Sunday, October 1, 2023
Homeஇதழ்கள்2022 இதழ்கள்பாலைவன லாந்தர் கவிதைகள்

பாலைவன லாந்தர் கவிதைகள்

பிரேதப் பரிசோதனை

என்னிடம் ஓர் உயிரற்ற உடலும்
கத்திரிக்கோலும் கத்தியும்
நூற்கண்டும் ஊசியும்
சில நெளிந்த அலுமினிய பாத்திரங்களும்
தரப்பட்ட போதே தொடங்கியது
தூரத்து பியானோ இசை

முதலில் நடனமாடத்தான் அழைத்தான்
இரு கரங்களும் தோல்களும்
மதுக்கோப்பைகளும் கால்களும்
தடுமாறித் தடுமாறி தனது
இலக்கை நிர்ணயித்தபோது
யுத்தம் சமீபித்திருந்தது

களமென்றால் இரத்தம் மட்டுமில்லை என
சூதாட்டமாடும் தேவதைகளும்
நான்கு கொம்புள்ள சர்ப்பமும்
ஒரு பனிப்பொழிவும் உதிரும் உண்ணிகளும்
தீர்க்கப்படாத மாயைகளும் தீக்கிரையாகுகையில்
பூமி பிளந்துகொண்டது

பிளந்தப் பிளவிலிருந்து தளம் உருவானது
நீயும் நானும் அவர்களும்
யானைகளுக்குத் தீனியிடும் மரங்களும்
நீந்தியே இணைதேடும் மீன்களும்
டைனோசர் முட்டைகளும்
குறுக்கே பாயும் நதிகளும் கற்களும்
கொலைகளும் பிணங்களும்

செய்யத் துணிந்த குற்றங்களின் வாடைகளும்

என்னிடம் ஓர் உயிரற்ற உடலும்
கத்திரிக்கோலும் கத்தியும்

*

அந்தகாரத்தில் இருக்கிற பொக்கிஷங்களையும்
ஒளிப்பிடத்தில் இருக்கிற புதையல்களையும் உனக்குக் கொடுப்பேன்

முத்துக்குளிக்கச் சென்ற மகன்
கை நிரம்ப அள்ளி வருகிறான்
இராசயனக் கழிவுகளை
நிலவை விழுங்கும் சர்ப்பம் போல
நிலமெல்லாம் தொற்று நோய்கள்

அந்தக் காட்டு யானையின் வழிமீதமர்ந்து
என்ன செய்கிறார்கள்
காமத்தின் நீட்சிக்கு ஒப்புக் கொடுக்க இயலாத
தன்னுடலை வானுயர்ந்த மதில் சுவரின் மீது
முட்டி முட்டி சிதைத்துக் கொள்கிறது

நான் பிசாசுவின் எதிரி
ஆனால் ஒருபோதும் உங்களுக்கு நண்பராக முடியாது
இடைப்பட்ட தர்க்க நியாயத்தில்
எங்கேனும் யாருக்கேனும் எப்போதேனும்
பொருந்திப்போய் விடுகிறேன்
நிறைய வாதம் செய்யாதீர்கள்
காலப்போக்கில் சிவப்பு மதுவை அருந்தவாயினும் சந்திப்போம்
பிறப்புக் குறித்த கேள்விகளே ஓயாத போது
இறப்பென்பது இருந்தாலென்ன
இல்லாதிருந்தால் என்ன

உலகம் தொடங்கியதிலிருந்து இப்போது வரை
உயிருடனிருக்கும் ஒரு மரம் பற்றி அறிவாயா
யாரோ ஒருவரின் காதல் தோல்வியை பிரகடனப்படுத்தும்
உடலைத் தொங்க விடுவதற்கா
யாரோ ஒருவரை உயிருடன் கட்டிவைத்து தோலுரிப்பதற்காக
யாரோ ஒருவரின் சலனத்தை கிளர்த்திவிடும் பழங்களுக்காக
யாரோ ஒரு பிள்ளையின் தூளிக்காக
யாரோ ஒருவரை பிணைத்து ஆணிகளால் அறைந்து கொள்வதற்காக

நான் உங்களை மன்னிக்க விரும்புகிறேன்
கடலினும் மலையளவு
மலையினும் கடலளவு
உங்கள் பாவங்களைத் துரிதப்படுத்துங்கள்
இன்னும் இன்னுமின்னும்
அளவுகோல்களின் மீதான வரையறையை தவிர்த்து
பாவம் செய்யுங்கள்
ஒரு தேய்ந்துப்போன தகர டிஸ்க் உங்கள் புற்றுநோயை
பரிபூரணமாக சரிசெய்யும் போது
என்ன தயக்கம்

குடிசைகள் எரிகின்றன
குளங்கள் எரிகின்றன
குடிகள் எரிகின்றன
கருகிய ஈரல்குலையை மென்றுத்தின்னும்
ஆதிக்கப் பிசாசுகளிடமிருந்து
நெற்றியில் பெருக்கலிடும் நானே
உம்மை பாதுகாப்பேனென நம்பும்வரை தொடர்க

குறிகளின் மீது இனத்தின் பெயரை செதுக்குபவர்களே
சிலுவை மரத்தில் அறையப்பட்டவனின் இடையிலிருக்கும்
அந்த ஒற்றைத்துணி விலகுமாயென
காத்துக் கொண்டிருக்கும் உங்கள் கண்களை விலக்குங்கள்
ஆமன்

*

கரப்பான் பூச்சி

ஒன்றை அழித்துவிடும் போது பல்கிப்பெருகும்
மற்றொன்றை எதன் பெயரால் அழைக்கலாம்
காமம்
அல்லது காதல்
கனவுகள் முழுக்க
கரப்பான் பூச்சிகளால் தின்னப்பட்டவனின்
உடல் விழித்தவுடன் சில்லிட்ட பிரேதத்தின் சாயலிலுள்ளது

ஒரு துளி பர்ஃப்யூம் வாசனைக்கு
நிர்வாணமாகக் கிடந்த குவியலை நினைவிருக்கிறதா
அந்த துளி

மீன் சந்தையின் ரத்தக்குடல் கவுச்சியில் தொடங்கியது
இருதுளை நாசி மிகப்பெரிய கண்ணாக உருமாறி
அவர்களின் அந்தரங்கத்தை பருகிச் சூடேற வெடித்துச் சிதறி
கரப்பான் பூச்சிகளாக பறக்கத் தொடங்குகின்றன

தலையை வெட்டிய பிறகும் சில காலம் வாழும்
விதியை உனக்கு பரிசளிக்கவா
உடலிருந்து பிரித்தெடுத்த எலும்புகளைக் கொண்டே
உயிரைப் பறிக்கும் ஆயுதம் செய்
கொலைத்தொழில் புதிதல்ல
அறிந்துகொள்

தந்தையைக் கொல்வதால்
நாம் பிறப்பதிலிருந்து தவிர்க்கப்படுவோம்
தந்தைகளைக் கொல்வதெற்கென புறப்படும் முன்
தந்தையை அடையாளம் காண்பது அவசியம்

எச்சரிக்கும் பொருட்டு நமக்கென பிரத்தியேக
உடல்மொழியைக் கையாள்வோம்
படபடவென சிறகுகளை அடித்துக் கொள்வதால்
வெள்ளை ரத்தத்தை வெளியேற்றுவதால்

இருப்பினும்
கரப்பான் பூச்சிகள் புணர்ந்து கொண்டிருக்கும்போது
விஷவாயுவை தூவச்செய்து
அந்நிலையிலேயே செத்துவிழச் செய்யும் மனிதர்களை
ஒருபோதும் நேசிப்பதற்கில்லை

தன் காதலியின் பிணத்தை தோண்டியெடுத்து
முத்தமிடத் துணிந்தவன்
அவளுடைய சாயலில் கரப்பான் பூச்சியொன்றைக் காண்கிறான்
உணர்கொம்புகள் நெடுகிலும் முத்தமிட்ட பிறகு
தனது மேற்கத்திய ஷூக்களால் மிதித்துக் கொல்கிறான்

பாவம் அவள் பாவம் அவன்
பாவம் அது பாவம் அவை

*

சாபங்களால் சூழப்பட்ட இருள்

பன்றிகளின் கொழுப்பில் உருவான
உதட்டுச் சாயத்தை பூசிக்கொண்டு முத்தமிடுவதற்கு
உதட்டைக் குவிக்கிற போது
கொழுத்த பன்றியொன்று அறுப்புக்குத் தயாராகிறது
நீயென் பாவங்களின் விலை

யுரேனியம் நிரப்பப்பட்ட கருப்பைகளை
சுமந்துக்கொண்ட கப்பல் மிகச்சரியாக
நடுக்கடலில் தன்னை மூழ்கடித்துக் கொண்டது
கடலுரசும் தளமெங்கும் பிரசவகாலப் பெருவலி
நீயென் துரோகங்களின் நிழல்

லாகிரியைப் புகைக்க இருளொன்றைத் தேர்ந்தெடுக்கிறான்
லாகிரி இவனைப் புகைக்க புகைக்க
தகதகவென இருள் தேய
சொக்கப்பனைக்கு இவன் முகம்
நீயென் மன்னிப்புகளின் பிரதிவாதி

மண்டியிட்ட பிறகும் இரத்தம் நிற்கவில்லை
அவர்களும் காயப்படுத்துவதை நிறுத்தவில்லை
இருவருக்கும் மத்தியில் சிதறிக்கிடக்கின்றன
சோற்றுப்பருக்கைகள்

பசியைத் திருடிக்கொண்ட
முதலாளிகள் அவமானத்தை பரிசளிக்கிறார்கள்
நீயென் இயலாமையின் வாக்குறுதி

துருத்திக் கொண்டிருக்கும் நாக்குகளைத் தாண்டி
சிலைகளின் மீது தன் காமத்தை செலுத்துபவனை
வெயில் அங்கீகரித்துவிடுகிறது

புறவூதாக் கதிர்களுக்கு ஜோக்கர்களின் முகமூடி
நீயென் சாபங்களின் சாபம்

சொற்களை கையாளத் தெரிந்த எழுத்தாளனின்
கிழிந்த சட்டைப்பையின் மீது
கார்ப்பெட் உலகம் ஒரு முத்திரையிடுகின்றது

அவன் அதைத் தடவிப்பார்த்துக் கொண்டே
நகைச்சுவை காட்சியை வக்கிரமாக்குகின்றான்
நீயென் ஆகச்சிறந்த தோல்வி.

***

பாலைவன லாந்தர்
சென்னையில் வசிக்கிறார். உப்பு வயலெங்கிலும் கல்மீன்கள், லாடம், ஓநாய் என மூன்று கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. மின்னஞ்சல்: [email protected]

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular