Monday, October 14, 2024
Homeபழைய பதிவுகள்புதுத்துணி

புதுத்துணி

புதுத்துணி

                                       -ரமேஷ் ரக்சன்

heavy-anklet

“நீ என்ன மாறி சின்ன புள்ளயா இருக்கும்போது, உங்க அம்மா இப்டிலாம் வாங்கி குடுத்த்தாங்களா?… நீ எப்போ இருந்தும்மா சேல கட்டுற?!.. நான் எப்போம்மா கட்டணும்?..”

அவளுக்கு ஏதெனும் தேவை வந்துவிட்டால் உடனே அம்மாவின் பால்ய வாழ்க்கை பற்றி கேட்கத் துவங்கிவிடுவாள். அம்மாவுக்கு இது நன்றாக தெரிந்திருந்தும், எப்போதும்போல கதை சொல்லி தூங்க வைத்து விடலாமென்றெண்ணி இம்முறையும் தோற்றுப் போனாள்.

“சொல்லும்மா…?”

“இந்தமாரி நீயும் சின்னபுள்ளயா இருக்கச்ச, என் துணிய வச்சிருக்கிற மாதிரி, உனக்கும் எதும் பெட்டி வச்சிருந்தியா..?”

எப்படியும் மகள் தூங்க அனுமதிக்கமாட்டாளென நன்றாகவே தெரியும். அந்த நேரத்தில் வாய்க்கு வந்த பொய்களையும், தற்சமயத்திற்கு கோர்வையாய் வந்தவைகளையும் விறுவிறுப்பாய் ஒரு கதை வடிவில் சொல்லிக் கொண்டிருந்தாள் அம்மா. கதை கேட்க கேட்க கண் விழுந்ததே அன்றி மூடியபாடில்லை மகளுக்கு.

“அவ்ளோ தாம்மா அப்பறம் நான் பெரிய மனுஷியாகி வளந்துட்டேன்” என, அம்மா கதையை முடிக்கவும் மகள் பேசத் துவங்கினாள்.

“அப்படின்னா நான் ஒண்ணு கேக்கட்டா?..”

“ம்…”

மகள் கேட்கும் மின்னல் வேகக் கேள்வியை விட, நுணுக்கமாய் அம்மா யோசிக்கத் துவங்கியிருந்தாள், தான் சொல்லி முடித்திருந்த கதையை. அதற்குள் கேள்வியை கேட்டுவிட்டாள் மகள்.

“நம்ம நேத்து சாய்ங்காலம் ஒரு தெரு வழியா வந்தம்ல?… ”

“ம்..”

“அந்த ஸ்கூல்ல இருந்து வந்த பொண்ணுங்கல்லாம் போட்டுட்டு வந்த துணி நல்லா இருந்ததும்மா… எனக்கும் அத மாதிரி வாங்கி தர்றியா?..”

“போனவருசம் வாங்கி தந்தத விட இது நல்லாருக்கும்மா… அடுத்த வருஷமும் இதயே வச்சிக்றேன்… நெஜமா வேற கேக்க மாட்டேன்… வாங்கி தாம்மா?!” – இறைஞ்சினாள்.

யூனிஃபார்ம் வாங்கிக்கொடு என கேட்பது மூன்றாவது வருடம். எப்போதும் இல்லாமல் முதன்முறையாக எதிர்த்தும் பேசிவிட்டாள். எதிர்த்து பேசிவிட்டாள் என்பதைவிட, வாங்கி கொடுக்க முடியவில்லையே என்கிற இயலாமை மேலோங்கியிருந்தது அம்மாவுக்கு.

மகளின் கேள்விகள் எதையும் காதில் வாங்காதவளாய் யோசிக்கத் துவங்கியிருந்தாள். மேலும், அவளின் பால்ய வாழ்வும் அவளுக்கு எட்டின அறிவும் பல்வேறு கேள்விகளை எழுப்பிக் கொண்டேயிருந்தது. அதிலொன்று-

துணிக்கடைக்குள் எப்படி செல்வது என்பது தான் அது!

எப்போதுமே மகள் கேட்காமலே, தோது வரும் போதெல்லாம் மகளுக்கென துணியோ மற்றதோ, அப்போதைக்கு கையில் புழங்கும் காசுக்குத் தக்கவாறு மகளுக்கு செய்துவிடுவது அவளின் வழக்கம்.

புது ஊர். நிறைய மக்கள் புழங்குமிடம். நவநாகரீக ஆடைகள், நிறம் வேறுபட்ட மனிதர்கள், மற்றும் புரியாத மொழிகள் எல்லாம் சேர்ந்து அவளை இப்படி யோசிக்க வைத்துக் கொண்டிருந்தது.

எப்படி இந்தத்துணியை வாங்கலாம் என்றிருந்தவள், எப்படி வாங்க வேண்டுமென ஒரு முடிவுக்கு வந்தவளாய், சரி வாங்கித்தரேன் என்று பதிலளித்தவளுக்கு, புதிதாய் ஒரு குழப்பம் மூலையிலிருந்து எழும்பி மடியிலமர்ந்து கொண்டது. யூனிஃபார்ம் ரெடிமேடாகவே கடையில் கிடைக்கும் என்பதெல்லாம் அவளுக்குத் தெரியாது.

அதற்கொரு டெய்லர் பார்க்க வேண்டும், மகளை அளவெடுக்க வேண்டும் அதற்கெனவும் பணம் வேண்டும். இப்படியாக கேள்விகள் பிய்த்தெடுக்க, எதையோ புரிந்து கொண்டவளாய் மகள் பேசத் துவங்கினாள்.

“நீ இன்னைக்கு கயித்துமேல தட்டுவச்சி, அதுல கால்மடக்கி நடக்குறது எப்டின்னு சொல்லித் தாம்மா… நீ சொல்ற மாதிரியே செய்றேன்… அதுல எப்படியும் நெறய்ய துட்டு போடுவாங்கள்ல?.. அதுக்கு அப்பறமா துணி வாங்கிக்கலாம்..” என்று அம்மாவின் சோகம் பரவிய முகத்தினை தேற்றத் துவங்கினாள் மகள்.

தொழிலுக்கு தாயும் மகளுமாய் கிளம்பிவிட,  துணிக்கடைகளில் விதவிதமான பள்ளிச்சீருடைகள், ஹார்ன் சத்தங்களென கடந்து கொண்டிருந்தனர்.

முதற்கட்டமாய் ஒரு துணிக்கடையின் வாசலின் நிற்கும் காவலாளியைப்பார்த்து புன்னகைக்க முயன்று தோற்றாள். மீண்டும் அடுத்த கடை அடுத்ததடுத்த கடையென எல்லா கடையின் முன் நிற்கும் காவலாளியிடமும் தோற்றாள். சிரிப்பது இத்தனை கடினமாய் இருக்குமென அவள் எதிர் பார்க்கவேயில்லை;

ரோட்டோரமாய் மெஷின் போட்டு தைக்கும் டெய்லர்கள் எல்லாம் கிழிந்த ஆடைகளை தைப்பதை மட்டுமே பார்த்தவள் என்பதால் அவர்களுக்கு புதுத் துணியெல்லாம் தைக்கத் தெரியுமா என்பதில் அவளுக்கு பெரிய சந்தேகம்.  அங்கேயும் புன்னகைக்க முடியாமல் தோற்றாள்.

முந்தைய இரவின் தீர்மானம் எல்லாம் உடைவது போலிருக்க, முகம் இறுக்கமாகிக் கொண்டிருந்தது. “தண்ணி குடுங்க” என கேட்பது போல கேட்டு விடலாம் என்ற மனநிலையை எட்டுவதற்குள்ளாகவே விடியலை நெருங்கியிருந்தது. தன்னுடைய இயலாமையில், பகல் அவளுக்கு இருட்டிக் கொண்டு வந்தது.

எத்தனை நேரம் தான் மகளும் அம்மாவின் முகத்தைப்பார்த்தபடியே நடப்பாள்…

“ஏம்மா பேசமாட்டேங்குற?..”

“எல்லா எடமும் கூட்டமா இருக்குல்ல!… இன்னைக்கு கம்பு எங்க கட்டுறதுன்னு யோசிச்சிட்டு இருக்கேன்.. இன்னைக்கு எப்டியும் கொஞ்சம் ரூவாய சேத்துறலாம் என்ன?..” என்று மகளை தேற்ற நினைத்தவளாய் நடக்கத்துவங்கினாள்.

தினந்தோறும் அம்மாவின் முகத்தைப் பார்க்கிறாள். வருடா வருடம் சீருடை கேட்கும் போதெல்லாம் மாறும் அம்மாவின் முக பாவனைக்கும், இன்றைக்கு அம்மாவின் முக பாவனைக்கும், ஏதோ வித்தியாசம் இருப்பவளாய் உணர்ந்தாள். யோசிக்கத் துவங்கியவள் மறுபடியும் பேசத் துவங்கினாள்.

“அந்த புள்ளைங்க இந்த காலுல மாட்டியிருக்றது… அப்பறம் இந்த முட்டி வரைக்கும் துணி மாதிரி இழுத்து விட்டுறுக்காங்கள்ல, அதெல்லாம் எனக்கு வேணாம்மா. நீ மேல போட்டுக்க பாவாடையும், சட்டையும் மட்டும் வாங்கித்தா. அந்த இடுப்புல இருக்கறது கூட வேணம்மா… ”

“நமக்கு தான் அதெல்லாம் தேவைப்படாதுல்ல..” என்றதும்,

பெரு விரலுக்கும் ஆட்காட்டி விரலுக்கும் நடுவில் மட்டும் தான் பிடி இருக்கணும்…மற்ற நான்கு விரல்களிலும், கயிற்றின் தொடர்பு இருக்கக் கூடாதென முதன் முதலாய் சூடு வாங்கியதிலிருந்து…

ரோட்டோரம் மகளை பிரசவிக்கவிருக்கும் தருவாயில், இடுப்பு வரை ஆடை உயர்ந்திருந்தை வேடிக்கை பார்த்தவன் வரை கண்முன் நிழலாட உடைந்து அழத்துவங்கியிருந்தாள் அம்மா

 

– ரமேஷ் ரக்‌சன்

rack

RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular