லாவண்யா சுந்தரராஜன்
“நீங்கள் போட்டு அனுப்பிய திட்டம் நன்றாக இருக்கிறது. வெற்றிகரமாக அதைச் செயல்படுத்தி விடுவீர்கள் என்று நம்புகிறேன். ஏற்கனவே நொய்டா அலுவலகத்தில் நீங்கள் பொறுப்பெடுத்த பின்னர் காத்திருப்போர் பட்டியலிலிருந்து நான்கு நபர்களை வருமானம் ஈட்டும் நபர்களாக வெற்றிகரமான மாற்றியிருக்கிறீர்கள்.”
சுத்த ஆங்கிலத்தில் ஒரு பக்கத்துக்கும் மேல் எழுதப்பட்டிருந்த மின்மடலை மீண்டும் வாசித்தபடி காலந்தி குஞ்ச் தாண்டி கிரேட்டர் நொய்டா செல்லும் எஸ்பிரஸ் ஹைவேயில் தீபக் மற்றும் அவனுடன் வரும் இன்னும் மூன்று பேர் வரும் வண்டிக்காக, அபர்ணாவும் அவளுடன் இன்னும் இரண்டு பேரும் காத்திருந்தனர். அந்த மடலில் சாரம்சம் நிறுவனத்திற்கு எந்த புகாரும் தேவையில்லை, வேலையில் ஏமாற்றும் யாராக இருந்தாலும் மேலாளர் தன் ஆளுமையால் அவர்களை மனமாற்றி மலையைப் புரட்ட வேண்டும். வண்டியின் ஜன்னல் வழி வெளியே பார்த்தாள். அங்கே கையின் விரல்கள் போல மடல் விரிந்த கல்யாண முருங்கையின் அழகைப் பார்த்த வண்ணம் அதன் அழகில் நொடி நேரம் வியந்திருந்தாள். சாம்பல் தலை நாகணவாய் பறவை அந்த மலர்களை அப்படி இப்படி தலையைத் திருப்பி பார்த்துக் கொண்டிருந்தது. இறக்கைகளை மடக்கி அமர்ந்திருந்த அந்த பறவையைப் பார்க்கும் போது எவ்வளவு சாது போல இருக்கிறது என்று நினைக்கும் போதே அது தனது இறக்கையை விரித்தது. அது அவ்வளவு பெரிய விசிறி போல விரியுமென்று அவளால் அதுவரை கற்பனை கூடச் செய்ய முடியவில்லை. இத்தனை விசிறியை அது எங்கிருந்து அடக்கி வைத்திருந்தது என்று எண்ணத் தோன்றியது. இறகை மடக்கி அமர்ந்திருக்கும் அந்த பறவை அமர்ந்த தோற்றத்தில் தீபக் போலவே இருந்தது. சோம்பலாக அமர்ந்த பறவையின் விரிசிறகு அபர்ணாவின் எண்ணத்தைக் கல்யாண முருங்கை மலர்களிலிருந்து வேறு எங்கோ விரட்டியது. பெங்களூரில் எப்படி நிம்மதியான வாழ்க்கை ஓட்டிக் கொண்டிருந்தேன் என்று யோசித்துக் கொண்டிருந்தாள். பத்தே நிமிடம் நடந்தால் அலுவலகத்தை அடைந்து விடுவாள். இங்கே ஒருநாளுக்கு நூற்று முப்பது கிலோமீட்டர் பயணிக்க வேண்டும். இடையே இப்படி வெட்டியான காத்திருப்பு வேறு. வெறுப்போடு மீண்டுமொரு முறை மின்மடல்களை பிரித்துப் பார்க்கலானாள்.
காஜியாபாத்திலிருந்து வரும் வண்டி வந்து சேர்ந்தது. அந்த வண்டியில் பயணித்தவர்கள் இறங்கி அபர்ணாவும் மற்றவர்களுமிருந்த வண்டியில் ஏறினார்கள். அபர்ணா பார்வையாலேயே “என்ன தீபக்.. தினம் நாங்க வந்து இருபது நிமிஷமாவது காத்திருக்கோம்” என்று கேட்பது போல் கடுமையாக்கப் பார்த்தாள். தீபக் அலட்சியமான பார்வையொன்றை வீசிவிட்டு அபர்ணாவைக் கடந்து போய் அமர்ந்து கொண்டான். அவனைப் பார்க்க அப்படியே தூங்கி எழுந்து வந்தவன் போலிருந்தான். பல் மட்டுமே துலக்கி முகச்சவரம் செய்திருந்தான். குளிப்பது கூட அலுவலகத்தில் அவன் கணக்குப்படி அலுவலகத்துக்காக எட்டு மணி செலவழிக்க வேண்டும். அதில் போக்குவரத்து முதல் அலுவலகத்துக்காக தயாராவது வரை எல்லாம் அடக்கம். அந்த எட்டுமணி நேரத்தைத் தவிர பிறநேரம் எல்லாம் அவன் உற்சாகமாக இருப்பதாக அபர்ணா வந்த புதிதில் ஒருமுறை சொன்னான். பயனாளர் நேர்முகத்துக்கு படிப்பதும், அவர்களது அலுவலகத்தில் போய் வேலை செய்வதும் தனக்கு இடக்கையில் சொடக்கு போடும் வேலை போன்றது. எளிமையானது என்று சொல்ல இடர்கரடக்கலாக அவன் உபயோகித்த மொழியும் அதன் பிரயோகமும் அபர்ணாவை அவனிடமிருந்து விலக்கி வைத்தது. பொதுவாக தன்கீழ் பணியாற்றும் எல்லோரிடமும் நட்புடன் பழகுவது போல தீபக்குடன் பழக முடியவில்லை. தீபக் இதை பணித்தலைமைத் திமிர் என்று சொல்லி வருவதாகவும் சகபணியாளர்களின் பேச்சிடை அவளுக்கு தெரிந்தது
“இன்னிக்கும் செக்டர் பதினாறில் ஒரே கூட்டமோ?” என்று தீபக் ஏறுவதற்கு முன்பே வண்டியில் ஏறும் பாலகிருஷ்ணாவிடம் கேட்டாள். தீபக்கிற்கு தமிழ் புரியாது. ஆனாலும் அவனது செவி மடல்கள் ஓசைக்கு விடைக்கும் பூனையின் காதுகள் போல் விரைத்து அவர்கள் என்ன பேசுகின்றார் என்பதை அறியத் துடித்தது. தினேஷ் காலை வணக்கம் சொல்லி அமர்ந்தான்.
“அவன் பார்த்துட்டே இருக்கான் சீஃப், இன்னிக்கும் அங்கே தான் நேரமாச்சு. அதுக்கு அப்பறம் டிராபிக்”
“புரியுது. விரைவில் இதுக்கு தீர்வு பண்றேன்”
வண்டி எக்ஸ்பிரஸ் ஹைவேயில் 120 கி.மீ வேகமெடுத்தது. தீபக் மட்டுமில்லாது, வண்டியிலிருக்கும் மற்ற அனைவருமே சமீபத்தில் அவர்களது ஒப்பந்த வேலை முடிந்து நிறுவனத்து வருமானம் ஈட்டுபவர்கள் பட்டியிலிருந்து வெளியேறியவர்கள் அல்லது புதிதாக வேலை எடுக்கப்பட்டவர்கள். எல்லோருமே நிறுவனத்துக்கு வருமானம் ஈட்டித்தரக் காத்திருப்போர். வருமானம் ஈட்டும்போது அவர்களது சம்பளத்தைப் போல ஐந்து மடங்குக்கு மேலாக கட்டணம் வசூலித்துக் கொள்ளும். நிறுவனத்துக்கு வருமானம் ஈட்டித் தராத ஒவ்வொரு நாளும் செலவு சுமை காரணமாக நிறுவனம் அவர்களை உன்னிப்பாகக் கண்காணிக்கும். அவர்கள் அனைவருக்கும் அபர்ணா புதிய தொழில் நுட்பங்களை சொல்லிக் கொடுத்து புதிய ஒப்பந்தத்தில் நிறுவனத்தின் வரவு கணக்காக விரைவில் மாற்ற வேண்டும். அது எவ்வளவு சீக்கிரம் செய்ய முடிகிறதோ அதை வைத்துதான் அவளது செயல்திறன் கணக்கெடுக்கப்படும். பெங்களூரில் இருந்தவரை இதுபோன்ற ‘அச்சார்ட் கிரியேசன் புரஜெட்’ என்ற நிறுவனத்துக்கு வரவு ஈட்டும் மனிதவளங்களை உருவாக்கும் பயிற்சி திட்டங்கள் பலவற்றை மிகவும் வெற்றிகரமாகச் செய்திருக்கிறாள். அதற்காக விருதெல்லாம் வாங்கியிருக்கிறாள். நிறைய தொழிற்நுட்ப கட்டுரைகளை எழுதி பத்திரிக்கைகளில் நிறுவனத்தின் வழியே பிரசுரித்திருக்கிறாள். திருமணமாகி ஓரிரு ஆண்டுகள் கணவனுக்கு பெங்களூர் வேலை எதுவும் சரியாக அமையாத காரணத்தால் அவள் கணவன் பணிபுரியும் குர்கவுன்னில் வசிக்க முடிவு செய்து, கிரேட்டர் நொய்டாவுக்கு மாற்றல் வாங்கிக் கொண்டு வந்தாள். பெங்களூரில் ஒப்பந்தம் முடிந்து வெளியே வரும் நபர்கள் அனைவருமே ஆவலோடு கற்பார்கள். அங்கே நிறுவனங்களும் அதிகம். உடனடியாக வேறு ஒப்பந்தந்ததுக்கு போய் விடுவார்கள். இங்கே நிலைமை வேறு மாதிரி.
முதல் நாள் கிரேட்டர் நொய்டா அலுவலகத்தில் நுழைந்ததும் அது பெங்களூர் அலுவலகத்தில் அவளுடைய தனியறையை விடச் சற்றே பெரியதாக இருந்ததைப் பார்த்ததுமே அவளுக்கு அந்த அலுவலகத்தின் மீது எந்த மதிப்பும் வரவில்லை. மேலும் அங்கிருந்த ஓரிருவரைத் தவிர மற்ற அனைவருமே கற்பதில் அதிகம் கவனம் செலுத்தவில்லை. எவ்வளவு நாள் காத்திருப்பு பட்டியலில் இருந்தால் என்ன எனக்கு தான் சம்பளம் வருகிறதே என்பது போல அவர்களது நடவடிக்கைகள் அதிக அசட்டைத்தனமாக இருந்தது. அந்தக் கட்டிடத்தில் மனிதவள உருவாக்கத் திட்டப் பயிற்சிக்கு மொத்தமே எட்டுபேர் தான் இருந்தனர். வருமானம் ஈட்டுபவர் பட்டியலில் பன்னிரண்டு பேர் இருந்தனர். ஒப்பத்திலிருக்கும் நபர்கள் பயனாளர் அலுவலகத்திலேயே சென்று வேலை பார்ப்பார்கள். அபர்ணாவையும் சேர்த்து ஒன்பது பேருக்கு அப்படியொரு தனி அலுவலகம் அமைக்கப்பட்டிருந்ததே பெரிய விஷயம் தான். பெங்களூரில் அவர்களது நிறுவனத்துக்கு சொந்தமாக மிகப்பெரிய கட்டிடம் இருந்தது. அது மட்டுமல்லாமல் பெங்களூரின் பல இடங்களில் அவர்களுக்கான அலுவலங்கள் இயங்கிக் கொண்டிருந்தது. ஆனால் கிரேட்டர் நொய்டா கிளை மிகப் புதிதாகத் தொடங்கப்பட்டிருந்தது. ஒரே ஒரு நிறுவனத்துடன் மட்டுமே ஒப்பந்தப் பணி நடந்து கொண்டிருந்தது. கிளை விரிவடையும் வரை எல்லோருமே வெப்ப நாற்காலியிலே அமர்ந்திருக்க வேண்டும். அதைப் பற்றிய எந்த சிந்தையுமே இல்லாமல் சிலர் இருப்பது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. மென்பொருள்களைத் தயாரிக்கும் நிறுவனத்தில் நேரடியாகப் பணிபுரிபவர்கள் ஒருமுறை வேலைக்குள் நுழைந்து விட்டால் போதும். ஆனால் ஒப்பந்தப் பணியில் அமர்த்தப்படும் பணியாளர்கள் ஒவ்வொரு முறையும் புதிதாக நிறுவனத்துக்குப் போவது போல நேர்முகத்தில் தேர்வெடுக்க வேண்டும். எல்லா பரீட்சைக்கும் கடைசி நேரத்தில் படித்துத் தேர்வெழுதித் தேறிவிடலாம். ஆனால் பணம் தரும் முதலாளிகள், நிறுவனர்களை அவ்வளவு சுலபமாக ஏமாற்ற முடியாது.
அபர்ணா நோய்டா கிளைக்கு வரும் முன்னர் தீபக் ஒருமுறை பயனாளர் நிறுவனத்தில் நடந்த நேர்காணலில் நல்ல மதிப்பெண் எடுத்திருந்தான். ஆனால் அது மட்டும் போதுமா, இதென்ன இடக்கையில் சொடக்கு போடும் வேலையா? வேலையில் அவனது நேர்மையற்ற போக்கை எப்படியோ கண்டறிந்து நெக்கு சாக்கு சொல்லி சொந்த நிறுவனத்திற்கு திருப்பி அனுப்பி விட்டார்கள். அவனது வேலை செய்ய மறுக்கும் சோம்பேறித்தனத்துக்கு அது மிக வசதியாகப் போய்விட்டது. மேலும் அங்கே இருந்த மற்றவர்களை விட மூத்த பணியாளர் என்ற விதத்தில் அலுவலகத்தின் முழுப்பொறுப்பும் அவன் கையிலிருந்தது. பெங்களூரிலிருந்து கைப்பயிற்சி படிப்பித்தல் எல்லாம் அவெந்திகா மேற்பார்வையில் நடந்து கொண்டிருந்தது. அவெந்திகாவும் அவனும் ஒரே மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். ஆகவே எப்படியோ ஒத்துப்போய் விட்டதோ அல்லது அவன் மிகத் திறமையாக இங்கே நடக்கும் விஷயங்களை மாற்றிச் சொன்னானோ தெரியாது. அபர்ணா வந்ததும் முதலில் ஒவ்வொரையும் படிக்க வைக்க, வேலை செய்ய வைக்க பெரும் முயற்சி எடுக்க வேண்டியிருந்தது. அவன் தன்னுடைய சோம்பேறித்தனத்துக்கு உகந்தவாறு எல்லோரையும் உருவாக்கி வைத்திருந்தான். அவர்களது மனநிலையை மெல்ல மெல்ல மாற்றி, நேர்முகத்துக்கு தயார் செய்ய பெரும் முயற்சியெடுக்க வேண்டியிருந்தது. எல்லோரும் செய்தால் ஒருவாரத்தில் முடியும் வேலையெல்லாம் பல வாரங்களுக்கு நீண்டது. இதை சரிசெய்ய முதலில் தீபக்கை சரிசெய்ய வேண்டுமென்று அபர்ணாவுக்கு புரிந்து தான் மேலாளரின் உதவியை கேட்டபோது அவர் அவளது ஆளுமையை நிறுவச் சொல்கிறார். பேசி சரிசெய்யப் பார்ப்போம் என்று நினைத்தாள்.
மென்பொருட்களுக்கு விற்பனை செய்து வருமானம் ஈட்டாமல், மனிதவளங்கள் வருமானம் ஈட்டித் தருவதையே நம்பியிருக்கும் நிறுவனங்களில் எழுபது சதவீதம் பேருக்கு மீதமிருக்கும் முப்பது சதவிகிதம் ஆட்களே சம்பாதித்துக் கொடுப்பார்கள். அதனால் வேலைக்குக் காத்திருப்பவர்களுக்கு வருமானம் ஈட்டித் தருபவர்களுக்கு கிடைப்பது போல மரியாதையோ, பெரிய வசதிகளோ கிடையாது. அபர்ணாவும் பிறரும் இருந்த அலுவலகம் அவர்களின் பணியாளர் நிறுவனத்துக்கு மிக அருகிலிருந்தது. அந்த இடம் அதிகமும் பாதுகாப்பற்ற இடமாக இருந்தது. கிரேட்டர் நொய்டா குற்றங்கள் சர்வ சாதாரணமாக நடந்து கொண்டிருந்தது. வழிப்பறியும் துப்பாக்கியால் சுட்டுக் கொல்வதும் அடிக்கடி நடந்தது. இருந்தாலும் வாடகை குறைந்த இடமென்பதால் அங்கே அலுவலகத்தை தேர்ந்தெடுத்திருந்தார்கள். வருமானம் ஈட்டுவோர்க்கு வந்துபோகத் தனியாக வண்டி வசதியெல்லாம் செய்து கொடுக்கப்படும். நொய்டா கிளையின் காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் எட்டு நபர்களும் குர்காவுன், ப்ரிதாபாத் மற்றும் காசியாபாத் பகுதிகளிலிருந்து வந்தனர். அவ்விடங்கள் எல்லாம் வகைக்கொரு திசையில் இருந்தது. காலந்திகுஞ்ச் அருகில் மூன்று ஊர்களிலிருந்து வரும் பாதைகள் ஒன்று சேரும். அதுவரை வெவ்வேறு வண்டியில் வந்து அந்த இடத்திலிருந்து ஒரே வண்டியில் பயணத்தால் செலவு மிச்சமென்று எல்லோருக்கும் பாதி வழிக்கு மேல் ஒன்றாக பயணிக்க ஒரு வண்டி மட்டுமே கொடுக்கப்பட்டிருந்தது. இது கொடுத்ததே பெரிய விஷயம். பல கட்ட மடல்களை அபர்ணா எழுதிய பின்னரே கொடுக்கப்பட்டது. அங்கே சாலையில் அதிவேகத்தில் விரையும் வண்டிகளைப் பற்றியும், பொதுமக்கள் பயணம் செய்யும் வாகனங்களில் வந்தால் அலுவலகம் வந்துசேரும் வழியில் இருக்கும் பாதுகாப்பின்மை பற்றியும் எழுதி இந்த வாகன ஏற்பாடுகளைச் செய்திருந்தார்கள். அது சரியாக இயங்கவில்லை, சரியான நேரத்துக்கு அலுவலகம் அடையவில்லை என்று நிலைய தலைமையில் இருக்கும் அவளே எழுதி போட்டால் அவ்வளவு தான். வாகன வசதி ரத்து செய்யப்படும். வருமானம் ஈட்டும் வேலைக்கு போக வேண்டும் என்ற அக்கறையற்ற பொறுப்பற்ற சகபயணிகள் பற்றி யோசித்துக் கொண்டேயிருந்த போது அலுவலகம் வந்து சேர்ந்தது.
அலுவலகம் இருந்த அந்த பெரிய வளாகத்தில் நுழைவாயிலின் முதற்கட்ட சோதனைக்காக வண்டி நின்று கொண்டிருந்தது. பார்க்கக் கண்ணுக்கு குளிர்ச்சியூட்டும் வண்ணக் கண்ணாடியைச் சுவர் முழுவதும் ஒட்டி வைத்திருந்தார்கள். பார்க்க அழகான கண்ணாடி மாளிகை போலிருந்த அந்த பெரிய கட்டிடத்தில் ஏழாம் மாடியில் ஒரு கோடியில் அவர்கள் அலுவலகம் இருந்தது. வண்டி கட்டிடத்தை வலமாக ஒரு சுற்று சுற்றி கீழ்தளத்திலிருந்த வாகனம் நிறுத்தி வைக்கும் இடத்தை அடைந்தது. அங்கிருந்து அனைவரும் மின்தூக்கியை நோக்கி நடந்தனர். தீபக் வண்டியிலிருந்து கடைசியாக இறங்கி ஏதோ தேடுவது போலப் பாசாங்கு செய்து கொண்டிருந்தான். தினம் புகைத்துவிட்டு மேலே வரவே கணிசமான நேரத்தைக் கடத்துவான். மெதுவாக நடந்து வந்து சேர்ந்தான். அபர்ணா மின்தூக்கியின் கதவுகள் அவன் வருகைக்காகப் பிடித்து வைத்திருக்க சொன்னாள். மின்தூக்கியை விட்டு இறங்கியதும் அவன் நேராக ஒப்பனையறையை அடைந்தான். அபர்ணா கண்ணாடித் தடுப்புகள் கொண்டு அமைக்கப்பட்ட அவளுடைய அறைக்குச் சென்றாள். அங்கே கைப்பை மற்றும் சாப்பாடு பைகளை வைத்து விட்டு, ஒப்பனையறைக்குள் நுழைந்த போது, பக்கத்திலிருந்த ஆண்கள் ஒப்பனையறையிலிருந்து புகை மண்டலம் வெளியேறிக் கொண்டிருந்தது. ஜன்னல் வழியாக பெண்கள் ஒப்பனையறையிலும் அது அத்துமீறி நுழைந்திருந்தது. ஆண்கள் ஒப்பனையறைக் குளியலறையிலிருந்து தண்ணீர் கொட்டும் சப்தம் கேட்டது. தீபக்தான் குளித்துக் கொண்டிருக்க வேண்டும். அவன் குளித்து முடித்து அலுவல மேசையை அடைவதற்கு குறைந்தபட்சம் அரைமணி நேரத்துக்கு மேலாகும். எரிச்சலோடு தனது இருக்கையில் வந்து அமர்ந்தாள் அபர்ணா.
“இனி தினமும் 9.30 நிமிடத்துக்குத் தினசரி முன்னேற்றங்களை பகிரும் சந்திப்பு இருக்கும். ஆகவே எல்லோரும் அலுவலகத்தில் 9.20-க்கு இருக்க வேண்டுமென்று” என்று அனைவருக்கும் ஒரு மடலை அனுப்பினாள். தீபக்கிற்கு தன்னை வந்து சந்திக்குமாறு தனிமடலொன்றை அனுப்பினாள். இன்று ஒவ்வொருவருக்கும் என்னென்ன படிக்கச் சொன்னோம் என்னென்ன படித்து முடித்தோம், அது இயக்கவிதி முறைகளைப் பரிசோதிக்கும் சிறு அளவிலான கணினிக் கூறுகளை, விளக்கங்களை எழுதி வைத்தார்களா என்பதை அவரவர் மேசைக்குச் சென்று பார்த்துக் கொண்டிருந்தாள். தீபக் வருவது தெரிந்தது, அவன் நாற்காலிக்கு எதிர்புறமிருந்தவர்களிடம் பணி ஆலோசனையில் இருந்தாள் அவள், என்றாலும் தீபக்கின் கணினியை அவளால் பார்க்க முடியும். அவள் பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்று தீபக்கிற்கும் தெரியும். அவன் தனது கணினியைத் திறந்தான். அரை நிர்வாணமான புகைப்படம் ஒன்று திறந்ததை வேகமாக மூடினான். அவள் தற்சமயம் அனுப்பிய மடலைத்தான் படித்தான். நாற்காலியை வேகமாக பின்னுக்குத் தள்ளிவிட்டு, தனது தோழியை அழைத்துக் கொண்டு காப்பி குடிக்கும் பகுதிக்குச் சென்றான். “இவ எல்லாம் எனக்கு புகை போல, ஃப்பு என்று ஊதித் தள்ளிவிடுவேன்” என்று பிஹாரியில் சத்தமாகச் சொன்னபடி நடந்தான். அர்ச்சனா தற்போது தான் தட்டுத்தடுமாறி ஹிந்தியில் பேசக் கற்றுக் கொண்டிருந்தாள். சில ஹிந்தி எழுத்துகளையும் கற்று எழுத்துக் கூட்டி போஸ்டர்களை வாசிப்பது தான் அவளுடைய நீண்ட பயணத்தின் பொழுதுபோக்கு. பிஹாரியில் தீபக் பேசியது ஓரளவு அவன் முகபாவனையிலும், வாயை ஊதிக்காட்டியதிலிருந்தும் அவளை துச்சமாக தூசி போல நினைத்து ஏதோ சொல்கிறான் என்பதாகப் புரிந்தது. அபர்ணாவின் முகம் கடுப்பாகியது. பாலகிருஷ்ணனும் “என்ன இப்படி கேவலமா இருக்கான்” என்றான். தினேஷ் கொஞ்சம் பயந்து போயிருந்தான். “நாம வேலைய பார்ப்போம். அவனுக்கு விரைவில் சிக்கல் புரியும்” என்றபடி காப்பி குடிக்கும் பகுதியைப் பார்த்தாள். அங்கிருந்து கண்ணாடிக் கதவுகள் வழியே அந்த இடத்தைப் பார்க்க முடியும். தீபக் அங்கே கைகளை ஆட்டி ஆட்டி வேகமாகக் கோபமாய் தனது நண்பனுடன் பேசிக் கொண்டிருப்பது போல தெரிந்தது. முக பாவனைகள் கொஞ்சம் தெரிந்தாலும் என்ன பேசிக்கொண்டார்கள் என்று கேட்கவில்லை.
அபர்ணா அடுத்தடுத்த நபர்களிடம் என்னென்ன பிரச்சனைகளென்று கேட்டு அருகிலேயே இருந்து சரிசெய்து கொண்டிருந்தாள். வேலை கவனத்தில் அவளுக்கு தீபக் மீண்டும் தனது இருக்கை வந்தானா என்ன என்று கவனிக்க நேரமில்லை. மணி பதினொன்றரை ஆயிற்று. அபர்ணா காப்பி குடிக்கப் போனபோதும் தீபக்கும் அவன் தோழியும் பேசிக் கொண்டிருந்தவர்கள் பேச்சை நிறுத்திவிட்டு தனது இருக்கைக்குக் கிளம்பத் தயாரானார்கள். அபர்ணா காப்பி தயாரிக்கும் இயந்திரத்தில் கோப்பையை வைத்து கபே லேட்டோ என்று எழுதப்பட்ட பொத்தானை அழுத்தினாள். பாதிக் கோப்பையே நிறைந்திருந்தது.
“இதில் பால் நிறைக்கவில்லையா?”
பதில் சொல்லாமல் உதவியாளன் தீபக் இருந்த இடத்தை நோக்கினான். அவனும் இவன் கண்களை நோக்கிவிட்டு தனது கணினியில் ஏதோ செய்வது போல குனிந்து கொண்டான். குளிர்சாதனப் பெட்டியைப் பார்த்தாள். அது காலியாக இருந்தது. இதற்குக் கொடுக்கப்படும் வாடகைக்கேனும் இதில் ஏதேனும் வாங்கி வையுங்கள் தோழா என்று ஹிந்தியில் சொல்லிவிட்டு தனது இருக்கையை அடையும் முன்னர், தீபக் அருகே சென்று பார்க்கும் போது அவள் கையில் காப்பி கோப்பையில் இன்னும் கொஞ்சம் காப்பி மிச்சமிருந்தது.
“தீபக் என்னுடைய அலுவலகத்துக்கு வந்து பார்க்கச் சொன்னேன்.. நீங்கள் இன்னும் காலை காப்பியே முடிக்கவில்லையா”
“நான் வந்தேன். நீங்கள் பிறரிடம் பேசிக் கொண்டிருந்தீர்கள். உங்கள் அலுவலகத்தில் இல்லை.”
“சரி இன்னும் ஐந்து நிமிடங்களில் வந்து பாருங்கள்”
அதற்குள் உதவியாளன் பால் நிறைத்து விட்டதாகச் சொன்னான். மீண்டும் காப்பி குடிக்குமிடத்துக்குச் சென்றாள் அபர்ணா. காப்பிக் கோப்பையைக் காப்பி தயாரிக்கும் இயந்திரத்தின் காப்பி வழங்கும் குழாய் அருகே வைத்துவிட்டு அந்த விலையுயர்ந்த நவீன காப்பி இயந்திரத்தையே பார்த்த வண்ணமிருந்தாள். அந்த காப்பி தயாரிக்கும் இயந்திரத்துக்கு மாத வாடகை அதன் விலையில் பாதியிருக்கும். அது மட்டுமில்லாமல், அங்கிருக்கும் நாற்காலி, மேசைகள், குளிர்சாதனப் பெட்டி எல்லாமே வாடகைக்கே எடுக்கப்பட்டிருந்தது. தீபக் நொய்டா கிளையின் முதல் ஊழியர் என்பதால் நிறுவன மேலிடம் சில விஷயங்களுக்கு அவன் உதவியை நாடியிருந்தது. அதை சாதகமாகக் கொண்டு சாமார்த்தியமாகப் பேசி ஒப்பந்தங்களைத் தனது சொந்தக்காரருக்கு வாங்கிக் கொடுத்திருந்தான் என்று அங்கிருந்தவர்கள் சொன்னார்கள். ஆனால் அவனைக் கேட்டால் இதற்கும் அவனுக்கும் எந்த சம்பந்தமுமே இல்லை என்பான்.
மீண்டும் தன்னுடைய அறைக்கு வந்த போது தீபக் அவனுடைய இடத்தில் இல்லை அவன் சரியாக 11.45-க்கு உடற்பயிற்சி நிலையத்துக்குச் செல்வான். எல்லா கணினி சேவை நிறுவனங்களில் தனது பணியாளர்களின் உடல்நலம், மனநலனில் மிகுந்த கவனம் கொண்டிருக்கும். அவர்களுடைய நிறுவனமே ஒரு உடற்பயிற்சி நிறுவனத்தோடு ஒப்பந்தம் போட்டு கணிசமான தொகையைக் கொடுத்து பணியாளர்களை அவர்கள் இடத்துக்கு அழைத்துச் செல்ல வாகன வசதியோடு ஏற்பாடு செய்யும். அப்படிப்பட்ட உடற்பயிற்சி நிறுவனங்களும் தங்கள் வியாபாரத்தை விருத்தி செய்து கொண்டிருந்தனர். இருக்கும் வேலைகளைச் சரியாகச் செய்தால் அங்கே போக நேரம் ஒதுக்கக் கூட முடியாது. வருமானம் ஈட்டும் ஊழியர் யாருமே அங்கே எட்டிப் பார்ப்பதில்லை. சில சமயம் அபர்ணா அங்கே போய் வருவதுண்டு ஆனால் தினமும் போவது கடினம். தீபக் அங்கே கிளம்புவதில் நேரம் தவற மாட்டான்.
மைக்ரோ வோவனில் மதிய உணவைச் சூடுசெய்யக் கொடுத்தனுப்பி விட்டு அலுவலகத்தினுள் அபர்ணாவின் குழு கைப்பயிற்சிக்காக தயார் செய்த தகவல் பரிமாறும் செயலி மூலம் தீபக்கிற்கு மடல் அனுப்பினாள். “காலையிலேயே சொன்னபடி என்னை நீங்கள் இன்னும் வந்து சந்திக்கவில்லை. இன்று அனைவரிடம் வேலை சார்ந்த விஷயங்களைப் பேசி முடித்து விட்டேன். தற்சமயம் மதிய சாப்பாடு நேரமாகி விட்டது. ஆகவே மதிய உணவு முடிந்ததும் கட்டாயம் வந்து பார்க்கவும்” என்று அனுப்பினாள். அதை அவன் வாசித்து விட்டது தெரிந்தது. ஆனாலும் பதில் எதுவும் சொல்லவில்லை. தீபக் தனது மதிய உணவு டப்பாவை எடுத்துக் கொண்டு கிளம்பியிருந்தான். அபர்ணாவின் உணவு அப்படியே சூடாக்கப்படாமல் திரும்பி வந்தது.
“மைக்ரோ வேவ் வேலை செய்யல மேடம்”
“நேத்தும் இதுதானே சொன்னீங்க ஏன் வேலை செய்யவில்லை, சரிசெய்யச் சொல்ல வேண்டியது தானே”
“…”
“என்ன பாக்கறீங்க? நீங்க தானே இதெல்லாம் சரியா இருக்கான்னு பார்த்து வைக்கனும்”
“…”
“ஏதேனும் சாதனம் வேலை செய்யலைன்னா சரிசெய்ய ஆள கூப்பிட வேண்டியது தானே”
“தீபக் சாரின் அண்ணனிடம் பேசி நாளைக்குள் சரி செய்கிறேன்”
“நாளைக்குள் சரியாகவில்லை என்றால் நான் மேலிடத்துக்குப் புகார் அனுப்பி விடுவேன்”
“நேற்று கேட்ட போது நீங்கள் மட்டும் தானே அதனை உபயோகிக்கிறீர்கள் என்று சாரின் அண்ணா சொன்னார்”
“சரி. இனி அதை யாரும் உபயோகிக்க வேண்டாம் என்று எழுதி ஒட்டி விடுங்கள். இனி அதற்கு மாத வாடகை தரவேண்டாமென்று மேலிடத்துக்கு எழுதி விடுகிறேன். சாருடைய அண்ணாவை வந்து அந்த கருவியை எடுத்துச் சென்றுவிடச் சொல்லுங்கள்”
அவள் நினைத்தபடி அந்த உதவியாளன் நேராகச் சென்று தீபக்கிடம் பேசினான். அதற்கு அவன் என்ன சொன்னான் என்று கவனிக்கும் ஆர்வம் அபர்ணாவுக்குக் கொஞ்சமும் இல்லை. அவளது மதிய உணவை அவள் தடுப்பறைக்குள்ளே முடித்துக் கொண்டு அடுத்த நாள் அவளுடைய குழுவிற்கும் கொடுக்கப்பட வேண்டிய திட்டங்களைத் தயாரிப்பதில் ஆர்வமானாள். மதிய சாப்பாட்டை ஆற அமர முடித்து விட்டு கிட்டதட்ட மூன்று மணிக்குத் தனது இருக்கைக்கு வந்தமர்ந்தான் தீபக். அதன் பின்னர் அங்கிருந்து மெல்ல ஊர்ந்து வந்து அபர்ணாவின் அறைக்கதவை மெல்லத் தட்டினான்.
“நான் உள்ளே வரலாமா?”
“வாங்க தீபக்.. சில முக்கிய முடிவுகளை சீஃப் எடுக்கச் சொல்லியிருக்கார்.”
“..”
“நாளை முதல் தினத்தொடக்கத்தில் சந்திப்பு இருக்கும். முதல் நாள் செய்த வேலை, அன்று திட்டமிட்டிருக்கும் வேலை இதற்கான முழு தெளிவு உங்களுக்கு இருக்க வேண்டும். இதோ இந்த எல்லா வேலைகளும் பாக்கியிருக்கின்றன. இதில் எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். எடுத்துக் கொண்டு நீங்களே எவ்வளவு நாள் ஆகுமென்று சொல்லலாம். அதே திட்டப்படி நாம் தினம் அந்த வேலை முடிந்ததா என்று பார்க்க வேண்டும்”
“…”
“முக்கியமாக காலை 9.30-க்கு அந்த சந்திப்பு நடக்க வேண்டும்”
“அபர்ணா நாம் அலுவலகம் அடைவதே 10.30 தானே”
“ஆம். இனி அதை ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தொடங்கச் சொல்லி சிஃப் உத்தரவு”
“10.30-க்கு வந்தாலே என்னால் நீங்கள் கொடுக்கும் எல்லா வேலைகளையும் செய்துவிட முடியும். அதுவும் எல்லாம் படிப்பது. எப்போதாவது தான் கோட் எழுத வேண்டியிருக்கும்”
“இல்லை. இப்போது நான் நிர்மாணித்திருக்கும் திட்டத்தில் தினம் கோட் எழுதும்படி இருக்கும். கம்பிளிட் ஸ்டாக் எழுதப் போகிறோம். ரொம்ப ஸ்வாரஸியமாக இருக்கும்”
“என்ன செய்தாலும் கிளையெண்ட் இன்டெர்வியு அப்போது என்ன கேட்பார்கள் என்று கேட்டுப் படித்தால் போதுமானது தானே”
“இல்லை.. இனி அப்படியில்லை. இங்கே இருக்கும் மட்டும் புதிது புதிதாகப் படிக்கவும், செயலிகள் செய்யவும், அவற்றை பொது நடைமுறையில் பயன்படுத்தும் விதத்தில் கஸ்டமர் புரஜெட் போலவே செய்ய இருக்கிறோம். உதாரணத்துக்கு நாமே உருவாக்கிய ஷாட் பாக்ஸ் போல”
“உங்களுக்கு 7.15-க்கு கிளம்ப வேண்டியிருக்குமே.”
“அது பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாமென்று நினைக்கிறேன். நமது சந்திப்பு 9.30-க்கு தொடங்க வேண்டும். அதற்கு நமது வண்டி இங்கே 9.20-க்கு வந்து சேர வேண்டும். அதாவது உங்கள் வண்டி எக்பிரஸ் ஹை-வேயில் 8.45 இருக்க வேண்டும்”
“அதை என்னிடம் ஏன் சொல்கின்றீர்கள்”
“எல்லோரிடமும் சொல்லியாச்சு. தனித்தனி மடலில் சொல்லி அனுப்பி விட்டேன். உங்க வண்டியில் நீங்க தான் சீனியர். ஆகவே இதனை நீங்கள் தான் வழிநடத்த வேண்டும்.”
“என்னால் முடியாது”
“ஏன்”
“எல்லோரும் நேரம் கடத்துவார்கள். அவர்களை என்னால் கட்டுப்படுத்த முடியாது”
“தீபக் நீங்கள் கிட்டத்தட்ட ஆறு வருட அனுபவம் கொண்டவர். ஓரிரு ஆண்டுகளில் அடுத்த படிக்கு உயர வேண்டும். உங்கள் ஆளுமைத்திறன் இதிலிருந்து தானே கண்காணிக்கப்படும். உங்களால் முடியும்”
“இல்லை அபர்ணா. எங்கள் பாதை போக்குவரத்து மிகவும் அதிகம் எங்களால் 8.45-க்கு அங்கே வரமுடியாது. என்னுடைய நிலையத்திலிருந்து 7.45-க்கு நான் கிளம்ப வேண்டியிருக்கும்.”
“உங்களை விட அரைமணி முன்னர் நான் கிளம்ப வேண்டியிருக்கும்”
“இல்லை என்னால் முடியாது.”
“சரி இதனை எனக்கு மடலில் எழுதி அனுப்புங்கள்”
“ஏன் அனுப்ப வேண்டும்”
“நான் சிஃபுக்கு சொல்ல வேண்டும். என்னால் 9.30-க்கு தினம் தொடக்கச் சந்திப்பை நடத்த முடியாதற்குக் காரணமாகக் காட்ட வேண்டும்”
“…”
“சரி நேற்று என்னென்ன வேலை செய்தீர்கள். இன்று என்ன செய்தீர்கள் என்றும் ஒரு மடலை அனுப்பி விடுங்கள்”
“நான் படித்துக் கொண்டிருந்தேன்.”
“சரி என்னென்ன படித்தீர்கள் என்று பட்டியலிட்டு 8 மணி நேரத்துக்கு எவ்வளவு படித்திருக்கிறீர்கள் என்று நியாயப்படுத்தி மடலை எழுதிவிடுங்கள். கடந்த வாரம் கொடுத்த கோடிங் ஏன் முடிக்கவில்லை என்று எழுதிவிடுங்கள்”
“நீங்கள் கொடுத்த வேலை எனக்குப் புரியவில்லை”
“அதை நீங்கள் உடனே கேட்டிருக்க வேண்டும். அதே போலொரு வேலையை தினேஷுக்கு கொடுத்தேன். அடுத்த நாளே அவன் முடித்து விட்டான்”
“தினேஷுடன் நீங்களே அமர்ந்து வேலை செய்கின்றீர்கள்”
“அவனுக்கு இருக்கும் சந்தேகங்களை மட்டுமே தீர்கிறேன். நீங்கள் கேள்வியைப் பட்டியலிடுங்கள். நான் பதிலளிக்கவில்லை என்றால் புகார் செய்யலாம்”
“நிமிடக்கணக்கில் என்ன செய்து கொண்டிருந்தேன் என்றெல்லாம் சொல்ல முடியாது”
“அதையும் சேர்த்தே மடலில் எழுதி விடுங்கள். கடந்த நான்கு மாதத்தில் இரண்டுமுறை நேர்முகத்துக்கு சென்று தேர்வாகவில்லை. இதை எல்லாம் நான் மேலிடத்துக்கு தகுந்த ஆதாரத்தோடு தெரிவிக்க முடியும். ஆனால் நான் அப்படி செய்யவில்லை. உங்களுக்கு உதவி செய்யவே நினைக்கிறேன்”
“நீங்கள் என்னை வேண்டுமென்றே டார்கெட் செய்கின்றீர்கள்.”
“என்னுடைய வேலையைச் செய்கிறேன். உங்களை நீண்ட காலமாக பில்லிங்கில் மாற்ற முடியவில்லை. நான் இதற்குப் பதில் சொல்லும் நிலையில் இருக்கிறேன்”
“நீங்கள் கொடுத்த வேலையை முடிக்க என்னால் என்னுடைய ரத்தத்தைக் கொடுக்க முடியாது”
“குரலை உயர்த்த தேவையில்லை. நீங்கள் மடலை அனுப்பி வையுங்கள். இப்போது நீங்கள் போகலாம்”
பதில் எதுவும் சொல்லாமல் அவன் வேகமாக எழுந்து சென்றான். அடுத்த இரண்டு நாட்கள் உடல்நலக் குறைவென்று விடுப்பு எடுத்தான். அதற்கும் அடுத்த நாள் வீட்டிலிருந்து பணி என்று மடல் அனுப்பியிருந்தான். மூன்றாம் நாள் திடீரென மனிதவள மேலதிகாரியிடமிருந்து இப்படியொரு மடல் வந்தது.
“உங்களது பணியாளர்களிடம் உங்களைப் பற்றி கருத்துகளைக் கேட்டறிய உள்ளோம். நீங்கள் அவர்களைத் தவறான வழியில் நடத்துவதாக எங்களுக்குத் தகவல் வந்திருக்கிறது. தீபாவளிக்கு மறுநாள் வீட்டிலிருந்து வேலை செய்யலாம் சொல்லிவிட்டு, மறுநாள் வந்து எல்லோரையும் கையெழுத்து இடச்சொல்லி வற்புறுத்தியிருக்கின்றீர்கள். அப்படி கையெழுத்திடாதவர் மேல் காழ்ப்புணர்வுடன் நடந்து கொள்கின்றீர்கள். நாங்கள் அலுவலக கையேட்டைப் பார்த்து விட்டோம். தீபாவளிக்கு மறுநாள் ஒருசிலர் கையெழுத்து இட்டிருக்கின்றீர்கள். அன்று சிசிடிவியில் பார்த்தோம். யாருமே அலுவலகத்துக்கு வரவில்லை. மேலிடத்தின் அனுமதியின்றி அலுவலகத்துக்கு வரவேண்டுமென்று சொல்ல உங்களுக்கு அனுமதியில்லை. அதே போல அலுவலகத்துக்கு வராமல் வந்தது போலக் கையெழுத்து இடுவது மிகவும் கண்டிக்கப்பட வேண்டிய விஷயம். இது உங்களுக்கு நாங்கள் கொடுக்கும் முதல் எச்சரிக்கை. இதைவிட முக்கியமான மற்றொரு பிரச்சனையை ஆதாரங்கள் இணைக்காமல் சொல்லியிருக்கிறார்கள். குழுவின் பெண்கள் மீது வெறுப்பை காட்டுகின்றீர்கள் என்றும், சில ஆண்களிடம் சகஜமாகப் பழகி நன்றாக சொல்லிக் கொடுக்கின்றீர்கள் என்றும் புகார் வந்திருக்கிறது. உங்கள் மொழி பேசும் நண்பர்களிடம் மென்மையாகவும், பிறமொழி பேசுபவர்களிடம் கடுமையாகவும் நடக்கின்றீர்கள் என்றும் அதே புகார் தெரிவிக்கிறது. ஆகவே நீங்கள் வரும் மாதம் முழுவதும் கண்காணிப்பில் இருப்பீர்கள் என்று தெரிவிக்கிறோம். இந்த விஷயங்களில் எல்லாம் நீங்கள் இனி எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்று உங்களுக்கு நாங்கள் வலியுறுத்துகிறோம்.”
***
லாவண்யா சுந்தரராஜன்
ஆசிரியர் தொடர்புக்கு lavanya.sundararajan@gmail.com