Sunday, February 25, 2024
Homesliderபுதுமைப்பித்தனுக்கு மனிதாபிமானம் அவசியமில்லை !

புதுமைப்பித்தனுக்கு மனிதாபிமானம் அவசியமில்லை !

மணி எம் கே மணி

சமீபத்தில் நண்பர் கோகுல் பிரசாத் தமிழினிக்காக ஒரு கட்டுரை கேட்டார்.

அதற்காக தால்ஸ்தாயின் போரும் வாழ்வும் முழுமையாகப் படித்து கட்டுரை எழுதிக் கொண்டிருந்த போது ஒன்று மனதில் பட்டது. அவர் நீதிபோதனையின் ஆள் என்பது போல நிறுத்தி புனிதத்தைக் கொண்டாடுகிற இடத்திற்கெல்லாம் அவரைக் சிலர் கொண்டு வந்தார்கள். இந்த ஊர்வலம் எதற்கு என்றே பிடிபடவில்லை. இத்தனைக்கும் ஜெமோ உள்ளிட்ட பலரும் அவரைப் பற்றி இடைவிடாமல் பேசியிருந்தும் அவருக்கு எதற்கு இந்த குல்லாவைப் போடுகிறார்கள் என்கிற அதிர்ச்சி. அவர் எழுதாத வன்முறை கிடையாது. அவர் எழுதாத ஒழுங்கீனம் கிடையாது. அப்புறம் என்ன? சார், இப்ப டிரெண்டு மனிதாபிமானம் சார். டால்ஸ்டாய் எழுதினார், இல்லையா? அது ! அவர் எங்கே இவைகளை எழுதினார்?

அதாவது, மனிதர்களிடம் மனிதாபிமானத்தைக் கண்டடைடைவதில் கலை இப்போது ஈடுபட்டிருக்கிறது. குணதோஷம் உள்ளவர்களைக் கைவிடுவதிலும் தான். அப்படியாக புதிய ஒரு சாதியைக் கட்டுமானம் செய்து கண்ணீர் பெருக்கிக் கொண்டிருப்பதில், மற்றொரு பக்கம் இருக்கிற ஒரு கூட்டம் மக்களை ஒழித்துக் கட்டி விடுவதைப் பற்றின குற்றவுணர்ச்சி இப்போதைக்கு மேலேழும்புவதாக இல்லை. பதிலாக, இதன் எதிர்விளைவாக அறவுணர்வுகளைக் கைவிடுவதில் பலருக்கும் இறுமாப்பை, பெருமிதத்தை வளர்க்க வழி வெட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். கருத்து சொல்ல வந்து விடக்கூடிய அத்தனை பயல்களும் தாங்கள் ஏறி நின்று கொள்ள ஒரு மேடையைக் கண்டிபிடித்து விடுகிறார்கள். டிரெண்டில் இருக்கிற ஒரு அநீதியை தேடிக் கண்டடைந்து அதற்கு எதிரான கோஷத்தை மனப்பாட செய்யுள் போல வீசிக் கொண்டிருந்து அவன் தன்னை மனிதருள் மாணிக்கம் என்று கருதிக் கொள்ள முடிவது எப்படி சாத்தியமாகிறது என்று பார்த்தால், சாரங்களை விலக்கி விட்டு சில சூத்திரங்களை எடுத்துக் கொள்வதுதான் என்பது பிடிபடும். அதுமட்டுமல்ல, கவனித்துப் பார்த்தால் உலகு, உபதேசிகளின் வன்முறை களமாகிக் கொண்டிருக்கிறது. அவர்கள் தான் இந்த மண்ணின் அற்புதமான கலைஞர்களை எல்லாம் தலையில் கொட்டி உட்கார வைக்க திட்டம் வகுத்தவாறே இருக்கிறார்கள்.

அவ்வப்போது இளையராஜா போன்றவரைக் கூட அவர்கள் ஒழுக்கத்தின் மூத்திர சந்துக்கு வரியா வரியா என்று அழைத்துக் கொண்டிருந்ததைப் பார்த்தோம். புதுமைப்பித்தனைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன்.

நண்பனின் சடலத்துக்கு அருகே இருந்து கொண்டு அவனுடைய மனைவியை மானசீகமாக சம்போகம் செய்து முடித்து விட்டவனைப் பற்றி புதுமைப்பித்தனுக்கு என்ன திருப்தி என்பதாக யோசிப்பதில் அவரை வெறுப்பவர்களைப் பார்த்திருக்கிறேன். பால்வண்ணம் பிள்ளை நையாண்டி செய்யப்பட்டிருக்கிறார். சுப்பையாப் பிள்ளையின் காதல்களை எல்லாம் ஒரு கதையாக அனுபவம் பெறுவதில் நகைச்சுவை கண்டு எழுதி இருக்கிறார்கள். இப்படி எழுத ஒன்றும் தோன்றாமல் எதை எதையோ நுணுக்கிக் கொண்டு எழுதியிருந்திருக்கிறார் அவர். பத்து பேராக வட்டம் போட்டுக் கொண்டு உட்கார்ந்து கொண்டு கட்டு உடைத்த கோபாலையங்காரின் மனைவி யாரோ ஒரு இடைச்சிப் பெண்ணின் வாழ்வை சிறுமை செய்கிற நோக்கம் கொண்டது தானா? இதெல்லாம் யாருக்கும் பதில் சொல்லிக் கொண்டிருக்கக் கூடியவை அல்ல. வாழ்வை பரிசீலனை செய்வதற்காக தான் நான் கலையை நாடுகிறேன் என்கிற எந்த மனிதனும் சுயமாக அடையத் தக்க ஒரு உண்மை தான் அது. மடமையும், சோர்வும் உண்டாக்கக்கூடிய பொறுப்பின்மை, கிளிப்பேச்சு பேசுகிறவர்களிடம் அடைக்கலம் கொள்ள செய்வதனால், தன்னை சூழ்கிற இழிவை மறுத்துக்கொள்ள கூட்டத்தின் கேள்விகளை பொறுக்கிக் கொண்டு அவர்கள் கல்லெறிகிறார்கள்.

அவர்கள் உங்களை விளக்கம் சொல்ல விட மாட்டார்கள். சொன்னாலும் கேட்க மாட்டார்கள். அவர்களுக்கு அவர்கள் நடக்கிற சந்து முனையில் நீதி கிடைத்து விட வேண்டும். ஒரு அலசல், ஒரு முனைப்பு, ஒரு போராட்டம் எதுவுமே இல்லாமல் உலகு இவர்கள் ஆசைப்படுகிற இடத்தில் நின்று கொண்டு ஒரு படை வீரன் போல சல்யுட் அடிக்க வேண்டும். அப்புறம் என்ன, வாயில் நுழையக் கூடிய வாழைப்பழ சைசுக்கு இவர்கள் கூவித்திரிந்து குத்தாட்டம் போடும்போது மேலும் மேலும் கூச்சல் எழுப்ப போலிகள் வந்து கூடுகின்றனர்.

இங்கே வாழ்வு அவ்வளவு சுலபம் அல்ல. அது கோடி வலைப் பின்னல்கள் கொண்டு, அடித்துப் பிடுங்கித் தின்று வயிறு வளர்ப்பதை சகஜமாக்கிக் கொண்டிருப்பது. பசித்த வயிறுகளை அவமானப்படுத்துவதில் அது எந்தக் காலத்திலேனும் பின் வாங்கியிருக்கிறதா? ஒரு போதும் தன்னில் நிறைவு கொள்ளாத கோடி மனிதர்கள் தங்களுடைய பதட்டத்தினால் தன்னையறியாமல் சமூகத்தின் மீது நிகழ்த்துகிற களியாட்டங்களினால் யாருக்கு என்ன என்பதையே முடிவு செய்ய முடியாது எனும்போது, அதை முன்னிறுத்தி எவ்வளவு முன்முடிவுகள், தீர்மானங்கள், ஒதுக்கி வைத்தல், மற்றும் தண்டனைகள்? அதைப் போலவே நிறைவேறாத கோடி கனவுகள் வக்கிரம் முறுக, எல்லாவற்றையும் கரைக்கு தள்ளுகிற அலைகளின் மனதை எங்கேனும் தொகுத்து வைத்திருப்போமா?

புபி, தான் அடைந்த உணமைகளின் களிப்பில் சன்னதம் கொண்டு ஆடுகிறார். அவருக்கு உலகு மீது ஏளனமுண்டு. அவரைக் கரித்துக் கொட்டுகிறவர்களில் இருந்து, தூக்கி வைத்துக் கொண்டாடினவர்கள் வரை வரும் எண்ணிக்கையில் அவருடைய மனம் சென்றிருக்காது. அதன் அர்த்தம் என்னவென்றால் அவர் இடைவிடாமல் செய்யக் கூடிய வேலைகள் இருந்தன. ஒன்றை முடிக்கும்போது வேறு ஒன்று அவரை அலைகழித்திருக்கும். ஒருமுறை விழி மூடித் திறப்பதற்குள் மனிதர்கள் தங்களை மிருகங்களாக மாற்றும் தருணங்களை அல்லது கடவுளாக ஒளிர்ந்து விடுவதைக் கூட பார்த்திருப்பவரின் மனம் என்ன? எழுதித் தீர்த்தவாறிருந்தார். திருமண வாழ்க்கை அது பாட்டுக்கு இருக்கட்டும், நாம் ஆனந்தமாக இருப்போம் என்று கல்யாணிகளால் சொல்ல முடியும் என்பது ஒரு அப்பட்டமான உண்மை, ஆனால் அதை சொல்லி விட்டோமே என்பதால் ஒரு கல்யாணி குளத்தில் மிதக்கிறாள். பொன்னகரத்தின் மாண்பைக் காக்காமல் அம்மாளு தனது வாடிக்கையாளனுடன் இருட்டில் மறைகிறாள், செல்லம்மாள் வீடு பேறடைகிறாள், அகல்யா மீண்டும் கல்லாகிறாள். ருக்மணிக்கு சித்த பிரமை வருகிறது.

இது எவற்றிற்குமே அந்தப் பெண்கள் பொறுப்பில்லை என்று சொல்ல வந்த உண்மையில் தான் அவருடைய கலை இருக்கிறது. பாரதியார் லட்சியக் கனவுகளில் பித்து பிடித்து நடந்தவர். அவர் உணர்ச்சிவசப்பட்ட வாழ்வைக் கொண்டு செல்ல மனிதனுக்கு தகுதியில்லை என்கிறார் புபி. ஆரம்ப கோலாகலங்களுக்கு அப்புறம் நீர்த்துப் போகிற லட்சியங்கள் அப்புறமாக வெறுமனே பொழுது போக்குகிறது என்பது நாமறியாத சம்பவமில்லை. ஏன் அய்யங்காரின் மனைவி இடைச்சி குடிக்கக் கூடாதா, கவுச்சி சாப்பிடக் கூடாதா? புருஷனையும் துணைக்கு சேர்த்துக் கொண்டு ஏ பாப்பான் என்று கூப்பிடத்தான் கூடாதா?

அவரை இருண்மை எழுதுகிறவர் என்றார்கள். தீமைகளைத் தேடி, தேடி அதன் மீது வெளிச்சம் பாய்ச்சுகிறார் என்றார்கள். எதுவாக இருக்கட்டும். வாழும் காலத்தில் நெருப்பை எடுத்து ஒளித்துக் கொண்டவாறு இருந்து, வெளியே நிலவின பதட்டத்தை தணித்தவாறு இருக்கிற அசட்டுத்தனத்தை அவர் கைகொண்டதில்லை. ஒரு நல்ல கலைஞன் அதை செய்ய மாட்டான். இதெல்லாம் இங்கே நிலவக் கூடியது தானே, அதை எதற்கு திரும்ப, திரும்ப சொல்லியவாறு இருக்க வேண்டும் என்று கேட்பவர் உண்டு.நண்பனின் மனைவியோ, அந்த உடலுறவோ அவருக்கு தேவையில்லை.

மனித உறவுகளில் இருக்கிற இரட்டை நிலையை பேசி, பேசி அவைகளைப் பற்றி பரிசீலிக்க வேண்டியிருக்கிறது. சுப்பையா பிள்ளை யார், நமது கண்ணிய உலகின் பிரஜை. அத்தனை சட்ட திட்டங்களுக்கும் தலையை ஆட்டக் கூடியவர். நல்லவன் என்கிற பெயரை எடுக்க உயிர் கரைப்பவர். ஆனால் அவருக்குள்ளே சற்று சோம்பலாக எரிந்து கொண்டிருக்கிற அந்த வெடிகுண்டு எங்கே வெடிக்குமோ, அல்லது எங்கே அணையுமோ யாருக்கு தெரியும்? வருத்தப்பட்டு பாரம் சுமந்து அலைகிற அந்த ஆத்மாவுடன் வாழத் தலைப்பட்டவரின் நிலைமை தான் என்ன? பிள்ளைகள் படிக்கிற பார்ட்ஸ் ஆப் தி பாடியில் ஆண்குறியும், பெண்குறியும் இல்லை என்பதால் அவைகளை வெட்டி எறிந்து விட முடியுமா என்பது போல தான் வாழ்க்கையில் ஒரு எழவும் இல்லை என்று முடித்துக் கொள்வது.

நல்லவை, தீயவை என்பதெல்லாம் பல பகுதிகளின் சிறு சிறு அடையாளம். அந்த பாகுபாடுகளை எல்லாம் கடக்காதவன் முறைப்படி எழுதக்கூடாது, அப்படி எழுதுவதன் மூலம் குழப்பங்கள் உண்டாக்கக் கூடாது என்று சொல்ல வேண்டும். ஆனால் வாழ்வே சடை பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறது. இதில் யாருக்கு யார் எதைத்தான் சொல்ல? ஆயின் எல்லாம் கடந்து வருகிறவன் எழுதுவது அவன் மனிதம் மீது கொண்டிருக்கிற மாண்பு என்று தான் சொல்ல வேண்டும். எல்லா நெருக்கடிகளுக்கும் அப்பால் நிற்கிற மனிதனின் மனதை சென்று அடைய அவனால் முடியும். உதாரணமாக ஒன்று, வாதாவூரானை, அவனது மனதை, அவனது வேதனையை புபி எழுதியது போல யாரால் எழுதி விட முடியும் ? மேலும் ஒன்று, கடவுளை வெறும் சந்தாதாரராக்கி தனது மனித சுபாவத்தில் இருந்து நிலை தடுமாறாமல் தன் பாட்டிற்கு குடும்பம் பார்க்கிற கந்தசாமிப் பிள்ளையை யாரால் வடித்து எடுத்து விட முடியும்? பைக்கார்ஸ் கொள்ளுகிற வெறி சரியா, கும்பிட்டுப் போகிற நிழல்கள் சரியா, சாத்தனின் துக்கம் சரியா? இவைகள் மூன்றையும் அடுக்கி சொல்லி விட்டு தன் பாட்டிற்குப் போகிற கலைஞனை நம்மால் எவ்வளவு தூரம் அறிய முடிகிறது?

புதுமைப்பித்தன் சிறுகச்சிறுகப் படிக்கப்பட்டார். ஒரு நேரத்தில் பேஷனாகக் கூட இருந்தார். அவரே தன்னுடைய காரணங்களுக்கு பல கோணங்களில் விளக்கம் கொடுத்து தலையில் அடித்துக் கொண்டிருந்ததை பார்த்திருக்கிறோம். தொ மு சி யும், க நா சுவும், சுந்தர ராமசாமியும் அவரைப் பற்றின எவ்வளவோ சித்திரங்களை நிலை நாட்டியிருக்கிறார்கள். வெகுஜன வெறுமைக்கு பாட்டி கதை சொல்லிக் கொண்டிருந்த கல்கி போன்ற ஆட்களோடு சண்டைப் போட்டுக் கொண்டிருக்க வேண்டியிருந்ததில் கூட நாம் அவரை அடைய முடியும். இவைகளினால் அல்லாமல் அவருடைய ஆக்கங்களின் வழியே அவரை அடைவது உண்டல்லவா, அதுதான் அசல் தரிசனம். சொற்களை அவர் பல நேரமும் என்னவோ மாணிக்கக் கற்களைப் போல கையாண்டிருப்பார்.

நான்மாடக் கூடலில் அன்று மூவர் உறங்கவில்லை என்று துவங்குவதாகட்டும், இதுதான் ஐயா பொன்னகரம் என்று முடிப்பதாகட்டும், அதில் இருக்கிற கம்பீரம் சொல்லி முடியாது. இதெல்லாம் யாருக்கும் வந்து விடக் கூடியது தானே என்பது போலிருந்தால் முன்னால் பின்னால் அவர் சொற்களை அடுக்கியிருக்கிற தொழினுட்பத்தினால் கிடைக்கிற பரவசத்தை யாராலும் கொடுக்க முடியாது. அநேகமாக தமிழில் கவிதைகள் செய்ய வந்தவர்கள் கூட இதை அறிந்திருந்து, தாங்களும் அதை செய்து பார்த்தார்கள் என்பதற்கு உதாரணம் கிடையாது. பாரதி சொற்களுடன் பதுக்கியும், வீசியும் விளையாடிப் பார்த்தது போல, பின்னால் பிரமிள் செய்து காட்டியதைப் போல புதுமைபித்தன் தனது படைப்புகள் அத்தனைக்கும் இவ்விளையாட்டை செய்து பார்த்திருக்கிறார். சிறுகதைகள் பற்றி எல்லாம் சொல்லவே தேவையில்லை, அவருடைய கவிதையில், நாடகத்தில், விமர்சனங்களில், பகுதியே எழுதின நாவலில், திரைக்கதையில் அந்தக் கற்கள் எதிர்பாராத திருப்பங்களில் ஜொலிப்பதைப் பார்க்க முடியும்.

அவருடையப் படைப்புகளில் ஈடுபடுவது என்பதே ஒரு சாகசப் பயணம் தான் என்பதை நான் பல முறையும் பேசி, எழுதி இருந்திருக்கிறேன். அதன் அர்த்தம் நமது பயணத்தில் அவைகளின் வியப்பை சந்தித்தவாறு இருப்போம். இவ்வளவு சொன்ன புபியின் மொழி ஆளுமை என்பதே கூட அவர் தனது படைப்பின் இன்றியமையாமை உணர்ந்து, அது ஒரு துளியும் சிந்தி விடக்கூடாது என்று தன்னுடைய படைப்புகளைக் காப்பாற்றிக் கொண்ட முயற்சியே தான். பரிசோதனைகள் எல்லாமே கூட அவருடைய கதை சென்று சேர்வது எப்படியென்பதைப் பொறுத்திருக்கும்.

எனவே மனிதாபிமானம் வளர்க்க விரும்புபவர்கள் தெருக்களில் காத்திருந்து முதியோரை , கண் பார்வையற்றோரை சாலை கடக்க உதவி செய்யலாம். கறுப்பு, சிவப்பு, வெள்ளை, பச்சை, மஞ்சள், காவி, ரோஸ் உடையணிந்து போராட்டம் பண்ணி கூச்சலிட்டு முடிக்கலாம். ஏதாவது ngo-க்களில் இணைந்து நோயாளிகளை பராமரிக்கலாம். நான் கட்டுரையை முடிக்கும் வண்ணமாக எழுத்தாளர்கள் கலையை, மற்றும் வாழ்க்கையை எழுதிப் பார்க்க முயலலாம் என்று கூறி அமைகிறேன், நன்றி.

***

மணி எம்.கே.மணி திரைத்துறையில் பணியாற்றிவரும் இவரது மீசையில் கறுப்பெழுதும் தினங்களின் காஸ்மிக் நடனம் எனும் சிறுகதைத்தொகுப்பு, வேறுசிலஆட்கள், எழும்சிறுபொறி – திரைப்படங்கள் குறித்த கட்டுரைத்தொகுப்பும் அண்மையில் மதுரவிசாரம் எனும் நாவலும் வெளியாகி நல்ல கவனம் பெற்றது. – தொடர்புக்கு – [email protected]

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular