Wednesday, October 9, 2024
Homeபொதுபிரதிகளின் பன்முகக் கலாச்சாரமும் இலக்கிய விமர்சனக் கோட்பாடுகளின் எல்லைகளும்

பிரதிகளின் பன்முகக் கலாச்சாரமும் இலக்கிய விமர்சனக் கோட்பாடுகளின் எல்லைகளும்

எஸ்.சண்முகம்

தேசியத்தை சாதாரணமாக முறைமைப்படுத்தாத பிரதிகளை இலக்கிய விமர்சனம் புனிதத் தொகுப்பாக்குகிறது என நான் வாதாட விரும்புகிறேன்.

-சைமன் டூரிங்

(லிட்ரேச்சர் நேஷனலிசம்ஸ் அதர் தி கேஸ் பார் ரிவிஷன்)

இலக்கியம் என்ற சொல்லை குறிப்பீடு செய்யும் இரு வேறு பண்புச் சொற்களானக் கவிதை, உரைநடை ஆகியவற்றைப் பகுத்துப் புரிந்து கொள்ளவே பெரும்பாலும் இலக்கிய விமர்சனம் என்ற எழுத்துச் செயல் ஒரு கால கட்டம் வரையில் வரையறை செய்து வந்தது. குறிப்பாக மொழியியல் ரீதியாக இலக்கியத்தை காண விழைந்த கோட்பாடுகளில் அமைப்பியல் வாதம் தொடங்கி பின்-அமைப்பியல் வாதம் அமைவுற்று அதன்பிறகு பின்-நவீனத்துவம் என்ற நிலை வரை வளர்ந்துள்ளது. இதில் பின்-அமைப்பியல் வாதத்தை

1.அர்த்தம் குறித்த தத்துவமாகவும்

2.அர்த்தம் குறித்த அரசியலாகவும் கூறுகின்றனர். இலக்கியம் என்பதிலுள்ள ‘நான்’ என்ற இறையாண்மையை அகற்றிவிட்டு எல்லா வடிவங்களையும் ஒன்றோடொன்று இயைபுடையதாகக் குறிக்கிறது.

‘தத்துவம்’ என்பதை மொழிகடந்த அரூபப் பொருளாகக் கருதியதின் விளைவே ‘கவிதையையும், ‘உரைநடையையும்’ முழுமுதற் வடிவங்களாக மாற்றியது. இதன் எல்லைகளைத் தகர்த்த ழாக் தெரிதா என்ற பின்-அமைப்பியல் சிந்தனையாளர் தத்துவம், கவிதை ஆகியவை எல்லாமே ஒருவகையான மொழிதான் என்று கூறுகிறார். இதன் அடிப்படையில் அர்த்தம் என்பதை வாசித்தல் மூலம் தள்ளிப்போட்டுக்கொண்டே போகலாம் என்றும் கூறுகிறார்.

ஒரு மொழியாலானப் பிரதிக்கு ஒரு நிலையான அர்த்தம் என்பது இருக்க சாத்தியமில்லை என்பதைத் தனது கட்டவிழ்த்தல் மற்றும் difference என்ற மொழிக்கோட்பாடாகச் செயல்படுத்திக் காண்பிக்கிறார். மொழியால் கட்டமைக்கப்பட்ட

அகம் இலக்கியம்
அல்லது
அகவயம்-தத்துவம்

(selforsubject) என்பதை மொழியாலேயே கட்டவிழ்க்க முடியும் என்கிறார். அதேபோல ‘தத்துவம்’ சார்ந்த பெருங் கதையாடலையும் மொழிக்குறிகளின் தொகுப்பாகக் காணும்போது அந்த மொழிக்குறியின் உதவியின்றி ‘தத்துவம்’ என்ற குறிப்பீட்டை சாத்தியப்படுத்த இயலாது. இதனைக் கட்டவிழப்பு செய்யும் பட்சத்தில் தத்துவம் தனது மொழி கடந்த செயல்பாடு என்பதிலிருந்து கழன்று வெறும் மொழிக்குறிகளாகவே இருப்பதைக் காண முடியும்.

இத்தகைய சிந்தனையின் மற்றொரு சாத்தியமாக மிஷேல் பூகோவும் ஒருமையுடைய சில கருத்துகளைக் கொண்டிருந்தார். அவரும் ஒருவனின் அகத்தைச் சிதறடிக்கச் செய்யும் செயலாக முறையீட்டை தனது டெக்னாலஜி ஆப் செல்ப் (தன் என்பதின் தொழில் நுட்பம்) என்ற நூலில் எழுதுகிறார். ஒருவன் இன்னொருவனிடம் பாவமன்னிப்பு கேட்பதில் ஈடுபடும் போது மொழிரீதியாகத் தனது அகத்தை அழித்துக்கொள்கிறான் என்கிறார். இதற்கு ஆதாரமாக புனித் அகஸ்டின் பாவ மன்னிப்பை முன்வைக்கிறார். ஒரு சீமாட்டி தனது அகத்தினுள் அமுக்கப்பட்ட பாலியல் குறித்த நடப்புகளை வெளிக்கொணர இயலாத காலக்கட்டத்தில் அந்தப் பாலியல் அடக்குமுறையைக் கீழறுப்பு செய்யும் முகமாக அன்று நிலவிய ஒரு நாடோடிக் கதையை இதற்கு எதிரானப் பிரதியியல் செயலாக வாசிக்கிறார்.”ஒரு மாய மோதிரம் அது எந்த இடத்தில் வைக்கப்படுகிறதோ அந்த ஸ்தானத்தின் கதையை அது சொல்லிவிடும். மொழியற்றுக் கிடக்கும் ஒடுக்கப்பட்டப் ‘பெண்ணின் பாலியல் அகத்தை’ கதையாடலாய் மொழிகிறது. கதைசொல்லும் மோதிரத்தை அந்தப் பெண் தனது யோனியில் வைக்க அம்மோதிரம் அவ்வுடலிய ஸ்தானத்தின் அடக்குமுறையை உள் வயப்படுத்தப்பட்ட அகத்தை மொழியால் கதையாக்கிச் சொல்லி விடுவிக்கின்றது. இந்த வினோதமான நாடோடிக் கதையை பூக்கோ அகவயப்படுத்தலுக்கான மொழிரீதியான கீழறுப்பாகக் காண்கிறார். அதேபோல Cervantesன் Don Quixote-ஐப் பற்றிக் கூறும்போது

எழுதப்பட்ட வார்த்தை மற்றும் பொருள் இனி எப்போதும் ஒன்றையொன்று மற்றும் அவற்றுக்கிடையேயும் பிரதிபலிக்காது. Don Quixote தன்னிச்சையாகவே திரிகிறான்.

செர்வாண்டஸின் கதைமொழிக்கும் அதுகுறிக்கும் பொருளுக்கும் எந்த வகையானக் குறிப்பிட்ட ஒப்புமை இல்லாத ஒரு மொழிவெளியில் அந்த மொழிப்புனைவான Don Quixote சஞ்சரிக்கிறது என்கிறார்.

சிந்தனைத் துறையில் அறிதல் முறையிலும் அறிவுத் தொகுப்பிலும் அடக்குமுறையை உள் வயப்படுத்தப்பட்ட அகத்தை மொழியால் கதையாக்கிச் சொல்லி விடுவிக்கின்றது. இந்த வினோதமான நாடோடிக் கதையை பூக்கோ அகவயப்படுத்தலுக்கான மொழிர்தியான கீழறுப்பாகக் காண்கிறார். அதேபோல Cervantes Don Quixote-ஐப் பற்றிக் கூறும்போது

எழுதப்பட்ட வார்த்தை மற்றும் பொருள் இனி எப்போதும் ஒன்றையொன்று மற்றும் அவற்றுக்கிடையேயும் பிரதிபலிக்காது. Don Quixote தன்னிச்சையாகவே திரிகிறான்.

செர்வாண்டஸின் கதைமொழிக்கும் அதுகுறிக்கும் பொருளுக்கும் எந்த வகையானக் குறிப்பிட்ட ஒப்புமை இல்லாத ஒரு மொழி வெளியில் அந்த மொழிப்புனைவான Don Quixote சஞ்சரிக்கிறது என்கிறார்.

சிந்தனைத் துறையில் அறிதல் முறையிலும் அறிவுத் தொகுப்பிலும் பன்முகப் போக்குகளை உண்டாக்கியதில் நீட்ஷேயின் பங்கை முக்கியமாக இங்கே குறிப்பிட வேண்டும். அவரும் ஒரு மொழிநூல் அறிஞராக இருந்தவர். தத்துவத்தின் கற்பனா சக்தியை ஒற்றைக் குறிப்பீடானக் ‘கடவுளை’ வைத்துக் குறைப்பதை எதிர்க்கும் முகமாக ‘கடவுள் இறந்து விட்டார்’ என அறிவித்தார். இதை அவரது முக்கியமான சிந்தனைகளுள் ஒன்றாகக் கொள்ளலாம். இதன் அடிப்படைத் தத்துவத்தின் அர்த்தச்சுழிப்பைக் கட்டுப்படுத்தும் இறையாண்மையைத் தகர்க்கவே அவ்வாறு எழுதினார். இதைப்போலவே ரோலன் பார்த் என்ற இலக்கிய விமர்சகரும் ‘ஆசிரியன் இறந்து விட்டான்’ என்பதை விமர்சனத்தில் முன்மொழிந்தார். ஏனெனில் இலக்கியப் பிரதியின் வாசித்தலுக்கான பன்முனை சாத்தியத்திற்கு ஆசிரியனின் தொன்ம மதிப்பீடு தடையாக இருக்கிறது. அது பன்முக வாசிப்பிலிருந்து வாசகனை வெளியே தள்ளி விடுகிறது. ஆகவே “ஆசிரியன் எனும் குறிப்பற்ற மொழிப்பிரதியானது” அர்த்தத்தை ஒருமுகப்படுத்தாமல் எண்ணற்ற வாசக சாத்தியப்பாட்டைத் தழைக்கச் செய்கின்றது. ஆகவே பல்வேறு கலாச்சார முனைகளை ஒரே பிரதியில் வாசித்துப் பெருக்கும் வாய்ப்பை அது உண்டாக்க விழைகிறது.

வாசிப்பை அடிப்படையாகக் கொண்ட மொழி ரீதியான விமர்சனம் வளர்ந்தபோது பின்-அமைப்பியலின் தொடர்ச்சியாக இன்று பேசப்படும் பின்-நவீனத்துவம் என்ற கலாச்சார விமர்சனம் ஒரு புதிய விசையோடு இயங்கத் தொடங்கி உள்ளது. இலக்கியப் பிரதி என்பதை விரிவுபடுத்தும் இந்தப் பின்நவீனத்துவத்தை “கலாச்சாரங்கள் பற்றிய கலாச்சாரம்” என வால்டர் ட்ருயட் ஆண்டர்சனால் குறிக்கப்படுகிறது. அதைப்போலவே பின்-நவீனத்துவ சிந்தனையாளர்களுள் மிக முக்கியமானவரான ழாக் பிரான்சுவா லயோடார்ட் எல்லா வகையானப் பிரதிகளையும் (இலக்கியம், ஓவியம், கட்டிடக்கலை…) ஒரு வகையான மையமற்ற மொழி விளையாட்டு எனச் சொல்கிறார். மேலும் சொல்லாடல்களின் தகர்வை நுண்ணிய சொல்லுதல் கொண்டே நிகழ்த்துகிறார். கதை சொல்லுதலே எல்லாப் பிரதிகளின் உட்கிளையெனவும் கூறுகிறார். மேலும் அவர் ‘கனவு’ என்பதை நூதனமாக எழுதப்பட்ட ஒரு காகிதத்தைக் கசக்கிப் போட்டுவிட்டு அதை மறுபடியும் விரித்து வாசிக்கும் போது நமக்குத் தெரியக்கூடிய கலைந்த நிலை ஓர் இடைவெளிகள் அடங்கிய மொழிக்குறிகளைப் போன்றதுதான் கனவு என்று புதிய பின் நவீனத்துவ வாசிப்பை பிராய்டின் கனவு பற்றிய கருதுகோள் மீது முன்வைக்கிறார். இதைப்போலவே பிரடெரிக் ஜேம்ஸனும் வெபர்-ன் சமூக ஆய்வுகள் மற்றும் பிராடஸ்டன்ட் அறவியல் குறித்த பிரதியைப் பின்-நவீனத்துவம் வழியாக வாசித்து அவரை ஒரு கதைசொல்லியாகக் குறிப்பிடுகிறார். அதேபோல் மானுடவியல் அமைப்பியல்வாதியான கிளாட் லெவிஸ்டராஸ் பிரேசிலின் பழங்குடியினரைப் பற்றிய தனது நூலான டிஸ்ட்ரஸ் ட்ராபிக்ஸில்

“இத்தகைய கதையாடல்களை புக் ஆப் பேண்டகுரலின் நான்காவது புத்தகத்திலிருந்துதான் ரபலா எழுதியிருக்கக்கூடும். துவக்க கால கேலிச்சித்திரங்களை நமக்களிக்கும் போது அதனை இப்போது மானுடவியலாளர்கள் கருமித்தனமிக்க மூலப்பிரதியின் மீது தைக்கப்பட்ட உறவுகளின் முறைமை என அழைக்கின்றனர்; இந்த முறைமையை நாம் கருக்கொண்டு அறிவது அரிதாயினும், அதில் ஒரு வயோதிகன் இளம்பெண்ணை ‘தந்தையே’ என அழைப்பான்.”

டோல் டிரம்ஸ்
– கிளாட் லெவிஸ்ட்ராஸ் –
டிரஸ்டஸ் டிராபிக்ஸ் என்று கூறுகிறார்.

பிரான்சுவா ரபலாவின் நாவலின் ஒரு பகுதியை லெவிஸ்ட் ராஸ் தனது Tristes Tropiques என்ற நூலில் பிரேசிலியப் பழங்குடியினரைப் பற்றிய ஆய்வில் பயன்படுத்துவதில் இலக்கியம் X மானுடவியல் என்ற நேரெதிர் வகைமைகளைத் தகர்த்து ஒருவித பின்-நவீனத்துவம் குறிக்கும் ஒரு கதை சொல்லல் உருவாவதும் வகைமைகளுக்கு இடையிலான இடைவெளி மறைந்து ஒன்றுக்குள் ஒன்று மங்கலாக ஆவதையும் காணலாம். இதில் முக்கியமாக ஒரு வயோதிகன் ஓர் இளம்பெண்ணை ‘தந்தையே’ என்று அழைக்கிறார். இது ஒருவகைப் புராணிக நையாண்டித்தனம் தொனிப்பதாக ‘அப்பா’ என்ற மொழிக்குறிப்பை வைத்துத் தனது மானுடவியல் குறித்த கண்டுபிடிப்பைச் சொல்லிச் செல்கிறார்.

2.

இன்று பல்வேறு திசைகளில் வளர்ந்துள்ள இலக்கிய விமர்சனம் என்ற வகையானது பின் காலனிய நாடுகளில் அமைப்பியல் வாதம், பின்- அமைப்பியல் வாதம், பின்-நவீனத்துவம் ஆகியவை அறிமுகமாவதற்கு முன்னர் ஆங்கிலம் வழியாக எழுதப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் ஆங்கிலோ சாக்சன் விமர்சனம் என்ற அடைமொழியோடு விளக்கியதில் நமக்கு மிகவும் அறிமுகமானவர் டி.எஸ்.எலியட். இவரது கவிதைகள் மீது நிகழ்ந்த அதீத வாசிப்பால் இவரின் விமர்சன எழுத்துகள் அதிக கவனத்தைப் பெற இயலாமல் போயின.

இவரது வழியில் வந்த ஐ.ஏ.ரிச்சர்ட்ஸ் மற்றும் எப்.ஆர். லிவிஸ் போன்றோரின் விமர்சன முறைமை அதிகம் அறியப்படுகிறது. இவ்விருவரையும் நவீன விமர்சனத்தின் முன்னோடிகளாகக் கொள்ளலாம்.

இதற்கு முன்னர் டிரைடன் என்பவர்தான் ‘விமர்சனம்’ என்ற வார்த்தையை முதலில் அச்சு வடிவில் பயன்படுத்தியவர் என்பார்கள். இவர் விமர்சனம் என்பதை எந்தவித இலக்கிய வடிவத்திற்கான உரையாடல் என்ற பிரயோகத்தில் பயன்படுத்தினார். இவரிடமிருந்து வளர்ந்த ஆங்கில விமர்சன போக்கில் டி.எஸ்.எலியட்டின் விமர்சனக் கட்டுரைகள் ஆங்கில, ஐரோப்பிய கண்டங்களின் கவிதைகளைக் குறித்து ஆராய முற்பட்டது. அதில் இந்தியாவைப் பற்றியும் போகிற போக்கில் பேசுகிறார். அன்றைய காலக்கட்டத்தில் மிகவும் முனைப்பாக இருந்த

1. கட்டற்ற புனைவியல் தன்மை
2. ஆசிரியனின் சரிதம் சார்ந்த இலக்கிய விமர்சனம்
3. ஆசிரியர் வழியாக இலக்கியப் பிரதியை வாசித்தல்
4. இலக்கியப் பிரதியின் வழியாக ஆசிரியனை அறிதல்

என்பவைகளுக்கு மாற்றாக

1.வரலாற்றுப் பிரக்ஞை
2.கவிஞன் தன் அகத்தை அழித்தல்
3.மரபுடன் கவிஞனுக்குள்ள தொடர்பு
4.கவிதைக்கும் தேசியத்திற்கும் பிராந்தியத்திற்கும் உள்ள உறவுநிலை
5.உரைநடைத் தவிர்த்த கவிதையின் முதன்மைப் போக்கு
6.பருண்மை ஒப்புமை
ஆகியன எலியட்டினுடைய விமர்சனத்தின் முக்கிய அம்சங்களாகும்.

“பல்வேறு விதமான பதிவேடுகள் அல்லது விவரப்பட்டியல்கள் அளிக்கக்கூடிய இலகுவான சூழலமைவுகளினூடாக கவிதைகள் இடையீடற்ற வாதத்தில் நுழைகிறது. இதிலிருந்து விமர்சகன் இரவல் பெறலாம்.”

-போஸ்ட் ஸ்டக்சுரல் ரீடிங் ஆப் இங்கிலீஷ் பொயட்ரி-

தொகுப்பு: ரிச்சர்ட் மச்சின் மற்றும் கிறிஸ்டோபர் நாரிஸ்.

எலியட் மேலே குறிப்பிடும் ‘நிலையற்ற பொருத்தம்’ என்பதன் மூலம் ஓரளவு கவிதைக்கு ஒரு நிர்ப்பந்தமான சூழலமைவு இருக்கத் தேவையில்லை என்கிறார். தேசம், மொழி, கவிஞன் ஆகியவை குறித்துத் தனது விமர்சனக் கட்டுரைகளில் விரிவாக விவாதித்துள்ளார். இவை இன்றைய பின்-காலனிய சூழலில் மிகுந்த விமர்சனத்துக்கு உட்படக்கூடியவை. இதற்கு எத்வர்ட் செய்த், பார்பரா ஹார்லே, ஹோமி கே.பாபா , டிமோத்தி பிரனன் போன்ற பின்-காலனிய அழகியல் சிந்தனையாளர்களின் பங்களிப்புகள் முக்கியமானவையாகும்.

எலியட்டிற்கு அடுத்தபடியாக வந்த ஐ.ஏ.ரிச்சர்ட்ஸ் அவரது விமர்சன மரபை மேலும் வளர்த்தெடுத்தார். எலியட்டின் fluid context’ என்பதிலிருந்து ஜார்ஜ் வாட்ஸன் கூறுவதை இங்குக் காண்பது பொருத்தமானதாகும்.

ஐ.ஏ.ரிச்சர்ட்ஸ், சொல்லை அடிப்படையாக வைத்துச் செய்யப்பட்ட சொல் ஆய்வு முறையாகவே விமர்சனத்தை வளர்த்தார். அதோடன்றி கவிதை வாசித்தலில் ஒரு புதிய முறையையும் உருவாக்கினார். நிகழ்காலச் கலாச்சாரம் பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டார்.

சொல்லாய்வு முறையை மென்மேலும் நெறிபடுத்தியவர் எப்.ஆர்.லிவிஸ்

இவரை செய்முறை திறனாய்வாளர் என்று அழைப்பார்கள். ஒவ்வொரு கவிதையையும் சொல்வாரியாகப் பிரித்து பொருள் குறித்த விமர்சனத்தை ஒருவகையான விஞ்ஞான அழுத்தம் தரும் முகாமாக செய்முறை விமர்சனத்தை மேற்கொள்ள முற்பட்டார். இவரது விமர்சனப்போக்கின் முக்கியக் கூறுகள் :

1.பருப்பொருண்மை
2.குறிப்பீட்டுத் தன்மை
3.மெய்யாக உணர்தல்

ஆகியவை ஆகும். ஒரு கவிதையை இம்மூன்று கூறுகளைக் கொண்டு பகுப்பாய்வு செய்து அந்தக் கவிதையின் திரண்ட கருத்திற்கு வாசகனை இவரது விமர்சனம் இட்டுச்செல்லும் தன்மை உடையதாக விளங்கியது.

இதை அவர் ஓர் ஆய்வு முறைமையாகக் கையாண்டார்.

பிரெஞ்சு புதிய விமர்சனப் பாங்கை ஆங்கில விமர்சகர்கள் எதிர்கொண்ட போதிலும் சசூரின் (Saussure) Langue, Parole என்ற இரு பாகுபாடுகளும் அன்றைய மொழியியல் சூழலில் புதிய தாக்கங்களை உருவாக்கியது.

அதைப்போல குறி, குறிப்பான், குறிப்பீடு பற்றிய அவரது சிந்தனையையும் மொழிக்குறியை, ஒரு குறிப்பீடற்றக் குறியாகக் கண்டதையும் விமர்சனத் துறையில் பெரும் பாதிப்பை உண்டாக்கியது. இதைப்போல அமெரிக்கா மொழியியலாளரான சார்லஸ் சாண்டாஸ் பியர்ஸ் முன்வைத்த குறி,

உரையாளன் மற்றும் பொருள் என்ற மொழியியல் கருத்தும் இணைந்து குறியியல் என்ற புதிய ஒரு புதிய குறியியல் சிந்தனை, இலக்கிய விமர்சனப் போக்கை மாற்றக் காரணமாக இருந்தது. 1924இல் இதை நேரிடையாக ஒப்புக்கொள்ள மறுத்த ஆங்கில இலக்கிய விமர்சகர்கள் 1934-ல் ஏற்றுக் கொண்டனர்.

ஐ.ஏ.ரிச்சர்ட்ஸ் இப்போக்கை நிராகரித்தார். குறியானது எவற்றிற்கெல்லாம் குறிப்பிடும்படியாக நின்றதோ அதனை அர்த்தத்தின் அர்த்தமானது கவனியாது நிற்க (ப.8) சுசூரை புரிந்து கொள்ளும் விதமாக கிடைக்கக்கூடிய குறிப்புகள். அது எளிய கவனிப்பின்மையை குறிப்பிட்டுக் கூறவில்லை. ஒரு பத்தாண்டு காலத்திற்கு பின் ரிச்சர்ட்ஸ் இதையே புகழ்ந்தார்.

ஆங்கில இலக்கிய விமர்சகரான ஐ.ஏ.ரிச்சர்ட்ஸ் தனது பாரம்பரிய முன்னோடிகளில் ஒருவரான கவிஞர் கோலரிட்ஜின் பற்றிய Imagination for Coleridge’ என்ற தன் நூலில் ‘Semiology என்பதை குறியியல் குறித்த ஒரு கோட்பாடெனக் கூறுகிறார்.

டிரைடன் தொடங்கி கோலரிட்ஜ் வழியாக எலியட் ஒரு மையப்புள்ளியாக இரு வேறு காலக்கட்டத்திற்கு இடையே தனது விமர்சனத்தை இயக்கியுள்ளார்.

தமிழிலக்கிய விமர்சன சூழலில் இத்தகைய போக்குகள் கல்வித்துறை சார்ந்தவர்களாலும்/கல்வித்துறை சாராத சிறு பத்திரிகையாளர்களால் அதிகரிக்கவும் முன்னெடுக்கப்பட்டன.

3.

எப்.ஆர்.லீவிஸின் செயல்முறை ஆய்வை சி.சு.செல்லப்பா தனது இலக்கிய விமர்சனக் கட்டுரைகளுள் ஒரு முறைமையாக முன்வைத்தார். இது க.நா.சுப்ரமணியம் முன்வைத்த ரசனையை அடிப்படையாகக் கொண்ட இலக்கிய அபிப்பிராய கோட்பாட்டுக்கு எதிராக, ஓரளவு சரியான முன்மாதிரியை வைத்தது. இதன் பிறகு இலக்கியத்தில் அகம் என்பதைக் குறித்த கருத்துக்களில் மார்க்சிய விமர்சகர்களான கைலாசபதி, கா.சிவத்தம்பி போன்றவர்கள் பொருளாதாரம் என்ற கீழ்க்கட்டுமானம்/மேல்க்கட்டுமானம் கலாச்சாரத்தை நிர்ணயிக்கிறது என்று எழுதினர். இதிலிருந்து விடுபட்டக் குரலாய் கோவை ஞானி பொருளாதாரக் காரணிகளுடன் ‘ஆன்மிகம்’ என்ற கலாச்சாரக் காரணியும் அகத்தைக் கட்டமைக்க முற்படுகிறது என்று கூறி மார்க்சிய இறுக்கத்தைத் தளர்த்தினார். இதன் அடுத்த கட்ட வளர்ச்சியாக தமிழவன்  ‘ஸ்டரக்சுரலிசம்’ என்ற நூல் அகம் என்பதை ஒரு மொழிக் கட்டமைப்பாகக் காண விழைந்தது. சொல்லாடல் ஆய்வு முறை, கட்டவிழ்த்தல் ஆகிய இவை இரண்டும் விமர்சனத்தை பருண்மைப் பகுப்பாய்வு ஆக மாற்றியுள்ளது. இதன் பிறகு பின்-அமைப்பியல் வாதம், பின்-நவீனத்துவம் ஆகியவை இன்று தமிழிலக்கியத்தில் அகம் என்பதைக் குறிப்பீடு செய்ய பல்வேறு வகையான மொழிசார்ந்த கோட்பாடுகளை முன்வைத்து வளர்ந்துள்ள நிலையில் சிறுபத்திரிகை மரபில் வந்துள்ள முரளி அரூபன் தமிழாக்கம் செய்துள்ள டி.எஸ்.எலியட்டின் கட்டுரைகளை வாசிப்பது நமக்கான விமர்சன முன்மாதிரிகளை அமைத்துக்கொள்ள பெரிதும் உதவும்.

4.

உதவிய நூல்கள்

1.Post Structuralist Readings of English Poetry.
-Edited by Richard Machin and Christopher Norris.

2. Poetry As Discourse
-Anthony Easthope

3.The Literary Critics
-George Watson

4. Technologies of the Self
-A Seminar with Michel Foucault

5. Nation and Narration
-EditedbyHomi. K.Bhabha

6.The Order Of Things
An Archaeology of the Human Sciences.
-Michael Foucault

7. The Ideologies of Theory Essays
1971-1986) Volume-2, Syntax Of History
-Fredric Jameson

8.Sacred Wood
-T.S.Eliot

9.On Poetry and Poets
-T.S.Eliot

10. The Varieties of Metaphysical Poetry
-T.S.Eliot
Edited and Introduced by Ronald Schuchard

11. The Fontana Post-Modernism Reader
Epilogue:
The End and Beginning of Enlightenment
-Edited by Walter Truett Anderson

12. Tristes Tropiques
-Claud Levi-Strauss
Translated from the French by John Russell

13. The Lyotard Reader
The Dream-work does not Think.
-Edited by Andrew Benjamin.

14. ஸ்டக்சுரலிசம்
–தமிழவன்

எஸ்.சண்முக – கவிஞர், விமர்சகர், மொழிபெயர்ப்பாளர். சமீபத்தில் இவரது கவிதைத்தொகுப்பு “முன் மாதிரிக் கயல்” வெளியானது. இக்கட்டுரையானது டிசம்பர் 2008ல் வெளியான கதைமொழி நூலில் இருந்து எடுக்கப்பட்டது. ஆசிரியர் தொடர்புக்கு : – s.shanmugam65@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular