Monday, December 9, 2024
Homeஇலக்கியம்அபுனைவுபுதுமைப்பித்தன் - கு.அழகிரிசாமி - தி.ஜானகிராமன் சிறுகதைகள்

புதுமைப்பித்தன் – கு.அழகிரிசாமி – தி.ஜானகிராமன் சிறுகதைகள்

சரவணன் மாணிக்கவாசகம்

ழுத்தாளர்கள் என்பதில் மட்டுமல்ல, எதிலுமே ஒப்புமை என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை.  எல்லாமே அதனளவில் தனித்துவம் வாய்ந்தது. அதனாலேயே என்னால் எல்லோரையும் ரசிக்க முடிந்தது. இவர்கள் மூவரையும் முழுமையாகப் படிக்காத, வாசகர்களுக்கு ஒரு புரிதலும் இவர்களைப் படிக்க வேண்டும் என்ற உத்வேகமும் வரக்கூடுமென்றால் இந்தக் கட்டுரையின் நோக்கம் நிறைவேறி விடுகிறது.

தி.ஜா நாவலில் செய்த சாதனையுடன் ஒப்புமை செய்யத்துணியும் அளவு கூட கு.அழகிரிசாமி எந்த நாவலையும் எழுதவில்லை. புதுமைப்பித்தன் நாவலே எழுதவில்லை. சிற்றன்னை நெடுங்கதை. எனவே சிறுகதைகள் மட்டுமே மூவருக்கும் பொதுவானவை.

அடுத்தது எழுதிய காலம். புதுமைப்பித்தன் எழுதியது 1933-லிருந்து 1948 வரை. கு.அழகிரிசாமி 1941-லிருந்து 1970. தி.ஜானகிராமன் 1945-லிருந்து 1982 வரை. புதுமைப்பித்தனின் கடைசிகாலம் சினிமா ஆசையில், காச நோய் பாதிப்பில் கழிந்தது. எனவே அவர் பதினைந்து வருடம் எழுதினார் என்று கூற முடியாது. பத்திரிகைத் தொழிலில் இருந்த பதினொரு வருடங்களே அதிக கதைகள் எழுதிய காலம். மூவரில் தி.ஜா தான் அதிக காலம் கதை எழுதியவர்.

அடுத்த விசயம் மூவரும் எழுதிய களம்,  சூழல் வேறு. புதுமைப்பித்தனுக்கு முன்பு சிறுகதை வடிவமோ, நேர்த்தியோ இருந்ததில்லை. புதுமைப்பித்தன் எழுதும் காலத்தில் எழுதிய கு.அழகிரிசாமியை இந்தப் பையன் நன்றாக எழுதுகிறான் என்று பாராட்டியிருக்கிறார். (புதுமைப்பித்தன் வரலாறு -தொ.மு.சி) கு.அழகிரிசாமி புதுமைப்பித்தனின் மீது பெருமதிப்பு வைத்திருந்தவர். (க.நா.சு கட்டுரைகள், அழகிரிசாமி கடிதங்கள்)

மூவருக்குமே அயல்நாட்டு இலக்கியங்களுடன் பரிச்சயம் இருந்திருக்கிறது. மூவரில் தி.ஜா மிகக்குறைந்த காலமே பத்திரிகை ஆசிரியராக (கணையாழி) இருந்திருக்கிறார். மூவருமே நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார்கள். எனவே பலகாலமாய் பெரும்பான்மையோரால் சொல்லப்பட்ட இவர்களது இருபது சிறந்த கதைகளைப் பேசுவதே நியாயமான மாதிரி அளவாக இருக்கும்.

புதுமைப்பித்தன் 20:

செல்லம்மாள் :

அன்பு மனைவியின் அற்ப தேவைகளைக் கூட பூர்த்திசெய்ய இயலாத கணவர்கள் பிரமநாயகம் பிள்ளையிடம் தங்கள் சாயலைக் காணமுடியும். அவராவது மனைவிக்குப் பிடித்த பச்சைப்புடவையைக் கொடுத்து கட்டியும் விட்டுவிட்டார்! செல்லம்மாளின் கோணத்திலும், பிரமநாயகம் கோணத்திலும் இரண்டு கதையாக மாறும் நம் மண்ணின் கதை. இந்தக்கதை மிகப்பெரிய சாதனை என்று உணரப்படாமலேயே கடக்கப்பட்டது. துயரமே வாழ்க்கையாய் நடத்தும் சாமான்யனின் கதை.

அன்றிரவு :

கலைமகளில் 1946-ல் வந்த கதை. நரிகளைப் பரிகளாக்கும் திருவிளையாடலும் பிட்டுக்கு மண் சுமந்த கதையும் இணைகிறது. புதுமைப்பித்தன் கவிஞரும் கூட என்பதை நினைவுறுத்தும் கதைகளில் ஒன்றிது. துள்ளித்துள்ளிப் பாய்ச்சலாகிப் போகும் கதை. திருவிளையாடல் முடிந்தது. சிவனுக்கு பிரம்படிக்குப்பின் அங்கயற்கண்ணியின் ஆதுரத்தில் வேதனை அவிகிறது. பாண்டியனுக்கு சிவலோகப்பதவி. வாதவூரானுக்கு? நம்பிமோசம் போனவனின் வேதனை.

“வாதவூரனாக ஈசன் வேதனை கொண்டான். அவன் மனம் என்ற சர்வ வியாபகமான காலம் கொள்ளாத சர்வ மனம் நைந்தது. குமுறியது. கொப்புளித்தது. வாதவூரானாகக் கிடந்து வெம்பியது.”

ஒப்பந்தம் :

முழுக்க திருநெல்வேலிப்பிள்ளை வட்டார வழக்கில் அவர்கள் பழக்கங்கள், சம்பிராதயங்களைச் சொல்லிக்கொண்டே சென்று முடிக்கையில் ஒரு பெரிய டிவிஸ்ட். கொஞ்சப்பணத்தை வாங்கிக்கொண்டு சிறிதுநேரம் உடனிருக்கும் விலைமாதுக்கும், அதிகப்பணத்தை வரதட்சணையாக வாங்கிக்கொண்டு உடனிருக்கும் கணவனுக்கும் என்ன வித்தியாசம் என்கிறார்! கதை எழுதப்பட்ட வருடம் 1934.

ஒருநாள் கழிந்தது :

கோரைப்பாயை விரிப்பதற்கு ஒரு பத்தி அமைத்ததில் இருந்தே முருகதாசரின் ஏழ்மை தெரிகிறது. அவர் படும்பாட்டைப் பற்றி சிறு பிரக்ஞையும் இன்றி அவர் மனைவியும், குழந்தையும். குழந்தை அலமு அவள் உலகத்தில் சந்தோஷமாக இருக்கிறாள். நடுத்தர மக்களின் வாழ்க்கைத்தரத்தைச் சொல்வதுடன் முடிவதில்லை இந்தக் கதை. கமலம் சொல்ல வந்ததை முழுங்குவதைக் கவனியுங்கள். எழுத்தாளராக சாகாவரம் பெற்ற கதைகளை எழுதி வறுமையில் வாடுவதற்கு சீலைப்பேன் குத்தப் பணம் கொடுத்தால் அதைச் செய்யலாம் என்று முருகதாசர் வாயிலாக தமிழின் சிறுகதையை முதன்முதலாக உலகத்தரத்திற்குக் கொண்டு வந்த புதுமைப்பித்தன் சொல்வதற்கு நாம் எல்லோருமே வெட்கப்படவேண்டும்.

கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும் :

1943-ல் எழுதிய கதை. காப்பியில் சிக்கரி போல் பார்வதியும் சிவனும் வந்து ஆடினால் கூட கலப்படத்தை மட்டுமே அசல் என ஒப்புக்கொள்வோம் நாம். கடவுளிடம் சந்தா கேட்பது, வைத்திய முறை விளக்கம், வரம் வாங்கியவர் யாரும் உருப்பட்டதில்லை  என்று ஆரம்பம் முதல் முடிவு வரை எள்ளல் கலந்த கதை. ஆட்டம் தெரியாமல் ஆட வரலாமா என்று குழந்தை கடவுளைக் கேட்பது வட்டாட்டத்திற்கு மட்டுமல்லாது மனிதர்களுடன் இருப்பதற்கும் சேர்த்துத்தான்.

கயிற்றரவு :

கால மென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பலநினைவும்

கோலமும் பொய்களோ? அங்குக் குணங்களும் பொய்களோ? – என்ற பாரதியின் தத்துவ விசாரமே இந்தக்கதை. தலைப்பே கவிதை. முழுக்க முழுக்க வித்யாசமான நடையில் எழுதியது. தயிர்காரி வைக்கும் புள்ளி, சற்று தள்ளிப்போய் தேவாரம் படியுங்கள் என்பவற்றில் புதுமைப்பித்தன் எட்டிப் பார்க்கிறார்.

“நான் ஓடினால் காலம் ஓடும். நான் அற்றால் காலம் அற்றுப்போகும். காலம் ஓடுகிறதா? ஞாயிறு-திங்கள்-செவ்வாய்-நான் இருக்கும் வரைதான் காலமும். அது அற்றுப்போனால் காலமும் அற்றுப்போகும். வெறும் கயிற்றரவு!”

கலியாணி :

1935-ல் ஒரு Extramarital affair  கதை எழுத எவ்வளவு துணிச்சல் இருந்திருக்கும். முதலில் அந்த சமூகத்தின் வரைபடம். இரண்டாவது பதினேழு வயதுப்பெண்ணின் விரகதாபம். அடுத்தது விதி அமைத்துக் கொடுக்கும் சந்தர்ப்பம். இத்துடன் முடிவதில்லை. கலியாணி திருமண  உறவை விட்டு விலக விருப்பமின்றி தொடர நினைப்பதும், காதலன் அவளைக் கூட்டிக்கொண்டு ஊரைவிட்டு ஓட நினைப்பதுமே Bone of contention.

காஞ்சனை :

அமானுஷ்யக் கதை. சேமக்கலம் போன்ற திருநெல்லி வார்த்தைகள் புரியாவிட்டால் முழுதும் புரியாது. கதையின் சுவாரசியமே மனைவிக்கு என்ன நடந்தது என்று கடைசி வரை தெரியாததும், அவன் வட்டமிட்டதால் தான் வேலைக்காரி ஓடிவிட்டதாகத் தீர்க்கமாக நம்புவதும்.

காலனும் கிழவியும் :

பேரனா எமனா என்று தெரியாத அளவிற்குக் கண்பார்வை குறைவு இருக்கையில் பாசக்கயிறு கெட்டியாக இருப்பது மட்டும் எப்படித் தெரியும்? Logical Error. ஆனால் புராணம் படிக்காத ஜாதி, எமனுடனான வாக்குவாதம், எமனுக்கு மார்கண்டேயன் விசயத்தில் கோட்டை விட்டது நினைவுக்கு வருவது என்று பலவிசயங்களைத் தொடுகிறது. கயிற்றரவுக்கு நேர் எதிரிடையான தத்துவத்தை இந்தக்கதை பேசுகிறது.

சாபவிமோசனம் :

அகலிகையும் சீதையும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் சந்திப்பது நல்ல கற்பனை மட்டுமல்ல, இவர் சொல்ல நினைப்பதைச் சொல்லவும் உதவுகிறது. ஜனகனும் கோதமனும், அகல்யையும் கைகேயியும் நடத்தும் உரையாடல்கள் புதுமைப்பித்தனின் மொழியின் செறிவு. அகல்யை மனம் வருடக்கணக்கில் அலைபாய்வதும், சாபவிமோசனம் பெற்றும் பாபவிமோசனம் தராத சமூகமும் மாஸ்டரின் கைவண்ணங்கள். சீதை மணம் முடித்த பின் தாய்வீடு குறித்த தகவல்கள் இராமாயணத்தில் இல்லை. கதையில் ஜனகனின் உரையாடல் அந்தக்குறையைப் போக்குகிறது.. கிளைமாக்ஸில் எதிர்பாரா டிவிஸ்ட்.

இத்தனை காரணங்களினால் இன்றும் இது சிறந்த கதை.

துன்பக்கேணி :

1935-ல் வந்த கதை என்றால் நம்புவதே கடினம். சிறுகதை வடிவத்தில் இல்லாத நீள்கதை இது. பணம் போனாலும் பழிவாங்கவேண்டும் என்ற நிலச்சுவான்தார் மனநிலை, தேயிலைத் தோட்டங்களில் கூலிகள் நிலை, வெள்ளைக்காரர்களைக் கவர கங்காணிகளின் வழிமுறைகள், கலப்பு மணம் என்று எந்தவித உணர்வையும் வெளிக்காட்டாத தொனியில் நகரும் கதை.

நாசக்காரக் கும்பல் :

1937-ல் வெளிவந்த கதை. சைவப் பிள்ளைமார் எவ்வளவு ஜாதித் துவேஷம் பார்த்து இருக்கிறார்கள் என்பதை இந்தக் கதையில் சொல்கிறார். மதம் மாறுதல் நடக்கிறது. அடுத்த தலைமுறை முன் தலைமுறையிலிருந்து வித்தியாசமாக நடக்கிறது. அந்தக் காலகட்ட திருநெல்வேலி வாழ்க்கை படம் பிடிக்கப்பட்டுக் காட்டப்படுகிறது.

புதிய கூண்டு :

மதமாற்றம் தான் கதைக்கரு. அதற்கு உபயோகிக்கும் யுத்திகளுடன் ஒரு காதலும் சேர்கிறது. கிருத்துவர்களுக்கிடையே இருக்கும் பிரிவுகளும் பரஸ்பர வெறுப்பும் சொல்லப்படுகின்றது. ஆனால் மதபேதங்கள் தாண்டி பெண்மை எப்படி நடந்து கொள்ளும் எனச் சொல்வதில் இந்தக்கதை உயரத்திற்கு செல்கிறது.

பொன்னகரம் :

கதை நடக்கும் பகுதி குறித்த Landscape விவரணைகள் பின்னர் நடக்கப்போகும் விசயத்தின் முழுப்பாதிப்பையும் வாசகர் உணரச் செய்யும் யுத்தி. பின்னர் ரெய்னீஸ் ஐயர் தெருவில் வண்ணநிலவனும், நிறையக் கதைகளில் சு.வேணுகோபாலும் கடைபிடித்தார்கள். இந்தக் கதையில் பதிசேவை என்ற பாரம்பரிய மரபின் மேல் நவீன கதைசொல்லலைப் புகுத்துகிறார்.

மகா மசானம் :

மகாமசானம் தலைப்பே உருவகம். என் பெயர் போட்டு இந்தக் கதையை இப்போது பிரசுரித்தால் இது 1941-ல் எழுதியது என்பதை இந்தக் கதையை எழுதினார் என்பதை, இந்தக் கதையைப் படிக்காதவரால் கண்டுபிடிக்க முடியாத நவீனமொழிநடை. குருத்தோலை, பழுத்தோலையைப் பார்ப்பது, இளம் பிச்சைக்காரன் எரியும் வீட்டில் பிடுங்கியது ஆதாயம் என நினைப்பது, அப்பா பேரத்தில் ஜெயித்து மாம்பழ மோகத்தைத் தீர்த்துக் கொள்வது என கதை முழுதும் மேஜிக்.

மனித யந்திரம் :

சபலங்கள், மனோரதங்கள் ஒருவனை எப்படி ஆட்டிவிக்கும் என்பதே மனிதயந்திரம். லாஜிக்கலாக எதையும் யோசிக்கும் நிலையில் இல்லை மீனாட்சிசுந்தரம் பிள்ளை. இருந்திருந்தால் அவர் ஏன் நாற்பத்தைந்து வருடம் ஒரே இடத்தில் வேலைபார்க்கப் போகிறார்?

வேதாளம் சொன்ன கதை :

சைவத்தைத் தூக்குவது, பௌத்த சமணத்தைக் குட்டுவது என்று கதை முழுதுமே எள்ளல். வேதாளம் எழுத்தாளன் போல் ராயல்டி கேட்பது போகிற போக்கில் செய்யும் நையாண்டி.

கபாடபுரம் :

இந்தக்கதை முழுக்கவே மேஜிக்கல் ரியலிசம். அம்மன் பெண் போல் தோற்றமளித்து சபலமேற்படுத்துகிறாள் என எழுதிய வருடம் 1945. காலத்தில் பின்னோக்கி பயணம் செய்வதும் நடக்கிறது. அந்தக் காலத்தில் இந்தக்கதை எத்தனை பேருக்குப் புரிந்திருக்கும்!

சிற்பியின் நரகம் :

மனதில் சூல்கொண்டு சிலை வடிப்பதும் பின் கனவில் அதை உடைப்பதற்கும் இடையில் இந்த மகத்தான கவைஞன் தொட்டுச் செல்லும் விசயங்கள் எத்தனை! இன்னொரு கோணத்தில் இவர் கதைகள் எதற்காக வடிக்கப்பட்டதோ அது மக்களிடம் வேறுவிதமாய் போய்ச் சேர்ந்த ஆதங்கத்தின் உருவகமா இந்தக்கதை!

கவந்தனும் காமனும் :

டிராம் ஓடிய சென்னை காலத்திய கதை. சென்னை அதிகம் மாறவில்லை. வேலை எப்படி ஒருவனின் ரத்தத்தை உறிஞ்சிவிடுகிறது என்பதில் இருந்து அசுரப்பாய்ச்சலில் கதை விலகுகிறது.

புதுமைப்பித்தன் நவீன ஆங்கில இலக்கியத்தின் கூறுகளை உள் வாங்கிக் கொண்டு அதை அப்படியே தமிழ் சூழலுக்கு கடத்துகிறார். மேஜிக்கல் ரியலிசம் வெளிநாட்டு சரக்கு என்று எப்படி சொல்ல முடியும்? பாட்டியின் வாய்மொழிக் கதைகளில் மேஜிக்கல் ரியலிசம் இல்லையா. அடுத்து புராணக் கதைகளில் கற்பனை கலந்து அதை நவீன இலக்கியமாக்குவது. பொன்னகரம் அம்முலு, கல்யாணி கதையின் கல்யாணி இருவருமே மணவினைத் தாண்டிய உறவு கொள்கிறார்கள். கற்பு என்ற சமாச்சாரத்தில் நம்பிக்கை இல்லை என்பதைச் சொல்லும் பொன்னகரம் கதையின் கடைசி வரி. அடுத்ததாக உளவியல் ரீதியான கதைகள். கல்யாணிக்கு ஊர்பேச்சும் பயம் ஆனால் உறவும் வேண்டும். சிற்பியின் நரகம் உள்ளிட்ட பல உளவியல் கதைகள். அப்புறம் காஞ்சனை போல Gothic stories. கயிற்றரவு போல தத்துவ விசாரக் கதைகள். மெய்ஞானபுரம், தூத்துக்குடி பாதிப்பில் மதமாற்றத்தை விமர்சனம் செய்யும் கதைகள். நடுத்தரவர்க்கத்தின் போலி மதிப்பீடுகளை கிண்டல் செய்தவர் முதலில் புதுமைப்பித்தன். பின்னர் ஆதவன். செல்லம்மாள் ஒருவகையில் அற்புதமான காதல் கதை. ஆனால் புதுமைப்பித்தன் சொல்லும் விதத்தில் காதல் நிறையப் பேரால் கண்டுபிடிக்க முடியாது போகிறது. சமூகச் சீர்திருத்தக் கருத்துகளை பிரச்சார நெடி துளியும் அடிக்காமல் எழுதிய ஒப்பந்தம் போன்ற கதைகள். சமகால சரித்திரத்தைப் பதிவுசெய்யும் துன்பக்கேணி போன்ற கதைகள் என்று ஒரு முழு பேக்கேஜ் ஆக இருக்கின்றன புதுமைப்பித்தன் கதைகள்.

வாழ்க்கை பற்றிய சொற்சித்திரங்கள், சாளரத்தின் வழியே பார்க்கையில் தெரியும் காட்சித் தீற்றுகள் போல் புதுமைப்பித்தனின் நிறைய கதைகள் அமைந்திருக்கின்றன. சமூகப் பிரச்சனைகளுக்குக் கலைவடிவம் கொடுத்தது தமிழில் முதலில் புதுமைப்பித்தனே. எழுத்தாளன் பிரம்மா போன்ற கற்பிதங்கள் இவரிடம் இல்லை. எல்லா எழுத்தாள கதாபாத்திரங்களும் வறுமையுடன் போராடுகிறார்கள். எதையும் புனிதம் என்று கருதும் மனநிலை இவரிடம் இல்லை. அதனாலேயே இவர் பல கதைகளில் நம்பிக்கை வறட்சித் தத்துவம் இருப்பது போல் தோற்றமளிக்கிறது. எள்ளல், நையாண்டி இவரது எழுத்துக்களில் இயல்பாய் வெளிப்படுகிறது. அவதாரம் போன்ற கதைகளில் ஓரினச்சேர்க்கை பற்றிக் கூறுகிறார். காலத்திற்கு முன் பிறந்த இந்த அற்புதக்கலைஞன் முயற்சிக்காத விசயங்கள் வெகுகுறைவு. கலை இலக்கியத்தில் மட்டுமல்ல. விளையாட்டுத்துறை போன்ற தனிப்பட்ட திறமை வெளிப்படும் எந்தத் துறையாக இருப்பினும், தன்னுடைய ஜீனியஸ் தன்மைக்கு  போட்டியாளர்  கண்ணுக்கெட்டிய தூரம்வரை  இல்லை என்பது கண்டிப்பாகத் தெரிந்திருக்கும். அதுவே புதுமைப்பித்தனுக்கும் தெரிந்திருக்கும். பொருளாதார ஸ்திரத்தன்மையின்றி, குடும்பத்தைப் பிரிந்து, அவர் காலத்தில் தனக்குரிய இடத்தைப் பெறாது, இருந்த சூழ்நிலையில் கலை இவ்வளவு தூரம் ஆலம்விழுதாக வானைத்தொடும் ஆசையுடன் பரவியிருக்கும் என்றால், பொருளாதாரச் சுதந்திரமும், நீண்ட ஆயுளும் கிடைத்திருந்தால் சென்றிருக்கும் தூரம் எவ்வளவாக இருந்திருக்கும்!

கு. அழகிரிசாமி 20

ஓட்டப்பந்தயம் :

நட்பு குறித்த கதை. அரசாங்க வேலை உட்பட ஐந்தாறு வேலையை விட்டுவிலகி நண்பனுடன் செல்வதற்கு என்ன காரணம்? ஹோமோ உறவு இல்லை. அநித்ய வாழ்க்கையைப் பற்றி அழுத்தமாகப் பதிய இதை ஒருவேளை சொல்லி இருக்கலாம்.

ராஜா வந்திருக்கிறார் :

கு.அழகிரிசாமி பெயர் சொன்னதும் எல்லோர் நினைவிலும் வரும் கதை. குழந்தைகள் உலகம் திருத்தமாகப் பதியப்பட்ட கதை. தாயம்மாள் சொல்வது போல் எனக்கு இரண்டு சீலை இருக்கே என்று எத்தனை அம்மாக்கள் சொல்லியிருப்பார்கள்! ஏழ்மையில் இருக்கும் தாய்மை பேதம் பார்ப்பதில்லை என்ற உண்மை அழகாகக் கதையில் வருகிறது. குழந்தைகள் உலகில் பணம் பெரியவர் உலகில் செய்வது போல் முழு பாதகங்களைச் செய்வதில்லை. என்னிடம் அது இருக்கிறது உன்னிடம் இல்லையே என்ற விளையாட்டுக்குப் பயன்படுவதோடு முடிந்து விடுகிறது.

தீபாவளி வசதி படைத்தோருக்கு ஒருவிதமாய், வசதி இல்லாதவருக்கு ஒருவிதமாய் வந்து விடிகிறது. பூரணத்துவம் பெற்று காலத்தை எதிர்த்து நிற்கும் கதை.

அன்பளிப்பு :

அன்பளிப்பு குழந்தைகள் உலகமும் பெரியவர் உலகமும் சந்திக்க முடியாது திணறும் கதை. சிறுவர்கள் உலகத்தில் பெரியவர்களால் பிரவேசிக்க இயல்வதில்லை. அதுபோலவே பெரியவர் உலகம் சிறுவர்களை மூச்சுமுட்டச் செய்யும் வகையில் உள்ளது. அந்தக் கடைசி வரி இந்தக் கதையை உச்சத்திற்கு கொண்டு போய்விட்டது ஆசிரியருக்குத் தெரிந்திருக்கும். அத்துடன் நிறுத்திக் கொண்டார்.

இரண்டு ஆண்கள் :

பெண்கள் முரட்டுத்தனமான ஆண்களை விரும்புவதன் பின்னணியை வைத்து எழுதிய கதை. ஒருவரைப் பார்த்து இன்னொருவர் அதையே பின்பற்றுவதும் எல்லா நேரங்களிலும் உதவுவதில்லை. அறியாத ஒன்றின் மீது ஊர்மக்களுக்கு இருக்கும் மயக்கம் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

பாலம்மாள் கதை :

புஷ்பராகக் கம்மலை வைத்தே கதை நகர்கிறது. மாடசாமி இரண்டாம் தாரம் வேண்டாம் என்பதும், தங்கம்மாள் குணம் மாறுவதும் காலங்காலமாய் வாய்வழியில் சொல்லப்பட்ட கதை தான். தங்கம்மாளின் பேத்திக்குக் கல்யாணம் முடிந்த பிறகு அவளுடைய அக்கா பாலம்மாள் மருமகளை எதிர்பார்த்துக் காத்திருப்பாளா?

பெரியமனுஷி :

எனக்குப் பிடித்த இவர் கதைகளில் ஒன்று. பதியம் போட்ட செடி போல் புது இடத்தில் பெண்கள் தங்களை இருத்திக் கொள்ளுதல் எப்போதும் ஆச்சரியமே. ஐந்து ஆறு வயது மூத்த ஒருவனைக் குழந்தை போல் நடத்துவதும் பெண்களாலேயே முடியும்.

திரிவேணி :

திரிவேணியும் இராமாயணத்தை ஒட்டிய கற்பனைக்கதை. தியாகையரைப் பார்க்க தம்பதி சமேதராய் வருகிறான் இராமன். சாபவிமோசனத்திற்கு நேர் எதிரிடையான கதையிது. அது இராமனை பலமாக விமர்சிக்கிறது. இது இராமனைப் பூஜிக்கிறது. இராமனுடன் சீதை மற்றும் ஊர்மக்களும் கொண்டாட்ட மனநிலையில்.

அழகம்மாள் :

அழகிரிசாமி கோட்டைத் தாண்டாத கதைகளே எழுதியதால் இக்கதையின் உளவியல் பலருக்குப் புரிவதில்லை. அழகம்மாள் தியாகம் செய்வதாக ஒப்புக்கொண்ட வாழ்க்கை, மகனின் படிப்பு, ஊரில் மதிப்பு எல்லாவற்றையும் பார்க்கையில் தான் ஏமாந்து விட்டதாகத் தோன்றுகிறது. மகனைக் கணவனுடன் ஒப்பிட்டு கோபம் கொள்கிறாள். இன்னும் ஒருபடி மேலே போய் தன்னை அலங்காரம் செய்து கொள்கிறாள். இந்தக்கதையைப் படிக்கையில் எல்லாம் கு.அ தான் எழுதிய கதையின் சிலவரிகளை பிரசுரத்திற்கு முன் எடுத்துவிட்டார் என்று எனக்குத் தோன்றும்.

சிரிக்கவில்லை :

மீண்டும் ஒரு உளவியல் கதை. பாப்பம்மாளின் கள்ளங்கபடமில்லாத உலகுக்குள் போவது ஒன்றும் சிரமமில்லை. குழந்தையைப் பார்த்து ராஜாராமன் இனி தனக்கில்லை என்ற பாப்பம்மாவின் முடிவில் தான் கதை அழகு பெறுகிறது. சாதாரண கதைகள் இலக்கியமாவது இதுபோன்ற மின்னல் கீற்றுக்களினால் தான்.

தம்பி ராமையா :

தம்பி ராமையா கல்கி, அகிலன் பாணிக்கதை. மனதில் ஆயிரம் துக்கம் இருந்தாலும் வெளிக்காட்டாத அண்ணன், மனக்கோட்டை கட்டும் குடும்பம், சுயநலம் பிடித்தவன் என ஒதுங்கும் தம்பி. தியாகச்சுடர் கொழுந்து விட்டு எரியும் கதை.

சுயரூபம் :

இவரது சிறந்த கதைகளில் ஒன்று. மாடசாமித்தேவருக்கும், முருகேசப் பிள்ளைக்குமான உரையாடல் இந்தக் கதையில் வெகுசிறப்பாக வந்திருக்கும். மாடசாமித் தேவர் மீது வரும் பரிதாபத்தைத் தாண்டி, அவர் குலப்பெருமையைக் காப்பாற்றியதாக சமாதானம் கொள்ளும் இடத்தில் சிரிப்பு வருவதைத் தடுக்க முடியாது.

இரண்டு சகோதரர்கள் :

கு.அழகிரிசாமி தன் வட்டத்தைத் தாண்டி வெளியே வந்த அபூர்வமான தருணங்களில் ஒன்று இந்தக் கதை. உடலே கடைசியில் வெல்லும் என்ற உளவியலை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட கதை. சாரதா ஒரு மறக்க முடியாத கதாபாத்திரம். ராமகிருஷ்ணனும் தான். இவரது சிறந்த சிறுகதைகளைச் சொல்கையில் இதைக் குறிப்பிடுபவர் குறைவு.

தெய்வம் பிறந்தது :

குழந்தைகள் வரும் கதையில் எல்லாம் கு.அழகிரிசாமி புதிய பலம் கொண்டு விடுவார். ராமசாமி ஐயர் குழந்தைக்கு தான் நல்லது சொல்லி வளர்ப்பதாக நினைக்கையில், குழந்தை நல்லத்தனம் என்றால் என்ன என்று அவருக்குச் சொல்லிக் கொடுக்கிறான்.

பேதைமை :

1960-ல் எழுதப்பட்ட கதை. அதிர்ச்சி மதிப்பிற்காக எழுதப்படும் கதைகள் உண்டு. இயல்பாக எழுதப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தும் கதைகளும் உண்டு. இந்தக் கதை பிந்தைய வகை. சிறுவர்களின் குரூரமான விளையாட்டிற்கு இன்னொரு முகம் இருக்கிறது என்பது கடைசிவரை தெரியாது. உதவிசெய்ய நினைப்பவன் தன் ஸ்டேட்டஸை மற்றவர் குறைத்து மதிப்பிடக்கூடாது, உதவி செய்து சிக்கலில் மாட்டிக் கொள்ளக்கூடாது என்பது போன்ற இடங்கள் இந்தக் கதையில் கூடுதல் போனஸ்.

குமாரபுரம் ஸ்டேஷன் :

கதையின் இறுதியில் டிவிஸ்ட் என்ற ஓ ஹென்றியின் பாணியை பல கதைகளில் கடைபிடித்தவர் கு. அழகிரிசாமி. ஆனால் இந்தக் கதையின் முடிவு இப்போது உள்ள வாசகர்கள் எல்லோருமே எளிதாக யூகிக்கும் முடிவு. யோசித்துப் பார்த்தால் ஆள்வராத ரயில் நிலையமும் அதனை ஒட்டிய ஊரும் கூடப் பள்ளிக்கூடம் தான்.

முருங்கை மர மோகினி :

எடுத்து வைத்தும் கொடுத்து வைக்காத கதை. நல்லவர் சபலப்படுவதுடன் நின்று விட்டால் பரவாயில்லை, இல்லை அவர்களுக்கு அவர்களே தண்டனை கொடுத்துக்கொள்ள வேண்டியது தான்.

ஞாபகார்த்தம் :

ஆழமில்லாத கதை. காதலைச் சொல்லத் தயங்குவதும், அதற்கு முன்னரே எதிர்தரப்பு சமிக்ஞைகளைப் பரிமாறியிருப்பதும் அச்சுப் புத்தகம் வருவதற்கு முந்தைய காலத்துக்கதை.

தரிசனம் :

ஜனரஞ்சகமான பதிவிரதைக்கு இன்னல் வரும் போன்ற கதைகளில் லாஜிக் பார்ப்பது தவறு. மழைக்காலத்தில் இரவு பதினோரு மணிக்கு மேல் குருவி வெளியில் வந்தால் அல்லவா அதற்கு சாப்பாடு ஊட்டிவிட!

காற்று :

மீண்டும் சென்டிமெண்டை நம்பி எழுதப்பட்ட கதை. கற்பகம் ஓரறை வீட்டில் இருந்து வெளியில் செல்லத் (திண்ணை) துடிப்பதும், பள்ளிச் செல்லத் தொடங்கியதும் சுதந்திரக்காற்றைச் சுவாசிப்பதுமான கதை. கதையின் முடிவில் வழக்கப்படி எதிர்பாரா திருப்பம்.

தியாகம் :

நாய் வேஷம் போட்டால் குரைத்துத்தானே ஆக வேண்டும் போல செட்டியாரின் நடத்தை.  தன்னுடைய கடையில் எல்லாமே தன்னைச்சுற்றி நடக்க வேண்டும் என்ற மனப்பான்மை இன்றும் இருக்கிறது.

*

கு.அழகிரிசாமியின் கதைகள் எளிய மனிதர்களின் எளிய கதைகள். எந்தச் சிக்கலுமின்றி நேர்க்கோட்டில் செல்பவை. பெரும்பாலும் ஒரு கதைக்கருவை உளவியல் நோக்கில் சொல்வதான கதைகள். ஓ.ஹென்றியின் பாணியான கதையின் முடிவில் கொடுக்கும் டிவிஸ்ட்டில் இவருக்கு நம்பிக்கை இருந்திருக்கிறது. மாக்ஸிம் கார்க்கியின் இரண்டு நூல்களை இவர் மொழிபெயர்த்ததால் அவரைப் பின்பற்றிக் கதைகள் எழுதினார் என்று சொல்பவர்களும் உண்டு. கார்க்கி அரசியல் விமர்சனமாய் பல கதைகள் எழுதினார். அவருடைய பாணி மற்ற சோவியத் எழுத்தாளர்களிடமிருந்தும் மாறுபட்டது. மாறாக கு.அழகிரிசாமியின் கதைகள் இவருடைய பார்த்த அனுபவங்களை மண்ணின் மணத்துடன் எழுதியவை. அழகம்மாள் கதையின் கோனார் மற்றும் அழகம்மாள் இவருடைய பெற்றோர் என்று கி.ரா ஒரு பேட்டியில் சொன்னது நினைவுக்கு வருகிறது. குழந்தைகள் உலகத்தை தத்ரூபமாகக் கொண்டு வந்தவர் இவர். ஆனால் குழந்தைகள் உலகத்தை ஆகச்சிறப்பாகக் கொண்டு வந்தவர் என்றால் கிருஷ்ணன் நம்பியையே நான் சொல்வேன். இவர் எழுதிய காலகட்டத்தில் பல நல்ல கதைகளை இலக்கிய நயத்துடன் எழுதியவர் இவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

தி.ஜானகிராமன் 20

தீர்மானம் :

இந்தக்கதைக்கு எந்த விமர்சனமும் நியாயம் செய்ய முடியாது. சிறுகச்சிறுகச் விசாலி என்னும் சிறு பெண்ணைத் தொடர்கிறோம். விசாலி கழுத்தில் இருக்கும் திருமாங்கல்யத்தைக் கடித்துக்கொண்டு சோழி விளையாடுகிறாள். அத்தையிடம் புக்ககம் போகாமல் எவ்வளவு நாள் விளையாடுவாய் எனத் திட்டு வாங்குகிறாள். கூட்டிச்செல்லப் புக்கக மனுஷாள் வந்ததும் முன்னால் வர வெட்கப்படுகிறாள். கல்யாணத்தில் அவள் அப்பாவிற்கும் புக்கக மனுஷாளுக்கும் பிரச்சினை. எதற்காக வந்திருக்கிறார்கள் இப்போது? இரண்டு நிமிடங்களில் பத்துவயதுப் பெண் பெரிய மனுஷியாகி நிற்கிறாள். அத்துடன் கதை முடியவில்லை.

வெறுப்பு மாறாததும், உடைந்த கண்ணாடியாய் உறவு ஆனதும், தந்தையின் ஆசீர்வாதமுமாய் கதை முடிகிறது. “உலகத்தாயைக் கண்ட மோனத்தில் அந்த உள்ளங்கள் ஒடுங்கிக் கிடந்தன”. இதில் வரும் அப்பா, அத்தை, ராதா, ராதாம்மா, பெரிய மாமனார் என்று தெளிவான கதாபாத்திரங்களுடன் பதினோரு பக்கத்தில் என்ன ஒரு அழகிய சித்திரம்! குழந்தை மணத்தை எதிர்க்க நூறு பிரச்சாரங்கள் தேவையில்லை இந்த ஒரு கதை போதும். ஆனால் இது குழந்தை மணத்தைப் பற்றியே பேசவில்லை. உறவுகளுக்குள் சிக்கல்களையும், அதே உறவுகளுக்குள் இருக்கும் நெகிழ்வையும் பேசுகிறது. தமிழில் இதுவரை வந்த தலைசிறந்த கதைகளில் ஒன்று.

கங்கா ஸ்நானம் :

ஒரு துரோகம் தான் கதைக்கரு. சின்னசாமி காசிக்குப் போனாலும் கருமம் தொலையாமல் துன்பமிக உழன்று தவிக்கையில், அவர் மனைவி (அவர் பெயர் கூட கதையில் இல்லை) எவ்வளவு எளிதாகக் கடந்ததை மறந்து கடவுள் நாமத்தைச் சொல்கிறார். கடைசியில் கணவருக்குச் சொல்லும் அறிவுரையைப் பாருங்கள். தி.ஜா புல்லைக்கிள்ளிப் பெண் என்று சொன்னால் கூட சௌந்தர்யம் குறையாது வெட்கச்சிவப்பு சிவக்குமோ!

சிலிர்ப்பு :

முதன்முதலில் இந்தக் கதையை படிக்கையில் நான் பள்ளி மாணவன். இந்தக் கதையை உள்வாங்கும் Bandwidth இல்லாது நிம்மதி இழந்தேன்.

இந்தக் கதையின் உரையாடல்களில் கலந்திருந்த தங்க ஜரிகைகளை என்னால் அப்போது அடையாளம் கண்டுகொள்ள இயலவில்லை. காமாட்சி என்னும் பத்துவயது சிறுமி படிப்பவர் மனதைவிட்டு நீங்காமல் ஒட்டிக் கொள்வாள். வசதி படைத்தவர் ஏன் துளி மனிதாபிமானம் இல்லாது நடந்து கொள்கிறார்கள்? இந்தக் கதையின் கருவும் அழகிரிசாமியின் தெய்வம் பிறந்தது கதைக்கருவும் ஒன்றே. இது 1953. தெய்வம் பிறந்தது 1960. அடுத்தடுத்து படிப்பது ஒரு ரசானுபவம்.

சண்பகப்பூ :

1948-ல் வந்த கதை இது. அப்போதே சொல்கிறார் நெற்றியில் குங்குமம் வைத்துக் கொள்வது கர்நாடகம் என்று. பதினெட்டு வயது பேரழகுப்பெண் விதவையாவதில் தொடங்கும் கதை இப்படி முடியும் என 2020-ல் கூட யாரும் நினைக்க முடியாது. பூடகமான வரிகள், உரையாடல்கள் தி.ஜாவிடமிருந்தே ஆரம்பிக்கிறது. இந்தக் கதையே பூடகமான கதை தான். மீறல்கள் இவரிடம் நல்இலக்கியம் ஆவது மொழிநடையிலா, வாசகரைத் தயார் செய்வதிலா, பெண்ணின் சௌந்தர்யத்தில் தன்னை மறந்து நம்மையும் மறக்க செய்வதிலா, அல்லது நேசமே எல்லாவற்றையும் விட பெரிது எனும் கதை சொல்லலிலா!

தவம் :

“அப்புறம் உயிர் வாழணும்னு என்ன முடை? உசிரே இல்லாம இருந்திட்டா?”

பேரழகிக்காகவே பத்து வருடங்கள், கடின உழைப்பு, சிக்கன வாழ்க்கை. அவளை நினைக்காத நாளில்லை. ஒரே வரத்திற்காக விடாத தவம். அவள் நினைவில் இவன் எப்போதுமாக இருக்கப் போகிறான் என்பது இவனுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

“காலமே கும்பகோணத்துக்கு வண்டி இருக்கு” என்பதன் முழு அர்த்தம்  1952-ல் புரிந்திருக்குமா!

பரதேசி வந்தான் :

அநித்யமானது வாழ்வு மட்டுமல்ல அந்தஸ்து, பதவி, பணம் எல்லாமும் தான். பஞ்சாமி என்பவர் கதைசொல்லி. ஆரம்பத்தில் இருந்தே அண்ணாவை வஞ்சப்புகழ்ச்சி செய்து வருவார். புராணக்கதைகளில் வரும் கதாபாத்திரம் போல் பரதேசி ஆனால் கதை முழுதுமே நவீன கதைசொல்லல்..

பாயசம் :

பொறாமை வன்மமாய் உருவாகும் கதை. முக்கால்வாசி நனவோடை யுத்தியில் நகரும் கதை நடப்புக்கு வருகையில் வன்மம் வெடிக்கிறது. வாலாம்பாளின் மறுவடிவாய் நார்மடி மழித்த தலையுடன் பெண். அவளுக்குத் தெரிந்து விட்டது என்பது தான் சாமகேதுவின் ஆத்திரமே! வாலாம்பாளை நினைவுகூறும் உரையாடல்கள் சாமகேதுவின் கதாபாத்திரத்தை நமக்கு விளக்கும் ஒரு முன்னோட்டம். தி.ஜா-வின் மிகச்சிறந்த கதைகளில் ஒன்று இது.

இசைப்பயிற்சி :

மாஸ்டரின் கைவண்ணத்தில் மற்றுமொரு சிறுகதை. மல்லி வாழ்க்கையில் தோற்றதை ஒப்புக்கொள்ள முடியாது தனக்குத்தானே உயர்வாக நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். அவரது சங்கீதத்தைச் சிலாகித்துப் பேச கிராமத்தில் ஆளில்லை. குப்பாண்டி அவருக்குக் கிடைத்த ஒரு ஆயுதம். அடுத்தடுத்த விசாரிப்புகள் இவர் எடுத்த முடிவை மறுபரிசீலனை செய்ய வைக்கின்றது. மனைவியிடம் ஆறுதல் தேடினால் அதுவும் கிடைக்கவில்லை. வேண்டாம் என்றால் இன்னும் ஊரார் மத்தியில் அவமானம். கடைசியில் மச்சில் அரிசியும் குறையக்கூடாது மக்கள் முகமும் வாடக்கூடாது என்பது போல் ஒரு முடிவு எடுக்கிறார். ஊரில் கேட்கும் கேள்விகள், அதே அக்கிரஹாரத்துக் கிண்டல்கள், காலம் மாறியும் மாறாத நம்பிக்கைகள். எல்லாவற்றையும் விட மல்லியின் பாசாங்கு பிடித்த மனம். புதுமைப்பித்தனின் சைவப்பிள்ளைகள் மீதான கிண்டலுக்கு சற்றும் குறைந்ததல்ல தி.ஜா-வின் கிண்டல்.

விளையாட்டு பொம்மை :

விளையாட்டு பொம்மை ஒரு மகா புத்திசாலிக்கு Alzheimer வந்ததைச் சொல்லிக் கொண்டே போய் சடக்கென்று ஒரு காதல் கதையாய் மாறுகிறது.

மாப்பிள்ளைத் தோழன் :

ஒருநாள் நிகழ்வின் காட்சி விவரிப்பே இந்தக்கதை. முழுக்க மாப்பிள்ளைத் தோழனின் கோணத்தில் சொல்லப்பட்ட கதை. எப்போதும் சந்தோஷமாக இருப்பது சாத்தியமா? நூறு இருக்கும் இடத்தில் பத்து இல்லை ஒன்று இருந்தால்!? மினிமலிசம் தியரி என்று இன்று பேசுகிறோமே, அதுதானே இது.

சாப்பாடு போட்டு நாற்பது ரூபாய் :

சில கதைகள் எத்தனை வருடமானாலும் மறக்க முடியாது அமைந்து விடும். எதுவோ ஒன்று நினைவில் வர தி.ஜா-வின் கதைகளை எடுத்துப் படித்து ஆனந்தப்பட்ட தருணங்கள் எத்தனையோ. ஆனால் சில. இவரது சில கதைகள் நிம்மதியைக் குலைத்துவிடும் என்று பயந்து கொண்டு அந்தப் பக்கமே போகாமல் இருப்பதும் உண்டு. அதில் ஒன்று இது. அக்கணாக்குட்டி போன்ற பிள்ளைகள் பிறக்காமல்/பெறாமல் இருந்தால் நல்லது. கதைக்குள் கதையாய் அண்ணாவையன் கதை.

கோபுர விளக்கு :

1954-ல் கலைமகளில் வந்த கதை. புதுமைப்பித்தனின் பொன்னகரத்திற்கும் இந்தக் கதைக்கும் ஒரு தொடர்பு உண்டு. வறுமை, பசி, மருந்து வாங்க என்று உடலை விற்பதை இருவரும் நியாயப்படுத்தி இருப்பார்கள். அந்த ஊரின் பாசாங்குத்தனத்தையும் வெளிப்படுத்தும் கதை. கதைசொல்லியும் அவர் மனைவியும் நடத்தும் உரையாடலை கவனமாகப் படிக்க வேண்டும்.

பாஷாங்க ராகம் :

ஒரு கடிதம் தான் கதை. மகள் எழுதிய கடிதத்திற்கு தாயின் பின்குறிப்பும் சேர்ந்த கடிதம். ராகத்திற்கு ரக்தி கொடுக்க வரும் அந்நியஸ்வரம் பாஷாங்கராகம். பாஷாங்கராகம் தான் கதையும்.

அட்சராப்பியாசம் :

இது ஒரு வித்தியாசமான கதை. சம்பந்தமில்லாதது போல் பதுங்கியிருக்கும் ஒரு தகவல் கதையின் மர்மமுடிச்சை அவிழ்க்கும் பாணியை அப்போதே கையாண்டிருப்பார் தி.ஜா.

சிவப்பு ரிக்க்ஷா :

1954-லேயே வெளியில் செல்லும் பெண்களுக்கு நிம்மதி இல்லை, இடிராஜாக்கள் இருந்திருக்கிறார்கள், காரும் பணமும் இருந்தால் எல்லாப் பெண்களும் பின்னால் வந்து விடுவார்கள் என்று சுற்றியிருக்கிறார்கள்.  துடிப்பான ருக்குவும் கூட ஒதுங்கிப் போக நினைக்கிறாள். இன்று கூட நிலைமை அதேதான்.

செய்தி :

எல்லாக் கலைகளுமே உண்மையான ஒரே ஒரு ரசிகனைத் தேடிப் போய்க்கொண்டே இருக்கும். இலக்கியப்பிரதி தன்னை அப்படியே உள்வாங்குபவனிடம் முழுவதும் திறந்து காட்டும். பணம், பெயர், புகழ் இவற்றிற்காக கலையை ஜனரஞ்சகமாக்குவதை விட ஆத்ம திருப்திக்காக சமரசம் செய்யாமல் இருப்பதை உயர்ந்தது என்பதே செய்தி.

கள்ளி :

நடுத்தர வர்க்கத்திற்கு என்று ஒரு மனநிலை இருக்கிறது. நியாயம், அநியாயம், புண்ணியம், பச்சாதாபம் என்று பல மதிப்பீடுகளை இறுக்கமாகப் பற்றிக்கொண்டு வாழ்க்கை நடத்தும். வசதி படைத்தவருக்கு இருக்கும் இரக்கமற்ற தன்மையை எவ்வளவு முயன்றாலும் நடுத்தர வர்க்க மனநிலையால் அதைக் கடைபிடிக்க முடிவதில்லை.

தேடல் :

மூன்று தேடல் இந்தக் கதையில். முதலில் ராமரத்னம் மனைவியின் தேடல். அவள் அடைந்ததென்ன, தேடியது கிடைத்ததா என்பது நமக்குத் தெரியாது. இந்தக் கதையில் அவள் ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை. இரண்டாவது ராமரத்தினத்தின் தேடல். மகளைத் தேடிய அவனுக்கு மகளுடன் கிடைத்தது டாரதி. மூன்றாவது டாரதியின் தேடல்.

கண்டாமணி :

பாவிகள் மீதும் ஆண்டவன் காட்டும் பாசத்தின் ஓசை மணி ஓசை என்பது சினிமாப்பாடல். இந்தக் கதையில் அப்படியே நேர் எதிர்பதமாக ஒரு மணிஓசை.

வேண்டாம் பூசணி :

முதல்முறை படித்தபோது கதறி இருக்கிறேன். நிதர்சமான கதை. அவரவர் குடும்பத்தைப் பார்ப்பதே சிரமம் என்றாகும் போது வயதானவர்களின் நிலைமை கேள்விக்குரியாகிறது. யார் கவனிக்க ஆளில்லாமல் நாதியற்று இருக்கிறார்களோ அவர்களின் ஆயுள் அநியாயத்திற்கு நீள்வது இயற்கை விதி. மூத்த பையன் அறுபதுக்கு ஆசீர்வாதம் வாங்குவது மரியாதைக்கு இல்லை, அவன் ஆயுசு நீடிக்க. பாட்டி கொடுத்து வைத்தவள் தான். யார் பிரிய மகனோ அவன் வீட்டுக்குப் போய்விட்டாள்.

***

தி.ஜாவின் சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்திருக்கிறேனா என்பது தெரியவில்லை. கடலலை ஒன்றின் மேல் ஒன்று படிந்து வருவது போல், நினைவலையில் இவர் கதைகள் ஒன்றின் மேல் ஒன்றாய் படிகின்றன.

துரோகம், பாலியல் மீறல்கள் தான் தி.ஜா கதைகள் என்று யாரேனும் சொன்னால் வேண்டாம் பூசணி, சாப்பாடு போட்டு நாற்பது ரூபாய் போன்ற கதைகள் நினைவுக்கு வருகின்றன. சிலிர்ப்பு போன்ற கதைகளில் வரும் குழந்தைகளைப் போல் குழந்தைகள் உலகம் சிருஷ்டித்தல் இவருக்கு பிரத்தியேகமானது. புதுமைப்பித்தனைப் போலவே பார்க்கும் காட்சிகளை விவரிப்பது, ஒரு  சம்பவத்தைச் சொல்வது போல் பல கதைகள் எழுதியிருக்கிறார்.

அழகுணர்ச்சி அதிகம் நிறைந்த கதைகள் தி.ஜா-வினுடையது. தவம் கதையில் சொர்ணாம்பா பணம் இல்லாமல் அவனுடன் ஓரிரவைக் கழிக்கிறேன் என்பாள். கதையில் காலமே கும்பகோணத்திற்கு வண்டி இருக்கு என்று மட்டும் வரும். சண்பகப்பூவில் அவளது நாணமே கணவனின் தமையனுடன் அவள் கொள்ளப்போகும் வாழ்க்கைக்கு விளக்கம். இதுபோல் பூடகமான உரையாடல்கள், வரிகளில் நிரம்பியவை தி.ஜாவின் கதைகள்.

கதை வெகு சீரியஸாகப் போய்க் கொண்டிருக்கையில் கவனத்தை முற்றிலும் திசைதிருப்பும் படி இவரது மொழிநடை :

“சேப்பு ஒரு அழகு சூடு ஒரு ருசி”

“மீனாட்சி லட்சணம் தான். சமையற்கார முத்து பெண்டாட்டி என்று யார் சொல்ல முடியும்? நூத்தம்பது வேலி பண்ணைவீட்டு எஜமானி எண்ணெய் ஸ்நானத்திற்காக நகைநட்டுக்களை கழற்றி வைத்தால் போல் இருக்கும்”.

“பெண்ணாப் பிறந்தவர்களின் ஆயுசில் பாதி குனிந்து நிமிர்வதிலேயே போய்விடுகிறது.”

தி.ஜாவின் நாவல்களைப் படிக்கையில் இவர் நாவல்கள் மட்டுமே எழுதியிருக்கலாம் என்றும், சிறுகதைகள் படிக்கையில் சிறுகதைகள் மட்டும் எழுதியிருக்கலாம் இன்னும் எண்ணிக்கை அதிகமாகக் கிடைத்திருக்கும் என்று எனக்குத் தோன்றியதைப் போல், வேறு எந்த எழுத்தாளரைப் படிக்கையிலும் தோன்றியதில்லை.

புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, தி.ஜானகிராமனின் மொத்தக் கதைகளையும் இருமுறைக்கு மேல் படித்திருக்கிறேன். ஒவ்வொருவரையும் படிக்கையில் அவர்கள் தனியம்சத்தை ரசித்திருக்கிறேன். தரவரிசையில் இவர்களை நிறுத்த வேண்டும் என்று எப்போதுமே எனக்கு சிந்தனை வந்ததில்லை. ஒப்புமைப்படுத்தியே ஆக வேண்டும் என்று துடிப்பவர்கள் இவர்களது அதிகம் குறிப்பிடப்படாத, வெளியில் தெரியாத பத்து கதைகளை எடுத்துப் பார்த்தால் தெரிந்துவிடப் போகிறது.

*

சரவணன் மாணிக்கவாசகம்

RELATED ARTICLES

2 COMMENTS

  1. அருமையான ஒப்புமை.. சிறப்பான உணர்வு ஏற்படுகிறது. இன்னும் இவர்களின் படைப்புகளை படிக்கத் தூண்டுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular