கம் செலுத்திக் கொண்டிருந்தார்.

எழுதிக் கொண்டிருந்ததை நிறுத்தி, ‘வந்தே மாதரம்’ இசைத்தொகுப்பு அந்த வருடம் எப்போது வெளியானது என்று கூகிளில் தேடினேன். ஆகஸ்ட் பன்னிரெண்டாம் தேதி. மூன்று நாட்களில் கேசட் செங்கல்பட்டிற்கு வருவதற்கோ, அப்படி வந்திருந்தாலும் நான் அதை உடனடியாக வாங்கியிருப்பதற்கோ சாத்தியம் இல்லை. மேலும், நான் குடியிருந்த வீட்டில் எனக்கென்று தனியாக அறை கிடையாது. நண்பர்கள் வந்தால் போர்ஷனின் பின்புறத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்போம். எனவே நான் குறிப்பிட்டுள்ளபடி பாடல் ஒலித்திருக்க சாத்தியம் இல்லை. ஆனால் என் நினைவில் அப்படித்தான் பதிந்துள்ளது. இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்புவரை கூட என் ஞாபக சக்தி மீது எனக்கு அதீத நம்பிக்கையிருந்தது. ஆனால், நடந்த நிகழ்வுகள் என என்னுள் பதிந்துள்ளவை, கடந்து வந்த கணங்கள் என நான் நினைவு கூறுபவற்றைக் குறித்த சந்தேகங்கள் இப்போதெல்லாம் அதிகரித்துக் கொண்டேயிருக்கின்றன. நிஜத்தை அப்படியே புனைவாக்க வேண்டுமென்று என்று நான் கருதவில்லை என்றாலும் – (அப்படியிருந்தால் எதற்கு புனைவு) – இந்தக் கதை நான் செய்த மிக இழிவான காரியத்தைப் பற்றிய வாக்குமூலம் என்பதால் நடந்ததை அப்படியே எழுதவேண்டும் என்பதிலும் அதில் எந்த தவறும் நேரக்கூடாது என்பதிலும் இந்த முறை மட்டும் உறுதியாக இருக்கிறேன். குறைந்த பட்சம் சரிபார்க்கக் கூடிய தகவல்களில் துல்லியமாக இருக்க வேண்டும்.

பாடல் ஒலித்தது குறித்த பிழையை வைத்து நான் விவரிக்கப் போகும் நிஜத்தை சந்தேகிக்க தேவையில்லை. இந்தச் சிறு தவறு அதை எந்த விதத்திலும் பாதிக்காது என்றும், நான் கூறப்போகும் மற்ற விஷயங்கள் முற்றிலும் உண்மை என்றும் உறுதியளிக்கிறேன். உதாரணமாக, காந்தி குறித்து நான் கூறியது நடந்த ஒன்றுதான். நான் அப்போது அவர் மீது மிகுந்த வெறுப்பிலிருந்தேன். காரணம் எதுவுமில்லை, உண்மையில் அவர் எழுதியதையோ, அவரைப் பற்றிய விரிவான விமர்சனங்களையோ கூட அந்த காலகட்டத்தில் நான் படித்திருக்கவில்லை. அவர் ஆதரித்து காங்கிரஸ் தலைவர் தேர்தலில் தோற்றவரின் பெயரைக்கூட அப்போது எனக்குத் தெரியாது. காந்தியைப் பற்றி அவ்வப்போது கேட்க நேர்ந்த விஷயங்களை, படித்த துணுக்குகளை மட்டுமே கொண்டு நான் இது போன்ற கருத்துக்களை உதிர்த்துக் கொண்டிருந்தேன். (சில ஆண்டுகள் கழித்து நான் காந்தியை வாசிக்க ஆரம்பித்ததும், என் எண்ணங்கள் மாறியதும் இன்னொரு வாக்குமூலமாக – அசோகமித்திரனின் காந்தியைப் போல்- வரக்கூடும்)

நான் உளறிக் கொண்டிருந்ததற்கு ப்ரெடி ‘கரெக்ட் டா’ போன்ற அமோதித்தல்களை அளித்துக் கொண்டிருந்தாலும் அவன் சலிப்படைவது எனக்குத் தெரிந்தது. பள்ளிகால நெருங்கிய நண்பர்களின் பிரிவு, சிறிதும் விருப்பமில்லாத பொறியியல் படிப்பு என தனிமையும் மனச்சோர்வுமாக கல்லூரி முதலாமாண்டைக் கடந்தேன். அந்தக் கல்வியாண்டின் இறுதியில் ப்ரெடி சின்ன மணிக்காரத் தெருவிற்கு குடி வந்தான். ஓரே கல்லூரியில் படித்தாலும் அதன் பின்தான் அவனுடன் பழக்கம் ஏற்பட்டது. ஒன்றரை வருடங்களில் தினமும் ஒன்றாகக் கல்லூரிக்குச் சென்று வருவது, விடுமுறை நாட்களில் நடை பயணமாக செங்கல்பட்டை சுற்றுவது என அவனுடன் நட்பு இறுகியிருந்தது. அதை நான் இழக்க விரும்பவில்லை. வசைபாடலை நிறுத்தினேன். ‘வாக் போலாமாடா’ என்றான் ப்ரெடி. நாடார் கடைக்குச் சென்று சோடா குடித்து விட்டு நடக்க ஆரம்பித்த போது ‘நான் சொன்னேனே, என்னாச்சு’ என்றான் ப்ரெடி. ‘வீட்ல கேக்கணும்’,

‘இந்த செமஸ்டரே க்ளோஸ் பண்ணறது தான்டா பெஸ்ட், தள்ளிப் போடாத’

முதல் வருட பொறியியலில் எஞ்சினீரிங் டிராயிங் பாடம் உண்டு. அதில் உபயோகப்படுத்தும் ட்ராஃப்டரைப் பார்த்தாலே பதட்டமாவேன். முதலாண்டு தேர்வில் அந்த பாடத்தில் ஆறு மதிப்பெண். மீண்டும் நான்காம் செமஸ்டரில் அரியர் தேர்வெழுதி பதினொன்று மதிப்பெண்கள் பெற்ற போது, ‘என்னடா உனக்கு கூட அரியர் இருக்கா’ என்று கேட்ட ப்ரெடியிடம் எஞ்சினீரிங் டிராயிங் குறித்து எனக்குள்ள ஒவ்வாமையை விளக்கினேன். அதற்கு சிலநாட்கள் கழித்து ப்ரெடி தனக்குத் தெரிந்தவர் பல்கலைக்கழகத்தில் வேலை செய்கிறார் என்றும் இரண்டாயிரம் ரூபாய் கொடுத்தால் தேர்ச்சி பெற வைத்து விடுவார் என்றும் கூறினான். இப்படிச் செய்து பாஸாக வேண்டுமா, அம்மாவிடம் இது குறித்து எப்படி பேசுவது என்ற தயக்கத்தில் நாட்களை கடத்திக் கொண்டிருந்தேன்.
‘பிப்த் செம் டேட்ஸ் அனௌன்ஸ் பண்ணிட்டாங்கல்ல.. சீக்கிரம் டிஸைட் பண்ணி அரியர் எக்ஸாமுக்கு அப்பளை பண்ணு. அவர் ஏமாத்தலாம் மாட்டார்டா’

‘அதுக்கில்லைடா. இன்னிக்கு பேசிடறேன்’

வீடு திரும்பினேன்.

விடுமுறை நாட்களில் ப்ரெடி காலையிலும் என் வீட்டிற்கு வருவது உண்டென்பதால் என் நினைவிலுள்ளது போல் அன்று காலையில் தான் அவனுடன் உரையாடியிருப்பேன். ஆனால் நாங்கள் வெளியே செல்வது மாலை நான்கு, நாலரை வாக்கில் தான். முன்மதிய நேர வெயிலில், ப்ரெடி அழைத்தது நடந்திருக்கக் கூடிய ஒன்றாக இப்போது எனக்குத் தோன்றவில்லை. தவிர என் போர்ஷனின் பின்புறத்திலேயே இந்த விஷயத்தை அவன் பேசியிருக்கக் கூடும், அவனுக்கு அதில் எந்தச் சங்கடமும் இருந்திருக்கப் போவதில்லை, நான் தான் அசௌகர்யமாக உணர்ந்திருப்பேன்.

மதிய உணவிற்குப் பின் அம்மா படுத்துவிட்டாள். அவளிடம் எப்படி ஆரம்பிக்க? இந்த முறை மட்டும் சுயமாக முயற்சி செய்து பார்ப்போமா, ப்ரெடி மெக்கானிகல் படிப்பதால் அவனிடம் ஈ.டி குறித்து கற்றுக்கொள்ளலாம். பணம் கொடுப்பது கேவலம். புத்தகம் வைக்குமிடத்திலிருந்த ட்ராஃப்டரைப் பார்த்தேன். தேர்ச்சியடைந்து விட்டால் சனியனை தூக்கியெறிந்து விடலாம். அது கண்ணில் படும் போதெல்லாம் அதை எடுத்து யார் தலையையாவது பிளக்க வேண்டுமென்று வெறி கொள்கிறேன். இந்த மனநிலையில் எப்படிப் பாஸாக முடியும். மற்றப் பாடங்களில் ஏமாற்றாமல் தானே தேர்ச்சி அடைகிறேன், இதற்கு மட்டும் பணம் கொடுத்தால் மிகப்பெரிய குற்றமா என்ன?

லாப் அல்லது எக்ஸாம் பீஸ் என்று சொல்லலாம், ஆனால் அதற்கு இரண்டாயிரம் ரூபாய் என்பது மிக அதிகம் என்று அம்மாவிற்கு தெரியும். கல்லூரியில் திடீரென எந்த காரணமுமின்றி கேட்கிறார்கள் என்று கூறிப் பார்க்கலாம். அதற்கும் மறுத்து விட்டால் அதன்பின் உண்மையைச் சொல்ல முடியாது. தன்னுடைய மெடிக்கல் பில்களுக்கான தொகை வந்துள்ளது என்று நேற்று அம்மா கூறினாள், எவ்வளவு என்று சொல்லவில்லை. மணி இரண்டு இருபது. மூன்று மணி வாக்கில் அம்மா எழுந்து விடுவாள். அவளுடைய பர்ஸை ஷெல்பில் வைத்திருப்பாள். அருகே சென்று திரும்பி வந்தமர்ந்தேன். மீண்டும் ஷெல்பை நெருங்கி பர்ஸை எடுத்தவன் வைத்து விட்டேன்.

உண்மையான காரணத்தை கூறினால் ஒப்புக் கொள்வாளா? இரண்டைம்பது. எப்போது வேண்டுமானாலும் விழித்துக் கொள்வாள். இரண்டாயிரம் ரூபாய் இருக்குமா என்று மட்டும் பார்த்துவிட்டு அம்மாவிடம் கேட்டுப் பார்க்கலாம். பர்ஸை எடுத்தேன்.

அந்த மதிய நேரத்தை துல்லியமாக ஞாபகப்படுத்திக் கொள்ள முயன்றேன். நான் எழுதியுள்ளதைப் போல் பணம் கொடுத்து தேர்ச்சி பெற வேண்டுமா என்ற அறச்சிக்கலில் நானிருந்ததாக இப்போது எனக்குத் தோன்றவில்லை . ப்ரெடி தன் யோசனையைச் சொல்வதற்கு முன்பே சுயமாக படித்து பாஸாக பெற முடியாது என்ற முடிவிற்கு வந்துவிட்டேன் என்று நினைக்கிறேன்.

எனக்குத் தேவையான தொகையை மட்டும் எடுத்து மீதியை உள்ளே வைத்தேன். பணத்தை சட்டைப்பையில் வைக்கக் கூடாது பாடப்புத்தகத்தில் வைத்தால், அதை எடுக்கும் போது அம்மா கவனிக்கக் கூடும். அடுத்த ஒன்றரை மணி நேரத்திற்கு பதட்டம், அம்மா பர்ஸை திறக்கக் கூடாது. ப்ரெடி வீட்டிற்கு வந்தவுடன் உடனேயே கிளம்பியவன் .
‘ராமர் கோவிலுக்கு’ போலாண்டா என்றேன். அன்று சென்று மண்டபத்தில் அமர்ந்தோம்.

‘அம்மா கிட்ட கேட்டேன்டா, பணம் தந்துட்டாங்க’

‘எதுவும் சொல்லலையா’

‘இல்லடா. இந்த பேப்பர் எனக்கு டஃப்பா இருக்குன்னேன், அவங்களுக்கும் தெரியும். ஸோ குடுத்துட்டாங்க’

இப்போது நினைவுப்படுத்திப் பார்க்கும் போது நான்தான் ப்ரெடி வீட்டிற்கு சென்றேன் என்பது தெரிகிறது. அவன் வீட்டிற்கு நாலைந்து முறைதான் சென்றிருப்பேன் என்பதால் எப்படி இத்தனை வருடங்களாக தவறாக நினைவில் கொண்டிருந்திருக்கிறேன் என்று புரியவில்லை. மேலும், காந்தியை வசைபாடியது, பின் வீட்டில் திருடியது, அந்த பணத்தை ராமர் கோவிலில் ப்ரெடிக்கு கொடுத்தது, மூன்றையும் இணைத்து, அந்த ஆகஸ்ட் பதினைந்தை, அபத்தமான நாளாக இதுவரை எண்ணிக் கொண்டிருந்தேன். இப்போது யோசித்தால், அவை தனித்தனி நிகழ்வுகள் மட்டுமே என்றும் குறியீடோ, அபத்தமோ எல்லாம் நானாக உருவாக்கியது என்றும், நான் மிகக் கீழ்மையானவாக நடந்து கொண்டது மட்டுமே அன்றைய தினத்தின் உண்மை என்றும் தோன்றுகிறது.

நான் வீட்டிற்கு திரும்பிய போது மளிகைக் கடைக்காரர் உரத்த குரலில் பேசிக் கொண்டிருந்தார். கடையில் வேலை செய்யும் பையன் சாமான்களைக் கொண்டு வருவான், நானோ அம்மாவோ கடைக்குச் சென்று மளிகை பணத்தை தருவோம். எப்போதும் வீட்டிற்கு வந்திராத அவர் இன்று ஏன் என்று எனக்குப் புரியவில்லை.

‘அன்னிக்கு தரேன், இன்னிக்கு தரேன்னு ரெண்டு மாசமாச்சு. பதினஞ்சாம் தேதி கண்டிப்பா தரேன்னு சொன்னதால வெயிட் பண்ணினேன். சாங்காலம் ஆச்சு, வரலை. அதான் நானே வந்தேன். இப்ப திருப்பி பணம் இல்லேன்னு சொல்றீங்க’

‘பில் க்ளியர் ஆயிடும்னு நெனச்சேன்..’ அம்மா மெல்லிய குரலில் கூறினாள்.

‘ஏதோ காரணம் சொல்லிட்டேயிருக்கீங்க, எப்பத்தான் தருவீங்க’

‘அடுத்த வாரம் கண்டிப்பா நானே கடைக்கு வந்து தரேன்’

‘இதேதான், வாங்கும் போது மட்டும்…’ என்ற பின் ஏதோ முணுமுணுத்தபடி கடைக்காரர் சென்றார்.

மளிகைக்கான பணம் என்று தெரிந்திருந்தால் எடுத்திருக்க மாட்டேன். அன்றிரவு சாப்பிடாமல் அம்மா அழுததும், அதனால் அவளுக்கு மூச்சிரைப்பு மிகவும் அதிகமானதும், இரண்டு மணியளவில், தெரு நாய்களின் குரைப்பொலி மட்டும் நிறைந்திருக்கும் தெருவில் அவளை அழைத்துக் கொண்டு, டாக்டர் குமார் வீட்டிற்கு சென்றதும், அவர் ‘அஸ்தலின்’ இன்ஜெக்க்ஷன் போட்டதும் எனக்கு மிகத் துல்லியமாக ஞாபகம் உள்ளது.

ப்ரெடிக்கு தெரிந்தவர் ஏமாற்றவில்லை. நாற்பத்தியாறு மதிப்பெண்கள் பெற்று பாஸானேன். இது நடந்து பதினைந்து இருபது வருடங்களுக்குப் பின் பல்கலைகழகத்தில் பணம் பெற்றுக்கொண்டு தேர்ச்சி பெற வைக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்து அங்கு பணிபுரியும் சிலர் சிக்கியது குறித்த செய்திகளை படித்த போது பீதியடைந்தேன். பல ஆண்டுகளுக்கு முந்தைய விஷயங்களையும் விசாரித்து என்னைப் பிடித்து விடுவார்களோ, வேலை போய்விடுமோ என்ற பயம் நீங்க சில வாரங்கள் ஆனது.

அடுத்த வாரம் அம்மா மளிகை பாக்கியை எப்படி கொடுத்தாள் என்பது எனக்கு நினைவிலில்லை. வெளிப்படையாகக் கேட்காவிட்டாலும் பணத்தை என் அப்பன்தான் திருடியிருப்பான் என்று அவள் உறுதியாக நம்பியிருப்பாள். என்னிடம் ஒருமுறை கூட இது குறித்து அவள் பேசியதில்லை.

முந்தைய பத்தியுடன் இந்த இழி நிகழ்வு குறித்தான என் வாக்குமூலம் முடிந்திருக்க வேண்டும். ஆனால் நான் எழுதியதில் உள்ள சில தர்க்கப்பிழைகள் இப்போது பிடிபடுவதோடு மேலும் சில புதிய நினைவுகளும் குறிக்கிடுகின்றன. எனக்குத் தேவையானதை மட்டும் எடுத்து மீதியை வைத்தேன் என்று எழுதியிருக்கிறேன், இன்றுவரை என்னளவில் அது உண்மையான ஒன்றாகத்தான் இருந்தது. ஆனால் மிச்சமிருந்திருக்க வேண்டிய ஆயிரம் ரூபாயையாவது அம்மா கடைக்காரருக்கு தந்திருக்க முடியுமே, அவரும் அந்தளவிற்கு கோபமாக பேசியிருக்க மாட்டாரே என்ற கேள்வியோடு நான் அங்கீகரிக்க விரும்பாத சந்தேகமொன்றும் முதல் முறையாக எழுகிறது. ஏனென்றால் முந்தையை நாள் மாலை, மெடிக்கல் பில் தொகை மூவாயிரத்தி இருநூறு ரூபாய் வந்துள்ளதையும், மறுநாள் மளிகை பாக்கியை கொடுக்கப் போவதையும் அம்மா என் அப்பனிடம் கூறியதாக இப்போது தான் நினைவு கூர்கிறேன்.

***

காலத்துகள் – தொடர்ந்து நல்ல கதைகளை சொல்வனம், பதாகை ஆகிய இதழ்களில் எழுதி வரும் இவரது முதல் நூல் “இயர் ஜீரோ” நாவலாக வெளிவந்தது. ஆசிரியர் தொடர்புக்கு – ajay.78.r@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular