வாழ்தலின் சில இரகசியக்குறிப்புகள்
ஊர் மூலையில்
படர்ந்திருக்கும்
அந்த குளத்தின்
தெற்கு நோக்கிய
படிகளின் விளிம்பில்,
இன்று வற்றிப்போக
காத்திருக்கும்
அச்சிறு குட்டையில்
மகிழ்ந்து கிடக்கும்
மச்சத்திடம்
கேள் அன்பே!
பூதாகரமாக
அல்லது
ஒரு ராட்சதனை போல
அல்லது
ஒரு நெடுந்தருவைப் போல
அல்லது
காட்டுச் செடிகளிடையே நெளிந்தோடும்
சர்ப்பத்தை போல
அல்லது
பச்சை இலைகளால் மூடிய
புதைகுழியை போல
அல்லது
ஒரு சிறிய கற்துண்டு
காட்சியை மறைப்பது போல
நம்முன் விரிந்து கிடக்கும்
இத்துளி வாழ்வின்
மகிழ்ந்திருத்தலின்
ரகசியத்தை
*
நீயற்ற ஒரு பாழும் இரவு
ஒருமுறையேனும்
விடியாத இரவில்
குதித்துவிட வேண்டும்.
ஆமாம்
அந்த இரவில்
மாமழையும்
சாம்பிராணி புகையாய் பனிமூட்டமும்
நதிக்கரையில் கண்மூடி தியானிக்கும் புத்தனும்
புல்தரையில் மதுரமான சிறுபூக்களும்
மூலிகை செடிகளின் நறுமணமும்
இருடளர்ந்த கானகத்தின் ராத்திரியை
கிழித்துக்கொண்டு வலம் வரும்
ஒற்றை முழுமதியும்
உடன் நீயுமற்ற,
மேருமலையென என்னைக் கடையும்
உன் நினைவுகளும்
ஓர் பாழும் நாளில்
விடியா இரவொன்றில்
தலைக்குப்புற
விழுந்துவிட வேண்டும்
*
விதைகள் வேர்கள் மலர்கள் காய்கள்
எங்கள் ஆதி நிலத்தின்
கொடியொன்றில்
பூத்த மலரை
யாரோ கொய்கிறார்கள்.
இலைகளிடையே
கொய்ய மறந்த
ஒரு பூவை
யாரும் அறியாது
பாதுகாக்கிறேன்.
ஏதுமறியா சிறு மலரது
ஆரஞ்சும் மஞ்சளும்
கலந்த ஒரு மகரந்த நிறத்தில் கவிழும்
ஒரு மாலை பனியில்
மலர் சுருங்கி பிஞ்சானது
பிறகு வந்த
இருள் நாட்களில்
பூரானை போலிருந்த பிஞ்சு
அம்மாவின் கர்ப்ப வயிற்றைப்போல்
சிறுகச்சிறுக தடித்து வீங்கி
காயானது
அம்மா சமையலுக்கு
காயைப் பறித்துவிடச் சொல்லி
நச்சரிக்கத் தொடங்கினாள்
தம்பி தங்கைகள்
வயிறு வற்றிப்போய்
பசியோடு உறங்கிய
நாட்களில்
அந்த காயிடம்
விரைந்து முற்றிவிடும்படி
கேட்டுக்கொண்டேன்
அடுத்து வந்த
சித்திரா பௌர்ணமி நன்நாளில்
எங்களிடம்
முப்பதுக்கும் மேல்
விதைகளும்
சில காய்களும்
இருந்தது.
*
அப்பா என்றொரு நம்பிக்கை நட்சத்திரம்
பால்யத்தில் ஒருமுறை
அப்பாவின் தோள்களில்
ஏறி எக்கி எக்கி
இந்த வானை
தொட்டிருக்கிறேன்
தொட்டதற்கு பின்னான களிப்பில்
அப்பா அசதியாகி இருந்தார்.
ஆர்ப்பரிப்புகள் அடங்கிய
ஒரு பின்னிரவில்
அப்பாவின் உடல்
சில்லிட்டு கிடந்தது
மறுநாளிலிருந்து அப்பா
போட்டோ பிரேமில்
சிரித்தபடியும்
நினைவுகளில்
என் பக்கத்திலும் இருந்தார்
சட்டை மாட்டும் கம்பிகளில்
அப்பாவின் வாசனை ஒட்டிக்கிடக்கும்
ஒரு நீலநிறச் சட்டையை
அணிந்து கொண்டேன்
முடிவில்லா
இந்த வானை
தொட வேண்டும் ப்பா.
என்று சொல்லியபடியே
எக்கி எக்கி பார்க்கிறேன்.
*
ஈமச்சடங்காய்
நீண்ட காலமாக
பூட்டிய அறையொன்றை
திறக்கிறார்கள்
சிலந்தி வலையால்
இழுத்து கட்டப்பட்டிருந்தது
அந்த அறை
சில விஷமில்லா பூச்சிகளும்
மழைநேரத்தில் வெளியேறிய வண்டுகளும்
இருட்டில் விழிக்கும் வௌவாலும்
பக்கத்துக் கொல்லையிலிருந்து சுரங்கம் அமைத்திருக்கும் பெருச்சாளிகளும்
எப்போதோ இறந்துவிட்ட சிறு உயிரினங்களும்
இன்னும் இன்னும் பெயர் தெரியாத
புழுக்களும்
அந்த அறையிலிருந்து
ஒவ்வொன்றாய் அகற்றுகிறார்கள்
இறுதியில்
பொத்தலை பழைய துணியால்
அடைக்கிறார்கள்
மிச்சமென இருக்கும்
அதனதன் வாசனையை ரூம்-ஸ்ப்ரேயில்
துரத்துகிறார்கள்
உறங்கிக் கொண்டிருக்கும்
என் படுக்கையின் மூலையில்
சர்பம் ஒன்று நெளிந்து கொண்டிருந்தது
அந்த அறை
என் சவப்பெட்டி என்கிற
நினைவும் அதன்மேல்
நான் எழுதச்சொன்ன
‘நான் உறங்கும் போது
என்னை தொந்தரவு செய்யாதீர்கள்’
என்ற வாசகமும் இலேசாய்
நினைவில் வருகிறது
*
கி… கி… கீ.
நான் வளர்க்கும்
கிளிகளுக்கு
பேசப் பழக்குகிறேன்
ஒருமுறை
கி கி யும்
மறுமுறை
கி கி-யும் சொல்லிற்று
அவைகளுக்கு பயிற்சியளிக்கும்
கிளியை
ஒருநாள் கூண்டில் அடைத்து
என் கிளியின் அருகாமையில் இருத்திவிட்டேன்
இப்போது அதுவும்
கி கி என்றே
பேசுகிறது
*
கண்ணம்மா
அந்த நிறம்
என்னை மிகவும்
பலஹீனமடையச் செய்யும்
நீ அறிந்திருக்கிறாய்
இருந்தாலும் நீயந்த
நிறத்தில்
பச்சை குத்தியிருக்கிறாய்
உன்னுடலோடு
அங்கமாகிவிட்ட
அந்த நிறங்களை
பயமுதிர்வோடு தழுவுகிறேன்
அந்த சிலுவைக்குறியிலிருக்கும்
ஏசுவின் கண்களில்
கருணை துளிர்க்கிறது
ஒருமுறை கூட நீயருந்தாத
தாய்ப்பாலைப் புகட்டும்
நான்
உன் கண்ணம்மா தான்
இல்லையா
*
சமிக்ஞை
எனக்கு ஜாதகத்தில்
நம்பிக்கை இல்லை என்று
ஜாதகக் கதைகளைப் பற்றி
அம்மா ஓர்நாள் கூறினாள்
ஆனால்
நான் கனவுகளில்
நம்பிக்கை வைத்திருந்தேன்
ஒரு விடியலில்
அம்மா இறந்துவிட்டதைப் போலும்
நான் மாரில் அறைந்துகொண்டு
அழுவதைப் போலும்
கனவு கண்டேன்
விடியலில் கண்ட கனவு
பலிக்குமென்றிருந்தாள் அம்மா
மறுநாளிலிருந்து
தினமும்
அம்மாவின்
தலையையும் முதுகையும் தடவி
அந்த கனவிற்காய்
மன்னிப்பு கேட்டுக்கொண்டிருந்தேன்
மருத்துவமனையில்
அம்மா கிடந்த
நாட்களில்
அம்மா இறந்துவிட்டாலும்
தேவலாம் என்று
நினைத்த மாத்திரத்தில்
கழிவறை கண்ணாடியில்
தெரிந்த என் முகத்தில்
நானே உமிழ்ந்திருந்தேன்
என்னை ஒருநாள்
மருத்துவமனையில்
கிடத்தி இருந்தார்கள்
என் மகள்
கழிவறையில்
தேம்பித் தேம்பி அழுது கொண்டிருப்பதாய்
பக்கத்து படுக்கையிலிருந்தவள்
சொன்னாள்
என் முகத்தில் காறி உமிழ்ந்த பிறகு
நானும் அன்று
தேம்பித்தேம்பி
அழுது கொண்டிருந்தேன்
***