Wednesday, October 9, 2024
Homeபொதுபாலம்மை

பாலம்மை


ரமேஷ் ரக்‌ஷன் கதைகள் – 07

 “தீப்ட்டி இருக்கா?”

“அந்த ஒட மூட்டு கவுலில தான் நேத்து சொருவி வச்சேன்”

“எதுக்கும் கடலமுட்டாய் வாங்கும்போது ரெண்டு குச்ச எடுத்து போடு”

காலை ஒன்பது மணி அடித்ததுமே பள்ளிக்கூடத்தின் பெரிய கேட் பூட்டப்பட்டுவிடும் உள்ளே வரவேண்டுமெனில் விளையாட்டு ஆசிரியர் மனது வைத்தால் உண்டு. பனைமட்டை அடியோடு, அரை மணிநேரம் சேர்த்து 9:30 வரை கருணை காட்டுவார். அதன் பின் உள்ளே வருவதும் வெளியே செல்வதும் கஷ்டம். அதற்கடுத்து மதியசாப்பாடு, அதோடு பள்ளிவிடும் பொழுதுதான் அந்தக்கதவு திறக்கப்படும்.

வடக்கும் தெற்குமாக பைபிள் வசனங்கள் நிறைந்த அந்த நீளச்சுவற்றில் தெற்கிலிருந்து வருபவர்களுக்கு ஒரு சைக்கிள் செல்லும் அளவில் சின்ன கதவு இருக்கும். அது தள்ளுக்கதவு. இரு பக்கமும் திறக்கலாம். திறந்து வெளியேறியதும் மீண்டும் அதே நிலைக்கு வந்துவிடும். மாலை விளையாட்டு வகுப்பில் பந்து வெளியே சென்றால் எடுக்கச்செல்ல அனுமதியுண்டு.

ஒரே நேரத்தில் இரண்டு வகுப்புகளுக்கு மேல் விளையாட்டு வகுப்பு, வாரம் இருமுறை அமைந்துவிடும். நீட்டமாக கிடக்கும் மூன்று வாலிபால் நெட்டிலும் விளையாடிக்கொண்டிருக்கும் நேரத்தில், கதவுவரை வராமல் கண்தப்பி சுவர் ஏறிக்குதித்தால் பந்தை எடுத்துவிடலாம்.

சாமும், சுந்தரும் விரும்புவது இதைத்தான்.

பந்து மதிலுக்கு அந்தப்பக்கம் எல்லாம் விழ வேண்டுமென்று அவசியமில்லை. எகிறிக்குதிக்கும் அளவிற்கு ஆசிரியர் யாரும் பார்க்காமல் தோதுவாய் இருந்தால் போதுமானது அவர்களுக்கு. இது வியாழனும் வெள்ளியும் கிடைத்துவிடும்.

“எவனோ போட்டு குடுத்துட்டானு நெனைக்கேன். கோயில் பொந்துல சீட்டுகெட்டு இருக்கு எடுத்துட்டு பாலத்துக்கு அடில வந்துடுங்க… பாயிண்ட் போட்ட பேப்பரு பத்ரம்டே”

சாமும் சுந்தரும் பாலத்தை நெருங்கியதும் கேட்ட குரல் அது!

இதுபோக குடிப்பவர்களும் அங்கு ஐக்கியமாவதும் உண்டு. இப்படி நிகழ்வது இருவருக்கும் புதிதில்லை.  அடிக்கடி சீட்டு விளையாடுபவர்களை போலிஸ் தேடும் போதெல்லாம் இந்த இடமாற்றம் நிகழும். நேற்றும்(வியாழக்கிழமை) பாலத்தை சீட்டு விளையாடுபவர்கள் ஆக்கிரமித்திருந்தனர் இப்படி நடக்கும்போதெல்லாம் பீடி குடிக்காமல் சேர்த்து வைத்து மறுநாளோ, மறு வாரமோ மொத்தமாய் புகைப்பது இருவரின் பழக்கம்.

“சரி நேத்து எங்க காய வச்ச?”

“நீ வேற… கைல எடுக்கவும் அந்த அக்கா வந்துட்டாவ”

“பொறவு?”

“பொறவா? அங்க கொஞ்சம் மடக்ன பீடி இருந்துச்சி அதான் அடுக்கிட்டு இருக்கேனு சொன்னேன்”

“நம்புச்சாக்கும்?”

“தாயம் வெளாட எங்க புளியமர “முத்து” பெருசா இருக்கும்லா ஒரசி எடுத்துட்டு வானு சொல்லுச்சி”… “அதான் வந்து உக்காந்துருக்கேனு நெனச்சிருக்கும்.”

சுந்தரின் அம்மா செங்கல்சூளையில் சம்பளம் வரவில்லையென வாங்கச்செல்லும் வேளையில் தான் பீடியை காய வைக்க வாய்ப்பு கிடைத்தது சுந்தருக்கு. வீட்டிலிருந்து கிளம்பி வழியில் யாரிடமும் பேசாமல் சென்று வந்தாலே 15 நிமிடங்கள் குறையாமல் ஆகுமென்பது அவனுக்கு நன்றாகவே தெரியும்.

“ஒலைல தண்ணி கொறையும்போது கொஞ்சம் ஊத்திட்டு அங்கனயே இரு. வெறவ எதும் வச்சிடாதனு போனாவ”

“ஒங்கையா உன்ன ஒருநாள் சட்டையோட தூக்க போறாரு”

 சுவர் ஏறிக்குதித்து கொஞ்ச தூரம் முன்னோக்கி நடந்தால் வலது பக்கம் ஒரு திருப்பம் வரும். அந்த திருப்பத்தை கடந்துவிட்டால் போதும். இனி பள்ளிக்கூடம் சார்பாக யார் கண்ணிலும் படப்போவதில்லை. இன்னும் சாமும் சுந்தரும் கடக்க வேண்டியது மூன்று இடங்கள் இருக்கிறது அது கடந்துவிட்டால் பெரிய பாலம் தான்.

.ரைஸ் மில்.

.தெப்பக்குளம் பிள்ளையார் கோவில்

.ஆட்டோ ஸ்டாண்டு

ரைஸ் மில்லிற்கு முன் ஒரு பெரிய பூவரசன் மரம் நிற்கும் அந்த நிழலில் தான், நெல் குத்தவந்த பெரியவர்கள் பீடியோ சுருட்டோ புகைத்துக் கொண்டிருப்பார்கள். அதில் யாரேனும் ஊர்க் காரர்கள் என்றால் அவர்கள் கண்ணிலிருந்து தப்ப வேண்டும். அடுத்ததாய், பீடி கடைக்கு சென்று திரும்பும் அவர்களின் ஊர் பெண்கள் பிள்ளையாரை தரிசித்துவிட்டுச் செல்வது வழக்கம். அதுவும் வெள்ளிக்கிழமையென்பதால் பதற்றத்துடனே பிள்ளையாரையும் கடந்திருந்தார்கள்.

 வாத்தியாரின் அடிக்கு பயந்து ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பொழுது படிக்காமல் சென்றுவிட்ட சாம் தெரு நண்பன் ஒருவன், இந்த இரண்டு வருடத்தில் ஆட்டோ ஓட்டுநராகி இருந்தான். ஊர்க் காரர்களின் பிழைப்பும் ஒருசிலருக்கு ஆட்டோ ஓட்டுவதில் தான் என்பதால் இந்த பயம்.

“கேக்காமவுட்டுட்டேன். நம்ம என்ன பீடி குடிக்கயா போறோம்? எதுக்கு குச்சி?”

 “நேத்தே அந்த டீக்கடைல இருக்றவனுவ ஒருமாதிரி பாத்தானுவ. அவனுவ இல்லனாலும் இந்த டீக்கடக்காரன் பாத்துடுவான். அதுக்கு தான்.”

 “அவன் பாத்தா நமெக்கென்ன”

“கேனக்கூ_யான் மாதிரி பேசாத. புடிச்சி வச்சி கேட்டாம்னா பீடிகுடிக்கதான் போனோம்னு சொன்னா இதோட போகும். அது மேட்டர் பெருசு!”

மழை பெய்யும் காலங்களில் மட்டுமே தண்ணீர் வரக்கூடிய ஆற்றுப்பாலம். எவ்வளவு தான் மழை பெய்தாலும் ஒருவாரம் கூட அதில் நீர் வரத்து தாக்கு பிடிக்காது. பாலத்தினையொட்டி உடை மரங்களும் குப்பைகளும் காட்டுச்செடிகளும் சூழ்ந்திருக்கும் . பாலத்தில் ஆட்டோ வரை செல்லலாம். அதற்கு மேல் பெரிய வாகனங்கள் செல்ல வேண்டுமெனில் ஊரை சுற்றித்தான் வர வேண்டும்.

Black magic art

“பயலுவ என்னப்பா நேத்தும் வந்தானுவ… இன்னைக்கும் போறானுவ! கூப்ட்டு பேச்சு குடுத்து பாருங்க.”

“பாலம்ம சோலி பாக்ற நேரத்ல இங்கன என்ன வேல? எதும் ஏடாகூடமா ஆயிடாம”.

“நீரு டீய போடும்யா எல்லாம் எங்க போவானுவ பீடி சிகெரட்டு குடிக்கி தான்! கைய பாரும் பீடி இருக்கு”

வெயில் உச்சி ஏறியதிலிருந்து அடையும்வவை பாலம்மைக்கு அது தான் வீடு. பாலத்தின் அடியிலிருப்பதால் அந்த பெயர் என்று எல்லோரும் நினைத்ததுண்டு. இரவானால் குடித்துவிட்டு யாரேனும் தகராறு செய்யக்கூடுமென இரவில் அங்கு இருக்க மாட்டாள். மூன்று வேளை சாப்பாடும் ஹோட்டலில் சாப்பிடுவாள்.

தன் உடலைப்பற்றியோ, முக அழகு சிகை அலங்காரம் எதைப்பற்றியும் கவலை கொண்டவள் இல்லை. பூசிய உடல்வாகு கொண்டவள். தன்னிடமிருக்கும் மூன்று சேலைகளை மட்டும் தெப்பக்குளத்தில் தண்ணீர் இருக்கும் காலங்களில் துவைப்பாள். மற்றபடி  ஆற்றையொட்டி இருக்கும் “U” வை தலைகீழ் போட்டது போலிருக்கும், அந்த குழாயில் தண்ணீர் வரும். அங்கு தான் குளிப்பாள். அதும் இரவு நேரத்தில் தான்.

 “நேத்து அந்த கெழவன்…”

“அவ செவத்த புடிச்சிட்டு எப்டி நின்னா பாத்தியா?”

“சரி நீ மெதுவா ஏறங்கு.”

“என்னமோ பீடிகுடிக்க போறானுவனு சொன்ன? பாலம்ம விரட்டி விட்ருக்கா! கம்போட நிக்கா பாரு அங்க…”

“இவனுவலுக்கெல்லாம் ஸ்கூல்ல போய் சொன்னா தான் திருந்துவானுவ”

“ஒமக்கு யாரு மொவன்னு எதும் அடையாளம் தெரிதாவே?”

“இல்லையேப்பா…”

சுந்தருக்கு பயம் தொற்றிக்கொண்டது. ஒருவேளை நாளையே டீக்கடைக்காரர் பள்ளிக்கு வந்து நம்மை அடையாளம் காட்டினால்? நடையில் மூச்சு வேகமும் வியர்வையும் முதுகு மொத்தமாய் நனைந்திருந்தது. “பிள்ளையாரப்பா” என்று கோயிலை கடக்கும் போது ஒருமுறை சொல்லிக்கொண்டான். அமைதியாய் நடக்க முடியவில்லை.

“நாளைக்கு இந்த டீக்கடக்காரரு ஸ்கூலுக்கு வந்து சொன்னா என்ன பண்ண?”

“நம்மதானு எப்டி தெரியும்?”

“பேண்ட் போட்டுட்டு வந்தானுவனு சொன்னா?”

“ஒம்பதாம் க்ளாஸ்ல இருந்து இங்க பேண்ட். அந்த ஆளு எப்டி கண்டு பிடிப்பான்?”

“க்ளாஸ் க்ளாஸா சார் கூட்டிட்டு வந்தார்னா?”

“அதெல்லாம் வரமாட்டாரு பொலம்பாம வா”

“அப்டியே வந்துட்டார்னா…?”

“எங்க வீட்டுக்குலாம் தெரிஞ்சா நான் செத்துருவேன்… நீ?”

“பாலம்மய கொன்றுவேன்……”

1

–  ரமேஷ் ரக்சன்

 (rameshrackson@yahoo.com)

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular