Tuesday, April 23, 2024
Homeபுனைவுசிறுகதைபிறப்பொக்கும்

பிறப்பொக்கும்

சுஷில்குமார்

திகாலை நான்கு மணிக்கு வந்துசேரும் முதல் கே.எஸ்.ஆர்.டி.சி. பேருந்திற்காகக் காத்திருந்தான் பண்டா சுப்பிரமணி. நீலநிறச் சட்டை, வெள்ளை வேட்டிச் சீருடை. நிமிடத்திற்கு ஒருமுறை சீப்பை எடுத்து நீண்ட முடியைச் சீவி விட்டுக் கொண்டான். பக்கத்தில் நின்றவன் அவனது இடுப்பில் ஒரு விரலால் குத்த இவன் துள்ளிக் குதித்து, “சும்மாக் கெடயாம்ல, தொட்டிப்பயல..” என்று சொல்லி இன்னொருவனின் பின்னால் சென்று நின்றான். எதிரே இருந்த காவல் நிலையத்திலிருந்து ஏட்டு சதாசிவம் கொட்டாவி விட்டுக்கொண்டு இறங்கி வந்தார்.

“என்னடே.. ராவு ஒறக்கமில்லையோ? மொகஞ் செரில்லய..” என்று ஏட்டு சதாசிவம் கேட்டார்.

“நமக்கெங்க அண்ணாச்சி ராவு ஒறக்கம்? ஒங்க தங்கச்சிக்க அநியாயத்துல வீட்ல ஒறங்கிட்டாலும்.. ராவு பூரா ஒரே ஒப்பாரி.” என்று சலித்துக்கொண்டான் சுப்பிரமணி.

“யாம்டே? சிக்கப் போட்டுட்டுப் போயி பெகளம் வச்சியோ?  அருமாந்தப் பிள்ளல்லா டே? ஒனக்கு அவ வாச்சதுனால பொழச்சன்னு நெனச்சுக்க.. இல்லன்னா குடிச்சிட்டு ரோட்டுலல்லா டே விழுந்து கெடந்துருப்ப?”

“அது செரிதா அண்ணாச்சி.. ஆனா, ஓவர் கொடச்சலு.. நா என்ன வச்சிட்டா வஞ்சகம் பண்ணுகேன்? என்னமோ அமைய மாட்டுக்கு.. அவளுக்கு ஆஸ்பத்திரிக்கிப் போயி டெஸ்ட்டு பண்ணனுமாம்…”

“என்னத்துக்கு டே டெஸ்ட்டு?”

“அது.. அவளும் மாசந்தோறும் தரிச்சிரும்னுதா பாக்கா.. வீட்டுக்குள்ளயே வேற கெடக்கால்லா, எத்தன நாளக்கிதா சொக்காரனுக குத்துவாக்கு கேட்டுக் கொமையது? இந்த எளவெடுப்புல பக்கத்துல போனா சாமானம் செத்துப் போயில்லாக் கெடக்கு!”

“அடக் கோம்பயா, அப்ப அவ சொல்ல மாதி ஒரு எட்டு ஆஸ்பத்திரிக்கி போயி பாக்க வேண்டியான டே?”

சுப்பிரமணி தலையைச் சொறிந்து கொண்டு தயங்கி நின்றான்.

“என்ன டே தலயச் சொறியா?.. போயிப் பாத்தாத்தான என்ன கொறன்னு தெரியும்? பொம்பள அவளே வரேங்கா, ஒனக்கென்ன டே?”

“இல்ல அண்ணாச்சி.. நமக்கு ஒரு நாணக்கேடு.. ஒருவேள நமக்குத்தா பிரச்சினன்னு சொல்லிட்டான்னு வைங்கோ.. பொறவு ஊருக்குள்ள தலக்காட்ட முடியாதுல்லா? ஏற்கெனெவே நம்மள சுப்பம்ம, சுப்பம்மன்னு கொமைக்கானுகோ..”

“அது உள்ளதாக்கும்.. என்னத்தச் சொல்லடே.. நா எத்தன பேரப் பாக்கேன்.. நல்லா வெள்ளையுஞ் சொள்ளையுமா இடிதடியனுவ மாதி இருக்கானுவ, சின்னப் பயக்களுக்க தொடயத் தடவிட்டு வந்து ஸ்டேஷன்ல அடி வாங்குகானுவ.. ஒனக்கக் கத பரவால்ல பாத்துக்க. பின்ன, இதெல்லாம் கடவுளுக்க படைப்புல்லா டே.. நம்ம என்ன சொல்லதுக்கு?”

சுப்பிரமணியின் நடை, பேச்சு, உடல் மொழி எல்லாம் ஒருவித நளினமாக இருக்கும். கைவிரல்களை ஆட்டி ஆட்டிப் பேசுவதும், ‘சீ, போ’வென்று மற்றவர்களின் தோளில் தட்டுவதும், நேர் வகிடெடுத்து பின்னோக்கிப் படியச் சீவிய முடியும், நெற்றியின் நடுவில் அவன் விரும்பி வைக்கும் குங்குமப் பொட்டும், ஜவ்வாது வாசனையும் மற்றவர்கள் அவனை விசித்திரமாகப் பார்க்கச் செய்த விசயங்கள். கூடவே, எப்போதும் வெற்றிலை போட்டு இரு விரல்களை வாயில் வைத்து துப்பிக்கொண்டிருப்பான். பொதுவாக மிக அமைதியானவன். தன்னைக் கிண்டல் செய்பவர்களிடம் திருப்பி ஏதும் சொல்லாமல் கொஞ்சிக் கொஞ்சி சிரித்துக் கொண்டிருப்பான். அதனாலேயே நண்பர்கள் மத்தியில் ஒரு செல்லப்பிள்ளை மாதிரியும் இருந்தான். தினசரி காலை, முதல் பண்டா போணி அவனுக்குக் கொடுத்துவிட்டுத்தான் மற்றவர்கள் ஆரம்பிப்பார்கள். ஒருவகையில் அதை ஒரு அதிருஷ்டமாகக் கூட நினைத்தார்கள்.

சுப்பிரமணி வீட்டில் இருக்கும் நேரத்தில் அவன் வீட்டு முற்றத்தில் ஐந்தாறு பெண்கள் உட்கார்ந்து பாடு பேசிக்கொண்டிருப்பார்கள். முதலில் அவன் மனைவி சீதாவுக்கு இதெல்லாம் பிடிக்காமல் இருந்தாலும் அவனது அப்பாவித்தனத்தைப் பார்த்து அவளும் கூட உட்கார்ந்து பேச ஆரம்பித்தாள். எல்லாரும் சுற்றிச் சுற்றி அவனையே கிண்டல் செய்து கொண்டிருப்பார்கள். இவனும், எல்லாரையும் மைனி, மைனி என்று அழைத்து சளைக்காமல் அவர்கள் மத்தியில் இருந்து ஊர்க்கதைகள், பல குடும்பங்களின் ரகசியங்கள், தான் பண்டா போடும்போது நடந்த சுவாரஸ்யமான அனுபவங்கள் என சொல்லிச் சிரித்துக் கொண்டிருப்பான்.

ஒருநாள் பேச்சினிடையே சுப்பிரமணி, “இன்னா வாறேன் மைனி…” என்று சொல்லி எழுந்தான்.

“அட இரியும் ஓய்.. அங்க என்னத்தப் பாக்கப் போறீரு…பொண்டாட்டி ஒன்னும் ஓடிப் போயிற மாட்டா..” என்று சொல்லி அவன் கையைப் பிடித்து இழுத்தாள் ஒருத்தி.

“அட, இரிங்க மைனி இன்னா வாறேன்.. முட்டிட்டு வருகு..” என்று சொல்லி நெளிந்தான்.

“புடிட்டி அவன.. புடிச்சிக் கீழப்போடு…” என்று சொல்லி இன்னொருத்தி அவனது காலைப் பிடித்து இழுக்கப் போக தவறுதலாக அவனது வேட்டியைப் பிடித்து இழுத்து விட்டாள். அவிழ்ந்த வேட்டியை சுருட்டி வாரிக்கொண்டு, “சீ..போங்க மைனி” என்று கூச்சத்தோடு சொல்லி அரை அம்மணமாக வீட்டிற்குள் ஓடினான் சுப்பிரமணி.

சீதா கோவத்தில் மூச்சிரைத்து நிற்க, “எட்டி, இந்த மைனி செஞ்ச வேலயப் பாரு.. வேட்டிய அவுத்து வுட்டுட்டா பாத்துக்கோ.. சவத்துவுள்ளயோ.. நம்மளச் சீண்டாம இருக்க முடியாது போல…” என்று சொல்லிச் சிரித்தான்.

“எப்பப்பாரு பொட்டச்சிய சீலைக்கவத்த போய்க் கெடயும்.. எந் தலையெழுத்து..” என்று சொல்லித் தன் தலையில் அடித்தாள் சீதா.

….

“எட்டி சுப்பம்ம, இங்க வாட்டி, ஏட்டுக்க கூட பொறவு போலாம்ட்டி.. இங்க வாங்கம்லா” என்று கத்தினான் பண்டா ராஜன்.

“அண்ணாச்சி.. நீங்க போங்க.. இவனுக சும்மாக் கெடக்க மாட்டானுக.. போயி என்னான்னு கேக்கேன்..” என்று சொல்லி கைகளைப் பக்கவாட்டில் வீசி நடந்தான் சுப்பிரமணி.

அவன் அருகில் வந்ததும், “மக்ளே, ஒனக்கு ஒரு நல்ல சீன் பாத்து வெச்சிட்டு நிக்கேன்.. நீ என்னடே ஏட்டுக்க குண்டியத் தடவிட்டு நிக்க?” என்று சீண்டினான் பண்டா கோமு.

“போங்கல.. வேற வேலயத்துத் திரியியோ.. ” என்று வெட்டிக் கொண்டு திரும்பி நின்றான் சுப்பிரமணி.

“லேய்.. சட்டுனு பொரிச்ச மீனு வண்டிக்கக் கீழப் பாரு.. விட்டா கெடைக்காது.. ஜென்ம மோட்சமாக்கும் பாத்துக்கோ…”

காவல் நிலைய சுற்றுச்சுவரின் பக்கவாட்டில் பொரித்தமீன் தள்ளுவண்டிக் கடையின் துருப்பிடித்த சக்கரங்களுக்கிடையே தெருவிளக்கு வெளிச்சத்தில் தொடை தெரிய, கிழிந்த பாவாடையுடன் படுத்துக் கிடந்தாள் பௌதியம்மைக் கிறுக்கி. அநேகமாக வட இந்தியாவில் ஏதோ ஒரு ஊரைச் சார்ந்தவளாகத்தான் இருக்க வேண்டும். மொழியென்று அவளுக்கு எதுவுமில்லை. ஹோட்டல்கள், டீக்கடைகள் முன் போய் கொஞ்ச நேரம் நிற்பாள். கிடைத்தவற்றை உண்டு பூட்டிய கடைகள் முன்போ, பேருந்து நிலையத்திலோ படுத்துக் கிடப்பாள். சமீப காலங்களில் அவளது இருப்பிடம் காவல் நிலைய சுற்றுச்சுவர்தான்.

பௌதியம்மைக்கு ‘பௌதியம்ம’ எனப் பெயர் வந்தது எப்படியென யாருக்கும் தெரியாது. கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக இங்கேதான் இருக்கிறாள். அழுக்கடைந்த பூப்போட்ட பாவாடை, அங்கங்கே கிழிந்திருக்கும் முழுக்கைச் சட்டை, சடை பிடித்த முடி. ஆனாலும் எப்போதும் சிரித்த முகம். நன்றாக அழுக்கு தேய்த்துக் குளிப்பாட்டிப் புடவை கட்டிவிட்டால் கையெடுத்துக் கும்பிடத் தோன்றும்.

தங்கள் பாவங்களைக் கடலில் கரைத்துவிட கன்னியாகுமரிக்கு வரும் பலரில் ஒரு சிலர் இப்படித் தங்கள் பாரங்களையும் விட்டுச் சென்று விடுவார்கள். அவர்கள் கிறுக்குகளாகச் சுற்றித் திரிந்து சில வருடங்களில் காணாமல் போவார்கள், இல்லையென்றால் கடற்கரையிலோ பேருந்து நிலையத்திலோ பிணமாகக் கிடப்பார்கள். ஒரு சிலர் மனநிலை தெளிவாகி சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதும் உண்டு.

….  

முதல் பேருந்து வந்து நிற்க, சுப்பிரமணி சென்று, “சேட்டா, ரூம் வேணோ? ஃபர்ஸ்ட் கிளாஸ் ரூம் சேட்டா.. சீப் ரேட்டாணு.. சார் வாங்க, பெஸ்ட்டு ஹோட்டல், பெஸ்ட்டு ரேட்டு.. வெல்கம் டு கேப் காமரின்.. வாங்கம்மா.. வாங்கக்கா..” என்று கூவினான். உள்ளூரைச் சார்ந்தவர்கள் இறங்கி அவனைப் பார்த்துப் புன்னகைத்துச் செல்ல, ஒரு இளம் தம்பதியர் இறங்கி அவனை அணுகினர்.

“எக்ஸ்கியூஸ் மீ, ஹோட்டல்லாம் எப்பிடி?” என்று கேட்டார் அந்த நபர். அவரது மனைவி அவரது கையை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு தூக்கக் கலக்கத்தில் நின்றாள்.

“நம்ம ஹோட்டல் பெஸ்ட்டு சார்.. ஐ.எஸ்.ஒ ஹோட்டலாக்கும்.. ஸீ வியூ ஜம்முன்னு இருக்கும்.. சன்ரைஸ் நேரா மூஞ்சில விழும் பாத்துக்கோங்க.. ரேட்டு பாத்தெடுத்து பேசலாம், வாங்க..” என்று அவர்களது பயணப்பெட்டிகளில் ஒன்றைத் தூக்கினான். பக்கத்து ஆட்டோ ஸ்டாண்டில் நின்ற முதல் ஆட்டோவின் பின்பகுதியில் பெட்டிகளை வைத்து அவர்களை ஏறிக்கொள்ளச் சொன்னான்.

முருகவிலாஸ் டூரிஸ்ட் ஹோமில் இறங்கி உள்ளே நுழையும்போது, ஒரு ரூம் பாய், “மேனேஜர் சார்…மேனேஜர் சார்..” என்று அலறியடித்துக் கொண்டு வந்தான். வரவேற்பு அறையின் நாற்காலிகளில் கால் நீட்டி அரைத்தூக்கத்தில் இருந்த மேனேஜர் திடுக்கிட்டு எழுந்து, “என்னடே, எதுக்குக் கீறுக இப்பிடி? தூக்கத்தக் கெடுத்துட்டான் பாவிப்பய..” என்றார்.

ரூம் பாய் முகம் வியர்த்து வடிய, “சார்…..302-ல உள்ளருந்து யாரோ கதவ டம்மு டம்முன்னு தட்டுகாங்க சார்.. ஒன்னு வாங்க சார்…என்னன்னு பாத்துருவோம்..” என்று பதறினான்.

“302-ல அந்த நாக்பூர் பார்ட்டி தானடே.. மாப்ள, பொண்டாட்டி, புள்ள…என்ன? எதுக்கு டே கதவத் தட்டப் போறா? நைட்டு பேய்ப்படம் எதாம் பாத்தியோ? போயி நல்லாப் பாரு டே..” என்று சொல்லியவர் சுப்பிரமணியைப் பார்த்து தலையை ஆட்டினார்.

“சார்.. அஞ்சு நிமிசமா நின்னு கேட்டேன் சார்.. யாரோ தட்டிட்டே இருக்கா சார்.. எதாம் பிரச்சினயா இருக்கப் போகு சார்..”

எதையோ யோசித்த மேனேஜர், “செரி, நீ இவாள என்ட்ரி போடு.. நா பாக்கேன்.. சுப்பம்ம, நீ வா டே எங்கூட..” என்று நடந்தார். சுப்பிரமணி அவரது பின்னால் தரையில் பாதங்களை உரசி உரசி நடந்தான்.

மேனேஜர் நீண்ட நேரம் அழைப்பு மணியை அடித்தும் கதவைத் தட்டியும் உள்ளிருந்து எந்தப் பதிலும் இல்லாததால் பதற்றமடைந்து, “சுப்பம்ம, இது மத்தக் கேஸு மாதில்லா இருக்கு.. சனியன் நமக்குன்னு வந்து வாய்க்கிப் பாரு.. நேத்தக்கித்தான் டே-டூட்டி முடிஞ்சி நைட்-டூட்டிக்கி வந்தேன்..” என்று தலையில் கையை வைத்து உட்கார்ந்து விட்டார்.

“அண்ணாச்சி, இன்னொரு சாவி உண்டும்லா, தொறந்து பாப்பமா?” என்று  கேட்டான் சுப்பிரமணி.  

“இது உள்ள கொண்டி போட்ட மாதில்லா டே இருக்கு.. கதவ ஒடைக்க வேண்டியதாங் கேட்டியா.. ஒம் பார்ட்டி வேற கீழ நிக்க டே..”

“நம்ம ஒடச்சிருவோம் அண்ணாச்சி.. உள்ள என்ன பிரச்சினயோ, யாரு கண்டா?” என்று சொல்லி கன்னத்தில் கையை வைத்து நின்றான்.

பாறைக்கோல் கம்பியை வைத்து கதவை உடைத்துத் திறந்தான் சுப்பிரமணி. கதவைத் திறந்ததும் காலடியில் ஏதோ தட்டுப் பட கீழே குனிந்து பார்த்தவன் சட்டென பதறி சுவற்றில் சாய்ந்து விட்டான். நீலநிற தேவதை உடையில் ஒரு மூன்று அல்லது நான்கு வயது பெண் குழந்தை வாயிலும் மூக்கிலும் நுரை தள்ளிக் கிடந்தாள். சட்டென அறையின் உள்ளே ஓடியவன், “முத்தாரம்மா!.. பாவியோ. பாவியோ.. இப்பிடிப் பண்ணிட்டாள..” என்று நெஞ்சைப் பிடித்துக்கொண்டு கத்தினான். அழகான அந்த இளம் மனைவி நாக்கைக் கடித்துக் கொண்டு மின்விசிறியில் தூக்கில் தொங்க, கணவன் கழுத்து அறுபட்டு இரத்தத்தில் மிதந்தான்.

அந்தக் குழந்தையை அள்ளி எடுத்துத் தன் தோளில் சாய்த்துக்கொண்டு வேகமாக கீழே ஓடினான். “ஒன்னுல்ல மக்களே, ஒன்னுல்ல மக்களே….இன்னா ஆஸ்பத்திரிக்கிப் போயிருவம்.. ஒன்னுல்ல மக்களே” என்று அந்தக் குழந்தையிடம் சொல்லிக்கொண்டே ஓடினான். குழந்தையிடம் எந்த அசைவும் இல்லை. அதன் மெல்லிய உதடுகள் நீலம் பாரித்திருந்தன.

பண்டாவுக்கு வந்த ஆட்டோவில் ஏறி அரசு மருத்துவமனைக்கு விரைந்தான். ICU-வில் வைத்து தீவிர சிகிச்சை அளித்த மருத்துவர் வெளியே வந்து, “ஒன்னும் சொல்ல முடியாதுப்போ.. பாப்பம் அந்தப் பிள்ளக்கி என்ன எழுதிருக்குன்னு.. நீ ஸ்டேஷன்ல வெளக்கமாச் சொல்லிறு என்ன, பொறவு நம்மத் தலயக் கொடைவானுகோ” என்று சொல்லிச் சென்றார்.

….

படபடத்து வீட்டில் நுழைந்தவன் ஒரு ஒயர்க்கூடையை எடுத்து அதில் ஒரு வேட்டி, ஒரு போர்வை, ஒரு தூக்குவாளி மற்றும் ஒரு தம்ளரை எடுத்துக் கொண்டு கிளம்பப் போனான்.

“என்னத்தான்? இப்பத்தா வந்தியோ? எங்கக் கெளம்பிட்டயோ? மூஞ்சி ஏன் இப்பிடியிருக்கு?” என்று கேட்டாள் சீதா.

“அது ஒரு சூசைடு கேசு பாத்துக்கோ.. மனசு கேக்கல்ல.. பெத்தப் பிள்ளயக் கொல்ல எப்பிடித்தான் மனசு வருகோ! நா பொறவு வந்து சொல்லுகேன்..” என்று சொல்லி ஆஸ்பத்திரிக்கு ஓடினான்.

பகல் முழுதும் ஆஸ்பத்திரியில் இருந்து தேவையான எல்லாவற்றையும் செய்தான். இடையில் விழித்த குழந்தை, “பப்பா…மம்மா…பப்பா” என்று சிலமுறை புலம்பி மீண்டும் மயக்கத்தில் ஆழ்ந்தது.  

இரவில் சீதாவிடம், நடந்ததையும் குழந்தையின் நிலைமையையும் சொல்லிக் கொண்டிருந்தவன், “எட்டி, நம்ம அந்தப் பிள்ளய வளப்பமாட்டி? எனக்கு அந்தப் பிள்ள மூஞ்சி கண்ணுக்குள்ளயே நிக்கி பாத்துக்கோ.” என்று கேட்டான்.

ஒரு நொடி கூட யோசிக்காமல், “செரி.. நீங்க அந்தப் பிள்ளய எடுத்துட்டு வாங்கத்தான்..” என்றாள் சீதா.

அடுத்த நாள் காலை, அந்தக் குழந்தைக்காக ஒரு நாய்க்குட்டி பொம்மையை வாங்கிச் சென்றான். அவனை எதிர்கொண்ட நர்ஸ், “வம்பாப் போய்ட்டண்ணே.. பச்ச உயிருல்லா? இப்பத்தான் வெட்டி வெட்டி இழுத்துட்டுக் கெடந்து.. எங் கைலத்தாம் போச்சி பாத்துக்கங்க.. ஸ்டேசனுக்கு சொல்லியாச்சு.. போஸ்ட்மார்ட்டத்துக்கு அனுப்பனும்லா!” என்றாள்.

சுப்பிரமணி உள்ளே சென்று அந்தக் குழந்தையின் அருகில் உட்கார்ந்தான். அதன் கை, கால், முகத்தைத் தடவிக் கொண்டே வெடித்து அழுதான். சத்தம் கேட்டு நர்ஸ்கள் வந்து சுற்றி நிற்க, குழந்தையின் நெற்றியில் முத்தமிட்டு பொம்மையை அதன் அருகில் வைத்துவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் நடந்தான்.

நல்ல சுற்றுலா சீசன் ஆரம்பித்தது. பண்டாத்தொழில் மும்முரமாக நடக்கும் ஒரு சில மாதங்கள். ஒரு அறை பிடித்துக் கொடுத்தால் மற்ற நாட்களில் இருபதோ முப்பதோ கிடைக்கும். சீசன் நாட்களில் நூறு, இருநூறு கூடக் கிடைக்கும்.

கருப்பு, வெள்ளை, சிவப்பு நிறங்களிலான கடல்மண், சிறு சங்குகள், சிப்பிகள் இவற்றைச் சிறு கவர்களில் அடைத்துச் சரமாக்கி விற்றுக் காசு பார்க்கும் சிறுவர்கள் முதல் பிளாட்பாரக் கடைகள் போட்டிருக்கும் உள்ளூர் சிட்டாவட்டிக்காரர்கள், வடகிழக்கு மாநிலங்களிலிருந்து வந்து ஸ்வெட்டர் மற்றும் சால்வைகளை விற்றுப் பிழைக்கும் குடும்பங்கள் வரை பலதரப்பட்ட மனிதர்களும் வாழ்வில் ஒருபடி மேலே சென்றுவிடும் நாட்கள்.

சுப்பிரமணி ஒரு குடும்பத்திற்கு அறை பிடித்துக் கொடுத்துவிட்டு திரும்பி வரும் வழியில் சமீபத்தில் சென்றுவந்த கருத்தரித்தல் மைய மருத்துவர்கள் கூறிய பல்வேறு முறைகளைப் பற்றி யோசித்துக்கொண்டு நடந்தான். ‘அடுத்த செகண்ட் இருப்பமான்னு தெரில, இதுல ஒரு பிள்ளய பெறதுக்கு என்னா ட்ராமால்லாம் போட வேண்டியிருக்கு!’

மலையாளப் பள்ளிக்கூடத்தின் வாசலில் பௌதியம்மைக் கிறுக்கி நிற்பதைப் பார்த்து ஒரு கணம் நின்றான். ஏதோ வித்தியாசம் தெரிய அவள் அருகே சென்றான். புத்தம்புதிய பாவாடை சட்டை அணிந்திருந்தாள். தலைமுடி சடை நீக்கப்பட்டு சீராகச் சீவி ரிப்பன் கட்டப்பட்டிருந்தது. பக்கத்திலிருந்த பெட்டிக்கடையில் இரண்டு தேங்காய் பன் வாங்கி அவள் கையில் கொடுத்தான். அவள் அவற்றைப் பிய்த்து சிரித்துக்கொண்டே தின்றாள்.

அடுத்த பண்டா பிடிக்க நடந்தவனுக்கு சட்டென ஒரு குழப்பம். ‘பௌதியம்ம ஒரு மாதியா ஜொலிக்காள, என்னன்னு தெரில!’

….

சில மாதங்கள் கடந்தன. ஒருநாள் அதிகாலை, வேலைக்கு நடந்து சென்று கொண்டிருந்தவன் யாரோ அழும் சத்தம் கேட்டு நின்றான். இருட்டில் எதுவும் சரியாகப் புலப்படவில்லை. அழுகைச் சத்தம் வந்த திசையில் நெருங்கிச் சென்று பார்த்தான். மலையாளப் பள்ளிக்கூட வாசலில் கால்களை விரித்து நிமிர்ந்து படுத்துக் கிடந்த பௌதியம்மை கையையும் காலையும் ஆட்டிக்கொண்டு அழுது கொண்டிருந்தாள். அருகே சென்று பார்த்தவன் ஒருநொடியில் வியர்த்துவிட்டான். பௌதியம்மையின் பாவாடையின் அருகே ஈரம் மெதுவாகப் படர்ந்து விரிந்துகொண்டிருந்தது. அவள் தன் பெரிய பானை வயிற்றைக் கைவைத்துத் தடவியும் அமுக்கியும் கிடந்து துடித்தாள்.

சட்டென ஏதோ தோன்றியவன் பள்ளிக்கூடத்தின் பின்புறமாக ஓடினான். அங்கிருந்த குளுவக்குடிக்குச் சென்றவன் காக்கி அரைக்கால் சட்டையணிந்த ஒருவனை அழைத்துக் கொண்டு ஓடி வந்தான்.

வந்தவன், “கொடம் ஒடஞ்சிட்டு கேட்டியாண்ணே?” என்று சொல்லிச் சட்டென பௌதியம்மையின் கால்களை விரித்து பாவாடைக்குள் கைகளை விட சுப்பிரமணி முகத்தைத் திருப்பிக்கொண்டான். பௌதியம்மை பல்லைக் கடித்துக்கொண்டு ஊளையிட்டாள். ஒருசில நிமிடங்களில் அந்த அதிகாலையைப் புனிதமாக்கிய ஒரு புதிய உயிரின் அழுகைச் சத்தம் கேட்டு சுப்பிரமணியின் கைகளும் கால்களும் நடுங்கின.

“எண்ணே இங்கண வா, எஞ் ஜோப்புக்குள்ள ஒரு வெத்தலக் கவரு இருக்கு.. அதுல பாக்குக்கத்தி இருக்காப் பாரு..”

சுப்பிரமணி நடுக்கத்தோடு சென்று அவனது கால்சட்டைப் பையிலிருந்து ஒரு கவரை எடுத்தான். அதிலிருந்த மடக்குக் கத்தியைப் பிரித்து நீட்டினான்.

“இப்பிடி வாண்ணே.. வசமா அறுக்கணும் பாத்துக்க…”

சுப்பிரமணி தயங்கி நின்றான்.

“என்னண்ணே பாத்துட்டு நிக்க.. பௌதியம்ம நம்ம தங்கச்சில்லா.. நம்ம தான் தாய்மாமன்மாரு பாத்துக்க.. வா, மருமவ பொறந்திருக்கால்லா, வந்து கொடிய அறுண்ணே”

தன்னையறியாமலே ஒரு கேவல் எழுந்து வர, பத்திரமாக அந்தத் தொப்புள் கொடியை அறுத்தவன் அதைத் தூக்கி எறியப் போனான்.

“எண்ணே, அதத் தூரப் போடாத.. இங்கக் கொண்டா…அந்தா ஒரு பேப்பர் கெடக்குப் பாரு..அதுல பொதிஞ்சி வையி.. ஒரு மேட்டரு உண்டும்..”

இதையெல்லாம் கேட்டு அரை மயக்க நிலையிலிருந்த பௌதியம்மை முகத்தில் வழக்கமான சிரிப்பு மீண்டு வந்திருந்தது.

ஒரு மாதம் இருக்கும். அந்தக் கைக்குழந்தையை எடுத்துக் கொண்டு மகிழ்ச்சியாக வீட்டிற்குள் நுழைந்தான் சுப்பிரமணி.

“எத்தான், யாருத்தான் இந்தப் பிள்ள? அழகோல இருக்குத்தான்..” என்று கேட்டு குழந்தையை வாங்கினாள் சீதா.   

“சொன்னம்லாட்டி.. நம்ம பௌதியம்மக் கிறுக்கி பெத்தான்னு…”

ஒரு கணம் சுப்பிரமணியை குழப்பமாகப் பார்த்த சீதா, “எதுக்கு இத இங்கத் தூக்கிட்டு வந்தியோ?” என்று சொல்லிக் குழந்தையைத் தரையில் கிடத்தினாள்.

“குளுவக்குடிலருந்து இவள வாங்கிட்டு வர என்னா பாடுபட்டேன் தெரியுமா? தரவே மாட்டன்னு நெலயா நிக்கானுக.. எதோ அவ்வளே பெத்த புள்ள மாதி…” என்று சிரித்தான் சுப்பிரமணி.

“எத்தான்.. எதுக்கு இங்கக் கொண்டு வந்தியோன்னு கேட்டேன்” என்று எரிச்சலில் கத்தினாள் சீதா.

ஒரு நொடி பயந்தவன், “எட்டி, நம்ம வளப்பம்ட்டி இந்தப் பிள்ளய..” என்று சொல்லி சீதாவின் தோளைத் தொட்டு நெளிந்து நின்றான்.

சட்டென அவனது கையைத் தட்டி விட்ட சீதா, “என்ன என்ன நெனச்சீரு வோய்? என்ன நெனச்சீருன்னு கேக்கேன்? அந்தக் கிறுக்குத் தேவடியாக்கப் பிள்ளய நா எடுத்து வளக்கணுமா வோய்.. நல்லா கேட்டுப்புடுவம் பாத்துக்கோரும்..” என்று கத்தினாள்.

“எட்டி, என்னட்டி இப்பிடிச் சொல்லுக?.. பச்சப் பிள்ளக்கி என்னட்டி தெரியும்? சாமி மாதில்லா இருக்கா? மகாலட்சுமிட்டி.. சாமியே நமக்குத் தந்தப் பிள்ளல்லா..”

“சாமி மயிரு.. எதாங் கேட்டுட்டுப் போயிரப்படாது பாத்துக்கிடும்.. அன்னிக்கி எவளோ ஹிந்திக்காரிக்கப் பிள்ளயக் கொண்டு வாறேம்ன்னீரு, இப்ப வந்து கிறிக்கிக்கப் பிள்ளய வளப்பம்ங்கீரு.. ஒங்கம்ம சொல்லமாதி என்ன மலடின்னு முடிவு பண்ணிட்டீரு என்னா?”

“எட்டி, யாம்ட்டி இப்பிடிப் பேசுக.. நமக்க நேரம், ஒன்னும் அமைய மாட்டுக்கு..”

“எப்பிடி வோய் அமையும்? நீரு ஆம்பிளையா இருந்தால்லா அமையும்?”

சில நிமிடங்கள் எதுவும் பேசாமல் இருந்தவன், “எட்டி, எனக்கப் பொறப்பு அப்பிடி.. நா என்ன செய்ய? நீ ஒருத்திதான் இதச் சொல்லல்ல.. இப்ப, நீயும் என்ன சங்கடப்படுத்துகியா? செரி விடு.. நானும் எத்தன மருந்துதான் குடிக்கது? டாக்டர் சொன்னாருல்லா, பொறுமையா இரிங்க, எல்லாம் வரும்னு? அது, வரும்போ வரட்டும்.. குளுவக்குடில இந்தப் பிள்ளக்கி என்னத்தக் கெடைக்கப் போகு? இது பொறக்கும்போ எனக்குத் தோணிட்டு பாத்துக்க.. இது எனக்கப் புள்ளன்னு.. நமக்கு மொதப் புள்ளயா இருக்கட்டும்ட்டி..” என்று சொல்லி பெருமூச்சு விட்டு நின்றான்.

“ஓ.. அப்பிடியா.. கத அப்புடிப் போகுதோ?.. அப்ப ஒமக்கப் பிள்ளதானா இது? போயும்போயும் கிறுக்கிக் கூடப் போயி கெடந்துருக்கீரு என்னா? சீ..த்தூ.. கொள்ளாம் ஒம்ம ஆம்பளத்தனம்.. தூ..” என்று சொல்லி வீட்டை விட்டு வெளியே ஓடினாள் சீதா.

சட்டென பிள்ளையைத் தூக்கிக் கொண்டு விறுவிறுவென குளுவக்குடியை நோக்கி நடந்தான் சுப்பிரமணி.

அடுத்த சில வருடங்களில் இரண்டு முறை கர்ப்பமாகி இரண்டு ஆண் குழந்தைகளைப் பெற்றெடுத்தாள் பௌதியம்மை. அந்தக் குழந்தைகளும் குளுவக்குடியில் வளர பௌதியம்மையைக் கூட்டிக் கொண்டு போய் கர்ப்பப்பை நீக்க அறுவை சிகிச்சை செய்து வைத்தது ஒரு சேவை அமைப்பு.

அதன் பிறகு பௌதியம்மையை எங்கும் பார்க்க முடியவில்லை.

..

– சுஷில்குமார் – நாகர்கோயிலைச் சேர்ந்த இவர். கிராமப்புற மாணவர்களின் மாற்றுக் கல்வி சார்ந்த ஆசிரியப் பயிற்சி மற்றும் பள்ளிகள் மேலாண்மைப் பணிகளை கோவையில் இருந்து செய்து வருகிறார். தொடர்புக்கு [email protected]

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular