ஒருபக்க அழுகலான மார்புடையவள்
பதினொரு வயதில்
வீங்கத் தொடங்கிய சதையின்
எடை கூடிக்கொண்டே
செல்கிறது
அம்மா ஏழுமலையானிடம்
தலைமுடியை பேரம் பேசியிருக்கிறாள்
மகள் டாக்டரிடம்
விசாரணையை முடுக்குகிறாள்
மகன் இன்டர்நெட்டில்
தகவலை தேடுகிறான்
வலி எனைத் தாக்கும்
போதெல்லாம்
கதறும் நோய்மையை
இவர்களால்
ஏதும் செய்ய முடிவதில்லை
நாளை இந்த
ஒரு பக்கம் மட்டும்
அழுகிய மார்பை துண்டித்த பின்
மற்றொருநாள் இந்த
ஒரு பக்கம் மட்டும்
பஞ்சடைத்த
உள்ளாடை
என் பிணியைக் கூட்டக்கூடும்
*
அவிழாத சொல்
ஒரு வார்த்தையும்
உன்னிடமிருந்து பெறாத போது
அவ்வார்த்தைக்காக
காத்திருப்பதை தவிர
எனக்கு வேறு வழியில்லை.
உனக்குச் சொந்தமான
என் வார்த்தைகளை
சுமந்தபடி
உறங்கிப்போகிறேன்
சிலசமயம் அவ்வார்த்தைகள்
எனை உறங்கவிடாமல்
கனக்கும்
சிலசமயம் அவ்வார்த்தைகள்
எனை எரியூட்டும்
சிலசமயம் அவ்வார்த்தைகள்
என் முகத்தில்
புன்னகையை வரவழைக்கும்
சிலசமயம் அவ்வார்த்தைகள்
என் அவமானங்களுக்காய் கண்ணீர் உகுக்கும்
சிலசமயம் அவ்வார்த்தைகள்
என் பிரியங்களை உனக்கு பந்திவிரிக்கும்
சிலசமயம் அவ்வார்த்தைகள்
உன் மேலான மோகத்தில் எனை
பிய்த்துத் தின்னும்.
*
விருட்சத்தின் சூல் முட்டும் நாள்
பிடாரியின் இடக்கை கொண்டு
ஆகாயம் துடைக்கும்
நிலமெல்லாம்
சூல் முற்றி
துளிமேகம் நிலம் விழ
முட்டி நிற்கும்
மலைக்குன்றின் உச்சிக்கு
தாவித்தாவி பறக்கும்
நித்திரையற்ற கூகையின்
இரைச்சல் அதிரும் நாளில்
தாகம் தாகமென
மழைக்கு இறைஞ்சும்
வேம்புச்சூல் கொட்டை
தூள்தூளாய் அவிழும்
வனமெங்கும்
பிரசவிக்கும்
முட்களடர்ந்த கானகமெங்கும்
நிலம் வெடித்துக் கிளம்பும்.
மழலையின் ஓசை
*
வாழ்த்தட்டையில் உறங்கும் நான்
காலப்போக்கில்
நீ என்னை நோக்கி திரும்பும்படியான
உலகே அஸ்தமிக்கும் படியான
குழந்தை ஒன்று என்னை நோக்கி
ஓடிவரும் படியான
சொற்களை நனைத்து
வாழ்த்தட்டை செய்கிறேன்
உன்னுடைய பழைய
புழக்கத்திலில்லாத
வாழ்த்தட்டைகளோடு
அலமாரியில்
டிரங்கு பெட்டியில்
வீட்டுப்பரணில்
நிம்மதியாய் உறங்கும்
வாழ்த்து அட்டைகளோடு
உன் வீட்டில்
நானும் உறங்குவேன்
நீ
வீடுமாறும் போதோ
வெள்ளை அடிக்கும் போதோ
சுத்தம் செய்யும் போதோ
கலைந்து கிடக்கும்
கரையான்கள் அரித்த
பழைய நினைவுகளோடு
வாழ்த்தட்டையில் இருக்கும்
என்னோடு
உரையாடுவாய் தானே
*
மேகம் வரையும் தோகை
பிறிதொரு நாளில்
எங்கோவோர் மூலையில்
வெள்ளி முளைக்கிறதாவென
கருவானை நீ நோக்கும் சமயம்,
மிக நீண்ட தோகை கொண்ட
ஆண் மயில் போல்
இப்படியும் அப்படியும்
திரும்பித் திரும்பி
உனை பார்க்கிறேன்
சலசலவென ஆடி
முடித்த பிறகு
உதிர்ந்த இறகின்
நிறங்களைக் கொண்டு
என் வானத்தில்
உனக்கோர்
மழை வரைகிறேன்
வண்ணமாய்
உன் வாசலில்
ஓடும் நதியில்
காகிதத்தில் கப்பல்
செய்து விடுகிறாய்
நதியின் மேலிருக்கும்
சிறு பாலத்தில்
அமர்ந்தபடி உனை
சைகை காட்டி
அழைக்கிறேன்
வளையலசையும்
ஓசையில்
நித்திரை கலையாது
அயர்ந்துறங்குகிறாய்.
*
பவித்ரா
மின்னஞ்சல்: pavithrapandiyaraju@gmail.com