Wednesday, October 9, 2024
Homesliderபிரமிடுகளை அளக்கும் தவளை

பிரமிடுகளை அளக்கும் தவளை

பாலசுப்ரமணியன் பொன்ராஜ்

பகுதி ஒன்று

லகிற்கு வெளியே ஒரு சாளரம்-தொலைவு குறித்த சில கருத்துக்கள்-கணித வெறுப்பு-ஏற்கனவே அறியப்பட்ட பூமியின் விதி

அழிக்க முடியாத ஒன்றின் துணையோடு நான் உலகிற்கு வெளியே மிதக்கிறேன்.  என்னோடு சேர்ந்து எனது ஒரே ஒரு மேஜையும், நாற்காலியும், உயரமே காணமுடியாத அளவிற்கு அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்களும் மேலும் அந்தச் சிறிய நெல்லி எனும் தவளையும் மிதக்கின்றன.  மிதப்பதனால் இவற்றோடு சேர்ந்து நானும் வெளியில் பயணிக்கிறேன் என்று பொருளில்லை.  நிலையான ஒரு புள்ளியின் அசைவின்மையில் மாற்றமேயில்லாமல் உறைந்திருக்கிறோம்.      

எனது மேஜைக்கு அருகே ஒரு சாளரம் மூடியே இருக்கிறது.  அதைத் திறக்கவே பிடிக்கவில்லை.

இருளில் கோடு கிழித்து மறைந்த ஒளியை கவனமாகப் பார்த்தேன்.  அண்டமாநதியின் நீரால் கழுவப்பட்ட கூழாங்கற்களில் ஒன்று எங்கோ தொலைவில் மறைந்தது.  விண்ணில் தோன்றும் தடங்களுக்கு ஆயுள் குறைவென்பதால் (தொலைவுதான் காரணம்) நான் பார்த்த ஒளித்தடம் சடுதியில் மறைந்தது.  தொலைவிலே தெரியும் ஒளியில் ஓர் அழைப்பு ஒளிந்திருக்கிறது.  அதன் அழைப்பைக் கேட்கக்கூடாதென்று பலமுறை நெல்லியிடம் சொல்லியிருக்கிறேன்.  நட்சத்திரங்கள் விழுந்துகொண்டேயிருக்கும் அதன் கிணற்றுக் கண்களை மூடவே மூடாது.  நான் அதன் தலையில் தட்டி பார்வையைத் திசை திருப்புவேன்.  ஒளித்தடத்தின் மூலத்தைப் பார்க்கப் போனால் அங்கே ஒன்றுமே இருக்காது. அதன் முடிவிலும் ஒன்றும் இருக்காது.  தொலைவைக் குறித்து எனக்கு சில சொந்தக் கருத்துக்கள் இருப்பதால் எவற்றின் இடைவெளியையும் அச்சமின்றிப் பார்க்கப் பழகியிருந்தேன்.

  1. பயணிக்கும் ஒன்றே தொலைவைக் கண்டு அஞ்சும்
    1. இரண்டு புள்ளிகளுக்கு இடையே எவ்வளவு தொலைவு இருந்தாலும்                    அந்தப் புள்ளிகள் இடம்பெயரும் வரை தொலைவின் அளவு நிலையானது
    1. எது நிலையானதாக இருக்கிறதோ அது அச்சப்பட வேண்டியவற்றிலிருந்து விலகியிருக்கிறது
    1. இலக்கேயில்லாமல் பயணிக்கும் ஒன்று தொலைவின் அலகுகளுக்குள்ளாக இயங்குவதில்லை

இவையே நான் இதுவரையிலும் கணிதச் சூத்திரங்களால் எனக்கே நிரூபித்துக் கொண்டிராத கருத்துக்கள்.  கணிதத்திலும் கற்பனை எண்கள் உருவாகியிருப்பதும், புலனறிவுவாதிகள் கூட கணிதத்தை ஏற்பதும், சூத்திரங்களால் அல்லாமல் காதலையும் சொல்ல முடியாத இடத்தை மனிதர்கள் எட்டியிருப்பதும், பழைய மனிதர்களுக்கு கவிதை என்னவாக இருந்ததோ, அதேதான் எதிர்கால மனிதர்களுக்கு கணிதமாக இருக்குமென்று தேவைக்கதிகமாக கணிதத்தின் மீது அசட்டுத்தனமான பிடிப்பு வைத்திருக்கும் அவர்களோடு நான் முரண்படுகிறேன். 1 என்பதற்கு பதிலாக அவர்கள் “662492  -53 x 91002  = 1” எனச் சொல்வதை நான் எப்படியென்று அறிய முனைந்ததால் ஏற்பட்ட மண்டைச்சூட்டில் எனது மூளையே காது வழியாக வழிந்து போய்விட்டது.     

கணிதத்தைத் தொடாமலிருப்பதே நான் அதனோடு செய்து கொண்டிருக்கும் ஒற்றை உடன்படிக்கை.

ஒரு கோடால் இணைக்க முடியாத எண்ணற்றதும், சிறியதுமான புள்ளிகள் தலைக்கு மேலே எங்கோ ஒளிர்கின்றன.  இருளை அணைத்திருக்கும் எனக்கு உறக்கமென்பதேயில்லை.  தொலைவில் அணைந்து ஒளிரும் புள்ளிகளிடமிருந்து மறைந்து கொள்வதற்கு எனக்கு இடமுமில்லை.  அவை என்னைப் பார்க்கின்றனவா? அல்லது நான் அவற்றைப் பார்க்கிறேனா?

  தவளை எனது நாற்காலியின் கரத்தில் உறங்கிக் கொண்டிருந்தது.

மேஜை விளக்கை ஒளிர விடுகிறேன்.  அடுக்கு கலைந்து விடாமல் ஒரு புத்தகத்தை எடுத்துப் பார்க்கிறேன். ஒன்றைத் தொடர்ந்த மற்றொன்றைத் தொடர்ந்து மேலுமொன்றைத் தொடர்ந்திருக்கும் இன்னுமொன்றையும் தொடரும் பல வடிவங்களில் ஒன்று கூட எனக்குப் புரியவில்லை.  புதிய மொழியின் வடிவங்களில் ஒளிந்திருக்கும் இரகசியத்தை எப்படி அவிழ்ப்பதென்றே தெரியாமலிருந்தேன்.  அவை எதைச் சொல்கிறனவென்றும் அறிய முடியவில்லை. அவ்வடிவங்களை எழுத்துக்களென்றும், எழுத்துக்கள் சேர்ந்தது சொற்களென்றும் நெல்லி சொல்லக் கேட்டிருக்கிறேன்.  சொற்களின் தொடரை வாக்கியமென்று அழைப்பார்களென்றும் பேசுவதற்கு எழுத்துக்கள் தேவையில்லை, சொற்களே போதுமென்றும் சொல்லியிருக்கிறது.

புத்தகத்தை மூடி வைத்தேன்.  சாளரத்தை திறந்து பார்க்கும் ஆர்வத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் அதன் கதவுகளை வெளிப்புறமாகத் தள்ளினேன்.  சார்த்தியே இருந்ததால் கதவுகளிரண்டும் தொந்தரவுக்கு உள்ளானவற்றின் எரிச்சலோடு அகலத் திறந்தன.

சாளரத்திற்கு வெளியே, தீப்பற்றிச் சுழலும் ஒரு பந்தாக மஞ்சள் பிழம்புகள் எழ பூமி எரிந்து கொண்டிருந்தது.  

நான் சாளரத்தை மூடினேன்.  பூமியின் விதி எனக்கு என்றோ தெரிந்திருந்ததென்பதால் அது தீப்பற்றி எரிவதொன்றும் ஆச்சரியப்படத்தக்கதாக இல்லை.

மூடி வைத்திருந்த புத்தகத்தைத் திறந்து அதன் இடப்பக்கத்தில் குதித்தேன்.  வாக்கியங்களின் மீது ஊர்ந்தேன்.

சொற்கள் எதைத்தான் சொல்கின்றன?

பகுதி இரண்டு

தவளையிடம் மன்னிப்புக் கேட்கும் துறவி-நெல்லி மரத்தின் தாவரவியல் பெயர் ஒளிப்புழுக்கள்-பல்யோபம

எனது பெயர் நெல்லி.  அது ஒரு தமிழ்ப் பெயர்ச்சொல்.  Phyllanthus Emblica இனத் தாவரம்.  ஆனால் நான் அத்தாவர இனத்தோடு தொடர்பேயில்லாத ஒரு தவளை.  ஒரு சமணத்துறவி எனக்கு அப்பெயரை வைத்தார். கீழக்குயில்குடியில் (தற்போதைய பெயர்) நான் வசித்த நாட்களில் தீர்த்தங்கரர்களின் உருவங்களை அங்கிருந்த பாறையில் செதுக்கிக் கொண்டிருந்த துறவியின் காலில் நான் தெரியாமல் தாவினேன்.  நீரின் ஈரத்தோடு பிசுபிசுப்பான எனது உடல் அவருக்கு அருவெருப்புணர்வைத் தூண்டியிருக்கலாம்.  உளியைக் கொண்டு அடிக்க ஓங்கினார்.  அவரது செய்கை ஓர் உடலின் தன்னிச்சையாக எழும் உள்ளுணர்வைத் தவிர வேறொன்றுமில்லை.  ஆனால் அதற்காக அந்தத் துறவி வெகுநாட்களுக்குப் பிறகும் கூட என்னிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டேயிருந்தார்.  பாறைத்துளையில் தேங்கியிருக்கும் நீரின் மேற்பரப்பில் தலை நீட்டிப் பார்க்கும் ஒரு தவளையிடம் மன்னிப்புக் கேட்கும் துறவியை நினைத்து அடிக்கடி சிரித்துக் கொள்வேன்.  குறிப்பிட்ட சில நாட்களில் தூரத்தில் தெரியும் மதுரை (பழைய பெயரும் அதேதான்) நகரத்தின் ஓசைகள் (திருவிழாக்களாலும், போர்களாலும், கொள்ளைகளாலும்) நீரில் உண்டாக்கும் எனது தியானத்தைக் குலைக்கும் சலசலப்பால் நான் அந்நகரத்தின் மீதே எரிச்சலுற்று, கட்டுப்படுத்த முடியாத கோபத்தோடு அதன் மீது குதித்து கட்டிடங்களையும், மனிதர்களையும், தாவரங்களையும், விலங்குகளையும் எனது வயிற்றின் கீழே புதைத்து விடுவதற்காக பாறைத்துளையிலிருந்து எம்புவேன்.  அந்தச் சமயங்களில் தீர்த்தங்கரர்களைச் செதுக்கும் துறவியை நினைத்துக் கொள்வேன். நகரத்தை மன்னிப்பேன்.            

மனிதர்களின் நெற்றிப் புடைப்பைப் போலிருக்கும் பாறையின் நீட்சியில் அவர் தீர்த்தங்கரர்களைச் செதுக்கிய நாட்களில் அதன் நிழலின் ஒற்றைக் கண்ணான துளையில் நானிருந்தேன்.  உருவங்களை செதுக்கி முடித்ததும் என்னுடைய உறக்கத்திற்கு பங்கமேற்படாமல் துளையின் ஓரங்களைச் செதுக்கி ஒரு கல்தொட்டியின் அளவிற்கு பெரிதாக்கினார்.  எனக்கு அளவுகளைப் பற்றியெல்லாம் அந்நாட்களில் ஒன்றுமே தெரியாது. ஒரு தண்டம் ஆறடி, 2000 தண்டம் ஒரு கோசம், 4 கோசங்கள் ஒரு யோசனை.…என அவர் விளக்கிச் சொன்னாலும் என்னுடைய தவளை மண்டையில் அதெல்லாம் ஏறாது.  அது போலத்தான் திருவ்ய, அஷ்டிகாய, உட்பத, வியாய… எனும் சொற்களின் பொருளும்.

சுகம்-சுகம்-கல்:சுகம்-கல்:சுகம்-துக்கம்-கல்

துக்கம்-சுகம்-கல்:துக்கம்-கல்:துக்கம்-துக்கம்-கல்

இப்படி ஒருமுறை சொன்னார்.  நான் அதை மனப்பாடம் செய்து கரகரப்பான எனது குரலில் அடித்தொண்டையிலிருந்து சொல்லிக் கொண்டிருப்பேன்.  மழை நாட்களில் அவர் குகைக்குள்ளாக முடங்கியிருந்தாலும் இவ்வாறு நான் சொல்வதை மழைத்துளிகள் சிதறும் ஓசைகளுக்கு மத்தியிலும் கேட்டதாகச் சொல்வார்.  அதைத் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதில்லையென்றும், உட்சர்பினி, அவசர்பினி எனும் காலச்சக்கரத்தின் இரண்டு அரைச்சுழற்சிகளில் உயிர்களுக்கு ஏற்படும் இன்ப துன்பங்களின் அளவைச் சொல்வதே அதுவென்று சொன்னார்.  எனக்கு அதுவும் புரியவில்லை. காலச்சக்கரத்தின் எல்லாச் சுழற்சிகளிலும் நானொரு தவளை மட்டுமே. தண்ணீர் வற்றிப் போவதைத் தவிர எனக்கு வேறெந்த துக்கமுமில்லை.

பள்ளியில் அவருக்குக் கற்பிக்கப்பட்டவை எல்லாவற்றையும் என்னிடம் சொல்வார். நான் கேட்கிறேன் கேட்கவில்லை என்று தெரிந்துகொள்ளக் கூட விரும்பாமல் அவர் சொல்வதை கவனமாகக் கேட்க விரும்பினாலும் பாறையின் கீழே அதன் நிழல் மூடிய நீரில் படரும் குளுமையால் என்னையறியாமல் அக்களித்து உறங்கிக் கிடப்பேன்.  தண்-நீர் எனும் சொல் எதைக் குறிக்கிறதென்று அப்படித்தான் அறிந்தேன்.  குகைக்குத் திரும்புவதற்கு முன் என்னிடம் அதுவரை அவர் சொல்லிக் கொண்டிருந்த பாடங்களில் எதையாவது சிலவற்றை சொல்லச் சொல்வார்.  நான் அப்போதும் சுகம்-சுகம்-கல் என்று ஆரம்பிப்பேன்.  சமணத் துறவி தப்பித்து ஓடுவார்.  உறுப்புகளில்லாத முகம் போலத் தெரியும் அவரது இரண்டு குண்டிகளைப் பார்த்ததும் ஆழத்திற்கு விரைவேன்.  ஆழத்திலிருக்கும் இருளில் என்னைப் புதைப்பேன்.  எத்தனையோ பல்யோபமங்களுக்கு* அமைதியாக உறங்குவேன்.  

பின்பு என்ன நடந்ததோ கீழக்குயில்குடியில் சமணர்கள் இல்லாது போனார்கள்.  ஓரங்களில் படியும் பாசியின் கூந்தல் பிரிகள் மிதக்கும் நீரில் படும் பகலின் ஒளி தீர்த்தங்கரர்களின் மேலே உடலில்லாத புழுக்களாக நெளிவதைப் பார்த்திருப்பேன்.  முகங்களில் தெறிக்கும் ஒளித்துணுக்குகளின் பிரதிபலிப்பை, ஓயாத அசைவுகள் உடலில் படர்ந்தாலும் மூடிய கண்ளோடு நின்றிருக்கும் உருவங்களின் கலைக்க முடியாத ஒடுக்கத்தை, அநித்தியங்களின் ஆரவார நடனத்தை உணர்ந்த உதட்டோரப் புன்னகையை துறவியும் நானும் சேர்ந்து பார்த்ததெல்லாம் முன்பொரு காலத்தில் நடந்ததைப் போலாகிவிட்டது.  ஒரு மலைப்பாம்பு இரண்டு காலங்களுக்கும் இடையே மாபெரும் பிளவை தடமாக மாற்றி மறைந்து விட்டது.  தலைப்பிரட்டைகள் இவற்றையெல்லாம் அறியாமல் பாசியில் வழுக்கி விளையாடிக் கொண்டிருந்தன.  

பகுதி மூன்று

வால்டேர் குறிப்பிடாத பயணி-220 ஆண்டுகள் நடந்த வழக்கு-பண்ணை வீட்டில் ஓர் இரவு-தர்க்க விளக்கப்படம்- TRACTATUS LOGICO-PHILOSOPHICUS நூலில் உள்ள ஒரு கூற்று – ரிஷப நாதரின் உயரம்

ஜுலை 5, 1737 மைக்ரோமெகாஸும், அவருடைய சக பயணியான சனிக்கோளைச் சேர்ந்தவரும் பால்டிக் கடலின் வடக்குக் கரையில் இறங்கியதை எழுதிய வால்டேர், இறுதிவரை என்னைக் குறிப்பிடாததற்கு காரணம் உயரமான அவர்கள் இருவர் மட்டுமே அவருடைய கவனத்தில் பதிந்ததாக இருக்கலாம்.  மைக்ரோமெகாஸை ஒப்பிடுகையில் சனிக்கோளைச் சேர்ந்தவரை அவர் குள்ளர் என்றே எழுதியிருக்கிறார்.  அவர்களோடு சேர்ந்து நானும் பூமியை 36 மணிநேரத்தில் சுற்றினேன்.  சிரியஸிலிருந்து நான் அவனோடு ஒட்டிக்  கொண்டிருக்கிறேன்.  அவன் ஒரு புத்தகத்தை எழுதினான்.  56,00,00,000 பக்கங்கள் (மைக்ரோமெகாஸின் கல்விக் காலத்தையும், வழக்கின் காலத்தையும் எழுதிய வால்டேர் புத்தகத்தின் பக்க அளவை எழுதாதது ஆச்சரியம்தான்) உடையது. நான் புத்தகங்களையே பார்த்ததில்லை.  அந்தப் புத்தகம் எழுதியதற்காக எங்கள் கோளில் அவனுக்கு எதிராக 220 ஆண்டுகள் வழக்கு நடந்தது. வழக்கின் முடிவில் 800 ஆண்டுகள் நீதிமன்றத்தின் பக்கமே வரக்கூடாதென்று சொல்லப்பட்டதும், சலிப்புற்ற அவன் கொஞ்ச நாட்களுக்கு எங்கள் கோளைவிட்டு வெளியே பயணிக்கும் முடிவை எடுக்கும் வரை நான் அவனையும், அவனுடைய புத்தகத்தையும் பின் தொடர்ந்தேன்.  அதன் பிறகும் கூட.  அவனுடைய காற்சட்டைப் பையில் ஒளிந்திருந்த என்னை அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை.  நானாக ஏதோவொரு உருவத்தில் என்னைக் காட்டிக்கொள்ளா விட்டால் என்னை யாராலும் காண முடியாதென்பது சிரியஸில் பிறந்த ஒரு பிரிவினரின் தனி அம்சம்.  

அவர்கள் இருவரும் என்ன நினைத்து பூமியிலிருந்து வெளியேறினார்களோ தெரியாது, ஆனால் எனக்கு இந்த இடம் பிடித்துப் போனதால் நான் இங்கேயே தங்கிவிட்டேன்.  சிலைகளைப் போல அவற்றின் முன்னே மனிதர்களை உறைய வைத்திருக்கும் புத்தகங்களையும், பனிக்கரடிகளையும் அளவுகடந்து நேசித்ததால் என்னால் பூமியை விட்டுப் பிரிய முடியவில்லை.  மலர்களை நான் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை.  சனிக்கோளைச் சேர்ந்தவருக்கு ஆறுகள் நேராக ஓடுவதில்லையென்று குறையிருந்தது.  ஆறுகளின் வளைவுகளுக்காகவும், அருவிகளுக்காகவுமே நான் அவற்றை நேசிக்கிறேன்.  

வால்டேரின் நண்பர்களோடு சில காலம் இருந்தேன்.  ஜூன் 18, 1816 பைரனின் ஜெனீவா எஸ்டேட்டில் கூடியிருந்தவர்களில் (பைரன், மருத்துவர் போலிடோரி, பெர்ஷி ஷெல்லி, மேரி காட்வின், மேரியின் ஒன்றுவிட்ட சகோதரியான கிளாய்ர் கிளாய்ர்மான்ட்) ஒருவரான பதினெட்டு வயதே நிரம்பிய மேரியை அவருடைய அழகான கூந்தலுக்காக மட்டுமின்றி, பண்ணை வீட்டின் கூடத்தில், அசையும் நிழல்களை சுவர்களில் எழுப்பிய மெழுகுவர்த்திகளின் இரவில் அவருடைய மனதில் உதித்த ஃபிரன்கன்ஸ்டெய்னுக்காகவும் மதிக்கிறேன்.  பெர்ஷி ஷெல்லியை மணந்த பிறகு மேரியின் பெயரோடு ஷெல்லி ஒட்டிக் கொண்டது.  பெண் எழுத்தாளர்களை அளவுகடந்து மதிக்கிறேன்.  அவர்களுடைய இயல்புக்கு மீறிய ஒரு செயலை முனைப்போடு செய்கிறவர்களை என்னால் மதிக்காமல் எப்படியிருக்க முடியும்? சிரியஸில் பெண்கள் எழுதுவதில்லை.  என்னுடைய மேஜையில் ஒரு பக்கத்தை நான் பெண் எழுத்தாளர்களின் புத்தகங்களை அடுக்குவதற்காக ஒதுக்கியிருக்கிறேன்.  ஆண்கள் எழுதியுள்ளவற்றை விடவும் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், எழுதாமலே பெண்களால் அனைத்தையும் வெளிப்படுத்திவிட முடியுமென்று நம்புகிறேன்.  பெண்கள் வரையும் கோலங்களைப் பாருங்கள், அநித்தியத்தின் தற்கால வெடிப்பின் அழகை அதை விடவும் யாரும் எழுதி விட முடியாது.            

புத்தகங்களைச் சேகரிக்க ஆரம்பித்தேன்.  நீங்கள் நம்பினால் நம்புங்கள் நான் சேகரித்த (சட்ட மொழியில் சொன்னால் திருடிய) புத்தகங்களை பூமிக்கு அடியிலிருந்த என்னுடைய நிலவறையில் ஒளித்து வைத்திருந்தேன்.  நிலத்தடி உயிரினங்கள் அவற்றைக் காவல் காத்தன.  சில சொற்களின் மீது சொல்லொணாத காதல் எப்படித்தான் உருவாகிறதென்று தெரியவில்லை, அவற்றை உச்சரிப்பதிலிருக்கும் நளினத்திற்கு நான் மயங்கியிருக்கிறேன்.  அதைப் போலவே தர்க்கத்திற்கும்.  லுத்விக் விட்கன்ஸ்டெயினின் இந்த விளக்கப்படத்தைப் பாருங்கள்.

pqr Pq p
TTT TT T
FTT FT F
TFT TF  
TTF FF  
FFT     
FTF     
TFF     
FFF     

உங்களைப் போலத்தான் எனக்கும் இது சிக்கலானது.  உண்மை-உண்மை-உண்மை என்று ஆரம்பித்து இறுதியில் பொய்-பொய்-பொய் என்று முடியும் இந்த அடுக்குகள் எனக்கு மனப்பாடம்.  நான் இதைச் சொல்ல ஆரம்பித்தால் நெல்லி சுகம்-சுகம்-கல் எனத் துவங்கி துக்கம்-துக்கம்-கல் என முடிக்கும்.

உண்மையென்பது சுகமென்றும், பொய் துக்கமென்றும், சுகமே உண்மை, துக்கம் பொய்யென்றும், துக்கத்தில் உண்மையும், பொய்யும் தனித்தனியாகப் பிரிந்து ஒன்றிலிருந்து மற்றொன்றைத் தேடச் செய்வதையே நோக்கமாக மாற்றி துயரத்திற்கு உள்ளாக்குவதற்கு (கண்ணாடிப் பிம்பம் உருவமாக மாற நினைப்பதைப் போல) மாறாக சுகத்தில் இணைந்தேயிருக்கின்றன எனும் எங்களுடைய தர்க்கத்தின் விளக்கப்படத்தைப் பாருங்கள்;

சுகம்துக்கம்கல் சுகம்துக்கம் சு
  
பொ பொ பொ
பொ பொ  
பொ பொபொ  
பொபொ     
பொபொ     
பொபொ     
பொபொபொ     

சரியாகப் பொருந்தி வரவில்லை என்று நீங்கள் முடிவெய்தினால், மீண்டுமொருமுறை எங்களது தர்க்கத்தை வாசியுங்கள்.  தற்செயலாக நிகழ்ந்துவிட்ட இயற்கையின் அழகும், மனிதர்களின் அறிவும் கச்சிதமாக இணைந்திருந்த பூமியை நான் நேசித்ததிற்கு விட்கன்ஸ்டெய்னின்  இக்கூற்றும் ஒரு காரணம்.

5.621 “உலகும் வாழ்வும் ஒன்றே.” – TRACTATUS LOGICO-PHILOSOPHICUS

தர்க்கங்களை அலசியதும் மைக்ரோமெகாஸின் உயரத்தை நெல்லியிடம் வியந்து சொல்வேன் (அப்படியொரு காலமிருந்ததென்று மனிதர்கள் தங்கள் பழைய பெருமைகளை நினைவு கூர்ந்து பெருமூச்சு விடும் தொனியில்).

“அவருடைய உயரம் பூமியிலுள்ள சிகரங்களில் உயரமானதை விடவும் அதிகமானது, எனினும் அவருடைய பணிவும், அறிவும் வியப்பிற்குரியது. சிரியஸிற்கு திரும்பிய பிறகும் அவர் நிச்சயமாக விண்ணிலிருந்து பார்த்தால் நீலப்பந்தாகத் தெரியும் பூமியையும் அதன் உயிரினங்களையும் நேசித்திருப்பார் என்றே நம்புகிறேன், அவரைப் போலத்தான் மஞ்சள் வெள்ளை நிற சூரியஸ்தமனத்தை சனிக்கோளில் கண்டவரும் (அது முழு உண்மையல்ல என வால்டேருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை)”.

அவருடைய உயரத்தை மெச்சினால் நெல்லி, ரிஷப நாதரின் உயரம் என்ன தெரியுமா? என்று கேட்கும்.  

அவரைப் பற்றி எனக்கென்ன தெரியும்?.

பகுதி நான்கு

பிளாட்டோவின் குடியரசு-ஷாஹி ஹம்மம்-தாமஸ் அக்வினாஸின் கழுதைப் பயணம்- MIHI VIDETUR UT PALEA-தொட்டியிலிருந்து பார்த்த காட்சி

பருவகாலங்களில் மழை பெய்யும் நாட்களில் நான் வெறுமனே ஒரு தவளையில்லையென்றும், சங்கிலியின் ஒரு கண்ணியென்றும் உணர்வேன். சொர்க்கங்களிலிருந்து மழை பெய்யாவிட்டால் என்னால் ஒரு நிம்மதியான வாழ்க்கை வாழ முடியாது.  மற்ற தவளைகள் போலின்றி நான் வித்தியாசமான ஒன்று.  நான் ஆணுமில்லை, பெண்ணுமில்லை.  நீங்கள் பிளாட்டோவைப் பின்பற்றுபவர்களானால் தவளைகளின் மூல வடிவமென்று என்னை எடுத்துக் கொள்ளலாம்.  அரிஸ்டாட்டிலைப் பின்பற்றினால் அதற்கு எதிர்மறையாக.  ஓர் ஆசிரியரிடமிருந்து மாணவர்கள் மட்டுமல்ல ஆசிரியர்களும் உருவாகிறார்கள் என்பதற்கு இருவரும் உதாரணம்.

இந்தப் பெயர்களெல்லாம் எனக்குத் தெரியவந்த நாட்களில் மற்ற தவளைகளிடம் பெருமைப்பட்டுக் கொள்வதற்காக பிளாட்டோ, குடியரசில் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா என்று ஆரம்பிப்பேன். பாவம் அந்தத் தவளைகள் தீவிரமாக முகத்தை வைத்துக் கொண்டு நான் ஏதோ பாம்புகளின் வாயில் (தர்மன், காமன், காலன், வசு, வாசுகி, அநந்தன், கபிலன் என்கிற ஏழு நாகங்களிடமிருந்தும்) அவை அகப்படாமலிருக்கவும் மீன்களென்று தவறாகப் புரிந்து கொண்டு தலைப்பிரட்டைகளைப் பிடித்து விளையாடும் சிறுவர்களிடமிருந்து தப்பிக்கும் தந்திரங்களைச் சொல்லியிருக்கிறார் என்றும், பிசிறடிக்கும் தவளைகளின் ஆர்க்கெஸ்ட்ராவைத் திருத்துவதற்கு வழிகாட்டியிருக்கிறாரென்று சொல்வேன் என்ற எதிர்பார்ப்போடு தலை தூக்கி எனக்குக் கீழே அமர்ந்திருக்கும்.  கால் மீது கால் போட்டுக் கொண்டு நான் தான் பிளாட்டோ என்கிற தோரணையில் குடியரசை ஒப்பிப்பேன். தவளைகள் தாங்கள் தவளைகள் மட்டுமே என்று அறிந்திருப்பதைத் தாண்டி அவற்றால் நான் சொல்வது ஒன்றையும் சமணத்துறவியிடம் நான் ஒப்பிப்பதைப் போல சொல்லவும் முடியாது.  அவற்றை மேலும் தொல்லைக்கு உள்ளாக்காமல் விடைகொடுக்கும் முன் சொல்வேன்:  

“அநீதி ஒருக்காலும் நீதியை விட இலாபகரமானதாக இருக்க முடியாது.”

தவளைகள் என்னை விட்டுத் தள்ளிப் போயின. நான் பாலினமற்ற தவளை என்பதால் என்னால் யாதொரு உபயோகமுமில்லை என்று அவை நினைத்திருக்கலாம்.  உணவிற்கும், இனப்பெருக்கத்திற்கும் பிளாட்டோவால் என்ன பயன்? ஏறக்குறைய எல்லாத் தவளைகளும் இவையிரண்டைத் தவிர வேறெதற்காகவும் வாழ்வதில்லை. வாசிர் கான் மசூதியின் அருகிலிருக்கும் ஷாஹி ஹம்மத்தில் ஒரு காலத்தில் ஆண்களும் பெண்களும் குளிக்க வருவார்கள் (தனித்தனியாகத்தான்).  அவர்களால் நான் அங்கிருந்த காலம் வரை என்னை அறியவே முடியவில்லை.  ஷாஹி ஹம்மம் மனிதர்கள் குளிப்பதற்காக மட்டுமே கட்டப்பட்டிருக்க முடியாதென்பதை அதன் உட்பக்கக் கூரையில் எண்கோண வடிவ மையக்கல்லைச் சுற்றியிருக்கும் இதழ்களைப் பார்ப்பவர்கள் உணர்வார்கள்.

கந்தர்வர்களும், தேவதைகளும், கொல்லிப்பாவைகளும், ஜின்களும், பழங்குடிகளின் முகமூடிகளுக்குள் ஒளிந்திருக்கும் அவர்களின் வெளிப்பட்டு விடாத நூற்றுக்கணக்கான தெய்வங்களும் இருக்கிறார்களோ இல்லையோ, மனிதர்களால் ஷாஹி ஹம்மத்தைப் போல ஒன்றை உருவாக்கியதும் வெளிப்படும் அழகின் முப்பட்டகத்தைத் தாள முடியாமல் அவையாவும் தங்களுக்குரியவை அல்லவென்று எண்ணி தேவதைகளுக்கும் அதற்கும் மேற்பட்டவர்களுக்கும் அர்ப்பணித்து விடுகிறார்கள்.  பளீரென்று வெட்டும் மின்னலைத் தாங்க முடியாமல் அதை ஜீயஸின் கைகளில் கொடுத்ததும் அதனால்தான்.  அவரால் மட்டுமே அதைக் கையாள முடியும்.

ஹம்மத்தில் குளிக்க வரும் விருத்தசேதனம் செய்திருக்கும் ஆண்களையும், கண்களைக் கூசச் செய்யும் பளபளப்புடனிருக்கும் பெண்களையும் என்னால் “பாடல்களின் பாடலில்” பாடப்பட்டிருப்பதைப் போல வர்ணிக்க முடியாது. எனக்கு அவர்கள் வெறும் ஆண்களும் பெண்களும் மட்டுமே.  கூடுதலாக, பிளாட்டோ சொன்னதைப் போல எப்போதோ வெட்டுண்டுவிட்ட ஒரு வட்டத்தின், ஒன்றையொன்று ஓயாது தேடும் இரண்டு துண்டுகள் என்று நினைத்துக் கொள்வேன்.     

நான் கற்றுக் கொண்டவற்றால் உண்டான அசட்டுப் பெருமிதமெல்லாம் தாமஸ் அக்வினாஸின் கடைசிப் பயணத்தில் அவர் என்னிடம் பகிர்ந்து கொண்ட அவருடைய சரிதத்தால் (அவருடைய சரிதத்தை சொல்லும்படி நச்சரித்தது நானே), காற்றிலே கரைந்து மறைந்தது.  வெட்டி வீழ்த்தப்பட்டிருக்கும் மரத்தின் கிளையில் அவர் தலையை முட்டிக் கொண்டதே என்னால்தான்.  கழுதையின் மீது சேணமிட்டு அமர்ந்திருந்த அக்வினாஸ், மயிர் நிரம்பிய அதன் கழுத்தில் அமர்ந்து அவருடைய சரிதத்தைக் கேட்டுக் கொண்டிருந்த என்னோடு உரையாடிக் கொண்டிருந்ததால் அவர் கிளையைக் கவனிக்கவில்லை..  அவருடைய சரிதத்தைக் கேட்டுக் கொண்டிருந்த கழுதையும் அதைக் கவனிக்கவில்லை.

சிலுவையிலறையப்பட்ட இயேசு தாமஸிடம் கேட்கிறார்,

“என்னைப் பற்றி நல்ல விதமாக எழுதியிருக்கிறாய் தாமஸ் உன்னுடைய உழைப்பிற்கு வெகுமதியாக என்ன பெறுகிறாய்?”

“உங்களைத் தவிர வேறெதுவும் இல்லை பிரபுவே”.

அதன் பிறகு அவருக்கு எழுதுவதிலுள்ள ஆர்வம் குறைந்து போய்விட்டது.

“நாங்கள் இருக்கிறோம் அக்வினாஸ், தவளைகள். எங்களுக்காக நீங்கள் எழுதியிருக்க வேண்டுமே”

“நான் இயேசுவை எழுத்தில் தேடிக் கொண்டிருந்தேன்.  தர்க்கத்தின் துணையோடும், அறிவின் துணையோடும். வெறுமனே கடவுள் இருக்கிறாரென்று சொல்வதை நானே ஏற்றுக் கொள்ளாமல் “கடவுள் இருப்பதற்கான நிரூபணம்” என்று கூட எழுதினேன்.  அவற்றையெல்லாம் எழுதுங்காலம் இயேசு என்னிடம் என்ன வேண்டுமென்று கேட்கவில்லை. அவர் அப்படிக் கேட்டதற்குப் பிறகு எதுவும் எழுதத் தோன்றவில்லை. ஒன்றை அனுபவித்தறிந்த பிறகு அவ்வனுபவத்திற்கு முன்பிருந்த நிலையிலிருந்து அந்த அனுபவத்தை எழுத முடியாது.  உன்னுடைய முகத்தை நீரிலே பார்த்த பிறகு உனது முகத்தை நீ பார்த்ததேயில்லை என்பதைப் போல நீ எழுத முடியாது.  எனது எழுத்துக்களால் எந்த முகத்தைப் படைப்பதற்காக எனது வாழ்நாட்களைச் செலவழித்தேனோ, அந்த முகத்தைக் கண்ட பிறகு எனது எழுத்துக்கள் எல்லாம் அற்பமாகிவிட்டன.  ரெஜினால்ட் எனது பதிலைக் கேட்டு மனமயர்ந்திருக்கக் கூடும்”.  அக்வினாஸ் எங்கோ பார்த்தார். ரெஜினால்ட்டிற்கு பதில் சொல்லிய தினத்திற்கு அவருடைய கண்கள் பயணித்திருக்கலாம்.  

“நீங்கள் சொல்லிய பதில் என்ன?”.  இந்தக் கேள்வியை நான் கேட்டதும் அக்வினாஸ் சொன்னார்: (ஆர்வத்தில் கழுதையும் காதுகளைக் கூர்மையாக்கி நின்றது)

MIHI VIDETUR UT PALEA

நான் அதை மனப்பாடம் செய்து கொண்டேன்.  அவர் வாழ்வின் ஏதோவொரு தினத்திற்கு (முக்கியமாக குழந்தைப் பருவத்திற்கு) அவருடைய கவனம் சென்றிருக்கலாம், எதிர்பாராமல் மரக்கிளையில் தலைமோதி கீழே விழுந்தார்.  கழுதை பயத்தில் துள்ளி எகிறியது. நான் அப்போது அதன் பிடரி மயிரைக் கெட்டியாகப் பற்றியிருந்தேன்.  அக்வினாஸை விட்டுவிட்டு கழுதையின் கழுத்தில் என்னைக் காப்பாற்றிக் கொண்டேன்.  அக்வினாஸ் இறக்கும் நாள் வரை என்னை மடாலாயத் தொட்டியில் வைத்திருந்தார். “பாடல்களின் பாடலை” அவர் வகுப்பெடுக்கையில் தாமஸ் அக்வினாஸும் ஷாஹி ஹம்மத்தின் ஒரு தவளையாகத்தான் இருக்கிறாரென்று எண்ணிச் சிரித்தேன்.  மேற்பரப்பில் தோன்றிய குமிழிகள் உடைந்து சிதறும் வரை எனது சிரிப்பை நீரினுள்ளே நான் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தேன்.  

அவருடைய சிந்தனையில் முட்டிமோதும் சொற்கள் விரும்பத்தக்க வகையில் ஒரு பக்கத்தில் நிரம்பியதும், காகிதத்தை உயரத் தூக்கி வெளிச்சத்தில் வாசித்து, ஆனந்தத்தில் ஒரு குழந்தையளவு குதூகலித்துச் சிரிக்கும் அக்வினாஸின் சிரிப்பை அவர் இறந்த பிறகும் மடாலயத் தொட்டியின் விளிம்பிலிருந்து கேட்டுக் கொண்டிருந்தேன்.  

பகுதி ஐந்து

அரைகுறையான முதல் பயணம்-டானுபே நதியைக் கடக்கும் படைகள்-

எதிர்காலமயமான நிழல்கள்-பனாரஸ் வரிக்கலகம்-இலையாக இருத்தல்

மைக்ரோமெகாஸ், சிரியஸிற்கு திரும்பிய பிறகு (அவர் எங்கள் கோளிற்குத் திரும்பியதென்பது உறுதியானதில்லை.  வேறெங்காவது கூட சுற்றிக் கொண்டிருக்கலாம்) நான் சில நாட்கள் தனிமை வெறுப்பிலிருந்தேன். பூமியை மீண்டும் தனியாகச் சுற்றி வராலாமென்று வடதிசை நோக்கி நகர்ந்தேன்.  கடந்த முறை வெறும் முப்பத்தாறு மணி நேரங்களில் சுற்றியதால் அவசரத்தில் எவைற்றையுமே சரியாகப் பார்க்க முடியவில்லை. பனிமலைகளையும், பாலைவனங்களையும் இரு நிறங்களிலுள்ள ஒரே நில அமைப்பென்றே அந்தக் குறுகிய கால பயணத்தில் கருதியிருந்தேன். செடிகள் மரங்களிலிருந்து உதிர்ந்து வளர்ந்திருக்குமென்றும்.  பாதி இரவும் பாதிப் பகலுமாக இருந்த காரணத்தையும் சரியாகக் கணிக்க முடியவில்லை.  அந்நாளில் நிலவு ஒரு துண்டாகத் தெரிந்தது.  ஒவ்வொரு பொருளையும் அவற்றின் வெவ்வேறு நிலைகளில், தொடர்ச்சியில் அடையாளம் காண்பதற்கு எனக்கு சில வருடங்களானது.  

ஒவ்வொரு வடிவமாக உருவமெடுக்கும் விளையாட்டை முதலில் குதிரையிடமிருந்து துவக்கினேன்.  அதற்கென்று தனியாக எந்த சிறப்புக் காரணமுமில்லை.  லால் ஆசீஷ் அஹ்மத் பாஷாவின் குதிரைப்படை டானுப் நதியைக் கடப்பதைப் பார்த்தேன்.  நதியின் மேற்கிலும், கிழக்கிலும் அவர்கள் முகாம் அமைத்தார்கள்.  பீரங்கி வண்டிகளை இழுத்துச் செல்லும் வேகமில்லாத குதிரைகளின் தலைகள், மேஜைகளில் வைக்கப்பட்டிருக்கும் விரலால் சுண்டினால் தானியங்களைக் கொத்தும் உலோகச் சேவல்களைப் போலாடியது.  நான் ஒரு குதிரையின் வடிவமெடுத்தேன். சில நாட்களில் மிகைல் குட்டுஜோவின் படைகள் டானுப் ஆற்றைக் கடப்பதையும். துருக்கியக் குதிரைகளும், ரஷ்யக் குதிரைகளும் ஒன்று போலவே இருந்தாலும் அவற்றின் மேலே அமர்ந்திருப்பவர்கள் மாறுபட்ட நிறங்களில், வெவ்வேறு உடைகளில் இருந்தனர்.  போர் நாட்களில் மண்டியிட்டுத் தொழுபவர்களும், சிலுவையின் முன் பிரார்த்திப்பவர்களாகவும் அவர்கள் இருந்தனர்.  வால்டேர் எழுதியது சரிதான் தொப்பிகள் அணிந்த ஒரு இலட்சம் விலங்குகளும் டர்பன் அணிந்த இன்னுமொரு இலட்சம் விலங்குகளும் போரிட்டதை மைக்ரோமெகாஸ் பார்த்திராவிட்டாலும் அவருடைய கண்ணாகவேயிருந்து நான் பார்த்தேன்.  முதலில் ஒரு துருக்கியன் அமர்ந்திருக்கும் குதிரையாகவும், பின்பு ரஷ்யனொருவன் அமர்ந்திருக்கும் குதிரையாகவும் இருந்தேன்.  போர் முடிந்ததும், சிதறிக் கிடக்கும் உடல்களைப் பார்த்துக் கொண்டே முகாமிலிருந்து தப்பிய குதிரையாக மட்டுமேயிருந்தேன்.  எனது முதுகின் மீது எந்தச் சுமையுமில்லாத குதிரையாக.  மனித உடலெடுத்தால் உழைக்கவும், போர் புரியவும் வேண்டியிருந்திருக்கும் என்பதால் முதன்முறையாக ஒரு விலங்கு உடலை (குதிரைகளும் உழைப்பில் இணைந்திருக்கின்றன என்றாலும்) எனது உருவாகத் தேர்ந்ததே சரியென்று பின்னாட்களில் என்னை நானே பாராட்டியிருக்கிறேன். ஜான் பிராட்லி அண்ட் கம்பெனி, ஜான் அண்ட் தாமஸ் ஜான்சன், ஹாரில்ட் அண்ட் சன்ஸ், லோஷ்,வில்சன் அண்ட் பெல், வெஸ்ட்லே ரிச்சர்ட்ஸ் நிறுவனங்களின் ஆலைகளின் முன் நின்றிருக்கிறேன்.  இரும்பின், சோப்பின், சோடாவின், துப்பாக்கிக் குழாய்களின் வாசனைகள் நிரம்பிய காற்றைச் சுவாசித்த நிழல்கள் ஒவ்வொன்றும் எதிர்காலத்திற்கு விரைந்து கொண்டிருந்தன.  உழைப்பாலும், போராலும் மனித உடல் படும் வேதனையை நேரடியாகக் கண்டேன்.  இயந்திர ஆலைகளிலிருந்து வெளியே வருவதும், நாளை வரை ஒத்தி வைக்கப்பட்டிருக்கும் போரினிடையே முகாமிற்குத் திரும்புவதும் ஏறக்குறைய ஒன்றேயென்று யோசிப்பேன்.  ஆலைகளுக்கு முன்னே நிற்கும் நாட்களில் மனிதர்கள் போரிட்டு இறப்பதே நல்லதென்றும், போரைப் பார்க்கும் நாட்களில் அவர்கள் உழைப்பதே நல்லதென்றும் நினைத்ததுண்டு.  மனிதர்கள் பிறப்பதே உழைக்கவும், போரில் ஈடுபடுவதற்கும் மட்டுமே என்றொரு புரிதலிருந்தது.  சிரியர்கள் வரி வசூலிப்பவர்களுக்கு எதிராகக் கலகம் செய்து கொண்டிருந்த நாட்களில் மனிதர்கள் வரிகட்டவும் பிறக்கிறார்கள் என்று சேர்த்துக் கொண்டேன் (பின்பொருமுறை, வரிகளைச் செலுத்தாத பாரோ காலத்து எகிப்திய விவசாயிகள் இழுபடும் ஓவியத் தீற்றல் ஒன்றை அருங்காட்சியகத்தில் நெல்லியும், நானும் பார்த்தோம். பனாரஸில் வீட்டு வரிக்கு எதிரான கலகத்தை நேரில் கண்டிருப்பதாக நெல்லி சொன்னது).  ஆனால் வேட்டைக்காரர்களால், மீன் பிடிப்பவர்களால் விலங்குகளும், கடலுயிரினங்களும் சந்திக்கும் நெருக்கடிக்குப் பிறகு நீண்ட நாட்கள் ஓரிடத்தில் தங்க நேர்ந்தால் மர உச்சிகளில், எளிதில் பறவைகளும் நெருங்க முடியாத இடத்தில் இலையின் வடிவமெடுப்பேன்.  இலைகளை யாரும் வேட்டையாடுவதில்லை என்றாலும் அவை மருத்துவத்திற்காகவும், விலங்குகளின் உணவிற்காகவும் பறிக்கப்படுவதுண்டு.  இலையாக இருந்த காலத்தில் பருவநிலை மாற்றங்களை அறிந்தேன்.  மூப்படைந்த பழுப்பு இலைகள் காற்றில் எடையின்றி மிதந்து சருகுகளாக நிலமடைவதையும்,  இலை துளிர்ப்புப் பருவத்தில் அவை தங்களின் புதிய நிறத்தைக் கண்டு குதூகலிப்பதையும் பார்த்திருக்கிறேன்.  உதிர்ந்த இலைகளே புதிய இலைகளாகப் பிறக்கின்றனவா? அல்லது ஒவ்வொரு இலையும் தனித்தனி பிறப்புடையவையா என்று குழம்பியிருக்கிறேன்.  தாவரங்கள் தோன்றிய காலத்திலிருந்து இதுவரையிலான இலைகளின் எண்ணிக்கை எவ்வளவுதானிருக்கும்?     

பனி நிரம்பிய ஆர்க்டிக் வளையப்பகுதியிலிருந்து இருள் நிரம்பிய காடுகள், விழிப்புடனேயிருக்கும் நகரங்களில் கேட்கும் இசை (வியன்னாவைக் கடக்கும் டானுப் ஆற்றில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இசை கலந்திருக்கிறதென்று சொன்னால், திருவையாற்றைக் கடக்கும் காவிரியிலும் அந்நூற்றாண்டின் இசை கலந்திருக்கிறதென்று நெல்லி சொல்லும்), தெருக்கள், விடுதிகள், வீடுகள், ஓவியங்கள் வரையப்பட்டிருக்கும் குகைகள், ஆறுகள், பாலைவனங்களென தொடர்பேயில்லாத நிலக்காட்சிகளைக் கடந்திருக்கிறேன்.  மணலுக்குள் தலை புதைத்து இரை வேட்டையாடும் பிடிஸ் பெருங்குவேய் பாம்பாகவும் இருந்திருக்கிறேன் (என்னால் பாலைவனப் பாம்பின் வடிவத்திலிருந்து விடைபெறவே முடியவில்லை).  பூமி உண்மையில் அற்புதமானதென்பதை வேறு யாரையும் விட நான் உணர்ந்திருக்கிறேன்.  எனது புலப்படாத உடலில் பூமியே தோலாகப் படிந்திருக்கிறது.

பகுதி ஆறு

பாதாள உலகத்தின் ஹெய்டிஸ்-நகரும் நிறுத்தற்குறி-இரண்டு நிலங்களின் புகழ்ச்சி-கில்காமெஷ் வெட்டிய தேவதாரு-புழுதிமுகம்-நிஜக் கனவு

நாற்காலியின் கரத்தில் உறங்கிக் கொண்டிருந்த நான் கண் விழித்ததும் மனித உருவிலிருந்த ஹெய்டிஸ் (அவரை அந்தப் பெயரில்தான் அழைப்பேன்) வழக்கம் போல புத்தகத்தின் மீது ஒரு புள்ளியளவு பூச்சியாக ஊர்ந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். எழுத்துக்களுக்கு மிக அருகே போவதற்காக ஹெய்டிஸ் ஏறக்குறைய எழுத்தின் மீதிருக்கும் புள்ளி அளவிற்கு நுணிகி விடுவார்.  சில சமயம் ஒரு நிறுத்தற்குறியோ அல்லது முற்றுப்புள்ளியோ வாக்கியங்களின் மீது நகர்ந்து கொண்டிருக்கிறதென்று சந்தேகிப்பேன்.  எல்லாம் இந்தக் காட்சி வாடிக்கையாகும் வரைதான்.

இந்தப் பெயரை நான் அவருக்கு சூட்டிய நாளில் நான் சிவப்புப் பிரமிடை அளந்து கொண்டிருந்தேன்.  ஒவ்வொரு கல்லாகத் தாவித் தாவி எனக்கு மேலே வானம் மட்டுமேயிருக்கும் உயரத்தைத் தொட்டதும், உச்சிக்கல்லை எடுத்து வைத்த மனிதர்களை நினைப்பேன்.  வானத்திலிருக்கும் தூரப்பார்வையுள்ள ஒருவருக்கு நாங்களிருக்கிறோம் என்று சொல்வதற்காக அல்லது நிலத்திலிருந்து என்றாவது தப்பிச் செல்வதற்கான படிக்கட்டுகளாக அவர்கள் பிரமிடுகளை எழுப்பியிருக்கலாம்.      

பிரமிடின் உச்சியிலமர்ந்து வழக்கம் போல கால் மீது கால் போட்டுக் கொண்டு உலகைக் குறித்து யோசிப்பேன்.  நீரிலிருந்து வெளியே வாழத்துவங்கி எத்தனையோ வருடங்களாகிவிட்டன (காலக்கணக்கெல்லாம் நான் முன்பே கற்றிருந்தேன்).  பாரோ ஸ்னெஃபெருவின் காலத்தில் முகிழ்த்த முக்கோண வடிவக் கட்டுமானம் முதன்முதலாக உதித்த மனதையும், மரங்களேயில்லாத பாழ்வெளியில் உழைப்பின் புழுக்கத்தைத் தாங்கிக் கொண்டு ஒவ்வொரு கல்லாக உருட்டி இந்த வடிவத்தை முழுமையாக்கியவர்களையும் யோசித்தேன்.  ஒரு செய்தியாக, கனவாக அல்லது யாரையாவது இகழ்வதற்காகவாவது எழுந்திருக்கும் இந்தப் பிரம்மாண்டங்கள் இங்கே ஒருவன் எல்லோருக்கும் மேலாக, பிரபஞ்சத்தையே இயக்கும் சக்திகளுக்கும் மேலாக எழுந்தான் என்பதைக் காட்டுவதற்காக எழுந்திருக்கின்றனவா?  “இரண்டு நிலங்களின் புகழ்ச்சி” கப்பலில் ஆட்களையும், பொருட்களையும் கொண்டு வந்து மாமாங்கக் கணக்கில் கற்களை உருட்டி வெறும் சமாதிகளாக எழுந்திருக்கும் பிரமிடுகள் அற்ப வாழ்வை மரணத்திடமிருந்து காத்துவிட முடியுமென்ற அசட்டு நம்பிக்கையால் உருவானவையாகவும் இருக்கலாம்.  கில்காமெஷ் வெட்டிச் சாய்த்த தேவதாரு மரங்களே ஸ்னெஃபெருவின் கப்பல்களாக நைல் ஆற்றின் மடியில் மிதந்திருக்கின்றன.  கில்காமெஷ் காவியமும் மரணத்தை அளப்பதே.  

எல்லாப் பிரமிடுகளையும் அளந்து பார்த்தேன்.  ஒரு விளையாட்டாக அதை மாற்றிக் கொண்டேன்.  உயரத்திற்குச் செல்வதும், மெதுவாக இறங்கி நிலத்தைத் தொட்டு இறங்கி வந்த உச்சியை, நீலத்தைக் குத்தியிருக்கும் உச்சிப்புள்ளியை கண்களின் மீது கரங்களைப் போல கால்விரல்களைச் சேர்த்து உற்றுப் பார்ப்பேன்.  ஒரு தவளை அறிந்து கொள்ள முடியாதவையும் உலகில் உண்டென்று துயரடைவேன்.   

சிவப்புப் பிரமிடிலிருந்து நான் இறங்கிக் கொண்டிருக்க வீசியடித்த புழுதிக் காற்றில் கண்களை மூடினேன்.  காற்றின் பிரமிடுகளை நகர்த்தும் வேகத்திற்குப் பயந்து ஒரு கல்லை இறுகப் பற்றியிருந்தேன். புழுதிக்காற்று நின்றதும் அடுத்த அடியை கவனமாக எடுத்து வைத்தேன்.

 “என்னை மிதிக்காதே”.

பயந்து இரண்டு அடிகள் வேகமாக இறங்கினேன்.  என்னுடைய கால் அச்சுப் பதிந்த புழுதிப்படலம் ஒரு முகமாக எழுந்து என்னிடம் பேசியது.  மனிதர்களுக்கு முன்பிருந்தே நான் இங்கேயிருக்கிறேன்.  ஆனாலும் இப்படியொரு விசித்திரத்தை என்னுடைய எந்தத் திசைப் பயணத்திலும் கண்டதில்லை.  எனது காலின் அச்சே ஒரு முகமாக மிதக்கிறது.  ஹெய்டிஸின் மூன்று தலை நாயான செர்பரஸும், எமன் பாதையைத் தடை செய்யும் நாயான சபளமும் இணைந்து வந்தால் கூட விசித்திரமென்று கருத மாட்டேன்.  நான் அம்முகத்திற்கு ஹெய்டிஸ் எனப் பெயரிட்டதற்கு இந்த நாய்களை நான் மனதில் நினைத்தது தான் காரணம்.

ஹெய்டிஸ் எனும் ஒரு நிறுத்தற்குறி புத்தங்களின் பாதாளங்களில் புதைந்திருக்கும் எழுத்துக்களின் மீது ஊர்கிறது.  நான் மறுபடியும் கண்ணயர்ந்தேன்.  பசித்த நிழல்கள் எங்கள் மீது ஊர்ந்த நாளை ஒரு கனவாகக் கண்டேன்.  அது நடந்து எவ்வளவோ வருடங்களாகின்றன. பசித்த நிழல்கள்.

பகுதி ஏழு

ந்திரப் பொருள்-முதல் கணக்காளன்-நூலகப்பயணம்-புத்தகங்கள்-

கருப்பு டைக்ரிஸ்-அலாமுத் கோட்டை-ஹசாசின்ஸ்-பாக்தாத் முற்றுகை

காகிதத்தாலான ஒரு பொருளைத் திறந்ததும், அதன் முன் மனிதர்கள் சிலைகளாக உறைவதை நான் முதலில் ஏதோ மந்திர வித்தையென்றே நம்பினேன்.

கூரையிலிருந்து எரியும் விளக்குகள், புழக்கத்திற்கு வந்த பிறகு மனிதர்கள் வெகுநேரம் இரவில் விழித்திருக்க ஆரம்பித்தார்கள்.  அவற்றை மின்விளக்குகள் என்று அழைத்தனர்.  மின்விளக்குகள் வந்த பிறகு இருட்டே ஊனமடைந்தது.  காற்றில் தள்ளாடும் சுடரொளியில் அசையும் நிழல்களைப் பார்ப்பதே மறைந்தது (அப்படியொரு அசையும் நிழலாகத்தான் மேரி ஷெல்லியை முதன் முதலில் பார்த்தேன்).  இரவிலும் உழைக்க ஆரம்பித்தார்கள்.  மனிதர்களை உறையவைக்கும் காகிதத்தாலான மந்திரப் பொருளின் பக்கமே போகக் கூடாதென்று நினைத்திருந்தேன்.  தனிமைக்குப் பிறகு என்னுடைய அச்சமே அந்த மந்திரப் பொருள்தான்.  பிரமிடு ஒன்றில் நெல்லியைக் கண்டதும் அதற்கு முன் பார்த்த எந்தத் தவளையையும் போலல்லாமல் இங்கே ஒரு தவளை தொங்கிக் கொண்டிருக்கும் விசித்திரத்தை அதிசயங்களின் கோளான சிரியஸில் கூடக் கண்டதில்லை.  சனிக்கோளிலும் இந்த அளவிற்கு நான் எதையும் பார்க்கவில்லை.

நெல்லிதான் அந்த மந்திரப் பொருளை புத்தகம் என்று அழைப்பார்கள் என்றது.  சிந்தனையென்கிற அருவம் மொழியென்கிற கருவியின் துணையோடு எழுத்துக்களாக உருவமடைவதே புத்தகம்.  அதை அஞ்சுகிறவர்களும், விலகிச் செல்கிறவர்களும், வழிபடுகிறவர்களும், உயிரைக் கொடுத்துக் காக்கிறவர்களும், தங்கள் கண்ணாக நேசிப்பவர்களும் இருக்கிறார்கள்.  புத்தகம் என்ற பொருள் உருவாகி மனிதர்களையே கற்றவர்களென்றும் (அறிவு நாட்டமுள்ளவர்களென்றும்), கல்லாதவர்களென்றும் (அறிவு நாட்டமற்றவர்களென்றும்) பிளவுபடுத்தியிருந்தாலும் அதற்கு அவை என்றுமே பொறுப்பாகாது.  நெல்லி புத்தகங்களைப் பற்றிச் சொல்லிக் கொண்டே அருங்காட்சியகத்திலிருந்து வெளியே  வந்தோம்.  பாரோ காலத்து வரி வசூலிப்பவர்களைப் பற்றிப் பேசினோம்.  சுமேரியக் களிமண் ஒரு மனிதனின் பெயரைச் சுமந்திருக்கிறது. மனிதகுல வரலாற்றில் பெயருடைய முதல் மனிதன்.  அவன் பெயர் குஷிம்.  அவன் ஒரு சாதாரண கணக்காளன்.  மனிதர்களின் கைக்கு கிடைத்த முதல் எழுத்துப் பிரதியே “29086 அளவுள்ள பார்லி(யை) 37 மாதங்கள்(ளில்) (வரப்பெற்றோம்) குஷிம்” என்பதே.  பொருளும், கணக்கும், வியாபாரமுமே மனிதர்களை இயக்கியிருக்கிறது.  வரி அதன் ஓர் அங்கம் என்றது நெல்லி.   அதற்கு எப்படி எல்லாமே தெரிந்திருக்கிறதென்று கேட்டால் மனிதர்களுக்கு முன்பிருந்தே நான் இங்கேயிருக்கிறேன் என்று பதில் சொல்லும்.

ஒரு புத்தகத்தில் நுழைவதே ஒரு நூலகத்திற்குள் நுழைவதற்கு சமம். ஒற்றைப் புத்தகத்தை வாசிக்கத் துணிகின்றவர் எண்ணிக்கை குறிப்படப்படாமல் அளிக்கப்பட்டிருக்கும் வாழ்நாளின் சில மணிநேரங்களை, சில்லறைகளைச் சூறைவிடுபவர்களைப் போல, கடலில் ஒரு குவளை குறைந்தால் என்ன என்கிற அலட்சியத்தோடு செலவழிக்கிறார்.  ஒரு நூலகத்தில் நுழைகின்றவர் எவ்வளவு குறைவானது தன் வாழ்நாளென்று மலைத்து, தன்னால் வாசிக்க முடியாத புத்தக அடுக்குகளின் மீது ஏக்கப் பெருமூச்செறிகிறார். அந்தச் சூட்டில் ஈரப்பதமிக்க, வெளிச்சம் குறைவான நூலக ஓரங்களில் திறக்கப்படாத புத்தகங்களில் வசிக்கும் பூச்சிகள், சூட்டைக் கிளப்பியது யாரென்று பார்க்க புத்தகங்களின் மேற்பரப்பில் தலை தூக்குகின்றன.  அளிக்கப்பட்டிருக்கும் வாழ்நாளை கடைசிச் சில்லறைகளை எண்ணுவதைப் போல எண்ணி புத்தகங்களுக்குச் செலவிடத் துவங்கி விடுகிறார்.      

யாருக்கும் தீங்கில்லாத ஒரு செயல் வாசிப்பது.  வாசிப்பவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் ஒரு செயல் எழுதுவது (டான் குவிக்ஸாட் என்னவானான் என்று யோசியுங்கள்).  அனைத்துப் பிரிவினருக்கும் கருவியாகிவிடுகிற புத்தகங்கள் வெறுப்பைத் தூண்டவும், உயிர்களின் மீது பரிதாபமெழச் செய்யவும் துணை போகின்றன.  குற்றமிழைக்கக் காரணமாகும் அவை சாட்சி மட்டும் சொல்வதில்லை.  பின்விளைவுகள் அனைத்திற்கும் அவை பொறுப்பில்லாதவை என்கிற இடத்தை எட்டியிருக்கின்றன.  எழுதியவரை விடவும் அதிகம் நேசிக்கப்படுகிறவையாக, வெறுக்கப்படுகிறவையாக புத்தகங்கள் இருக்க, அவற்றை எழுதியவர்களோ கிராமச் சாலைகளின் மதிய நேர டீக்கடைக்காரர்களைப் போல வாசிப்பவரை எதிர்பார்த்து அமர்ந்திருக்கிறார்கள்.  தேடி வரும் வாசகரை மனதிற்குள்ளாக தொழுதே விடுகிறார்கள்.  

தேவையென்றும், ஆடம்பரமென்றும் கருதப்பட முடியாதவையாக புத்தகங்கள் இருக்கின்றன.  புத்தகங்களை மதிக்கிறவர்கள் கூட வாசிப்பவர்களை வெறுக்கிற விநோதம் கிட்டத்தட்ட, கன்னித்தன்மையை காபந்து பண்ணும் கலாச்சாரமுடைய இனக்குழுக்களின் மனநிலைக்கு இணையானது.  

உலகினின்று மனிதர்களைத் துண்டித்து, செயல்கள் அனைத்தையும் ஒத்தி வைக்கத் தூண்டும், அவர்கள் அறிவோடு சதுரங்கமாடும், காலிப்பாத்திரத்தை நிரப்புவதைப் போல அவர்களது ஞாபகக் குவளைகளை நிரப்பும் (ஞாபகத்தின் துணையில்லாவிட்டால் ஒரு புத்தகம் பயனற்றுப் போகும்), வெறுப்பிற்கும், நேசிப்பதற்கும், அஞ்சுவதற்கும் காரணமாகும், புதுப்பிக்கும், திசைதிருப்பும், கூட்டமாக்கும், நேரத்தை விரயமாக்கும், உபரி நேரத்தை உபயோகமாக்கும்,  வழிப்படுத்தும், சிதறச் செய்யும், பணியக்கோரும், விடுதலையுணர்வைக் கிளர்த்தும், மொழிக்குக் கடனளிக்கும், தப்பித்து தலையைப் புதைத்துக் கொள்ள வாய்ப்பளிக்கும், விட்டேத்திகளாக்கும், குழப்பம் அடையச் செய்யும், கடிவாளமிடும், பெருமிதமளிக்கும், மதிப்பிற்குரியவர்களாக்கும், ஏட்டுச்சுரக்காய்களென்ற ஏளனத்திற்குக் காரணமாகும், குற்றவுணர்வுக்குள்ளாக்கும், கருத்துக்களை மாற்றச் செய்யும், இறுகச் செய்யும், இரும்பு மண்டைகளாக்கும், எளிமையாக அணுகத்தக்கவர்களாக்கும், பரிமாறிக் கொள்வதில் இணக்கமும், விட்டுத்தரமுடியாத அளவிற்கு பிடிப்பையும் அளிக்கும், பொருள் இழப்பை உண்டாக்கும், பொருட்படுத்தத் தக்கவர்களாக்கும், பறவைகளுக்கு உபயோகமில்லாத மரங்கள் வளரக் காரணமாகும், திறந்த வரப்புகளுக்கு உள்ளேயும் வழிந்தோடிவிட முடியாமல் தளும்பும் சொற்களுடைய புத்தகங்களுக்காகவே நாங்கள் இருவரும் நூலகங்களில் ஏற ஆரம்பித்தோம்.  

அலெக்ஸாண்டிரியா நூலகச் சிதிலங்களைத் தேடிக் கொண்டிருந்த நாளில் எரிக்கப்பட்ட நூலகங்களைக் குறித்து நெல்லி சொன்னது.

“அலாமுத் கோட்டையைக் கைப்பற்றிய மங்கோலியர்கள், பதினோரு நாள் பாக்தாத் நகர முற்றுகையில் டைக்ரிஸ் ஆற்றில் தூக்கியெறிந்த நூல்களின் மை கரைந்து ஆறே கருப்பாக ஓடியது.  பானு மூசா சகோதரர்களின் தானாகவே இயங்கும் இயந்திரங்களின் படங்கள் மையாகக் கரைந்த பின்னும் டைக்ரிஸின் மீது இயங்கியதைப் பார்த்தேன்.  நீரே கருத்து வெளிச்சமே உட்புகாத இருட்டில் அரைக்குருடாக இருந்தேன்.  அறிவின் வாசனை என்பதை அன்று முகர்ந்தேன்”.

நெல்லி, அலாமுத் கோட்டையில் ஹசன்-ஐ-சப்பாவோடு இருந்ததாகவும், கைதுக்குப் பயந்து மாறுவேடங்களில் சப்பா கோட்டைக்குப் போய்வந்த நாட்களிலிருந்து இரண்டு ஆண்டுகள் திட்டமிட்டு அவருடைய சகாக்களை கோட்டையில் பணிக்கு அமர்த்தி இறுதியாக மாறுவேடத்தைக் கலைத்து கோட்டையைக் கைப்பற்றியதைப் பார்த்திருந்தது.  

“இரண்டு முறைகள் கோட்டையின் கூரையில் ஏறியதைத் தவிர முப்பத்தைந்து ஆண்டுகள் கோட்டையின் அறைகளெங்கும் நிரம்பியிருந்த நூல்களை வாசிப்பதில் சப்பா செலவிட்டார்.  கெய்ரோவில் கல்வி கற்றவரான சப்பா, குரான் முழுவதையும் மனப்பாடமாகச் சொல்லுவார். அவரோடிருந்த ஒவ்வொரு நாளிலும் அவருடைய தோளில் அமர்ந்து அவர் வாசித்த நூல்கள் அனைத்தையும் நானும் வாசித்தேன்.  கணிதம், வானியல், தத்துவம், கட்டிடவியல், மருத்துவம், மதம், கலைகள், ரசவாதமென்று அவர் வாசிக்காத நூல்களே உலகில் இல்லை.  அவர் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன் வாசிப்பதையே நிறுத்தி விட்டு குரானை மட்டும் முனகிக் கொண்டிருந்தார். அதன் பிறகு முழுதும் அமைதியில் ஆழ்ந்தார்.”

சப்பா நீங்கள் ஏன் இப்பொழுது எதையுமே வாசிப்பதில்லை?”.  அப்போது மூன்றாவது முறையாகக் கோட்டையின் கூரையில் ஏறிக் கொண்டிருந்த அவரிடம் கேட்டேன்.

“எவையுமே உண்மையில்லை”

“பிறகு ஏன் இவ்வளவு வருடங்களை வாசிப்பதிலும், ஹசாசின்களை உருவாக்கியதிலும் செலவழித்தீர்கள்?”

“எவையுமே உண்மையில்லை, எனவே அனைத்தும் அனுமதிக்கப்பட்டிருக்கின்றன”.

நெல்லி அனேகமாக சப்பாவோடு இருந்த நாட்களுக்குச் சென்றிருக்க வேண்டும், அது வெகுநேரம் பேசவேயில்லை.  நரைத்த அவருடைய தாடி நூலின்  மீது உரச விளக்கொளியில் அவர் வாசித்துக் கொண்டிருந்த நாட்களுக்கு.   

“அவர் நினைவாக அங்கேயே தங்கியிருந்தேன்.  மங்கோலியர்கள் அக்கோட்டையைக் கைப்பற்றும் நாள் வரை.  அதன் பின் மங்கோலியர்களைப் பின் தொடர்ந்து பாக்தாத் வந்தேன்.”

இரயில் பயணங்களில் எங்கள் ஆர்வம் திரும்புவரை நெல்லி அவரைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தது.

பகுதி எட்டு

dS  0

கராச்சியின் வீதிகளில் வாயு முகமூடியை விற்றுக் கொண்டிருந்தார்கள். கடைகள் அனைத்துமே சூரியன் மறைவதற்குள் அடைக்கப்பட்டு நகரமே ஒடுங்கிய தெருக்களில் வாயு முகமூடியொன்றை முகத்தில் அணிந்திருந்த பெண்ணொருத்தியை நிறுத்திய ஹெய்டஸ் அவள் ஏன் முகமூடி அணிந்திருக்கிறாள் என்று கேட்டார்.  அவளுடைய கையைப் பிடித்திருந்த குழந்தையும் இடுப்பு வரை முகமூடி அணிந்திருந்தது.

  “போர் வருகிறது.”

“எங்கிருந்து?”

“எல்லாத் திசைகளில் இருந்தும்”

அப்படியொரு போர் முடிந்து பதினெட்டு ஆண்டுகள் கடந்திருந்தன. ஆபத்தில்லாத இடத்திற்கு மனிதர்கள் நகர்ந்து விட்டார்களென்று அவரும், நானும் நினைத்தோம். இரும்புத் தொப்பிகள், டர்பன்கள், தலைப்பாகைகள், கருப்பர்கள், வெள்ளைக்காரர்கள், மஞ்சள் நிறத்தவரென்று பேதமேயில்லாமல் கோடிக்கணக்கான விலங்குகள் ஒன்றை ஒன்று அழித்துக் கொண்டிருந்த ஒன்பது வருடங்களை அதற்குப் பின் பார்த்தோம். நாங்கள் போரின் சப்தத்திலிருந்து வெளியேறவே விரும்பினோம்.  ஆனால் எத்திசையிலும் விமானங்களின் ஓசையும், குண்டுகள் வெடிக்கும் ஓசையும், அழுகுரல்களும் கேட்டுக் கொண்டேயிருந்தன.  மகா சமுத்திரங்களின் நீரடியிலும் போர் நடந்தது. உலகத் தெருக்களே சவ அடக்க ஊர்வலக் காலகளால் தேய்ந்திருந்தது. குழிதோண்டிப் புதைக்கப்பட்ட உடல்களையும் அவற்றினருகே மதச் சடங்குகளைச் செய்யும் புரோகிதர்களையும் பார்த்தோம்.  சுவஸ்திக்கை சுமக்கும் கழுகை சின்னமாகக் கொண்ட லப்ட்வஃபேயின் ஒரு இலட்சம் விமானங்கள் வானெங்கும் பறந்து ஜீயஸையும், கிரெய்க்ஸ்மரைனின் நீர் மூழ்கிகள் போசைடானையும் துள்ளி விழச் செய்து கொண்டிருந்தன. உறக்கமற்றுத் தவித்த அவர்கள் நிலத்தைப் பார்க்க, அவர்களுடைய சகோதரனுடைய பெயரைத் தாங்கியிருக்கும் ஹெய்டஸான நான் ஒவ்வொரு குண்டுவெடிப்பிற்குப் பிறகும் உருவாகும் பள்ளத்தில் தடுமாறி விழுந்து கொண்டிருந்தேன். பெண்களும் எறும்புகளைப் போல வீடுகளிலிருந்து வெளியே வந்தார்கள். போர் புரியும் ஆண்களை தாதிகளாக மருத்துவமனைகளிலும், ஆலைகளில் தொழிலாளர்களாகவும், சிபிலிஸைப் பரப்பிக் கொண்டிருந்தவர்களை நெருக்கடியான விடுதிகளின் அறைகளிலும் சுமந்தார்கள்.  Deutschland Erwache, Vorwarts!Vorwarts, Die Horst Wessel Lied பாடல்களின் உற்சாகம் நரம்புகளில் படர துப்பாக்கிகளைச் சுமந்த துருப்புகள் உலகையே துளைத்துக் கொண்டிருந்தன.

வெர்னர் வான் பிரவுனின் V-2 ராக்கெட்டுக்களைக் கண்டு உலகமே அஞ்சியது.  போர்க்கயிற்றின் ஒரு முனையை இழந்து கொண்டிருக்கும் ஜெர்மனி தலைகுனிவதைத் தவிர்க்க இரவு பகலாக பேரழிவின் தூதுவனான ராக்கெட்டுகளை வெடித்தார்கள்.  அட்லாண்டிக் கடலுக்கு அப்பால் ராபர்ட் ஓப்பன்ஹெய்மர் கவிதையின் பெயரிட்டு (திரித்துவம்) ஒரு சோதனையை நிகழ்த்திக் கொண்டிருந்தார்.  மன்ஹாட்டன் திட்டமே முன்னெப்போதுமில்லாத அபாய முனைக்கு உலகை நகர்த்திக் கொண்டிருந்தது. பொறியாளர்கள் வதைக்கூடங்களை வடிவமைக்க, அறிவியலாளர்கள் ஆயுதங்களை உருவாக்கிக் கொண்டிருந்தார்கள். மனிதர்கள் போரிட்டார்கள். போரின் முகம் உரக்கச் சிரித்தது.      

எங்கேயும் அலைந்து திரிந்து இறுதியாக ஒலியே நுழையாத இமாலயப் பனிக்குகையொன்றில் ஒளிந்திருந்த நாங்கள் வெய்யில் காய்வதற்காக வெளியே வந்தோம்.  பசித்த நிழல்கள் எங்கள் உடலைக் கொத்தின.  

வெளிச்சத்தையே மறைக்கும் நிழல்கள் வானெங்கும் திரிந்தன. அவை பறவைகளின் நிழல்கள். கூட்டம் கூட்டமாக வெளியேறும் பறவைகளின் நிழல்கள் ஒரு போர்வையாக நிலத்தின் மீது படிந்தன. விசும்பிற்கும் அப்பால் பறந்த பறவைகளின் நிழல்களால் நாங்கள் ஓர் இருட்குகைக்குள் நுழைந்தவர்கள் போலானோம்.  

“பறவைகள் வெளியேறுகின்றன”.

சோர்வடைந்த குரலில் ஹெய்டஸ் சொன்னார். நாங்கள் வானையே பார்த்திருந்தோம்.  முடிவேயில்லாமல் பறவைகள் பறந்து கொண்டிருந்தன. எங்கோ அடைக்கலம் தேடிக் கிளம்பிய பறவைகளால் பகலின் உடலில் கிரகணத் துளை. பூமியின் மரங்களை விட்டே வெளியேறும் பறவைகளின் வாக்களிக்கப்பட்ட நிலம் எங்கிருக்கிறது? அவைகளில் உயரப் பறக்கும் பறவை மனிதர்களேயில்லாத கோளைக் கண்டிருக்கலாம்.  போர் உச்சத்தை நெருங்கிக் கொண்டிருப்பதை உணர்ந்தோம்.

பல நாட்களாகப் பறவைகள் வானேகிக் கொண்டேயிருந்தன.  துயருற்ற முகத்தோடு அவர் அமைதியாகவேயிருந்தார். என் வாழ்நாளில் பார்த்த எந்தவொரு போரைப் போலவும், அழிவைப் போலவும் இது இல்லையென்பதாலும் எனது அறிந்து கொள்ளும் எல்லையை மீறிப்போய்விட்ட போராயுதங்களின் முன் மெளனித்திருப்பதே நல்லதென்று முடிவெடுத்தேன். ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாமல் குகையில் முடங்கியிருந்தோம்.

இறுதியாகக் கிழக்கே இரு நெருப்புக் காளான்கள் முளைத்தன.  அவை புகையாக மறைவதற்குள் பூமியின் பாதையில் ஓர் அபாயக் குறியீட்டைப் பாதையின் நடுவே நிறுத்தின.  மகாமசானமாகப் போர் முடிந்தது.  நாங்கள் இருவரும் பறவைகளைத் தொடர்ந்து பூமியிலிருந்து வெளியேறுவதென்று முடிவெடுத்தோம். இங்கிருந்து எதையாவது எடுத்துச் செல்வதென்றும்.  முதலில் விதைகளை யோசித்தோம்.  அவை பூமியைத் தவிர வேறெங்கே முளைக்கும்? எங்களது பயணத்தில் நாங்கள் பார்த்த பலவற்றைப் பட்டியலிட்டோம்.  ஸ்டெடால் குகையில் கிடைத்த “சிங்க-மனிதன்”, இன்காக்களின் குய்பு, லிடிய நாணயங்கள், மொஹஞ்சதாரோவின் வெண்கலப் பெண் எனப் பட்டியலிட்டு இறுதியாகப் புத்தகங்களை எடுத்துச் செல்வதென்று தீர்மானித்தோம்.

எங்களால் முடிந்தவரை (கணக்கிட்டுச் சொல்வதென்றால் 56,00,00,000 கோடிப் பக்கங்கள் அளவுள்ள புத்தகங்கள்) நூலகங்களில், கடைகளில், வீடுகளில் எங்கெங்கும் புத்தகங்களைச் சேகரித்து நிலத்தினடியில் புதைத்தோம்.  புத்தகங்களுக்காகப் பூமியைச் சுற்றிய பயணத்திற்கு எங்களுக்கு ஆறு ஆண்டுகளானது.  நெல்லியின் முதுகில் ஏறிக் கொண்டேன், என் முதுகில் புத்தகங்களைச் சுமந்து.  நெல்லி பிரமிடின் உச்சியை அடைவதற்கு சிரமப்பட்டது. இறுதியாக ஒரு முறை நிலத்தைப் பார்த்த நெல்லி அடுத்த கணம் வானில் தாவியது.  உலகிற்கு வெளியே திறந்திருந்த இந்த சாளரத்தின் வழியாக இங்கே நுழைந்தோம்.

அதன் பிறகு புத்தகங்களை எடுப்பதற்காக மட்டுமே நான் பூமிக்கு வருவேன். நெல்லியோ அதன் கண்களின் கிணற்றில் விழும் நட்சத்திரங்களை மட்டுமே பார்த்திருந்தது.

பனிக்கரடிகள் விளையாடும் வெள்ளை மைதானம் கரைந்து வெகு காலமாயிற்று.  குட்டிகள் பின் தொடர பெரிய உடல் குலுங்க அவை விளையாடுவதைப் பார்ப்பதற்காக எனது சாளரத்தை ஒவ்வொரு நாளும் திறந்து வைப்பேன்.  மைதானத்தில் விழும் வைகறை ஒளியை அவை நக்கி முடித்ததும் சோம்பல் முறித்து கொட்டாவி விடும்.  துருவப்பலகையிலிருந்து எம்பி முன்னிரு கால்களால் பிடித்திழுத்து சூரியனை பனிக்கரடி விழுங்குவதே பூமியில் இரவு.  

பனிக்கரடிகள் உயிரோடிருக்கும் காலம் வரை பூமியைப் பார்ப்பதற்கு நான் ஒரு நாளும் சலித்ததில்லை.  என்னுடைய சாளரத்தைத் திறந்தால் பூமி தெரியும்.  தொலைநோக்கிகள் தேவையில்லாத கண்கள் என்பதால் என்னால் வெகு சாதாரணமாக ஒரு எறும்பு பிரசவிப்பதைக் கூடப் பார்க்க முடியும். பனிக்கரடிகளே இல்லாமல் போனதும் எனது சாளரத்தை திறக்கவே கூடாதென்று அடைத்து விட்டேன்.  அவ்வப்போது ஒரு பழைய நினைவை மீட்டெடுப்பதைப் போல சாளரத்தைத் திறந்த நாட்களில் மாபெரும் பனிப்பாளமொன்று பிளந்ததையும், காடுகள் தீப்பற்றி எரிந்ததையும் பார்த்தேன். அன்று தொடங்கி இன்று வரை பூமி எரிந்து கொண்டேயிருக்கிறது.  

பகுதி ஒன்பது

புத்தகத்திலிருந்து இறங்கினேன்.  நாற்காலியில் என்னுடைய பழைய உருவில் இறங்கினேன்.  

“என்ன ஹெய்டிஸ் வாசித்து முடித்து விட்டாயா?”

“இது புதிய மொழியாக இருக்கிறது.  என்னால் அதன் சொற்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை.”

 நெல்லி நாற்காலியின் கரத்திலிருந்து புத்தகத்தின் மேல் தாவியதும் சொன்னது “இது தமிழ்”.

 “அப்படியா?”

 “நான் மதுரையில் இருந்த நாட்களில் பார்த்திருக்கிறேன்.”

 மீண்டும் புத்தகத்தை எடுத்துப் பார்த்தேன்.  

 எங்கள் தலைக்கு மேல் சாம்பல் துகளொன்று பறந்தது.  பூமியிலிருந்து எழும் சாம்பல் துகள்கள் கருந்தேமல் படலமாக வெளியின் மூலைகளில் மிதக்கின்றன.  எரியும் பூமியின் தீயே அண்டத்தின் குகைகளில் மஞ்சளாக மினுங்குகிறது.

 “இதுதான் சரியான நேரம்”.  நெல்லி புத்தகத்திலிருந்து சாளரத்திற்குத் தாவியது.  காலால் சாளரத்தைத் திறந்து பூமியை நோக்கிக் குதித்தது.

 “என் வயிற்றின் கீழே பூமியைப் புதைப்பேன்”.

 வானிலிருந்து ஒரு தவளை பூமியின் மீது குதிப்பதை மஞ்சள் பிழம்புகளின் மத்தியில் தீயின் கண்கள் பார்த்திருக்கும்.

பகுதி 0

நான் திரும்ப வேண்டும்.  நெல்லி இல்லாத துயரை என் கோளுக்குத் திரும்பி ஆற்றிக் கொள்ள வேண்டும்.  மூடிய சாளரத்தின் உள்ளே நாட்களைக் கணக்கிடத் துவங்கினேன்.  மைக்ரோமெகாஸ் பூமியில் இறங்கிய நாளிலிருந்து கணக்கிட்டு 800 ஆண்டுகள், ஒவ்வொரு நாளாக.

ஜூலை 5, 2537 புத்தகத்தின் மீது தலைசாய்த்திருந்த என் மீது நிழல் படிவதாக உணர்ந்து தலை தூக்கினேன்.  மைக்ரோமெகாஸ் இறங்கி வந்து கொண்டிருந்தார்.  என்னை அவர் நெருங்கியதும், “நீங்கள் எனது நண்பரான வால்டேரைப் போலிருக்கிறீர்கள்” என்றார்.

“என் பெயர் ஹெய்டிஸ். உங்களின் மீது ஒட்டிக் கொண்டுதான் சிரியஸிலிருந்து பூமிக்கு வந்தேன்.”

“நமது கோளில் இவ்வளவு குள்ளமானவர்கள் இல்லையே?”

“நாங்கள் சிரியஸைச் சேர்ந்த எவ்வுருவையும் எடுக்கக் கூடியவர்கள்”

எங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்த மைக்ரோமெகாஸ் அவரோடு சிரியஸிற்குத் திரும்ப சம்மதமா என்று கேட்டார்.

நான் தலையசைத்தேன்.  எனது புத்தகங்களைப் பார்த்தார்.

இவற்றையும் எடுத்துச் செல்லவதே எனது நிபந்தனையாக இருந்தது.

அவருடைய மார்புவரை அடுக்கியிருந்த புத்தகங்கள் ஒவ்வொன்றையும் பார்த்தார் (அவர் உயரம் இருபதினாயிரம் அடி).

மைக்ரோமெகாஸ் புன்னகைத்தார்.  அவற்றை அங்கேயே விட்டுவரும்படி சொன்னார்.  சிரியஸிற்குத் திரும்பியதும் பறிமுதல் செய்யப்பட்ட அவருடைய புத்தகத்தின் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் பிரதியைத் தருவதாகச் சொன்னார். அதைக் கேட்டதும் நான் புத்தகங்களை விட்டு வருவதற்கு சம்மதித்தேன்.

 நாங்கள் சிரியஸை அடைந்தோம்.  இங்கிருந்து கிளம்பிய போது குழந்தைகளாக இருந்தவர்கள் இப்போது வாலிபர்களாகியிருந்தனர்.  இடையில் எண்ணூறு ஆண்டுகள் ஓடியிருந்தன.  

மைக்ரோமெகாஸ் என்னை அவருடைய ஒற்றை அறை வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.  தூரத்திலிருந்து பார்க்க பிரமிடைப் போலிருந்தது. நிலவறையில் ஒளித்து வைத்திருந்த அவருடைய புத்தகத்தைத் தந்தார்.

தாமதிக்காமல் அதன் ஒவ்வொரு பக்கங்களின் மீதும் ஊர்ந்தேன்.  பூமியின் மொழிகளில் எழுதப்பட்டிருந்த பக்கங்கள் அவை. மைக்ரோமெகாஸ் அது வரையிலும் நான் சேகரித்திருந்திருந்த மொத்தப் புத்தகங்களின் பக்கங்களையும் ஒற்றைப் புத்தகத்தில் எழுதியிருந்தார்.  நான் நிலத்தினடியில் ஒளித்து வைத்து, பூமியிலிருந்து ஒரு தவளையின் முதுகுச்சுமையாகச் சுமந்து எவற்றைப் பாதுகாத்திருந்தேனோ அவை இங்கேயே இருந்திருக்கின்றன.

தலை தூக்கிப் பார்க்க மைக்ரோமெகாஸ் புன்னகைத்தபடி நின்றிருந்தார்.

அவருடைய புத்தகத்தைத் தூக்கிக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதும், வீட்டின் உயரத்தை அளந்து பார்க்க வேண்டுமென்று தோன்றியது.  ஒரு தவளையாக மாறி என் முதுகில் புத்தகச் சுமையோடு ஒவ்வொரு கல்லாக ஏறினேன்.

உச்சியிலிருந்து பார்க்க சாளரத்திற்கு உள்ளே நான் விட்டு வந்திருந்த எனது மேஜையும், நாற்காலியும், ஒளிர்ந்து கொண்டேயிருக்கும் மேஜை விளக்கும், புத்தக அடுக்குகளும் மிதப்பது தெரிந்தது.  

நாற்காலியின் கரத்தில் அமர்ந்திருக்கும் ஒரு தவளையும்.

***
நன்றி – கல்குதிரை 2016

(பாலசுப்ரமணியன் பொன்ராஜ் – 2010க்குப் பிறகான தமிழ் புனைவு உலகத்தில் ஒரு புதிய பாய்ச்சலை நிகழ்த்திக் கொண்டிருக்கும் இவரது புனைவுகள். இது இவரது இரண்டாம் குறுநாவல் – கல்குதிரை 2017 இதழில் வெளிவந்தது. இரு சிறுகதைத் தொகுப்புகள் கனவு மிருகம் மற்றும் துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை வெளியாகியுள்ளன. தொடர்புக்கு – tweet2bala@gmail.com)

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular