ரவி சுப்பிரமணியன்
சிலபேர் தொடர்ந்து நமக்கு வியப்பை வழங்கிக்கொண்டே இருப்பார்கள். அறிவால் ஆற்றலால் அன்பால் ஞானத்தால் இப்படிப் பலவிதமாய். நண்பர் வி.ஜே. வஸந்த் செந்திலை அவர் வசந்த் செந்திலாக இருந்த காலத்திலிருந்தே 22 வருஷங்களுக்கு மேலாக நான் அறிவேன். அவர் இன்னும் அந்த ஆச்சர்யத்தை எனக்கு தந்துகொண்டே இருக்கிறார்.
தொழில் நிமித்தம் மருத்துவராக உள்ள ஒருவர் எப்படி கவிதை, கதை, மொழிபெயர்ப்பு(ஆல்பர் காம்யூ, சாரத்தர்), கட்டுரை, விமர்சனம், மருத்துவம், அறிவியல் என்று பல்வேறு விதமாகக் காத்திரமாக எழுதிக் குவிக்கிறார், செயல்படுகிறார் என்பது எனக்கு இன்றும் புதிராகவே உள்ளது.
தமிழ் இலக்கணம் உட்பட எவ்வளவு புத்தகங்கள். எவ்வளவு விஷயங்கள் இந்த வயசில் இது எப்படிச் சாத்தியம் என்று நான் பலநாட்கள் நினைத்திருக்கிறேன். நமக்கு ஒரு கவிதையை எழுதிவிட்டால் பத்து நாளுக்கு இதுபோதும் என்று தோன்றி பலசமயம் ஈஸிசேரில் படுத்துக் காலாட்டிக் கொண்டிருக்கிறோம். இந்த ராட்சனுக்கு எப்படி இவ்வளவு சாத்தியமாகி இருக்கிறது என்பது மட்டுமல்ல அவருக்குத் தெரிந்த இன்னும் நுட்பமானச் செறிவான பல விஷயங்கள் எழுதப்படவும் இல்லை என்பதும். அவரிடம் அடிக்கடி பேசும்போது அரசியல், சினிமா உட்பட பல்துறை சார்ந்து அவர் பகிர்ந்து கொள்ளும் விஷயங்கள் அத்தகையவை. ஆனால் பேசும்போது நான் ரொம்ப சீரியஸான ஆள் என்ற எந்த தன்மையையும் உருவாக்க மாட்டார். குசும்பும் நக்கலும் பகடியும் அவருக்குக் கூட பிறந்தவை. பேசும்போது நம்மை பதின்ம வயதுகளின் இளமைக்கு தள்ளிவிட்டுக் கொண்டே இருப்பார்
நான் பெரிதாய் சிந்தித்து ஒரு விஷயத்தை ‘பம்’ என்று பஞ்சு மிட்டாய் மாதிரி அவரிடம் நீட்டுவேன். அவர் பொசுக்கென்று ரெண்டு கையாலும் அதை நசுக்கி அந்த ரோஸ் சாயத்தை முகத்துக்கு நேரே காண்பிக்கையில் எனக்குக் கூச்சமாக ஆகிவிடும்.
என் கவிதைகளில் 90 விழுக்காட்டுக்கு மேல் மூன்றாம் தொகுப்பிலிருந்து அவர் பார்வைக்குச் செல்லாமல் நான் வெளியிட்டதில்லை. திருத்தித் திருத்தி என்னை அவர் மீண்டும் எழுத வைத்துக் கொண்டே இருப்பார். அவர் கருத்தை என்மீது திணிக்காமல் நான் நெகிழ நெகிழ என்னை எனக்கே கண்டுபிடித்து அவர் எனக்கே வழங்கிக் கொண்டே இருப்பார். சிலசமயம் அவருடனான விவாதத்தில் பறக்கும் அனலில் நான் அவரை நிராகரிப்பேன். அவர் கூலாய் இன்னொரு பழச்சாற்றுக் கோப்பையுடன் புன்னகைத்து நின்று கொண்டிருப்பார்.
இவரது “தமிழ் இலக்கணம் எளிய அறிமுகம்” புத்தகத்தைப் படித்துவிட்டு சுஜாதா ஒருமுறை “அவ்ளோ சின்ன பையனா, என்னாப்பா சொல்ற. லேசுபட்டது இல்லப்பா இது” என்று ஆரம்பித்து இவரைப் பற்றி இவர் கவிதைகள் பற்றி ஆழ்வார்பேட்டை வீட்டில் ஒரு அஞ்சு நிமிஷம் என்னிடம் பேசிக்கொண்டிருந்தார். அவரது “அம்பலம்” இணைய இதழின் கேள்வி பதில் பகுதியில் அந்நூலை தமிழ் இலக்கணம் கற்க விரும்புபவர்களுக்குப் பரிந்துரைத்தார்.
என்னவோ செந்திலின் பதின்ம வயதிலிருந்து இன்றுவரை அவர் என் கவிதை வாசகராகவும் இருந்து வருவது ஒரு கொடுப்பினைதான். வயது எங்களுக்குள் எப்பவும் ஒரு தடையாய் இருந்ததில்லை. இவ்வளவும் ஏன் இப்போ. அண்மையில் “தமிழினி” வெளியிட்டுள்ள அவரது “திராவிட அழகி” கவிதைகளை வாசித்த போது எனக்கு மேலும் ஒன்று தோன்றியது. அதற்கு பதிலாக உள்ள கவிதையைச் சொன்னால் எனக்கு என்ன தோன்றியது என்பது உங்களுக்கு விளங்கிவிடும்.
யாவரும் கேளீர்
நீங்கள் ஒன்று கூடி
அவனைப் புறந்தள்ளுகிற வேகத்தில்
அவன் எழுதிய மகா கவிதை ஒன்று
எதிர்பாராத தாக்குதலுக்கு உள்ளாகிறது
தடுமாறி விழுந்து
தம்ஸ் அப்பைத் தலைகீழாகச் சொல்லி
மூச்சை விடுகிறது அது
பேரரசன் பாமரன் உடையில்
மரணமடைவதை
கண்ணதாசனுக்குப் பின்னால் வந்த கவிகள்
மரத்துக்குப் பின் ஒளிந்து கவனிக்கிறார்கள்
கிரீடமற்று விழுந்தாலும்
அதன் உடல்
பேரரசனின் ஆகிருதியில் கிடப்பதைப் பாருங்கள்
ஆம்
அது ஒரு மகா கவிதை
நூற்றாண்டுகள் கழித்து
தோண்டி எடுத்து
அதற்கு நீங்கள்
கணியன் பூங்குன்றன் என்று பெயர் வைப்பீர்கள்.
அவர் யார் யாரையெல்லாம் நினைத்து இந்த கவிதையை எழுதினார் என்று எனக்குத் தெரிந்தாலும் இது உண்மையில் செந்திலுக்கும் பொருந்துகிற கவிதை தான். இப்படி எத்தனை செந்தில்கள் நம்மைச் சுற்றி குருத்துத்தாது உள்ளவைகள் நிராகரிக்கப்பட்டு ஏன் நாலந்தரங்களே பெரும்பாலும் எல்லாத் துறையிலும் முதலிடத்துக்கு வருகின்றன என்ற அவரது கரிசனக் கவலை ஒரு மெல்லிய பிளாக் ஹியூமரோடு வெளிப்பட்டுள்ளது.
“கவிதையில் எல்லாம் அனுமதிக்கப்பட்டிருக்கிறது
சந்தேகமின்றி இந்த நிபந்தனையுடன்
வெற்றுத் தாளில் நீ முன்னேற வேண்டும்”
என்ற நிக்கனார் பாராவின் கவிதை வரிகள் இவர் கவிதைகளை வாசித்துக் கொண்டிருக்கையில் இரண்டு முறை எனக்கு ஞாபகம் வந்தது.
எந்த முஸ்தீபுகளும் இல்லாமல் பாமர எளிமையாய் சட்டென அற்புதங்களை நிகழ்த்தும் கவிதைகளையும் அவரால் அசால்ட்டாக எழுதிவிட முடியும் என்பதற்கு என்னிடம் பல உதாரணங்கள் இருந்தாலும் பிளட் டெஸ்ட்க்கு என்ன ஒரு பாட்டிலா வேண்டும்.
அச்சு
யாரால் இந்த பூமி
இப்படி பிறழாமல்
சுற்றிக் கொண்டிருக்கிறது
என்று தெரியவில்லை
இதோ இந்த தெருவை
தன் வீட்டின் உள்ளறை போல
திருத்தமாக சுத்தப்படுத்திக் கொண்டிருக்கிற
இந்த ஒனிக்ஸ் பணிப்பெண்
காரணமாக இருக்கலாம்.
இப்படிச் சாதாரணங்களின் மூலம் அசாதாரணங்களை நிகழ்த்திக் கொண்டு ஒற்றைக் கம்பிமேல் பிடிமானம் இல்லாமல் அவர் நடக்கும் போது பதறி நாம் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தால் “ஏன் கைதட்டினா என்னா குறைஞ்சிருவிங்களா” என்று கேட்டபடி பேலன்ஸாக நடந்து கொண்டே சிரிப்பார். இந்த சாகஸம் மட்டுமல்ல, குறும்பு, இளமை, எள்ளல், அபூர்வம், புதிர், விசித்திரம், உரையாடலில் கவிதையை வசப்படுத்தி விடுகிற வல்லமை இப்படி பல தன்மைகளை இந்தத் தொகுப்பில் காண்கிறேன்.
மிஸ்டர் 100
நூறு ஒன்வே அபராதங்களையும்
நூறு ஹெல்மெட் அபராதங்களையும்
நூறு நோ பார்க்கிங் அபராதங்களையும்
நூறு பிச்சைக்காரர்களை விரட்டி அடித்ததற்காகவும்
நூறு பூஞ்சை மனிதர்கள் மேல் வழக்கு பதிந்ததற்காகவும்
அவருக்கு
அந்த ஆண்டின்
சிறந்த போலீஸ்காரர்
விருது வழங்கப்பட்ட நாளில்
அவர் அந்த போலீஸ் வேலையை ராஜினாமா செய்தார்.
இது என்ன குற்ற உணர்வா, போதும்ண்டா சாமி இந்த கடமை என்ற அலுப்பா, இல்லை வேறு எதற்கும் பெரிசாக ஏற்பாடு செய்துவிட்டுக் கிளம்புகிறாரா, வீட்டுச்சூழலா, உடல் நலமில்லையா. எத்தனை உள் அடுக்குகளைக் கொண்டிருக்கிறது இந்தக் கவிதை. விளக்கம் வியாக்யானம் எல்லாம் விட்டுவிட்டு இன்னுமொரு கவிதையை மட்டும் சொல்லிவிட்டு சுபம் சொல்லலாம் என்று தோன்றுகிறது. அதற்கெல்லாம் அப்பாற்பட்டு எப்போதும் இன்னொரு புது அர்த்ததோடு நிற்பவை செந்திலின் கவிதைகள்.
அறிந்து இடுக
அம்மாவுக்கு அதே அநீமியா
அதே அயர்ன் டேப்லட் என்றேன்
‘ம்’ எனக்குத் தெரியும்
எனக்குத் தெரியும் என்றவள்
டேப்லட் லிவோஜன் குடுங்க என்றாள்
அப்பாவுக்கு புரோட்டின் பவுடர்
என்றேன்
‘ம்’ என்றாள்
அவ்வளவு தானா என்றார்
கடைக்காரர்
இரண்டு
எறும்பு மருந்து பாக்கெட்
என்றேன்
மகள் கேட்டாள்
நம்ம வீட்டு எறும்புக்கு
உடம்பு சரியில்லையாப்பா
நானும் கடைக்காரரும்
விக்கித்து நின்றோம்
எறும்பு மருந்தை
அவரும் கொடுக்கவில்லை
நானும் கேட்கவில்லை
திரும்பும் போது
வழியில் கடவுள் எதிர் வந்தால்
இந்த உலகத்தை நீங்கள் ஏன்
குழந்தைகளிடமே கொடுத்துவிடக்கூடாது
என்று கேட்கும் முடிவில் இருந்தேன்.
பலர் பீடங்களையே உருவாக்கி ஜபித்துக் கொண்டிருக்கையில் தமிழினி – தரத்தில் உயர்ந்த பார்வைக்குப் படாத உதிரிகளுக்காவும் கண்டுகொள்ளப் படாதவைகளுக்காகவும் பீடங்களை உருவாக்கி நஷ்டத்தோடு களிகொள்ளும் என்பதற்கு இந்தப் புத்தகங்களும் உதாரணம். செந்திலின் இலக்கணப் புத்தகத்தையும் நான் படித்துவிட்டேன். ஆனால் அடுத்த பிறவியில் அது குறித்து எழுதுவதாய் உத்தேசம்.
***
ரவி சுப்பிரமணியன்
ஐந்து கவிதை தொகுப்புகள், ஒரு கட்டுரை நூல், இரு தொகுப்பு நூல் என ஒன்பது நூல்களை இதுவரை இவர் வெளியிட்டுள்ளார்.
அந்த இலக்கணக் கட்டுரைக்காய் அடுத்த பிறவியில் இதே யாவரும்.காமில் நானும் காத்திருக்கிறேன்.