புத்தநிலையும் சில பட்டாம்பூச்சிகளும்

0

செந்தில்குமார் நடராஜன்

முதலில்
அண்ணன்கள் கைவிட்டார்கள்.
பிறகு
காதலிகள் கைவிட்டார்கள்.
முடிவில்
தம்பி தங்கைகள் கைவிட்டார்கள்.
இத்தோடு நிறுத்திக் கொள்ளவில்லை.
இன்னும் தொடர்ந்தது
கைவிடல் படலம்.
இறுதியாக அவனை
அவனே கைவிட்டான்.
அதற்குப் பிறகுதான்
நிகழ்ந்தது அற்புதம்.

இது கவிஞர் பிரான்சிஸ் கிருபாவின் கவிதை.

கவிஞன் தன்னையே கைவிடும் போதுதான் அற்புதங்கள் நிகழத் துவங்குகின்றன. நான் பெரிதும் நேசிக்கும் பிரான்சிஸ் கிருபாவிற்கும், யூமாவு வாசுகிக்கும், தேவதேவனுக்கும் இப்படித்தான் அற்புதங்கள் நிகழ்ந்ததென நம்புகிறேன்.

“தன்னை அறிந்துகொள்வது எப்படி?” என்று ஆயிரம் ஆயிரம் வருடங்களாகத் தேடியலைந்த நம் முன்னோர்கள், அந்தத் தேடலின் பயனாய் நமக்கு வழங்கிவிட்டு போன பெருங்கொடை, “உன்னைத் தேடு” எனும் சூத்திரத்தை மட்டும்தான். தேடல்தான் மனிதன் கண்டடைந்த மகத்துவமான கண்டுபிடிப்பு. அதன் நல்விளைவே “தன்னையே கைவிடல்” அல்லது “தொலைந்து போதல்” என்பவையெல்லாம்.

கவிஞன் தன் தேடலில் கண்டடையும் அற்புதங்களை வாசகனுக்குக் கடத்த கவிதைகளைத் தேர்ந்தெடுக்கிறான். “தேவதைகள் தூவும் மழை”, “கூடுதலாய் ஒரு நுழைவுச் சீட்டு”, “பஞ்சு மிட்டாய் பூக்கும் மரங்கள்” ஆகிய மூன்று கவிதைத் தொகுப்புகளுக்கு பிறகு, இன்று “குடைக்காளான் துளிர்க்கும் வீடு” எனும் தலைப்பில் தன் தேடல்களைத் தொகுத்து நம் கைகளில் அளித்திருக்கும் யாழிசை மணிவண்ணனுக்கு என் வாழ்த்துகள்.

யாழிசை மணிவண்ணனின் படைப்புலகத்தை அவர் கவிதைகளில் தென்படும் அடிப்படையான சில பண்புகளின் வழியாகப் புரிந்துகொள்ள முடிகிறது.

மென்மையான கவிதை மொழி, சுருங்கச் சொல்லும் செறிவான வடிவம், இயற்கையும் அகமன உணர்வுகளும் இயைந்து வெளிப்படும் களம் மற்றும் தன்னிலை மயங்கித் திரியும் அழகியல் சித்திரங்கள். இவையே யாழிசை மணிவண்ணன் கவிதைகளின் தனித்துவமான அடையாளங்கள். இது அவர் கவிதைகள் குறித்த ஓர் ஒட்டுமொத்தமான பார்வை. அதேவேளை அவருடைய கவிதைப் பயணத்தில் காலப்போக்கில் சில பரிணாம மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. அவற்றை அவருடைய ஒரு தொகுப்பிற்கும் அடுத்த தொகுப்பிற்கும் இடையில் நிகழ்ந்த மாற்றங்களின் அடிப்படையில் பகுத்துப் புரிந்துகொள்ளலாம்.

அவருடைய முதல் தொகுப்பு “தேவதைகள் தூவும் மழை”. “முதல் தொகுப்பு” என்று ஒரு கவிஞனுக்கு வழங்கப்படும் அத்தனை சலுகைகளுக்கும் உட்பட்ட தொகுப்பு. “மனதில் உருவாகும் கவித்துமான தெறிப்புகளை மொழி வடிவில் கொண்டு வருவதற்கான பிரயத்தனங்களின் தொகுப்பு” என்று அந்த தொகுப்பை வகைப்படுத்தலாம்.

யாழிசை மணிவண்ணன் தனக்கான தனித்துவங்களை தன்னுடைய இரண்டாவது தொகுப்பான “கூடுதலாய் ஒரு நுழைவுச் சீட்டு” எனும் தொகுப்பிலிருந்தே தீவிரமாகக் கண்டடையத் துவங்குகிறார். முக்கியமாக அவர் கவிதைகள் மொழியாகவும், அகப்பொருளாகவும் செறிவான ஓர் இடத்தை நோக்கி நகரத்துவங்குவது அவரது இரண்டாவது தொகுப்பிலிருந்தே!

பிறந்த குழந்தைகளின்
மூடிய கைகளுக்குள்
பிடிபட்டிருக்கிறார் கடவுள்

அத்தொகுப்பில்தான் சொற்ப வரிகளில் அழகியல் சித்திரங்களைக் கட்டியெழுப்பும் சூட்சுமம் அவருக்குள் கனிந்துவரத் தொடங்குகிறது. முக்கியமாக கவிதைகளில் தவிர்க்க வேண்டியவை எவை என்பது குறித்த ஒரு தெளிவைக் கண்டடைகிறார். இந்தக் கண்டடைதலின் பெரும்பங்கு கவிஞர் வைகறைக்கும் உண்டு. அவர் யாழிசையின் இரண்டாம் தொகுப்பிற்கு எழுதிய முன்னுரையில் இப்படிக் குறிப்பிடுகிறார்.

“கவிதைத் தொழில் நுட்பங்களையெல்லாம் உதறிவிட்டு உயிர் நுட்பத்தை மட்டும் நம்பி துணிச்சலோடு எழுதப்பட்டதால் நிரப்பப்படாத வெற்றிடங்கள் நோக்கி நகரும் ஜீவனுள்ள காற்றாக அமைந்திருக்கின்றன இவரது கவிதைகள்”
என்னளவில் இப்போது நம்முன் இருக்கும் “யாழிசை மணிவண்ணன்” எனும் அடையாளத்தை, அவருக்கு அவர் இரண்டாவது தொகுப்பே வழங்குகிறது.

தன் படைப்புலகில் இன்னும் இலகுவான, துலக்கமான, கூடுதல் செறிவான ஓர் இடத்தில் அவருடைய மூன்றாவது கவிதைத் தொகுப்பான “பஞ்சுமிட்டாய் பூக்கும் மரங்கள்” தொகுப்பை வைக்கலாம். இப்படியான கவிதைகளை யாழிசை எழுதுவார் என்ற இடத்திலிருந்து இந்த கவிதைகளை யாழிசைதான் எழுதியிருப்பார் என்று இனங்காணக் கூடிய கவிதைகள் அவர் மூன்றாம் தொகுப்பிலேயே உள்ளன. நுட்பமான படிமங்கள், அவற்றில் மென்மையாய் இழையோடும் மானுட உணர்வுகள் என எழுதிய கவிதைகளே அவர் மூன்றாவது தொகுப்பின் அடையாளங்கள்.

புத்தநிலை கூடுதல் தூரம்
திரும்பிச் செல்லுங்கள்
பக்கத்தில்தான் குழந்தை நிலை

*

குறுக்காக வெட்டப்பட்ட ஆப்பிளில்
இரண்டு பட்டாம் பூச்சிகள்
நான் நியூட்டன் இல்லை

*

இப்படியாக கிட்டத்தட்ட அவர் தன் comfort zone-ல் star batsman-ஆக அடித்து விளையாடியுள்ள தொகுப்பு “பஞ்சுமிட்டாய் பூக்கும் மரங்கள்”.

“பஞ்சுமிட்டாய் பூக்கும் மரங்கள்” தொகுப்பின் நீட்சியாகவும், அவர் கவிதை மொழியில் அடைந்திருக்கும் அல்லது அடைய விரும்பும் மாற்றங்களின் தொடக்கமாகவும் “குடைக்காளான்கள் துளிர்க்கும் வீடு” எனும் இந்தத் தொகுப்பை அடையாளப்படுத்தலாம்.

இத்தொகுப்பைப் பற்றிய அவதானங்களில் முதலாவதாக…

‘தன்னிலைகள் மயங்கித் திரியும் அழகியல் சித்திரங்களின் வழியே சாதாரணங்களை, அசாதாரணங்களாக்கி அவற்றை கவிதைக்குள் கொண்டுவரும் தீவிரத்தை தக்கவைத்துக் கொள்ளுதல்’ என்பதைச் சொல்லாம்.

முதல் சோழியை
கணிக்கும் முன்
மறு சோழியை
உருட்டிவிடுகிறது கடல்

என்ற கவிதையில் சஞ்சலங்களில் உழன்று அலைபாயும் வாசகனின் மனம் ஒரு சோழிக்கு முன்னால் ஸ்தம்பித்து நிற்கிறது.

பெருவிரலும் நடுவிரலும்
இணையும்போது பறக்கின்றன
சொடுக்கும் பறவைகள்

இது கவிதையாகும் கணம் எதுவென்று யோசிப்பதற்குள், விரலிடுகிலிருந்து ஒரு சிறு பறவை எழுந்து பறக்கத் தொடங்குகிறது.

இரண்டாவதாக, ‘அழகியல் சித்திரத் தெறிப்பிற்கு வெளியே கூடுதலாய் ஏதோ ஒன்றைக் கண்டடைய விரும்பும் தவிப்பு’ என்பதைச் சொல்லாம்.

இந்தத் தவிப்பே அவர் பயணத்தில் ஒரு சிறு திசைமாற்றத்தை அவருக்கு வழங்கியிருக்கிறது.

என்னளவில் நான் வாசித்த சிறந்த அழகியல் கவிதைகள் எதுவும் அழகியல் காட்சி சித்திரங்கள் என்ற குறுகிய எல்லைக்குள் மட்டுமே நின்று விடுவதில்லை.

சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின் தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது

என்ற பிரமிளின் வரிகளுக்குப் பின்னால் மனம் அலைந்து திரிந்ததுண்டு. சொல்லப்பட்ட வரிகளுக்கு உள்ளேயும் வெளியேயும் பறந்து விரியும் இக்கவிதையில் “மிதக்கும் சிறகு” எனும் சித்திரத் தெறிப்பு கவிதைக்குள் ஒரு பொறியாக இயங்குகிறது. அப்பொறி ஓர் உதிர்ந்த சிறகின் மீது அமர்ந்து நம்மை நம் வாழ்வின் தீராத பக்கங்களுக்குள் அழைத்துச் செல்கிறது. இங்கு பறவை அழ்மனதின் படிமமாகிறது. உதிரும் சிறகு ஒரு குறியீடாகிறது.

இப்படியான ஒரு தேடல் இந்த தொகுப்பிலும் தென்படுகின்றன.

உங்கள் வழிபாடு வீண்.
திருவிழாக் கூட்டத்திலிருந்து
குழந்தை பறக்கவிட்ட
பலூன் மட்டும்தான்
கடவுளை நோக்கிப் போகின்றது – என்று யாழிசை எழுதிப் பார்க்கிறார்.

யாழிசை மணிவண்ணன் இக்கவிதையின் வழியாக ஒரு காட்சியை நம்முன்னே வைப்பதோடு நின்றுவிடவில்லை. இங்கே ஆன்மீகத்தை தேடும் நம் மனதின் போதாமையை பறக்கும் ஒரு பலூனின் மீதேறிக் கலைத்து விளையாடுகிறார்.

எனக்கு இக்கவிதையின் மீது ஒரு சின்ன விமர்சனமும் உண்டு. யாழிசை மணிவண்ணன் தன் கவிதைகளில் வாசகனை நோக்கி தன் விரல்களை நீட்டுவதை பரிசீலிக்கலாம். இந்தக் கவிதையில் உட்பொருளாய் இயங்கும் ஒன்றையே அவர், “உங்கள் வழிபாடு வீண்” என்று விரலை நீட்டிச் சொல்கிறார். மேலும் இப்படிச் அறுதியிட்டு ஒன்றைச் கவிதைக்குள் சொல்வது, அதை வாசிக்கும் வாசகன் தனக்குள் உருவாக்கிக்கொள்ளும் கவிதையின் கதவுகளை அடைத்துவிடுகிறது.

மூன்றாவதாக, “தனது comfort zone-லிருந்து வெளியேற எத்தனிப்பது” என்பதைச் சொல்லாம்.

இங்குதான் கதையாடல், காட்சிகளை தொகுத்தல் மற்றும் அதன் விளைபொருளாய் வாசகனுக்குள் கவிதையின் மைய உணர்வைக் கடத்துதல் போன்ற அம்சங்களோடு நெடுங்கவிதைகளின் பக்கமும் நகர்ந்திருக்கிறார்.

முன்னால் காதலென்பது
விபத்துக்குள்ளானவனின் கைத்தடியைப்போல
நிதானமாக அடியெடுத்து வையுங்கள்
முன்புபோல நடக்க முடியாதென
மனதிற்குள் ஒரு மருத்துவன்
எச்சரித்துக் கொண்டேயிருக்கிறான்.

(பக்கம்: 90)

எனத் தொடங்கும் கவிதை நாம் விரும்பி ஏற்றுக்கொள்ளும் வாதையைப் பற்றிய ஒரு சித்திரத்தை நம்முன் வைக்கிறது. முக்கியமாக ஒரே ஒரு சித்திரத்தை மட்டுமே வைக்கிறது. பத்திக்குப் பத்தி புதிர்த்தன்மையையுடன் கூடிய ஒன்றுக்கு மேற்பட்ட சித்திரங்களைத் திணித்து எழுதப்படும் கவிதைகள் போலல்லாமல் எளிதான வாசிப்பு அனுபவத்தை இக்கவிதை நமக்கு வழங்குகிறது.

வாதை கொண்ட மனதின் தடுமாற்றங்களைப் பேசும் இக்கவிதையை வாசிக்கும்போதே, வாதையைப் பரவசமாய் ஏந்திக்கொள்ளும் பிரான்சிஸ் கிருபாவின் இன்னொரு கவிதை எனக்கு நினைவுக்கு வருகிறது.

சிலிர்க்கச் சிலிர்க்க அலைகளை மறித்து
முத்தம் தரும் போதெல்லாம்
துடிக்கத் துடிக்க ஒரு மீனைப் பிடித்து
அப்பறவைக்குத் தருகிறது
இக்கடல்

மனமெனும் ஒரு பெரிய கேன்வாஸில் வரையப்பட்ட அற்புதமான, மிகவும் எளிய, அதேவேளை தீவிரமான ஒரு சித்திரம் இக்கவிதை. இக்கவிதைக்கு கூடுதலாய் இன்னொரு எழுத்துகூட அவசியமில்லை.

மேலும், கவிதை வரிகளின் எண்ணிக்கையை கவிதையே தீர்மானிக்கிறது. இருப்பினும் இதுவரை பிறைகளையே பிரதானமாய் எழுதிக்கொண்டிருந்த யாழிசை பௌர்ணமிகளை நோக்கி நகர்வதில் மிக்க மகிழ்ச்சி.

இத்தொகுப்பின் மீது எனக்கு வேறுசில விமர்சனங்களும் உண்டு.

கவிஞர் யாழிசை மணிவண்ணனின் படைப்புலகம் தாளமுடியாத அளவிற்கு மென்மையானது. ஆனால் உண்மையில் இவ்வுலகம் அப்படியானதல்ல. அவரது பலமும் பலவீனமும் இந்த மென்மைதான்.

கவிஞர்களின் பொதுவான மனநிலை இப்படி மென்மையாகத்தான் இருக்குமோ என்ற கேள்வி எனக்கும் உண்டு.
கல்யாண்ஜி-யின் ஒரு கவிதை.
சுற்றுச் சுவர்களில்
எதிர்பார்க்கவே இல்லை
அந்தக் கவிஞரின் புதியவீட்டுச்
சுற்றுச் சுவர்களில்
எந்தப் பறவைகளும்
பூனைக்குட்டிகளும்
அமர முடியாதபடி
கண்ணாடிச்சில்லுகள்
பதிக்கப்பட்டிருக்கும் என.

ஒரு கவிஞனின் மனம் இப்படித்தான் இருக்கக்கூடும் என ஒரு எதிர்பார்ப்பு எனக்கும் உண்டு. ஆனால் லௌகீக வாழ்வில் எப்போதும் ஒருவர் மென்மையான மனதோடு இருப்பது சாத்தியம் அற்ற ஒன்றாகவே உள்ளது. மேலும் கவிஞனின் மனம் கூடுவிட்டு கூடு பாய்வது இயல்பு கொண்டது. தன் சமநிலையைக் குலைத்துக்கொள்ளும் தேவை கவிஞனுக்கு உண்டு. சிதைவுவுறாத மனம் வன்மையின் நேர்த்தியை துல்லியமாக எழுதிவிட முடியுமா? இதற்குப் பொருள் கவிஞன் கீழ்மையானவனாகவும் இருக்க வேண்டும் என்பதில்லை. தன் கனிந்த மனநிலையின் சாயல்களை மட்டுமே கவிதைகளின் மீது முற்றிலும் கவிழ்த்து விடாமல் பார்த்துக்கொள்ளும் பொறுப்பும் கவிஞனுடையதே!

“எடைக்கல்லுக்கு நிகராய்
மல்லிகை மொட்டுக்களை நிறுத்தல்
எத்தனை பெரிய வன்மம்.”

என எழுதும் யாழிசை மணிவண்ணனின் இந்த மென்மையான மனமே, அவரின் தீவிரமான சில கவிதை வரிகளின் மீதும் அதீத மென்மையை ஏற்றிவைத்து விடுகிறது.

“பீலிபெய் சாகாடும்…” என வள்ளுவன் சொல்வது இதைத்தான்.

அவர் கவிதைகளில் இழையோடும் மென்மையின் விரல்களைப் பற்றிக்கொண்டு நடப்பதில் எந்தக் குழப்பமும் இல்லை. ஆனால் சில நேரங்களில் அதே மென்மையின் நெஞ்சின் மீது ஏறிதான் அவர் கவிதைகளுக்குள் நுழையவே முடிகிறது.

மேலும் அழகியல்வாதத்துக்கும் மிகையுணர்வுவாதத்துக்கும் இடையே உள்ள மெல்லிய இடைவெளியை யாழிசை மணிவண்ணன் இன்னும் கூடுதல் சிரத்தையுடன் கையாள வேண்டும் என்று நினைக்கிறேன்.

சில கவிதைகள் வெறும் அழகியல் காட்சிச் சித்திரங்களாக மட்டுமே நின்றுவிடுகின்றன. அக்கவிதைகள் நீடித்த ஆயுளின்றி, வாசகனின் அந்த நொடிநேரச் சிலிர்ப்பாக மட்டுமே கடந்துவிடும் அபாயம் கொண்டவை.

துல்லியமான இடத்தில் ஒரு கவிதையைத் தொடங்குவது யாழிசை மணிவண்ணின் பலம் என்றால், துல்லியமாக கவிதையை அவரே முடித்துவைப்பதும் நிகழ்ந்து விடுகிறது. கவிதையின் பலம் வாசகனுக்குள் ஒன்றைத் தொடங்கி வைப்பதுதானே?

மற்றபடி, பசலையின் பாதிப்பு கூடுலாய் இத்தொகுப்பில் அவருக்கு கனிந்து வந்திருக்கிறது.

செந்தூர மாம்பழ நிறத்தில்
அவள் உடை அணிந்திருக்கிறாள்
நான் மாம்பழங்களை
தோலோடு சுவைப்பதில்லை

அநேகமாக, “யாழிசையின் படைப்புலகத்தில் முயங்கித் திளைக்கும் காதலும், காமமும்” என்ற தலைப்பில் சக காதல் கவிஞர் மதிக்குமார் தாயுமானவன் ஓர் ஆய்வுக்கட்டுரை எழுத வாய்ப்பிருக்கிறது.

கடைசியாக ஒரு கவிதை.

“கொஞ்சம் கொஞ்சமாய்
எனக்குள் செயலாற்றுகிறது
கவிதையெனும் நஞ்சு” என்கிறார் யாழிசை.

நீலம் பாரிக்கட்டும் தம்பி!

குடைக்காளான்கள் துளிர்க்கும் வீடு

யாழிசை மணிவண்ணன்

யாவரும் பப்ளிஷர்ஸ்

 

***

செந்தில்குமார் நடராஜன் – சிங்கப்பூரில் வசிக்கும் இவர் தற்பொழுது சிறுகதைகள் எழுதி வருகிறார். கடந்த ஆண்டு சிங்கப்பூர் இலக்கியத் திருவிழாவில் இவர் எழுதிய கதை முதல் பரிசு வென்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here