Monday, October 14, 2024

பிரயாணம்

வைரவன் லெ.ரா

1

ஸ்தரு.. முன்னாடி நல்ல வெளஞ்ச மாங்கா கெடக்கே, எடுத்து உள்ள வைக்கேன். சிலிவி மீனு கொண்டு வருவா. வெரலு நீளத்துக்கு சாள வாங்கி கொழம்பு வை. கெழங்கு கெடக்கான்னு அடுக்காளைல பாரு.’ தாமஸ் பேசிக்கொண்டிருக்கும் போதே, கதவைத் தட்டும் ஓசை கேட்டது. அவர் எழுந்து கதவைத் திறக்கவும், மேரி உள்ளே வந்தாள், அவள் கையில் கடுங்காப்பி இருந்தது. “எஸ்தருக்கு பொறவு நீ போடுக காப்பிதான் மோளே எனக்கிஷ்டம். நாராஜனும், தாணுவும் வாறேன்னி சொன்னானுவ. வந்தா உள்ள கூட்டிட்டு வா சரியா”, மேரி அறையின் வலது பக்கம் பார்த்தாள். ஏற்கனவே இரண்டு நாற்காலிகள் கிடந்தன. அறையின் ஒருபக்கம் கண்ணாடி அலமாரியில் பழைய கருப்பு பிரேம்கள், லென்ஸ் டப்பாக்கள் சீராக அடுக்கப்பட்டிருந்தன. “அப்பா, அவங்க உள்ளதான் இருக்காங்க. நீங்க பாக்கலையோ”, நாற்காலிகளை நோக்கித் தலையைத் திருப்பினாள். “கண்ணாடி கட ஒடமஸக்காரனுக்கே கண்ணு அவிஞ்சு போய் கெடக்கு. மோளே அந்த மேசைல இருக்க கண்ணாடியக் கொண்டா.” மேரி கண்ணாடியை எடுத்துக் கையில் கொடுத்துவிட்டு வெளியே சென்றாள். ‘நாரோயில்ல மழக் கொஞ்சம் கூடித்தான் போவுது. வெளிய வேலையா எறங்கினா மழ அடிக்கும். வீட்டுக்குள்ள இருந்தா மழ வெறிச்சிரும். கடைல வியாவாரம் எப்படி போகுதுல தாணு. ஆளு பெருத்துட்டியே. சுகரு கூடிப் போச்சுன்னு நெனைக்கேன். நாராஜனா பாத்தியா. ஒடுசிலியா இருக்கப்போய் ஒரு சோக்கேடும் வரல.’ தாமஸ் சொல்லிவிட்டு தன் வயிற்றைத் தடவிக்கொடுத்தார். ‘எஸ்தரு எனக்க டூல் பாக்ஸ எங்க. இந்த கண்ணாடி பிரேம்மு கொஞ்சம் ஆடுகு. குட்டி ஸ்குருவ கொஞ்சம் திருக்கி விடணும்.’

‘அப்பா. வெளிய நிக்க மாங்காமரத்த வெட்டணும்’ சாலமன் அரை டிரௌசரில், சட்டை அணியாமல் தாமஸ் முன் வந்துநின்றான்.

‘வெட்டுனா, நெழலு இருக்காது மக்ளே’

‘இல்ல வெட்டணும். எனக்கு வீட்டுல இருந்து பாத்தா வானமே தெரிய மாட்டுக்கு’ அழ ஆரம்பித்தான்.

‘மரத்துக்கிடையோடி பாரு, வானம் அழவோலத் தெரியே’ தாமஸ் சொல்லிக்கொண்டிருக்கும் போதே, எஸ்தர் ஜெபிப்பது காதில் விழுந்தது.

‘பிதாவே உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்.’

தாமஸ் மெதுவாக எழுந்து, நின்றவிடத்தில் இருந்தே முட்டிப்போட்டு, எஸ்தரோடுச் சேர்ந்து ஜெபிக்க ஆரம்பித்தார்.

‘அன்றியும், சகோதரரே, நித்திரையடைந்தவர்களினிமித்தம் நீங்கள் நம்பிக்கையற்றவர்களான மற்றவர்களைப் போலத் துக்கித்து, அறிவில்லாதிருக்க எனக்கு மனதில்லை. இயேசுவானவர் மரித்து பின்பு எழுந்திருந்தாரென்று விசுவாசிக்கிறோமே; அப்படியே இயேசுவுக்குள் நித்திரையடைந்தவர்களையும் தேவன் அவரோடே கூடக் கொண்டு வருவார்.’

இருண்ட அறையின் உத்திரத்தில் கண்கூசும் வெண்மை நிறத்தில் வானம் உண்டாக, அங்கே வண்ண நட்சத்திரங்கள் மின்னின. வானில் இருந்து மெல்லிய கோடாய் வெளிச்சம் வெட்ட தேவதைகள் அன்னம் போல பறந்து வந்தார்கள். தாமஸ் எஸ்தரின் கைகளை இறுகப் பிடித்துக்கொண்டார்.

2

“ஹலோ விவேக். சாலமன் பேசுறேன்டா”, விவேக்கிற்கு சாலமனின் குரல் வழக்கமான உற்சாகத் தொனியில் இல்லாதது போலத் தோன்றியது.

“சொல்லுடா.. யு.எஸ்ல இருந்து வந்திருக்கேன்னு கேள்விப்பட்டேன். இப்போவாச்சும் ஞாபகம் வந்துச்சே”

“அம்மா எறந்துட்டாங்கடா” சாலமனின் குரல் தாழ்ந்தது.

“என்னடா ஆச்சு” விவேக் பதற ஆரம்பித்தான்.

“அம்மாக்கு சடன்னா அட்டாக்ன்னு சிஸ்டர் கால் பண்ணினா. உடனே கிளம்பி வந்துட்டேன். ஆல்ரெடி ஓபன் ஹார்ட் சர்ஜரி வேற பண்ணிருந்தாங்க. எல்லாம் ரெண்டு நாளுல முடிஞ்சிடுச்சு. உனக்கு தெரிஞ்சு வேளச்சேரி இல்ல பள்ளிக்கரணை பக்கம் எலெக்ட்ரிக் சுடுகாடு இருக்கா?”

“சரி, மொத நா வீட்டுக்கு வரேன்.”

விவேக், சாலமன் வீட்டிற்கு அவனின் அப்பாவையும் அழைத்து வந்தான். அது ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பு. சாலமனின் தங்கை சென்னையிலும், அவன் அமெரிக்காவிலும் வசிக்க பூர்வீக வீட்டை விற்றுவிட்டு, இங்கே அம்மாவும் அப்பாவும் குடியேறிவிட்டதாக சாலமன் சொல்லிய ஞாபகம். காலை ஒன்பது மணி, ஆதலால் குடியிருப்பின் எல்லா வீட்டிலும் ஏதோ ஒரு சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. சாலமன் வீடு தரைத்தளம், எதிரே இருந்த வீட்டின் கதவு இன்னும் திறக்கப்படாமல் பால் பாக்கெட் வெளியே கிடந்தது. சாவு வீட்டிற்குரிய எந்த அறிகுறியும் இல்லை. வெளியே இரண்டு பேர் நின்றுகொண்டிருந்து, எதையோ சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். விவேக்கும் அவனின் அப்பாவும் கதவு திறந்து கிடக்க வீட்டிற்குள் நுழைந்தார்கள். முன்னறையில் ஃபிரிசெர் பெட்டியில் சிறுபிள்ளை உறங்குவதைப் போல எஸ்தர் கிடந்தாள். மேலே பெயருக்கு கூட ஒரு மாலையில்லை. தான் கொண்டு வந்திருந்த மாலையை ஃபிரிசெர் பெட்டியின் மேலே போட்டு எஸ்தரை வணங்கவும், சாலமன் படுக்கையறையில் இருந்து வெளியே வந்தான். மொத்தமாக அங்கே ஐந்து பேருக்கு மேல் இல்லை.

“வாடா” சாலமன் விவேக்கை மெதுவாக அழைத்தான்.

“ரொம்ப கஷ்டப்பட்டுட்டாங்க பாவம். நிம்மதியா போகட்டும். மேரி அக்கா இவங்களுக்கு காபி கொடுங்க” சாலமன் அழைக்கவும், வீங்கிய கண்களோடு மத்திய வயதுப் பெண்ணோருத்தி அடுக்களைக்குள் நுழைந்தாள்.

“இவங்க” விவேக் கேட்கவும்,

“மெய்ட். இவங்கதான் பாத்துக்கிட்டாங்க”

“சரி, உன்னோட வொயிப் குழந்தைங்கலாம். சிஸ்டர் எங்க”

“யு.எஸ்ல இருந்து டக்குன்னு கிளம்பி வந்தேன். அதுக்கே ஒரு லட்சம் பக்கம் ஆயிடுச்சு. அவங்கள வர வேண்டாம்ன்னு சொல்லிட்டேன். ஜெனி இவளோ நேரம் இங்கதான் இருந்தா. வீட்டுக்குப் போய் ரிஃபரெஷ் ஆயிட்டு வரேன்னு போய் இருக்கா. பக்கத்து அபார்ட்மெண்ட் தான். வாக்கபிள் டிஸ்டர்ன்ஸ். அவதான் பாவம் ராத்திரி உறங்கவேயில்ல, அழுதுட்டே இருந்தா. நான்தான் அனுப்பி வச்சேன். அவளோட ஹஸ்பண்ட் வெளியே நின்னாரே. நீ பாக்கலயா. அவளோட டாட்டருக்கு நெக்ரோஃபோபியா, அவங்க மாமியார் வீட்டுல விட்டுட்டு தான் வந்தா. அவசரத்துல வந்துட்டேன். எல்லாம் முடிச்சிட்டு மூனு நாள்ல கெளம்பணும்”

“உங்க அப்பா எங்க”

“நேத்து நைட் ரூமுல போய் பூட்டிகிட்டவருதான். உள்ளேயே இருக்காரு. அப்பப்போ வெளிய வந்து பாக்குராரு. ரொம்ப டிஸ்டர்ப் ஆயிட்டாரு. அம்னீஷியா வேற. அம்மா இறந்ததயே மறந்துட்டாருன்னு நெனைக்கிறேன். எலெக்ட்ரிக் சுடுகாடு கொஞ்சம் விசாரிச்சு சொல்லு. சாயந்திரம் டைம் கேட்டுக்கலாம்”

விவேக் சரி என்பது போல தலையசைத்தான். அருகிலே அவனுடைய அப்பாவும் சாலமனையே வெறித்துக்கொண்டு நின்றார். அவர் மெதுவாக விவேக்கை கண்ணைக் காட்டி வெளியே அழைத்தார்.

“அவங்க சொந்த ஊருக்கு கொண்டு போகலையா? புள்ளங்க நல்லா சம்பாதிக்க வெளிநாடோ, வெளியூரோ போறாங்க எல்லாம் சரிதான். பொறவு எல்லாமுமே அவங்க முடிவுதான் இல்லையா, இருந்தாலும் அவங்க அப்பாக்கிட்ட ஒரு வார்த்த கேக்க சொல்லுடா. இவங்களுக்கு சொந்தகிந்தம் யாரும் இல்லையா. நம்மள சேத்தே ஆறு பேருக்கு மேல இல்ல.” அவரின் குரல் தழுதழுத்தது.

“அப்பா. உங்களுக்கு பிரஷர் இருக்கு. நான் அவன்கிட்ட பேசுறேன். நீங்க இருக்கீங்களா? இல்ல கிளம்புறீங்களா?”

“போப்பா.. மனசே கனத்துடுச்சு. நா இருக்கேன். எல்லாம் முடியட்டும். பாவம் ஆளும் பேரும் இல்லாம இருக்காங்க”

“சரிப்பா. வெளிய சேர் போடுறேன். உக்காந்துக்கோங்க”

விவேக் வீட்டினுள் நுழையும் போது, சாலமன் அவனின் அப்பாவை கைத்தாங்கலாக அழைத்து முன்னறைக்கு கூட்டி வந்தான். வந்தவர் ஒரு நிமிடம் எஸ்தரின் முன்னே நின்றார். அவரின் கண்கள் சிவந்து இருந்தன, மாறாக ஒருதுளி கண்ணீர் சிந்தவில்லை. உள்ளே அவர் தங்கியிருந்த அறையில் இருந்து, இரண்டடி மரக்குருசு ஒன்றையெடுத்து வந்தவர், அதனை ஃபிரிசெர் பெட்டியின் மேலே வைத்தார். சாலமனை அழைத்து ஃபிரிசெர் பெட்டியின் அருகிலேயே ஒரு நாற்காலியைப் போடச்சொல்லி அமைதியாக உட்கார்ந்துகொண்டார். அவரின் பார்வை எஸ்தரை விட்டு விலகவில்லை. எஸ்தரின் தலை மெதுவாகத் தாமஸை நோக்கித் திரும்புவது தெரிந்ததும், அவரின் உதடுகள் விரிந்தன.

3

“தாமஸ், கண்ணாடி ரெடி ஆயிட்டுங்களா? இன்னைக்கி தாரேன்னு சொன்னீங்களே”, வெள்ளை வேஷ்டியும் ஜிப்பாவுமாக நெடுநெடுவென வளர்ந்த ஒல்லியான மனிதர் உள்ளே வர, தாமஸ் வந்தவரை வரவேற்று நாற்காலியில் அமரவைத்தான்.

“ஸ்தோத்திரம் சார், ஒரு நிமிஷம்.” புன்னகையோடு சொல்லிவிட்டு, மர டிராயரில் இருந்த கருப்பு நிற டப்பாவைத் திறந்து, புதிய கண் கண்ணாடியை சுவரில் மாட்டியிருந்த இயேசு படத்தின் முன்னே வைத்து சிலவினாடிகள் வேண்டிக்கொண்டு அவரிடம் நீட்டினான்.

“உமக்க தெய்வ நம்பிக்கையே பாதி கண்ணத் தொறந்து, ஆண்டவருக்க ஒளிய காட்டிடும்வே. நாரோயில் ஜில்லால இப்போ உனக்கா கொடி தானடே பறக்கு. ஆனா கைச்சுத்தமும் ராசியும் விடாம பிடிச்சிக்கணும். எவ்ளோ பைசா ஆச்சுடே.” தாமஸ் கேட்ட ரூபாய்க்கு மறுகேள்வி இல்லாமல் ஜோபியில் இருந்த நோட்டுகளை நீட்டி கண்ணாடியை மாட்டிக்கொண்டு ஜம்மென்று வெளியே சென்றார்.

அவர் வெளியே சென்றதும், அருகில் மளிகைக்கடை வைத்திருக்கும் தாணுலிங்கம் உள்ளே வந்தான். “அண்ணாச்சி, வந்தவரு வன்கைன்னு நினைக்கேன். பிளசறு காருல வந்துட்டு போறாரு.”

“ஆமா. நம்ம குலசேகரத்துல இருந்து பேச்சிப்பாற போற வழி நெடுக ரப்பர் எஸ்டேட் இருக்குல்ல. அதுல பாதி இவாளுக்க சொத்து தான்.”

“இந்த கண்ணுல மாட்டுற கண்ணாடிக்கு அவளோ மவுசு பாத்தீளா”

“பொறவு. சிலருக்கு பொடி எழுத்து தெரியாது, சிலருக்கு தூரத்துல இருக்கது தெரியாது. வயசானா வெள்ள எழுத்து தெரியாது. டாக்டர்ட்ட போய் கண்ண செக் பண்ணி, சரியான லென்ஸ் மாட்டுனக் கண்ணாடிய போட்டோமின்னு வை. எல்லாம் சரி ஆய்டும். ஐட்டம் செஞ்சு வாங்க திருநவேலிக்கும், திருவந்திரத்துக்கும் அலைஞ்சுட்டு இருந்த ஆளுகளுக்கு நம்ம நாரோயில்லயே இப்ப கட வந்தாச்சுல்லையா. அலைய செலவு மிச்சம் தானல. இப்போ இங்கேயே ஊருப்பட்ட கண்ணு ஆசுவத்திரி வந்தாச்சு. டாக்டர் சொல்ல அளவுக்கு நம்ம லென்ச பொருத்தி பிரேம் மாட்டணும். பிரேமுக்கு கொஞ்சம் மாடல் வச்சுருக்கோம். இதுக்காண்டி மட்டும் மாசம் ரெண்டு வாட்டியாச்சும் திருநவேலி போய்ட்டு வரணும்”

“அது சரிண்ணே. இப்போ சினிமால கண்ணாடி போடுகான்லா இந்த கமலஹாசன், ரஜினி, சரத்பாபுலாம். அவாளுக்கும் அப்போ கண்ணுல சோக்கேடோ?”

“ரஜினின்னா மூனு முடிச்சு படத்துல கமலஹாசன தண்ணில முக்கி கொள்ளுவான்லா அந்தப் பயதானே”

“அண்ணாச்சிக்கு இந்த கண்ணாடி, கட, வீடு, சர்ச் தவிர ஒன்னும் தெரியாது” சொல்லிவிட்டு தாணுலிங்கம் நமட்டுச் சிரிப்பு சிரித்தான்.

“தெரிஞ்சு என்ன எழவுக்குல. நம்ம பொண்டாட்டி பிள்ளைகள பாத்தா போதாதா? அதுக்கு வரும்படி கொடுக்க தொழிலும் தெரியும். கூட வம்பளக்க நீயும் நாகராஜனும் போதும்லா. ரெண்டு பேரு வாயி நீளத்துக்கும் சிலோன்னுக்கே போயிரலாம்”

“இப்படியே பேசிட்டு கெடையும்”

“யாமுல. மூப்பாச்சுன்னா எம்பிள்ள எங்கள ராசா கணக்கா பாத்துகிடுவான். வேறு என்ன செய்யன்ணும்ங்க”

“சரி கொதிக்காதையும்”

சொல்லிவைத்தாற் போல நாகராஜன் பதினொரு மணி பதிவு டீயைக் கொண்டு வந்தான்.

“எப்போ தாணுலிங்கத்துக்க தொண்ட நாலு ரதவீதிலயும் கேக்காம்ல. தொண்டைக்குழிய பாத்தியாண்ணே பழையாரு ஆழத்துக்கு. கொறச்சுப் பேசு. பொறவு உனக்க கடைல கொண்டக்கடலைலயும், பொறிக்கடலைலயும் பொடி ஜல்லிய போட்டு எடைய கூட்டது ஊருக்கே தெரிஞ்சு போவும்” நாகராஜன் சொல்லவும்,

“ஒனக்கு தெரியாத நாராஜா. அரிசில மண்ணு. எண்ணெய்ல குருடாயிலு. என்னென்ன உண்டோ எல்லாத்தயும் சேத்துப்புடுவான். வியாபாரக் காந்தம்லா தாணுலிங்கம்”

“மெதுவா பேசுங்க அண்ணாச்சி. அப்புறம் எவனுக்க காதுலயாச்சும் உழுந்துன்னா உண்மன்னு நெனச்சுக்குவான். ஏற்கனவே என் சொக்காரனுக்குலாம் கடைல நாலு ஆளு நின்னுன்னா கும்பி எரியும். இதுல இதையும் சேத்து நம்மள நடுத்தெருக்கு கொண்டு வந்துருவானுவ”

“அப்புறம் நாங்க என்ன பொய்யா புழுகுகோம். என்ன சொல்லுக நாராஜா”

தாணுலிங்கத்திற்கு இதை நிறுத்த வழி தெரியும். சட்டென்று “அண்ணாச்சி கண்ணாடில சந்தேகம் கேட்டேனே அதச் சொல்லுங்க மொத” இந்தக் கேள்வி வரவும் மீண்டும் பழைய தாமஸ் ஆனான்.

“அது கலர் கண்ணாடிலால. ஸ்டைலுக்குன்னு நெனைக்கேன். இப்போ மண்டகனத்துக்கும் கண்ணாடி போட்டா சரி ஆய்டும்ன்னு வெள்ளக்காரன் சொல்லுகானுக. கொஞ்ச வேலை இருக்கு, இன்னும் ரெண்டு ஆர்டருக்கு பிரேம் போட்டு வைக்கணும். ராத்திரி பேசுவோம்ல”

“சரிண்ணே நானும் வாரேன். கடைல கொஞ்சம் ஆளு நிக்கி.” தாணுலிங்கமும் நாகராஜனும் அவரவர் கடைகளுக்குத் திரும்பினர்.

தாமஸ் கடைப் பக்கத்தில் மளிகைக்கடை வைத்திருக்கும் தாணுலிங்கத்திடனும் டீக்கடை வைத்திருக்கும் நாகராஜனிடம் மட்டுமே பேசுவான். வேறு யாரிடமும் பெரிதாகப் பேசுவதில்லை, பழக்கமுமில்லை. நாகராஜா கோயிலில் இருந்து தபால் நிலையம் செல்லும் சாலையில் ஆசாரிமார் தெரு ஆரம்பிக்கும் முனையில் இருந்தது பிரைட் ஆப்டிகல்ஸ். காலை ஒன்பது மணிக்கே கடையைத் திறந்துவிடுவான். மதியம் இரண்டிலிருந்து நான்கு மணி வரை உணவு இடைவேளை. அதன்பின் திறக்கப்படும் கடை இரவு ஒன்பது மணிக்குத்தான் சாத்தப்படும். கடைக்கு வந்துபோக சைக்கிள் ஒன்றுண்டு. வீட்டில் நிறுத்தப்பட்டிருக்கும் செட்டாக் ஞாயிறு தேவாலயம் செல்லவும், பொண்டாட்டி பிள்ளைகளை அன்றைக்கு வெளியே அழைத்துச் செல்லவும் உபயோகப்படும், மற்ற நேரம் அமுக்கமாய் வீட்டின் வாசலில் படர்ந்து வளர்ந்திருக்கும் மாமர நிழலில் ஓய்வெடுக்கும்.

எஸ்தர் கொல்லாங்கோட்டுக்காரி, ஞாயிறு தவிர்த்து மீன் இல்லையேல் தொண்டையில் சோறு இறங்காது. கூட அவித்த மரச்சீனிக்கிழங்கோ, பீன்ஸ் துவரமோ, நெத்திலி அவியலோ தொடுகறிக்கு உண்டு. ஞாயிறுக்கு எனத் தனியே டபிள்யூ.சி.சி சந்திப்பிலிருந்து வெட்டூர்மணிமடம் செல்லும் சாலையோரம் விற்கப்படும் வெள்ளைப்பன்றி இறைச்சியோ அல்லது சேவியர் மாட்டிறைச்சி கடையில் இருந்து கறியோ உண்டு. இதனாலே மத்தியானம் உண்டு உறங்கியவன் கடையைத் திறக்க சிலநாட்கள் ஐந்து மணி ஆகலாம். ஆட்கள் அவன் கடை திறக்கும் வரையிலும் காத்திருக்கும். காத்திருந்த கோபம் உள்ளுக்குள் இருந்தாலும் தாமஸைக் கண்டால் யாரும் சுடுசொல் சொல்வதில்லை. அப்படி ஒரு முகம் அவனுக்கு. பிள்ளைகளில் மூத்தவன் சாலமன் இப்போது ஸ்காட் பள்ளிக்கூடத்தில் பத்தாம் வகுப்பும், இளையவள் ஜெனிபர் டதி பள்ளிக்கூடத்தில் ஆறாம் வகுப்பும் முறையே படிக்கிறார்கள். தாமஸுக்கு கர்த்தரும் அத்தனை சுகந்தமான வாழ்வைத்தான் அளித்திருந்தார். இதனாலே கேரளாவிற்கோ, வேளாங்கண்ணிக்கோ வருடா வருடம் கண்டிப்பாய் ஒரு ஆன்மிக யாத்திரையுண்டு. அந்நேரம் கடையின் வெளியே வெள்ளை போர்டில் கடை அடைக்கப்பட்ட விவரம் தொங்கவிடப்பட்டிருக்கும். தாமஸ் என்னதான் வேலை இருந்தாலும் குடும்பத்திற்கு நேரம் ஒதுக்குவதில் குறையொன்றும் வைப்பதில்லை.

“எட்டி எஸ்தரு.. கொமருப் பிள்ளையே புறப்பட்டு வந்தாச்சு. நீ என்ன மினிக்கிட்டுக் கெடக்கா” முன்னறையில் இருந்து கத்தினான்.

“அவ ஒரு சுடிதார எடுத்துண்டு மாட்டிட்டு வந்திருவா. யனக்கு சாரி கட்டாண்டமா. யனக்கும் சுடிதார் எடுத்து கொடும்ன்னு சொன்னா கேக்கீறா? எல்லாருக்கும் டீ போட்டு, பாத்திரத்தக் கழுவி. கூட ஒமக்கு ஒம்ம சட்டையும் பேண்டும் எங்க கெடக்கும்ன்னு தெரியாது. அதயும் நான்தான் எடுத்துக் கொடுக்கணும். இப்போதான் நானே மேலு கழுவி உள்ள சாரி கட்ட வந்தேன்” படுக்கையறையில் இருந்து குரல் கொடுத்தாள்.

“உனக்கு முப்பத்தஞ்சு வயசு ஆச்சிடி. உனக்காண்டி தான் படத்துக்கே வாரேன் கேட்டியா. பொறவு டிக்கெட் கெடைக்காது. பிள்ளைகளே ரெடி ஆயி நிக்கி. சாலமா அப்பாக்க வண்டிய உருட்டி வெளிய நிப்பாட்டு மக்ளே.” சாலமன் வெளியே செல்லவும், கூடவே ஜெனிபரும் சென்றாள்.

“ராத்திரிக்கு பரோட்டாயும் பீப்பும் வெளிய சாப்பிட்டுட்டு வரணும். நா ஒன்னியும் சமைக்கல்ல”

“பேசிட்டே இருந்தா. சாரி எப்புடி கட்டுவா. பேசாம கட்டிட்டு வாடி. பிள்ளைகளு வெளிய போய்ட்டு. நா வேணும்னா உள்ள வரவா எஸ்தரு”

“பாதி கெழவன் ஆயாச்சு. ஆசையப் பாத்தீரா யேசப்பா”

“நடிக்காத எஸ்தரு.. நைட் மோளதுக்கே பயந்துட்டு சின்ன புள்ள போல என்ன எழுப்புவ. தனியா இருக்க பயப்படுவேன்னு உள்ள வாரேன்”

“உள்ள வராதயும்.. ஜெம்பர் போடல”

“அப்போ இன்னா வாரேன்”

4

“சாலமா ஒரு நிமிஷம் இங்க வா” விவேக் அழைக்கவும் வெளியே வந்தான்.

“ஆதம்பாக்கத்துல எலெக்ட்ரிக் சுடுகாடு இருக்கு. அப்பாட்ட ஒரு வார்த்த கேளு. ஒங்கள விட பெரிய எழப்பு அவருக்குத்தான்”

“அவரு அம்மா இறந்ததையே சாயந்திரம் மறந்துடுவாரு. அவர்ட்ட என்னப் பேச?” சாலமன் சொல்லிமுடிக்கவும், விவேக்கின் அப்பாவினுடைய குரல் காட்டமாகக் கேட்டது.

“உனக்கு அம்மாதான் எறந்துருக்காங்க. அவருக்கு கூட இத்தன வருஷம் இருந்த துணையாக்கும் எறந்திருக்காங்க. வெளிநாடு போய்ட்டு, நாலு ஊரப் பாத்துட்டா அறிவு கூடித்தாண்டா போகுது”, விவேக்கிற்கு அப்பா சொல்லியது உண்மையில் கொஞ்சம் ஆசுவாசம்தான், எப்படியும் அவன் பேசினால் சாலமன் கேட்கப் போவதில்லை.

“இல்ல அங்கிள். அப்பாக்கு ஞாபக மறதி, அப்பப்போ ஒரு மாரி..” நீட்டி முழக்கிய சாலமனின் குரல் இறங்கியது.

“அதுக்குன்னு.. சரி நீ பேசாண்டாம், நா பேசுறேன்” விவேக்கின் அப்பா சட்டென்று எழுந்து தாமஸின் அருகே சென்றார்.

“சார்..” சொல்லிவிட்டு தாமஸின் முதுகை மெல்ல தட்டிக் கொடுத்தார். தாமஸ் வந்தவரை நிமிர்ந்து பார்க்கவும் ஏனோ அவரின் கண்களில் நீர் பெருக்கெடுத்தது. தாமஸ் எழுந்து அவரை இறுக அணைத்துக்கொண்டார். “ஆசுவத்திரி போகணும்னா சின்னப் பிள்ள போல அழுவா. பயப்படுவா. இனி எதுக்கு ஆசுவத்திரி மருந்து மாத்திரைலாம்”, குழந்தையின் அழுகையைப் போலத் தேம்பித்தேம்பி அழுதார்.

அவர்கள் இருவரும் நின்றபடியே பேசிக்கொண்டிருந்தார்கள். இருவரின் கைகளும் ஒன்றுக்கொன்றுக்குள் பிணைந்து தனியே கதைகள் பேசின. சாலமன் விவேக்கின் அருகில் அமர்ந்தபடி கொதித்துக்கொண்டிருந்தான்.

“என்னடா அங்கிள் இவளோ கோபப்படுறாரு.”

“நானா இருந்தா, இருக்க கோபத்துல ரெண்டு அடி முதுகுல விழுந்துருக்கும்” விவேக் சொல்லிவிட்டு, உள்ளுக்குள் சிரித்துக்கொண்டான்.

5

“அப்பா.. நானும் தங்கச்சியும் பேசித்தான் முடிவு பண்ணிருக்கோம். அம்மாக்கும் சம்மதம் தான். நீங்கதான் இழுக்குரீங்க”

தாமஸ் எஸ்தரைப் பார்த்தார். அவளின் கைகள் வியர்த்துக் கொட்டியது, சேலையால் அதைத் துடைத்துக்கொண்டிருந்தபடியே, கண்ணசைவிலே இதில் தனக்கும் விருப்பமில்லை எனக் காட்டினாள்.

“இல்ல மக்ளே, நீ சொல்லது தெற்றுன்னு சொல்லல. ஆனா வீட்ட விக்க சொல்லுக. சென்னைல தாமசம் பண்லாம்னு சொல்லுக. பொறவு எங்களுக்குன்னி இருக்கது இந்த வீடும், கடயும், வெளிய நிக்க மாங்காமரமும், பழய செட்டாக்கும் தான. கூட பெரிய பழக்கம்லா அப்பாக்கு கெடயாது. இதில மெட்ராஸ் வந்தா. இருக்க ஒக்குமான்னு யோசிக்கேன்” தாமஸ் கனிந்த குரலில் சொல்லிவிட்டு சாலமனின் முகத்தைப் பார்ப்பதைத் தவிர்த்தார்.

வீட்டின் உள்ளறையில் அவரவர் துணைகளும் குழந்தைகளும் இருக்க, அங்கேயிருந்து பிள்ளைகளின் கீச்சிடல் கேட்டபடியிருந்தது. எஸ்தருக்கு பிள்ளைகள் ஆசையோடு வந்த காரணம் அப்போதுதான் விளங்கிற்று.

“அப்பா.. நானும் தான் யு.எஸ் போகப் பயந்தேன். ஒலகம் ரொம்ப பெருசுப்பா. எதுக்கு இந்த சின்ன வட்டத்துலயே இருக்கீங்க. வந்து பாருங்க. ஒங்களுக்கும் வயசு அறுவது தாண்டியாச்சு. தங்கச்சி சென்னைல தான இருக்கா. ஒத்தாசிக்கு கூடமாட வரமுடியும். தனியா இங்க இருக்கதுனால ஒரு யூஸும் இல்ல. ஆறு சென்ட்டுக்கு மேல இடம் கெடக்கு. வித்தா கெடைக்க ரூவாயுல நல்ல அபார்ட்மெண்ட்ல வீடு வாங்கலாம். என்னோட பிரண்ட்ஸ்ட்ட பேசிட்டேன். நீங்க சரின்னு சொல்லுங்க” சாலமன் பேசிக்கொண்டிருந்த போது தாமஸ் சாய்வு நாற்காலியில் அமர்ந்துகொண்டு விட்டத்தையே வெறித்தார்.

“அண்ணா.. அப்பாக்கு சம்மதம் இல்லைனா ஃபோர்ஸ் பண்ணாண்டாம். அவங்க இருக்க இடத்துல இருக்கட்டுமே. அவங்க இங்க இருந்தாதான் நானும் அம்மைக்க வீடுன்னு ஊருக்கு வரமுடியும்” ஜெனிபர் சொல்லவும், அறையில் இருந்து, அவளுடைய கணவனின் குரல் கேட்டது. “ஜெனி, பாப்பா அழுகாப் பாரு. உள்ள வா”, அங்கே எந்தக் குழந்தையின் அழுகுரலும் கேட்கவில்லை.

“மக்ளே, சென்னைல இந்த மாரி ஒரு ஓட்டு வீடு வாங்க முடியுமான்னு பாரு. முன்ன நல்ல பெரிய மாங்காமரம். சாயங்காலம் வெளிய ஒரு சேர் போட்டு நிழலுல உக்காந்துப்பேன். நாராஜன் கட மாரி ஒரு டீக்கட. சாயந்திரம் நடக்க ஒரு ஸ்டேடியம். இறச்சி வாங்க சேவியர் கட மாரி ஒன்னு. நானும் எஸ்தரும் போக சர்ச். நம்ம சப மாறி மரமும் செடியும் இருக்கணும். ஒங்க அம்மைக்கு பொறத்தால கருவேப்பிலயும், கொய்யாக்க மரமும் வேணும்.” தாமஸ் பேசிமுடிக்கும் போது எஸ்தரின் கண்கள் நிறைந்துவிட்டன.

“அப்படியே நாராஜா மாமாவையும், தாணுலிங்க மாமவையும் கூட்டிட்டு போகணும்னு சொல்லுங்க. நீங்க கேக்க மாறி வேணும்னா. இங்க இருந்து எல்லாத்தையும் பிச்சி கொண்டுபோய் அங்க நட்டுவைக்கணும்” சாலமன் பற்களைக் கடித்துக்கொண்டே சொன்னான்.

அதன்பிறகு அவர்கள் யாரும் பேசிக்கொள்ளவில்லை. பிள்ளைகள் இருவரும் காரை எடுத்துக்கொண்டு வெளியே சென்றார்கள். மற்றவர்கள் அப்பாவிடமும் அம்மாவிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பினார்கள். சாலமனும், ஜெனிபர் கணவனும் எதுவும் சொல்லிக்கொள்ளாமல் அவர்களை வேகமாகக் கடந்து போனார்கள்.

வீட்டை விற்க சாலமனே எல்லா ஏற்பாடும் செய்தான். அவர்கள் பத்திரப் பதிவை மாற்றிக் கொடுத்த அன்றே கடையை அங்கே வேலை பார்க்கும் ஜானிடமே ஒப்படைத்து வாடகையை தன் வங்கிக் கணக்கிற்கு மாதாமாதம் செலுத்துமாறு சாலமன் கேட்டுக்கொண்டான். அன்றைக்கு தாமஸும் தாணுலிங்கத்தையும் நாகராஜனையும் பார்க்கக் கடைக்குச் சென்றார். மளிகைக் கடையை தாணுலிங்கத்தின் மருமகனும் டீக்கடையை கொஞ்சம் பெரிதாக காபி ஷாப்பாக விரிவாக்கி நாகராஜனின் மகனும் நடத்திக்கொண்டிருந்தார்கள்.

“அண்ணாச்சி பிள்ளைகளு கூப்பிடுதுன்னா போய்தானே ஆக முடியும். என்ன கொஞ்ச நாளைக்கு ஒங்கள தேடுவோம். அப்புறம் பழகிடும் பாத்தீங்களா.” தாணுலிங்கம் சொல்ல,

“நொட்டுவான். சாயந்திரம் இனி ஸ்டேடியத்துக்கு நடக்க போகாண்டாம்ன்னு சந்தோஷம் இப்போவே மொகத்துல தெரியே” நாகராஜன் பதிலுக்குச் சொன்னார்.

“பிபி சுகர் இருக்கதுனால நடக்க வரல அப்படித்தானே. எனக்காண்டி தான் தாணு வாரான்”

“ஐயோ அண்ணாச்சி, அவன் ஒரு ஆளுன்னு சொல்றத கேக்கீங்களே”

தாமஸ் வெகுநேரம் அவர்களோடு பேசிக்கொண்டிருந்தார். உண்மையில் அவர்கள் விடைப்பெற்றுக் கொள்ளும்போது மூன்று பேரின் கண்களும் நீரில் தளும்பின.

6

தாமஸ் அலைபேசியை எடுத்து யார் யாரிடமோ மெதுவாகப் பேசினார். பின்னர் நாற்காலியிலே அமர்ந்துகொண்டார். விவேக்கின் அப்பா வெளியே வரவும் சாலமனும் விவேக்கும் என்ன சொல்ல வருகிறார் என்பது போல பவ்யமாக எழுந்து நின்றார்கள்.

“சாலமன், அப்பாகிட்ட பேசினேன். அவருக்கு இங்க அம்மாவ எரிக்கிறதுல இஷ்டம் இல்ல. இன்னொன்னு உங்க மதத்துல எரிக்கிற வழக்கமும் கெடையாது. என்னதான் மெட்ராஸ்ல இருந்தாலும், அவங்க சொந்த ஊர் சபையிலே பொதைக்கிறத தான் அவரும் விரும்புராரு. அதுதான் நியாயமும்.”

“இல்ல அங்கிள். எப்படி அங்க கொண்டு போறது. எதுவும் பிளான் பண்ணல. பொறவு அங்க யாரையும் எனக்கு அவ்வளவா தெரியாது.”

“தாமஸ், நாகர்கோயில்ல யாரோ நாகராஜன், தாணுலிங்கத்துட்ட பேசிருக்காரு. ஒங்களோட சபை பாதர்ட்டயும் பேசியாச்சாம். பிரச்சனை ஒன்னும் இல்ல. விவேக், ஆம்புலன்ஸ் ஃபிரிசெரோடு கொண்டு போற மாரி வேணும். உன்னோட பிரென்ட்ஸ்ட்ட உடனே விசாரிச்சிட்டு சொல்லு, நேரம் அதிகம் இல்லப்பா”

சாலமனுக்கு எதுவும் புரியவில்லை. ஆனால் முகம் அவன் ஆத்திரப்படுவதை வெளிக்காட்டியது. வேகமாக தாமஸ் அருகில் சென்றான்.

“அப்பா.. என்ன நெனச்சுட்டு இதுலாம் செய்றீங்க”. தாமஸ் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்.

“என்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு தான முடிவு பண்ணிருக்கணும்”

“எஸ்தரு ரொம்ப நாளா ஊருக்கு போகணும்ன்னி கேட்டுட்டே இருந்தா. நாங்களும் ஒனக்க கிட்ட கேட்டுப் பாத்தோம். மெட்ராஸ் வந்ததுக்கு பொறவு, நாங்க நீ சொல்றத மட்டும் தான கேட்டோம். ஊருக்கு போகாண்டாம்ன்னு சொன்ன, சரின்னு கேட்டுக்கிட்டோம். மொத்தமே நாலு வாட்டி எறப்புக்கும் விஷேச வீட்டுக்குமா நீயே கூட்டிட்டு போய்ட்டு வந்துருவ. மீதி நேரம் இந்த நாலு சொவருதான எல்லாமுமே. இப்போ அவதான் ஊருக்கு போயே ஆகணும்ங்கா. அப்பாட்ட எதுக்கு மக்ளே வெப்ராளப்படுக..” தாமஸின் வார்த்தைகள் அதன் பிறகு சொற்களால் நிரம்பாமல் கண்ணீரால் நிரம்ப, சட்டென்று புன்னகைக்க ஆரம்பித்தார். “பாரு, எஸ்தரு உன்ன தான் பாக்கா. அவ சொன்னது காதுல விழுகா சாலமா. ஊருக்கு ஒரு வாட்டி போய்ட்டு வந்திருகேன் மக்ளேன்னு கேக்கா. காதுல விழுந்துச்சா. எட்டி ஒனக்க மொவன் பக்கத்துல தான இருக்கான். அவன்கிட்ட பேசு.”, சாலமன் அப்பாவையும் அம்மாவையும் மாறிமாறிப் பார்த்தான். “எல்லாத்தையும் நானே சொல்லணும். பிள்ளைட்ட பேச எதுக்கு கெடந்து முழிக்காளோ. மக்ளே இந்தவாட்டி அவளுட்ட சொல்லிட்டேன். சாலமன் என்னதான் இருந்தாலும் நம்ம பிள்ளைலா? சொன்னா கேப்பான். நம்ம மொவன அப்படியா வளத்தோம். இன்னொன்னு ஜெனிபரும் பாவம், அவளையும் கூட்டிட்டுப் போவோம். அதுவும் அம்மைக்க வீட்டப் பாக்கணும்ன்னு அப்பப்போ சொல்லும், அது ஓடிஆடி திரிஞ்ச வீடுலா. அத வித்துட்டோம்லா மக்ளே. வெளிய இருந்து பாத்தா ஒன்னும் சொல்லமாட்டாங்க. நானும் எஸ்தருட்ட இப்போ சொல்லிட்டு இருந்தேன். கடையப் போய் பாக்கணும், பத்து வருஷம் ஆச்சு. ஒருவாட்டிப் போய் பாத்துட்டு வந்துருவோம். அப்பா தொந்தரவு பண்ணுகேன்னு நெனைக்காத மக்ளே. உங்க அம்மையும் வீட்ட ஒருவாட்டிப் போய் பாத்துட்டு வந்திருலாம்ன்னி சொல்லுகா. எப்போவும் இப்படித்தான் அவளுக்கு என்ன வேணும்னாலும் நேரா கேக்க மாட்டா. எனக்க பொறத்தால நின்னுட்டு.” மென்மையான குரலில் சொன்னார்.

இதைக் கேட்டதும் சாலமன் ஓரமாகப் போய் அமர்ந்துகொண்டான். அவன் கண்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் கலங்க ஆரம்பித்தன. வெளிக்காட்டிக் கொள்ளாமல் அமைதியாக இருந்தான். விவேக் வீட்டிற்குள் வருவதும், அவனுடைய அப்பா தாமஸுடன் பேசுவதுமாகக் காட்சிகள் வேகமாக நகர்ந்தன. ஜெனிபர் வீட்டிற்கு வந்ததும் விவேக்கிடம் பேசினாள். கண்கள் கலங்கியிருந்தாலும் முகம் மலர்ந்தது. சாலமன் எதையுமே உள்வாங்கிக் கொள்ளாமல் அப்பாவையும் அம்மாவையும் வெறித்துக்கொண்டிருந்தான்.

வீட்டின் வாசலில் ஆம்புலன்ஸ் வந்ததும் இரண்டு ஆஜானுபாகுவான ஆட்கள், தாமஸிடம் பேசிவிட்டு ஃபிரிசெரைத் தூக்கிச் சென்றனர். ஜெனிபர் கையில் இரண்டு பேக்கோடு அவர்கள் பின்னால் சென்றாள். சாலமன் எதையோ உணர்ந்தவன் போல ஓடிச்சென்று, தாமஸைத் தாங்கிக்கொண்டு நடக்க ஆரம்பிக்கவும், தாமஸ் அவனிடம் கேட்டார், “மக்ளே நீயும் ஊருக்கு வாறியா? எஸ்தர் சந்தோசப்படுவா”,

“வாரேன்பா, வாரேன்” அவரைக் கட்டியணைத்து அழுதான்.

“எங்க தங்கமொவன்லா.. அழாத மக்ளே” தாமஸ் அவன் தலையை வருடிவிட்டார்.

விவேக்கும் அவன் அப்பாவும் முறையே சாலமனையும் தாமஸையும் அழைத்துச் சென்றார்கள். ஆம்புலன்ஸில் ஏற்கனவே எஸ்தர் ஏற்றப்பட்டிருந்தாள். அடுக்குமாடி குடியிருப்பில் இருந்தவர்கள் அதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தனர்.

“அப்பா. நீங்க காருல வாங்க. நா ஆம்புலன்ஸ்ல முன்னாடி உக்காந்து வாரேன்” சாலமன் அழுத முகத்தோடுச் சொன்னான்.

“இல்ல மக்ளே. ஒனக்கு அறியாததா. எஸ்தருக்கு ஒத்தைல இருக்க பயமுண்டு. பதிமூனு மணி நேரம் ஆகும்லா ஊருக்கு போக. நானும் அவளுட்ட பேசிட்டே வந்தேன்ன்னா எனக்கும் நேரம் போய்டும். நா பின்னாடி எஸ்தர் கூட ஒக்காந்துக்கேன். மொவன் முன்னாடி ஒக்காந்துக்கோ. அப்புறம்..” ஒரு நிமிடம் எதையோ யோசித்தவர், “மேரி இங்க வா மோளே”

அவர்களை கவனித்துக்கொண்ட பணிப்பெண்ணை அருகில் அழைத்தார். அவள் அருகே வரவும், “எஸ்தரு ஒங்கிட்ட சொல்லிட்டே இருப்பால்லா வீட்டுக்கு போகணும்ன்னு.. பாத்தியா நாங்க பிரயாணம் போறோம்” அவரின் முகம் புன்னகையில் நிரம்பியது.

***
வைரவன் – சொந்த ஊர் ஒழுகினசேரி, நாகர்கோயில். பணி நிமித்தமாய் பெங்களூருவில் வசித்து வருகிறார். தொடர்ந்து சிறுகதைகள் எழுதிவருகிறார். இவரது முதல் நூல் “பட்டர் பீ & பிற கதைகள்” அண்மையில் வெளியானது. மின்னஞ்சல்: vairavanlr@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular