Sunday, October 1, 2023
Homesliderபன்னீர் ரோஜா

பன்னீர் ரோஜா

அகராதி

“ஒத்த தம்பிடி கிடையாது வெளிய போடா, சொத்து வேணுமோ சொத்து.. வந்துட்டான்”

ஸ்வாதி தன்மேலே சரிந்திருக்கையில் அவனுக்குத் தன் சிறுவயதில் தாத்தா பேசப்பேச, வெள்ளைக்கோடு போட்ட சட்டை, பாசிப்பச்சைக் கலர் அரைடவுசரில் அம்மா கையைப் பிடித்துக்கொண்டு அப்பாவின் பின் தாத்தா வீட்டைத் திரும்பித் திரும்பிப் பார்த்தவாறு வீதியில் நடந்தது நினைவிற்கு வந்தது. ச்சே என்ன மனசு இது. ‘பத்து நிமிஷம்.. வந்திடறேன்’ என்று லுங்கியைச் சுற்றிக்கொண்டு நகர்ந்து அறையின் ஜன்னல் ஸ்க்ரீனை விலக்கிவிட்டு சிகரெட் பற்ற வைத்தான். நீளமாக இழுத்து ஒரு தம், இரண்டு, மூன்று, நான்கு அதற்குள் சிகரெட் தன் ஆயுளின் தொன்னூறு சதவீதத்தை இழந்து விட்டது. பெரிதாக மூச்சுவிட்டு கட்டிலைப் பார்க்கிறான். சிங்கிள் டாப்புடன் அருகே வந்து நின்றவளை இடுப்போடு அணைக்க கைக்கொண்டு போகையில் என்னாச்சு என்கிறாள். ஒன்றுமில்லை என்பதாகத் தலையசைத்து, இழுத்து அவள் நெற்றியில் முத்தமிடுகிறான்.

“வித்தியாசமான ஆளா இருக்க”

இந்த மாதிரி நேரத்துல எழுந்து வந்தது குறித்து குறிப்பிடுகிறாளோ… ஏமாற்றம், இயலாமை, அவமானம் எல்லாம் துரத்துவது போல் இருக்கிறது கூடலைக்கூட நிகழ்த்த இயலாதுப் போன நேரங்கள் எதற்கு எனக்களிக்கப்பட்டிருக்கிறது? என நினைத்துக் கொண்டிருக்கையிலேயே ஸ்வாதியின் தோளில் சாய்ந்து அழத்தோன்றியது.

“பணம்தான் எல்லாத்தையும் விட முக்கியம். இல்ல?”

“இல்ல”

இது என்ன குறும்பான பதிலா, சின்சியரான பதிலா, என்ன சொல்லப்போறா..? அன்பு பண்புனு எதுவும் ஏதாவது உளறப் போறாளா? என்று நினைத்து ‘அப்புறம்?’ எனும் குரலில் கிண்டல் அமர்ந்து கொள்கிறது. வாரத்திற்கு இரு ஆண்களை மட்டுமே அனுமதிப்பதாகவும் மற்ற நாட்களில் தான் விருப்பமுறும் இடங்களுக்கும் படங்களுக்கும் சென்று வருவதாகவும் கூறினாள். அந்த இருவரும் கூட தன்னை மதிக்கும் பட்சத்தில்தான் என்றவள் எல்லோரிலும் அவனுக்குத் தனி இடம்தான், ஏனெனில் தன்னையும் அறியாமல் அவன் தன்னைக் காதலிப்பதை உணர்ந்ததால் என்று கூறிக்கொண்டிருக்கும் ஸ்வாதியை ‘ரிடிகுலஸ்’ என்றவாறு வினோதமாகப் பார்த்துக் கொண்டிருந்தான் ரகு .

ஸ்வாதியின் தொழில் வேண்டுமானால் விமர்சனத்திற்குட்பட்டதாக இருக்கலாம். ஆனால் அவளுக்கு எந்தப் புகாரும் யார் மீதும் இல்லை. ஏனென்று கேட்டால், முடிந்ததைப் பேசி என்னவாகப் போகிறதென்பாள். மகன் மட்டுமே நம்பிக்கை. மனித நேயமுள்ள, மற்றவரின் உரிமையில் தலையிடாத பிள்ளையாய் வளர்வான் என்பாள். எல்லோரிடமும் சரளமாகப் பேசும் பழக்கம் இல்லை. சந்திக்கும் ஆண்களில் மற்றவர்கள் மனதை மதிக்கக் கூடியவர்களாயிருந்தால் எண்ணத்தில் உதிப்பதைப் பகிர்வாள். எங்கிருந்து சமுதாயச் சிந்தனை வளர்ந்ததோ தெரியவில்லை. பேசுவதைப் பார்த்தால் பிறக்கும்போதே தோன்றியது போலிருக்கும். நடப்பு நிகழ்வுகள் குறித்து அவ்வளவு டீடெயிலிங் ஒப்பிப்பாள். கால் நீட்டி உடல் தளர்த்தியப் பொழுதுக்கு வாயார, மனமாற அவன் இதயம் தேடும் உறவு அவள் என்பதை அவனை விட அவளே உணர்ந்து இருந்தாள். அவனுக்கு பணத்திற்குப் பின்தான் எதுவும்.

அவனுக்கு இந்த உலகமே பணத்தால் ஆனது. அன்று தாத்தாவின் கோபத்தை மட்டும் வாங்கிவந்த பிறகு அவர்கள் ஒருநாளும் அந்த ஊருக்குப் போகவே இல்லை. எப்போதும் நிறைய நண்பர்களுடன் சுற்றிக் கொண்டிருந்த அப்பா, வயலில் வேலைக்கு வந்திருந்த அம்மாவை தாத்தாவின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டார் என்று அம்மா கூறக் கேட்டிருக்கிறான். கடனை வாங்கி வைத்த எலக்ட்ரானிக்ஸ் கடை நஷ்டத்தில் போகவும் கடன் கொடுத்தவர்களைச் சமாளிக்கத்தான் தாத்தாவின் உதவியை நாடினார். தாத்தா வெளியே அனுப்பியப் பிறகு, அம்மாவின் அப்பா கொடுத்த சீட்டுப்பணம், அம்மாவிடம் இருந்த நகை எல்லாம் கடன்காரர்களைச் சமாளித்தது. அதே ஊரில் இருக்கப் பிடிக்காமல் வேறு ஊருக்கு வந்து எலக்ட்ரீசிஷியனாக வேலைப் பார்த்தார்.

*

லஷ்மி அக்கா பாவாடையை முழங்காலுக்கு மேல் சுருட்டிவிட்டு ஒருகால் மடக்கி ஒருகால் நீட்டி தலையை முன்பின்னாய் அசைத்து, அசைத்து அம்மி அரைத்துக் கொண்டிருந்தாள். மேலேறிய துணியின் பலனாய் அவளது வெள்ளைநிறக் கால் வீதிவரை பளீரென்று தெரிந்தது. அம்மிக்குழவியில் ஒரே மாதிரியான இடைவெளியில் கோடு கோடாய் மசாலா திரண்டிருந்தது.

“டேய் ஒரு டம்ளர் தண்ணிய எடுத்துட்டு வா”

ஓடிப்போய் எங்கள் வீட்டிலிருந்து எடுத்துவந்து கொடுத்தேன் வாங்கிப் பக்கத்தில் வைத்திருந்த கிண்ணத்தில் ஊற்றி டம்ளரைக் கொடுத்துவிட்டு சரக்கென குழவியைத் தொன்னூறு டிகிரியில் நிறுத்தி, விரல்களில் மசாலாவின் ஒவ்வொரு கோடாய் வழித்து அம்மியில் சேர்த்தாள். பிறகு அம்மியிலிருந்தும் குழவியிலிருந்தும் மசாலாவை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி மற்றொரு கிண்ணத்தில் இருந்த தண்ணீரால் இரண்டையும் சுத்தம் செய்து வைத்துவிட்டு, எழுந்து பாவாடையை உதறி தாவணியை இழுத்துவிட்டு அவளது வீட்டிற்குள் போனாள். ஆனாலும் ஒருபக்கம் மார்பும் இடுப்பும் தெரியத்தான் செய்தது. அவள் இழுத்து விட்டதே நன்றாகத் தெரியட்டும் என்றுதான் இழுத்து விட்டது போலிருந்தது. நான் பெரியவனானதும் லஷ்மியக்கா மாதிரி தலையை அசைத்து அசைத்து அம்மி அரைக்கும் பெண்ணைத்தான் கட்டிக்க வேண்டும். சிவப்பு கலர் மிக்ஸி அவங்க வீட்டில் நீளமான மரபெஞ்சில் இருக்கிறது. நான் பார்த்திருக்கிறேன். ஆனாலும் அக்கா நாலு குடித்தனத்திற்குப் பொதுவான இந்த அம்மியில்தான் அரைப்பாள். எங்கள் வீடுதான் எதிர்வீடு அப்புறம் ரெண்டு வீடு எதிரெதிரில் இருக்கு இருக்கிறது ஒரே வாசலுக்குள்.. அக்கா அம்மி அரைக்கும்போது அம்மா வெளியே வந்தால் முறைத்துவிட்டு கதவைச் சாத்தி விடுவாள்.

ஆனால் அக்கா எப்போது தண்ணீர் கேட்பாளென்று நான் வெளியே உட்கார்ந்திருப்பேன். மாதத்திற்கு மூன்று நான்கு நாள் உலக்கையை பார்டர் போல போட்டு நான் இப்பொழுது உட்கார்ந்திருக்கும் இடத்தில்தான் அக்கா உட்கார்ந்திருப்பாள் . அந்த நேரத்தில் என்னைத்தான் இழுத்து துணைக்கு வைத்துக் கொள்வாள். என் அம்மாவிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு, மேல் சட்டையைக் கழட்டிவிட்டுப் போகச் சொல்வார் அக்காவின் அம்மா. மேல் சட்டையைக் கழட்டிவிட்டால் தீட்டு இல்லையாம். திரும்ப வீட்டிற்குள் வரும் போது டிராயரைக் கழற்றி நனைத்து காயப்போட்டு விடுவாள் அம்மா.

அக்காவுடன் பல்லாங்குழி, தாயம் விளையாடுவேன். அவளிடம் இருக்கும் பழைய புத்தகங்கள் ஏதாவது இரண்டு எடுத்து அதில் உள்ள ஜோக்கையெல்லாம் சத்தமாகப் படிக்கச் சொல்வாள். நான் இப்போது ஐந்தாம் வகுப்பு. அக்கா ரொம்ப நாள் முன்பே எட்டாவது பரீட்சை எழுதிவிட்டு இனிமேல் ஸ்கூலிற்கு போகமாட்டேன் எனச் சொல்லிட்டாளாம். என்னைக் கட்டிப்பிடித்து மடியில் உட்கார வைத்துதான் கீழே உட்கார விடுவாள். அவளை விட்டுத்தள்ளி உட்கார்ந்த பிறகும் மஞ்சளும் பான்ட்ஸ் பவுடரும் கலந்த வாசம் அடித்துக் கொண்டிருக்கும். வெளியே எங்கயாவது போகும்போது மட்டும்தான் மஞ்சளுக்கு மேல் ஃபேர் அன்ட் லவ்லி போட்டுக் கொள்வாள்.

அக்கா வீட்டில் அவங்க அம்மா, அக்கா இரண்டு பேர்தான். இன்னொரு அக்கா கல்யாணம் செய்து தூரமாக ஒரு ஊரில் இருக்கிறாள். நாங்கள் இந்த வீட்டிற்கு வந்ததிலிருந்து பார்க்கிறேன், முழுப்பரிட்சை லீவிற்குதான் வருவாள். இந்தத் தடவையும் முழுப்பரிட்சை லீவிற்குத்தான் வருவாளென அக்கா சொன்னாள். இன்று ஸ்கூல் விட்டு வரும்போது உலக்கையை பார்டர் போல போட்டு அக்கா உட்காரவில்லை. இன்று என்னுடன் விளையாட மாட்டாள். வீட்டில் அம்மா பாத்திரம் துலக்கி வைத்துக் கொண்டிருந்தாள். பையை வைத்துவிட்டு கைகால், முகம் கழுவித் துடைத்து அம்மா வைத்திருந்த பருப்பு போளியைச் சாப்பிட எடுத்தேன். லக்ஷ்மி அக்கா வீட்டில் இருந்து புதிய குரல்கள்.

“யாரும்மா லஷ்மிக்கா வீட்ல?”

“லஷ்மியோட அக்கா குடும்பம் வந்துருக்கு”

போளியை தரையில் வைத்துவிட்டு வெளியே வந்து எட்டிப் பார்த்தேன். அம்மா முதலில் சாப்பிட்டு விட்டு வெளியே போ என்று கத்தினாள். போளியும் உள்ளே இழுக்க, வந்து சம்மணமிட்டு இனிப்பு பூரணத்தின் மேல் போர்த்திருந்த வெள்ளைப் பரப்பை பிய்த்தெடுத்து தனியே வைத்துவிட்டு, உதிரும் இனிப்பு பூரணத்தை விரல்களால் சிறிய சைஸ் கோபுரம் கோபுரமாகப் பிடித்து தட்டில் தேய்த்து, தேய்த்து சாப்பிட்டேன். பிய்த்து வைத்திருந்ததையும் கீழே பூரணத்தைத் தங்கியிருந்த வெள்ளைப் பரப்பையும் குழலாகச் சுருட்டி கையில் எடுத்து ஒட்டியிருக்கும் பூரணத்தின் இனிப்புச் சுவையோடு கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிட்டுவிட்டுத் தட்டை எடுத்துக் கழுவும் இடத்தில் வைத்து கை கழுவி தண்ணீர் குடிக்கும்போது லஷ்மி அக்கா நினைவு வர வெளியே ஓடிவந்து அவள் உலக்கை போட்டு உட்காரும் இடத்திற்கு அருகே டிராயரில் இருந்த சாக்பீஸை வைத்து கப்பல் வீடு வரைந்து கொடி பறக்க விட்டேன்.

அக்கா வீட்டிலிருந்து அவங்க அம்மா, புது அக்கா, ரெண்டு பாப்பாக்கள் வெளியேறினார்கள். அவங்க அம்மா என்னைக் காட்டி புது அக்காவிடம் ஏதோ சொல்லிக்கொண்டே போனார். நான் அக்காவைத் தேடிக்கொண்டு அவள் வீட்டிற்குள் சென்றேன்.

“என்னடா ஸ்கூல் விட்ருச்சா”

அக்காதான் சமையல் ரூமிலிருந்து கேட்டாள். வாசமாகக் காப்பி கலந்து எடுத்து வந்து மொத்தமாக தடியாக மீசை வைத்துக்கொண்டு உள்ரூமில் சேரில் இருந்த புது மாமாவிற்கு கொடுத்தாள். அந்த மாமா என்னைப் பார்த்துவிட்டு பேசவே இல்லை. காப்பியை மட்டும் வாங்கி உறிஞ்சி உறிஞ்சிக் குடித்தார். எனக்கு அக்கா இப்பொழுது வெளியில் வந்து கப்பல் வீட்டைப் பார்க்க வேண்டும். வருவாளா, மாட்டாளா ? திரும்பவும் சமையலறைக்குப் போன அக்காவின் முதுகைப் பார்த்துக்கொண்டே வெளியே வந்து கப்பல் வீடு கலையாமல் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டேன். ஒரே இடத்தில் உட்கார்ந்திருந்தது அலுப்பாக இருக்க, எங்கள் வீட்டிற்குள் போனேன். சிறிது நேரம் கழித்து அக்கா வெளியே வரவும், அவசரமாக வெளியில் வந்து பார்க்க அக்கா தொப்பென்று தரையில் விழுந்து கவிழ்ந்து படுத்துக் கொண்டாள். பக்கத்தில் போய் நின்றவுடன் என்னை ஏறிட்டுப் பார்த்துவிட்டுத் திரும்பவும் படுத்துக் கொண்டாள். அவள் முதுகில் நோட் பென்சிலில் கோடு இழுத்தது மாதிரி சின்ன ரத்தக்கோடு. உட்கார்ந்து அதைத் தொட்டுப் பார்த்தேன்.

“என்கிட்ட காசு இல்லடா அப்பு”

“அதுக்கு?”

“இந்த உலகத்துல எல்லாத்தையும் விட காசுதான்டா முக்கியம்.”

சொல்லிவிட்டுக் கவிழ்ந்து கண்மூடிப் படுத்துக்கொண்டாள். அக்காவின் பச்சைக்கலர் பாவாடையெல்லாம் சாக்பீஸ் அப்பியிருக்க கப்பல் வீடு கலைந்து உருவமற்றுப் போயிருந்தது.

*

ஸ்வாதியிடம் இருந்து அவனுக்கு போன். அவசரமாய் வரச்சொன்னாள். கடந்த மூன்று மாதமாக இருவரிடையேயும் எந்தத் தொடர்பும் இல்லை. இந்நிலையில் ரெடி-கேஷ் ஐம்பதாயிரம் கேட்டிருக்கிறாள். அவனிடம் மட்டுமல்ல வேறு யாரிடமும் பணம் கேட்டு வாங்கியதில்லை. கடன், உடன் என்ற பேச்சுக்கே இடமில்லை. “லட்டு மாதிரி ஒரு பையன். நான் சம்பாதிக்கறதே அதிகம்” என்பவள், குறிப்பிட்ட அளவிற்கு மேல் பணத்தை வைத்து என்ன செய்வது, பயந்து பாதுகாத்தே லைஃப் போய்விடும் என்பாள். மகன் படித்து முடித்து விட்டால் அவன் பார்த்துக் கொள்வான் என்பது அவளது திடமான நம்பிக்கை. எங்கு வரவேண்டும் என்று கேட்காமல் நேராக அவள் வீட்டிற்குச் சென்று விட்டான். வீடு இருக்கும் இடம் தெரியுமே தவிர, இதுவரை வீட்டிற்குப் போனதில்லை.

வீட்டிற்குச் சென்றபோது வெளியில் நிற்கச்சொல்லி, போய் ஹேண்ட்-பேக் எடுத்து வந்தாள். ‘போன் பண்ணு, வீட்டுக்கு வராத’ என்ற உத்தரவிட்டு முன்னே நடந்தாள். கறுப்புக் கலரில் வெள்ளை வட்டம் போட்ட புடவை ஆங்காங்கே பீட்ஸாவில் தெரியும் கலர் போல இரண்டு, மூன்று கலர் பூக்கள். அதே டிசைனில் ஜாக்கெட். ரவுண்ட் நெக். நடக்கும்போது வலது தோள்பட்டையின் நாலு இஞ்ச்-க்கு கீழ் சிறுகுழி தோன்றும். கார் நிற்கும் இடம்வரை அதைப் பார்த்துக்கொண்டே நடந்து வந்தான்.

நாட்டில் கொலை, கொள்ளை, வன்முறை, வன்புணர்வு என்று எது நடந்தாலும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது அவளுக்கு. பறவைப் பார்வை என சொல்வார்களே மேலிருந்து கவர் செய்யும் போட்டோ ஷூட் போல ஒவ்வொரு செயலுக்கும் எல்லா திசைகளிலும் பார்த்து டிஸ்கஸ் செய்வாள். அதுபோன்ற நேரங்களில் ‘கீழே வா கழுகே’ என்று அவன் கிண்டல் செய்திருக்கிறான். ஐந்து வயது மகன் இருக்கிறான். வளர்ந்த பிறகு ஹாஸ்டலில் சேர்த்து விடுவேன், படித்து முடித்ததும் வெளிநாட்டில் போய் செட்டிலாவோம். ஒரு செயல் எந்த அளவிற்கு நீட்சி பெற்று நல்லதையும் தீயதையும் விளைவிக்கும், பரவச்செய்யும் என்பதெல்லாம் சிந்திக்காத அதிகாரங்கள். அடிப்படைத் தேவைகள் பற்றிய அறிவின்மையோடு எப்பொழுதும் ஏதேனும் சிக்கலுக்குள் வாழ வைக்கும் ஊரிது. இந்த ஊர் கொடுக்கும் அழுத்தம் என் மகனால் தாங்க முடியாதென்பாள். எரிச்சல்படுவான். இந்த ஊரில் இருப்பவர்கள் எல்லாம் மனிதர்கள் இல்லையா என்று கேட்பான். எனினும், ‘விடு ரகு’ என்ற தவிர்த்தல் இருக்குமே தவிர அவள் பேச்சில் எந்த மாற்றமுமிருக்காது.

“ஏன் ரகு சின்னக் குழந்தைகளுக்கு இத்தனைப் பாடம் வேணுமா? வீட்டில், அக்கம்பக்கத்தில் நாம எத்தனை மொழிகள் பேசுகிறோமோ அவ்வளவும் குழந்தை பேசும் எவ்வித தனித்த சிரத்தையுமின்றி. அதேபோல பள்ளியில் பேசினாலும் கற்றுக்கொள்ளும். முதலில் கம்யூனிகேட் செய்யட்டும். பேச நினைத்ததை எல்லாம் சொல்லக் கத்துக்கட்டும் என்பாள். தனக்குத் தெரிந்த பெண் பிள்ளை எட்டாம் வகுப்பில் வார்த்தைகளை உச்சரிக்கத் தெரியாமல், அர்த்தம் தெரியாமல் எழுத்துகளை அப்படி அப்படியே படம்போல் மனப்பாடம் செய்து எழுதி நூறு தொண்ணூறு என மதிப்பெண்கள் பெற்றதைக் கூறி, அறிவு வளர உதவாமல், தூண்டி விடாமல், மார்க் வாங்க வலியுறுத்துவது ஏன்..? அப்படி எதற்கு கஷ்டபடுத்தணும்? ஐந்தாம் வகுப்பு வரை அ ஆ, வாய்ப்பாடு, எ பி சி போதும். கூடவே மேப். அவ்வளவுதான். இதைப் பரீட்சை இல்லாமல் விளையாட்டாவே கற்றுக் கொடுக்க முடியும். அழகா மனனம் செய்து கொள்வார்கள். கட்டாயம் இல்லை என்பதால் மனதும் அழுத்தத்திற்கு உள்ளாகாது. ஆறிலிருந்து வாக்கியம், கிராமர், கூட்டல், கழித்தல்-ன்னு ஆரம்பிக்கலாம். மெதுவாகத் தேர்வு குறித்து அறிமுகம் கொடுத்து அவர்களையே கேள்விகள் உருவாக்கி பதில்களை அளிக்கச் செய்யலாம். அப்புறம் வழமையான முறைக்குள் போகலாம் என்று சொல்லிக்காட்டி வருந்தி இருக்கிறாள். குழந்தைமை என்று ஒன்றிருக்கிறது அதை அவர்கள் இழந்துவிடக் கூடாது. எதற்கு புத்தகப்பை, எதற்கு ஹோம்-வொர்க்? பத்து வயது தாண்டிய பிறகு இதெல்லாம் ஆரம்பிக்கலாம். பாவ மூட்டையைச் சுமப்பது போல முதுகில் ஒரு மூட்டை. அது நிறைய அச்சடிக்கப்பட்ட காகிதங்கள்… உடலைத் தூய்மைப்படுத்திக்கிட்டு உடுத்தி சாப்பிட்டு ஸ்கூலுக்கு வந்தால் போதுமே.. ஏன் குழந்தைகளுக்காக யோசிக்க மாட்டேங்கறாங்க. எல்லாக் குழந்தைகளையும் ஒன்னு போலவே நினைத்துக் கொள்கிறார்கள். ஒவ்வொரு பிள்ளையும் ஒவ்வொரு வேகத்தில் கற்றுக்கொள்ளும். சிலபேருக்கு அல்ஃபபெடிக் தெரிஞ்சிக்க வருஷமே ஆகலாம். சிலபேருக்கு இரண்டு நாட்கள். யாரும் யாருக்கும் குறைந்தவர்கள் இல்லை. ஒவ்வொரு பிள்ளையும் தனி. தனித்தனி திறமைகளை கொண்டது. இப்படி எல்லாரையும் கற்றுக்கொள்ள வைக்க ஆர்வப்படுத்த கட்டுதிட்டமும், பயமுறுத்தலும் இல்லாமல் இருக்க வேண்டும்.

பத்து வயது வரைக்கும் இந்த இம்சைகள் இல்லாமல் சந்தோஷமா கத்துக்கிட்டு கதை பாட்டு ஆட்டம்னு இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும்? ஆனால் எல்லோருக்கும் புத்தி தெளிந்த ஒருநாள் வரும் அன்று குழந்தைகளுக்குத் தேர்வு இருக்காது. பாடம் இருக்கும். அதற்கு தாமதமாகலாம் நிச்சயம் நடக்கும்” என்று சபதமேற்பவள் போல அவள் சொல்லக் கேட்கையில் எதற்கு இவ்வளவு யோசிக்கிறாள் என்று நினைத்துக் கொள்வான். தூங்குவாளா மாட்டாளா!! இவளுக்கு நான்-ஸ்டாப்பாக மனது இப்படியே ஓடிக்கொண்டிருக்கும் போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டே,

*எத்தனை மணிநேரம் தூங்குவ” என்றவனிடம் பதில் சொல்லாமல், “டாபிக் முடிச்சாச்சு” என்பாள்.

எமகாதகி! ஆர்வம் இல்லையென்பதைப் புரிந்து, தலையில் கொட்டு வைப்பது போல் க்ரிஸ்பியாக பேச்சை நிறுத்தியிருக்கிறாள் என்று எண்ணிக்கொள்வான்.

ஸ்வாதி பக்கத்தில் இருந்தாலே அவனுக்கு இனம் தெரியாத ஒரு உறுதித்தன்மை உள்ளுக்குள் வேர்பிடிக்கும். ஏனென்று தெரியாது. அத்தனை ஆத்மார்த்தமான அணைப்பை அவளைத் தவிர வேறு எங்குமே, எவரிடமுமே பெற்றதில்லை. அவன் மனைவியுடன் முதல் சந்திப்பில் கூட! மற்றவர்கள் இப்படி உணர்ந்து இருப்பார்களா அல்லது இவளே சொல்வதுபோல இவளைக் காதலித்துக் கொண்டிருக்கிறானா என்பதும் தெரியவில்லை. இவளிடம் நண்பனிடம் பேசுவது போன்ற மிக நீண்ட உரையாடலை நிகழ்த்தி இருக்கிறான் முற்றிலும் கலவி தவிர்த்து. அப்படியான உரையாடல்களை நிகழ்த்த இவளால் முடியும்.

கருணைமாக்கடல், மதர் தெரசா என்று கிண்டல் செய்து இருக்கிறான் . டாக்ஸியில் சென்று கொண்டிருந்த போது சாலையில் மயங்கி விழுந்திருந்த முகம் தெரியாத மூதாட்டி ஒருவரை அழைத்துப் போய் பல மாதங்கள் பராமரித்து வந்தாள். யாருமே இல்லை என்றாராம். உடல்நலம் தேறியபின் அந்தப் பாட்டி வீட்டிலிருந்த பணம் பொருட்களை எடுத்துக்கொண்டு போய்விட, எவ்வித எதிர்வினையும் காட்டாது அமைதியாக இருந்துவிட்டாள். செய்தி அறிந்து ஏரியா இன்ஸ்பெக்டர் கம்ப்ளைன்ட் கொடுக்கச் சொல்லியும் வேண்டாமென்றாள். கொஞ்சம் பணம்தானே என்று பிடிவாதமாகப் புகார் அளிக்க மறுத்தாள். தனியே இவனைச் சந்தித்து இருபது நிமிடங்கள் மடியில் படுத்திருந்து போனாள். அந்தப் பாட்டியைப் பற்றிய எந்தப் புகாரும் இல்லை.

காரை நெருங்கி அவனைத் திரும்பிப் பார்க்கிறாள். ஒருமுறை ஹக் செய்யலாம் போலிருந்தது. எதுவும் பேசாமல் காருக்குள் சென்று கவர் எடுக்கிறான். உள்ளே வந்து ஐம்பதாயிரம் வாங்கிக்கொண்டு அப்புறம் போனில் பேசுகிறேன் என்று இறங்கினாள். இதனூடே அவனுக்குப் பணம் திரும்ப வந்து சேருமா என்ற கவலை முகத்தில் ரேகைகளாக முளைத்து அழிந்தது. நீர்த்துளி நீருக்குள் விழுவது போல் ஓர் ஒற்றை ஒலித்துணுக்கு ஒலித்தது. போனை எடுத்துப் பார்த்தான் மெசேஜ் ஃபிரம் ஸ்வாதி என்றது. ஸ்வாதியின் பழக்கம் இது. எத்தனை ஆப்ஸ் இருந்தாலும் பழைய ஸ்டைல் டெக்ஸ்ட் மெசேஜ்தான் செய்வாள். நம்பர் லாக் ரிலீஸ் செய்து டெக்ஸ்ட் மெசேஜ் ஓப்பன் செய்தான். “டோண்ட் கெட் ஃபியர். ஐ வில் ரிடர்ன் யுவர் மணி அஸ் சூன் அஸ் பாஸிபிள்” என்றது மெசேஜ். ஒரு மாதிரியாயிருந்தது .நினைத்ததை முகத்தில் படித்து விட்டாள். எதுவும் ரிப்ளை செய்யாது மொபைலை பாக்கெட்டில் வைத்தான். எதற்கு, ஏன், இந்தப் பணம் போதுமா, இன்னும் வேண்டுமா? கால்செய்து கேட்கலாமா என்று தோன்றிய எண்ணத்தை வலுக்கட்டாயமாக நிறுத்திக் காரை எடுத்தான்.

*

அறையிலிருந்து புறப்பட்ட இருள் சரசரவென வீதி, கூரை என நிரப்பி திரும்பவந்து மேல் அழுத்தியது மூச்சுத் திணறுவது போலிருந்தது. கைகள் பிடிமானத்திற்காய் தத்தளிக்கிறது. லஷ்மி அக்கா தூரமாகத் தெரிகிறாள். அருகில் போய் பார்த்தால் காணவில்லை. வெறுமனே மஞ்சள் பச்சை இலைகள் மட்டும் அசைந்தன. என்ன மரம் அது அடியில் மண்ணோடு ஒட்டாமல் தனியே நிற்கிறது. மஞ்சள் செந்நிறமென கண்களுக்குள் ஒளி. விழி மூடிமூடித் திறக்க முயற்சித்து தோற்கிறது. டேய்.. என அம்மாவின் குரல். இவள் இங்கு எதற்கு வந்தாள்? தூறல் போடுகிறது. பிடிமானத்திற்காய் தத்தளித்த கைக்கு எதுவோ அகப்பட பிடித்து இழுக்கிறேன்.

“டேய் அப்பு எழுந்துக்காம புடவையை வச்சிக்கிட்டு என்ன பண்ணற”

கண்விழித்துப் பார்க்கிறேன். தரையிலிருந்து அம்மா நீளமாகத் தெரிகிறாள். தண்ணீரில் நனைத்து வந்த ஈரக்கையை இவன் முகத்தில் தெளித்தவாறு எழுந்துகொள்ளச் சொல்லி கை நீட்டுகிறாள்.

முன்பு இருந்த வீட்டை விட இது பெரிய வீடு. பக்கத்தில் கிரவுண்ட் இருக்கிறது. சினிமா தியேட்டர் கூட பக்கமாம். ஸ்கூலுக்கு இங்கிருந்து போக வர சீக்கிரமே சைக்கிள் வாங்கித் தருவதாக அப்பா சொன்னார். என்ன இருந்து என்ன, லஷ்மி அக்கா இந்த வீட்டுக்கு எதிர்வீட்டில் இல்லை. அக்கா முதுகில் இருக்கும் அந்தக்காயம் ஆறியிருக்குமா. எப்படிப் போனால் அக்கா வீட்டிற்குப் போகலாம்? ரொம்ப தூரமா? அப்பா சைக்கிள் வாங்கித்தந்த உடனே அக்காவைக் கூப்பிட்டு உட்கார வைத்து ஓட்ட வேண்டும். அப்பா எப்போது சைக்கிள் வாங்கித் தருவார் .

அவ்வப்போது தாத்தா கத்தியது, ஊரிலிருந்து வந்து, அன்று இரவு சாப்பிடாமல் அம்மா அழுதுகொண்டே தூங்கியது எல்லாம் பாதித் தூக்கத்தில் நினைவில் வரும். புதிதாக வந்த வீட்டிற்குப் பக்கத்தில் இருந்த கிரவுண்டில் பையன்களோடு நாடக விளையாட்டு விளையாடுகையில் ‘ஒரு தம்பிடி கிடையாது வெளியே போ’ என்று தாத்தா கேரக்டருக்கு வசனம் பேச, மற்றப் பையன்கள் எல்லாம் கிகிகி என்று சிரித்தார்கள். தம்பிடினா என்னடா என்றார்கள். அம்மாவிடம் கேட்டு, காசுடா என்று அவர்களிடம் பதில் சொன்னேன். ‘தம்பிடி, தம்பிடி, தம்பிடி’ என்று கோரஸாகக் கத்திக்கொண்டு ஓடினார்கள்.

எங்கேயும் சுற்றாமல் நேராக ஸ்கூல், வீடு என்றிருக்க வேண்டும் என்று அம்மா எப்போதும் போல் சொன்னாள். ஆனால் அக்காவைப் பார்க்க வேண்டுமே. அன்று பெரிய கிளாஸ் அக்கா, அண்ணனுக்கெல்லாம் விளையாட்டுப் போட்டி நடக்க இருந்ததால் எங்களுக்கு மதியத்திற்கு மேல் யாரும் டீச்சர் வரவில்லை. சிவனேசு புத்தகப்பையை எடுத்துக்கொண்டு நைசாகக் கிளம்பினான். அவனுடைய தாத்தா வந்து இருக்கிறாராம். கடைவீதிக்கு கூட்டிப் போவாராம். ‘நைட் வரைக்கும் சுத்துவோம்’ என்றான். எவ்வளவு நல்ல தாத்தா. ஏன் நம் தாத்தா அப்படி இல்லை. ஒரு தாத்தா போ..போ என்று சொல்லி விட்டார். இன்னொரு தாத்தா இப்போ சாமியாகிட்டார். யாருக்கும் தெரியாமல் அவன் கூடவே வெளியே வந்து பழைய வீட்டிற்குப் போனேன். இதற்கு வழியும் சிவனேசுதான் சொன்னான். அவனுக்கு எல்லாமே தெரியும்.

வெயிலில் சுற்றிவந்து வீட்டு முன்பு நின்று ‘க்கா’ என்று கத்தினேன். முன்பு நாங்கள் இருந்த வீட்டில் இருந்து ஒரு அண்ணன் எட்டிப்பார்த்து லஷ்மி அக்கா வீட்டிற்குப் போய் என்னவோ சொல்லி வந்தார். நான் நாலு வீட்டிற்கும் பொதுவான வெளிவாசலில் நின்று கொண்டிருந்தேன். அக்கா வெளியில் போயிருக்கிறதாக அவள் அம்மா வந்து சொன்னார். உள்ளே வந்து அக்கா வந்தவுடன் பார்த்துவிட்டுப் போ என்று அவர் சொல்வார் என்று நினைத்தேன் . தாகமாக இருக்கிறது. வாட்டர் பாட்டிலில் இருந்த தண்ணீரெல்லாம் தீர்ந்து போய்விட்டது. கண்களில் கண்ணீர் முட்டியது. வழியும் மறந்து போயிருந்தது. மாட்டாஸ்பத்திரி பக்கம்தான் எங்கள் வீடு. சிவனேசு சொன்னது மாதிரி கண்ணாடிக்கடை வரிசையிலேயே போய் அதே பக்கம் திரும்பி நடந்து வீட்டிற்கு வந்து அம்மாவிற்குத் தெரியாமல் கண்ணைத் துடைத்துக் கழுவிக் கொண்டேன். அடுத்த நாள் ஸ்கூலுக்குப் போகவில்லை. பாதி ராத்திரிக்கு மேல் உடம்பு கொதித்து தூக்கத்தில் உளறினதாக அம்மா பக்கத்து வீட்டில் சொல்லிக் கொண்டிருந்தாள்.

*

பைக்கில் சென்று அந்த வீட்டிற்கு முன் நிறுத்தி விசாரிக்கையில் கவனித்தான் நான்கு போர்ஷன் இரண்டாகியிருந்து. வெளியே இருந்த திண்ணை சாலை சீரமைப்பில் அடிபட்டுப் போயிருந்தது. அம்மி இருந்த இடத்தில் ரோஸ் கலர் திருகலைக் கொண்ட தண்ணீர் பைப் இருந்தது. லஷ்மி அக்காவிற்கு புளூ கலர்தான் பிடிக்கும். அதுவும் வெளிர் ஊதா என்றால் ரொம்பப் பிரியம். தேவதைக் கலரென்பாள். எப்போதும் தாவணியே கட்டியிருந்த அக்கா கார்த்திகை தீபம் அன்று வெளிர் ஊதாக்கலரில் புடவை கட்டியிருந்தாள். என்னை அழைத்துக் கொண்டு மாரியம்மன் கோவிலுக்குப் போனாள். அம்மன் சிவப்பு பட்டு உடுத்தியிருந்தாள். ஏன் அம்மன் வெளிர் ஊதாக்கலர் உடுத்துவதிலலை. அம்மனும் வெளிர் ஊதாவே உடுத்தி இருக்கலாம். அப்படி உடுத்தாததினால் அம்மனை விட அக்காதான் அழகாக இருந்தாள்.

உள்ளிருந்து யாரோ எட்டிப் பார்க்கிறார்கள். உயரமாய் பேலஸோ குர்தியில் ஒரு பெண் புருவங்களை நெளியவிட்டபடி கையில் மொபைல் போனோடு வந்தாள்.

“யாரு?”

“லஷ்மி?”

மொபைலில் அழைத்தாள் – ‘ஈஷ்வர் வெளியே வா’.

வந்த ஈஷ்வர் உயரமான பெண்ணிற்கு மேலும் உயரமாயிருந்தான். மீசையை முற்றிலும் எடுத்திருந்தான். இருவரும் சேர்ந்து நாற்பது கிலோ இருப்பார்கள் போலிருந்தது. லஷ்மி என்ற பெயரில் யாரையும் தெரியாது என்று அம்மாவிடம் கேட்டு வருவதாக உள்ளே சென்றான். பின்னாலேயே அந்தப் பெண்ணும் சென்றாள். ஐந்து நிமிடங்கள் கழித்து வந்தவன் கையில் ஒரு துண்டுச்சீட்டு.

நா வறட்சியாய் இருந்தது. தண்ணீர் குடிக்க வேண்டும். ஆனால் கேட்கத் தோன்றவில்ஸை. அழாமல் வழியில் வாங்கிக் குடித்துக் கொள்ளலாம். மெதுவாகச் சிரித்துக் கொண்டான். நன்றி சொல்லி பாலக்கரையை நான்குமுறை சுற்றிவந்து பெட்டிக்கடையில் கோல்ட் ஃபிளேக் வாங்கிவிட்டு நாலு இடத்தில் விசாரிக்கையில் தெரிந்தது. பாலக்கரையைச் சுற்றி மட்டுமே நாற்பத்து மூன்று லஷ்மி இருக்கிறார்கள். போன் நம்பர் வாங்கி வைத்துக்கொள்ளாத மடமையை, விசாரித்த புத்திசாலிகள் எல்லோரும் தவறாமல் கேள்விக்குட்படுத்தினர். அரைகுறையாகத் துண்டுச்சீட்டில் இருந்த விலாசம் அலைச்சல் கொடுத்தது. பக்கத்தில் இருந்த ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு இன்னும் இரண்டு தெருக்களில் சுற்றினான். இன்னொரு நாள் வருவோம் என்று வீட்டிற்குக் கிளம்ப வைத்தது மனதின் அயர்ச்சி.

இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் பாலக்கரைப் பகுதியில் சுற்றி வந்தான். இப்போது தெருக்கள் பழக்கமாயிருந்தது. பார்த்த இடங்களை விட்டு, பார்க்காத இடமாகப் போக ஆரம்பித்தான்.

இந்த இடத்தை எப்படி விட்டேன் என்று மெதுவாகக் கூறிக் கொள்கிறான். மெயின் ரோடுக்கு மிக அருகில், பத்தடி அகலத்தில் எப்போதோ தார்ச்சாலை போட்ட அடையாளத்தைக் காட்டியபடி மேடு பள்ளங்களுடன் ஒரு பாதை இருந்தது. சிறிது தூரம் சென்று இதுதானே என்று உறுதிப்படுத்தியபடி முன்னேறினான். அதிலிருந்து வலதுகை பக்கம் ஒரு சாலை பிரிந்தது. இடதுகை பக்கம் பாதையை அடைத்தபடி ஒரு வீட்டின் முதுகுபக்கம் தெரிந்தது. பாதையில்லை. வலதுபுறம் பிரிந்த சாலை, மேடு பள்ளங்களற்று சமதளத்தில் செப்பனிடப்பட்டு இருந்தது. மேடுபள்ளங்களில் செலுத்திய பிறகு நல்ல சாலையில் வண்டியைத் திருப்பியவுடன் வேகமெடுத்தது. நிதானப்படுத்திச் செலுத்தியபடி நினைத்துக் கொண்டான். இரண்டு சாலைகளும் வேறுவேறு வார்டின் கீழ் வந்து இருக்குமோ! நம் நாட்டிற்கு மட்டுமே உள்ள சிறப்புத் தகுதிகளில்?! இதுபோன்ற எல்லைக்கோடுகளும் ஒன்று. குற்றச்செயல்கள் குறித்த புகார்களிலும், ஒரே பாதையில் ரோடு போட்டு பாதியில் நிறுத்தப்படும் வேலைகளிலும் எல்லைகள் கண்டிப்புடன் கோடு போட்டுக் கொள்கின்றன. எல்லைகள் வகுப்பவர்களும் புளுட்டோ, யுரேனஸ் என்று போய் இதற்கெனப் படித்து வந்திருப்பார்கள் போல.. நினைத்துக் கொண்டே பைக்கைச் செலுத்தியவன் இருபுறமும் வரிசையாய் இருந்த வீடுகளைக் கவனித்துக் கொண்டே வாசலில் நின்று எவர் வருகையோ எதிர்பார்த்தபடியிருந்த ஆரஞ்ச் கலர் சுடிதார் பெண்ணிடம் விசாரித்தான். யோசிப்பாள், உம்மென்று கைநீட்டுவாள், எஸ் தட் வே என்பாள் என்ற அவனது அனுமானங்களை மாற்றி மலர்ச்சியாய் உள்ளே பார்த்து “ஹேய் அம்மு” என்று குரல் கொடுத்தாள்.

லைட் வயலட் கலரில் கையில்லாத சட்டையும் கறுப்புக்கலரில் முழங்கால் வரை ஸ்கர்ட்டும் அணிந்திருந்த அம்மு கைகளை விரித்து ஓடிவந்தது பட்டாம்பூச்சி போல இருந்தது. அவனைக் கண்டதும் முழித்து அவள் பக்கம் திரும்பியது. ‘அத்தை வீட்டுக்கு கூட்டிப்போ’ என்றாள். உடன் அவளின் மலர்ச்சி அம்முவிற்கும் தாவியது. என் பின்னாடி வாங்க என்று அதேபோல் கைகளை விரித்து ஓடி மூன்றாவது வீட்டில் நின்றது. அவனுக்குத்தான் சந்தேகமாயிருந்தது. இந்த ஆறேழு வயது பட்டாம்பூச்சி அம்முவின் அத்தைதான் நாம் தேடிவந்த லஷ்மியா என்று.. அம்மு வராமல் கைநீட்டி காட்டியிருந்தாலே போதும். ஆனால் வீடு வந்து திரும்புவதில் பட்டாம்பூச்சிக்கும் அதன் அம்மாவிற்கும் ஒரு மகிழ்வு இருந்தது தெரிந்தது. வீட்டிற்கு உள்ளே போய்வந்து என்னைப் பார்த்துச் சிரித்துவிட்டு அதன் வீட்டை நோக்கி ஓடியது.

வாசலில் நட்சத்திரக் கோலம். படிக்கட்டின் இரண்டு ஓரங்களிலும் நெளிக்கோடுகள். அந்த வீ்ட்டில் இருக்கும் வரை அக்கா கோலம் போட்டது இல்லை என்ற நினைவு அவனுக்குள் ஓடுகிறது. இடதுகை பக்கம் சிறிய பூவரச மரம். பைக்கை ஸ்டேண்டிட்டு திறந்திருந்த கதவைத் தட்டினான். உள்ளிருந்து வந்தவள் வாடிய பன்னீர் ரோஜா போன்று இருந்தாள்.

அறிமுகத்திற்கு பின் “அப்புக்குட்டி நீயா! எப்படி வளந்துட்ட” லஷ்மி அக்கா அதே கலரில், அதே வடிவத்தில், அதே புருவ தீட்டலில் வாடிப்போன பன்னீர் ரோஜாவாக நின்றிருந்தாள். காலம் ரோஜாவை வாடச் செய்திருந்தது. வயதின் முதிர்வு பயந்து பயந்துதான் அவளைத் தீண்டியிருந்தது. இளமை விடாப்பிடியாக முழுதும் உதிர மனதின்றி ஒட்டிக் கொண்டிருந்தது. உள்ளே அழைத்து உட்காரச் சொல்லிட்டு தண்ணீர் எடுத்துவரச் சென்றாள். அனிச்சையாய் முதுகின் காயத்தை அவன் கண்கள் தேடியது.

அக்காவின் அம்மா உயிருடன் இருக்கும் வரை அந்த வீட்டில் இருந்திருக்கிறாள். கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் முன்பு இந்த வீட்டிற்கு வந்திருக்கிறாள். முன்பு பக்கத்து ஹோட்டல் ஒன்றுக்கு போய்வந்ததாகக் கூறினாள். அவ்வப்போது அவளின் அக்கா கணவர் வந்து போயிருக்கிறார். இப்போது? யாரும் இல்லாமல் தனித்து இருக்கிறாளா? வீட்டைப் பார்த்தால் அப்படி ஒன்றும் தெரியவில்லை. எப்படிக் கேட்பது? கல்யாணம் செய்து கொண்டாளா? பிள்ளைகள் இருக்கின்றனவா? மனதில் கேள்விகளுடன் வீட்டைச் சுற்றுகிறது கண்கள். ஷோகேஷாக மாற்றியிருந்த செல்ஃபில் லேமினேடட் குரூப் போட்டோவில் அக்காவின் அம்மா, இரண்டு பெண் குழந்தைகள், அக்காவின் அக்கா, மொத்தமா தடியா மீசை வைத்திருந்த மாமா நின்றிருந்தனர். அக்கா இல்லை. வேறு எந்தப் போட்டோவும் தென்படவில்லை.

திரும்ப உள்ளே பிளாக் காஃபி எடுத்து வருவதாகப் போனாள். இன்னும் நினைவு வைத்திருக்கிறாள் அவன் பிளாக் காஃபி மட்டுமே குடிப்பான் என்பதை! நீண்ட நேரமாக வரவில்லை. தொல்லை செய்ய வேண்டாமென வெளியில் வந்து நின்றான். நான்கைந்து பிள்ளைகள் அந்த அம்முவுடன் அழகழகான சிரிப்போடு வந்தார்கள். ‘அத்தே’ எனக் கூக்குரலிட்டு அவனைக் கண்டுகொள்ளாது உள்ளே ஓடினார்கள். அம்மு மட்டும் தெரிந்த முகபாவனைக் காட்டிச் சிரித்தது.

அவர்களை வரவேற்று உள்ளே அமர வைத்துவிட்டு அவனிடம் காஃபி தந்து படிக்க வந்திருக்கிறார்கள் என்று கூறும் அக்கா அவனை ஆச்சர்யப்படுத்துகிறாள். இவளுக்கும் வாசிப்பிற்கும் பத்து கிலோமீட்டர் தூரம். பிறகெப்படி என்னும் அவனது முகக் கேள்விக்கு பதிலளிப்பது போல “‘எனக்கென்னத் தெரியும் அவங்களே படிச்சுக்குவாங்க” என்னும் அக்காவின் முகத்தில் சந்தோஷம் இழையோடுகிறது.

*

தினமும் ஹமாம் சோப்பு மட்டுமே பயன்படுத்தி இருந்தாலும் என்னவோ லக்ஷ்மி அக்காவிற்கு அவள் வீட்டிற்கு சூடம் மடித்து வந்த குமுதம் புத்தகத்தில் ஒரு பக்கத்திற்கு வெளிர் ரோஸில் வந்திருந்த லக்ஸ் சோப்பின் விளம்பரத்தைப் பார்த்ததிலிருந்து அதைப்போட்டுக் குளித்துப் பார்க்க வேண்டும் என்ற தீரா ஆசை வந்தது. அவள் அம்மா திட்டுவாளோ என்னமோ தொடர்ந்து நாலு நாளைப் போல என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.

எந்தப் புத்தகம் பார்த்தாலும் லக்ஸ் விளம்பரத்தைத் தேடிப்பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த வாசம் எப்படி இருக்கும் என்று அக்காவும் நானும் பேசிக் கொண்டிருந்திருக்கிறோம். அப்படிப் பேசிக் கொண்டிருக்கையில், அக்காவைப் பார்த்தால் பன்னீர் ரோஜா மேல் சின்னதாகக் காற்று வீசுவது போல் இருக்கும்.. யாருக்கும் தெரியாமல் வாங்கி வந்த சோப்பை முகர்ந்து பார்த்துக்கொண்டே எடுத்துச்சென்று குளித்துவிட்டு வந்து என்னவோ ஹமாம் வாசம்தான் பிடித்து செட்டாகி விட்டதாகக் கூறினாள்.

கண்ணாடி வளையல் வாங்குவதாக இருந்தாலும் பத்து இருபது வளையலாவது பார்த்து வாங்கக்கூடியவள் இப்படி சோப்பைக் குளித்துப் பார்த்து வேண்டாம் என்று சொல்வதில் ஆச்சரியம் ஏதுமில்லை. அப்படி அவளுக்குப் பிடித்த ஹேர்-பின் வாங்க ஒருநாள் ஸ்கூல் விட்டுவந்த கையோடு கடை கடையாய் ஏறி இறங்கியதிலும் கடைசி பீரியட் பி.டி என்பதாலும் கால் வலித்தது. “உங்க அம்மா எங்கூட வெளியே விடறதே பெரிசு இப்படிப் பாதில போனா திரும்ப இதுக்காக வர முடியாது. பேசாம வா” என்று இழுத்துக் கொண்டு இன்னும் நான்கு கடைகள் ஏறி இறங்கினாள்.

அவளுடன் நடக்கப் பிடித்திருந்தாலும் கால்வலியில் எதற்கு இப்படி இத்தனைக் கடை ஏறி இறங்கணும் அம்மா இப்படி அலைகழிக்க மாட்டாளே.. ஒரு கடையின் வாசல் படியில் உட்கார்ந்து கொண்டு கேட்டதற்கு சரிவா என வீட்டிற்கு உம்மென்று நடக்க ஆரம்பித்தாள். ஒன்றுமே சொல்லாமல் நடக்கிறாளே என முகத்தைப் பார்க்க, “இதெல்லாமாச்சும் பிடிச்ச மாறி இருக்கட்டுமேனுதான்டா’’ என்று கூறிவிட்டுக் குனிந்தபடியே நடந்து கொண்டிருந்தாள். அக்கா அழுது நான் பார்த்ததே இல்லை. ஆனால் அழாமலேயே அழுவது போல அவள் முகம் அப்படி இருந்தது எனக்குப் பிடிக்கவில்லை.

அம்மா அழுது பார்த்திருக்கிறேன். அக்கா மட்டும் அழவே மாட்டாள். நான் மார்க் கம்மியாக வாங்கியதற்காக அம்மா திட்டித் தீர்த்து வைக்க, அழுத என்னைப் பார்த்துச் சிரித்தாள். இரண்டு நாட்கள் அவள் கண்ணில் படாமலேயே இருந்தேன். அப்புறம்தான் சொன்னாள் இது எல்லாம் ஒன்றுமே இல்லையாம். திட்டும் போது மட்டும் அவங்க முன்னாடி தலைகுனிஞ்சு அமைதியாக இருந்து விட்டு, திட்டி முடித்த பிறகு நைசாக அந்த இடத்தை விட்டு வந்துவிட வேண்டுமாம். தேவையில்லாமல் எதற்கு அழ வேண்டும் என்றாள். அதற்குப் பிறகு நான் யார் திட்டினாலும் அப்படித்தான் செய்தேன். அழவே மாட்டேன். அம்மா திட்டும்போது ஒரு தடவையும் எங்கள் கிளாஸ் ஸார் வராது இருக்கும் போது பேசி விளையாடினேன் என்று பக்கத்து கிளாஸ் டீச்சர் திட்டும்போது ஒரு தடவையும் சிரிப்புகூட வந்தது.

ஒருநாள் தாத்தா இறந்ததாகச் செய்தி எடுத்து வந்திருந்தவர் கூடவே சொத்து எதுவும் அப்பாவிற்கு இல்லை எனவும், எல்லாம் அவர் உயிருடன் இருந்தபோதே எழுதி வாங்கி விட்டார்கள் எனவும் கூறினார். கேட்டுக் கொண்டிருந்து விட்டு எப்போதும் போல் அப்பா வேலைக்குக் கிளம்பினார். அம்மாதான் வந்தவருக்கு எலுமிச்சை சாறு பிழிந்து சர்க்கரை போட்டுக் கொடுத்தாள். நான்தான் அவருக்கு எடுத்துப்போய் கொடுத்தேன். ஜூஸில் ரெண்டு சாமி எறும்பு மிதந்து கொண்டிருந்தது. அவர் எதையும் பார்க்காமல் அப்படியே எடுத்து ஒரே மடக்கில் வாயில் கவிழ்த்துக்கொண்டு போய்விட்டார். வாங்கி டம்பளரைப் பார்த்தேன் ஓரமாய் ஒரு எலுமிச்சை விதை இருந்தது. சாமி எறும்பு இரண்டையும் காணவில்லை. அறிவியல் ஸார் எறும்பு சாப்பிட்டால் கண் பார்வை தெரியுமெனில் எறும்பு பண்ணையை வளர்த்து பாட்டிலில் எறும்புகளை அடைத்து விற்றிருப்பார்கள். ஊரில் கண்ணாஸ்பத்திரி எதுவும் இருக்காது என்றதை நினைத்துக் கொண்டேன். அரிந்து மீதி வைத்திருந்த பாதி எலுமிச்சம் பழத்தில் சாறு எடுத்து அப்பா வந்ததும் கொடுப்பாள். அப்போ எனக்குக் கிடையாதா? ஆனால், அப்பா வந்ததும் அவருக்கு சுக்கு காப்பியும் எனக்கு ஜூஸூம் கிடைத்தது. ஆப்பிள் ஜூஸெல்லாம் குடித்தால் கலரா அழகாகிடுவ என்று சிவனேசு கூறினான். அம்மா கணக்கு நோட்டுகூட கேட்டவுடன் புதிதாக வாங்கித் தரவில்லை. எப்போது ஆப்பிள் ஜூஸ் போட்டுக் கொடுப்பாளோ..? கேட்டதற்கு அப்பா பாவம் கஷ்டப்பட்டு வேலை செய்கிறார், அப்புக்குட்டி பெரியவனானதும் தினமும் தருவேன் என்கிறாள். இந்த அம்மாவிற்கு ஒன்றுமே தெரியவில்லை. நான் பெரியவனானதும் நானே வாங்கிக்கொள்ள மாட்டேனா?

கணக்கு சார் வீட்டுப்பாடத்திற்கு என்று தனிநோட்டு போடச் சொன்னார். அம்மா ஒரே நோட்டை நடுவில் ஒரு பேப்பரை முக்கோணமாக்கி ரெண்டாகப் பிரித்து வகுப்பு பாடம், வீட்டுப் பாடம் என்று எழுதித் தந்தாள். சிவனேசு எல்லா நோட்டும் புதிதாக தனித்தனியாக வைத்திருப்பான். கண்ணாடி ஸ்கேல் கூட வைத்திருந்தான். வாங்கி இருபது கோடு போட்டேன் நேர் நேராக விழுந்தது. அப்பாவிடம் அழுது புரண்டாவது எப்படியாவது ஒரு கண்ணாடி அடி-ஸ்கேல் வாங்கிக் கோடு போட வேண்டும். பென்சில் சீவற மிஷினும் வாங்க வேண்டும். நெளிநெளியா சுருண்டு சுருண்டு சீவல் வருவது பார்க்கவே அழகாக இருக்கும். லஷ்மி அக்காவிடம் ஒரு மை-பென்சில் இருக்கிறது. பிளேடு வைத்து பெஞ்சில் சாய்த்துப் பிடித்துச் சீவுவாள். கண்ணாடி பார்த்து புருவம் வரைந்து கொள்கிற பென்சில் அது. அதில் எனக்கு மீசை வரைந்து கண்ணாடியில் காண்பித்து இருக்கிறாள்.

ஒருநாள் ராத்திரி பதினோரு மணிக்கு அப்பா வேலை செய்த மேஸ்திரி வீட்டில் இருந்து நான்கைந்து பேர் வந்து அப்பாவைக் கூட்டிப் போனார்கள். திரும்ப அப்பா வரும்வரை அம்மா தூங்கவே இல்லை. உட்கார்ந்தே இருந்தாள். உட்கார்ந்து கொண்டே கொஞ்ச நேரம் தூங்கி, பிறகு பாயில் படுத்துத் தூங்கினேன். விடிந்து அம்மா காலையில் எதுவும் சமைக்காமல், மதியம் சமைத்ததால் ஸ்கூலுக்கு போகவில்லை. அப்பா வேலைக்குப் போன வீட்டில் நகை காணாமல் போய் விட்டதாம் அதனால் அப்பாவை விசாரிக்க கூப்பிட்டு போனதாக அம்மா சொன்னாள். அப்பாதான் எடுக்கவேயில்லையே என்றேன்.

“இல்லாதவங்கனா அப்படித்தான் “என்றாள்.

திரும்பவும் புதுவீடு போனோம் இந்த முறை ரொம்ப தூரம். புது ஊரு, புதுவீடு. அம்மா எவ்வளவோ சொல்லியும் அப்பா பிடிவாதமாக வேறு ஊருக்குப் போக வேண்டும் என்று வண்டி கூப்பிட்டு வந்து விட்டார். குட்டி லாரி அது. மேலே சாமான்களுடன் உட்கார்ந்து போவதற்கு ஜாலியாக இருந்தது. அம்மாதான் உம்மென்று வந்தாள். மேஸ்திரி வீட்டு நகை மூன்றாவது நாள் அவர் வீட்டு பீரோ சந்திலேயே கிடைத்து விட்டதாகச் சேதி வந்தது என அப்பா சொன்னதும்தான் அம்மா இயல்பானாள். இல்லை என்றால் நகையைத் தூக்கிக்கொண்டு போவதாகப் பேசிக் கொள்வார்களாம்.

அக்காவிடம் சொல்லிவிட்டு வரலாம். அம்மா விடுவாளா? அந்த வழியாகத்தான் வண்டி போகிறது. இன்னும் ஒரு சந்து இருக்கிறது உள்ளே போய் இடது கைப்பக்கம் திரும்பினால் வீடு. எதுவும் வாங்க வேண்டும் என்றால் எங்கள் வண்டி போகும் ரோட்டுப்பக்கம் தான் வரவேண்டும். ஏதேனும் வாங்குவதற்கு கடைக்கு ஏதும் வருகிறாளா என்று பார்த்துக்கொண்டே வந்தேன். வந்தால், பார்த்தவுடன் எப்படிக் கத்தி சத்தமாகக் கூப்பிட வேண்டும் என வாய்க்குள் சொல்லிப் பார்த்தேன். இப்பொழுதுதான் இந்த வண்டி வேகமாகப் போக வேண்டுமா, திரும்பிப் பார்த்துக்கொண்டே வந்ததில் கழுத்து வலித்தது .

*

ஊரை விட்டுப் போனது தெரியாதென்றாள். கழுத்தை தடவிப் பார்த்துக் கொண்டான். அதற்குப் பிறகு இரண்டு குடும்பங்கள் வசித்து விட்டன. இரண்டாவதாக வந்த குடும்பம்தான் நீண்ட காலமாக இருந்திருக்கிறது. அவனிடம் பேசியது போல யாரிடமும் பழகவில்லை என்றாள். அவன் வீடு காலி செய்து இரண்டு மாதங்கள் வரை யாரும் வரவில்லையாம். காலியான வீட்டைப் பார்க்கையில் அவன் சுவரில் வரைந்து வைத்திருந்த படங்களைப் பார்த்து அக்காவும் அவள் அம்மாவும் சிரித்திருக்கிறார்கள். ‘அவ்வளவு பெரிய பல்லியாடா வரைவ!’

அவன் வீட்டிற்கு வந்து அவள் அம்மாவைப் பார்த்து தண்ணீர் கூட குடிக்காமல் திரும்பியது தெரிந்திருக்கவில்லை .

அவள் அம்மா இறந்தவுடன் சேமிப்பில் இருந்த பணம், நகை, இன்ஷூரன்ஸ் பணம் எல்லாவற்றையும் வைத்து இந்த வீட்டை ஒத்திக்கு எடுத்து மிச்சமீதியை வங்கியில் போட்டு இருக்கிறாள். பின்வந்த நாட்களில் வங்கியின் இருப்பு சிறிது உயர, வட்டியை செலவுசெய்து கொள்கிறாள். அவள் அக்காவின் மூத்தப் பெண்ணிற்கு திருமணமாகிக் குழந்தைகள் உள்ளனர். அவள் கணவனுக்கு இந்தப்பக்கம் தொழில் அமைவது போல இருக்கிறதாம். எல்லோரும் சேர்ந்து இருந்து கொள்ளலாம் என்று முடிவாகி இருக்கிறது. அக்கம் பக்கம் இருக்கும் பிள்ளைகள் எல்லாம் மாலைநேரத்தில் இரண்டு மணிநேரம் இங்கு வந்து படித்து, அவரவர் ஸ்கூல் ஹோம்-வொர்க் செய்துவிட்டுப் போகிறார்கள். விடுமுறை நாட்களில் அவர்களுக்கு இவள் பின்னல் போட்டு விடுவது, மெஹந்தி இடுவது, விளையாட்டுகள் கற்றுக்கொடுப்பது என்றிருக்கிறாள். அவர்களும் கிண்டர் ஜாயிலிருந்து கடலை மிட்டாய் வரை பகிர்ந்து கொடுக்கிறார்கள். நான்கைந்து நாள் கழித்து வருகிறேன் என்று அக்காவிடம் சொல்லி விடைபெற்றான். “எங்கே அன்பு இருக்கிறதோ அங்கே வாழ்க்கை இருக்கிறது” காந்தி சொன்னதாகப் படித்தது அவன் நினைவிற்கு வருகிறது.

*

ஐம்பதாயிரம் திருப்பித் தரும் முன்னரே அடுத்த ஐம்பதாயிரம் வாங்கினாள் ஸ்வாதி. என்னதான் நடக்கிறது என்று அறியும் ஆவல் அவனுக்கு அதிகரித்து இருந்தது. நேரில் சந்திக்க அழைப்பு விடுத்தான். வந்தாள். உடலில் ஒரு களைப்பும் முகத்தில் ஒளியும் தெரிந்தது. இந்த முறை கறாராக காசை வாங்கினாள். இவனுடைய கடனை விரைவில் அடைக்க இருப்பதாகக் கூறினாள். இந்தக் கேள்விக்கேனும் பதில் தெரிந்தாக வேண்டும். என்னிடம் இப்படிக் காசை வாங்கியதே இல்லையே ஏன் என்று கேட்கும் அவனை ஒருமுறை பார்த்து, வெளியேறுவதற்காக எடுத்த ஹேண்ட்-பேகை கட்டிலில் வைத்துவிட்டு இரு கைகளையும் பிடித்து எதிரில் அமர வைக்கிறாள். ஆளுக்கொரு குஷனில் எதிரெதிரில் அமர்ந்து இருக்கிறார்கள் சிந்தனை மட்டும் இருபக்கமும் ஓடிக் கொண்டிருக்கிறது.

ஐந்து நிமிடங்கள் கழித்து பொதுவான எல்லா பிரச்சினைகளுக்கும் இரண்டே தீர்வுதான். ஒன்று அதனை விட்டு ஒதுங்கிப் போவது. இன்னொன்று எதிர்கொள்வது என்றாள். என்ன சொல்ல வருகிறாள் என்று புரியாமல் பார்க்கிறான். இந்த நாடு, சூழல், சில சகிக்க முடியாதச் செயல்கள் பற்றி மூன்று மாதங்களுக்கு முன்பு தன்னைச் சந்திக்க வந்தவரிடம் வாக்குவாதம் செய்திருக்கிறாள். இவளின் அக்கறையும் கவலையும் கண்டு அவர் நண்பராகியிருக்கிறார். நிறையப் பேசியிருக்கிறார்கள், பையனுக்கு விடுமுறை விட்டிருந்ததைப் பயன்படுத்தி அவருடன் வெஸ்ட் பெங்கால் சென்று வந்ததை, அங்கிருக்கும் சில இயக்கத்தினரைச் சந்தித்ததை எல்லாம் கூறிக்கொண்டிருந்தாள். பின்னர் விடாமல் யோசித்ததில் தனக்குத்தானே சில டெஸ்ட்களை வைத்துப் பார்த்துக் கொண்டதைக் கூறி “என்ன நினைக்கிற?” என்று கண்களுக்கு நேராகக் கண்களை வைத்துக் கேட்டாள்.

கதை கேட்பவனைப் போல் ஆரம்பத்தில் உட்கார்ந்து இருந்தவன் அவள் பேசப்பேச த்ரில்லர் மூவி பார்ப்பவனாக மாறி திகைத்து, திகைத்து கேட்டுக் கொண்டிருந்தான். இந்த நேரத்தில் இவள் கேள்வி எழுப்பவும் பதிலுக்கு, “என்ன நினைக்கட்டும்” என்றான். மயிலின் இறகைப் பிடுங்குவது நமக்குப் பிடிக்காது. ஏதாவது செய்யணும் என்ற எண்ணத்தை என்னுடன் வந்தவரிடம் கூறினேன் என்றாள். அவருக்கும் அதே எண்ணமிருக்க, நானும் அவரும் சேர்ந்து ‘இயன்றதைச் செய்வோம்’ என்று ஒரு அமைப்பு உருவாக்கினோம். இப்போது ஆறு பேர் இருக்கிறோம்.

பேப்பர், நியூஸ் சேனல் என்று மட்டும் இல்லை, ஏதேனும் பாதிப்புகள் குறித்து சக மனிதர்கள் மூலம் கேள்விப்பட்டாலும் நேரில் சென்று உண்மை அறிந்து அதற்கேற்ப எங்களால் முடிந்த உதவிகளைச் செய்கிறோம். அரசு அதிகாரத்திற்கு எடுத்துச் செல்கிறோம். ‘அண்டர் லைன் தட் வேர்ட் – அகிம்சை வழியில்’ என்றவள், எஸ் எல்லாவற்றிற்கும் பணம் முக்கியம் என்று கூறி கண்ணடித்துச் சிரிக்கிறாள். சட்டென பன்னீர் ரோஜா ஒன்று கன்னத்தில் வந்து உரசுவது போலிருக்கிறது.

இந்தப் பெண் மனதில் இவ்வளவு பெரிய எண்ணங்களை வளர்த்துக்கொண்டு வழி கிடைக்காமல் தடுமாறி இருந்திருக்கிறாள். அவனிடம் செய்தித்தாள் செய்திகளை, சிந்தனைகளை என்று பேசும்போது எல்லாம் ஏனோதானோவென்று கேட்டுக் கொண்டிருந்தான். பணம் சம்பாதிக்கும், சேமிக்கும் வழியைத் தவிர்த்து எதையுமே ஒரு பொருட்டாகக் கண்டோ கேட்டோ லயித்ததில்லை. அதனாலேயே இந்த விவாத முன்னெடுப்பு, ஆற்றாமை, நியாய அநியாயங்கள், அட்டூழியங்கள் என்று எதையும் கண்டுகொண்டதில்லை. இவளானால் என்ன செய்வது, ஏது செய்வது என்ற ஆதங்கத்தில் வெஸ்ட் பெங்கால் வரை சென்று அவதானித்து, தெரிவு செய்து வாமன அவதாரம் போல உசந்துட்டா என்று மனதில் நினைத்துக்கொண்டே ‘வாமனீ ‘ என்கிறான். அவளோ இது அணில் செய்ததாகச் சொல்கிறார்களே அதையும் விட சிறிய முயற்சி அவ்வளவுதான் என்று கூறி, மகன் வளர்ந்து விட்டால் ஹாஸ்டலில் சேர்த்துவிட்டு இன்னும் கொஞ்சம் அதிகமாக முயற்சி செய்யலாம் என்கிறாள்.

*

பத்து பதினைந்து முறை சென்றிருப்பான். அதில் நான்கைந்து முறை குழந்தைகள் இருந்த நேரமாகையால் அவர்களும் நட்பாகினர். ‘பைக் அங்கிள்’. இப்போது மூன்று வாரம் ஆயிற்று இன்னும் போகவில்லை. வேலை விஷயமாக வெளியூர் போய் வந்ததில் இந்தத் தாமதம். வீட்டிற்குள் நுழையும் முன்பே புதுப்புதுக் குரல்கள் ஒலித்தன. உள்ளே ஹாலில் லைட்டாக அக்காவின் ஜாடையோடு ஒரு பெண் நின்றிருந்தாள். இவள்தான் அவள் சொன்ன பெண்ணாக இருக்க வேண்டும். பூக்கள் போட்ட உள்ளங்கை நீள கோலமாவு உருளை வைத்து பத்து, எட்டு வயதுகளில் இரு பெண் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்கள் பேசி விளையாடிக் கொண்டிருப்பதிலிருந்து அந்த உருளையை இப்போதுதான் முதன்முறையாகப் பார்க்கிறார்கள் என்பது தெரிந்தது. அக்கா சமையலறையில் இருந்தாள். அவன் வந்தச் செய்தியை அந்தப் பெண் எடுத்துச் சென்றதும் எட்டிப்பார்த்து ‘பிளாக் காஃபி?’ எனக்கேட்டு பதிலுக்கு காத்திராது தயாரித்து எடுத்து வந்தாள். ஏற்பாட்டின்படி அந்தப் பெண் குடும்பம் இங்கு வந்துவிட்டார்களோ என்று மகிழ்ச்சியுடன் மெல்லியக் குரலில் அக்காவிடம் கேட்டான். அதுதான் பேசிக் கொண்டிருக்கிறோம் என்றாள். இந்தப் பெண்ணிற்கு பெயர் கூட சுஜாவோ தேஜாவோ, ஸ்கார்ஃப் பின்னி அந்தப் பின்னலிலேயே இந்த சுஜா அல்லது தேஜா பெயர் எழுத நிறைய நேரம் முயற்சித்து எழுதி அனுப்பி இருக்கிறாள் அக்கா. நடக்கும் பொம்மை, டூத்-பிரஷ், குட்மார்னிங் சொல்லும் கடிகாரம், ரோபோ நாய் என எதெதுவோ வாங்கிவைத்து அனுப்புவாள். ஒருமுறை ஊருக்குச் சென்று இந்தப் பெண் வரைந்திருந்த கூரை வீடு, யானை என்று நினைத்து வரைந்திருந்த பல்லி இரண்டையும் எடுத்து வந்து ஃபிரேம் செய்து வீட்டில் மாட்டினாள். பேங்க் டெபாசிட்டில் முதிர்ந்த தொகையில் ஒரு பகுதியை எடுத்து போன மாதம் அளித்ததாகக் கூறினாள். அந்தப் பெண் எதுவோ ஆரம்பித்து அவனைப் பார்த்துவிட்டு முழித்துக் கொண்டு நிற்க, “அப்பு நம்ம வீட்டு மனுஷன்தான்” என்று கூறி பேசுமாறு சைகை செய்கிறாள். அவன் ஒரு நண்பனைப் பார்க்க வேண்டுமென பைக்கை எடுத்துக்கொண்டு பெட்டிக்கடைக்குச் சென்றான்.

ஒன்று இரண்டு மூன்று நான்காவது தம்மில் சிகரெட்டை தூக்கி எறிந்துவிட்டு பைக்கில் ஏறி வேகத்தை முப்பதில் குறைத்து இலக்கில்லாமல் போய்க் கொண்டிருந்தான். “ஒத்த தம்பிடி கிடையாது” என்ற தாத்தாவின் வார்த்தை திரும்பவும் அவன் நினைவில் மோதியது. எத்தனை முயற்சித்தும் நிறுத்த முடியவில்லை. எங்கேயாவது நிழலாக அமர்ந்தால் தேவலை என்று நினைத்தான். பூங்கா ஒன்று கண்களில் தட்டுப்பட, ஒன்றிரண்டு குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். மஞ்சள் கலர் பூக்களாய் பூத்துக் கொண்டிருந்த மரத்தின் அடியில் இருந்த சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்தான். அவ்வப்போது வீசும் காற்றுக்கு ஒன்றிரண்டு மஞ்சள் மலர்கள் மேல் விழுவது நன்றாக இருந்தது. ஹீரோ ஃபீல். எல்லோருக்கும் அப்பாதானே ஹீரோ. அப்படி பெரிய ப்ரியத்திற்குரிய பிம்பம் “ஒத்த தம்பிடி கூட கிடையாது” என்ற தாத்தா வார்த்தைக்குப் பிறகு அப்படித் தலைகுனிந்து நடந்து வந்ததை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அன்று குனிந்த தலை நிமிர வெகு காலமாயிற்று.

எல்லாவற்றுக்கும் காரணம் பணம் என ஆழமாய் மனதில் பதிய வைக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறின. பண்டிகைக் காலங்களிலும் யூனிஃபார்மே புது-ட்ரெஸ், திருட்டுப்பழி, அலட்சிய ஏவல், அரிதாகப் பள்ளியில் அழைத்துச் செல்லும் திரைப்படம், பிக்னிக், டூர் எல்லாவற்றிற்கும் போகாது சாக்குப்போக்காக வரவழைக்கப்பட்ட ஃபீவர் லீவ் லெட்டர், செருப்பு இல்லாத கால், சாமி படம் கூட பார்க்க முடியாத பட்ஜெட், பிடித்த உணவும் நினைத்த படிப்பும் கிடைக்காத பதின்மம், தாத்தா மட்டும் அன்று உதவியிருந்தால் எல்லாமே மாறிப்போயிருக்கும் என்ற எண்ணம் அவனுக்கு வலுத்துப் போனது. போனவாரம் ஷாப்பிங் மாலில் சந்தித்த சித்தப்பாவின் சகலை சொன்னார். தாத்தா கடைசி காலத்தில் அப்பாவைப் பார்க்க ஆசைப்பட்டதாகவும் சித்தப்பாவின் மேல் எழுதி வைத்திருக்கும் சொத்தில் “அவன் பங்க கொடுத்திட்ரா” என்று சொன்னதாகவும். சிரிப்புதான் வந்தது.

எல்லாம் நினைத்துப் பார்த்தால் சிறிய விஷயமாக இருக்கிறது. இலகுவாகக் கடந்து இருக்கலாம். மனதை இறுக்கமாக்கி பணம் பணம் என்று அலைந்து தீவிரமாகச் சம்பாதிக்க ஆரம்பித்து பணம் தவிர எல்லாமும் இரண்டாம் பட்சமானது. நினைவுச் சுழலில் ஆழ்ந்தவன் அந்தப் பக்கத்து மசூதியின் தொழுகைச் சத்தம் கேட்டு நேரமாகிக் கொண்டிருக்கிறதை உணர்ந்தவனாய் லஷ்மி அக்காவைப் பார்த்துவிட்டுக் கிளம்புவோம் என எழுந்து கொண்டான்.

வந்த வழியே திரும்பி வருகையில் பல வருடங்களுக்கு முன் சிவனேசு அக்கா வீட்டிற்கு வழி சொன்னதை நினைத்துப் பார்க்கிறான். அவ்வளவு சிறிய வயதில் அழகாக மேப் போடுவது போல் வழிசொல்லி அனுப்பினான். அவரவருக்கான வழி இங்கேயேதான் இருக்கிறது. தேடிப்பிடித்து, தேடாமல் கிடைத்ததை என்று எப்படியெப்படியோ நடக்கிறோம்.

வீட்டிற்கு வந்து பார்த்தால் லஷ்மி அக்கா முகம் குழப்பமாக இருக்கிறது. அந்தப் பெண் குழந்தைகளுடன் அறையில் தூங்குகிறாள் என்றாள். இந்த நிலையில் என்ன பேசிவிட முடியும். சரி போய் வருகிறேன் என்றேன். அந்தப் பெண்ணின் அறைக்குச் சென்று சொல்லிவிட்டு வந்து, வெளிக்கதவை சத்தமின்றி வெறுமனே சாற்றிய பிறகு என்னுடன் வந்தாள். பைக் ஓட்ட வேண்டாம், தள்ளிக்கொண்டு வா என்று உடன் நடந்தாள்.

“கோவில் வரைக்கும் வரேன் அப்பு” மாறுபட்ட வேகம் ஒவ்வொருவரின் நடைக்கும், அத்தகைய மாறுபாட்டை மட்டுப்படுத்தி அல்லது வேகப்படுத்தி, ஒரே வேக அளவினதாக்கி இணைந்து பிடித்தவருடன் நடக்கையில் கிடைக்கும் வசதியான இருப்பு ஒருவகை மகிழ்ச்சி. அதுவே லஷ்மி அக்காவுடன் என்கையில் மகிழ்ச்சியுடன் அவன் மனதைக் குழந்தையாக்கியது அந்த நடை. அவளது குழப்ப முகத்தைப் பார்த்துக்கொண்டே எப்போது அந்தப் பெண்ணின் குடும்பம் இங்கு வர இருக்கிறார்கள் எனக் கேட்டான். அதுதான் சொல்ல வருகிறேன்.. வந்து கோவில் உள்ளே கொஞ்சம் உட்காரெனக் கூறினாள். வரசித்தி விநாயகர் கோவில் என்று போர்ட் இருந்தாலும் நவக்கிரகங்களும் ஸ்தாபித்திருந்தார்கள். அவன் படிக்கட்டில் உட்கார்ந்து கொள்ள, அக்கா நவக்கிரகங்களை வேகமாய் ஒன்பது சுற்று சுற்றி விழுந்து வணங்கி விட்டு வந்து படிக்கட்டில் உட்கார்ந்து கொண்டாள்.

“ஒருவரின் காலடியில் விழுவதை விட எழுந்து நின்று உயிரை விடுவது எவ்வளவோ மேல்” என சே குவேரா சொன்னதை அக்காவிடம் சொல்லலாமா வேண்டாமா என்று நினைத்து முடிவாகச் சொல்வோமெனச் சொல்லி விடுகிறான். கேட்டதும் சீரியஸான முகபாவனைக்குப் போனவள் சில நிமிடங்களுக்குப் பிறகு “அது யாரு வீராவா.. சரியாத்தான் சொல்லியிருக்காரில்ல?” என்று கேள்வி கேட்டாள். புரிந்தால் சரி என்று நினைத்துக் கொண்டான். காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவதைப் பற்றி அவர் சொல்லவில்லையே எனக் கேட்டுக்கொண்டாள். பகடி செய்கிறாளாம்.

அக்காவின் உறவுப்பெண், தனது கணவனுக்கு இந்த ஊரில் இருப்பதைக் காட்டிலும் இருநூறு கிலோமீட்டர் தள்ளி இருக்கும் ஊரில் தொழில் வாய்ப்பு, வசதி இங்கு வந்தால் வருவதைக் காட்டிலும் அதிகமாக இருப்பதாகவும் அதனால் அவ்வப்போது வந்து போவதாகவும் எடுத்துச் சொல்லியிருக்கிறது. உறுதியில்லாத ஒன்றை வைத்து அவ்வளவு தூரம் போவானேன் என்றிருக்கிறாள் அக்கா. இங்கு இருந்தால் பேங்க் வட்டி உங்களுக்குதானே அது அந்தக்கூடுதல் வருவாயை ஈடுகட்டும் என்று வாதாடி கடைசியில் கெஞ்சி இருக்கிறாள் லஷ்மி அக்கா. அந்தப் பெண், ‘போனால் போகிறதென்று’ நாங்கள் எல்லாம் வேறு ஊருக்கே போகிறோம் ஆனால் அவளது பிள்ளைகளின் பள்ளிக்கட்டணத்தை மட்டும்தான் வந்து வாங்கிப் போவதாகக் கூறியிருக்கிறது. இப்போது கோவிலுக்குப் போய் வருவதாகக் கூறியவுடன், அரைமணி நேரத்தில் தனக்கு டாக்ஸி வந்துவிடும் கிளம்புகிறோம் மெதுவா வாங்க என்றதாம். அப்படி என்றால் கோவிலுக்கு அப்புறம் போய்க்கொள்கிறேன் என்று கூடவே இருக்கும் இயல்புதான் அக்காவிற்கு. இன்று என்னவோ.. சரி கதவைச் சும்மா சாத்தி தாழிட்டு விட்டு பத்திரமாகப் போங்க என்று கூறி மேற்கொண்டு என்ன பேசுவது என்று தெரியாமல் குழம்பிப்போய் கோவிலுக்கு நேரமாயிற்று என்று அவனுடன் வந்து விட்டாள். அதற்குதான் சேகுவேரா வரியைக் கூறினால் வீராவா என்கிறாள்.

*

அவனுக்கு வேலை நிமித்தம் வர இருக்கும் ட்ரான்ஸ்ஃபரை நிறுத்தி வைக்க எடுத்த முயற்சி பலனளிக்காமல் போனது. இந்த முறை வேறு மாநிலம். இன்று குழந்தைகள் வரும்நேரம் உத்தேசித்து இனிப்புகளும் அக்காவிற்கு ஒற்றை நபர் அமரும் மூங்கில் ஊஞ்சலும் வாங்கிக்கொண்டு சென்றான். அக்காவின் ஊஞ்சலாசை என்பது சினிமாக்களில் கண்டு, ஆரம்பமாகி, பரவசமாக, பூதாகரமாக மனதை ஆக்ரமித்திருந்த ஒன்று. அப்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த படத்தின் நாயகி மூங்கில் ஊஞ்சலில் உட்கார்ந்து இருக்கும் போது பின்னால் மறைந்து வந்து கதாநாயகன் ஒரு பொம்மையை மடியில் தவழ விடுவான். அவள் ஷாக்காகிப் பின்னர் சிரித்து ஸ்லோ-மோஷனில் ஊஞ்சலிலேயே திரும்புவாள். இந்த மிகச்சாதாரண காட்சியை அக்கா விவரிக்கையில் அது ஊஞ்சல் இல்லை. சொர்க்கம்! என்ன ஒரு துரதிருஷ்டம் இன்றுவரை அக்காவைத் தாங்கிக்கொள்ள எந்த ஊஞ்சலும் கொடுத்து வைக்கவில்லை என்பதை அவளின் பேச்சினூடாக அறிந்துகொண்டு அவள் வீட்டில் இடமும் பார்த்துவிட்டு வாங்கி வந்திருக்கிறான்.

வாடிய பன்னீர் ரோஜா சிரிக்கும் போது ஃபிரஷ் பன்னீர் ரோஜாவாவதை உணர்ந்தான். இன்று ரோஜாவில் பனித்துளி போல வெட்கம் வேறு துளிர்த்துக் கிடந்தது. ஒரு ஊஞ்சல் இத்தனையும் நடத்தி வீட்டின் ஒரு இடத்தில் இடம் பிடித்தது. இத்தனை நாட்களாக ஊஞ்சலும் அக்காவும் எங்கெங்கோ தனித்திருந்தனர். பிறகு சேர்ந்து இருக்கும் பொழுதைக் கலைக்காது, சிறிதுநேரம் கழித்து வருவதாக வெளியேறினான் .

சிகரெட் பிடிக்கும் மனநிலை சுத்தமாக இல்லை. இப்போதெல்லாம் சிகரெட் மேல் விருப்பமே வருவதில்லை. பழக்க தோஷத்தில் கை அனிச்சையாய் சிகரெட்டைத் துழாவுவதும் லைட்டரை எடுப்பதுமென இருக்கிறதே ஒழிய, தானாக விருப்பம் முளை விடுவதில்லை. முன்பு சென்ற அதே பூங்காவிற்குச் சென்றான். ஸ்வாதியின் நினைவு வந்தது. இப்போது பழைய தொடர்புகளை ஒதுக்கிவிட்டு அவளது அமைப்பில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறாள். நண்பனொருவன் இவளின் மனதையும் ஆர்வத்தையும் கவனித்து தனது ஏற்றுமதி நிறுவனத்தில் பங்குதாரராகவும் மேலாளராகவும் நியமித்தான். அதற்கு நியாயமான உழைப்பையும் நேர்மையையும் கோரினான். இவள், அதற்கு தேவையான கோர்ஸை முடித்து விடுகிறேன் என பார்ட்-டைமில் படித்துக் கொண்டிருக்கிறாள். இவனிடம் கூறியபோது, உன் மதிப்பை அறிந்து இருக்கிறான். நான்தான் எதுவும் கவனத்தில் கொள்ளாமல் இருந்திருக்கிறேன். சும்மா பங்குதாரராக வேண்டாம் நான் பணம் தருகிறேன் கொடுத்து ஜாயினாகிக்கொள் என்றான். நம்ப முடியாமல் பார்த்தாள். பணம் பணம் என்று அலைபவனா என்ற எண்ணம் இருந்திருக்கலாம். முடியும்போது மெதுவாகக் கொடு என்று உடனடியாக அவள் அக்கவுண்டிற்கு டிரான்ஸ்பர் செய்தான். ‘இயன்றதைச் செய்வோம்’ அமைப்பு பதிவு பெற்ற சேவை அமைப்பாகி விட்டது. தொடர்ந்து சேவை, வேலை என்று பிஸியாகி விட்டாள்.

அக்கா கெஞ்சிக் கேட்டதைக் கற்பனை செய்து பார்க்கவே முடியவில்லை அவனுக்கு. அவள் உறவுப்பெண் பிடிக்கொடுக்காமல் பேசியதாகத்தான் தெரிகிறது. அக்கா எல்லாம் சரியாகும் பார்த்துக் கொள்ளலாம் என்கிறாள். இந்த நேரத்தில் பணியிட மாறுதல் வேறு இம்சைப்படுத்துகிறது. பிரதிபலன் பாராத அன்பைத்தான் அவள் உறவுகளுக்கு அளித்தாள். என்றாலும், அவளின் நலனையும் கருத்தில் கொள்வது நியாயமான ஒன்றுதானே, அதுவும் அவளால் முடிந்த பண உதவி, வீட்டு வேலை என்று அனுசரணையாகச் செல்பவளிடத்து இவர்களுக்கு என்ன முரண்! நியாயம் அநியாயம் என்பது என்ன, மனிதம் என்பது என்ன, கடமை, அன்பு, உரிமை என்பது என்ன என்று அவனின் எண்ண மழைக்கு கேள்விக் காளான்கள் தோன்றிக் கொண்டிருந்தன. போனை எடுத்து டிஸ்ப்ளேயில் ஆப்ஸ்களை நகர்த்தி நகர்த்திப் பார்த்துக் கொண்டிருந்தான். இப்போது எல்லாம் செயலிகள்தான். வங்கி, ஷாப்பிங், பயணம், சாப்பாடு, நிறுவனம் என எல்லாவற்றிற்கும் செயலி என நினைத்துக் கொண்டிருந்தான்.

ஆமாம் மனதில் உறவுக்கு ஒரு செயலி, நட்புக்கு ஒரு செயலி, தெரிந்தவர்களுக்கு ஒரு செயலி, தெருக்காரர்களுக்கு ஒரு செயலி.. செய்துவிக்கப்பட்ட புரோகிராம்கள் படி செயல்படும். என்ன என்னென்ன செயல்பாடு எவ்வப்போது நடைபெறும் என்பது அறியத்தான் நாட்கள் பிடிக்கிறது. எண்ணங்கள் ஓடிக்கொண்டே இருக்க ஸ்வாதியின் நினைவு வருகிறது. சந்திக்க வேண்டும். இப்போது ஃப்ரீயாக இருப்பாளா என்று தெரியவில்லை.

போன் எடுத்து லொகேஷன் ஷேர் செய்து ஃப்ரீயாக இருந்தால் வாவென அழைப்பு விடுத்தான். இப்போது ஃப்ரீதான் வருகிறேன் என அரைமணி நேரம் கழித்து வந்தாள். அழைத்துக் கொண்டு லஷ்மி அக்கா வீட்டிற்குச் சென்றான். அக்கா ஸோஃபாவில் அமர்ந்து இருந்தாள். ஊஞ்சல் மெலிதாக ஆடிக்கொண்டிருந்தது. பைக் சத்தம் கேட்டு எழுந்து ஸோஃபாவில் உட்கார்ந்து இருக்கிறாள். “யாரு அப்பு இது?” என ஸ்வாதியைப் பார்த்து கேட்க, விழித்த ஸ்வாதியிடம், சின்னப்பிள்ளையில் வீட்டில் செல்லமாகக் கூப்பிட்ட பெயர் அப்பு, வெளியில் ரகு.. இப்பொழுதும் வீட்டில் அப்புதான் என்றான். சிரித்து சரி சரி என்றாள். மனதிற்குள் யானையை நினைத்திருப்பாள் போலும். சிறிதாய் மேடிட்டு வளர்ந்திருந்த தொப்பையைத் தடவிக் கொண்டான். ஜிம் செல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன்.

இருவரையும் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்வித்து, ஸ்வாதியின் வேலை, ஆர்வம் குறித்து விளக்கிவிட்டு, பேசிக் கொண்டிருங்கள் என வெளியில் வந்து மூவருக்கும் உணவு வாங்கிப்போனான். சாப்பிட்டார்கள். இப்படி ஒருவருக்கொருவர் பரிமாறி இணக்கமாகச் சாப்பிட்டு நீண்ட நாட்களாகி விட்டது என்ற அக்கா, காசு நம் அவசியத்தேவைக்குதான்… காசை விட முக்கியமானது நிறைய இருக்கிறது என்று அவனைப் பார்க்கிறாள். ம்ம் என்கிறான் . கூடவே தலையசைத்து, மகன் வீட்டிற்கு வந்து கொண்டிருப்பான் கிளம்ப வேண்டும் என்றாள் ஸ்வாதி.

ஸ்வாதியிடம் எங்கிருக்கிறாள், பிள்ளை என்னப் படிக்கிறான் என்று விசாரித்துக் கொண்டிருந்தாள் லஷ்மி. பிள்ளைக்கு என்னென்ன பிடிக்கும் என்று கேட்டு சமையல் அறைக்குச் சென்று சீடையும் தேங்காய் பர்பியும் ஒரு டப்பாவில் போட்டு எடுத்துவந்து கொடுத்தாள். கூடவே நீளநீளமான கலர் பென்சில்கள் அடங்கிய பாக்ஸ் ஒன்றையும் கொடுத்தாள். லஷ்மி இரண்டு முறை குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்து விட்டு, இப்படி உடனே போகத்தான் வந்தீங்களா என்று முணுமுணுத்தாள். பின்னர், பாத்திரங்களை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றாள்.

ஸ்வாதி அவனைப் பார்த்து முதன்முறையாக மகனுக்காக இப்படி ஒரு விசாரணையையும் அன்பையும் எதிர்கொள்வதாகக் கூறியது அவனுக்குள் வலித்தது. அவனும் கூட இதுவரை அந்தக் குழந்தைக்கு இப்படி ஒரு மிருதுவான அக்கறையையோ அன்பையோ கொடுத்ததில்லை. மன்னிப்பு கேட்கும் விதமாய் அவள் விரல்களைப் பிடித்துக் கொண்டிருந்தான். முகம் படித்தவள் பதிலுக்கு அவன் விரல்களைப் பரிவாகத் தீண்டி ‘லீவ் இட் யா’ என்று புன்னகைக்கிறாள். அறையிலிருந்து வந்த லஷ்மி அடுத்தமுறை பிள்ளையை அழைத்து வரவேண்டும் என கூறுகிறாள். “கிளம்பவே மனசில்ல ரகு” என்று அவனுக்கு மட்டும் கேட்கும்படி கூறும் ஸ்வாதி சத்தமாக, ‘டைமாச்சு’ என்று எழுந்து நின்று அவள் கைப்பையை எடுத்துக் கொள்கிறாள். அவன் பைக்-கீயை எடுத்துக்கொண்டு அக்காவைப் பார்த்து வருகிறோம் என்று சொல்லி நெருங்குகிறான்.

ஸ்வாதி இந்த மிருதுவான அக்கறையிலிருந்தும் சொல்லத்தெரியா மனநெருக்கத்திலும் நனைந்தவளாக அப்படியே நின்று கொண்டிருக்கிறாள். லஷ்மியிடம் நெருங்கி அவள் கைகளைப் பிடித்துக்கொண்ட ரகு “க்கா நீ ஸ்வாதியை உன் சொந்தமா நினச்சிக்கோயேன்” என்கிறான். நிமிர்ந்து அவன் முகத்தைப் பார்த்தவள் கண்களில் பொலபொலவென கண்ணீர் கொட்டுகிறது. தோளில் சாய்ந்து அழுகிறாள். “உன்னை சின்னப் பிள்ளைனே நினச்சேன் அப்பு” அவன் முகத்தைத் திருப்பிக் கண்களைத் துடைத்துக் கொள்கையில் பார்த்தான். ஸ்வாதியின் கண்களும் கலங்கிக் கொண்டிருந்தது.

*

வட இந்திய மாநிலமொன்றில் பணியில் இருக்கும் ரகுவிற்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஸ்வாதியிடமிருந்து போன். மகனுடன் லஷ்மி அக்கா வீட்டில் செளகரியமாக இருப்பதாக, அவனுக்கு நிறைவாயிருந்தது. அக்காவின் உறவுப்பெண் ஒருநாள் வந்து ஸ்வாதியை விரோதியாக பாவித்து நடக்க, ஸ்வாதி உறவுப்பெண்ணின் பண அக்கறையைப் புரிந்துகொண்டு அக்காவிடம் சொல்லி அவளுக்கு உங்கள் பணத்தைக் கொடுத்து விடுங்கள் என்றிருக்கிறாள். அக்காள்தான் குறிப்பிட்ட அளவு தொகையை வங்கியிலிருந்து எடுத்து கொடுத்துவிட்டு, போய் வா என்று அனுப்பி விட்டாளாம்.

அக்காவும் பையனும் நெருக்கமாகி விட்டனர். தான் எந்த நேரத்திற்கும் வந்துபோக முடிகிறது. வேலை, சர்வீஸ் என்று செய்யும் உழைப்பெல்லாம் மகிழ்ச்சியளிக்கிறது. மகன் மற்ற பிள்ளைகளைப் போன்றே அத்தை என்று அழைக்கிறான். அக்காவும் மகனும்தான் அந்த வீடு. அவனது பெறாத தாயாகி சகலமுமான அக்கா வரமாகக் கிடைத்த தேவதை என்று கசிகிறாள். பங்களிப்பாளர்களின் எண்ணிக்கை அதிகமாகி அவளின் ‘இயன்றதைச் செய்வோம்’ அமைப்பு வளர்ச்சி பெற்று வருகிறதாம். மனதிற்குள் எப்போதும் உனக்கு நன்றி கூறிக்கொண்டிருக்கிறேன். நன்றி ரகு என்றாள். நன்றி? யார் யாருக்குச் சொல்வது. மகாசக்தி அம்மனை வெளிர் ஊதா புடவையிலும் கறுப்பில் வெள்ளை வட்டமிட்ட புடவையிலும் கண்ட நானல்லவா நன்றி சொல்ல வேண்டும் !

***

அகராதி
[email protected]

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular