Thursday, June 13, 2024
Homeஇலக்கியம்பரனோயா - காலத்துகள்

பரனோயா – காலத்துகள்

‘ப்ரான்காப்’ சிரப்பை  ஸ்பூனில் ஊற்றினான், இந்த முறையும் அளவு அதிகமாகித் தளும்பியது.  சில சொட்டுக்கள்  தாடையில்  வழிந்து  பனியனின் மீது சிந்தின. நேற்றைய உடைதான், பிரச்சினையில்லை.   மணி  பத்தேகால், ஒரு மணிநேரம் முன்பு ‘காப்லட்’  சிரப்பை  அருந்தியிருந்தான். மழை பெய்யும் வாய்ப்பிருப்பது போல் காற்றில் குளிர்ச்சி, வானில் மேகங்கள். இப்போது மழை எதற்கு, சூட்டில் வைரஸ் சாகிறதோ இல்லையோ, இப்படி கோடையில் வானிலை திடீரென்று  மாறினால், சளி, ஜூரத்தில் கொண்டு போய் விடும். ‘ரெயின் ரெயின் கோ அவே’ பாட வேண்டியது தான், மத்திய அமைச்சரே ‘கோ கரோனா கோ’ என்று சொல்லும்போது இவன் மழையை போகச் சொல்லலாமே?

பதினோரு மணிக்கு குளித்தால் சரியாக இருக்கும். சென்ற  வருடம்  ஏப்ரலின்  போது  கோடையின்  உக்கிரம்  இன்னும்  அதிகமாக  இருந்தது. ஏழரை மணிக்கு குளிக்கும் போதே குழாய் நீர்  வெதுவெதுப்பாக இளஞ்சூட்டில் இருக்கும், இந்த வருடம் அந்தளவிற்கு இல்லையென்று தோன்றுகிறது. இரண்டு  வாரமாக பத்து, பதினொன்று என்று குளிக்கும் நேரத்தை மாற்றிக் கொண்டிருக்கிறான். மாலைக் குளியலை நிறுத்தியாயிற்று. அழுக்கு உடைகள், வியர்வை நாற்றத்தை பற்றி கவலைப்படுவதில் அர்த்தமில்லை.

அலைபேசி  அழைப்பை எடுத்தான்.  ‘சரி அத பிக்ஸ் பண்ணிடு, முடிச்சவுடனே கால் பண்ணிச் சொல்ல வேண்டாம், வாட்ஸாப் க்ரூப்ல அப்டேட் பண்ணிடு  போதும்’ இன்று இதுவரையிலேயே மூன்று   அலுவலக அலைபேசி அழைப்புகள்.  இப்படியே பேசிக்கொண்டிருந்தால் தொண்டை எரிச்சலெடுக்க ஆரம்பிக்கும். முடிந்தவரை அலுவலக சக ஊழியர்களிடம் வாட்ஸாப்பில் தொடர்பு கொண்டாலும், பேசுவதை முற்றிலும் தவிர்க்க இயலவில்லை. வீட்டிலும் கூட மனைவியிடமும், மகனிடமும் பேசுவதை குறைத்துக்கொண்டு விட்டான்.  

க்ரோமில் புது டாபை திறந்தான். ‘கோ’ ‘ என்றாரம்பிக்கும் அந்த  புதிய தளத்தின் முகவரி ‘பேவரைட்டில்’ வைத்திருக்கிறேன், வேண்டாம்  இப்போது பார்க்க வேண்டாம், பத்து நிமிடம் முன்புதான் அந்த தளத்திற்கு சென்றான். ‘ஏஎன்ஐ’ யின் ட்விட்டர்  அக்கவுன்ட்டை(ப்)  பார்க்கலாம், அதை கடைசியாக பார்த்து ஒரு மணிநேரத்திற்கு  மேலாகி விட்டது. வேண்டாம். டாபை மூடினான். ஒரு மணிநேரத்தில்  புதிதாக என்ன நடந்ததோ? பார்த்து விடுவது நல்லது. ‘கோ’ ‘… தளம்   ஏஎன்ஐ அளவிற்கு உடனுக்குடன் செய்திகளைத் தராது, மேலும்  அதில்  பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மட்டுமே  உண்டு. ‘ஏஎன்ஐ’ அக்கவுன்ட்டிற்கு சென்றான். பெரிய அசம்பாவிதம் எதுவும்    சொல்லப்படவில்லை. மற்றொரு மாநிலத்தில் புதிதாக நான்கு பேர், இவனுடையதில் மாற்றமிருப்பதாக செய்தியில்லை, எதற்கும்  ‘கோ’..’ தளத்தையும் பார்த்து  விடலாம். இவன்  மாநில முதல்வரின் ட்விட்டர் அக்கவுண்டில் தகவல்கள் அதிகமாக பகிரப்படுவதில்லை, ஆளுநரோ சூரியன் ‘ஓம்’ என்று  மந்திர உச்சாடனம் செய்து கொண்டிருக்கிறது என்று பதிவிடுபவர். இருவரும் அடித்துக்கொள்வதை நிறுத்தி விட்டார்கள் – தற்காலிகமாகத் தான் – என்பது இந்த பேரிடரின் ஒரு சின்ன நேர்மறை விளைவு.  

அலுவலக வாட்ஸாப் குழுமத்தில் சக ஊழியர்களுக்கு கொடுத்திருந்த வேலை எந்தளவில் உள்ளதென்று விசாரித்தான். கம்பெனியின் வாடிக்கையாளர் நிறுவனங்கள் தொண்ணூறு சதவீதம் இப்போது இயங்குவதில்லை, அவர்களிடமிருந்து நாளொன்றுக்கு நாற்பது, ஐம்பது மின்னஞ்சல்கள், பல அலைபேசி அழைப்புகள் வந்து கொண்டிருந்த இடத்தில், இப்போது ஒன்றிரண்டு வந்தாலே அதிகம். வாடிக்கையாளர்களுக்கு மூன்றுமாத க்ரெடிட் பீரியட், நவம்பர், டிசம்பர் மாத இன்வாய்ஸ்களை அவர்கள் ஏப்ரலில் க்ளியர் செய்ய வேண்டும், வாய்ப்பில்லை. இந்த மாதம் சம்பளம் போட்டுவிட்டார்கள், மே குறித்து உறுதியாக சொல்ல முடியாது.

ஜூன் மாதம் நிறுவனத்தை மூடினாலும் ஆச்சரியமில்லை, இந்த வயதில் புதிய வேலையும் தேட முடியாது. நாலைந்து மாதங்கள் சமாளிக்கலாம், அதன் பின் வீட்டு ஈஎம்ஐ கட்ட முடியாமல் வெளியேற வேண்டியிருக்கும். இரண்டாயிரம் ரூபாய் வாடகைக்கு ஒரு அறை போர்ஷன் எங்காவது கிடைக்குமா என்று அலைய வேண்டும். வேலை முக்கியம் தான், ஆனால்  அதற்காக, கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் அலுவலகத்திற்கு செல்லப்  போவதில்லை, உயிர் பிழைத்திருப்பது அதைவிட அத்தியாவசியம்.

அசதியாக இருந்தது, அரை மணிநேரம் தூங்கினால் சோர்வு நீங்கும். வழக்கமாக நாலரை மணிக்கு விழித்துக் கொள்பவன், இன்றும் மூன்றே கால் மணிக்கே எழுந்து விட்டான், இரண்டு வாரமாக இரண்டு, மூன்று மணி என்று விழித்துக் கொள்கிறான். இரவு எப்போதும் போல் ஒன்பதரை மணிக்கு படுத்தாலும், தூங்க ஒரு மணிநேரத்திற்கும் மேலாகி விடுகிறது. அதற்குள் நாலைந்து முறை சிறுநீர் கழிக்க(ச்) செல்கிறான். உறக்கத்தில் துர்கனவுகள் வருகின்றனவா என்று தெரியவில்லை, ஆனால் முழிப்பு தட்டும்போது உணரும் பதட்டம் நீங்க பத்திருபது நிமிடங்கள் ஆகிவிடுகிறது.

பதினொன்றரை மணிக்கு ஐந்து நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில்  குளித்தான். ஒரு பக்கெட் நீரை மட்டுமே, நிறைய ஊற்றி குளித்தால் உடல் குளிர் கண்டு, ஜுரத்தில் கொண்டு விடும். அவசரமாக குளிப்பதால் உடலை நன்றாக தேய்த்துக் கொள்கிறானா என்பது சந்தேகம் தான், சரும பிரச்சனைகள் வராமல்  இருக்க வேண்டும். அப்படியும் உடல் நடுங்குவதைப்  போல் தோன்றுகிறது, இந்த வருடம் கோடையின் தாக்கம் குறைவு தான். நாளை முதல் ஒரு மணிக்கு தான் குளிக்க  வேண்டும். அக்னி நட்சத்திரம் எப்போது  ஆரம்பிக்கிறது, அந்த இருபது, இருபத்தியைந்து நாட்களும் கொளுத்தித்தள்ள வேண்டும்.

உடை  அணிந்த  பின், இரு டீஸ்பூன்  மஞ்சளை டம்ளரில்  கொட்டினான், இன்னும் ஒரு சிட்டிகை சேர்க்கலாம்.  குளிக்க செல்லும்  முன்பே, வோல்டாஸ் டிஸ்பென்சரில் சுடு தண்ணீர் வருவதற்கான   சுவிட்சை ஆன்  செய்திருந்தான். குளியலுக்கு பின்னேற்படும் நடுக்கம் சளி அல்லது தொண்டைக்கட்டிற்கு இட்டுச் செல்லலாம், அங்கிருந்து ஜூரம், எனவே உடனேயே மஞ்சள் கலந்த சுடுநீரை கொப்பளித்து வருகிறான். டம்ளரில் தளும்பியிருக்கும் சுடுநீர். பனியனில் மஞ்சள்  திட்டுக்கள், ‘ப்ரான்காப்’, ‘காப்லட்’ சிரப்புக்களும் இன்னும் கொஞ்சம்  நேரத்தில் அவற்றுடன் கலக்கும், அவை அலோபதி மருந்துகள் அல்ல என்பதால் பக்கவிளைவுகள் குறித்து கவலைப்பட வேண்டியதில்லை, அதற்காக அவற்றை குடித்துக் கொண்டேயிருக்கவும் கூடாது.   தொண்டை இன்னும் எரிகிறது, மஞ்சள் அதிகமாக போட்டுவிட்டேனோ, அல்லது நீர் மிகவும் சூடோ? தொண்டைச்சதை புண்ணாகிவிட்டால் எந்த ஈஎன்டியிடம் செல்வது? தொண்டையில் வலி என்று கூறியவுடன் உள்ளே அடைத்து விட்டால்? தன்னிச்சையாக தலைமுடியை கலைத்துக் கொண்டான். மார்ச் முதல் வாரத்தில் சலூனிற்கு கடைசியாக சென்றது. இவன்  மட்டும் தான் ஒரே வாடிக்கையாளர் என்பது ஆசுவாசமாக இருந்தாலும், கடைக்காரர் முகத்தினருகே குனியும் போதெல்லாம் பீதியாக இருந்தது. ஜடாமுடியாக வளர்ந்தாலும் சரி, கடைகள் திறக்கப்பட்டாலும் கூட, இனி நாலைந்து மாதங்கள் கழித்து தான் சலூனிற்கு செல்ல வேண்டும். ஆனால் பின்னங்கழுத்து முடியில் வியர்வை படிந்து சளியில் கொண்டு விடும், இவனே மழித்துக்கொள்ள வேண்டியது தான்.

பன்னிரண்டு மணிக்கு அலுவலக வாட்ஸாப் குழுமத்தில் வேலை எந்தளவில் உள்ளது என்பதைத் தெரிவிக்க ஆரம்பித்தார்கள், மூன்று மணிநேரத்திற்கு ஒருமுறை அனுப்பச் சொல்லியிருந்தான். மெசேஜ்களை  படித்துக் கொண்டிருக்கும் போது மலங்கழிக்கும் உந்துதல். பகல் நேரத்தில் மலங்கழிப்பது இவனுக்கு  அருவருப்பான விஷயம், வீட்டிலிருக்கும் போது அப்படி நேர்ந்தால் மீண்டும் குளித்து விடுவான், இப்போதைய சூழ்நிலையில் அது அபாயகரமானது. அடக்கி வைத்தால், மலச்சிக்கலில்  கொண்டுவிடும். தினமும் ஒரு மணிநேரத்திற்கு மேல் காலை நடைக்குச் செல்லும் வரையில் இப்படி நேரங்கெட்ட நேரத்தில் மலங்கழிக்க நேரவில்லை, வீட்டியிலேயே இருப்பதால் செரிமானம் பிரச்சனைகள் வேறு சேர்ந்து கொண்டிருக்கிறது.

அபார்ட்மென்ட் மாடியில் நடக்கலாம் என்றால், இருபது முப்பதடிக்கு ஒருமுறை நடக்கும் திசையை மாற்றி திரும்ப வேண்டியிருப்பதால், மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஐந்தரை மணி இருட்டில் எதையாவது யோசித்தபடி நடந்து கொண்டிருந்தால், மாடி சுவற்றில் முட்டி கீழே விழ வேண்டியது தான். ஒருமுறை வெளிச்சம் வந்த பின் நடக்கலாமென்று ஏழு மணிக்கு மாடிக்கு போனான். ஏற்கனவே நடையில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்த, இரண்டாவது தளத்தில் வசிக்கும் பேங்க்காரர் இவனைப் பார்த்தவுடன் இறங்கிச் சென்றார். அடுத்த சில நொடிகளில் இவனும்  திரும்பி, கைகளை கழுவிக்கொண்டான். பேங்க்காரர் ஏழெட்டு அடி தள்ளிதான் இருந்தார், அவர் வெளிநாட்டிற்கோ, வெளி மாநிலத்திற்கோ சமீபத்தில் சென்று வந்தது போல் தெரியவில்லை, மேலும்  காற்றில் வைரஸ் பரவாது என்று சொல்லப்படுகிறது, இருந்தாலும்  எதற்கு தேவையில்லாமல்  அபாயத்திற்கு உட்படுத்திக் கொள்ளவேண்டும்.

‘என்ன பண்ணிட்டிருக்கீங்க, ரொம்ப நேரமா உள்ளே இருக்கீங்க’ மனைவியின் குரல். வாஷ்பேசினில் நீர் மெதுவாக வருகிறதோ, காலையில் தண்ணீர் தொட்டியை நிரப்பியிருப்பார்களே. பன்னிரண்டு வீடுகள்  அபார்ட்மென்ட்டில், ஒரு வீட்டிற்கு குறைந்தபட்சம் மூன்று பேர், அனைவரும் முழுநேரமும் வீட்டில்தான். நீர் உபயோகம் அதிகரித்திருக்கிறது, நேற்றே ஏர் லாக்காகி தொட்டி நிரம்ப அதிக நேரமெடுத்தது, மோட்டார் கெட்டுப்போகாமல் இருக்க வேண்டும்,  சரிசெய்ய யாரும் வரமாட்டார்கள்.

‘ப்ரொவிஷன்ஸ் கொண்டு வந்திருக்காங்க, கீழேயே நிக்கறாங்க, நாம தான் போய் வாங்கணும்’ என்று மனைவி சொல்ல ‘நான் வரணுமா’ என்று கேட்டான். ‘நீங்கதான கூகிள் பேல குடுத்துடலாம்னு   சொன்னீங்க, உங்க கிட்ட தானே அந்த அக்கவுன்ட்  இருக்கு’, ‘வரேன்’. கேஷாக ஆயிரத்து எழுநூறு ரூபாய் இருக்கிறது, பத்து நிமிட நடை தூரத்தில் தான் ஏடிம், ஆனால் இந்த(ச்) சூழலில் போக வேண்டாம்,  பலர்  தொட்ட இடத்தில்  நம் விரல்களும் பட வேண்டியிருக்கும், வீடு திரும்பி  கை கழுவுவதற்குள் கிருமி தொற்றி விட்டால்?. ஏடிம்களில் சானிடைசர்கள் வைக்கப்பட வேண்டும். 

லிப்ட்டிலிருந்து இறங்கியவுடன் பொருள் கொண்டு வந்திருப்பவரை கவனித்தான். முகத்தில் மாஸ்க் அணிந்திருந்தார். இவனும் , மனைவியும் கர்சீப்பைக் கொண்டு முகத்தை மூடியிருந்தார்கள். என்-95 கிடைக்கவில்லை, சராசரி மாஸ்க் ஆறு வாங்கி வைத்திருந்தான். கடைகளுக்கு செல்லும் போது மட்டும் அவற்றை உபயோகிக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தான், அதன் பின் வெளியே போகாததால் அப்படியே உள்ளன. பொருட்களிருந்த பையை தரையில் கவிழ்த்த கடைக்காரர் சரிபார்த்துக் கொள்ளச் சொன்னார், நடுவில் மளிகை சாமான்கள், அதன் இருபுறமும் ஓரடி தள்ளி அவரும், இவர்களிருவரும். ‘ஏன் கிட்டக்க போற’ என்று இவன் கேட்க, ‘என்ன வந்திருக்குன்னு செக் பண்ண வேண்டாமா’ என்றாள் மனைவி. ஓரடி தூரத்தில் என்ன பொருட்கள் உள்ளன என்று கவனிக்க முடியாதா என்ன? கேட்டிருந்தவற்றில் அறுபது, எழுபது சதவீதம் தான் இருந்தன. அவற்றிற்கு கொடுக்க வேண்டிய தொகையை அலைபேசியின் கேல்குலேட்டரில் கூட்டி கடைக்காரரிடம் காண்பித்தான். உயரமாக, நீண்ட கைகளுடன் இருந்திருந்தால் வசதியாக இருந்திருக்கும், இப்போது ஓரடிக்கும் குறைவான இடைவெளி இருவருக்குமிடையே. ‘நானும் ஒரு வாட்டி பார்த்துக்கறேன் ஸார்’ என்றார் கடைக்காரர், இப்போது அவர் கைகளை நீட்ட, மீண்டும் ஓரடிக்கும் குறைவான இடைவெளி இருவருக்குமிடையே.

பொருட்களை எடுத்துக்கொண்டு லிப்டில் ஏறியவுடன் முகத்திலிருந்து கர்சீப்பை கழற்றிய மனைவி  ‘மூச்சு முட்டுது, எப்படி நாள் பூரா போட்டுக்கிட்டுருக்காங்க’ என்றாள். ‘எதுக்கு இப்பவே ரிமூவ் பண்ணினா’, ‘இனிமே எதுக்கு’, ‘நம்ம ப்ளோர்ல யாரவது வெளில நின்னுக்கிட்டிருந்தாங்கன்னா என்ன பண்றது’, எல்லாரும் அலட்சியமாக இருக்கிறார்கள். வீட்டினுள் நுழைந்தவுடன் ‘போய் கை கழுவு’ என்றான், ‘எடுத்து வெச்சுட்டு வாஷ் பண்ணிக்கறேன்’.

தொண்டையில் எரிச்சலாக உள்ளதோ? உடல் முழுதும் வலி, கால்கள்  கனத்திருக்கின்றன, கழுத்தை  தொட்டுப் பார்த்தான். சூடாகிறதோ ? பாராசிடமால் போட்டுக் கொள்ளவேண்டியது தான், ஆனால் இப்போது  முடியாது,  ஒரு மணிக்கு மதிய உணவு, அதன் பின்பு தான். மூக்கடைப்பது போலிருந்தது. கடைக்காரர் முகத்தை நன்றாக மூடிக்கொண்டு தானே இருந்தார்? விக்ஸ் வேபோரப்பை  மூக்கில்  தடவினான். மூன்று  நாட்களுக்கு  முன்பு  இதை அதிகப்படியாக   தேய்த்து சதை உரிந்து எரிய ஆரம்பித்தது இப்போது தான் அடங்கியிருக்கிறது. இனிமேல் அளவாகத் தடவ வேண்டும். இல்லாவிட்டால் அலர்ஜியாகி, ஸ்கின் ஸ்பெஷலிஸ்ட்டிடம் போகவேண்டி வரும்.

‘கோ..’ தளத்தை பார்க்கலாமா? நான்கு மணிக்கு மேல் ஏஎன்ஐ ட்விட்டரில் கடந்த இருபத்தி நான்கு மணிநேர நிலவரத்தை தெரிவிப்பார்கள். அதுவரை எதுவும் தெரிந்து கொள்ள வேண்டாம்.  ஒரேயொரு தடவை  ‘கோ..’ தளத்திற்கு செல்லலாமே, ஆனால் ஒரு நிமிடத்திற்கு மேல் செலவிடக்கூடாது. மடிக்கணினியை மூடித்,திறந்தான், மீண்டும் மூடினான். தலைவலி. தொண்டை எரிச்சல், மூக்கடைப்பின் ஆரம்பக்கட்டம், உடல் வலி, சூடு, தலைவலி, ஹைப்போகான்ரியாக் ஆகிக் கொண்டிருக்கிறேனா, இல்லை எல்லாம் நிஜம்.  ‘லஞ்ச் ரெடியா’, சாப்பிட்டவுடன் பாரசிட்டமால் எடுத்துக் கொள்ள வேண்டும். அதுவரை? ‘காப்லட்’ சிரப்பை  ஸ்பூனில் ஊற்றினான், இந்த முறையும் அளவு அதிகமாகி தளும்பியது. சில சொட்டுக்கள்  தாடையில்  வழிந்து  பனியனின் மீது சிந்தின.

**

  • காலத்துகள் – தற்பொழுது பாண்டிச்சேரியில் வசித்து வருகிறார். இவரது முதல் நாவல் இயர் ஜீரோ சமீபத்தில் வெளியானது..
RELATED ARTICLES

1 COMMENT

  1. இயல்பான திருநாள். திருநாளின் எல்லா வெளிச்சங்களும் என் மீதும்.
    உயிர்வாழ்தலின் பயம்.
    எதற்கும் அர்த்தம் இல்லாமல் எல்லாமும் புரண்டு கிடக்க…. இன்னும் ஒரு இன்றைய தினம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular